Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

04. சிவப்பிரியா - மின்மினி முத்தங்கள்

மின்மினி முத்தங்கள் – 4.2

சட்டென வீடு அமைதியானது போல் இருக்க தங்கையை பார்த்த குழலி, “உன் ஆளு எப்போ வர்றாருடி?” 

“ஒருவழியா ஆறு மாசமா போட்ட ட்ரிப் பிளானை சக்சஸ் பண்ணிட்டாங்க. கேரளாவுலேந்து வந்துட்டே இருக்காரு.”

“அப்போ இன்னைக்கு இங்கதான?” ஆர்வமாய் வந்ததது குழலியின் கேள்வி.

ஆமாம் என்று கண்சிமிட்டிய வந்தனா சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க மீண்டும் கல்யாண பேச்சை துவங்கினார் பிரபா.



Advertisement

“மாப்பிள்ளை என்ன சொல்லிட்டு போறாரு பாத்தீல்ல? உனக்கும் அவருக்கும் ஒரே வயசுடி. ஆத்யாவுக்கே இப்போ மூணு ஆகிடுச்சு.” ஆதங்கத்துடன் சொல்ல, பெருமூச்சு குழலியிடம்.

“அவர் சொல்றாருங்குறதுக்காக எல்லாம் இறங்கி வர முடியாதுமா. இப்படி இருக்குறவர் தான் பொண்ணுங்க ஹாஸ்டலா இருக்குனு இங்க தங்கவே மாட்டேங்கிறாரு. வீட்டுக்கு வரலைன்னு இவளை கேட்டுட்டு போறவரு விஷேஷ நாள் தவிர்த்து ஒருநாளும் நம்மள அவர் வீட்டுக்கு வான்னு கூப்பிட்டதுல்ல. அவர் கூப்பிடணும்னு இல்லை நாம சந்தியாவுக்காக போகத்தான் போறோம். ஆனா நாளைக்கே தேவைன்னா அக்கறையா வருவாரே தவிர உரிமையா இருக்க மாட்டாருமா. முன்ன நின்னு எடுத்துப் போட்டு எல்லாம் பாக்க மாட்டாரு. அவர் அம்மா இப்போ தேறிட்டாலும் அவங்களை கவனிக்கன்னு அங்கேயே இருப்பாரு இல்லையா இங்க வந்தாலும் ஒரு விலகளும் வீட்டு மாப்பிள்ளைங்குற மிதப்பும் அவர்கிட்ட இருக்கும். யாரை நம்பி நான் எல்லாத்துக்கும் தலையாட்டுறது?”

“அக்கா?” நான் இல்லையா என்று வந்தனா பார்க்க, புரிந்துக்கொண்டவள், 

Advertisement

“சொல்றேன்னு கோச்சிக்காதடி. கல்யாணம் ஆகி ஆறு மாசத்துலேயே குழந்தைனு முணுமுணுத்தாங்க உன் மாமியார். நம்ம வீட்டு பக்கத்துல இருக்குற ஹாஸ்பிட்டல்ல நல்ல ட்ரீட்மெண்ட் கொடுக்குறதால உன்னை எதுவும் சொல்லாம இங்க அனுப்பி வச்சிட்டு இருக்காங்க. அவங்க இப்படியே இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. உன் கொழுந்தனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல, நாளைக்கு வரப்போற பொண்ணு எப்படி இருக்கும் உங்க பேமிலி ஈக்வேஷன் எப்படி மாறும்னு தெரியல. அங்கேயும் பாத்து முன்ன நிக்கணும் நீ.

