Skip to content
Post Views: 3,626
மார்கழி – 12
கையிலிருக்கும் அலைபேசியிலிருந்த விலாசத்தை ஆட்டோ ஓட்டுனரிடம் காட்டி பேரம் பேசி ஏறியவன் எரியும் விழிகளை தேய்த்துவிட்டுக் கொண்டான். முந்தைய இரவிலிருந்து தூங்காததும் பயணத்தில் கிடைத்த இடைஞ்சலான குட்டி குட்டி தூக்கத்திலும் அயர்ந்து போயிருந்தவன் அகமெங்கும் குறுகுறுப்பு. குற்றமுள்ள நெஞ்சம் இயலணியை எதிர்கொள் எண்ணி அஞ்சியது. என்ன செய்தும் என்ன சொல்லியும் சரி செய்ய முடியாத தவறினை எப்படி மாற்றியமைக்கப் போகிறோம் என்ற பயம் பூதாகரமாக மிரட்டியது.
அவள் வீட்டில் என்ன சொல்லியிருப்பாள் என்று தெரியவில்லை. திருமணம் எப்படி நடந்தது என்று தெரிந்தால் அவள் வீட்டில் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற தயக்கமும் அவர்களுக்குள் நடந்தவை பற்றியும் தெரியவந்தால் பெறப்போகும் கலங்கத்தையும் அவர்களின் கீழான பார்வையையும் எப்படி எதிர்கொள்வது என்ற நினைப்பிலேயே நிம்மதியைத் தொலைத்தான். போதாததற்கு அவன் மனமே நீ செய்த செயல் இழிவானது தானே, அப்போது கீழானவன் தானே என்று குத்திக்காட்டி வலிக்கச் செய்தது. இத்தனை வருடத்தில் அனுபவித்திடாத வலி, வேதனையை ஒரே நாளில் அனுபவித்தது போலிருந்தது. இனி காலத்திற்கும் வடுவாய் நின்று அவனை வலிக்கச் செய்யும் என்ற நிதர்சனம் கசக்க, இது எதுவும் நடக்காமல் இருந்திருக்கலாமே என்ற எண்ணம் எழாமல் இல்லை. நிதானமாக இருந்திருந்தால் அசம்பாவிதத்தை தடுத்திருக்கலாம் என்று நொந்துகொள்ளாத நாழிகையே இல்லை.
அவள் வீடு வந்தது கூட தெரியாமல் யோசனையில் இருந்தவனை தட்டி நிகழ்வுக்கு கொண்டு வந்த ஆட்டோக்காரர் பணம் வாங்கிக்கொண்டு நகர்ந்துவிட, கும்மிருட்டை விரட்டும் பொருட்டு எரிந்துகொண்டிருந்த தெரு விளக்குகள் அவள் வீட்டை கண்டுகொள்ள உதவியது. இரவு வேளை என்பதால் சுற்றுச்சுவருடன் இருந்த சிறிய இரும்பு கதவு பூட்டப்பட்டிருந்தது. வீட்டு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருக்க, கை உயர்த்தி கடிகாரத்தில் மணி பார்த்தான். நேற்று இயலணி கிளம்பிச் சென்ற அதே நள்ளிரவு நேரம். கிட்டத்தட்ட எட்டு மணி நேர பயணத்திற்கு பின் வந்திறங்கி இருந்தவன் மனம் அழைப்புமணி அழுத்திவிடு என்று கட்டளையிட, இந்த நேரத்தில் கதவை தட்டி எழுப்பிடாதே என்று எச்சரித்தது சிந்தை.
Advertisement
இருமனதாய் நின்ற இடத்திலிருந்தே திரும்பிப் பார்த்தான். ஆள் அரவமற்ற சாலையில் ஒன்றிரண்டு தெரு நாய்கள் இவனைப் பார்த்து குரைக்கலாமா வேண்டாமா என்ற உறுமலுடனும் லேசாக ஓட்டமெடுத்து அவனை நெருங்கும் சமயம் பயம் எழ அந்த சிறிய கேட்டில் ஏறித் தாவி உள்ளே குதித்துவிட்டான். அவ்வளவுதான் அவன் மீது பாயும் பொருட்டு கேட்டின் வடிவத்தில் கால் வைத்து வெளியே நின்று குறைக்க ஆரம்பித்துவிட்டது அந்த நாய்கள்.
