Skip to content
Post Views: 3,258
மார்கழி – 14
‘ஆளுங்கட்சி அமைச்சரின் மகன் சம்மந்தப்பட்டிருக்கும் பாலியல் வன்கொடுமை வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு வருகிறது. கைதுசெய்யப்பட்ட ஐவரும் பலத்த காவல் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் *** பள்ளி ஆசிரியர் ஒருவர் மூன்று மாதங்களாக ரகசியமாக வைக்கப்பட்ட நிலையில் இன்று சாட்சி சொல்ல வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.’ தொலைக்காட்சி பெட்டியில் நீதிமன்ற வாயிலில் நின்று பத்திரிக்கையாளர்கள் தகவல் கொடுக்கும் காணொளி பிரேக்கிங் நியூஸாய் மீண்டும் மீண்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
சாட்சி சொல்லப் போக வேண்டியவளோ தன்னெதிரே அமர்ந்திருப்பவர்களை கண்டு ஐயம் கொண்டாலும் அதனை காட்டிக்கொள்ளாமல் நின்றாள். அருகில் அவள் பெற்றோரும் பதட்டத்துடன் நின்றிருந்தனர்.
Advertisement
“மூணு மாசமா சல்லடை போட்டு சலிச்சும் பொண்ணை கண்டுபுடிக்க முடியாத இடத்துல பதுக்கி வச்சிருந்திருக்கீங்க. பக்கா ஃபிளான் தான். எல்லாம் அந்த போலீஸ்காரன் போட்டுக்கொடுத்தது தான…” பாய்ந்து இயலை பிடிக்கும் வேகத்தில் துள்ளிக்கொண்டிருக்கும் ராஜேஷின் நெஞ்சை பிடித்து தள்ளி விட்டவன் பேச, அரண்டு பார்த்தனர் குடும்பத்தினர்.
ஒரு வாரம் உள்ளே வைக்கமுடியும் என்று வேந்தன் சொல்லியிருக்க, ஒரே நாளில் வெளியே வந்திருந்தான் ராஜேஷ். வரவைத்திருந்தார்கள்.
“ஆக்சிடென்டுனு ஒரு லாரியை மேல விட்டு ஏத்தவோ, கேஸ் அடுப்பு ஹோசை புடுங்கிவிட்டு ஒரு வத்திக்குச்சியை பத்தவச்சி வீட்டுக்குள்ள வீசவோ நிமிஷம் ஆகாது எங்களுக்கு. ஏதோ எல்லாம் ஒரே ஜனமா போயிட்டோம், அதுவும் ராஜேஷோட வருங்கால குடும்பம்னு தான் இவ்வளவு நாள் விட்டு வச்சிருந்தோம். அது புரியாம சாட்சி சொல்றேன் அதுஇதுனு கிளம்பி நிக்குறது எல்லாம் சரியா?” வந்திருந்த கையாள் பேச்சின் தோரணையே சரியாய் படவில்லை.
Advertisement
“படிச்ச குடும்பம் புரிஞ்சிக்குவாங்க. ராஜேஷ் எங்க தலைவருக்கு வேண்டப்பட்டவன் அவனுக்கு பொண்ணை கொடுத்தோமா வரப்போற சொத்து சுகத்தை அனுபவிச்சோமானு இல்லாம சாட்சி சொல்றேன்னு நிக்குறது எல்லாம் நல்லாவா இருக்கு.” என்றான் மற்றொருவன்.
Advertisement
“வழவழனு பேசாம சொல்ல வந்ததை நேரா சொல்லுங்கடா…” ராஜேஷ் எகிற,
“இங்க பாருங்க, என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. ராஜேஷ் விலகிக்கிறது தான் நல்லது.” மகளுக்காக பேசினார் பரந்தாமன்.
