Skip to content
Post Views: 2,866
*5*
சென்னை பயணம் முடித்து வந்தும் ஊருக்குள் குழப்பத்துடன் சுற்றிக்கொண்டிருந்தான் முகிலன். ஏதோ வேலை களைப்பு என்று நினைத்துக்கொண்டனர் பெற்றவர்கள். அவன் உடல்நிலைக் குறித்த யோசனையில் அவனைக் காண இருமுறை வந்த வள்ளிக்கும் வேறுபாடு தெரிய, வாய்விட்டு கேட்க முடியாமல் யோசனையுடன் சுற்றிக்கொண்டிருந்தாள். அன்றும் அம்மா செய்து கொடுத்துவிட்டார் என்று ஒரு பாத்திரத்தை தூக்கிக்கொண்டு வந்திருந்தாள். என்றாவது இப்படி சற்று கூடுதல் கவனம் எடுத்து சமைத்தால் தன் அண்ணனான கந்தசாமியிடம் கொடுத்துவிடுவார் வள்ளியின் அம்மா. இன்று வீட்டில் இருந்த வள்ளி தானாக அதனை கேட்டு வாங்கிக்கொண்டு வந்திருந்தாள்.
எப்போதும் வாரத்தில் அன்றைய தினம் விடுமுறை முகிலனுக்கு. அதனை கணக்கு செய்து வந்திருந்தவள் பார்வை வீட்டினை சுற்றி சுற்றி வந்தது.
“இன்னைக்கு வயலுக்கு போகலையா அத்தை?” வரவேற்பாய் அவர் இதழ்கள் வளைந்ததோ என சந்தேகம் கொள்ளும் விதமாய் எதிர்வந்த மாரியம்மாளிடன் கேள்வி எழுப்பி நிற்க,
Advertisement
“முகிலு வீட்ல இருக்கிறப்போ என்னைக்கு நான் வெளிய போயிருக்கேன்? காலேஜ் இல்லையா உனக்கு? இந்த நேரம் வந்திருக்க?” கேள்வி விசாரிப்பாய் வந்தாலும் அவர் உள்ளுணர்வு விழிப்பாய் அவளின் அசைவுகளை கவனித்துக் கொண்டே இருந்தது. அவள் பார்வை அலைப்புறுதலை கவனித்துவிட்டவர் மனம் கொழுந்துவிடத் துவங்க, வார்த்தை தடித்து விழும்முன் வந்துவிட்டான் முகிலன்.
“இன்னைக்கு காலேஜ் இல்லையா உனக்கு?” உறங்கியிருப்பான் போல கண்களை தேய்த்துக்கொண்டே அறையிலிருந்து வந்தவன் சிகை அலை அலையாய் அங்குமிங்குமாய் சிலுப்பி நின்றது. கள்ளமாய் இரசித்துப் பார்ப்பதாய் நினைத்துக்கொண்ட வள்ளியின் பளிச்சிட்ட விழிகளை தப்பாமல் கவனித்துவிட்டது மாரியம்மாள் விழிகள்.
“கொண்டா இப்படி. இங்க ஒன்னுமில்லாம கிடக்கோம்னு அங்க இருக்குறதை டப்பி கட்டி தூக்கிட்டு வந்தியாக்கும்.” நேரடியாய் எதுவும் சொல்ல முடியாமல் வெடுக்கென்று வள்ளி கையிலிருந்ததை பிடுங்கினார் மாரியம்மாள். பாத்திரம் இழுபட்டதில் அன்னிச்சையாய் வள்ளி முனகிவிட,
Advertisement
“ம்மா மெல்ல…” என்றான் முகிலன்.
Advertisement
அங்க இழுத்தா இங்க வலிக்குதா என்று மகனை தீப்பார்வை பார்த்தவர் அவனை குளிக்கச் சொல்லி விரட்டினார். வள்ளியின் வரவை அவர் விரும்பவில்லை என்பது புரிய, காரணமின்றி சுணங்கி தெளிந்த மனதுடன் முகத்தை அழுந்தத் துடைத்தவன், “தலை வலிக்குற மாதிரி இருக்கு காபி போட்டு குடும்மா.”
