எப்போ போத்திட்டு படுத்தோம்? யோசனையில் முகம் சுருங்க, போர்வையை விலக்கி எழுந்து சென்று வெளியே எட்டிப்பார்த்தாள். ஒரு பக்கம் கடப்பா கல் போடப்பட்டு சமையலறையாய் தடுக்கப்பட்டிருந்த இடத்தில் நின்று அறிவழகன் பால் காய்ச்சுவது போல் தெரிந்தது.
முன்னாடியே எழுந்திருக்காங்க அது கூட தெரியாம அப்படியென்ன தூக்கம் உனக்கு என்று தன்னைத்தானே குட்டிக்கொண்டவள் விரைந்து தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு அவனிடம் சென்றாள்.
Advertisement
“நான் காய்ச்சுறேன். நீங்க ஃபிரெஷ் ஆகிட்டு வாங்க.” என்றபடி அவனருகே வந்து நின்றவள் பால் பாத்திரத்தின் பிடியை பிடிக்கப்போக, கை காட்டி தடுத்தவன், “முடிஞ்சிது.” என்றதோடு ஒரு டம்ளரில் காபிப் பொடியை பிரித்துக்கொட்டி தேவையான அளவு ஜீனியும் சேர்த்து பொங்கிய பாலை லேசாக ஊதி பாத்திரத்தை தூக்கி சுழற்றியவன் அதை டம்ளருக்கு மாற்றி எடுத்துக்கொண்டு கூடத்திற்கு நடந்தான்.
குழப்பத்துடன் அவனை தொடர்ந்தவள், “நான் அப்புறமா குளிச்சுக்கிறேன். நீங்க குளிச்சு ஃபிரஷ் ஆகிக்கோங்க. ப்ரஷ் வேற பண்ணனும்ல. காபி ஆறிடப்போகுது.” என்று காபி ஆற்றும் அவனை பார்த்துக்கொண்டே சொல்ல,
அவளை நிமிர்ந்து பார்த்தவன், “எல்லாம் ஆச்சு.” என்று ஒரு மிடறு காபியை உறிஞ்சி ரசித்துக் குடித்தான்.
Advertisement
“ஆச்சா?” என்று ஆச்சர்யமாய் பார்த்தாள் இயலணி. எப்போதும் அவள் எழும் வரை அவனும் படுத்திருப்பான். குளியலறையும் கழிப்பறையும் சேர்ந்தாற்போல் அறையினுள் இருப்பதால் அவள் குளித்து வெளியே வரட்டும் என்று காத்திருப்பான். அவசரமென்றால் கூட கதவை தட்டி அவள் அனுமதி பெற்றே அறைக்குள் நுழைவான். அப்படிப்பட்டவன் இன்று அவள் எழும் முன்னமே அறைக்கு வந்துவிட்டு சென்றிருக்கிறான். அப்போது அவன் தான் தனக்கு போர்வையும் போர்த்திவிட்டிருக்க வேண்டும் என்ற யூகம் பிறக்க சங்கடத்துடன் புடவை நுனியை விரல்களில் சுற்றி திருகி நின்றாள்.
Advertisement
புருவம் உயர்த்தி அவளின் நெளியும் தோற்றத்தை பார்த்தவன், “ப்ரஷ் பண்ணி குளிக்க சொன்ன. பண்ணிட்டேன்னு தான சொன்னேன்? நீ பண்ணும் போது வந்தேன்னு சொல்லலையே…” என்றவன் நொடி இடைவெளி விட்டு, “இல்லை வரணுமா?” என்றவன் புருவம் நக்கலாய் மேலே உயர, இதழ்களும் கேலியாய் வளைந்து நெளிந்தது.
அவன் பேசியதன் உட்பொருளில் அதிர்ந்து விரிந்த இயலணியின் முகம் உடனே ஆதங்கத்தையும் சோர்வையும் பிரதிபலித்தது.
