Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மான்விழியில் வீழ்ந்தேனடி!

மான்விழி – 25

சித்தார்த்தும் நேத்ரநயனியும் உடலாலும் மனதாலும் ஒருவரை ஒருவர் நன்றாகவே நெருங்கியிருந்தனர். மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் மனைவியுடனே நாட்களை கழித்தான் கணவன். அவன் நடந்துக் கொண்ட விதத்தில் நயனி தன்னுடயை ஒதுக்கம், தயக்கம், தாழ்வு மனப்பான்மை என அனைத்தையும் மறந்தே போயிருந்தாள். கணவன் அவளை ரசனையுடன் கையாள்கிறான், தன்னை மிகவும் விரும்புகிறான் என்று புரிந்துக் கொண்டாள். அவனுடைய ஒவ்வொரு செய்கையிலும் அவன் அன்பும் காதலும் தெரிந்தது. 

 

சித்தார்த் ஒரு மருத்துவர் என்பதாலும், மருத்துவமனையை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு இருந்ததாலும் தான் மனைவியை அழைத்துக் கொண்டு அவன் ஹனிமூன் செல்லாமல், தனிமை வேண்டி தன் குடும்பத்தாரை மட்டும் மகாபலிபுரத்திற்கு அனுப்பினான். ஆனால் நேத்ரநயனியின் வெட்கமும் நாணமும் அவனை பித்தங்கொள்ள வைத்திருந்தது. தன்னை முழுவதும் மறந்து மனைவிக்குள் ஐக்கியமாகி இருந்தான்.

 



Advertisement

எப்போது போன் செய்தாலும் உடனே எடுத்து பேசுபவன், இப்போது போனை எடுக்காமல் இருக்கவும், ஜனனியும் சித்தார்த்துக்கு அதிகமாக போன் செய்யவில்லை. அவன் ஒப்புதல் கொடுத்த பின்பு எலிசாவிடம் கூறி அந்த மருந்து பொருட்களை கொள்முதல் செய்வதற்கான ஆவணங்களை செய்ய சொன்னாள்.

 

மூன்று நாட்களாக சித்தார்த் மருத்துவமனைக்கு வராமல் போகவும் எலிசா சுதந்திரமாக மருந்துகளை எல்லாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் பணியை தொடங்கியிருந்தாள்.

Advertisement

 

Advertisement

மூன்றாம் நாள் இரவு பவிஷ்கா சித்தார்த்தை போனில் அழைத்தாள். “சொல்லு பவிக்கா” என்றான்.

“என்னடா பிராக்டிகல் கிளாஸ் எல்லாம் முடிஞ்சதா? நாங்க வீட்டுக்கு வரலாமா? இல்லை இன்னும் இரண்டு நாள் தங்கிட்டு வரட்டுமா?” என்றாள் கிண்டலாக.

“பவிக்கா என்னையே கிண்டல் பண்றியா? செல்வா மாமாவும் நீயும் ஹனிமூன் போயிட்டு வர்றவரைக்கும் நான் தான் ஹாஸ்பிட்டலை பார்த்துக்கிட்டேன். நியாபகம் இருக்கட்டும். ஆனால் நான் ஹனிமூன்கூட போகாமல் வீட்ல தான் இருக்கேன்” என்றான் சிரித்துக் கொண்டே

Advertisement

 

“டேய் செல்வா மாமானு சொன்னதும் தான் எனக்கு நினைவு வந்துச்சு. உன் மாமாகிட்ட எலிசாவை பத்தி விசாரிக்க சொல்ல சொன்னே இல்ல? அவரும் விசாரிச்சுட்டு உனக்கு போன் பண்ணியிருக்காரு. உன் போன் ஸ்விட்ச் ஆப்னு வந்ததும் எனக்கு போன் பண்ணாரு” என்றாள் பவிஷ்கா.