தன்னை இங்கிருந்து நகர்த்தப் பார்க்கிறானோ என்ற சந்தேகம் எழுந்தாலும் விடுமுறை தினத்தில்தான் இப்படி காபி கேட்பதெல்லாம் மற்றைய தினங்களில் இருப்பதை உண்டுவிட்டு தனக்குத் தேவையானதை அவனே செய்துகொள்வான் என்பதால் ஒன்றும் சொல்ல முடியாமல் அவனை காக்க வைக்க மனமின்றி அடுப்பங்கரைக்கு விரைந்தார்.
“கொஞ்ச நாளாவே டல்லா இருக்கியே. என்னாச்சு அத்தான்?” அத்தை தலை மறைந்தததும் அத்தான் புறம் திரும்பிவிட்டாள் வள்ளி.
Advertisement
அவள் கேள்வியில் புருவம் உயர்த்தியவனோ, “அதை கேக்கத்தான் காலையிலேயே வந்தியாக்கும்?”
“கிண்டல் பண்ணாம சொல்லு.” என்ற சிணுங்கல் குரல் உரிமையாய் அவனைத் தீண்டி சுகமாய் உள்ளே இறங்கும் முன் அடுப்பங்கரையில் இருந்து மாரியம்மாளின் குரல்.
“உன்னைத்தான் கூப்பிடுறாங்க போ.” என்று அவளுக்கு வழிவிடுவது போல் முகிலன் நகர, ஏமாற்றமாய் அவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள் வள்ளி.
“இதுல நேத்தி சுட்ட ஓலபகோடா இருக்கு. வேணுங்குறதை எடுத்துட்டு போ.” என்று அவள் கொடுத்த டப்பாவிலிருந்ததை வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிட்டு ஒரு செம்படத்தை கை காட்ட, சுணங்கிக்கொண்டே தான் எடுத்து வந்த பாத்திரத்தை நிறைத்தாள்.
காபி போட்ட மாரியம்மாள் டபராவில் அதனை ஆற்றிக்கொண்டே கூடம் சென்று மகன் அருகில் அமர்ந்துகொள்ள, வள்ளிக்கு முகிலனை அணுகவே தயக்கமாய் இருந்தது. அவனது யோசனை படர்ந்த முகத்தில் அவ்வப்போது குழப்ப ரேகைகளும் குடிகொள்ள, கவனித்தவள் தான் பொறுக்கமாட்டாது இன்று வந்திருந்தாள்.
“என்ன யோசனை வள்ளி? கிளம்பிட்டியா அதுக்குள்ள?” என்று அவன் கேட்கவும் நின்றவள், ஆர்வமாய் திரும்ப மாரியம்மாள் முகம் பார்த்து சுதாரித்தாள்.
“அம்மா குடுத்து விட்டதை குடுக்கத்தான் வந்தேன் அத்தான். நான் வர்றேன்.” நெஞ்சு முட்ட அவனது குழப்பத்தை கேட்டறிந்து தீர்த்துவைக்க ஆசை இருந்தாலும் மாரியம்மாள் அமர்ந்து தன்னையே கவனிக்கும் விதத்தில் அசவுகரியமாய் உணர்ந்தாள். நாளை காலை அவன் வேலைக்கு செல்லும் நேரம் வழியில் வைத்து பேசிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தவளாய் அவள் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட, முகிலன் முகத்தை அழுந்த துடைத்தான்.
