Skip to content
Post Views: 3,533
மார்கழி – 23
“காலையில தான் எல்லாம் உனக்கு நியாபகம் வரும். முந்தின நாளே என்ன போடுறதுனு முடிவு பண்ணி எடுத்து வச்சா படுக்குறதுக்கு முன்னே அயர்ன் பண்ணிருப்பேன்ல. கிளம்புற நேரம் தான் லபலபானு பரப்ப…” அதிகம் குரலை உயர்த்தாது அதே நேரம் தன் அதிருப்தியை காட்டியவண்ணம் அவள் புடவையை அயர்ன் செய்துகொண்டிருந்தான் அறிவழகன்.
“அப்படி ஒன்னும் நீங்க அயர்ன் பண்ண வேண்டாம். இத்தனை வருஷம் நீங்களா பண்ணீங்க? முடிஞ்சா செய்யுங்க இல்லை வச்சிட்டு போங்க.” சமையலறையிலிருந்து வெளிவந்து கத்தியவள் குக்கர் விசிலில் உள்ளே ஓடினாள். அடுத்தடுத்த நொடிகளில் பாத்திரங்கள் உருளும் சத்தம் தாராளமாக கேட்க, கண்களை இறுக மூடித்திறந்தான் அறிவழகன்.
‘படுத்துறா. எல்லாத்தையும் கடைசி நேரத்துல தான் செய்யணும்.’ அலுத்துக் கொண்டவனுக்கு இதுவே வாடிக்கையாகிப்போக தினம் ஒரு பூசலுடன் தான் நாளே துவங்குகிறது.
Advertisement
“அயர்ன் பண்ணிட்டேன் வேற என்ன பண்ணனும்?” அடுத்த வேலைக்கு தயாராகி நிற்பவன் போல அவள் எதிரே சென்று நிற்க, சமையல் பரபரப்புக்கு மத்தியில் இடையில் கை வைத்து அவனை முறைத்துப் பார்த்தாள்.
“என்ன?” புரியாமல் பார்த்தவன் நெற்றி சுருக்கினான். அவள் எதுவும் சொல்லி தான் செய்யாமல் விட்டுவிட்டோமோ என்று, “எதையாவது மறந்துட்டேனா?”
“குளிச்சீங்களா?” பற்களை கடித்துக்கொண்டு முகத்தை சுழித்து அவள் மூக்கை தேய்க்க,
Advertisement
“ரொம்பத்தான்.” முணுமுணுப்புடன் வேண்டுமென்றே அவளை உரசுவது போல் நெருங்கி விலகி நடந்தவன்,
Advertisement
“குளிச்சதுக்கு அப்புறம் எந்த வேலையும் செய்ய மாட்டேன்.” என்ற நிபந்தனையுடன் வெளியேறியவனை திட்ட முடியாமல் அடுத்த விசில் வந்து என்னை பார் என்றது.
இயலணி சமைத்து வைக்க, குளித்து வந்த அறிவழகன் உணவை டப்பிகளில் அடைத்து காலை உண்ண ஏதுவாக சிற்றுண்டியை தட்டில் எடுத்து வைத்திருந்தான். பள்ளிக்கு செல்ல உடை மாற்றி கிளம்பி வந்தவள் அவசர அவசரமாக உண்ண,
“பொறுமையா தான் சாப்புடேன்.” என்றவனுமே அவசரமாக சாப்பிட, அவனை கண்டுகொள்ளவே இல்லை இயலணி. சமையலறை ஒதுக்கி வைத்து உண்ட தட்டை கழுவி வைக்க, சிங்கிள் தன் தட்டை போட்டு கை கழுவினான் அறிவழகன்.
Advertisement
“அதை யாரு விலக்குவா?” இயலணி காய,
“அலுப்பா இருக்குடி. நைட் பாத்துக்கலாம் சும்மா எதையாச்சும் சொல்லிட்டே இருக்காத.”