 

“மாமா என்னக்கா சொன்னாரு?” என்றான் அவசரமாக

 

“அந்த எலிசா கடைசியா ஒருத்தனோட சுத்திட்டு இருந்தா இல்லை, அவன் பேரு ஸ்டீவன் ரிச்சர்ட், அவன் ஒரு பெரிய மருந்து கம்பெனியோட முதலாளியாம். அவனை விட்டுட்டு எதுக்கு உன் தம்பியை தேடி அவ அங்கே வந்தானு தான் தெரியலைனு சொன்னாருடா”

 

சித்தார்த்துக்கு எங்கோ பொறி தட்டியது. எதோ மருந்துகள் பிரச்சனையில் ஸ்டீவன் ரிச்சர்ட் என்ற பெயர் அடிப்பட்டதாக அவன் நினைவில் வந்தது. உடனே பவிஷ்காவின் போனை கட் செய்து ஜனனிக்கு அழைத்தான்.

 

“ஜனனி, எலிசா ஆர்டர் பண்ண சொன்ன மருந்தை எல்லாம் வாங்க வேண்டாம், அப்படியே ஸ்டாப் பண்ணுங்க” என்றான் அவசரமாக.

 

“டாக்டர் நீங்க தானே புரோசிட் பண்ண சொல்லி மெசேஜ் அனுப்பினீங்க. மருந்து எல்லாம் நேத்தே வந்துடுச்சு. அந்தந்த டிபார்மென்ட்க்கு தேவையான மருந்துகளை இன்னைக்கு காலையில் தான் பிரிச்சு கொடுக்க சொன்னேன்” என்றாள் ஜனனி 

 

“என்ன சொல்றீங்க ஜனனி, பொதுவா நாம புதுசா ஒரு இடத்துல மருந்துகள் வாங்கணும்னா கொட்டேஷன் வாங்கி அதை பயன்படுத்தி பார்த்துட்டு நம்மோட டாக்டர்கிட்ட எல்லாம் கலந்து பேசிட்டு தானே மொத்தமா வாங்குவோம்? நான் புரோசிட் பண்ண சொன்னாலும் நீங்க சேம்பல்க்கு கொஞ்சம் தானே வாங்கியிருக்கணும்? ஏன் மொத்தமா பர்சேஸ் பண்ண சொன்னீங்க?” என்றான் சித்தார்த் ஆத்திரத்துடன்.

 

“அது அதுவந்து டாக்டர் எலிசா மேடம் தான், ஏற்கனவே நல்ல ரிவீவ் வந்த மருந்துகள், நல்லா இருக்கும்னு சொன்னாங்க. நீங்களும் பிசி போல இருந்தது. அது தான் எதுக்கு உங்களை டிஸ்டர்ப் பண்ணனும்னு…” என்று இழுத்தாள் ஜனனி.

 

“டேமிட்” என்று எழுந்தவன் அவன் எதிரே இருந்த கண்ணாடி டீபாயை எட்டி உதைத்தான். அது சுக்கல் சுக்கலாக உடைந்து சிதறியதில் நேத்ரா பதறிப் போனாள்.

 

“என்னாச்சுங்க?” என்ற அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல், அவசரமாக உடையை அணிந்துக் கொண்டு “நான் அவசரமா நம்ம மருத்துவமனைக்கு போகணும், முடிஞ்சா நான் சீக்கிரம் வந்திடுறேன். இன்னைக்கு ராத்திரி மட்டும் பத்திரமா வீட்டை பூட்டிட்டு இரு. காலையில் பவிக்காவும் அப்பாவும் வந்திடுவாங்க” என்றபடி கார் சாவியை எடுத்துக் கொண்டு படிகளில் இறங்கினான்.

 

அவன் பின்னாடியே ஓடியவள், “எதாச்சும் பெரிய பிரச்சனையா அபி” என்றாள் பதட்டத்தோடு

 

“தெரியலையேடா, எதுவா இருந்தாலும் சமாளிச்சுக்கலாம். நீ பயப்படாதே” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறி சென்றான்.

