Skip to content
Post Views: 2,519
*11*
“மணி என்ன?” வந்தனா கேட்க, சந்தியா பதில் சொன்னாள்.
“மூணு.”
சில நிமிடங்களிலேயே மீண்டும் மணி என்ன என்று கேட்க, பல்லைக்கடித்துக்கொண்டே பதிலளித்தாள் சந்தியா.
Advertisement
“அஞ்சு நிமிஷம் தான் ஆகியிருக்கா? இன்னைக்கு நேரமே ஓட மாட்டேங்குதுடி.” வந்தனா போலியாய் சலித்துக்கொள்ள, தன் மகளை தூக்கி அவளிடம் கொடுத்த சந்தியா, “இவளை பாத்துக்கோ. அப்படியும் போர் அடிச்சுதுன்னா வீட்டுக்கு கூட்டிட்டு போய் வச்சிக்கோ.”
“ஏன் மாட்டேனு நினைக்குறியா? என் செல்லத்தை நானே வச்சிப்பேன் திரும்ப எல்லாம் தரமாட்டேன்.” என்று ஆத்யாவை அணைத்து கொஞ்சிய வந்தனாவின் பார்வை மீண்டும் கடிகாரத்திற்கு சென்று குறும்பாய் மிளிர்ந்தது.
அவள் பார்வையை தொடர்ந்த சந்தியா புரியாது என்னவென்று கேட்க, பேசாது இருக்கும்படி வந்தனா வாயில் விரல் வைத்து தன் இடப்பக்கம் கண்காட்டினாள். அங்கு அமைதியாய் தன் கையில் இருந்த கடிகாரத்தில் ஒரு கண்ணும் அலைபேசியில் ஒரு கண்ணுமாய் மற்றவர்கள் இருப்பை கருத்தில் கொள்ளாதபடி தனிஉலகில் இருந்தாள் குழலி.
Advertisement
“இந்த ஸ்மார்ட் வாட்ச் வந்தாலும் வந்துச்சு குளிக்கும் போது கூட சிலர் கழட்ட மாட்டேங்குறாங்க. நிமிஷத்துக்கு நிமிஷம் மணி பார்த்து அப்படி எதை புடிக்கப் போறாங்களோ?” வந்தனா சீண்ட,
Advertisement
“எதையும் புடிக்கணும்னா தான் மணி பாக்கணுமா என்ன? புடிச்சவங்க வாங்கிக் கொடுத்தாலும் பாக்கலாம்.” சந்தியாவும் சேர்ந்துகொண்டாள்.
எப்போதோ இவர்களிடமிருந்து பெரியம்மாவிடம் சென்றுவிட்ட ஆத்யாவின் உதவியால் தன் நினைவுகளிலிருந்து வெளிவந்திருந்த குழலிக்கு தங்கைகள் தன்னை கேலி செய்வது புரிய, அதனை கண்டுகொண்டது போல் காட்டிக்கொள்ளாமலிருக்க பிரயத்தனப்பட்டாள்.
“இந்த பூனையும் பால் குடிக்குமான்னு நினைச்சேன் ஆனா பாரேன் வயிறு முட்ட குடிச்சிட்டு கமுக்கமா இருக்கறதை.”
Advertisement
“எந்த பூனையைடி சொல்ற?”
“அது ஒரு திருட்டுப்பூனைடி. மாட்டிக்கிட்டோம்னு தெரியாம கண்ணை மூடிட்டு உக்காந்திருக்கு பாரேன்.”
“ரொம்ப துள்ளுனா பெருச்சாளி குட்டிங்களை பிராண்டிடும் அந்த பூனை.” பற்களை காட்டி விரல்களை விரித்து உயர்த்தி கீறுவது போல் செய்த குழலி விட்டால் போதுமென்று அப்படியே நகர முயல, அவளை பிடித்து உக்கார வைத்து ஒருவழி செய்துவிட்டனர் தங்கைகள்.