எந்த நேரம் என்ன ஆகுமோ என்ற பீதியில் இருந்தவர்கள் சிறு சத்தத்திற்கே விழித்துவிட்டனர். பரந்தாமன் மனைவியை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு பதட்டத்துடன் விளக்குகளை ஒளிர விடாமல் ஜன்னல் கதவைத் திறந்துப் பார்த்தார். வெளிக்கதவிலிருந்து ஓரடி தள்ளி பையுடன் நிற்கும் அறிவழகன் கண்ணில் பட, பரந்தாமனின் விழிகள் சுற்றும் முற்றும் ஆராய்ந்தது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற எண்ணவோட்டத்தில். இவன் ஒருவன் மட்டுமே இருப்பது தெரிய, கதவைத் திறந்து வினையை இழுத்துக்கொள்ள விரும்பவில்லை அதற்காக அவனை அப்படியே விடவும் மனதில்லை. அமைச்சர் உளவாளியாகவோ ராஜேஷின் கூட்டாளியாகவோ இருக்கலாம் என்ற எண்ணத்தில் வேந்தனுக்கு அழைக்கலாமா என்று யோசித்து நின்றார்.
“என்னங்க யாரு?” வேம்பு அவர் பின் வந்து எட்டிப்பார்க்க, மனைவியை கலவரப்படுத்த விரும்பாதவராய் ஜன்னலை பட்டென சாற்றி, “எதையோ பாத்து நாய் குறைக்குது. நீ போய் தூங்கு.” சன்னக்குரலில் சொன்னவர் மனைவியை அனுப்பப் பார்த்தார். இந்த இரவு வேளையில் கலவரமாகிவிட்டால் உதவிக்கு கூட ஒருத்தரும் வர வாய்ப்பில்லை, சத்தம் கூட்டாமல் அமைதியாக இந்த இரவை ஓட்டிவிட்டால் கூட பகலில் ஏதாவது பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணினார்.
Advertisement
“ஏன் நீங்க வரலையா?”
Advertisement
“இருக்குற நிலைமையில தூக்கமெல்லாம் வருமா. நீ போ வேம்பு.” வேம்புவை அனுப்பிவிட்டு விடியும் வரை தானே காவல் காக்கும் எண்ணத்தில் இருக்க, அவர் விட்டால் தானே.
“எனக்கு மட்டும் தூக்கம் வருதா என்ன? நானும் இங்கேயே இருக்கேன்.” என்று அமரப்போக, தலை கோதிய பரந்தாமன் வெளியில் ஒருவன் நிற்பதாக சொன்னார். அவ்வளவு தான் மூச்சை பிடித்துக்கொண்டு அமைதியாகிவிட்டார் வேம்பு.
‘என் மகளுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடையவே கிடையாதா?’ மனம் இரணமாய் வலிக்க,
Advertisement
“போலீசுக்கு கூப்பிடுங்க.” என்றுவிட்டார்.
பரந்தாமனுக்கோ தயக்கம். அவர்கள் சரகத்து காவல் நிலையத்திற்கு தகவல் சொன்னால் விஷயம் நேராக அரசியல் கட்சிக்கு சென்றுவிடுகிறது என்பதை கண்கூடாக இந்த மூன்று மாதத்தில் கண்டுகொண்டிருந்தனர். அவ்வளவு ஏன் அவர்கள் பகுதி காவல் நிலையத்தில் வேலைப் பார்த்த வேந்தன் அமைச்சருக்கு சாதகமாக இல்லை என்று காரணத்தால் வேறு ஒரு பகுதிக்கு அவனை மாற்றிவிட்டனர். நேற்று ராஜேஷை கூட வேந்தன் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் சார்பாகத் தான் பிடித்துச் சென்றிருக்கிறான், அதற்கே எத்தனை பிரச்சனையை சந்தித்திருப்பானோ என்று யோசித்தார் மனிதர்.
“என்ன யோசிக்குறீங்க? வேந்தன் சாரை கூப்பிடுங்க.” எனும் போதே இயலணி எழுந்து வந்துவிட்டாள். இருக்கும் பிரச்சனைகளில் அவளுக்கு மட்டும் உறக்கம் வந்துவிடுமா என்ன.
“இயலு நீ உள்ள போடி. வெளில எவனோ நிக்குறான். உன்னை தேடித்தான் ஆள் அனுப்பியிருப்பாங்க.” வேம்பு சொல்லவும் தந்தையைப் பார்த்தாள்.
