Skip to content
Post Views: 3,769
“ஏன்’க்கா நம்ம வந்தனா வீட்டுக்காரர் உனக்கு செட் ஆகுற மாதிரி அலையன்ஸ் கொண்டு வந்தாராமே. பாத்தியா? அவர் ஓகேவா? நம்ம மகளிர் குழுவுல சேத்துக்கலாமா?” கவனமாக வார்த்தைகளை விட்டவள் குழலியை கூர்ந்து பார்க்க, உதட்டை பிதுக்கினாள் குழலி.
“க்கா…”
“ஒரே பையன்டி எப்படி அவங்க அப்பா அம்மாவை விட்டுட்டு இங்க வந்து இருப்பாங்க?” யோசனையுடன் குழலி சொல்ல,
“அவங்க வரலைனா நீ போக வேண்டியதுதானே. ஏன் நான் பாக்க மாட்டேனா அம்மாவை?” பட்டென்று கேட்டாள் வந்தனா. அப்படி கேட்க முடியாமல் தன்னுள்ளே மருகிப் பார்த்தாள் சந்தியா. அவளால் அம்மாவை பார்க்க முடியாது என்றில்லை அவள் மாமியாரை விட்டு அவளும் நகர முடியாமல் மாட்டிக்கொண்டு இருப்பது சில சமயங்களில் முள்வேலியாய் உறுத்துகிறது.
Advertisement
“நீங்க பாக்க மாட்டீங்கன்னு நான் சொல்லலடி.” சந்தியாவை விட்டுக்கொடுக்காமல்தான் துவங்கினாள் குழலி, “உங்க ரெண்டு பேருக்குமே வெவ்வேற கமிட்மெண்ட்ஸ் இருக்கு.” என்றவளை இடைமறித்தாள் வந்தனா.
“எல்லாத்தையும் நீயே சுமக்கணும்னு இல்லை க்கா. மூணு பேருக்கும் தான் அம்மா, மூணு பேருக்கும் அம்மாவை பாத்துக்குற கடமை இருக்கு.”
“என்னை நானே பாத்துப்பேன் உங்க வாழ்க்கையை நீங்க பாருங்க.” பட்டென்று பிரபா சொல்ல, மகள்கள் கேட்க வேண்டுமே.
Advertisement
“அப்படியெல்லாம் விட முடியாதுமா. இதுவே பையனா இருந்தா இப்படி சொல்லி ஒதுங்கி நின்னுருப்பியா? என் பையன்னு மருமக’கிட்ட மல்லுக்கு நின்னுருக்க மாட்ட. மருமகன்’னு வந்ததும் பம்மிட்டு இருக்க.” வந்தனாவின் கூற்றை ஏற்றுக்கொள்ள தான் வேண்டியிருந்தது.
Advertisement
மகன் இருந்திருந்தால் இப்படி இருந்திருப்போமா தெரியாது. மகள்கள் எனவும்தான் அவர்களின் புகுந்த வீட்டினரையும் கருத்தில் கொண்டு அதற்கேற்றாற் போல் தன் வாழ்வின் திட்டமிடுதலை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதுவும் மூன்றில் இரண்டும் ஒவ்வொரு ரகமாய் அமைத்திருக்க, அவர்களே முன்வந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் அதனை ஏற்க மறுத்தது மனம். பெண்கள் மூன்றும் படித்து சொந்தக்காலில் நின்றாலும் அவர்களை மட்டுமே முன்னிறுத்தி முடிவுகள் எடுக்க முடிவதில்லை. அவர்களின் புகுந்தகத்தையும் கருத்தில் கொள்ளவேண்டி உள்ளது. பெண்களை பெற்ற பெற்றோருக்கே உரித்தான உணர்வோ? காலம் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை! கட்டுப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் சிலது மரபுகள் எனும் பெயரில் மரபணுவில் கலந்துவிட்டனவோ?
“என்னால தான், என் மாமியாரல தான் நீ இப்படி இருக்கேன்னு கில்டியா இருக்கு.” சந்தியா வருத்தம் தோய்ந்த குரலில் சொல்ல, மறுப்பு குழலியிடம்.
“யாரும் யாரோட நிலைமைக்கும் காரணமில்லை. இப்படியெல்லாம் மனசுல நினைச்சிட்டு இருந்தா நிம்மதியா அவங்களோட ஓரே வீட்ல இருக்க முடியாதுடி. உன் எண்ணத்தை மாத்திக்கோ.”