“ஆமா எனக்கு ஆசை பாருங்க உங்களை சொல்லிட்டே இருக்கணும்னு. கூட இருந்த மூணு மாசமும் நல்ல பிள்ளை மாதிரி சாப்பாடு வாங்கிட்டு வந்து சாப்பிட்டா உடனே உடனே கழுவி வச்சிடுவீங்க. இப்போ என்னென்னா எல்லாத்துக்கும் ஒரு சாக்கு.” நசநசத்துக்கொண்டே இங்குமங்குமாய் நடந்து போனை எடுப்பது, டைரி எடுத்து பையில் வைப்பது என்று இருந்தாள் இயலணி.
“அப்போ அது மட்டும்தான் வேலை. இப்போ அப்படியா? இங்கிருந்து ஆபீஸ் போய்ட்டு வரவே நேரமெடுக்குது.” என்றான் அவனும் சுணக்கமாய்.
“கஷ்டமா இருந்தா ஆபீஸ் கிட்ட வீடு பாக்க வேண்டியதுதானே? ஏன் இவ்ளோ தள்ளி பாத்தீங்க.”
“இவ்ளோ தள்ளி வந்தாதான் உன்னை பாக்க முடியும். நீ இங்க தான ஹாஸ்டல்ல தங்கி இருந்த? அதான் இந்த ஏரியாவுல பாத்தேன்.” என்ற அவன் பதிலில் அவள் வாய் பூட்டு போட்டுக்கொண்டது.
“இப்போ சொல்லு, இப்போ பேசு.” என்று அவனும் மல்லுக்கு நிற்க,
“என்ன சொல்லணும்? என்ன பேசணும்?” கதவை பூட்டிக்கொண்டு அவனுடன் கீழிறங்கினாள் இயலணி.
“என்ன வேணும்னாலும் சொல்லலாம். கேட்க நான் ரெடியா இருக்கேன்.” என்றவன் குரல் இலகுவாகியிருக்க, வண்டியை வெளியே எடுத்தான்.
“இப்போ சொல்ல நான் ரெடியா இல்லை.” என்று முறுக்கிக்கொண்டே அவன் தோளில் கைவைத்து ஏறியவள், “போலாம்.” என்று லேசாக அவன் தோளை தட்ட வேறு செய்ய, கண்ணாடி வழியே அவள் முகத்தை பார்த்துவிட்டு வண்டியை கிளப்பினான்.
மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் சமயம் தோளில் உணரப்படும் அழுத்தம் அவளின் நெருக்கத்தை பறைசாற்ற, தானாக வந்து குடிகொண்டது என் மனைவி என்ற உரிமையுணர்வு. நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.
அவள் பள்ளி வந்ததும் இறக்கிவிட்டவன் பத்திரம் சொல்லி கிளம்பிவிட, மாலை பள்ளி முடித்து பேருந்தில் வீட்டிற்கு வந்தவளுக்கு பெரிதாக வேலைகள் இல்லாததால் அமைதியாக அமர்ந்துவிட்டவளுள் யோசனை.
தீபாவளி வருகிறது எப்போது ஊருக்கு வருகிறாய் என்று அழைப்பு வந்துவிட்டது வீட்டிலிருந்து. நடுவில் வந்த பிள்ளையார் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை என்று எதற்கும் வீடு செல்லவில்லை. அதை பெரிதுபடுத்தாதவர்கள் இதனை இலகுவாக விடுவார்கள் என்று தோன்றவில்லை.
