Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manathodu Manvaasam

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 30.1

மண்வாசம் 30 :

 

காலத்தின் கால்களை நிறுத்திட நினைத்தாலும் முடியாதே!

 



Advertisement

ஐந்து ஓட்டங்கள் நிகழ்ந்து ஐந்து வருடங்கள் கடந்திருந்தன. காலங்கள் கடந்திருந்தாலும் கம்பீரம் குறையாது காட்சி தந்தார் கந்தசாமி.

 

மகிழ்ச்சிக்கு குறைவில்லாத போது கம்பீரம் குலைந்திருக்க வாய்ப்பில்லையே. பாசமிகு மனைவி பண்பான மகன் பணிவான மருமகள் அனைவருக்கும் மேல் அவரையே ஆட்டிப் படைக்கும் அவள்! இவர்கள் உடனிருக்க மன நிறைவானதொரு வாழ்க்கை. இதற்கு மேல் வேறென்ன வேண்டும் அவருக்கு?  

Advertisement

 

Advertisement

தன் அறையில் இருந்து வெளியே வந்தவர்,

 

“சாரதா” என்று குரல் கொடுக்க,

Advertisement

 

“அப்பத்தா சாமி கும்புடுறாங்க அப்பாரு” என்று பூஜை அறையில் இருந்து வந்த குரலில் புன்முறுவல் பூக்க நின்றிருந்தார்.

 

பள்ளிச் சீருடையில் பூஜை அறையில் இருந்து சாரதாவோடு வெளிப்பட்டாள் அந்த மனம் மயக்கும் குரலுக்குச் சொந்தக்காரி. அவரை அன்பால் ஆட்டிப் படைக்கும் நன்மாறன் மற்றும் அருந்தமிழ் தேவியின் தவப் புதல்வி நற்றமிழ் நங்கை.

 

“அப்பாரு கொஞ்சம் குனிங்க” என்று சொல்ல,

 

“எதுக்கு கண்ணு” என்று கந்தசாமி கேட்கவும்,

 

“குனிய சொன்னா குனிய வேண்டியது தானோ ஏன் எதுக்குன்னு என்ர கிட்ட கேள்வி கேக்குறதோட்டமே பேத்தி கிட்டையும் கேக்கோணுமாக்கும்” என சாரதா குரல் கொடுக்க,

 

‘ஏது அதிகாரமெல்லாம் கொடி பறக்குது’ என சாரதாவை பார்த்தபடி பேத்தியின் முன்பு குனிய, அவர் நெற்றியில் திருநீறு வைத்துவிட்டாள் நற்றமிழ்.

 

கந்தசாமி அவளை கைகளில் தூக்கிக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட, வெகுவாய் ரசித்துச் சிரித்தாள்.

 

அதற்குள் வாசலில் சில இளைஞர்கள் வந்து நின்றிருக்க,

 

“யார் நீங்க. உங்களுக்கு யார் வேணும்?” என அவர்களிடம் பெரிய மனுசிபோல் விசாரித்தாள் நற்றமிழ். அவர்கள்,

 

“இயற்கை விவசாயி நன்மாறன் சாரை பார்க்கணும்” என்றதில் கந்தசாமிக்கு அத்தனை பெருமை.

 

நன்மாறன் தனது ஒரு ஹெக்டர் நிலத்தில் எள் சாகுபடி செய்து அதில் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி ஆயிரத்து இருநூற்றி பத்து கிலோ மகசூல் எடுத்திருந்தான். இதை கணக்கிட்ட வேளாண் துறையினர் தமிழக அளவில் அதிக மகசூல் என்று அது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளித்தனர். வேளாண் துறையில் சாதித்தமைக்கு மத்திய அரசின் விருதுக்கும் தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதைத் தொடர்ந்து ‘கிரிஷி கர்மான்’ எனும் முன்னோடி விவசாயி விருது மற்றும் இரண்டு லட்சத்திற்கான காசோலை மாறனிற்கு வழங்கப்பட்டது.