“ஏன் இப்படி?” என்று அவள் இறைஞ்ச,
Advertisement
“உனக்கும் ஆசையெல்லாம் இருக்கும்ல. இதுமாதிரி எல்லாம் பேசணும் பழகணும்னு. எனக்கு இருந்துச்சு, என் அத்தை பொண்ணுகிட்ட பேசணும்னு. அதனால் சும்மா சொல்லு. வெக்கப்படாத…” இலகுவாய் காட்டிக்கொண்டவன் உள்ளே ஆறாத சினம் கரை எட்டாமல் ஆர்பரித்துக்கொண்டிருந்தது.
அதற்கு குறையாத குற்றவுணர்வு கொண்ட இயலணி அடிபட்ட பார்வை பார்த்துக்கொண்டே தனக்கான காபி போட சென்றுவிட்டாள். நின்று பேசினாலும் அவன் கேள்விகளுக்கான பதிலாகவோ அவன் வலிக்கான மருந்தாகவோ இருக்க முடியாது என்று புரிந்தபின் பேச வார்த்தைகளின்றி தன்னை அடக்கிக்கொண்டாள்.
அமைதியாக சென்றவளை சீண்ட மனம் உந்தினாலும் நேரம் கருதி காபியை வேகமாக பருகியவன் டம்ளரை அவள் அருகே வைத்துவிட்டு அறைக்குச் சென்றான் ஆயத்தமாக. அவனையும் அவன் வைத்துச் சென்ற காபி டம்ளரையும் பார்த்தவள் திரும்பி கூடத்தை பார்க்க, காபி டபரா அவன் அமர்ந்த இடத்தில் இருந்தது. எப்போதும் அவனுக்கானதில் அவளை விட்டதே இல்லை. காபி குடித்தால் பாத்திரங்களை கழுவி வைத்துவிடுவான், குளித்து துணி துவைத்தால் அழகாக காய வைத்து ஐயர்ன் செய்து மடித்து வைத்துவிடுவான். இன்று தன்னருகில் டம்ளரை வைத்துவிட்டு சென்றதை பார்க்கும் போது எதற்குள்ளோ அவன் அவளை இழுக்கும் உணர்வு. அவளால் தான் அந்த இழு விசை என்றாலும் மனம் முரண்டியது. அந்த கலக்கமான முரண்பாடுடன் காபியை குடித்து பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு திரும்ப, சுள்ளென சில்லுப்பாய் அவள் தோளில் ஏதோ வந்து விழுகவும் அதிர்ந்து திரும்பினாள். முகம் துடைத்தபடி வந்தவன் ஈரத்துண்டை அவள் மீது எறிந்திருந்தான். குளித்துவிட்டு துவட்டியதாய் இருக்கும் போல, ஈர நயிப்புடன் இருந்தது. தோளில் இருந்து எடுத்தவள் அதை தூக்கிப்பிடித்தபடி,
“என்ன பண்றீங்க?” என்றாள் கேள்வியாய்.
அவள் கேள்வி செவி எட்டினாலும் கருத்தில் ஏற்றிக்கொள்ளாதவன் கண்ணாடி முன்னே நின்று தலை கோதிவிட்டு, “சாப்பாடு வாங்கிட்டு வரேன். சத்தம் கூட்டாம இரு.” என்று அவளை கண்டுகொள்ளாது அவன் போக்கில் செல்ல, இதனை வேறு காயப்போட வேண்டுமா என்று தலையில் கைவைத்துவிட்டாள் இயலணி.
கதவை பூட்டிவிட்டு சென்றவன் அரை மணி நேரத்தில் சாப்பாடு பொட்டலத்துடன் வந்தான். அவன் தலையைக் கண்டதும் குளிக்கவென அறைக்குள் அடைந்து கொண்டாள். அவன் சாப்பிட்டு முடிக்கட்டும் என்று நேரமெடுத்து சுடிதார் போட்டு வந்தவள் வளையல்களை கழட்டி அவன் முன் நீட்ட, நெற்றிச் சுருக்கத்துடன் பார்த்தான் அறிவழகன்.