“போதும் விட்டுருங்கடி முடியல.” என்று அவள் கெஞ்சுமளவுக்கு ஓட்டியெடுக்க அனைத்தையும் நிறைவுடன் பார்த்திருந்தார் பிரபா.
“அதான் ஓவர் லவ்ஸ் ஆகி நம்பர் தேடிக் கண்டுபுடிச்சி, கிஃப்ட் கொடுத்து, சன்ரைஸ் பார்த்துனு ஆகிப்போச்சுல எங்களை ஃபிரெண்டாக்கி விடு மாமாவுக்கு. இப்போவே போன் போடு.” என்று நச்சரிக்க ஆரம்பித்தனர்.
“இப்போல்லாம் முடியாது.” என்று அவள் மறுக்க, பிடிவாதம் செய்தனர் தங்கைகள்.
“இன்னைக்கு இருந்த பிளான் எல்லாத்தையும் டிராப் பண்ணிட்டு எதுக்கு இங்க வந்தோம்னு நினைச்ச. காலையில நீங்க பண்ண சாகசத்தை அம்மா சொல்லவும் டான்னு எங்க புருஷங்களை கழட்டி விட்டுட்டு வந்தா நீ ரொம்ப பண்ற அக்கா…”
“ஏய் நானே எப்போவாச்சும் தாண்டி பேசுவேன்.”
“ஹாஹான் நம்பிட்டோம் நம்பிட்டோம்…”
“நிஜமாடி. ரெண்டு இல்லை மூணு நாளுக்கு ஒருதடவை சும்மா ஒரு அஞ்சு நிமிஷம் பேசுவோம் அவ்ளோ தான். இன்னைக்கு வருவாருனு சுத்தமா எதிர்ப்பாக்கல.”
“இதுவரைக்கும் அப்படி இருந்த ஓகே. இனிமே என்ன? நேரம் காலம் பாக்காம நீ கூப்பிடனும், அவர் உடனே எடுக்கணும் அதுதான் மிங்கிள்ஸ்கு அழகு.” என்று அவளை போட்டு படுத்த, அவர்களை சமாளிக்க முடியாமல் அலைபேசி எடுத்தாள்.
உடனே தங்கைகள் இருவரும் அவளது இருபுறமும் அமர்ந்து அவள் அலைபேசியை எட்டிப்பார்த்தனர். அதிர்ந்தவளாய், “என்னடி பண்றீங்க?”
“ஹான் கூப்பிடு கூப்பிடு… ஆத்யா இங்க வா பெரியப்பா கிட்ட பேசலாம்.” என்று மகளையும் தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டாள் சந்தியா.
மறுபக்கம் இருந்த வந்தனா தோளை இடிக்க, இருவரையும் மாறி மாறி பாவமாக பார்த்தாள் குழலி.
“இந்த அப்பாவி லுக்கெல்லாம் பார்த்து இனியும் ஏமாற நாங்க தயாரா இல்லை.”
“ரொம்ப பண்றீங்கடி.” சிணுங்கிக்கொண்டே அவன் பெயரை அலைபேசியில் அழுத்த, ‘அகன்’ என்று பதிந்திருந்த அந்த பெயரைப் பார்த்து ஓஹோ என்று உற்சாக கூச்சல் கிளம்பியது. முதலில் அவனின் முழுப்பெயர் போட்டு சேமித்து வைத்திருந்தாள், அன்று காலை தான் மனம் கவர்ந்த பெயருக்கு மாற்றினாள். தங்கைகள் கேலியாய் பார்க்கவும் இனிய அவஸ்தையில் நெளிந்தாள்.
அழைப்பு செல்லவும் அலைபேசியை காதில் வைக்கப்போனவளை தடுத்து ஸ்பீக்கரில் போட்டுவிட்டாள் வந்தனா.
“மலர், இப்போ தான் ஷோரூம் வந்திருக்கேன்.” என்றுதான் எடுத்ததும் ஆரம்பித்தான் அவனும்.