 

இன்றுவரையில் இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை பலருக்கும் எடுத்துரைத்து அவர்களை அதில் ஈடுபட வைத்துக் கொண்டிருக்கிறான். பலரும் அவனைத் தேடி வந்து இயற்கை உரங்கள் தயாரிப்பது பற்றி தெரிந்து கொள்கின்றனர். சில கருத்தரங்கங்களில் சென்று பேசி பயிற்சியும் அளித்துக் கொண்டிருக்கிறான். இப்போது இந்த இளைஞர்களும் அவனைக் காண வருகை புரிய,

 

“நன்மாறன் எங்க அப்பா தான். இருங்க கூட்டிட்டு வர்றேன்” என்று சொல்லியபடி உள்ளே ஓடினாள் நற்றமிழ்.

 

“தமிழ்!” என்ற மாறனின் அழைப்பில் கண்ணாடி முன்பு நின்று தன்னை சரிபார்த்துக் கொண்டிருந்த அருந்தமிழ் மெல்லத் திரும்ப,

 

“இன்னிக்கு ரொம்பவே அழகா இருக்கீங்க” என்றான் ரசித்துப் பார்த்தபடி.

 

“இதையேதான் தினமும் சொல்லுறீங்க. மொதல்ல இருந்ததுக்கு இப்போ ரொம்பவே ஒடம்பு போட்ருச்சு” என்றாள் வருத்தமாய். நற்றமிழின் வருகையால் அவளுக்கு உடம்பு ஏறியிருக்க மாறன் என்னவோ இன்னும் அதிக ஸ்மார்ட் ஆனதுபோல் இருந்தது அவளுக்கு.

 

வருத்தமாய் இருந்த அவள் முகத்தை கைகளில் ஏந்தி,

 

“எப்படி இருந்தாலும் என்ர தமிழ் அழகு தான்” என, அருந்தமிழ் அழகாய் புன்னகைக்க,

 

“அப்பா நானு” என்று இருவருக்கும் நடுவில் வந்து முட்டிக்கொண்டு நின்றாள் நற்றமிழ்.

 

“நீங்க பேரழகி டா” என்று மகளை தூக்கிக் கொண்டவன்,

 

“குட்டிமா ரெடி ஆகியாச்சா, ஸ்கூல்க்கு போலாங்களா?” என்று கேட்க புன்னைகயுடன் தலையசைத்தவள், மாறனைக் காண வெளியே சிலர் வருகை புரிந்த தகவலைக் கூறினாள்.

 

“குட்டிமா! நீங்க உங்க பேக் எடுத்துட்டு வெளிய போய் நில்லுங்க. அம்மா டூ மினிட்ஸ்ல வந்தர்றேன்” என்று தமிழ் மகளிடம் சொல்லவும் தலையசைத்துவிட்டு மாறனிடம் இருந்து இறங்கி வெளியே ஓடினாள். மகள் சென்றதும் மாறனும் செல்ல,

 

“என்னங்க” என்ற மனைவியின் அழைப்பில் நின்றவன் திரும்பிப் பார்த்தான். அவனருகில் வந்த அருந்தமிழ் அவனது சட்டை காலரை சரி செய்தவாறு,

 

“நெஜமா அழகா இருக்கேனா” என்று அவன் விழிகளை பார்த்தவாறு கேட்க, ஆமாம் என்று மாறன் தலையசைக்க எதிர்பாராத விதமாய் அவன் கன்னத்தில் காதல் பரிசளித்துச் சென்றாள். அதரங்களில் அரும்பிய புன்னகையுடன் அவனது தேவியை பின்தொடர்ந்தான் நன்மாறன்.

 

வெளியே இருந்தவர்களோடு பேசிவிட்டு தன் மகளை தூக்கி வண்டியில் அமர்த்தியவன் அருந்தமிழ் வந்ததும் வண்டியைக் கிளப்பித் தயாராய் வைக்க,

 

“அப்பா! இன்னும் அண்ணணுக வரல” என்றாள் நற்றமிழ். சரியாக,

 

“ண்ணோவ் நில்லு நாங்களும் வர்றோம்” என ஓடிவந்து ஏறிக்கொண்டனர் கவின் கலையரசன் மற்றும் அகிலன்.