“என் பொண்டாட்டின்னு போட்டுக்க தான கொடுத்திருக்காங்க. எல்லாம் நீ விருப்பப்பட்டு வாங்குன உரிமை தான. போட்டுக்கோ.” என்றதில் எரிச்சல் வந்தது இயலணிக்கு. இதென்ன எதற்கெடுத்தாலும் நீ விரும்பியது, ஆசைப்பட்டது என்று ஏடாகூடமாக பேசுவது என்று சிடுசிடுப்பு காண்பிக்க, அவளை கடுப்பேற்றும் விஷயம் எதுவென கண்டுகொண்டதன் பிரதிபலிப்பாய் அறிவழகனின் முகம் இளகியது.
“சாப்பாடு எடுத்து வை.” என்று உத்தரவும் பறந்தது.
“ப்ச், என்ன செய்ய டிரை பண்றீங்க நீங்க? எப்போவும் நீங்களே எல்லாம் செஞ்சிப்பீங்க தானே?” அவனின் உரிமையான உத்தரவில் பற்களை கடித்தாள் இயலணி. இதென்ன உறவு பிடிக்கவில்லை என்றுவிட்டு உரிமை எடுத்துக்கொள்வது? அவனுக்கு மட்டுமா பிடிக்கவில்லை உனக்கு? சலிப்பு எட்டிப்பார்க்க, அமைதி என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
“சாப்பாடு போட்டின்னா காலேஜுக்கு கிளம்புவேன். நேரமாகுது.” என்று அவளுக்கு பதில் கொடுக்காது கைக்கடிகாரத்தை கரத்தினில் நுழைத்தப்படி சொல்ல, இயலணியின் பார்வையும் சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்திற்குச் சென்றது. அவன் கல்லூரி செல்லும் நேரம் நெருங்கிவிட, தற்காலிகமாக அமைதியானவள் சாப்பாட்டு பொட்டலத்தை பிரித்து தட்டில் பரிமாறி அவன் முன்னே வைத்துவிட்டு நகர்ந்து நின்றாள்.
வம்பு பேசாமல் சாப்பிட்டவன் வேண்டுமென்றே உண்ட தட்டில் கை கழுவி எழுந்தான். கவனித்த மனைவி மீண்டும் பற்களை நறநறத்தாள்.
“என்ன பல்லு டைப் அடிக்குது? பொண்டாட்டி லட்சணமா நடந்துக்க பாரு.” மனைவியின் பார்வை உணர்ந்து நக்கல் பேசியவன் வம்படியாய் அவள் துப்பட்டாவை இழுத்து கை துடைக்க, முறைப்புடன் அதனை உருவ முயன்றாள் இயலணி.
“புருஷன் கை துடைக்க யூஸ் பண்ணக்கூடாதுன்னா அப்படி ஒன்னு பொண்டாட்டிக்கு எதுக்குங்குறேன்?” கை துடைத்த துப்பட்டாவை லேசாக இழுக்க, பின் குத்தப்படாத அந்த மெல்லிய துணி அவன் கையோடு வந்தது.
அவன் செய்கையில் அதிர்ந்தவள் கைகள் அனிச்சையாக தோள்பட்டைக்கு உயர்ந்து சுடிதாரை கழுத்து ஒட்டி இழுத்துவிட்டுக்கொண்டது.
“எல்லாம் சரியாத்தான் இருக்கு. ரொம்ப அலட்டாத.” என்றவனின் அலட்சியத்தில் சினந்தவளாய் எக்கி அவனிடமிருந்து துப்பட்டாவை உருவ முயல, கேலியாய் சிரித்தவன் கையை மேலுயர்த்தினான். கால் நுனிவிரலில் நின்று எம்பினால் அவன் கையிலிருப்பதை தொட்டு பிடுங்க முடியும்தான். ஆனால் அவன் சுவாசம் தீண்டுமளவு நெருக்கம் ஏற்பட்டுவிடும் அபாயம் உள்ளதால் பின்னகர்ந்து முறைத்தாள்.
