Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மார்கழி மத்தாப்புக்கள்

மார்கழி மத்தாப்புக்கள் – 17

மார்கழி – 17

கசந்து போனது அறிவழகனுக்கு. என்னவெல்லாம் பேசிவிட்டார். விலகல் பத்திரம் வாங்கி அத்தை மகளுடன் அச்சாரம் இடுவதெல்லாம் இன்னொருவளின் கழுத்தில் தாலி கட்டியபோதே எண்ண விழையாதது. இதில் மாபெரும் அநியாயம் ஒன்றை வேறு செய்து வைத்திருக்க இயலை விடுவதா? நினைக்கவே முடியவில்லை. குற்றம் புரிந்த மனது பதறியது. இன்னொரு அநியாயம் செய்யுமளவுக்கு மனசாட்சி கீழிறங்கிடவில்லை. வெளிப்படையாய் சொல்லவும் முடியவில்லை. இந்த பேச்சே வேண்டாம் என்றாகிற்று. அப்பாவும் சொல்லிப் பார்த்தாகிற்று தன் பிடியில் உறுதியாய் இருப்பவரை அசைக்க முடியாது அவன்தான் முன்னரே ஊருக்கு கிளம்பும்படி ஆகிற்று. செல்லும் முன் இயலணி வைத்துச் சென்ற மேகலாவின் தங்க வளையலை கொடுத்துவிட்டுச் சென்றான்.

“இது அவ கைக்கு சேர வேண்டியதே இல்லை. உமாவுக்கு சேர வேண்டியது.” மேகலா விடாது பேசினார். 

“அப்படி என்ன புடிவாதம் உனக்கு? வாழப் போற அவனே இப்படி ஒரு எண்ணம் வேண்டாம்னு சொல்றான். அப்புறமும் உமாவை கட்டணும்னு நிக்குற.” மாறன் மனைவியை கடிந்துகொள்ள, மேகலா கேட்பதாய் இல்லை.  



Advertisement

“நீங்க பாத்திருக்கணும் உமாவோட பேசும் போது அவன் முகத்துல இருந்த பரபரப்பும் சிரிப்பும் அவன் கல்யாணத்தைப்போவே காணாம போச்சு. அப்போவே சொன்னான் உமாவை தான் புடிச்சிருக்குனு. கேக்காம பண்ணி வச்சி இப்போ எங்க வந்து நிக்குது பாருங்க.”

“சின்ன சின்ன பிரச்சனை வர்றதெல்லாம் சகஜம் தான். நீ பெருசு பண்ணாம இருந்தாலே அதையெல்லாம் அவங்க பாத்துப்பாங்க.” என்று மாறன் சமாதானம் பேசினாலும் அவருக்குள்ளும் மகன் மருமகளின் உறவு குறித்த கவலை அரிக்கத் துவங்கியது. வெளியே காட்டிக்கொள்ளவில்லை. 

ஆனால் மேகலா உமா வீட்டினரோடு சமரசத்திற்கு முயன்று கொண்டிருந்தார். அவர்கள் சமாதானமாகி உமாவே அறிவழகனிடம் பேசினால் அவனால் அவளை மறுக்க முடியாது என்பது திண்ணம். அவர்கள் பிடிகொடுக்கவில்லையென்றாலும் எதையாவது எடுத்துக்கொண்டு வலிந்து சென்றார். அவர் மேல் இருந்த வருத்தத்தில் மகன் வீட்டிற்கு வருவதையே நிறுத்தியிருக்க, கவலை கொண்டாலும் அதெல்லாம் போகப் போக சரியாகிவிடும் என்று தூசு போல் தட்டிவிட்டார்.

Advertisement

மூன்று மாதங்கள் சென்ற வேகம் தெரியவில்லை. பள்ளிகளில் பரீட்சை முடிந்து விடுமுறை துவங்கியிருந்தது. புதிதாக சேர்ந்திருந்த பள்ளியில் அலுவல் வேலைகளும் முடிந்து விடுமுறை கொடுத்துவிட்டனர் இயலணிக்கு. வருடாவருடம் இந்த விடுமுறையில் தாயுடன் நன்றாக ஊர் சுற்றுவது, பிடித்த உணவுகள் செய்ய சொல்லி உண்பது, வருடத்திற்கான புது உடைகள் எடுத்து தைப்பது, படத்திற்கு போவது என்று எப்போதும் உற்சாகமாய் இருக்கும். இவ்வருடமோ யாருமற்ற தனிமையில்… தனிமையா? அறையின் மற்றொரு இடத்திற்கு ஆள் வந்தாகிற்று. ஆனால் ஒரு வார்த்தை தேவையின்றி பேசியதில்லை இயலணி. 