 

அவன் கார் மறையும் வரை கேட்டருகே நின்றிருந்தவளை அந்த வழியாக சவாரிக்காக டாக்சியில் சென்ற பாண்டி நேத்ராவை யோசனையோடு பார்த்துக் கொண்டே சென்றான்.

 

சித்தார்த் காரில் செல்லும் போதே ஜனனிக்கு போன் செய்தான், “ஜனனி ஹாஸ்பிட்டல் கேட்டை இழுத்து மூட சொல்லு. நம்ம ஹாஸ்பிட்டல்ல இருந்து ஒருத்தரும் வெளியே போகக் கூடாது. மருத்துவர்கள், நர்ஸ் மற்றும் நோயாளிகள்னு எல்லாரும் அங்கே தான் இருக்கணும்.

 

நான் சொல்ற இன்ஸ்ட்ரஷனை ஒழுங்கா பாலோ செய்யலைனா நான் மனுஷனா இருக்க மாட்டேன். காலையில் யார் எல்லாம் வெளி நோயாளிகளா வந்தாங்க, இன்னைக்கு டிரிட்மென்ட் எடுத்துட்டு யாரெல்லாம் டிஸ்சார்ஜ் எடுத்துட்டு போனாங்களோ, அவங்களை எல்லாம் உடனே ஹாஸ்பிட்டலுக்கு வரச்சொல்லு” என்றான்.

 

“டாக்டர், ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானவங்க வந்து போறாங்க, நான் ஒருத்தி எப்படி அவங்களை எல்லாம் வரச்சொல்றது, அவங்க சொன்னாலும் இப்போ உடனே வருவாங்களா?” என்றாள் ஜனனி.

 

“நம்ம ஹாஸ்பிட்டல்ல இருக்கிற நர்ஸ், டாக்டர், செக்யூரிட்டி, அட்டென்டர்னு எல்லார்கிட்டயும் தனித்தனியா லிஸ்ட் கொடுத்து உடனே எல்லாரையும் போன் பண்ணி பேச சொல்லு. இன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல டிரிட்மென்ட் எடுத்துக்கிட்டவங்களுக்கு பத்தாயிரம் பணப்பரிசு தர்றதா சொல்லுங்க. பேஷண்ட் கூட வந்தால் தான் தருவதா சொல்லு, கண்டிப்பா வருவாங்க. 

 

“ஓகே டாக்டர்” என்றாள் ஜனனி.

 

“முக்கியமா இந்த விஷயம் எலிசாவுக்கு தெரியக்கூடாது. அவள் எப்பவும் போல எமர்ஜென்சி வார்டுல இருக்கட்டும். ஆனால் எந்த பேஷன்டையும் அவகிட்ட அனுப்ப வேண்டாம், அந்த அறையில் இருக்கிற நர்ஸ்கிட்ட நான் சொன்ன வேலையை கொடுக்காதே. அவங்க எப்போதும் போல அங்கேயே இருக்கட்டும், நான் பத்து நிமிஷத்துல ரீச் ஆயிடுவேன்” என்றான் சித்தார்த்.

 

“மொத்தத்துல யாருக்குமே என்ன நடக்குதுனு தெரியக்கூடாது, புரியதா?” என்றான்.

 

“எனக்கே என்ன நடக்குதுனு புரியலை டாக்டர்” என்றாள் ஜனனி.

 

“ஒகே குட், இது தான் எனக்கும் வேணும்” என்று சொல்லிவிட்டு காரை வேகமாக செலுத்தினான்.

 

கார் மருத்துவமனையை அடைந்ததும், அவன் சொன்னது போல கேட் மூடப்பட்டு இருந்தது. சித்தார்த்தின் காரை கண்டபின் செக்யூரிட்டி கேட்டை திறந்தார்.