Advertisement
“அப்போ நீ ஓகே சொல்லு.” கிட்டத்தட்ட மிரட்டவே செய்தாள் சந்தியா.
“நான் எப்போ ஓகே இல்லைனு சொன்னேன்? இந்த பையன் வேண்டாம்னு தான் சொல்றேன்.”
“ப்ச்… இப்படியே ஏதாச்சும் சொல்லு க்கா நீ.” சலித்துக்கொண்டாள் சந்தியா.
“போன மாசம் கூட உன் வீட்டுக்காரர் சொன்னாருன்னு ஒருத்தரை போய் மீட் பண்ணேன். அம்மாவை கூடவே வச்சிக்கலாம் ஆனா இரண்டு தங்கச்சிங்க இருக்காங்க. எதிர்காலத்துல அவங்களுக்கு எல்லாம் செய்யணும்னு இழுத்துவிட்டுக்க வேண்டாங்குற மாதிரி பேசுனாரு. செட் ஆகாதுனு வந்துட்டேன்.”
“பின்ன உனக்குன்னு குடும்பம் வந்தா அதை பாக்க வேண்டாமா? கடைசி வரைக்கும் எங்களுக்கு செஞ்சிட்டே இருப்பியா? அவரோட எதிர்பார்ப்புல என்ன தப்பிருக்கு?” சந்தியாவும் குழலியும் உரையாட, அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தாள் வந்தனா.
“இளைப்பாற நினைக்கிற நேரம் அம்மா வீடு இருக்குன்னு வரீங்க. அது கடைசி வரைக்கும் இருக்கணும்னு நினைக்கிறேன்.” என்று துவங்கியவள் மேலும் தொடர்ந்தாள்,
“கல்யாணம் பண்ணி புகுந்த வீடு போய் இருக்கீங்களே, அங்க உங்க வாழ்க்கையை மட்டுமா பாத்துட்டு இருக்கீங்க? மாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தனார், அவங்க அங்காளி பங்காளி இப்படி எல்லாருக்கும் பாத்து செய்ய வேண்டியதிருக்கே ஏன்? ஹஸ்பண்டோட சொந்தங்களை தன் சொந்தமா ஏத்துக்கிட்டு அவங்கள கவனிக்கிற பொறுப்பு மனைவிக்கு இருக்குன்னா அதே பொறுப்பு கணவனுக்கு இருக்குறதுல தப்பு இருக்குற மாதிரி எனக்குத் தோணல.” என்றவளை இடைமறிக்க வந்த சந்தியாவை தடுத்தவள்,
“உடனே பெமனிசம் பேசுறேனு எடுத்துக்காதீங்க. இப்படி இப்படி தான் இருக்கனும். இவங்க இதை இப்படித்தான் செய்யணும், இதுதான் எங்க குடும்ப வழக்கம்னு சொல்லி சொல்லியே வழி வழியா வாழ்ந்திட்டு இருக்குற சமுதாயத்தை மாத்தணும்னோ புரட்சி பண்ணணும்னோ நான் கண்டிஷன்ஸ் போடல. என் குடும்பத்தோட தேவையும் என்னோட மனதிருப்தியும் எனக்கு முக்கியம். உனக்கு செஞ்ச மாதிரி வந்தனாக்கும் செய்யனும். வளைகாப்பு, டெலிவரி, காது குத்துனு எவ்வளவோ இருக்கு. நாளைக்கு அவங்களுக்கும் பாட்டி வீடுன்னு ஒன்னு வேணும். எல்லாத்தையும் அப்படியே விட என்னால முடியாது.”