Advertisement

சந்தியா வீட்டுக்காரர் மாதிரி இல்லாம உன் வீட்டுக்காரர் எல்லாத்தையும் உரிமையோட செஞ்சாலும் அதை உள்ளன்போட ஏத்துக்க ரிஷி ரெடியா இருக்கனும். மூத்தவன் நான் இருக்கிறப்போ நீ என்ன துள்ளுறதுனு முகம் காட்டாம இருக்கணும். அவர் இருந்தாலும் சுத்தி உள்ளவங்க தூண்டிவிடாம இருக்கனும். அவர் குணத்துக்கு உன் வீட்டுக்காரர் கூட ஈகோ பாக்காம பேச கொள்ளன்னு இருக்குறதே போதுன்னு தான் இருக்கு எனக்கு.”

“ரிஷி மாமா எப்படியும் நினைச்சிட்டு போட்டும் க்கா. அதுக்காக உனக்குன்னு வர்ற வாழ்க்கையை ஏன் தள்ளிப்போடணும்?”

பெருமூச்செடுத்தவள், “அப்படி யோசிச்சிருந்தா சந்தியா லவ்ன்னு வந்து நின்னப்போவும் சரி அவ மாமியார் சீரியஸா இருக்காங்க உடனே கல்யாணம் வைக்கணும்னு சொன்னப்போவும் சரி முடியாதுனு நான் நின்னிருப்பேன். என் இடத்துல உங்களுக்கு ஒரு அண்ணன் இருந்திருந்து இதையே செஞ்சிருந்தா இப்படி கேள்வி வந்திருக்காதுல… அது அவனோட கடமைனு எல்லாரும் ஈஸியா எடுத்திருந்திருப்பீங்க.” என்றவளிடம் பேசி வெற்றி பெற முடியாதவளாய் எழுந்து சென்றுவிட்டாள் வந்தனா.

Advertisement

பிரபா அவளையே பார்க்க, “எனக்கு டையர்ட் ஆகுதுமா நீங்கெல்லாம் இப்படி பேசுறது.” 

“கேக்குறவங்களுக்கு பதில் சொல்லி, மாப்பிள்ளைங்களை சமாளிச்சு, மூத்த பொண்ணு பொன் வாத்தா இருக்குறதலால் அம்மாகாரிக்கு கட்டிக்கொடுக்க மனசு வரலைன்னு பேச்சு வாங்கி வாங்கி எனக்கும்தான் டயர்டா இருக்கு குழலி.” என்று அவரும் எழுந்து சென்றுவிட்டார்.

பேரானந்தமாய் சென்ற மூன்று நாட்களும் நிறைவுபெற்று நாளை வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே சோர்வாய் இருக்கையில் இப்படி நாளின் முடிவில் அனைவரின் மனமும் தளர்ந்து போனதை விரும்பவில்லை குழலி. விளைவு சாதக பாதகங்களை யோசித்து ஒரு முடிவிற்கு வந்திருந்தாள் கணேஷ் பேசிச் சென்றதும்.

குழு சந்திப்பு முடிந்து நிறுவனம் சார்பில் சிறிய பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்திருக்க, ஆர்பரிப்புடன் கலந்துகொண்டான் முகிலன். மாநிலம் முழுவதுமிருக்கும் கிளைகளிலிருந்து மேலாளர், துணை மேலாளர், மண்டல நிர்வாகிகள் என மூத்த முக்கிய பிரமுகர்கள் வந்திருக்க, அவர்களின் அறிமுகம் கிடைத்தது அவனது தன்னம்பிக்கையை உயர்த்தியிருந்தது. பதவி உயர்வு சீக்கிரம் கிட்டும் என்று சிலர் சொல்லியிருக்க, இறக்கையில்லாமல் பறந்தான். வேறு சிலரோ தற்சமயம் இருக்கும் நகரை விட சற்று வளர்ந்து டையர் முதல் மற்றும் இரண்டாம் தரவரிசையில் இருக்குமிடங்களில் மாறிக்கொண்டால் சம்பள உயர்வோடு ஊக்கத்தொகைகள் அதிகம் கிடைக்கும் என்றும்  அவனை குழப்பி இருந்தனர். எப்படி இருந்தாலும் எதிர்பார்த்த அளவு வருமானம் வரவழைத்துக்கொள்ள ஏதுவான யோசனைகள் அதிகம் கிட்டியதை நேர்மறையாகப் பார்த்தான். 