 

காரிலிருந்து எட்டிப்பார்த்த சித்தார்த் செக்யூரிட்டியை அழைத்து, “காலையில் வந்த பேஷண்ட் யாராவது வந்தா மட்டும் புது பில்டிங்கிற்கு அனுப்புங்க” என்று கூறினான்.

 

உள்ளே சென்றவன், அனைத்து மருத்துவர்களையும் கான்பரன்ஸ் ஹாலுக்கு வரவழைத்தான்.

 

“இன்னைக்கு வந்த புது மெடிசன்ல எனக்கு சந்தேகம் இருக்கு. அதை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கிறதுக்குள்ள எந்த உயிராவது பலி ஆயிடுமோனு கவலையா இருக்கு. அதனால் பேஷன்ட்டுகளுக்கு உடனடியா மாத்து மருந்தோ, இனிமா (Enima) கொடுத்தோ எதாவது ஒரு வகையில் இன்னைக்கு கொடுத்த மருந்து அவங்க வயித்துல தங்க விடாமல் செய்யணும். அதுக்கான வேலையை போர்கால அடிப்படையில் செய்யுங்க. உங்களை கையெடுத்து கேட்டுக்கிறேன். எனக்காக இந்த உதவியை செய்யுங்க” என்றான் சித்தார்த்.

 

“அய்யோ சித்தார்த், இதுதான் விஷயம்னு சொல்லிட்டா நாங்க செய்யப்போறோம். ஆர்டர் போட்டாலே போதும் கையெடுத்து எல்லாம் கும்பிட வேண்டாம், ப்ளீஸ்” என்றார் மூத்த மருத்துவர் ஒருத்தர்.

 

“ஓகே டாக்டர் நீங்க எல்லாரும் புது பில்டிங்கிற்கு போயிடுங்க. நிறைய பேஷண்ட் வந்தாங்கனா பரவாயில்லை, நான் இன்னும் என் பிரண்ட்ஸ் எல்லாரையும் வரவைக்கிறேன். மெடிக்கல் காலேஜ் ஸ்டென்ட்சை உதவிக்கு கூப்பிடுறேன்” என்றான் சித்தார்த்

 

“நோயாளிங்க விஷயத்தை கேள்விப்பட்டால் கோபப்படுவாங்களே சித்தார்த்?” என்றார் ஒரு மருத்துவர்.

 

“உயிரை காப்பத்தறது தான் இப்போ முக்கியம். மற்றதை எல்லாம் இந்த ஆஸ்பிட்டல் முதலாளி சித்தார்த் அபிமன்யுகிட்ட கேட்டுகோங்கனு என் பெயரை சொல்லிடுங்க டாக்டர்” என்றான் சித்தார்த் உணர்ச்சியற்ற குரலில்.

 

“உங்களை எல்லாரும் சும்மா விடமாட்டாங்க. இந்த விஷயத்தை நாங்க பார்த்துக்கிறோம். நீங்க கிளம்புங்க சித்தார்த்” என்றார் மற்றொரு டாக்டர்.

 

“இல்ல, இந்த விஷயத்துல நான் தான் கவனக்குறைவாக இருந்து இருக்கேன். இதுக்கு நான் மட்டும் தான் முழு பொறுப்பு எதுவா இருந்தாலும் நான் தான் சமாளிக்கணும், நீங்க சீக்கிரமா கிளம்புங்க. உங்களுக்கு தேவையான நர்ஸ் மற்றும் உதவியாளை அனுப்பி வைக்கிறேன்” என்றான்.

 

அவர்கள் சென்றதும் ஜனனியை பார்த்து, “நான் பேசினதை எல்லாம் கேட்ட தானே? உடனடியாக அவங்களுக்கு உதவ தேவையான ஆட்களையும் மருந்துகளையும் கொடுக்க ஏற்பாடு செய். ஆனால் அந்த மருந்து நம்ம பழைய ஸ்டாக்ல இருந்து கொடுக்கணும், நேத்து ரீசிவ் பண்ண மெடிசன் மொத்தமும் என்னோட அறைக்கு வந்தாகணும்” என்றான் அதிகாரமான குரலில்.