“நீ சொல்றது புரியுது அக்கா… உன் கண்டிஷனுக்கு எல்லாம் யாரும் ஒத்து வரணுமே. இவ்ளோ புடிவாதம் வேண்டாமே. கொஞ்சமாச்சும் இறங்கி வா. எங்களை நாங்களே பாத்துக்குற அளவுக்கு வளந்தாச்சு.” அக்காவை சம்மதிக்க வைக்கவென வந்தனா கொஞ்சம் அழுத்தமாக பேசிவிட,
“இது பிடிவாதம் இல்லை. வைராக்கியம். நம்மள பெத்தவரு எத்தனை நாள் அழ வச்சிருப்பாரு நாம பொண்ணா பொறந்ததுக்கு. எவ்ளோ பயத்திருக்கா சந்தியா. இதோ இப்போ ஆத்யா குட்டி வந்தா வீடே எப்படி இருக்கு, அதுமாதிரி ஒரு நாளாச்சும் நம்ம வீடு இருந்திருக்குமா? விவரம் புரியாத வயசுல கூட பதட்டமும் அடுத்து என்ன சொல்லுவாரோன்னு பயத்துல நிலையில்லாம தான் தவிச்சிருக்கோம். அந்த தவிப்பெல்லாம் போதும். நாளைக்கே உங்களுக்கு ஏதாவது தேவைன்னா யாருமில்லைனு நீங்க தவிச்சு நிக்கிற நிலைமை வந்துறக்கூடாது. அது எமோஷனல் ஆர் பினாஷியல் நீட் எதுவா இருந்தாலும்…”
“இதையே நாங்களும் நினைக்கலாம்ல. நாங்க ரெண்டு பேரும் குடும்பமா நிக்கும் போது நீ மட்டும் தனியா இருப்பியா? இதுவே லேட் அக்கா. இனி எங்க பேச்சை கேளு நீ.” சந்தியா அழுத்தி சொல்ல,
“உங்க பேச்சை கேக்காத மாதிரி தான் சொல்றீங்க. உங்க வாழ்க்கையை தேர்ந்தெடுக்க உங்களுக்குனு சில எதிர்பார்ப்பு இருந்த மாதிரி எனக்கும் இருக்கு. அதை பூர்த்தி செய்யுற மாதிரி எனக்குன்னு பொறந்தவன் இங்க தான் எங்கேயாவது இருப்பான். என் கண் முன்னாடி வரட்டும் இழுத்து புடிச்சு நானே கட்டிக்கிறேன். ஓகே வா?” கண்சிமிட்டி நல்ல பிள்ளை போல் சொன்னவள் அலைபேசியில் அலுவலக அழைப்பு வரவும் வெளியே சென்றாள்.
செல்லும் மகளை வருத்தத்துடன் பார்த்த பிரபா, “வயசு ஏறிட்டே போகுதுன்னு புரியுதா இல்லையா இவளுக்கு? இப்படி இருந்தா என்ன பண்றது?”
“அதான்மா எனக்கும் பயமா இருக்கு. இப்போவே முப்பது முடிஞ்சுது. நாம எதிர்பாக்குற மாதிரி வரன் வர்றது குறைஞ்சிடுச்சு. இதுல இப்படி கண்டிசன் போட்டா எப்படி?” கவலை கொண்ட சந்தியாவும் அமைதியாய் இருந்த வந்தனாவின் தோளில் இடித்தாள்.
“என்னடி அமைதியா இருக்க?”
“அக்கா சொல்ற மாதிரி அக்காக்கு பொறந்தவர் எங்க எப்படி இருக்காரோனு யோசிச்சிட்டு இருக்கேன்.”
“ச்சு போடி லூசு. அக்காவை சம்மதிக்க வைக்க வழி சொல்லுவேன்னு பாத்தா…”
“அது தெரிஞ்சிருந்தா என் வீட்டுக்காரர் கொண்டு வந்த பத்து பேர்ல யாராவது ஒருத்தரை செலெக்ட் பண்ணி மாமா போஸ்டிங் கொடுத்திருக்க மாட்டேனா?” நொடித்தாள் வந்தனா.
“இவ இப்படி சொல்லியே காலத்தை ஓட்டிருவாளோனு பயமா இருக்குடி.” என்ற பிரபாவை, “அக்கா சொல்ற மாதிரி அவர் எங்கேயோ எட்ட இருக்காரு போலமா. சீக்கிரம் நம்ம அக்காவை தேடி வந்துருவாரு பாரு.” என்று மகள்கள் ஏதோ சொல்லி சமாதானம் செய்தாலும் அவர்களுக்குள்ளும் உடன்பிறந்தவள் தனித்து நின்று விடுவாளோ என்ற ஐயம் இருக்கவே செய்தது. தற்காலிகமாக அதனை ஒதுக்கி வைத்துவிட்டு விடுமுறையை கழித்தனர்.
“வேந்தன்கிட்ட சொல்லிட்டியா முகிலு? காலையில பஸ் ஸ்டாண்டுல வந்து அழைச்சிக்குறேனு சொன்னானா?” ஊருக்கு செல்ல துணிகளை பையில் வைத்துக்கொண்டிருக்கும் மகன் அருகில் சென்று விசாரித்துக்கொண்டிருந்தார் கந்தசாமி.