 

சாரதாவும் கந்தசாமியும் அவர்களையே பார்த்துக்கொண்டு வாசலில் நிற்பது கண்டு,

 

“ஆத்தா அய்யாவுக்கு பாய் சொன்னீங்களா குட்டிமா?” என தமிழ் தன் மகளிடம் வினவ, உடனே பின்னால் திரும்பிப் பார்த்தவள்

 

“அப்பத்தா.. அப்பாரு” என்று மாறி மாறி கூறியபடி கைகளை ஆட்ட, அவர்களும் கையை ஆட்டி பேத்தியை வழியனுப்பினர்.  

 

சில நிமிடங்களில் மாறனின் வண்டி பள்ளியை நோக்கி சாலையில் பயணித்துக் கொண்டிருக்க,

 

“சாய்ங்காலம் அண்ணன நேரமே வந்து எங்களைய அங்க கூட்டிட்டு போகச் சொல்லுங் டீச்சர்” என அருந்தமிழின் மாணாக்கர் மூவரும் அவளிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதை கண்டும் காணமல் வந்தான் மாறன்.

 

“என்னங்க” என தமிழ் ஆரம்பிக்கவும்,

 

“சிங்காநல்லூர் போகோணும் அதானங்க தமிழ். போலாம் விடுங்க” என்றுவிட, ஒரே புன்னகை தான் அனைவருக்கும்.

 

“கட்டவண்டிய நல்லா அடிச்சோட்டு ண்ணா” என மூவரும் சேர்ந்து சொல்ல,

 

“காலம் மாறுனாலும் நீங்க மாற மாட்டிங்குறீங்களே டா” என மாறன் புலம்பியதில் அருந்தமிழ் சிரிக்க, காரணம் புரியாத போதும் மகளும் உடன் சேர்ந்து சிரித்தாள்.

 

ன் அறையில் இருந்த மண் சிலைகளையே பார்த்திருந்தாள் அரசி.

 

அத்தக்கருப்பனுக்கும் கட்டைக்காரிக்கும் இடையில் ஒரு அழகிய கன்றுக் குட்டியின் சிலை இடம் பெற்றிருந்தது. அதை கையில் எடுத்தவள்,

 

“அழுக்குமறையன்” என மென்மையாய் உச்சரித்து முத்தமிட்டாள்.

 

கருவுற்றிருக்கும் போது விக்ரமனை படுத்திய பாடெல்லாம் நினைவில் வந்து போனது. எதற்கும் அசராது அவள் மீது அன்பையே வாரிப் பொழிந்தான் அவளது அத்தக்கருப்பன்.

 

அருந்தமிழின் வளைகாப்பின் போது விக்ரமன் விளையாட்டாய் கூறியது போல், பிரசவத்திற்கு கூட அவனை விட்டு பிரிந்து பிறந்த வீட்டிற்குச் செல்ல மாட்டேன் என்றுவிட்டாள் அவன் அன்பில் கட்டுண்ட கட்டைக்காரி. வேறு வழியில்லாது நாயகி தான் விக்ரமனின் வீட்டிற்கு வந்து இருந்து கொண்டார்.

 

அவள் முன் மண்டியிட்டு அவள் வயிற்றில் இருந்த மகவின் அசைவை ரசித்துப் பார்த்து முத்தமிட்டது, பிரசவ வலியில் துடித்தபோது கையை அழுந்தப் பற்றிக்கொண்டு நம்பிக்கை கொடுத்தது என அவனோடான ஒவ்வொரு நிகழ்வையும் நினைத்துப் பார்த்திருந்தாள்.