ஒன்றாக தங்க சம்மதித்து இந்த வீட்டிற்கு வந்து மாதம் முடியப்போகிறது இன்னும் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கவில்லை. விடுதியில் இருந்தபோது பேசியது போலவே இன்றளவும் பேசி வைத்துவிடுகிறாள். அவன் வீட்டினருக்கு தெரியுமா என்றும் தெரியவில்லை. ஆரம்பத்தில் இதுதான் என்று அறுதியிட்டு இங்கு வராததால் தயக்கத்தில் மறைத்திருந்தாள். இப்போது ஊருக்கு வர சொல்லி அழைப்பு வந்துவிட இதற்கு மேல் சொல்லாமல் இருப்பது உசிதமில்லை என்று தோன்றியது. சொல்லிவிடலாமா என்று அலைபேசியை எடுத்தவள் உடனே முடிவை மாற்றி அவனுக்கு அழைத்துவிட்டாள். அறிவழகனுக்கு அழைப்பு சென்றது சென்றது சென்றுகொண்டே இருந்தது.
“ப்ச் நாமளே கூப்பிட்டா எடுக்க மாட்டார்.” சலித்துக்கொண்டவள் அலைபேசியை வைத்துவிட்டு இரவு உணவு செய்ய சென்றுவிட்டாள். சப்பாத்தி குருமா தயாரிப்பு பல நிமிடங்களை விழுங்கி இருந்தது. கழுத்தில் வழிந்த வியர்வையை துடைத்தவண்ணம் அமருகையில் வந்துவிட்டான் அறிவழகன்.
“இப்படி வேர்க்க விறுவிறுக்க என்ன செஞ்ச?” அவள் பதில் சொல்லவும், “ஏன் கஷ்டப்படுற. இப்போ ஈஸியா செஞ்சிட்டு லீவ் நாள்ல இதை செஞ்சிருக்கலாம்ல.” உடை மாற்றி வந்து அவள் அருகில் அமர,
“எனக்கு சாப்பிடணும் போல இருந்துச்சு.”
“எதுக்கு போன் பண்ணியிருந்த? மீட்டிங்ல இருந்தேன். முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தே கேட்டுக்கலாம்னு விட்டுட்டேன்.” என்று ஆரம்பிக்கவும் நினைவு வந்தவளாய்,
“வீட்டுல சொல்லிட்டீங்களா?”
“எதை?” என்று அவன் கேள்வியாய் புருவம் உயர்த்தவும் ஒற்றை விரலால் இருவரையும் சுட்டிக்காட்ட,
“இன்னும் சொல்லல. இப்போ சொன்னோம்னா ரெண்டு பேமிலி மீட் பண்ணனும்னு சொல்லுவாங்க. தாலி பிரிச்சி கோக்குறது கோவிலுக்கு போறதுன்னு வரிசையா வச்சிருப்பாங்க. அதோட வீட்ல இதை கேட்டு எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கனு தெரியாது. நாமளே கொஞ்ச கொஞ்சமா இப்போ தான் செட் ஆகிட்டு வரோம்.” என்று நீளமாய் பேச,
“செட் ஆகிட்டு வரோமா?” என்று பார்த்தாள் இயல்.
“இல்லையா பின்ன?”
“எது காலையில எழுந்ததுலேந்து சண்டை போடுறதா?” கேலியாக அவள் இழுக்க, கைமுஷ்டியால் லேசாக அவள் கன்னத்தில் வலிக்காது குத்தியவன்,
“காலையில சண்டை போட்டாலும் இப்போ இப்படி பேசிட்டு தான தூங்குறோம்? எங்க நேத்தி என்ன பேசுனோம்னு சொல்லு.” அவன் கேட்கவுமே பட்டியலிட ஆரம்பித்துவிட்டாள்.
“என்னோட டூடில் ஆர்ட் பத்தி பேசிட்டு பாட்டு கேட்டுட்டு இருந்தோம். அப்படியே இளையராஜா, ரகுமான், ஹாரிஸ், ஷான் ரோல்டன்னு ஒரு ரௌண்ட் போய் மணிரத்னம் ரோஜா, அலைபாயுதே, பாம்பேனு சென்னையில உக்காந்து காஷ்மீர் வரைக்கும் போயிட்டு வந்தாச்சு. அப்புறம் உங்க ஸ்கூல் டேஸ், காலேஜ்ல நடந்த சிம்போஸியம், வீட்ல உங்க தங்கச்சியோட ட்ரீட்மெண்ட் பத்தி ஷேர் பண்ணீங்க.”