Advertisement

படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்த புதிதில் தொடர்ந்த கல்லூரி நட்புகள் போகப்போக குறைந்துபோனது. வேலை பார்க்கும் இடத்தினில் கிடைத்த நட்புகளும் இடையில் அவள் சிக்கிய பிரச்சனைக்கு பயந்து ஒதுங்கிவிட்டனர். இதோடு வாழ்க்கையை புரட்டிப்போட்ட நிகழ்வுகளும் அவளுக்குள் வெறுமை கூட்டுவதாய். புதிதாய் சேர்ந்த பள்ளியிலும் அளவான பழக்கங்கள். ஏனோ யாரோடும் ஒட்டப் பிடிக்கவில்லை. பிள்ளைகளின் முகம் பார்க்கும் நாழிகைகள் தவிர்த்து மற்றைய நேரங்களில் ஏனென்றே தெரியாத ஒரு சோர்வு. அது உடல் சோர்வா மனச்சோர்வா என ஆராய்ந்து அதனை சரிசெய்யக்கூட முடியாதவளாய் அலமலந்து நின்றவள் அவள் அறியாமலேயே இறுக்கத்திற்குள் சென்றுகொண்டிருந்தாள்.

“ஸ்கூல் லீவு விட்டாச்சுதான அக்கா உங்களுக்கு? வீட்டுக்கு போகலையா?” என்று கேட்டுவிட்டு முகம் பார்த்துக்கொண்டிருந்த அறைத் தோழியின் கேள்வியில்தான் பழைய நினைவுகளுக்கு சென்று வந்தாள். 

“வந்ததுலேந்து பாக்குறேன் நீங்க ஊருக்கு போன மாதிரியே இல்லையே. இங்கேயே இருக்கீங்க. ஹஸ்பண்ட் பாரின்ல ஒர்க் பண்றாங்களா அக்கா?” என்ற அவளின் தொடர் கேள்விகளுக்கு மெலிதான தடுமாற்றம் இயலணியிடம். புன்னகை பூத்து மழுப்பியவள் அலைபேசியை எடுத்துக்கொண்டு மாடியேறினாள். வேலை முடித்து வந்தவர்கள் துணி துவைத்து உலர்த்திக்கொண்டிருக்க, ஒரு ஓரமாக சென்று நின்றுகொண்டவளுக்கு வீட்டின் நினைவு. அவர்களுக்கும் இவள் நினைவு வந்திருக்கும் போல அழைத்துவிட்டனர்.

Advertisement

“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்கப்போற இயல்? மே மாச ஸ்கூல் லீவ் விட்டும் இங்க வர தோணலைல உனக்கு?” தந்தையின் பாசமான அழைப்பு எங்கோ சென்றிருந்தது.

“அப்பா.”

“நீ சரியா இருப்பேன்னு நம்பிதான் உன்னை எதுலையும் நாங்க போர்ஸ் பண்ணது இல்லை. அதுக்காக இப்படியே உன் விருப்பத்துக்கு இருக்கலாம்னு இல்லை.” வார்த்தைகள் கடுமை பூசியிருந்ததோ.

“நான் நல்லா இருக்கேன் அப்பா.” முயன்று இயல்பாய் பேசினாள்.

“ஆனா நாங்க நல்லா இல்லை.”

“இப்படி பேசி என்னை பலவீனமாக்குறீங்க.” கண்களில் நீர் கோர்த்தது இயலணிக்கு.

“எல்லாருக்கும் ஏதாவது ஒரு பலவீனம் இருக்கும். அது ஒன்னும் அவ்வளவு பெரிய தப்பில்லை. கோழையா இருந்துதான் வாழ்க்கையை தொலைச்சிடக்கூடாது.” 

“…”

“உனக்கு மாப்பிள்ளையோட இருக்க வேண்டாம். நாங்க போக சொல்லிட்டோம்னு தான அங்க போய் வேலை தேடிகிட்டு ஹாஸ்டல்ல இருக்க. சரி உன் விருப்பப்படியே இரு. பேசி முடிச்சிடலாம். உன் விதி என்னவோ அதுபடி நடக்கட்டும். வீட்டுக்கு வா.” என்று அழைக்க, அங்கு போகவோ அவர் சொல்வதற்கு தலையசைக்கவோ சுத்தமாய் மனதில்லை. 