“என்ன சும்மா சும்மா என் விருப்பத்துக்கு கட்டிகிட்டேன் கட்டிகிட்டேன்னு சொல்றீங்க. கல்யாணம் பண்ணா உங்களை தான் பண்ணுவேன்னு ஆர்ப்பாட்டம் பண்ணி, கத்தி முனையில மிரட்டி ஒன்னும் உங்களை கட்டிக்கிலையே. உங்களை பாத்தேன்னு மட்டும்தான் சொன்னேன். மீதியெல்லாம் பண்ணது உங்க குடும்பம். கல்யாண விஷயமா எது கேக்கணும்னாலும் அவங்களை கேளுங்க. இதுக்கு நான் பொறுப்பில்லை.” என்று தன் கழுத்தில் இருக்கும் தாலியை வெளியிலெடுத்துக் காட்டி சொல்ல,
“என் குடும்பமே இதுக்கு காரணமாகட்டும். உன் கண் முன்னாடி தான எல்லா ஏற்பாடும் நடந்துச்சு, ஒரு இடத்தில கூட நீ மறுக்கலையே. அப்போ உன் ஆசையும் அதுவா தான இருந்திருக்கு. பெரிய இவ மாதிரி பேசுற.
முதல்ல உன்னோடது எல்லாம் காதலாடி? ஏதோ மூணு மாசம் உனக்கு இருக்க இடமும் திங்க சோறும் போட்டா என் மேல விருப்பம் வந்துடுமா. ஏங்கி, தேடி, எதிர்பார்த்து, சிலிர்த்து, சிரிச்சு, அழுது உணர்ந்து அனுபவிக்கிறதுதான் காதல். அப்படி என்னத்தை நீயும் நானும் பேசி பழகிட்டோம்னு என் குடும்பத்து முன்னாடி அப்படி சொன்ன? எதுடி உன்னோட காதல்? உன்னோடது காதலா இருந்திருந்தா அத்தனை பேர் முன்னாடி என்னை அப்படி நிக்க வச்சிருக்க மாட்ட.” விக்கித்து நின்ற இயலணி ஏதோ சொல்ல வாயெடுக்க, கை உயர்த்தி தடுத்தவன் அவள் பேச வந்த விஷயத்தை கணித்தது போல்,
“வாய் தவறி ஒரே வீட்ல இருந்தோம்னு நீ சொல்லியிருந்தாலும் அதுக்கப்புறம் என்னை நிக்க வச்சி அவ்வளவு கேவலமா பேசும் போது மூச்சுவிடல நீ. ஒரே ஒரு தடவை எதுவும் அவரோட தப்பில்லை மறுத்துட்டு அமைதியாகிட்ட. என்னை நேசிக்கிறவளா இருந்திருந்தா அந்த இடத்துல என்ன பண்ணி இருக்கனும் நீ? என்னோட ஒழுக்கத்தை விட்டுக் கொடுத்திருக்க கூடாது. இல்லையா எல்லாரும் போன பிறகாவது எதுவும் பண்ணியிருக்கணும். அதெல்லாம் விட்டாச்சு, சான்ஸ் கிடைக்கவும் உன் அப்பா அம்மாவை கூட நினைக்காம என் கையால தாலி வாங்கியாச்சு. காதலுக்கு தான் மதிப்பில்லைன்னா உன்னை பெத்து வளத்தவங்களுக்கு கூட மரியாதை செய்யல. சுயநலமா இருந்த நீயெல்லாம் நியாயம் பேசிட்டு என் முன்னாடி வந்துறாத.” பொரிந்துவிட்டான் அறிவழகன்.