அவனை பார்த்துக்கொண்டே அலமாரியில் இருந்த தன் அலைபேசியிலிருந்து கணவருக்கு அழைத்தார். அழைப்பு ஏற்கப்பட்டது தான் தாமதம்,
“வயசு அறுவது தாண்டிடுச்சே அதுக்கேத்த கூறு இருக்க வேணாம்? மூணு வேலை வக்கனையும் நாலு காசும் இருந்தா போதுமா? நேரத்துக்கு தூங்குறது, உடன்பொறப்புக்கு சேவகம் செய்யுறது மட்டுந்தான் வேலைன்னு நினைச்சா எதுக்கு கல்யாணம் பண்ணனும்? புள்ளை பெக்கணும்? களை எடுத்து நாத்தை பிரிச்சி பாத்தி கட்டி தண்ணி ஊத்துறதோட உம்ம வேலை முடிஞ்சிதோ? சரியான நேரத்துல அறுவடை பண்ணலைனா அப்புறம் என்னத்துக்கு உழுவணுங்குறேன்? என்ன பேச்சையே காணோம்? நான் பேசுனா ஒரு ம் கொட்ட கூட வலிக்குதோ?” எதிராளி பேசவே இடமளிக்காமல் இவரே சத்தம் கூட்டி மடை திறந்தது போல் பேசிவிட்டு பதில் வரவில்லை என்று அதற்கும் சாட, முறைப்புடன் அவர் எதிரே வந்து நின்றார் கந்தசாமி.
‘மறுபடியும் பஞ்சாயத்தா? இப்போ எதுக்காம்?’ என்று சலிப்பாக பெற்றவர்களைப் பார்த்தான் முகிலன்.
“என்னத்துக்கு இப்போ கத்திக்கிட்டு கிடக்க? அதான் முகிலு வீட்ல இருக்கான்ல. அவனுக்கு புடிச்சதை செஞ்சி போட்டோமா அவன் நிம்மதியா தூங்கி எழன்னு அவனுக்கு ஒத்தாசை பண்ணோமானு இல்லாம காலையிலேயே ஏழரையை இழுத்துட்டு இருக்க? இதுல அவனை நிம்மதியா ரூம்ல படுக்க விடமாட்டேங்குறேன்னு என்னை கத்துற. இப்போ நீ என்ன பண்றியாம்?” தன் பங்குக்கு அவரும் எகிறினார்.
“ஒன்னு சொல்லிடக் கூடாது மொளுமொளுனு வந்துடுவீங்களே. புள்ளைக்கு முப்பது முடிஞ்சிடுச்சே அவனுக்கு ஒரு நல்லது பண்ணனுங்குற நினைப்பு இருக்குதா உங்களுக்கு?”
“நான் காமிக்குறதெல்லாம் இது நொட்டை அது நொட்டைனு விலக்கி அவனுக்கு நடக்க வேண்டியதை தள்ளிப்போடுறதே நீதான்.”
“இது நல்லாயிருக்கே கதை. என் புள்ளைக்கு ஏத்தவளா பாக்க வேணாமா. சும்மா யாரையோ எவளையோ புடிச்சி கட்டிவச்சிட முடியுமா?” என்று மாரியம்மாள் நீட்டி முழக்க, உள்ளுக்குள் அதிர்ந்தான் முகிலன்.
‘இப்போ எதுக்கு திடீர்னு வண்டி என் பக்கம் திரும்புது.’ என்று ஒருவித கலவரம் எழுந்தாலும் சாதுர்யமாய் அதனை மறைத்துக்கொண்டு,
“ம்மா இப்போ என்னாச்சுன்னு அவரை புடிச்சி கத்திட்டு இருக்க? நாந்தான் பொறுமையா பாக்கலாம்னு சொன்னேனே.”
“நீ சும்மா கிடடா. உனக்கு ஒன்னும் தெரியாது. அதது நடக்க வேண்டிய நேரத்துல நடத்திடனும். சும்மா வீடு வாசல்னு இழுத்துட்டு கிடந்தா உனக்கு ஒரு நல்லது எப்போ நடக்குறது? உன் விவரத்துக்கு விட்டா ஆகாதவங்க எல்லாம் இடத்தை புடிச்சிடுவாங்க. அதெல்லாம் நமக்கு தோதுப்படாது.” மனதில் வள்ளியை நினைத்துக்கொண்டு மகனை அடக்கியவர் கணவரிடம் திரும்பினார்.