“பிளவரா…” தங்கைகள் இருவரும் கூச்சல் போட, நாணத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டாள் குழலி. மறுபுறம் இருந்த முகிலனும் திகைத்து அலைபேசியை காதிலிருந்து எடுத்து பார்த்துவிட்டு தயக்கத்துடன், “ஹலோ.” என்றான்.
“பயந்துட்டீங்களா? நாங்க உங்க பிளவரோட தங்கச்சி. எங்களை நியாபகம் இருக்கா… ஆத்யா பெரியப்பாவுக்கு ஹாய் சொல்லு.” என்று சந்தியா இலகுவாய் பேசி தன் மகளையும் அறிமுகப்படுத்தினாள்.
“உங்க பிளவர் எங்களை உங்ககிட்ட இன்ட்ரோ கொடுக்க மாட்டேன் அவரே நானே வச்சிப்பேன்னு இங்க ஒரே சேட்டை. அதான் நாங்களே கால் பண்ணிட்டோம்.” என்று வந்தனாவும் இணைந்து கொண்டாள்.
“வேலையில இருக்கும் போது தொந்தரவு பண்ணக்கூடாது. அதான் இன்ட்ரோ ஆகிட்டிங்கள்ல அப்புறம் பேசலாம்டி.” என்ற குழலியை பிடித்து அழுத்திவிட்டனர்.
“அப்படியா மாமா நாங்க தொந்தரவு பண்றோமா? எங்களுக்கு இருக்கிற ஒரே அக்கா வீட்டுக்காரர் நீங்கதான்…” என்ற வந்தனாவின் தலையிலடித்த சந்தியா, “சைட் கேப்ல என்னையும் என் வீட்டுக்காரரையும் டீல்ல விட்டுட்ட பாத்தியா? எனக்கு தான் ஒரே மாமா…”
“சரி சரி எனக்கு இருக்குற மொதோ மாமா நீங்க உங்ககிட்ட நேரம் காலம் பாத்து அப்பாயின்மென்ட் வாங்கியா பேச முடியும். நீங்களே சொல்லுங்க இதெல்லாம் நியாமா தர்மமா?” என்று திருத்திக்கொண்டு தீவிரமான தொனியில் வந்தனா பேச, அந்த பக்கம் திகைத்து விழித்து நின்றான் முகிலன்.
இரு வேறு குரல்கள் மாறி மாறி கேட்க, நடுநடுவே அவர்களுக்குள் சண்டை வேறு போட்டுக்கொண்டு அவனிடம் நியாயம் கேட்க, யார் அக்கா யார் தங்கை என்று ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. முயன்று அவர்களது முகங்களை நினைவிற்கு கொண்டுவந்தான்.
‘மலர் காப்பாத்துமா. போனை குடுத்துட்டு எங்க போயிட்ட?’ என்று சில நிமிடங்களில் அவன் கதறியது அவளுக்கு கேட்டதோ என்னவோ பட்டென்று தன் அலைபேசியை பிடுங்கி பிறகு கூப்பிடுவதாக சொல்லி துண்டித்துவிட்டாள்.
“ரொம்ப பண்ணாதீங்கடி. வேலையில இருக்குற மனுஷனை டென்சன் பண்ணிக்கிட்டு.” குழலி கண்டிக்க,
“அப்படிதான் பண்ணுவோம்.” என்றனர் தங்கைகள்.