‘உங்களோடு சேர்த்து என் கெளரவுமும் தான் போச்சு. என் ஒழுக்கத்தையும் தான் கடைபரப்பினார்கள்.’ என்று அவன் பேச்சினூடே பதில் கொடுக்க காத்திருந்தவளுக்கு அவனின் ருத்திரதாண்டவம் பேரடி. விழி விரித்து நின்றவளின் கைகள் தன்னால் நடுக்கம் கொண்டது. அவனது ஒவ்வொரு வார்த்தையும் அவள் செல்கள் யாவிலும் ஊசியாய் ஏறி குத்தி ரணமாய் உள்ளிறங்க, விழிகளிலிருந்து சொட்டாய் இறங்கிய கண்ணீர் உடைப்பெடுத்து வழிந்தது. மூச்சுக்காற்று சீரற்று போக, நெஞ்சுக்கூடு வேகமாக ஏறி இறங்கியது. அதிலும் அவள் பெற்றோர் பேச்செடுத்து அவளின் சுயநலத்தை பொட்டில் அடித்தாற்போல் சொல்லிக்காட்ட, குற்றவுணர்வின் பிடியில் துடித்துப்போனாள் இயலணி. உள்ளத்துடிப்பு அவள் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும், தலை கோதியபடி தன்னை கட்டுப்படுத்திய வண்ணம் அங்குமிங்கும் நடந்த அறிவழகன் இவளை கவனித்து ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துவந்தான்.
அவனின் அருகாமை உணர முடியாதளவு அழுத்தத்தில் இருந்தவளது பார்வை மங்கலாக, அவள் கன்னத்தை அழுந்தப் பிடித்து குவித்தவன், “மயக்கம் போட்டு தொலைச்சிடாதடி.” என்று அதட்டியபடி தண்ணீரை வாயில் சரித்தான்.
கொஞ்சம் உள்ளேயும் மீதி வெளியேயுமாய் தண்ணீர் கழுத்தில் சிந்தி அவள் தொண்டைக்குழியில் இறங்க, கண்சிமிட்டி விழுங்கினாள். ஒரு குவளை நீரும் உள்ளே சென்ற பின் மெல்ல நிதானம் திரும்புவது போல் தெரிய அவள் கன்னத்தை விட்டவன் அப்படியே பின்னகர்ந்து அவளை அழுத்தமாக பார்த்தான். பின் என்ன நினைத்தானோ எதுவும் சொல்லாது பையெடுத்துக்கொண்டு வீட்டை பூட்டி கிளம்பிவிட்டான்.
அவன் கதவை பூட்டும் சத்தத்தில் சுற்றம் உணர்ந்து நிமிர்ந்தவள் எதுவும் செய்யத் தோன்றாது மூலையில் அமர்ந்து சுவரில் சாய்ந்துகொண்டாள். கண்ணீர் நிற்பேனா என்று துடைக்க துடைக்க அவதாரம் எடுத்து வேகமாக வந்தது. யாருமற்ற நிசப்தமான வீடும் அவனது குற்றச்சாட்டுகளை திரும்பத் திரும்ப நினைவுப்படுத்தி அவளது அசட்டையான, அலட்சியமான முடிவுகளின் விபரீதத்தை பூதாகாரமாக்கி வருந்தச் செய்தது. அதிலும் விருப்பமிருக்கிறது என்ற எண்ணத்தில் இருக்கும்போதே இப்படி பொரிந்து செல்பவன் நாளை அவளுக்கு இருப்பது சிறு சலனம் தான் என்று தெரிய வந்தால் என்ன செய்வானோ என்ற நினைப்பிலேயே தொண்டை வறண்டது. தொண்டையோடு சேர்ந்து வயிறும் பொருமி சத்தம் எழுப்ப, உண்ணத் தோன்றாது சுவரை வெறித்தவள் அகத்தினுள் கடந்து போனவைகளின் ஊர்வலம்.