“அவன்தான் கூறில்லாம பேசுறான் நீங்களும் கேட்டுட்டு அமைதியா இருக்கீங்க. காலாகாலத்துல பொண்ணை பாத்து வச்சு கட்டுடானு தாலி எடுத்து கொடுத்திருக்க வேண்டாமா? எல்லாத்தையும் நானே பாக்கணும். அப்படியே பாத்தாலும் அது சரியில்லை இது சரியில்லைன்னு வருவீங்க.” என்றவர் இன்னும் என்ன பேசியிருப்பாரோ தன் அலைபேசியை அவரிடம் நீட்டியவாறு,
“இந்தா புடி. இதுல அந்த வாட்சாப்ல நிறைய பொண்ணுங்களோட ஜாதகம், போட்டோ இருக்கு. நீயே பாத்துக்கோ. என்னமோ எனக்கு அவன் மேல அக்கறை இல்லாத மாதிரி பேசவேண்டியது. எனக்கு தோதுப்படும்னு தோன்ற வரனெல்லாம் நீ வேணாங்குவ. அப்படியே நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து போற மாதிரி வந்தாலும் இவன் தேஞ்ச ரெக்கார்டு மாதிரி வீடுங்குவான். அவனை விட்டுடு என்னை மட்டும் கேளு.” என்று பொங்கிய கந்தசாமியோ அதோடு நிற்காது சமீபமாய் வந்த ஒரு வரனின் புகைப்படத்தை காட்டி,
“இதோ இந்த பொண்ணு நம்ம முகிலுக்கு ஏத்த மாதிரி இருக்கு. எனக்கு சரினு தோணுது ஆனா நீ வேணாங்குவ.” என்கவும் அலைபேசியை கையில் வாங்கிப்பார்த்த மாரியம்மாள்,
“பொண்ணு பாக்க இலட்சணமா இருக்கா. இது மாதிரி கொண்டு வந்தா நான் ஏன் வேணாம்னு சொல்லப்போறேன்…” என்றவரை கைநீட்டி தடுத்த கந்தசாமி அந்த வரன் பற்றிய தகவல்களை எடுத்துக்காட்ட, அப்பெண்ணின் வயதை பார்த்த உடனேயே முகம் சுழித்தார் மாரியம்மாள்.
“உன் முகத்தை போய் கண்ணாடில பாரு. பொண்ணை நீ கட்டிட்டு வரப்போறியா இல்லை அவன் கட்டிட்டு வந்து குடும்பம் நடத்தப்போறானானே தெரியல. அவன்கிட்ட போறதுக்கு முன்னாடி நீயே எல்லாத்தையும் கழிச்சிடுற.” என்றவர் அந்த வரனின் புகைப்படத்தை மகனிடமும் காட்டினார்.
“நீயே பாரு இந்த பொண்ணுக்கு என்ன குறைச்சல்? உனக்கு ஏத்த மாதிரி இருக்கும் ஆனா வயசை காரணம் காட்டி வேணாங்குறா.” என்று தந்தை காட்டிய புகைப்படம் அவன் கருத்தில் எங்கு பதிந்தது. அவன் சிந்தனை எல்லாம் வேறு இடத்தில் சுற்றி வந்தது.
“என்ன குறையா? ரெண்டு பேருக்கும் ஒரே வயசு. இன்னும் ரெண்டு வருஷத்துல இவனுக்கு அக்கா மாதிரி ஆகிடும் அந்த பொண்ணு. அது மட்டுமா கூடப்பொறந்தவங்கன்னு இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க. அதுவும் பொம்பளை புள்ளைங்க. நாளைக்கே நம்ம புள்ளையை வளைச்சு போட்டு அவங்க வீட்டை பாக்க கூட்டிட்டு போயிட்டா நான் என்ன பண்ணுவேன்? தம்பிக்கு செய்யுறேன் தங்கச்சிக்கு செய்யுறேன்னு எல்லாத்தையும் குடுத்து நீங்க தேஞ்சது போதாதா இவனும் தேயனுமா?” என்று மாரியம்மாள் புலம்பவே ஆரம்பித்துவிட, அவருக்கு தெரியாமல் பெருமூச்சுவிட்டுக்கொண்டார் கந்தசாமி.