“கஞ்சத்தனம் இல்லாம இந்த மாதிரி வருஷத்துக்கு ஒரு நாலு பார்ட்டி வச்சா போதும். இதையே வகேஷனா மாத்திடுவேன்.” வேறு கிளையில் இருக்கும் ஒருவர் அவனிடம் வந்து பேச்சுக் கொடுக்க, புன்சிரிப்புடன் பார்த்து நின்றான் முகிலன்.

கையிலிருந்த கோப்பையை ஒரே சரிப்பில் தொண்டைக்குள் இறக்கியவர், “இந்த மாதிரி சரக்கு எல்லாம் நம்ம பட்ஜெட்ல வராது. இப்படி வாய்ப்பு கிடைக்கும் போது யூஸ் பண்ணிக்கணும்.” என்று அவனையும் ஊக்குவிக்க, சூசகமாக மறுத்தான் முகிலன். 

“குடிக்கலைனாலும் குடிக்குற மாதிரி ஆக்ட் பண்ணா அதோ பாரு வைஸ் பிரசிடெண்ட் அவர் மாதிரி ஆளுங்க கூட நட்பு கிடைக்கும். இந்த க்ளாஸ் இருக்குல்ல இது தன்னால பெரியாளுங்ககிட்ட இழுத்துட்டு போயிடும். இதெல்லாம் ஒரு வாய்ப்பு, சும்மா ஒன்னும் இவனுங்க பார்ட்டி வைக்கல நமக்கு.” என்று யோசனை கொடுக்க, இவனின் நெற்றி சுருங்கியது யோசனையில். 

“உன் மேனேஜர் வர முடியாத சூழல்ல மாட்டிக்கிட்டதால உனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. யூஸ் பண்ணிக்கோ.” என்று நகர, சொத்தென்று ஆனது அவனுக்கு.

இந்த சந்திப்பிற்கு அவனது மேலாளருக்கு தான் அழைப்பு. கடைசி நேரத்தில் அவரின் நெருங்கிய உறவினர் இறப்பிற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தால் மேலிடத்தில் பேசி இவனுக்கு அந்த வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருந்தார். அதனை சரியாக பயன்படுத்திகொள்வது அவன் கையில். சில நொடிகள் யோசனைக்கு பின் மதுபானங்கள் வழங்குமிடம் சென்று தனக்கொன்று வாங்கிக்கொண்டான். இதுவரை குடித்ததில்லை குடிக்கும் எண்ணமும் உந்துதலும் இல்லை. அவர் சொன்னது போல் பாவ்லா செய்து இடத்திற்கு தக்கன போல் காட்டிக்கொள்ளலாம் என்று மிடறு அருந்துபவன் போல் வாயில் வைக்கவும் அங்கு வந்த சிலர் தன்னால் பேச்சு கொடுத்தனர். கப்பென்று பிடித்துக்கொண்டவன் பேச்சு சுவாரஸ்யத்தில் சிறிது பானம் அருந்திவிட்டான். அதற்கே அதன் சுவை உமட்டுவது போல் இருந்தது. சூழ்நிலை கருதி அதனை வெளிக்காட்ட முடியாமல் திணறி அதனை மீண்டும் உள்ளே தள்ளினான்.      

‘என்ன கொடுமைடா இது. எப்படி இதை மூக்கு முட்ட குடிச்சிட்டு இருக்காங்க?’ என்று நினைத்துக்கொண்டவன் அதன்பின் கவனமாக அதனை தவிர்க்கப் பார்த்தான். எங்கே முடிந்தது. வட்டார மேலாளருக்கு மேலாளராய் தலைமை பதவியில் வகிப்பவர் அவனிடம் பேசும் சமயம் அவரின் வற்புறுத்தலின் பேரில் வேறு ஒரு வகையான மதுபானத்தை சுவைக்க நேர்ந்தது. அந்த சுவை முன்பு போல் இல்லாதிருக்க, சற்று அதிகமாகவே உள்ளே சென்றுவிட்டது. 