“என்ன சும்மா சொன்னதையே சொல்லிட்டு இருக்கீங்க. திடீர்னு ஒரு கயிறை கழுத்துல போட்டுட்டு வந்து நின்னா ஒத்துக்கணுமா நாங்க. எங்க தாலி கட்டுனவன வர சொல்லுங்க பாப்போம்.” குறுகிய காலத்தில் இயலணிக்கு திருமணம் ஆகியிருக்க வாய்ப்பில்லை என்று அழுத்தமாக நம்பினான் ராஜேஷ். அதோடு மூன்று மாதங்களாக பரந்தாமன் குடும்பத்தை தொடர்ந்ததில் அவர்கள் இயலணியுடம் தொடர்பிலில்லை, வீட்டை விட்டு அனாவசியமாக எங்கும் போகாமல் வேலை விட்டால் வீடு என்று இருந்தவர்கள் ஊரை விட்டு எங்கும் செல்லவில்லை என்று தெரிந்தது. அவர்கள் இல்லாமல் இயலணி திருமணம் நடந்திருக்காது என்ற எண்ணம்.
Advertisement
“டேய் உன் கல்யாண பஞ்சாயத்தை பத்தி பேச வந்தோமா இல்லை கோர்ட்டுல என்ன சொல்லணும்னு சொல்லிட்டு போக வந்தோமா. எது முக்கியமோ அதை பாக்கணும். மத்தது எல்லாம் தானா நடக்கும்.” அமைச்சர் ஆட்கள் அவர்களுக்குள்ளாகவே பேசி ராஜேஷை அடக்கினர்.
அவர்கள் சம்பாஷனையை கூர்ந்து கவனித்த வேம்புவுக்கு ஒரு யோசனை துளிர்க்க, “என் பொண்ணு உங்களுக்கு எதிரா சாட்சி சொல்லக்கூடாதுன்னா ராஜேஷ் என் பொண்ணுக்கு தொந்தரவு கொடுக்காம விலகிடனும்.” என்றுவிட்டார்.
இயலணி அதிர்ந்து வேம்புவைப் பார்க்க, அமைச்சர் ஆட்கள் அப்போதே ராஜேஷை அப்புறப்படுத்துவதில் மும்மரம் காட்டினர்.
சூழ்நிலை சட்டென்று தனக்கெதிராக மாறியதில் கடுப்பான ராஜேஷ், “அவங்கதான் சொல்றாங்கன்னா என்னையே அனுப்ப பாக்குறீங்களே. இப்போ இப்படி சொல்லிட்டு கோர்ட்டுல மாத்தி சொன்னா என்ன பண்ணுவீங்க?” வேம்புவின் யோசனையை கண்டுகொண்டது போல் எடுத்துக்கொடுத்தான் ராஜேஷ்.
“அங்க மாத்தி சொல்லிட்டு இங்க யாராவது இருந்தாதான திரும்பி வரமுடியும். நேரா கொல்லிவைக்க போகவேண்டிய நிலைமை வந்தா ஐயோனாலும் வராது, அம்மானாலும் வராது.” குரூர சிரிப்பின் பின் ஒளிந்திருந்தது மிரட்டல்.
“வேணும்னா இப்படி பண்ணலாமே… இந்த பொண்ணு நியாயவாதியா தண்டனை வாங்கிக்கொடுக்கணும்னு நினைக்குது. அது ஆசைக்கு வந்து சாட்சி சொல்லட்டும், நம்ம சின்னையாவை மட்டும் அடையாளம் தெரியலைனு சொல்லிட்டு போகட்டுமே. மத்த நாலு பேருக்கும் தண்டனை கிடைச்சுடும். நாமளும் ஒரு நல்லது பண்ண மாதிரி ஆகும்ல.” என்றான் இன்னொருவன்.
ஐந்தாறு பேர் வீட்டின் நடுக்கூடத்தில் அமர்ந்து கத்தியின்றி அரிவாளின்றி அட்டூழியம் செய்பவர்களை எதுவும் செய்ய முடியாது பார்த்தாள் இயலணி. உள்ளுக்குள் பயப்பந்து உருண்டு தொண்டையை அடைத்து நிற்க, இங்கிருந்து தப்பித்து எப்படி நீதிமன்றம் செல்வது என்று யோசித்தாள்.