“இதுவரைக்கும் பாக்காத புது ஆளா இருக்கான். ஒரு பேக் மாட்டிகிட்டு நிக்குறான். பேக்ல எதுவும் கொண்டு வந்திருந்தா…” நினைக்கும் போதே பதறியது தந்தையின் நெஞ்சம், “நீ உள்ள போ பாப்பா.” என்று பதறிச் சொல்ல, மனதின் உந்துதலில் ஜன்னலைத் திறந்து பார்த்தாள்.
கல்லூரி எடுத்துச் செல்லும் பையை தோளில் மாட்டிக்கொண்டு வாசலில் இருந்த நாயை பார்த்த வண்ணம் மேடான இடத்தில் கால் மடக்கி அமர்ந்திருந்தான் அறிவழகன்.
அவனைக் கண்டதும் இயலணியுள் லேசான படபடப்பு. அதற்குள் வந்துவிட்டனா என்ற துளி ஆச்சர்யமும். கூடவே அவன் நடந்துகொண்ட காரிருள் வேளையின் அனர்த்தனமும் நினைவுக்கு வர, சத்தமாய் ஜன்னலை சாற்றினாள். அந்த சத்தத்தில் அறிவழகனின் பார்வை வீட்டை நோக்கி திரும்பியதென்றால் உள்ளே பெற்றவர்கள் பதறிவிட்டனர்.
“என்ன இயலு பண்ற நீ? சும்மா இருக்குறவனுக்கு நீயே காட்டிக்கொடுத்துடுவியா.” வேம்பு புலம்பவும் அழைப்பு மணி அடித்துவிட்டது.
ஜன்னலை சத்தத்துடன் மூடவுமே பட்டென்று திரும்பிய அறிவழகன் இயலணியை பார்த்துவிட்டான். அதற்கு மேல் ஏன் காத்திருக்க வேண்டும் என்று மணியடித்துவிட்டான். உள்ளே இருந்தவர்களுக்கு தான் பீதியாகிவிட்டது. இயலணி விடவில்லை வேகமாக சென்று கதவைத் திறந்தவள்,
“என்னை நிம்மதியா இருக்க விடமாடீங்களா? பண்ணது எல்லாம் போதாதா?” என்று கத்திவிட்டாள்.
“இயல்.” தொண்டையடைக்க அவளை பார்த்தபடி கண்களில் யாசிப்பு வேண்டி நின்றான்.
“ச்சே… இங்கிருந்து கிளம்புங்க முதல்ல.”
“பாப்பா யார் இது?” என்று பெற்றவர்கள் பின்னோடு வந்து நிற்க, கைகளை கட்டிக்கொண்டவள் முகத்தை திருப்பினாள். பதில் சொல்லவில்லை.
“அறிவழகன்.” என்று தன்னைத்தானே அவன் அறிமுகப்படுத்திக்கொள்ள, அந்த பெயரே அவன் யாரென்று சொன்னது.
கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பரந்தாமன் அவனை உள்ளே அழைக்க,
“அப்பா.” மறுத்து வாயிலை மறித்து நின்றாள் இயல்.
“வரட்டும் பாப்பா. பேசுவோம்.” மகள் தோளை தட்டி அவளை லேசாக நகர்த்தியவர் அறிவு உள்ளே வர வழிவிட்டார்.
மிகுந்த தயக்கத்துடன் காலடி எடுத்து வைத்தவன் அவர்களை நிமிர்ந்து பார்க்கவே சங்கடப்பட்டான். ஆனால் அவ்வீட்டின் உருப்படிகள் அனைவரும் அவனையே பார்க்க, எச்சில் கூட்டி விழுங்கியவன் பேச முயற்சித்தாலும் பேச்சு வரவில்லை. நா மேலே ஒட்டிக்கொண்டது. நட்ட நடுராத்திரியில் தனியாக வந்திறங்கிய பின்தான் உண்மை உரைத்தது, என் மகளை ஏன் தனியாக அனுப்பினாய் என்று கேட்டால் என்ன சொல்வது என்று கலங்கித் தவித்தான். விழிகள் தன்னால் இயலணியிடம் சென்றது. அவள் முகம் திருப்பிக்கொண்டாள்.