“சொல்லிட்டேன் அப்பா. காலையில வந்துடுறேனு சொன்னான். அவன் ரூமுக்கு போய் ரெடி ஆகிட்டு மீட்டிங் கிளம்பிடுவேன்.”
“சரி சரி பாத்து போ முகிலு.” எனும் போதே கொலுசொலி ஓசை அவர்கள் கவனத்தை வாசல் நோக்கி திருப்பியது.
“அத்தான் இதை அண்ணாகிட்ட கொடுத்துடு.” என்று ஒரு பையை நீட்டிக்கொண்டு வந்தாள் வள்ளி.
கேள்வி கேட்காமல் அதனை வாங்கி வைத்துக்கொண்ட முகிலை முறைத்தபடி வந்த மாரியம்மாள், “என்னத்துக்கு அவனுக்கு சுமை ஏத்துற? அப்படி தலை போற பொருளா என்ன?” என்று கேட்டுக்கொண்டே அந்த பையை பிரித்துப் பார்த்தார். இரண்டு பாட்டில்களில் ஊறுகாயும் ஏதோ பொடியும் இருந்தது.
“அங்க பொடி எல்லாம் தீந்துடுச்சாம் அதான் அம்மா குடுத்துவிட்டுச்சு அத்தை. அத்தானும் அங்கதான போறாங்க.” பார்வை மாமன் மகன் மீது படிந்து மீண்டாலும் பதில் மாரியம்மாளிடம் சேர்ந்தது.
“இது கிடைக்காமத்தான் அவன் அங்க வேலை பாக்குறானாக்கும்.” முகத்தை வெட்டிய மாரியம்மாள், “இந்த ஊறுகா பாட்டிலை பையில வச்சி கொண்டுட்டு போனா இவன் துணியெல்லாம் என்ன ஆகுறது? கூறில்லாம உன் அம்மா கொடுத்தா நீயும் எடுத்துட்டு வந்திருக்க… எம்புட்டு எண்ணெய்… பையில கொட்டுனா மொத்தமும் பாழா போயிடும்.” என்று சொல்லிக்கொண்டே அந்த பையை வள்ளியிடம் நீட்ட,
“ம்மா நான் தனியா எடுத்துட்டு போயிப்பேன். குடு.” என்று அதனை வாங்கப்பார்த்தான் முகிலன்.
“உனக்கொன்னும் தெரியாது. இப்படியும் அப்படியும் ஆடி ஆடி பஸ் போற வேகத்துல எல்லாம் சிந்தி ஈஷிடும்.”
“ஏய் மாரி அதான் முகிலு பத்திரமா எடுத்துட்டு போறேன்னு சொல்றான்ல. அவனுக்கு தெரியாதா…” என்று அந்த பையை பிடுங்கி மகனிடம் கொடுத்த கந்தசாமி,
“இந்த நேரத்துல நீ எதுக்கு தனியா வந்த பாப்பா. வா நான் வீட்டுல விடுறேன்.” என்று வள்ளியிடம் திரும்பினார். நேரம் அப்போதே இரவு ஒன்பதாகியிருந்தது.
“அப்பா டவுனுக்கு போயிருக்காரு. வர நேரமாகும் போல… அத்தான் கிளம்புறதுக்குள்ள வரணுமேன்னு நானே வந்துட்டேன்.” என்று காரணம் சொன்னவள் காரணமின்றி மனம் நிறைத்தவனை பார்த்து வைத்தாள்.
அவள் பார்வை வீச்சு அவனுள் குறுகுறுப்பு மூட்ட, தொண்டையை செருமி சமன்செய்ய முயன்றவன் பெற்றவர்களை பார்த்து, “சரி நான் கிளம்புறேன். ரெண்டு பேரும் சண்டை போடாம இருங்க.” என்றபடியே பையை முதுகில் மாட்டிக்கொண்டு வள்ளி கொடுத்த பையினை கையில் எடுத்துக்கொள்ள, மாரியம்மாள் முகம் மாரியாத்தா குடியேறியது போல் உக்கிரமாகியது.
‘இந்த குடும்பத்துக்கே என்னையும் என் புள்ளையையும் வேலை வாங்கலின்னா பொழுது சாயாது.’ கரித்துக்கொண்டே வள்ளியைப் பார்த்தார்.
“வா பாப்பா…” என்று கந்தசாமி முன்னே நடக்க,
“அத்தான் டவுனுக்கு போனுமே. நீங்க அவங்களை பஸ் ஏத்திவிட போங்க மாமா நான் போயிப்பேன்.” என்றவளை மறுத்தனர் அப்பாவும் பிள்ளையும்.