என்னவோ பண்ணுங்கள் என்று இருவரையும் பார்த்து சொல்லிவிட்டு நகர்ந்தவள் மனதினுள் இருந்தது ஒன்றுதான். அகமுகிலன் அவள் அகத்தை மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தையும் நிறைவு செய்ய வந்தவன். முன்பு கணேஷிடம் இது போலவெல்லாம் கலாட்டா செய்வது என்ன, அவனிடம் பேசிக்கூட இராத தன் தங்கைகள் முகிலனை எளிதாக தங்களின் கூட்டுக்குள் ஏற்றுக்கொண்டார்கள். தங்களில் ஒருவனாக உரிமை கொடுத்து உரிமையெடுத்து இயல்பாக இணைத்துக்கொண்டதை இதமாய் உணர்ந்தது மனது. மேலும் ஒருமணி நேரம் கழித்து அம்மா மகள்களுமாய் கோவிலுக்கு சென்று வரவும் இளையவர்கள் தங்கள் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
“ம்மா வந்தனா ஏன் டல்லா இருந்தா?” இரவு உணவு வேளையில் அம்மாவிடம் கேட்டாள் குழலி.
“இல்லையே.”
“இல்லையா? ஆனா உன்கிட்ட தான் என்னமோ சொல்லிட்டு வருத்தப்பட்ட மாதிரி இருந்துச்சு.”
“இப்போ ஹாஸ்பிட்டல் போறதில்லைனு அவ மாமியார் ஏதோ சொன்னாங்களாம் அதுதான் சுணங்கிட்டு இருந்தா.” என்றார் பிரபா வெகு இயல்பாய். இவளுக்குத்தான் வருத்தமாகியது.
“அவளும் எவ்ளோ மருந்து, மாத்திரை, ஊசினு போட்டுப்பா. அதுவே ஸ்ட்ரெஸ் ஆகியிருக்கும்.”
“அதுதான் நானும் சொன்னேன். எல்லாத்தையும் மனசுல ஏத்திக்கிட்டா நம்மள அறியாமலேயே அழுத்தம் வந்துடும். ரிலாக்ஸ்சா இரு எல்லாம் நடக்கும்னு சொல்லி இருக்கேன். தேறிடுவா அவ.”
“அவ மாமியார் கொஞ்சம் சப்போர்ட்டிவ்வா இருக்கலாம்ல. அவளால முடிஞ்சதை ட்ரை பண்ணிட்டா.”
“கொஞ்சம் முன்னபின்ன தான் இருப்பாங்க. சிலர் புரிஞ்சிப்பாங்க சிலர் மாட்டாங்க. சமாளிச்சு வாழறது தான் வாழ்க்கை. நீயும் இதெல்லாம் கடந்து வர மாதிரி இருக்கும். தேவையான எடுத்துக்கிட்டு அனாவசியமானதை மண்டையில ஏத்திக்காம சந்தோஷமா இரு.” என்று சின்ன சிரிப்புடன் நகர, சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் வேலை முடித்து கூப்பிடும்படி முகிலனுக்கு செய்தி அனுப்பினாள். ஒன்னரை மணி நேரம் கழித்து அழைத்தான் முகிலன்.
“வீட்டுக்கு போய்ட்டிங்களா?”
“கிளம்பப்போறேன் மலர். அக்கவுண்ட்ஸ் க்ளோஸ் பண்ணிட்டேன். உன்கிட்ட பேசிட்டே போயிடலாம்னு கூப்பிட்டேன். சொல்லு என்ன பண்ற?”
இரவு உணவு முடித்துவிட்டு அவனுக்காக காத்திருப்பதை சொன்னவள், “இன்னைக்கு மதியம் என்னை போட்டு படுத்திட்டாளுங்க உங்களுக்கு போன் போடச்சொல்லி. உங்களுக்கு ஒன்னும் தொந்தரவு இல்லையே?” என்று தயங்கித்தான் கேட்டாள்.
“முதல்ல ஷாக்கா இருந்துச்சு அப்புறம் ஓகே ஆகிட்டேன். ஒன்னு கேட்டா கோச்சிக்க கூடாது.” என்று பீடிகையுடன் துவங்கியவன் காலை அலைபேசியில் பேசியவர்களின் விவரம் கேட்டான்.
சந்தியா, வந்தனா, அவர்களின் குடும்பம் பற்றி விளக்கினாள்.