 

பின்னால் இருந்து ஒரு வலிய கரம் அவள் இடையைப் பற்றி அவள் கழுத்தில் முகம் புதைக்க, புன்னகையுடன் தன் கையிலிருந்த சிலையை கீழே வைத்தவள்

 

“அவன் வெளிய போய் ரொம்ப நேரம் ஆச்சுங் மச்சா. அத்தையை என்ன பாடு படுத்துறானோ. நீங்க போய் பாருங்க” என, அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டுவிட்டு மகனைத் தேடி வெளியே வந்தான் விக்ரமன்.

 

பேரனின் பின்னால் பி.டி உஷா ஓட்டம் ஓடிக் கொண்டிருந்தார் முத்துலட்சுமி.

 

இந்த வயதிலும் அவரை ஓடவைத்துக் கொண்டிருந்தான் அவன். விக்ரம பாண்டியன் வேங்கையரசியின் தவப் புதல்வன் வேந்தன் வேங்கடவன். உருவத்தில் விக்ரமனை உரித்து வைத்திருந்தவன் குணத்தில் அப்படியே அவன் அன்னை தான்.

 

அவனுக்கு உணவு ஊட்டுவதற்குள் முத்துலட்சுமிக்கு போதும் போதுமென்றாகிவிடும். இந்த வயதில் இத்தனை வால்த்தனமா என்று வியந்துபோய் பார்த்திருப்பார்.

 

“விக்ரமன் எல்லாம் சிறுசுல பொட்டோட்ட இருப்பான் இவன் என்ன இந்த ஓரியாட்டம் பண்ணுறான். ஒரெடத்துல உக்கார மாட்டிங்குறான். எப்போப்பாரு மதில் மேலையே ஏத்திவிடச் சொல்லுறான்” என புலம்பியபடி முத்துலட்சுமி மூச்சிரைக்க நின்றுவிட,

 

“ஆத்தா என்னைய புடி பாக்கலாம்” என்று பின்னால் பார்த்தவாறே ஓடியவன் எதிரில் வந்த விக்ரமனின் மீது மோதி விழச்செல்ல, உடனே தன் மகனைப் பிடித்து நிறுத்தியவன்

 

“வேந்தன்” என்று கண்டிப்போடு அழைக்க, தந்தையின் குரலில் அதிர்ந்துபோய் நிமிர்ந்து பார்த்தான் மகன்.

 

“வேந்தன் குட்டி” என்ற குரல் கேட்ட மறுநொடியே ஓடிச்சென்று அரசியின் காலை கட்டிக் கொள்ள, புன்னைகயுடன் மகனை தூக்கி இடுப்பில் வைத்தவள்

 

“எதுக்கு தங்கம் இப்படி ஓடி வர்றீங்க. உங்களைய யாரு தொரத்துறாங்க?” என்று வினவ,

 

“மச்சான் தான் ம்மா” என்றான் அப்பாவியாய்.

 

உடனே விக்ரமன் அரசியை முறைக்க,

 

“அப்பான்னு சொல்லோணும்” என்று மகனை திருத்தியவள்,

 

“பப்பு சோச்சி சாப்ட்டிங்களா?” என, அவன் இல்லை என்று தலையசைக்க

 

“ஏன் சாப்பிடல? உங்களுக்கு ரொம்ப பிடிக்குமேனு பப்பு சோச்சில லட்சுமி ஆத்தா நெய் ஊத்தி கொண்டு வந்தாங்களே” என்றவாறு தன் மகனை தூக்கி மதிலுக்கு உள்ளே ஒருகாலும் வெளியே ஒரு காலும் போட்டு உக்காரவைத்து உணவு ஊட்டிவிட அமைதியாய் சாப்பிட்டான்.

 

அவன் சாப்பிட்டு முடிக்கவும் அவனை கீழே இறக்கி விட்டவள்,

 

“மச்சா இவனை கொஞ்சம் பாத்துக்கங்க நான் தண்ணி எடுத்துட்டு வர்றேன்” என்று விக்ரமனிடம் சொல்லிச்செல்ல,

 

“அம்மா வர்ற வரைக்கும் இங்கயே பொட்டோட்ட நிக்கோணும்” என்று மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேலனிற்கும் வீரனிற்கும் தீவனமிட்டுத் திரும்ப, அதற்குள் அங்கிருந்து ஓடி இருந்தான் வேந்தன்.