“சரி இன்னைக்கு காலையில எதுக்கு சண்டை போட்டோம்?” என்று புருவம் உயர்த்தி அவன் கேட்க,
“எதுக்கு போட்டோம்?” என்று யோசனையில் முகம் சுருங்கியது. சட்டென நினைவு வரவில்லை.
புன்னகையுடன் அவள் தலையை பிடித்து உலுக்கியவன், “அர்த்தமில்லாத விஷயமெல்லாம் நம்ம மண்டையில ஏறாது. அதெல்லாம் சும்மா போற போக்குல ரெண்டு பேரும் முட்டிக்கிறது. அதுவும் போடக்கூடாதுதான்… போக போக…”
“மாறிடுவோம்…” ஆவலில் இடைபுகுந்து அவள் கண்சிமிட்ட,
விஷமமாய் சிரித்தவன், “இல்லை பழகிடும்.” என்று கூறி அவளிடம் இரண்டு அடி வாங்கிக்கொண்டான்.
“வர வர கை நீளுது டீச்சரம்மாவுக்கு. அடிக்கக்கூடாதுனு கவர்மெண்ட்டே ரூல் போட்டிருக்கு தெரியும்ல.” என்று அவள் கைபிடித்து நிறுத்தியவன், “சந்தோஷமா இருக்கியா இயல்? கம்போர்ட்டா வச்சிருக்கேனா உன்னை?” என்று கேட்டிட, சட்டென மாறியது வானிலை.
அதுவரை இலகுவாக உரையாடியவள் கைகளை உருவிக்கொள்ள முயல, விடவில்லை அவன். அவர்களையும் அறியாது சிறு சிறு தொடுகைக்கு பழகி இருந்தவர்கள் இன்று வலிந்து மற்றவரின் அருகாமையை உணரத் துவங்கினர்.
“என்ன இது? கையை விடுங்க.”
“நீ சொல்லு விடுறேன்.” இன்று ஏனோ பிடிவாதம் பிடித்தான்.
மாதம் ஒன்றாகப் போகிறது அன்றாட வேலைகளில் அறியாமல் ஏற்படும் நெருக்கங்களை முடிந்தளவுக்கு தவிர்த்து விடுபவன் இன்று வியர்வை வழிய அமர்ந்திருப்பவளை கண்டு தடுமாறினான். மின் இணைப்பில் ஓடும் மின்விசிறிக்கு கட்டுப்படாமல் தலையிலிருந்து முத்து முத்தாய் நெற்றியில் இறங்கும் வியர்வைத் துளிகள் என்னை துடையேன் என்று அழைப்பது போல் இருந்தது. இதுவரை உணர்ந்திடாத உணர்ச்சிகள் உயிர் பெற்று தர்க்கம் செய்ய ரசனையாக அவளிடம் படிந்து மீண்டது விழிகள். ஆனால் மனதின் ஓரம் சுருக்கென்று ஒரு வலி நானிருக்கிறேன் என்று எழுந்து அமிழ்ந்தது. இன்னொரு முறை அவள் அனுமதி இன்றி சுண்டு விரல் நகம் கூட அவளை உரசிவிடக்கூடாது என்று உறுதிமொழி எடுத்த மனதின் கட்டுப்பாட்டையும் மீறி உயர்ந்துவிட்ட கரத்தினை அப்படியே இறக்கி அவள் கையை பிடித்துவிட்டான்.