 

“டாக்டர் என்னை எதுவும் தப்பா நினைக்காதீங்க, நான் சேம்பல் ஆர்டர் பண்ணி பார்த்துட்டு தான் மொத்தமாக பர்சேஸ் பண்ணியிருக்கணும், நீங்க சொன்னதை நான் சரியா புரிஞ்சுக்கலை. நான் எதுவும் வேணும்னு செய்யலை டாக்டர், என்னை நம்புங்க ப்ளீஸ்” என்றாள் ஜனனி கலங்கிய கண்களுடன்.

 

“நீ இந்த அளவுக்கு உயிரோட விளையாட மாட்டேன்னு எனக்கும் தெரியும். நானும் சேம்பல்க்கு மட்டும் ஓகேனு சொல்லி மென்ஷன் பண்ணியிருக்கணும். இருந்தாலும் நம்ம ஹாஸ்பிட்டல் விதிமுறை உனக்கும் தெரியும் தானே? இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை. இன்னொரு முறை இப்படி நடந்ததுனா உன் மேல கடுமையான நடவடிக்கை எடுப்பேன். 

 

இந்த பிரச்சனை சரியாகும் வரைக்கும் நீ ஹாஸ்பிட்டல் விட்டு எங்கேயும் நகர கூடாது” என்றான் சித்தார்த் எச்சரிக்கும் குரலில்.

 

“ஓகே டாக்டர், இந்த பிரச்சனைக்கு நானும் ஒரு வகையில் காரணம். கண்டிப்பா அதுக்கான தண்டனையையும் கட்டாயம் ஏத்துக்குவேன். நான் எல்லா மெடிசனையும் இங்கே கொண்டு வரச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறினாள்.

 

அதற்குள் சித்தார்த் பிரபலமான லேப் டெக்னிஷியன்களை போன் செய்து தன் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களோட  உடனடியாக வரச்சொன்னான்.

 

மொத்த மருந்துகளும் அவன் அறைக்கு வருவதற்கும், டெக்னீஷியன் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. அவர்களிடம். “ஆபத்தான இன்கிரிடியன்ஸ் எதாவது இந்த மெடிசன்ல இருக்கானு செக் பண்ணுங்க” என்றான்.

 

வந்தவர்கள் அரைமணி நேரத்திலேயே, “டாக்டர் சித்தார்த், இந்த மருந்துவகைகளை முதலில் யுஎஸ்ஸில் அறிமுகம் செய்தாங்க. நோய்கள் எல்லாம் சீக்கரமாவே குணமாயிடுதுனு சொல்லி வேகமாவே பிரபலம் ஆச்சு. சோ அந்த கம்பெனிகூட நிறைய மருந்துகளை தயாரிச்சாங்க. ஆனால் இந்த மருந்தை சாப்பிட்டவங்களுக்கு கொஞ்ச நள் கழிச்சு சைட் எபக்ட் வந்ததா சொல்லி பல நோயாளிங்க கம்ளெய்ண்ட் பண்ணாங்க.

 

உடனடியா யுஎஸ் கவர்ன்மென்ட் இந்த மருந்தை தடை செய்துட்டாங்க. இது நடந்து ஆறு மாசம் ஆயிடுச்சு. இந்த மருந்து எப்படி இந்தியாவுக்கு வந்தது?” என்று கேட்டார் மூத்த ஆராய்ச்சியாளர் ஒருவர்.

 

“என்ன சொல்றீங்க? அந்த மருந்து பெயர் எனக்கும் தெரியும், அதன் பேரு வேறே, இது வேறே தானே?” என்று தன் மொபைலை எடுத்துக் காட்டினான்.