“உங்க ஊர்லேந்து இங்க வர ஏழெட்டு மணிநேரம் ஆகும். நேத்தி ராத்திரி இதே நேரத்துக்கு அங்க கிளம்பியிருந்தா மட்டும்தான் அவ இங்க வந்து சேர்ந்த நேரம் சரியா இருக்கும். பாதுகாப்பு அவசியம்னு தெரிஞ்சும் எப்படி அவளை தனியா அனுப்ப முடிஞ்சுது உங்களால? என்னவும் நடந்திருக்கட்டும் உங்களை நம்பி வந்தவளை நீங்க அப்படி விட்டிருக்க கூடாது.”
சமாதானம் பேசி அவனுடன் அனுப்பவே அவனை வரச்சொல்கிறார் தந்தை என்று அவர்மீது இயலணி கொண்ட அதிருப்தி அந்நொடி காற்றில் கரைந்து போனது. தனக்காக பேசுகிறார் என்றதிலேயே மனம் இளக, நிம்மதியாக உணர்ந்தாள். சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை சிம்மாசனமிட்டு அமர்ந்தது.
எதை கேட்டுவிடக்கூடாது என்று பயந்தானோ அதையே எடுத்ததும் கேட்டுவிட, நெஞ்சம் அதிர உடல் குறுக குன்றிவிட்டான் அறிவழகன். எந்த நிலையில் இயலணி கிளம்பிச் சென்றாள் என்ற நினைவு மீண்டும் மேலெழுந்து அமிழ்த்த இதழ்களை இறுக மூடி அமர்ந்திருந்தவனின் உடலில் அத்தனை இறுக்கம். இறுக்கத்தினுள் நடுக்கம் ஓடுவதை லாவகமாக மறைத்தவனால் எதுவும் பேச முடியவில்லை. நடுஇரவில் கிளம்பிச் சென்ற இயலணி பத்திரமாக இருக்கிறாள் என்று பார்க்க விழைந்த மனம் அவளை கண்டபின் அமைதியடைவதற்கு பதில் பரிதவித்தது. எப்படி அனைவரையும் எதிர்கொண்டு இயலணியின் மன்னிப்பு பெற்று அனைத்தையும் சரிசெய்ய போகிறோம் என்ற கேள்விக்கு எத்திக்கிலும் பதிலில்லை.
மகளின் கணவனை ஆராய்ச்சியாய் பார்த்துக்கொண்டிருந்த பரந்தாமன் மனைவிக்கு கண்காட்ட, தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தார் வேம்பு.
“இல்லை வேண்டாம்.” அடைக்கும் தொண்டையை சரிசெய்து கொண்டு மறுக்க,
“குடிங்க பேசலாம்.” நிதானம் தவறாது பார்த்தார் பரந்தாமன்.
லேசாக கரம் நடுங்க இயலணியை ஒரு பார்வை பார்த்தவன் தண்ணீர் வாங்கிக்குடிக்க, எழுந்துவிட்டார் தந்தை.
“பாப்பா வந்து எங்களோட தூங்கு. உன் ரூம்ல அவர் தூங்கட்டும். காலையில பேசலாம்.”
“அப்பா…”
“அப்பா சொல்றேன்ல. தூக்கம் இல்லாம யாருமே சரியா இல்லை. இப்போ பேசி யோசிச்சு எடுக்குற முடிவு சரியா இருக்காது. காலையில பாக்கலாம்.”
அறிவழகனை அவதானிக்க நேரம் தேவைப்பட்டது அவருக்கு. அவனும் இப்படி நட்டநடு இரவில் வந்து நிற்க, உடனே எதையும் முடிவு செய்ய முடியும் என்று தோன்றவில்லை. அதோடு நேற்று மகள் கொக்கி போட்டு நிறுத்திய வார்த்தை அவரின் கற்பனை வளத்தை ஏகத்திற்கும் சுண்டிவிட்டிருக்க, ராஜேஷுக்கு பயந்து அறிவழகனுடன் அவளை அனுப்ப இருந்தவர் நிதானித்துவிட்டார். ஒருவாரம் ராஜேஷ் தொல்லை இருக்காது என்று வேந்தன் வாக்கு கொடுத்திருக்க, அவசரப்படவேண்டாம் என்ற எண்ணம்.