கணம் குறைந்து உடல் இலகுவாகியது. தலை கிறுகிறுத்து மோன நிலையில் இருந்தான். சுற்றத்தார் பேசுவதெல்லாம் புரிந்தாலும் கருத்தில் பதியவில்லை. வெளித்தோற்றத்தில் லேசாக மாற்றம் தொனிக்க, தடுமாறும் நிலைக்கு சென்றுவிடுவோம் என்று பயந்தவன் சுதாரித்து மெல்ல அங்கிருந்து நழுவி வெளியே வந்து வேந்தனுக்கு அழைத்தான். அவன் தங்குமிடத்திற்கு ரேபிடோவில் வண்டி போட்டுவிட சேதாரமின்றி சேருமிடம் சேர்ந்துவிட்டான்.

“பிரெண்டை பாக்க போய் டிராபிக்ல மாட்டிகிட்டேன், அதான் ரேபிடோ போட்டு விட்டேன் அத்தான்.” உடை மாற்றி முகம் கழுவி வந்தவனை பார்த்து உள்ளே நுழைந்த வேந்தன் சொல்ல, லேசாக தலையசைத்த முகிலனின் முகத்தினில் இருந்த வேற்றுமையை கண்டுகொண்டான்.

“எதுவும் முடியலையா அத்தான்?” 

“ஒண்ணுமில்லை.” அவன் முகம் பாராது மெல்லிய குரலில் முகிலன் பதில் கொடுக்க, வேந்தனுக்கு யோசனையாகிப்போனது. எதுவோ சரியில்லை என்பது மட்டும் புரிய முகிலனாக சொல்லட்டும் என்று குளிக்க சென்றுவிட்டான். 

‘அவன் வர்றதுக்கு முன்னாடி படுத்துடனும்.’ என்று பாயை விரித்துப் படுத்த முகிலன் தன் உடலில் ஏற்படும் மாற்றங்களை கிரகிக்க முயன்று கொண்டிருந்தான். 

“என்ன அதுக்குள்ள படுத்துடீங்க? அங்க சாப்பிட்டீங்களா? என்ன மெனு?” 

“ம்ம் நீ பாரு. எனக்கு தூக்கம் வருது.” கொட்டாவி விட்டபடி அவனுக்கு முதுகு காட்டி திரும்பிவிட்டான் முகிலன். 

சந்தேகமாக அவனை பார்த்துக்கொண்டு தனக்கான இரவு உணவு செய்து சாப்பிடும் நேரம் முகிலனிடம் அசவுகரியமான அசைவு. யோசனையுடன் அருகில் சென்று அவனை எழுப்பிப் பார்க்க, குமட்டுகிறது வயிறு சரியில்லை என்றான் முகிலன். 

“டாக்டர்கிட்ட போகலாம் அத்தான்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே பட்டென்று எழுந்தவன் குளியறை நோக்கி ஓடும் சமயமே ஓங்கரித்து வாந்தி எடுத்துவிட்டான். மேலே கொஞ்சம் தரையில் கொஞ்சம் என்று அவன் உள்இறக்கிய பானம் வெளியேறியிருந்தது. அதிர்ந்து நின்ற வேந்தன் சுதாரித்துக்கொண்டு முகிலனுக்கு உதவி அவனை ஓரமாக அமரவைத்துவிட்டு ஆயாசத்துடன் வீட்டினை சுத்தம் செய்தான். 

“என்னத்தை அப்படி சாப்பிட்டீங்க அத்தான்? இப்படி கப் அடிக்குது?” என்றவனுக்கே உமட்டுவது போலிருக்க, கதவுகளை திறந்து வைத்தான். வெளிக்காற்று உள்ளே வரவும் சுவாசம் சீர்பட்டது. 