 

“உங்க கிட்ட சொன்ன மருந்துல எந்த பிரச்சனையும் இல்லை. அதுவும் அந்த கம்பெனியோட மருந்து தான். அதே கவரை பயன்படுத்தி இவங்க தடை செய்யப்பட்ட மருந்துகளை பேக் பண்ணி இருக்காங்க” என்று கூறியவர் இரண்டும் பயன்படுத்தப்பட்ட ரசாயணப்பொடிகளின் விகிதத்தை விளக்கினார்.

 

சித்தார்த் தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

 

“நல்ல வேலையா, நீங்க ஒரே நாளில் இதை கண்டுபிடித்து இருக்கீங்க. கொஞ்சம் கவனக்குறைவா இருந்து இருந்தாலும் பெரிய பிரச்சனையில் மாட்டியிருப்பீங்க” என்றார் அவர்.

 

“அப்போ யுஎஸ்ஸில் இந்த பிரச்சனை வந்த போது எந்த மாத்து மருந்து கொடுத்தாங்கனு தெரியுமா சார்?” என்று கேட்டான் சித்தார்த்.

 

இருங்க விசாரிக்கிறேன், என்றவர் தன் நண்பருடன் போனில் பேசிவிட்டு, அதற்கான மருந்து விவரத்தை கூறினார். சித்தார்த உடனடியாக தலைமை மருந்தகத்திற்கு போன் செய்து விஷயத்தை கூறி, அந்த மருந்துகளை உடனடியாக அனுப்பி வைக்க சொன்னான்.

 

டெக்னிஷியன்களை அழைத்து, மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் அனைத்து மருந்துகளையும் ஒரு முறை சரிபார்க்க சொல்லிவிட்டு, அவசரமாக புது பில்டிங்கை நோக்கி சென்றான்.

 

அங்கே நோயாளிகள், மருத்துவர்களிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

 

“என்ன மருந்து கொடுத்தீங்க? நாங்க ஏன் மறுபடியும் மருந்து சாப்பிடணும்? என்ன நடக்கது இந்த ஹாஸ்பிட்டல்ல” என்று ஆளாளுக்கு கத்தவும் சித்தார்த் மற்றும் தலைமை மருந்துகளின் ஆராய்ச்சியாளர் இருவரும் சேர்ந்து அவர்களை சமாதானம் செய்தனர்.

 

“நீங்க முதலில் இப்போ கொடுக்கிற மருந்துகளை சாப்பிட்டுங்க, ஜஸ்ட் டைரியா பிராப்ளம் வரும், அப்புறம் சரியாக போயிடும், எங்களை நம்புங்க” என்றான் சித்தார்த்.

 

“இப்போ கொடுக்கிற மருந்து மட்டும் நல்ல மருந்துனு எப்படி நம்பறது? ஐந்தாயிரம் கொடுக்கறதா பொய் சொல்லி வரவழைச்சுட்டு என்னென்னவோ சொல்லிட்டு இருக்கீங்க? இருங்க போலீசை கூப்பிடுறோம்” என்று கத்தினான் ஒருவன்.

 

ஏதோ பேச முனைந்த சித்தார்த்தை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு பேச தொடங்கினார் அந்த ஆராய்ச்சியாளர், “நீங்க காலையில் சாப்பிட்ட மருந்தால உடனடியா உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. லேட்டா தான் பிரச்சனை வரும், சிலருக்கு வராமலும் போகலாம். டாக்டர் சித்தார்த் நினைச்சிருந்தால், இதை எல்லாம் உங்களுக்கு சொல்லாமல் அப்படியே விட்டுட்டு இருக்கலாம். அதுதான் அவருக்கும் அவரோட மருத்துவமனைக்கும் பாதுகாப்பு.