அவளை பத்திரமாக அழைத்துச் செல்ல சிறப்புக் காவலர்கள் நியமிக்கப்பட்டிருக்க, அவர்களோ இந்த அடியாட்களுக்கு காவலாய் வெளியே நின்றிருந்தனர். அரசியல் பின்புலத்திற்கு முன் நேர்மையான சாமானியனாய் எதிர்த்து நிற்க வலு போதவில்லை. சுற்றமும் சூழலும் அதிகார வர்க்கத்திற்கு பயந்து தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் நிலை. உதவ முயன்ற வேற்றுக் கட்சிகளும் அதனில் தங்களுக்கான சன்மானத்தை எதிர்பார்த்ததே ஒழிய நியாயத்தை நிலை நிறுத்த விழையவில்லை. ஏனையோர்கள் இதனைக் கொண்டு விளம்பரம் தேடிக்கொண்டனர். சந்தர்ப்பவாதிகள் மத்தியில் எப்படி தன்னலமின்றி நீதி வாங்கிக்கொடுப்பது என்ற தவிப்பிற்கு பதிலாய் சில நல்ல உள்ளங்களும் அவள் வழியில் குறுக்கிட்டு நன்மையில் முடியும்படி செய்தது.
“ரொம்ப நேரம் இங்க இருக்க முடியாது. எவனாவது கேமராவை தூக்கிட்டு வந்துருவான். கிளம்புவோம்.” ஐவரில் ஒருவன் எழுந்து சமிக்ஞ்சை செய்ய,
“சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கட்டும். அங்க வந்து நாலு பேரை அடையாளம் காட்டிட்டு போயிட்டே இருக்கனும். ஐஞ்சாவது விரல் உசந்துது…” விரல் நீட்டி எச்சரித்த நெடியவன் ஒருவன் அனைவரையும் கூட்டிக்கொண்டு கிளம்ப, ராஜேஷ் கேலியாய் சிரித்து நகர்ந்தான். அவர்கள் சென்றதும் உடனே உள்ளே நுழைந்தனர் சிறப்புக்குழுவினர்.
கிளம்பலாம் என்று அவர்கள் மணியை காட்டி சொல்ல, பெற்றவர்ளை ஒரு பார்வை பார்த்தவள் தலையசைத்து நகர்ந்தாள்.
“யோசிச்சு பேசு இயலு. இந்த கோர்ட்டு கேஸ் எல்லாம் இன்னையோட ஒழியட்டும். நாளைக்கே உன் மாமனார் மாமியார் பாத்து பேசிடலாம்.” வேம்பு நடுக்கத்துடன் மகள் கைப்பற்றி நிறுத்த,
“அதெல்லாம் இப்போவே சொல்லனுமா?” என்று மனைவியை கடிந்த பரந்தாமன், “பின்னாடியே நாங்களும் கிளம்பி வரோம் பாப்பா.”
“நீங்க எதுக்குப்பா?” இயலணி மறுத்தாள்.
“உன்னை அங்க தனியா விட்டுட்டு நாங்க எப்படி இங்க இருக்க முடியும்? மாப்பிள்ளையும் வேந்தன் தம்பியோட நேரா அங்க வந்துர்றேன்னு சொல்லியிருக்காரு.” என்ற தந்தையின் பதிலில் முகத்தை சுருக்கினாள் இயலணி.
அவனுடன் செல்கிறேன் என்று அவள் தந்தைக்கு வாக்கு கொடுத்தபின் வெளியே கிளம்பிச் சென்றவன் ஒரு நாள் ஆகியும் இன்னும் வரவில்லை. அவள் கேட்டுக்கொள்ளவும் இல்லை. ஆனால் அவள் தந்தை அவனுடன் தொடர்பில் இருக்கிறார் என்ற விஷயமே கசந்தது. நேற்று வரை அவனை அந்த தம்பி என்றிருந்தவர்கள் இன்று மாப்பிள்ளை, மாமனார், மாமியார் என்று உறவு கொண்டாடவும் அழுத்தமாய் உணர்ந்தாள்.