“நல்ல வேலை மத்த ரெண்டு பேரும் அவங்கவங்க வேலையை பார்த்துட்டு போயிட்டாங்க. இல்லைனா கஷ்டம்.” என்ற வேந்தன் தங்கியிருப்பது ஒரு சமையலறை மற்றும் படுக்கையறை கொண்ட வீடு. அவனோடு சேர்ந்து இன்னும் இருவர் தங்கியிருக்க, ஒருவன் வெளியூரில், ஒருவன் வாரயிறுதி இரவுப் பணியில்.  

ஆசுவாசமாக மூச்சுவிட்டு பெரியதாக ஏப்பம் விட்ட முகிலன் நெற்றியை தேய்த்துவிட்டுக்கொண்டான்.

“ஏதாவது குடிக்குறீங்களா அத்தான்?” என்ற வேந்தன் மிதமான சூட்டில் தண்ணீர் எடுத்துவந்து கொடுக்க, வேந்தனின் அலைபேசி அலறியது.

அவன் தங்கை அழைத்திருந்தாள். உடனே ஏற்றவன், “வீடியோ கால் எல்லாம் வருதே. என்ன விஷயம் மேடம்? சிபாரிசு தேவைப்படுதோ?” என்றுதான் துவங்கினான் வேந்தன். 

“யாருக்கு வேணும் இவர் சிபாரிசு. நான் வேணும்னு சொன்னா எனக்கு வாங்கிக்கொடுக்க நிறைய பேர் இருக்காங்க.” என்று பந்தாவாக பேசியவளின் விழிகள் அலைபாய்ந்தது.

“வள்ளி?”

“ம்ம்… பொடி, ஊறுகாய் எல்லாம் கொடுத்து விட்டுச்சே அங்க சிந்தாம வந்து சேர்ந்துச்சா என்னனு ஒன்னும் சொல்லலையேன்னு கேக்க சொல்லுச்சு அம்மா.” 

“சென்னை வரைக்கும் பத்திரமா வந்துச்சு அதுக்கப்புறம்…” என்று நக்கலாக இழுத்தவன் நடந்த கூத்தினை விவரிக்க, அச்சோ என்று விரிந்தது அவள் விழிகள்.

“உங்களுக்கு அடி இல்லைல? பாத்து ஓட்டமாட்டியா வண்டியை?” படபடத்தவளின் விழிகள் அவனையும் தாண்டிச் சென்றது.

“அடியெல்லாம் இல்லை. எதிர்ல வந்தவங்களுக்கு லேசா சிராய்ச்சிருக்கும்னு நினைக்குறேன். பெருசா இல்லை.” என்றதும் ஆசுவாசமடைந்தவள், 

“அத்தான் எங்க? சாப்பிட்டீங்களா?” தேடிக்களைத்து வாய்விட்டு கேட்டுவிட, வேந்தனும் தன்னைப்போல் முகிலனைப் பார்த்து, “பார்ட்டி போய்ட்டு வந்தாங்க, அங்கேயே சாப்பிட்டு வந்திருப்பாங்கனு நினைக்குறேன். ஆனா ஒத்துக்கலை, வாந்தி எடுத்துட்டு உக்காந்திருக்காங்க.” என்று சொன்னதுதான் தாமதம் பதட்டமாகிவிட்டாள் வள்ளி.

“வாந்தியா? ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனியா? என்ன சாப்பிட்டாங்களாம்? இன்னைக்கு ஞாயித்துகிழமை உனக்கு லீவ் தான, வீட்லையே சமைச்சி போட்டிருக்கலாம்ல? எதுக்கு வெளில சாப்பிட விட்ட?” என்றவளை வேந்தன் யோசனையுடன் பார்க்க, சுதாரித்தவள், “நம்ம இடத்துக்கு வந்தா நாமதான பாத்து செய்யணும். இப்போ எப்படி இருக்காங்க? கஞ்சி வச்சிக்குடு.” பரிதவிப்புடன் வந்தது குரல். 