 “அப்பா…”

“இன்னும் என்ன? அதான் சொல்லிட்டேன்ல உன் விருப்பம் மாதிரியே இருக்கலாம்னு.”

“எனக்கு என்ன பண்றதுனு தெரியல அப்பா.” கலங்கிப்போய் நடுங்கி ஒலித்த குரலில் மகளை தேற்றத் தோன்றவில்லை பரந்தாமனுக்கு.

“எனக்கும் என்ன பண்றதுனு தெரியல இயல். முன்ன மாதிரி ராஜேஷ் நீ எங்கேன்னு கேட்டு தொல்லை பண்ணலைனாலும் நீ இங்க வரியான்னு கண்காணிச்சிட்டு இருக்கான். கல்யாணம் ஆகியும் அந்த வாழ்க்கையை ஏத்துக்க முடியாம நீ ஒரு பக்கம், உன் விருப்பம்னு அந்த தம்பி ஒரு பக்கம்னு இருக்கீங்க. இதையெல்லாம் பாத்துட்டு பெத்த மனசு நிம்மதியா தூங்க மாட்டேங்குது. ஏதாவது ஒரு முடிவு எடுத்துதானே ஆகணும். இப்படியே இருக்க முடியாது பாரு.”

“இல்லை என்னால இப்போ வர முடியாது. இந்த ஸ்கூல்ல புதுசா சேந்ததுனால அட்மின் ஒர்க் பாக்க முடியுமான்னு கேட்டாங்க, நானும் ஒத்துக்கிட்டேன்.” சட்டென்று முடிவெடுத்தவளாய் மறுத்தாள். பள்ளியில் ஏற்கனவே கேட்டிருந்தார்கள் இவள்தான் அன்றிருந்த இறுக்கத்தில் முடியாது என்றிருந்தாள். இப்போதோ பெற்றவர் ஊருக்கு வரச் சொல்ல, அங்க செல்லாமல் இருக்க காரணம் தேடி அலைந்தது மனம்.

“சரி எப்போ வர முடியும்னு சொல்லு.” என்று அடுத்து கேட்க, தவித்து தடுமாறினாள் இயலணி. மெளனமே பதிலாய் கிடைக்க,

“இப்போல்லாம் அமைதியாவே இருந்து காரியம் சாதிச்சிக்குற இயல்.” என்று அழைப்பை துண்டித்துவிட்டார் பரந்தாமன். அதற்கு மேல் மகளை வற்புறுத்த முடியவில்லை. காத்திருந்தால் காலம் கனிந்து அவள் மனம் மாறுமோ என்ற எண்ணம் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருப்பதால் விட்டுப்பிடிக்க நினைத்தார் தந்தை. 

அலைபேசியை காதிலிருந்து எடுத்து அழுந்தப்பற்றியவள் என்ன யோசித்தும்  தன் வீட்டிற்கு போக எதற்கு இத்தனை சஞ்சலம் என்று புரியவில்லை. மாயவலை ஒன்று அவள் மூளையை ஆக்கிரமித்து மழுங்கச் செய்வது போன்றதொரு பிம்பம். ஏதோவொரு மனக்கிலேசம் அவளை இயல்பாய் இருக்க விடவில்லை. நிதானமிழந்து எப்போதும் ஒருவித அலைப்புறுதலுடன் சுற்றி வருவது அவளுக்கே எரிச்சலைக் கொடுத்தது. மாற்றம் வரும் என்று எதிர்பார்த்து சேர்ந்த வேலை கூட அவளிடம் பெரிதாக மாற்றங்கள் கொண்டுவரவில்லை. இதோ எப்போதும் பாப்பா என்று அழைக்கும் தந்தை தூரம் சென்றுவிட்டது போல் பேசுகிறார். தன் வாழ்வில் எதுவும் சரியில்லை. எல்லாம் அவனால் தான் என்று அறிவழகன் மேல் கோபமாய் வந்தது. இதில் ராஜேஷ் வேறு ஒருமுறை அவள் எண்ணிற்கு அழைத்திருந்தான்.