மனைவியிடம் சரிக்கு சரி வாயாடவென ஒரு பேச்சுக்கு அந்த வரனை மாரியம்மாளிடம் காட்டினார். மற்றபடி அப்பெண்ணே வீட்டோடு தங்கும் மாப்பிள்ளை வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பில் குறிப்பிட்டிருந்தது. நல்ல வேளையாக மனைவி அதனை கவனிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டார்.
வேறு சில வரன்களின் விவரங்களை பட்டியலிட்டவர், “நானும் பாத்துட்டு தான் இருக்கேன். இன்னும் இவனுக்கு நேரம் அமையலையா இருக்கும். இன்னைக்கு என்ன சாமி வந்துச்சுனு இந்த ஆடு ஆடுற?” என்று ஒருவாறு மனைவியை அடக்கிவிட்டார் கந்தசாமி.
என்னவோ வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டே முகத்தை முந்தானையால் துடைத்துக்கொண்டே அவர் நகரவும் மகனின் பக்கம் வந்து அமர்ந்தார் கந்தசாமி.
“உன் அம்மாவை ரொம்ப நாள் சமாளிக்க முடியாது முகிலு. சீக்கிரம் தயாராகிக்க.” என்று சொல்ல, சட்டென்று ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.
“ஹான் என்ன? என்னப்பா?”
“மனசுல எதையோ வச்சிகிட்டுதான் வீட்டை காரணம் காட்டி தள்ளிப்போடுற. அது என்னவா இருந்தாலும் சீக்கிரம் முடிச்சிட்டு கல்யாணத்துக்கு தயாராகு.”
“இல்லை என்ன சொல்றீங்க புரியல.” லேசான தடுமாற்றம் அவனிடம். என்ன சொல்ல வருகிறார் தந்தை. அப்படி எதற்காக தள்ளிப்போடுகிறேனாம்? அவனுக்கே தெளிவு கிடைக்காத, விளங்காத ஒன்றை அவர் விளங்கிக்கொண்டது போல் பேசவும் புருவம் சுருக்கினான் முகிலன்.
“கையில இருக்குற காசுல உடனே இடம் வாங்கிடலாம். ஆனா அதை செய்யாம இழுத்துட்டு இருக்க. எதுக்காம்?” என்று கேட்க, அதே கேள்வி திடுமென அவனுள் முளைத்தது.
உண்மைதானே? கையிருப்பை கொண்டு அவர்கள் ஊரிலேயே கணிசமான சதுரளவு கொண்ட இடத்தை வாங்கிப்போட முடியும். ஓரிரு முறை இடம் கூட பார்த்து வைத்திருந்தான். ஆனால் என்னவோ ஒன்று திருப்தியில்லாமல் அதனை வாங்கவிடாமால் தடுக்க, இன்னும் இன்னுமென்று எதையோ தேடிக்கொண்டும் சேமித்துக்கொண்டும் இருக்கிறான். மனம் ஒத்துழைக்காமல் எதற்கென்று இன்னமும் தெளிவுகிட்டாமல்தான் அவன் ஓட்டம் தொடர்கிறது. ஆனால் தந்தை தெரிந்தது போல் பேசுகிறாரே என்று பார்க்க,
“ஒருத்தருக்காக பாத்து ஒன்னை ஒத்துக்கிட்டா இன்னொருத்தருக்கு மனக்குறை, ஒத்துக்கலைனாலும் அதே தான். நீ கொஞ்சம் கவனமா இரு முகிலு. ரெண்டு பக்கமும் கூர்மை இருக்கு. எந்த பக்கம் போனாலும் இன்னோரு பக்கம் கிழிக்கும். நல்லா யோசிச்சு எந்த பக்கம் போறதுன்னு முடிவு பண்ணிடு சீக்கிரம்.” என்று சொல்லிவிட்டு எழுந்தவர்,
“மாரி சோறு எடுத்து வை. சாப்பிட்டு கிளம்பனும்.” என்று சத்தம் கொடுத்துக்கொண்டே பின்கட்டுக்கு செல்ல, விடுகதையில் சிக்கிக்கொண்டது போல் அவர் வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முயன்றான் முகிலன். புரிந்தும் புரியாத அறுதியிட முடியாத நிலையில் மறுநாள் கடைக்கு செல்லும் நேரம் வழிமறித்து நின்றாள் வள்ளி.