அவர்கள் அனைவரும் ஒருபக்கம் தான் மட்டும் தனித்து மறுபக்கம் என்ற உணர்வு வெறுமை கொடுத்தது. பெற்றவர்கள் அவனை எளிதாக ஏற்றுக்கொண்டது போல் தன்னால் முடியவில்லையே என்ற மனதின் கேள்விக்கு அவன் செயல்களே முன்னே வந்து அவள் முடிவுக்கு உறுதுணையாய் நின்றது.
“என்ன யோசனை இயலு?” வேம்பு அவள் தோள் பிடித்து உலுக்க, மறுப்பாய் தலையசைத்தவள் மெளனமாய் வெளியேறினாள்.
“பாப்பா உன் போன்.” பரந்தாமன் அவளை பின்தொடர்ந்து வந்து கொடுக்க, அசிரத்தையாய் வாங்கிக்கொண்டு காரில் ஏறினாள்.
“மேடம், அந்த அமைச்சரை பகைச்சிக்காதீங்க. அரசியல்வாதிக்கிட்ட மோதி நம்மால ஜெயிக்க முடியாது. அவருக்கும் ஒரு காலம் வரும். கீழ விழுவாரு. நீதி வாங்கிக் கொடுக்கிறேன்னு உங்க குடும்பத்தையும் வாழ்க்கையையும் தொலைச்சிடாதீங்க.” சிறப்புக் காவல் குழுவில் இருந்த ஒருவர் அவள் வாழ்க்கையை எண்ணி பேச,
“எல்லாரும் இப்படியே நினைச்சா அப்புறம் எப்படி சார் தப்பு செய்யுறவங்களுக்கு பயம் வரும்?” என்று கேட்டிருந்தாள் இயலணி.
“அப்போ உங்க குடும்பத்தை பலி கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்க?” என்ற மற்றொருவர் கேள்வியில் கண்கள் கரித்துக்கொண்டு வந்தது.
“வாழுற வயசுல உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?” இது பெண்காவலர்.
“அந்த பொண்ணுக்கும் வாழுற வயசு தான் மேடம்.” தொண்டை கரகரக்க வந்தது இயலணியின் பதில்.
அவளை சுற்றி விஷயம் கேள்விப்பட்ட அனைவரும் சொன்னது இதைத்தானே உனக்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை, உன் வாழ்க்கையைப் பார் என்று விதவிதமாய் வித்தியாசமாய் சொல்லிவிட்டனர். இவள்தான் மனது கேளாமல் சாட்சியாய் மாறினாள். அதனைத் தொடர்ந்து அவள் வாழ்விலும் தான் எத்தனை இன்னல்கள். கயவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க யாரோ ஒருவன் வீட்டினில் அவனுடன் ஒன்றாய் மூன்று மாத சிறை வாசம் அனுபவித்தது போல் அடைந்தே கிடந்து, வாழ்க்கையின் திசை மாறி இப்போது திக்கு தெரியாமல் தத்தளித்து தடுமாறுகிறாள்.
உன் வாழ்க்கையே கேள்விக்குறியில் நிற்க, இன்னொரு பெண்ணுக்கு நீதி வாங்கிக்கொடுக்க இத்தனை போராடும் போது உனக்காக நீ போராட மாட்டாயா என்றொரு கேள்வி மனதினுள். என்னால் முடியும். அவன் அருகாமை கொடுக்கும் அந்த வலி நிறைந்த இரவின் நினைவை மனதில் சுமந்தபடி சகித்துக்கொண்டு வாழ வேண்டிய அவசியம் இல்லையே. தானாக தைரியம் பிறந்தது. உடன் சோர்வும். எத்தனை சொல்லியும் பெற்றோரின் பயத்தை விரட்ட முடியாத சமூக சூழலை எண்ணி எரிச்சல் கொண்டாள். ஆணின் தவறான பார்வையும் ஆண்வர்கத்தினரின் கர்வத்துடனான போதையுடன் சேர்ந்த முறைகெட்ட இச்சையும் பெண்ணின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று படித்து முடித்த கையோடு வேறொரு ஆணிடம் திருமணம் என்ற பந்தத்தில் பிடித்துக்கொடுப்பதில் என்ன நிம்மதியா கிடைத்துவிடப்போகிறது? அவன் மட்டும் நல்லவன் என்று உடன் இருந்து கண்டார்களா என்ன? நினைக்க நினைக்க தலைவலிப்பது போலிருக்க, தலை திருப்பி கண்ணாடி வழியே வெளியே பார்த்தாள். நீதிமன்றத்தின் முக்கிய வாயிலை தாண்டி சுற்றிக்கொண்டு பின்வாயில் வழியாக வளாகத்தினுள் நுழைந்தது கார். அவளுடன் வந்தவர்கள் அவளை ஓரிடத்தில் பாதுகாப்பாய் அமர்த்தி பெண்காவலரை துணைக்கு வைத்துவிட்டு நகர்ந்து நின்றுகொண்டனர்.