மகளை கட்டியவனும் அடாவடி பேர்வழி போல் தெரியவில்லை என்றாலும் ஏதோ தவறு இருப்பது பெண்ணின் கூற்றில் உறுதியாகிவிட்டது. திருத்தும் தவறென்றால் வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் என்ற முடிவு. மனைவியும் மகளும் உடன்படுவார்கள் என்று பார்க்க, அறிவழகனை அப்பட்டமாக முறைத்துக் கொண்டிருந்தாள் இயலணி.
என்னை, என் பெண்மையை களங்கப்படுத்திவிட்டு என் அறைக்குள் இடம் வேண்டுமா உனக்கு என்ற மறைமுக எதிர்ப்பு அனல் அவளில் இருக்க,
“இல்லை… நான் இங்கேயே படுத்துக்கிறேன்.” அவள் பார்வையின் பின்னிருக்கும் அர்த்தம் புரிந்தது போல் மறுப்பு அறிவழகனிடம்.
அப்புறம் உங்கள் இஷ்டம். எங்கள் மகளின் கணவனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்துவிட்டோம் என்பது போல் நகர்ந்துவிட்டார் பரந்தாமன். மகளையும் கணவரையும் மாறி மாறி பார்த்த வேம்பு,
“இங்க படுக்க வசதிப்படாது. நீங்க ரூம்ல படுத்துக்கோங்க. இயலும் அவ தம்பியும் அங்கதான் இருப்பாங்க. அவன் சென்னைல காலேஜ் படிக்குறான்.” அந்த அறை மகளுடையது மட்டுமல்ல தன் மகனதும் தான், சங்கடப்படாமல் உபயோகப்படுத்துங்கள் என்ற பொருள் தாங்கி வந்தது அவரின் பேச்சு.
“இல்லை…”
“என்ன பாத்துட்டு இருக்க இயலு. மூணு மாசம் உன்னை பாதுகாப்பா தங்க வச்சிருக்காங்க. அதுக்காகவாவது நீ கவனிக்கணும். போய் எல்லாம் எடுத்து கொடுத்துட்டு வா.” என்று மகளை உசுப்ப, அது கொஞ்சம் வேலை செய்தது.
அவனை அழுத்தமாக பார்த்துவிட்டு அவள் நகர, வேம்புவும் விளக்கை அணைத்துவிட்டு அறைக்குச் சென்றார்.
“மூணு மாசம் பாதுகாத்தது சந்தர்ப்பம் கிடைக்கும் போது கொத்தத்தான்னு அவங்களுக்கு புரியாம இருக்கலாம்.” என்று வலிக்கச் சொல்லியவள் அறைக்குள் நுழைந்து அவள் பயன்படுத்தும் தலையணை மற்றும் போர்வையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
“உங்க மூச்சுக்காத்து கூட நான் யூஸ் பண்ற பொருள் மேல படக்கூடாது. ஸ்டே அவே.” என்றுவிட்டு பெற்றோர் அறைக்குள் சென்று மறைய, பையை பொத்தென்று போட்டவன் அறையின் ஓரத்தில் வெறுந்தரையில் படுத்துவிட்டான்.
‘ஒருத்தன் நல்லவனா இல்லையானு அவன் பொண்டாட்டி சொல்லணும்.’ என்று அவள் சொல்லியதாய் வேந்தன் அழைத்துச் சொல்லவும் உயிரை யாரோ உருவிவிட்டு உடலை மட்டும் அனாதரவாய் விட்டுச்சென்ற உணர்வு.
உணர்வற்று இருந்தவனிடம், ‘என்னமோ பண்ணியிருக்க நீ. ஒழுங்கா சரிபண்ணிக்க.” என்ற வேந்தன் அதன்பின் தான் விலாசம் அனுப்பியிருந்தான். ஏதோவொரு உந்துதலில் இத்தனை தூரம் வந்துவிட்டவனால் இயலணியை சரிக்கட்ட முடியும் என்று தோன்றவில்லை. செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக அவள் விரும்புவது போல் தன் மூச்சுக்காற்று கூட அவளை தீண்டாத வண்ணம் தொலைதூர இடத்திற்கு சென்றுவிட வேண்டும் என்று முடிவெடுத்தனாய் கொட்ட கொட்ட விழித்திருந்தான். உறக்கத்திற்கு உடல் கெஞ்சினாலும் செய்த வினை அவனை உறங்க விடாமல் படுத்தியது. ஒரு கட்டத்தில் உடல் சோர்வு வெல்ல, உறக்கம் தழுவியிருந்தான்.
error: Content is protected !!