 

‘அப்படியே அவங்க அம்மாளோட்டம்’ என விக்ரமன் தன் மகனைத் தேடிக் கொண்டு வர, வேப்ப மரத்தருகே அமர்ந்து மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தான்.

 

“டேய் அழுக்குமறையா! மண்ணுல கை வைக்காத” என்று குரல் கொடுக்க, அவன் மைந்தன் அதைக் கண்டுகொண்டதாய் தெரியவில்லை. விக்ரமன் அவன் அருகில் வருவதற்குள், தன் உடையெல்லாம் மண்ணாக்கிக் கொண்டான்.

 

“குச்சிய கையில எடுத்தா தான் நீ சொன்ன பேச்சு கேப்ப” என அவனை மிரட்டுவதற்காக வேப்பமரத்தின் சிறு வாதை உடைத்துக் கொண்டு வர, உடனே கைகளை சட்டையில் துடைத்துக்கொண்டு நல்ல பிள்ளைபோல் விக்ரமனின் முன்னால் சிரித்த முகமாய் நின்றான்.

 

அரசியும் அவர்களைத் தேடிக்கொண்டு அவ்விடம் வர,

 

“அப்பா தூக்கு.. தூக்கு” என இரு கையையும் நீட்டி அவனை தூக்கச் சொல்ல, விக்ரமன் தூக்காமல் மகனையே முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

 

இனி என்ன செய்வதென்று புரியாது வேந்தன் தன் அம்மாவைக் பார்க்க, என்ன செய்யப் போகிறான் என அரசியும் அமைதியாய் மகனைப் பார்த்திருந்தாள்.

 

மறுநொடியே மண்ணில் விழுந்து உருண்டு புரண்டு கத்திக் கொண்டு அழ ஆரம்பிக்க,

 

“வேந்தன் கண்ணா. இப்படி எல்லாம் குறும்பு பண்ணக் கூடாது. நீங்க நல்ல பையன் தான” என மண்ணில் புரண்ட மகனை தன் கைகளில் ஏந்திய விக்ரமன், சமாதானம் செய்து அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

 

உடனே மழலைச் சிரிப்பை உதிர்த்தபடி விக்ரமனின் கழுத்தை கட்டிக்கொள்ள, புன்னகையுடன் அவ்விருவரையும் பார்த்திருந்தாள் அரசி.

 

முத்துச்சாமியின் இல்லத்தில் இருந்தனர் அரும்பும் குலசேகரனும்.

 

பல நாட்களுக்குப் பிறகு மகள் அவள் குடும்பத்தோடு வந்திருப்பதால்  காலை உணவை தடபுடலாய் சமைத்திருந்தார் மரகதவள்ளி.

 

“அரும்பு அல்லாரையும் சாப்புட வரச்சொல்லு” என்று மகளிடம் கூற,

 

“நான் கூட்டியாறனுங் அம்முச்சி” என்றான் அடுப்பு திட்டில் அமர்ந்து அவர்கள் சமைப்பதை வேடிக்கை பார்த்திருந்தவன். அவன் முகத்தை கைகளில் ஏந்திய மரகதம்,

 

“என்ர தங்கமயிலு. அம்முச்சிக்கு இப்பவே உதவி செய்யுறையா கண்ணு” என்று அவன் நெற்றியில் முத்தமிட்டு,

 

‘நீயுந்தேன் இருக்கியே’ என்பதாய் மகளை ஒரு பார்வை பார்த்தார். புன்னகையோடு தன் மகனிடம் வந்த அரும்பு,

 

“தீரன்! நீ போய் அப்பாவ, அப்புச்சிய, பாட்டியாத்தாள எல்லாரையும் சாப்பிட கூட்டிட்டு வா” என்று கீழே இறக்கி விட, தலையசைத்து அவன் வெளியே ஓடியதும் மரகதத்திடம் திரும்பியவள்

 

“உனக்கு உன்ர தம்பியையும் பேரனையும் கண்டுட்டா போதுமே. இடுப்புல சீலையே நிக்காது. என்னைய கண்டா எளக்காரமாத்தேன் இருக்கும்” என்று முகத்தை திருப்பினாள்.