அவளோ கையை பிடித்ததற்கே இன்னும் வியர்த்து விட்டாள். மனதில் வெறுமையோ வெறுப்போ இல்லை. எதிர்பார்ப்பும் இல்லை. அந்த நொடி அவனின் அருகாமை எதையும் யோசிக்கவும் விடவில்லை, அவனிலிருந்தும் அவன் தொடுதல் கொடுக்கும் சிலிர்த்த உணர்விலிருந்தும் விடுதலை பெறவே விழைந்தது. இன்னும் வேண்டும் என்று தோன்றவில்லை. அதன் பலனாய் கையை உருவிக்கொள்ளும் முயற்சியில் அவளையும் அறியாது நெளிந்து சிலுப்ப, பட்டென்று விட்டுவிட்டான்.
“என்ன?” கனவிலிருந்து விழிப்பவள் போல் திடுக்கிட்டு பார்க்க, தொண்டை செறுமியவன், “பசிக்குது. சாப்பிடலாமா?”
“ஹான்… இதோ…” எழப்போனவளை கைகாட்டி தடுத்தவன், “நீ இரு. நான் எடுத்துட்டு வரேன்.” என்று சமையலறைக்குள் நுழைந்தவனோ மடமடவென்று ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து பருகினான்.
‘அமைதிடா அறிவு.’ தனக்குள் சொல்லிக்கொண்டு மூச்சிழுத்தவன் தட்டுகளை எடுக்க, ‘தி கிட்சன் எஸ் தி ஹார்ட் ஆப் தி ஹோம்.’ என்ற வார்த்தைகள் தாங்கிய பலகை தென்பட்டது.
எத்தனை பொருத்தமான வார்த்தைகள். இந்த சமையலறையில் இருக்கும் ஒவ்வொன்றையும் அவளுடன் சென்று பார்த்து பார்த்து வாங்கி அடுக்கி சமைக்க ஆரம்பிக்கவும் தானே இருவருக்குள்ளும் தாங்கள் ஒரே குடும்பம் என்று எண்ணம் எழ ஆரம்பித்தது. இங்குதானே தயக்கங்களை தொலைத்து தடைகளை கலைந்து வயிற்றை பார்ப்பதற்காக ஒன்றாக சமைத்து, சுத்தம் செய்து பிடித்தங்களை பகிர்ந்து ஒருவரை ஒருவர் ஏற்று வாழ்க்கையினுள் இணைத்துக்கொண்டனர். இந்த சமையலறை வயிற்றை மட்டும் நிரப்பவில்லை அவர்கள் மனங்களையும் நிரப்பி நெருங்க வழிவகுத்தது.
அமைதியாக இரவு உணவு முடித்து பாத்திரங்களை கழுவி வைத்தவர்கள் ஆளுக்கு ஒரு மூளையில் அமர்ந்து போன் பார்த்தனர். அசாத்திய அமைதியை கலைக்க இருவரும் முற்படவில்லை. ஆனால் அந்த அமைதி அறிவழகனுக்கு இதமாய் இல்லை. ஏதோ குறைவது போலிருக்க வலிந்து பேச்சு கொடுத்தான்.
“அந்த ராஜேஷ் என்னானான்? வீட்ல கேட்டியா இயல்?”
“ஆங்… ஹான்… வேறு ஒரு பொண்ணுகூட சுத்துறானாம்.”
“என் ரூட் கிளியர் அப்போ.” என்று அறிவழகன் முணுமுணுக்க,
“என்ன சொன்னீங்க?”
“ஒண்ணுமில்லையே.” தலையை அவன் நாலாபுறமும் ஆட்டிய விதத்திலேயே விடவில்லை அவள்.
“அப்போ ஏதோ இருக்கு. நீங்களே சொல்லிட்டா ஒரு சண்டையை அவாய்ட் பண்ணிடலாம்.” என்று அவள் டீல் பேச,
“இந்த சாமர்த்தியம் இருக்குற வரைக்கும் நல்லா இருப்பமா நீ… ஒரு ஆக்ஷன் சீன் மிஸ் ஆகிடுச்சுனு சொன்னேன்.”