“அந்த அமைச்சர் பையனுக்கு எதிரா நான் சாட்சி சொல்லக்கூடாது தான் உன்னை வச்சி கார்னர் பண்ணாங்க. இப்போதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே. இன்னும் என் மூலமா என்ன காரியம் ஆகணும்னு என்னை தொந்தரவு பண்ற?” என்று இவள் சத்தம் கூட்ட,

“அவனுங்க உன்னை என் கண்ணுல வேற விதமா காமிச்சிட்டானுங்களே. அதை மாத்திக்க முடியல. எத்தனை நாளைக்கு என்கிட்ட இருந்து ஓடி ஒளியலாம்னு இருக்க?” அலட்சியமாய் கேட்டிருந்தான் ராஜேஷ்.  

“இப்படியே தொந்தரவு பண்ணிட்டு இருந்தா போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணிடுவேன்.”

“பண்ணு பண்ணு. அங்க போறதெல்லாம் எனக்கு ஒன்னும் புதுசு இல்லை.”

“அப்போ ஒரேடியா அங்க போக ரெடியா இரு. இப்போ மாட்டியிருக்குற அஞ்சு பேரை கூட்டிட்டு வந்ததே நீதானு சொல்லிடுறேன்.” என்று அழைப்பை துண்டித்துவிட்டாள். அவள் மிரட்டலுக்கெல்லாம் அசருபவன் இல்லையென்றாலும் அதன்பின் அழைத்து தொந்தரவு செய்யவில்லை. அமைச்சர் பக்கத்திலிருந்தும் இயலணியை கட்டுப்படுத்தாமல் விட்டதற்கு நன்றாக டோஸ் விட்டு அவனை கழட்டி விட்டிருந்தனர். அதனால் அவன் கொஞ்சம் அடக்கி வாசிக்க, அவனை குறித்த பயமும் இல்லை இப்போது இயலணியிடம். பின்னர் எதற்கு உற்றார் ஊரிலிருந்து இந்த ஓட்டம் என்ற கேள்விக்கு பதிலில்லை. 

காலை பள்ளி நேரத்திற்கே கிளம்பிச் சென்று நிற்க, அங்கு அவள் செய்ய வேண்டிய வேலைகள் ஒதுக்கப்பட்டது. அழுத்தமின்றி நிதானமாக வேலை  முடித்துவிட்டு முன்னரே கிளம்பியவள் பேருந்திற்காக நிற்க, ஏதோ ஒரு உள்ளுணர்வில் திரும்பிப்பார்த்தாள். அவளையே பார்த்த வண்ணம் நின்றிருந்தான் அவன்.

எதிர்பாராத அவன் வருகையில் அதிர்ந்தவளாய் விழிகள் விரிய பதட்டம் தொற்றிக்கொண்டது. நியாயமாய் கோபம் தானே வரவேண்டும் என்று திட்டிக்கொண்டவள் பையை முன்னே இழுத்து இறுக்கப்பிடிக்க எதிரே வந்து நின்ற பேருந்து எங்கு செல்கிறது என்றுகூட கவனியாது ஏறி காலி இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டாள். நெஞ்சம் வேகமாக அடித்துக்கொண்டது.

‘எதுக்கு பதட்டப்படுற. நீ ஒன்னும் தப்பு செய்யல.’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள் மறந்தும் பேருந்து ஜன்னல் பக்கம் திரும்பவில்லை. தவறுதலாய் கூட எங்கே அவனை பார்க்க வேண்டி வந்துவிடுமோ என்று கண்களை கூட மூடிக்கொள்ள, அருகில் யாரோ அமர்வது போலிருந்தது. அனிச்சையாய் இருக்கையில் நகர்ந்து அமர்ந்து தோள்களை அசைத்தாள். பேருந்து நகர்ந்தது. ஆசுவாச மூச்சுடன் கண்களைத் திறந்தவள் நடத்துனர் வரவும் பையிலிருந்து காசை எடுக்க, பக்கவாட்டில் இருந்த கரம் பணத்தாளுடன் நீண்டது. அவளையும் காட்டி, இரண்டு டிக்கெட் என்று வாங்கிக்கொள்ள, நன்றாக திரும்பிப்பார்த்த இயலணிக்கு சுறுசுறுவென கோபம் தலைக்கேறியது.

“எனக்கு டிக்கெட் எடுக்க நீங்க யாரு? எழுந்திருங்க முதல்ல.” அவனைப் பிடித்து தள்ளாத குறையாக கைகளை காட்டி அவனை நகரச் சொன்னாள்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன் கழுத்தை நேராக்கி இலக்கின்றி விழிகளை பதித்து தொண்டையை செருமிக்கொண்டான், “ஸ்டாப் வந்ததும் நானே எழுந்திருச்சுடுவேன்.”        