சலசலப்புடன் பலர் வருவதும் போவதுமாய் பரபரப்பாய் இருந்தது நீதிமன்றம். முன்புற வாயிலில் பத்திரிகையாளர்கள் குழுமி இருப்பதாக காவலர் சொல்ல, கவனம் சிதற கேட்டுக்கொண்டிருந்தாள். இந்த நேரத்திற்கு உள்ளே அழைப்பர், அங்கு எப்படியான கேள்விகள் இருக்கும், அதற்கு தகுந்தாற்போல் எப்படி பேச வேண்டும் என்ற விவரங்களோடு வழக்கறிஞர் வந்து பேசிவிட்டு செல்ல, மெல்ல கலவரம் மூண்டது மனதினுள். நேரம் கடக்க கடக்க வீட்டில் வைத்து அடியாட்கள் மிரட்டியது பீதியை கிளப்பியது.
நீதியா பெற்றவர்களா என்ற கேள்வியில் இரு பக்க தராசும் சரிசமமாய் நிற்க, எதையாவது ஒன்றை தான் நீ தேர்ந்தெடுக்க முடியும், சீக்கிரம் முடிவெடு என்ற அறிவுறுத்தல் அடிமனதில். கலங்கிய விழிகளை இறுக மூடி ஆழ மூச்செடுத்தாள். விம்மல் வெடிக்க காத்திருந்தது. அடக்கிக்கொண்டாள். அன்றைய இரவு கந்தலும் கதறலுமாய் கல்லூரி படிக்கும் பெண்ணொருத்தி ஐவரின் முரட்டுத்தனத்திற்கு முன் சக்தியின்றி கிடந்தாள். அந்த வழியாய் சென்ற இயலணி கண்டுகொண்டு குரல் எழுப்பி சுற்றத்தாரின் உதவியோடு அவளை மீட்டு காவல்துறையிலும் புகார் கொடுத்து முன்னின்றது படமாய் ஓடியது. அதனை தொடர்ந்து வந்த குடைச்சல்களை எதிர்கொண்டு தன் பாதுகாப்பிற்காக தவித்து தடுமாறி நின்ற அவள் பெற்றவர்கள் நிழற்படம் உயிரை உருக்கும் விதமாய். கையிலிருந்த அலைபேசியை அழுந்த பற்றிக்கொண்டாள். பெற்றவர்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்ற பயம் அவள் நீதியை தளரச்செய்தது.
‘கடைசியில நீயும் சராசரி மனுஷி தான்டி.’ அவள் மனமே குற்றம் சுமத்தி அவளை கீழாய் உணர வைக்க,
“இயல்.” என்ற அழைப்பில் விழுக்கென்று நிமிர்ந்தாள். கண்களை திறக்கும் முன்னமே அந்த குரலை கண்டுகொண்டாள். அத்தனை பதிந்திருக்கிறதா அவன் குரல், லேசான திடுக்கிடல்.
“உன் அப்பா, அம்மாவை பாதுகாப்பா ஊருக்கு அனுப்பியாச்சு. நீ தைரியமா சாட்சி சொல்லு. யாருக்கும் எதுவும் ஆகாது. வேந்தன் மூலமா சென்னைல இருக்குற நம்பிக்கையான ஏ.எஸ்.பி. வீட்ல தங்க ஏற்பாடு பண்ணி இருக்கு. உன் தம்பி ஏற்கனவே அங்க போயாச்சு, அப்பா அம்மாவை வேந்தனே கூட்டிட்டு போறான்.” நம்பிக்கையாய் பேசியவனை யோசனையாய் பார்த்தாள் இயலணி.