நீல நிறப் புடவையில் சற்று பெரியவளாய் தெரிய, வண்டியை நிறுத்தியவன் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக அவளைப் பார்த்தபடி இருந்தான்.
“என்னாச்சு அத்தான் உனக்கு? ஏதோ மந்திரிச்சி விட்ட மாதிரியே சுத்திட்டு இருக்க?” ஊடுருவும் பார்வை பார்த்து அவனை படிக்க முயல, முதன்முறையாய் அவளின் பார்வை வீச்சை தாங்க இயலாதவனாய் பார்வை விலக்கி வண்டியை முறுக்கினான்.
“அத்தான்?” யோசனையாய் வண்டியை முறுக்கும் அவன் வலக்கை மீது தன் கை வைக்க, பட்டென்று அதனை உதறியவன், “காலேஜ் போகாம இப்படிதான் வழியில நிப்பாங்களா?”
“உன்னை பாக்கத்தான் நின்னேன். நேத்திக்கே கேட்டேன் நீ ஒன்னும் சொல்லல. அத்தையும் பேசவிடல. அதான்…” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, தனக்கு நேரமாகிவிட்டது என்று கத்தரித்தது போல் கிளம்பியிருந்தான்.
சுணக்கத்துடன் செல்லும் அவனையே பார்த்துக்கொண்டு நின்றவள் கல்லூரி பேருந்தின் சத்தத்தில் இயல்புக்கு வந்து அதில் ஏறிவிட்டாள்.
அவளிடமிருந்து நகர்ந்து வந்தவனின் வலக்கை விரல்கள் இறுக்கத்தை கூட்டி வேகத்தை விரட்ட, அகக்கண்ணில் வள்ளியும் சிந்தையில் தந்தையும் வந்து நின்றனர்.
முகம் கொள்ளா புன்னகையுடன் தன்னை ஆவலாய் நோக்கும் அத்தை மகள் ஒருபுறம் விழி அடுக்கில் படர்வது போல் வந்து நிற்க, நேற்றைய தினம் தந்தை சொன்னதை மீண்டும் மனதிற்குள் ஓட்டிப்பார்த்து அதில் தாயையும் வள்ளியையும் புகுத்தினான்.
‘ஏத்துக்கிட்டு ஒத்துக்கிட்டா அம்மாவுக்கு மனக்குறை, ஒத்துக்கலைன்னா வள்ளி மனசு உடைஞ்சிடுமே. ஐயையோ… ’ என்று மனம் கண்டுகொண்டு அலற, இருமுனை கத்தியில் நிராதரவாய் நிற்பது போன்றொரு தோற்றம்.
தாயையும் பகைக்க முடியாது, வள்ளியின் ஆர்வம் தாங்கிய முகத்திற்கு நேரே மறுக்கவும் முடியாது என்று குடும்பத்தினை முதன்மையாய் வைத்து யோசித்தவனுக்கு அவன் மனம் என்ன வேண்டுகிறது என்று நேரமொதுக்கி கேட்கவேண்டும் என்று தோன்றவே இல்லை.
error: Content is protected !!