“ஹலோ மிஸ்டர். மிஸ்பிஹேவ் பண்றீங்கன்னு போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணிடுவேன்.” 

“பண்ணு இயல். தண்டனை அனுபவிச்ச அப்புறமாவது என்னை உன்னால மன்னிக்க முடியுதான்னு பாக்கலாம்.” என்றவன் விழிகளுக்குள் தான் எத்தனை வலி. அதனை உணர முடிந்ததோ பட்டென்று கண்களை வேறு புறம் திருப்பிக்கொண்டாள் இயலணி.  

‘கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டேன்னு தைரியமா பக்கத்துல வந்து உக்காருறாரு.’ பல்லைக் கடித்து உணர்வுகளை அடக்க முயலும் அவள் மனதின் முணுமுணுப்பை கண்டுகொண்டான் போல,

“முத முதல்ல இப்படி பக்கத்து பக்கத்துல உக்காந்து போறோம்ல.” என்றான் அவன். இயலணி கண்டுகொள்ளாமல் இருப்பது போல் காட்டிக்கொள்ள, மெளனமாய் இருவருக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைப் பார்த்தான் அவன்.

‘என்னை தொல்லை பண்ண வேண்டாம்னு அத்தனை சொல்லியும் எப்படி என் முன்னாடி வர முடியுது?’ மீண்டுமொரு பொருமல் மனதினுள். 

“உன்னை தொல்லை பண்ணக்கூடாதுனு தான் இத்தனை நாள் உன் முன்னாடி வரல.” அவள் மனது செல்லும் திசையறிந்து அவனாகவே ஒவ்வொன்றாய் பேசினான்.

‘ஓ என்னை தொல்லை பண்ணக்கூடாதுன்னா இப்போ மட்டும் எதுக்கு வந்தாராம் அதுவும் மூணு மாசம் கழிச்சி. பேசாம இருந்திருக்க வேண்டியதுதான?’

“ரெண்டு மாசமா இதே ஊர்ல உன் பக்கத்துல இருந்தும் உன் முன்னாடி வரல. நீ விலகிப் போனதே தண்டனைனாலும். எனக்கு அது போதல.”

‘ரெண்டு மாசமா இதே ஊர்லையா?’

“ஸ்கூல்ல படிக்கும் போதிலிருந்தே இந்த டீச்சிங் ப்ரொபஷன் மேல ஒரு பிரம்மிப்பு, ஆர்வம். டிகிரி முடிச்சிட்டு பி.எட் சேர்ந்து டீச்சிங் லைன்ல போலாம்னு இருந்தேன். வீட்ல கேக்கல, எஞ்சினியரிங் சேர்த்துவிட்டுட்டாங்க. நாலு வருஷம் முடிவுல எந்த கம்பெனிக்கும் போகத் தோணல. டீச்சிங் தான் செட் ஆகும்னு முடிவு பண்ணி ஊருக்கு பக்கமா இருக்குற காலேஜ்ல சேர்ந்தேன். புடிச்சிருந்தது எனக்கு. சம்பளம் குறைவுனாலும் மனத்திருப்தி இருந்துச்சு. பெருசா என் வாழ்க்கையில எதையும் இழந்ததா நினைவே இல்லை. கவுரவமான வேலை, கண்ணியமா என் மேல விழுற மத்தவங்க பார்வை, தைரியமா என்னை நம்பி ஒரு பொண்ணை என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்த என் பிரெண்டுனு எல்லாம் நல்லா போயிட்டு இருந்துச்சு.” என்றவன் சிறு இடைவெளி விட,

‘எனக்கும் தான் எல்லாம் நல்லா போயிட்டு இருந்துச்சு.’ முறுக்கிக்கொண்டாள் இயலணி.   