“ஏ.எஸ்.பியா?” பயம் மெல்ல குறைவதை உணர்ந்தாள்.
“ராஜேஷ் வெளில வந்ததும் வீட்டுக்கு வந்து மிரட்ட வாய்ப்பிருக்குனு அவனுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு. அதான் என்ன பண்றதுனு யோசிச்சு இந்த முடிவு. ஏ.எஸ்.பி இளம்பரிதி அவனுக்கு தெரிஞ்சவராம். நேர்மையான ஆளாம். பயப்பட வேண்டாம், இந்த பிரச்சனை எல்லாம் அடங்குற வரைக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவன் பொறுப்புன்னு சொல்லி இருக்கான்.
பாதிக்கப்பட்ட பொண்ணும் இன்னைக்கு சாட்சி சொல்ல வந்திருக்கு. அதனால உன்னோட சாட்சி கேஸுக்கு ஸ்ட்ராங்கா இருக்கும், இதோட பிரச்சனை சீக்கிரம் ஓஞ்சிடும். உள்ள நீ தைரியமா சொல்லு, நீ விரும்புன மாதிரி அவனுங்களுக்கு தண்டனை வாங்கிக்கொடு. அப்படியே எனக்கும்.” என்றவன் குரல் சிறுத்து உள்ளே சென்றது.
பதட்டம் குறைய அவனை அழுத்தமாய் பார்த்தவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
“தலை கலைஞ்சி, கண்ணுல தூக்கமும் பயமும் போட்டிப்போட வேந்தனோட முதல்முதலா என் வீட்டுக்கு வந்தப்போ உனக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துச்சுனு நினைச்சிதான் நீ தங்க உடனே ஒத்துக்கிட்டேன். என்ன நடந்துச்சுனு தெரியல, நான் என்னனு கேட்டு உன்னை மேல மேல வருத்தப்பட வைக்கக்கூடாதுனு இருந்தேன். என் வீட்ல நீ பாதுகாப்பா இருக்கனும்தான் எல்லாமே பண்ணேன். கடைசியில நானே…” தொண்டை கமற, நெஞ்சை பிடித்து யாரோ அழுத்துவது போல வலிக்க, லேசாக நீவிக்கொண்டவன்,
“என்ன செஞ்சாலும் மன்னிக்க முடியாத தப்புதான். நானும் வேணும்னா ஜெயிலுக்கு போகவா? போலீஸ்ல என்னை புடிச்சி குடுத்துடுறியா?” வலி நிறைந்த விழிகளுடன் வேலியை தாண்டிக்கொண்டு விழக் காத்திருந்தது விழிநீர்.
கயவர்களுக்கு எதிராக வெளியே கூடியிருப்போரின் முழக்கமும் ஆக்ரோஷமும் அவன் கண் முன் வந்து போக, உடல் நடுங்கியது. நீயும் அதைத்தானே செய்தாய். அந்த முழக்கங்களும் கோஷங்களும் உனக்கும் சேர்த்துதான் என்ற மனக்குமுறலுக்கு கண்ணீர் விடையாய் கரைந்தது.
“உள்ள கூப்பிடுறாங்க.” நகர்ந்து சென்றிருந்த பெண் காவலர் திரும்பி வந்து அழைக்க, அவன் கண்ணீரை பார்த்துக்கொண்டே எழுந்தவள் கலங்கியிருந்த தன் விழிகளையும் துடைத்துவிட்டு மெளனமாய் அவனைக் கடந்தாள்.
“காத்திட்டு இருப்பேன் இயல்.” சாட்சி சொல்லிவிட்டு வெளியே வரும்வரை காத்திருப்பேன் என்று அவன் சொன்னதை காதில் வாங்கிக்கொள்ளாதது போல் கடந்து சென்றவள் அவனை வெகுவாக காக்க வைத்து மறுவாயில் வழியாக வெளியேறி இருந்தாள் அந்த நகரை விட்டே.
error: Content is protected !!