“ஹான் நான் பாத்துக்குறேன் வள்ளி…”

“ம்க்கும் நல்லா பாத்த… காலையில ஆக்சிடென்ட் நைட் வாந்தி… நீ அத்தான்கிட்ட போன் குடு.” என்ற வள்ளியின் அதட்டலுக்கு வேந்தனின் எதிரே அமர்ந்திருந்த முகிலன் பட்டென நிமிர்ந்து மறுப்பாய் தலையசைத்தான்.   

“தூங்குறாரு வள்ளி.” வேந்தன் சமாளிக்க, வள்ளியின் முகத்தில் தவிப்பின் சாயல். 

“இதோட எப்படி நாளைக்கு ஊருக்கு வருவாங்க?”

“அதுக்குள்ள சரியாகிடும். புட் பாய்சனா இருக்கும். நான் பாத்துக்குறேன். நீ தூங்கு.” அதற்கு மேல் அவளுக்கு பேச வாய்ப்பளிக்காமல் அழைப்பை துண்டித்தவன் முகிலனை அழுத்தமாக பார்த்தான்.

கண்களை மூடிய முகிலன் சோர்வாய் சுவரில் சாய்ந்தமர, “குடிச்சீங்களா அத்தான்?” என்ற வேந்தனின் கேள்வியில் மின்சாரம் தாக்கியது போல் நிமிர்ந்தமர்ந்தான்.

“கண்ணெல்லாம் சிவந்திருக்கு, கன்னம் உப்பியிருக்கு, வயிறு பிரட்டல், வாந்தி, வள்ளிகிட்ட பேச மறுத்தது எல்லாம் அதைத்தான் சொல்லுது. நீங்க இப்படினு நம்பவே முடியல அத்தான். உங்களை என்னவோன்னு நினைச்சேன்.” 

“ப்ச்… ஏன்தான் இந்த கருமத்தை குடிச்சோம்னு இருக்கு. இதுல நீ வேற ஏன்டா.” என்று சோர்வுடன் நடந்ததை விவரிக்க,

“யாரும் எதுவும் சொல்லட்டும் நீங்க ஸ்ட்ராங்கா இருந்திருக்கணும். ப்ச் எனக்கு இதுல எல்லாம் உடன்பாடில்லை. வள்ளிக்கும் தான்.” மீண்டும் விழுக்கென்று கழுத்தை உயர்த்தி வேந்தனைப் பார்த்தான் முகிலன்.

“என்ன பாக்குறீங்க? என்னைக்கும் இல்லாம இன்னைக்கு வீடியோ கால் பண்றா. எல்லாம் யாருக்காகவாம்?” 

“…”

“நீங்க என்ன நினைக்குறீங்கன்னு தெரியல. உங்க மனசுல என்ன யோசனை ஓடுதுனு புரியல. ஆனா என் தங்கச்சியும் உங்கம்மாவும் என்ன நினைக்குறாங்கனு எனக்கு நல்லாவே தெரியும். யார் மனசும் நோகாம பாத்துக்கோங்கனு சொல்ல ஆசைதான். ஆனா அப்படி நடக்குறதும் நடக்காததும் உங்க கையில தான் இருக்கு அத்தான். இதோ இப்போ ஏதோ ஒரு உந்துதல்ல குடிச்சிட்டு வள்ளி முகத்தை பாக்க சங்கடப்படுறீங்க. இனி ஒருதரம் இப்படி ஆகாம பாத்துக்கோங்க.” என்றவன் என்ன தேவையென்றாலும் எழுப்பச் சொல்லி படுத்துவிட, என்ன சொல்ல வருகிறான் இவன் என்று அந்நேரத்தில் தெளிவின்றி குழம்பி விழித்தான் முகிலன். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!