 

உங்களை எல்லாம் வரவழைச்சு விஷயத்தை சொன்னால் என்னவெல்லாம் பிரச்சனை வரும்னு அவருக்கு தெரியாதுனா நினைக்கறீங்க? ஆனாலும் அவர் வாழ்க்கையையே பணயம் வச்சு கொஞ்சம் கூட யோசிக்காமல் உங்க எல்லாரையும் வரவழைச்சு இருக்காரு. அதுக்கான மாத்து மருந்துக்கும் ஏற்பாடு பண்ணிட்டாரு. இன்னும் அரைமணி நேரத்துல வந்துடும், உங்களோட உயிருக்கு எந்த ஆபத்தும் வராது.

 

அப்புறம் போலீசுக்கு நீங்க போன் பண்ணனும்னு அவசியம் இல்ல. அவரே போன் பண்ணி சொல்லிட்டாரு. அவங்களும் விசாரிக்க வந்துட்டு இருக்காங்க. அதனால பிரச்சனை பண்ணாமல் ட்ரீட்மெண்ட்க்கு ஒத்துழைப்பு கொடுங்க” என்றார் அவர்

 

அதன்பின்னரே நோயாளிகளும் அவர்களுடன் வந்திருந்தவர்களும் சிகிச்சைக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தனர்.

 

இவை எல்லாம் வேறு கட்டிடத்தில் நடந்ததால் எலிசாவிற்கு எந்த விஷயமும் தெரியவில்லை. மூன்று மணிநேரத்திற்கு மேலாகியும் எந்த நோயாளியும் உள்ளே வராததால் ஜனனிக்கு போன் செய்தாள்.

 

“ஏன் ஜனனி இன்னைக்கு பேஷன்ட் யாரும் வரலியா?” என்றாள்.

 

“ஆமாம் டாக்டர், நீங்க வேணும்னா உங்க ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க. எமெர்ஜென்சிக்கு நோயாளிகள் வந்தால் நான் போன் பண்றேன்” என்றாள் ஜனனி எதையும் காட்டிக் கொள்ளாமல்.

 

“ஓகே ஜனனி. சும்மா இங்கே இருக்கறதுக்கு நான் என் ரூம்ல ரெஸ்ட் எடுக்கிறேன்” என்று சொல்லி போனை வைத்த எலிசா வெளியே சென்றாள்.

 

மருத்துவமனையே நிசப்தமாக இருப்பது போல தோன்றியது. எதுவோ சரியில்லை என்று மனதில் தோன்ற அனைத்து தளங்களுக்கும் சென்று பார்த்தாள். நர்ஸ், அட்டென்டர், டாக்டர் என யாருமே அந்த கட்டிடத்தில் இல்லை.

 

உடனடியாக தன் அறைக்கு சென்று, கதவை மூடிக் கொண்டு அவசரமாக போன் செய்தாள். அவளின் ஒவ்வொரு அசைவையும் தன் மொபைலில் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.

 

எலிசா மிகச்சரியாக கேமரா இருக்கும் பக்கமாகவே நின்றிருந்தாள். வீடியோ காலில் அழைப்பு விடுத்து மறுமுனையின் இணைப்புக்காக காத்திருந்தாள். எலிசா அவளுடைய சமீபத்திய காதல் ஸ்டீவன் ரிச்சர்ட் உடன் தான் பேசுவாள் என்று சித்தார்த்தும் அவளின் போன் இணைப்பிற்காக காத்திருந்தான்.

 

ஆனால் அவளின் போனில் தெரிந்த வீடியோ காலில் வெளிநாட்டு நபரின் முகம் தெரியாமல் வேறொரு நபரின் முகம் தெரிந்தது. தெளிவாக தெரியாத அந்த முகத்தை மேலும் உன்னிப்பாக பார்த்தான். தன் மொபைலில் தெரியும் திரையை மேலும் பெரிதாக்கினான். இப்போது அதில் தெரிந்த உருவத்தை பார்த்து சித்தார்த் அதிர்ந்து போனான்.

 

(தொடரும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!