“ஆக்ஷன் சீனா?”
“ஆமா… உன் பின்னாடி சுத்துனா சும்மா விடுவேனா நானு. நேர்ல பாக்குற அன்னைக்கு நாலு போடலாம்னு பாத்தேன்.” என்று கை முறுக்கி பாவனை செய்ய,
“இவர் பெரிய ஹீரோ… ஏன் என் பின்னாடி சுத்துனா என்னவாம்?” எதையோ எதிர்பார்த்து பட்டென கேட்டுவிட்டவள் பின் என்ன கேட்டோம் என்பதை உணர்ந்து மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு எழுந்து அறைக்குள் சென்றுவிட்டாள்.
பின்னோடே விளக்கை அணைத்துவிட்டு வந்தவன் அவளருகே அமர்ந்து அவளையே குறுகுறுவென பார்க்க, அவன் பார்வை வீரியத்தில் கழுத்தை தேய்த்துக்கொண்டே திரும்பியவள் படுக்கப்போனாள்.
“இதோ இது…” மொழி முந்தியா விரல் முந்தியதா என்று அறியமுடியா வண்ணம் அவன் விரல் நீண்டு அவள் கழுத்தில் கிடந்த தாலியை இழுத்துவிட, அதை பிடித்தபடி அவன் இழுப்புக்கு நெருங்கி அதிர்ந்து விழித்தாள்.
“நான் கட்டுனது இங்க இருக்குறப்போ வேற எவனையும் சுத்த விட்டுடுவேனா என்ன?” கிசுகிசுப்பாய் வந்த அவன் குரல் அவள் செவி எட்டும் முன் அவன் மூச்சுக்காற்று அவள் கன்னத்தை எட்டி சிலிர்க்க வைக்க, அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டாள்.
“இயல்…”
“நாளைக்கு காய் வாங்கப்போகணும். எல்லாம் காலியாகிடுச்சு.” சம்மந்தமே இல்லாமல் சொன்னவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்துவிட, முகத்தை அழுந்த தேய்த்துக்கொண்டு அவளருகில் படுத்தான் அறிவழகன்.
‘இன்னைக்கு ஓவரா போறடா நீ.’ தன்னைத் தானே விரல் நீட்டி எச்சரித்துக்கொண்டவன் பக்கவாட்டில் இருக்கும் மனைவியைப் பார்த்தான்.
உடல் குறுக்கி தோளையும் காலையும் மாற்றி மாற்றி அசைத்த வண்ணம் இருந்தாள்.
“இன்னைக்கு சாப்பாத்தி குருமா நல்லா இருந்துச்சு.” இவனும் சம்மந்தமில்லாமல் பேசி அவள் கவனத்தை தன்புறம் திருப்பினான்.
“என்ன?”
தன்னை நோக்கி திரும்பியவளை சுற்றி கையை படரவிட்டவன் இலகுவாக அவளை அணைத்துக்கொண்டு, “காய் வாங்க போனும்னு நீ சொன்னது இப்படித்தான் இருந்துச்சு.” என்றதில் இரண்டு அடி, ஒரு கிள்ளு, இறுகிய அணைப்பு என்று அவள் கொடுத்த அனைத்தையும் பிகுசெய்யாமல் வாங்கிக்கொண்டான்.
‘ரொம்பத்தான் பண்றாங்க. எல்லாத்தையும் சொல்லிக்காட்ட வேண்டியது. ம்க்கும்.’ முனகலுடன் அவன் நெஞ்சில் தலை சாய்த்து தடதடத்த இதயத்தை இலகுவாக்க முயன்றவள் ஒருகட்டத்தில் உறங்கிப் போக, அவனின் அணைப்பு வருடலாய் மாறி பின் அழுத்தமான பிடியாய் அவளை தனக்குள் பொதித்துக்கொண்டது.
error: Content is protected !!