“எனக்குள்ளேயும் ஏதோ ஒரு மூலைல அழுக்கு இருந்திருக்கு. அது நேரம் கிடைக்கவும் வெளில வந்துடுச்சு போல. என்னை நானே கேவலமா உணர்ந்தேன். நம்பி வந்தவளை கையில வச்சி தாங்கியிருக்கணும், அதை விட்டுட்டு தாக்கியிருக்கேன்னா என்ன மாதிரி ஆள் நான். நான் கர்வமா நினைச்ச என் கண்ணியம் அடிபட்டு போனதுக்கு அப்புறம் நானெல்லாம் பாடம் சொல்லிக்கொடுக்க லாயக்கே இல்லைனு தோணுச்சு. என் பொண்டாட்டியே என்கிட்ட பாதுகாப்பா இருக்க முடியலைன்னா என்கிட்ட பாடம் படிக்குற பொண்ணுங்க… நீ சொன்னது மாதிரி அபியூஸர்ஸ்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பாக்குற உத்தியோகத்துக்கு துரோகம் பண்ற மாதிரி குத்துச்சு. ஒரு நல்ல ஆசானா இருக்குற தகுதியை இழந்ததுக்கு அப்புறமும் காலேஜ்ல இருக்க முடியல. வேலையை விட்டுட்டேன்.” என்று சொல்லவும் அதிர்ந்து பார்த்தாள் இயலணி.

அவளின் மறுப்பை மீறி அவன் அத்துமீறியதில் ஏமாற்றமும் கோபமும் மூச்சு முட்டுமளவிற்கு இருக்கிறதுதான். அவனுடன் வாழப் பிடிக்கவில்லை தான். கோபத்தில் அவள்தான் அவனுக்கும் கயவர்களுக்கும் வித்தியாசம் இல்லை என்று சொன்னாள். ஆனால் அவள் மனதிற்கு தெரியும் மற்ற பெண்களின் மீது தவறான பார்வை செல்லுமளவிற்கு அவன் இழிவானவன் இல்லையென்று. அவளிடமே என்றும் கண்ணியம் தவறாது இருந்தவன்தான் அந்த இரவு வரை… 

அவன் பார்வையோ குதிரைக்கு இட்ட கடிவாளம் போல் நேராகவே இருந்தது. அவள் கவனம் தன்னை நோக்கி திரும்பியதை உணர்ந்தாலும் அவன் திரும்பவில்லை.

“புடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் கடைசி வரைக்கும் நீதான்னு உறுதியா இருந்தேன், இருக்கேன். *** ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேலை கிடைச்சிருக்கு. நேத்திக்கு தான் ஆஃபர் லெட்டர் ரிலீஸ் பண்ணாங்க. ஒரு வாரத்துல ஜாயின் பண்ண சொல்லியிருக்காங்க. இங்கதான் இருப்பேன். என்மேல என்னைக்கு கோபம் போகுதோ அப்போ பேசுனா போதும். எந்த கம்பல்ஷனும் இல்லை.” என்றவன் முடிந்தது என்பது போல் எழுந்துகொண்டான்.

கிளம்புகிறானா என்று அவள் நெற்றி சுறுக்கிப் பார்க்க,

“உன் பஸ் ஸ்டாப் வந்துருச்சு.” என்றதும் தான் திரும்பிப் பார்த்தாள். அவள் இறங்குமிடத்தை நெருங்கியிருந்தது பேருந்து. பேருந்தின் வேகம் குறைய வேகமாக எழுந்தவள் ஓட்டுனர் இட்ட பிரேக்கில் அவன் மீது மோதி நகர்ந்தாள்.

“பார்த்து இயல்.” பிடிமானமின்றி அசைந்தவளின் கை பிடித்தவன் அவள் காலூன்றி சமநிலை வரவும் பட்டென்று கையைவிட்டு பின்னகர்ந்து நின்றான். பேருந்தின் கதவுகள் திறக்கப்பட, அவனை தாண்டிக்கொண்டு சென்றவள் கீழிறங்கி நின்று அவனைப் பார்த்தாள். ஒருவித குழப்பத்துடன் மேலுயர்ந்த அவள் விழிகளை எதிர்கொண்ட ஆடவனின் விழிகளில் ஒருவித நிம்மதி. அது அவளிடம் பேசிவிட்டதன் பிரதிபலிப்பாய் வெளிப்பட, இன்னும் குழம்பிப் போனாள் பெண்ணவள். அவனுக்கோ தான் பேச வந்ததை காது கொடுத்து அவள் கேட்டதிலேயே சற்று சமன்பட்டிருந்தான். இனி கொஞ்சம் கொஞ்சமாய் சரியாகும் என்று நம்பிக்கை பிறக்க,  அவளுக்கு கையசைத்து லேசாக தலையசைத்து விடைபெற்றவன் இதழ்களை நிறைத்தது புன்னகை . அவள் இதுவரை பார்த்திடாத விகசித்த அம்முகம் அவளுள் ஊடுருவி பதிந்துபோனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!