“உன் தங்கச்சிக்கு அவ்ளோ பெரிய பொண்ணா?”
“பெரியவளா? நாலு வயசுதான் ஆகுது. இந்த வருஷம்தான் எல்.கே.ஜி சேர்க்க போறாங்க.” என்றதும் குத்துமதிப்பாக அவள் தங்கைக்கு எப்போது திருமணம் ஆகியிருக்கும் என்று கணக்குப் போட்டவனை அவளது பேச்சு தடையிட்டது.
“போனதும் போன் பாக்காம ரெஸ்ட் எடுங்க. நேத்திக்கே ஒழுங்கா தூங்கியிருக்க மாட்டீங்க.” அவள் அக்கறை அவனுள் தித்திப்பாய் இறங்கியது.
“அதெல்லாம் பாத்துக்குறேன். நீ சொல்லு அங்க ரிசெப்ஷன் வைக்குற ஐடியா இருக்கா? லீவ்லாம் பிளான் பண்ணனும்.”
“வீட்ல பேசிட்டு சொல்றேங்க. நீங்க என்ன நினைக்குறீங்க?”
“உங்களுக்கு அலைச்சல் வேண்டாம்னுதான் நிச்சயம் தனியா வேண்டாம் எல்லாம் ஒண்ணா பண்ணிக்கலாம்னு சொன்னேன். ஆனா அங்க உன் சைட் ரிலேட்டிவ்ஸ், பிரெண்ட்ஸ் இருப்பாங்க இல்லை. அவங்களுக்கு ரிசெப்ஷன் வேணுமான்னு நீதான் சொல்லணும்.”
“வேண்டாம்னு சொன்னா வீட்ல என்னை ஒருவழி பண்ணிடுவாங்க.” என்றாள் அவளும் யோசித்து.
“சரி வீட்டுக்கு வந்துட்டேன். அப்புறம் பேசுறேன்.” என்று அலைபேசியை வைத்துவிட்டு உள்ளே வந்தவனை நிறுத்திவிட்டார் மாரியம்மாள்.
“நைட்டு வீட்டுக்கு வரல, மதியமும் குளிச்சிட்டு உடனே கிளம்பிட்ட. இப்போவும் இவ்ளோ லேட்டா வர. ரொம்ப வேலையா முகிலு?”
ஒருமாதிரி தலையாட்டியவன், “பசிக்குது ம்மா.” என்று அவர் கண் பார்க்காமல் உடை மாற்றி அமர, சரவென சரவென மகனுக்கு உணவு பரிமாறினார்.
“அப்பா எங்க?”
“இன்னமுமா முழிச்சிட்டு இருப்பாரு? எப்போவோ சாஞ்சாச்சு.” என்று சொல்லவும் முகிலின் பார்வை யோசனையுடன் அறைக்குச் சென்று வந்தது.
“வேற வீடு பாக்கவா மா? ஒரு ரூம் பத்தாதே.”
“ஏன் உன் மகாராணிக்கு இந்த மாளிகை போதலைன்னு சொன்னாளா?”
மலர் வந்துவிட்டால் பெற்றவர்களுக்கு தனி அறை இல்லாமல் சங்கடமாய் இருக்குமே. நேரமே உறங்கும் தந்தை என்ன செய்வார் என்று நினைத்துக் கேட்க, மாரியம்மாள் பேசிய தொனி அவன் எதிர்பார்க்காதது.
“என்னம்மா நீ? இங்க எப்படி இருக்குனு கூட அவளுக்கு தெரியாது.”
“இப்போவே அவளுக்கு வக்காலத்து வாங்க ஆரம்பிச்சிட்டியா. நல்லாயிருக்கு முகிலு. இனி என் பேச்சுக்கு என்ன மதிப்பு இருக்கப் போவுது.” என்று சடைத்தவரை அதிர்ந்து பார்த்தான்.