உடனே பையை கழற்றிய முகிலனோ, “எனக்கு இன்னும் நேரம் இருக்கு. நீங்க வள்ளியை வீட்ல விட்டுட்டு வாங்க அப்பா. நாம பொறுமையா போயிக்கலாம்.” என்ற மகனிடம் நகரத்தில் பேருந்து எத்தனை மணிக்கு என்று கேட்டுக்கொண்டு வள்ளியோடு கிளம்பினார் கந்தசாமி.
“வயசு பொண்ணை பொறுப்பில்லாம இப்படித்தான் ராத்திரில தனியா அனுப்புவாளா உன் அத்தைக்காரி. இப்போ அவளை விடணும்னு உன் அப்பா போயாச்சு, உனக்குதான் நேரமாவுது.”
“நம்ம ஊர்ல என்ன பயம்? அப்படி ஒன்னும் நேரமாகிடல.” என்றவன் அலைபேசியை பார்த்துக்கொண்டே அமர்ந்துவிட்டான்.
“உன் அப்பா பாப்பா பாப்பானு அவளை கொஞ்சிகிட்டு கிடக்குறதால பாப்பா ஆகிட மாட்டா அவ. காலேஜ் முடிக்கப்போறா ஊரு வாய்க்கு அவல் கொடுக்காம தள்ளி இருந்துக்க.” அடிக்கண்ணில் மகனை நோட்டம் விட்டபடியே போகிற போக்கில் சொல்லிச் சென்றார் மாரியம்மாள். முகிலன் அதனை காதில் வாங்கிக்கொண்டது போல் காட்டிக்கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் கந்தசாமி வரவும் வீட்டினில் சொல்லிக்கொண்டு கிளம்பினான் முகிலன்.
படுக்கையுடன் கூடிய அப்பேருந்தில் கண்ணயர்ந்த அவன் கனவுகளில் உத்தியோகத்தில் கிடைக்கப்போகும் உயர்வு குறித்தும் அதனைத்தொட்டு மேம்படப்போகும் வாழ்வு குறித்தும் மகிழ்வு பொங்கியது. ஊதியம் பெருகியதும் சில மாதங்களில் இடம் வாங்கி பதிவு செய்த கையோடு வீடு கட்ட துவங்கிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். இனி வாழ்வில் ஏறுமுகம் தான் என்று நெஞ்சம் களிப்பில் விம்ம அதன் தொடர்ச்சி மாநிலத்தின் தலைநகரில் இறங்கும் வரை நீடித்தது.
“என்ன அத்தான் நைட் செம்ம தூக்கம் போல. ப்ரைட்டா இருக்கீங்க!” அவனை அழைக்க வந்த அத்தை மகன் வேந்தன் கவனித்து கேட்டதற்கு அவன் இதழ்கள் தாராளமாய் விரிந்தது.
“உங்களுக்கு இங்க செட் ஆகலைனு தான் ஊர்லையே செட்டில் ஆனீங்க. இப்போ அப்படி இல்லையோ?” வேந்தன் கேட்க,
“எல்லாம் அப்படியே தான் இருக்கு. எனக்கு இங்க செட் ஆகாது. ரெண்டு நாள்ல கிளம்பிடுவேன்.” என்று சொல்லிக்கொண்டே வேந்தனின் பின் அமர்ந்தான் முகிலன்.
“அந்த பையை குடுங்க, முன்னாடி மாட்டிக்குறேன்.” அவன் கையில் இருந்த பையை கேட்க,
“நீ இப்படி அப்படி வண்டியை திருப்பும் போது ஊறுகாயிலேந்து எண்ணெய் சிந்தி வழியும். நான் பத்திரமா நடுவுல வச்சிக்குறேன்.” என வேந்தனுக்கும் தனக்கும் இடையே வைத்தவன்தான் ஒரு வளைவில் வேந்தன் வண்டியை திருப்பிய போது கல் இடறி தடுமாறிய வண்டியிலிருந்து தன்னை நிலைப்படுத்த வேண்டி அதனை பொத்தென்று போட்டிருந்தான். எண்ணெய் சிந்தக்கூடாது என்று பொத்தி வைத்திருந்த மொத்தமும் வேந்தன் மோதிய வண்டியிலிருந்தவள் மீது கொட்டி சிதறியிருந்தது. ஐயோ என்று நெற்றியில் கை வைத்தவனின் இலகுவான மனநிலை தொலைந்து போனது.
error: Content is protected !!