 

“நீ இல்லாம என்ர பேரன் மட்டும் வந்துட்டானா. எப்போ பாரு சின்ன பிள்ளையோடதேன் வம்பு உனக்கு” என்று அவள் தோளை செல்லமாய் தட்ட, இருவரது இதழ்களிலும் புன்னகை.

 

குலசேகரன் கைபேசியில் பேசிக் கொண்டிருக்க, அவன் கையை யாரோ பிடிக்க உடனே வலப் பக்கம் கீழே பார்த்தான். புன்னகையுடன் நின்றிருந்தான், அரும்பின் உருவையும் அவன் தீரத்தையும் தனதாக்கிப் பிறந்த தீரன் தீந்தமிழன்.

 

உடனே கைபேசியை வைத்துவிட்டு,

 

“தங்க பையா” என்று மகன் முன் மண்டியிட,

 

“எலிக்குட்டி உன்னைய சாப்புட கூப்புடுது ப்பா” என்றான். வேகமாய் அவன் வாயைப் பொத்திய குலசேகரன்,

 

“அம்மா முன்னாடி கீன இப்படி சொல்லிப் போடாத. அப்பறம் எனக்கும் சேர்த்து அடி பின்னிப் போடுவா” என, வேகமாய் தலையசைத்து அவன் அப்புச்சியைக் காண ஓடினான்.

 

பேரன் தன்னிடம் ஓடி வருவதைக் கண்ட முத்துச்சாமி,

 

“வா சாமி அப்புச்சி கிட்ட வா” என அவனை தூக்கிக் கொண்டார். அவர் மீசையையே உற்றுப் பாத்திருந்த தீரன் சட்டென அதைப் பற்றி இழுத்து விட, நொடியில் அலறி துடித்துப்போனார் முத்துச்சாமி.

 

“ஐயோ அப்பா” என அரும்பு வந்து தன் மகனை வாங்கிக்கொள்ள, கண்களில் நீரே வந்துவிட்டது அவருக்கு.

 

எங்கு தீரனை அடித்து விடுவாளோ என்று வேகமாய் அவனை அரும்பிடம் இருந்து உள்ளே தூக்கிச் சென்ற குலசேகரன்,

 

‘எத்தனை நாளத்து ஆசை தெரியுமாடா இது. மீசையோட மீசையை பிச்சு எறியனும்னு. அப்பாவால அது முடியாம போய்டுச்சு ஆனா நீ அதைய நெறைவேத்தி வெச்சுட்டடா மகனே’ என நினைத்து தீரனை தூக்கிச் சுற்ற, ரசித்துச் சிரித்தான் மகன்.

 

“ரொம்ப வலிக்குதுங்களா” என மகரதம் விசாரிக்க, தொண்டையை செருமிய முத்துச்சாமி ‘இல்லை’ என்று தலையசைத்துவிட்டு உள்ளே செல்ல, லேசான புன்னகை மரகதத்திற்கு.

 

அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உணவருந்த,

 

“ஈரலை தனியா எடுத்து மாப்ளைக்கு வெய்யு மரகதா. அப்போத்தானோ ரேக்ளாவுல போய் தெம்பா நிக்க முடியும்” என்று வேலாத்தாள் கூறவும், உணவருந்திக் கொண்டிருந்த குலசேகரனுக்கு புரை ஏறியது.

 

“பாத்துங் மாப்ள” என முத்துச்சாமி அவன் தலையை தட்டவும்,

 

“தண்ணி குடிங் மாப்ள” என வேலாத்தாள் தண்ணீர் டம்ளரை அவனுக்கு நீட்டவும், அதை அரும்பும் மரகதமும் புன்னகையுடன் பார்த்திருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!