மலரை திருமணம் செய்வதில் இவருக்கு பெரிதாக உடன்பாடில்லை என்று தெரியும் இருந்தாலும் இப்படியான பேச்சுக்களை திருமணத்திற்கு முன்பே எதிர்பார்த்திருக்கவில்லை அவன்.
“ம்மா… நீ ஏன் இப்படியெல்லாம் நினைக்கிற? வீடு கூட உனக்கு சங்கடம் வேண்டாம்னு தான் பாக்கலாமானு கேட்டேன். நேரமே அப்பா தூங்கிடுது, நான் லேட்டா வர்றேன். மலர் வந்துட்டா ரூம்ல அவர் படுக்க சங்கடப்படுவாரு. நீகூட சொல்லிட்டு தான இருப்ப எனக்கு கல்யாணமானா நாங்க ரூம்லேந்து பொட்டி கட்ட வேண்டியதுதான்னு. அதுதான் கேட்டேன். போமா நீதான் யாரோ மாதிரி என்னை பாக்குற, நான் சொல்ற எல்லாத்துக்கும் வேற அர்த்தம் எடுத்துக்குற.”
முகிலன் வருந்திப் பேச பேச மாரியம்மாள் மனம் சமன்பட்டது. மகன் சொல்வதும் நியாயம்தானே என்று ஏற்றுக்கொண்டார்.
“நீதான் சென்னை போணும்னு சொல்றியே. அப்புறம் எதுக்கு இங்க வேற வீடு. நீங்க வர்றப்போ நாங்க கூடத்துல இருந்துக்குவோம். தண்ட செலவு பண்ணாத. பவுனு விக்கிற விலைக்கு அஞ்சு பவுன் தாலி செயின் வாங்க சொல்றாரு உன் அப்பா. புடவை, மண்டபம், சாப்பாடுனு செலவு நிறைய இருக்கு.” என்று மகனை முன்னிறுத்தி சொல்ல, பேச்சுவார்தை சுமூகமானது.
“நம்ம வழக்கத்துல எவ்ளோ பவுன் போடுவோம் ம்மா?”
“அஞ்சுல துவங்கி எவ்ளோ முடியுதோ போடுவோம். ஆனா இப்போ இருக்கிற விலைக்கு குறைச்சிக்க வேண்டியது தான்.”
“ஓ. கையில எவ்ளோ இருக்குனு பாத்துட்டு முடிவு பண்ணலாம். நீ பணத்தை பத்தி யோசிக்காத இருக்கிறதை வச்சி செஞ்சிக்கலாம்.” என்றவனுள் செலவு குறித்த யோசனைகள்.
இடம் வாங்கி வீடு கட்டவென சேமித்து வைத்திருக்கும் பணம் கணிசமாக இருக்கிறது. அதை திருமணத்திற்கு என்று எடுத்துவிட்டால் இடம் வாங்குவது தள்ளிப் போகுமே என்ற யோசனையுடன் படுத்தான். மறுநாள் தந்தையிடம் அதனை பகிர்ந்துகொள்ள, நான் பார்த்துக்கொள்கிறேன் நீ சென்னை செல்வதை மட்டும் பார் என்றார். இன்றுதான் சென்று வந்தேன் என்றவன் விவரம் தெரிவிக்க, மகிழ்வுற்றவர் மாரியிடம் பெரிதாக சொல்லிக்கொள்ள வேண்டாம் என்றார்.
“ஆனா இப்படி போறதை பத்தி சொல்லல, வேலையை மாத்துறது பத்தி சொல்றேன்.” என்று அவர் தோள் தட்டி நகரவும் சுணக்கம் கொண்டான்.
அந்த வாரமே திருமணத் தேதி, வரவேற்பு நிகழ்வு எல்லாம் முடிவானது. பொங்கலுக்கு முன் புடவை, நகை எடுப்பது பற்றி தங்களுக்குள் முடிவு செய்திருக்கும் தேதியை அவளிடம் பகிர்ந்துகொண்டான் முகிலன்.
“அந்த டைம் எனக்கு லீவ் போட முடியுமானு தெரியலையே. எங்க எடுப்பீங்க? சந்தியா, வந்தனா ரெண்டு பேரு வீட்லையுமே இங்கயே இருந்ததுனால இங்கிருந்தே ஒன்னா போய் எடுத்துட்டு வந்துட்டோம்.” என்று அவள் கேட்க, அதை அப்படியே வந்து வீட்டில் கேட்டான்.
“இது என்ன புது வழக்கம்? கல்யாணப் புடவை எடுக்க பொண்ணு எதுக்கு?” முந்திக்கொண்டு வந்தார் மாரியம்மாள்.
குழப்பமான முகிலன், “அவ தங்கச்சி கல்யாணத்துக்கு எல்லாரும் சேர்ந்து போய் எடுத்ததா சொன்னா.”
“அவங்க பழக்கம் என்னவோ… இப்போவே அந்த பழக்கத்தை இங்க கொண்டு வர நினைச்சா ஒத்துவராது பாத்துக்க முகிலு.”
“ம்மா அவ சாதாரணமா தான் கேட்டா. கூட்டிட்டு போய் எடுத்துக் குடுக்குறது நமக்கு பழக்கம் இல்லைனா விடேன்.” என்று இலகுவாக எடுத்துக்கொண்டான் முகிலன்.
ஆனால் மாரியம்மாள் விடாது, “அவதான் வேணும்னு நிக்குற. அதுக்காக இங்க பேசுறது எல்லாத்தையும் உடனே உடனே அங்க போய் உளறிட்டு இருக்காதா. அப்புறம் தலையில ஏறி உக்காந்துடுவா.”
“அவ அப்படியெல்லாம் இல்லை.” என்று சில பல வாதங்களை வைத்து அவன் கிளம்பிவிட்டான் வேலையைப் பார்க்க, மாரிக்கு தான் திகுதிகுத்தது. இப்போதே இப்படி இருக்கிறானே என்று ஆற்றாமையுடன் கணவரிடமும் வாங்கி கட்டிக்கொண்டார்.
குழலியிடம் பேசும் சமயம் மாரியம்மாள் சொன்னதை இயல்பாக பகிர்ந்துகொள்ள, அவளுக்கும் சுணக்கம் தான். தங்கைகள் தங்கள் திருமணத்திற்கு என்று அவர்கள் துணையுடன் பார்த்து பார்த்து உடைகள் தெரிவு செய்தது நியாபகம் வந்தது.
“இன்னும் இதெல்லாம் பாலோ பண்றாங்களா என்ன? நீங்க அத்தைக்கிட்ட இன்னொரு முறை கேட்டுப்பாருங்களேன்.” புதுப்பெண்ணிற்கே உரித்தான ஆர்வத்தில் அவள் கேட்க, மாரியம்மாளிடம் இதை கேட்டு வாங்கி கட்டிக்கொள்ள தயாராக இல்லை முகிலன்.
“என் மலருக்கு நான் செலக்ட் பண்றேன். புடிச்ச கலர் சொல்லு.” என்றான் சாதுர்யமாய்.
‘எவ்வளவு முக்கியமான நாள். வாழ்நாள் முழுதுக்கும் எண்ணி எண்ணி மகிழ்ந்து நினைவு கொள்ளும் தினத்தில் தனக்கு பிடித்தது போல் புடவை எடுக்க முடியாதோ?’ என்ற வருத்தம் இருந்தாலும் பெரிதாக காட்டிக்கொள்ள முடியாமல் முகிலனுடன் இயல்பாக பேசினாள்.
ஆனால் வீட்டில் பேசுகையில் பிரபாவிடம் பகிர்ந்துகொள்ள, அவர் சந்தியாவிடம் சொல்ல, செய்தி கவிதா மூலம் கந்தசாமிக்கு சென்றது.
error: Content is protected !!