Skip to content
Post Views: 2,951
*6*
அன்றைக்கு மலரத் தயாராய் பறிக்கப்பட வேண்டிய மொட்டுகளை பறித்து மூட்டைக்கட்டி ஊர் பையன் ஒருவனிடம் சந்தைக்கு கொடுத்தனுப்பிவிட்டு அமர்ந்திருந்த மாரியிடம் வந்தார் அங்கு வேலை செய்யும் ஒருவர்.
“முகிலுக்கு பொண்ணு பாத்துட்டு இருந்தீங்களே ஏதாச்சும் தகஞ்சிதா?”
“வேலையை பாக்காம என்வீட்டு கதையை பேச வந்துட்டியோ? தெக்கால இருக்குற சாமந்தி வாடுது பாரு போய் தண்ணி விடு போ.” என்று விரட்டப்பார்த்தார் மாரியம்மாள்.
Advertisement
“நல்லதுக்கே காலமில்லை. என் நாத்தனாரு இப்படித்தான் புள்ளைக்கு கல்யாணம் ஆகலைன்னு போகாத கோவில் இல்லை செய்யாத பரிகாரமில்லை. கடைசியா டவுன்ல இருக்குற ஜோசியர் ஒருத்தரை போய் பாத்துச்சு. பொறந்த நேரத்தை வச்சே அவன் ஆள் எப்படி, என்ன வேலை பாக்குறான், அடுத்து அவன் வாழ்க்கை எப்படியிருக்கும்னு அம்புட்டையும் புட்டு புட்டு வச்சாராம். அவர் சொன்ன பரிகாரம் செஞ்ச மூணே மாசத்துல எல்லாம் கைகூடி வந்து இப்போ புள்ளை பொறக்கப்போகுது. உனக்கும் சொல்லலாம்னு வந்தா ரொம்பத்தான் விரட்டுற.” முகத்தை கழுத்தில் வெட்டிக்கொண்டு அவர் திரும்பிச் செல்ல,
“சொன்னவ முழு விவரம் சொல்லாம அரைகுறையா சொல்லிட்டு அதுக்கு சலிப்பு வேற. அடியே அந்த ஜோசியர் பேரு, அட்ரஸ் சொல்லிட்டு போ.” அவரை பிடித்து விலாசம் வாங்கினார் மாரியம்மாள்.
காலம் தாழ்த்தாமல் அன்றைய தினமே கணவர் ஓய்வெடுக்கும் நேரம் இதனை தெரியப்படுத்தியவர், “அங்க ஒரு தடவை போய் பாக்கலாமுன்னு தோணுது.”
Advertisement
கணவர் மறுப்பு சொல்வார் அவரை சம்மதிக்க வைக்க தம்கட்டி பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த மாரியின் எண்ணத்திற்கு எதிராய் உடனே ஒத்துக்கொண்டார் கந்தசாமி.
Advertisement
“வேணாம்னு குதிப்பீங்கனு நினைச்சா பொசுக்கு சரின்னுட்டீங்க.” ஆச்சர்யத்தில் மாரியம்மாள் கன்னத்தில் கை வைக்க, “எனக்கு அவன் மேல அக்கறை இல்லைனே முடிவு கட்டிட்டியா? பொதுவுல இருக்குற சொத்தை பிரிச்சிதான் ஆகணும். என் சம்பாதனைய தான் என் புள்ளைக்கு சேர்த்து வைக்க முடியும். என்னால முடிஞ்சதை சேர்த்து வச்சிருக்கேன். அதை விட்டுட்டு தம்பி தங்கச்சிகளுக்கு கொடுக்குற முன்னாடி புள்ளைக்குனு ஏன் தனியா எடுத்து வைக்கலைன்னு எல்லாம் என்கிட்ட மூஞ்சை தூக்கிட்டு இருந்தா போடின்னு தான் இருப்பேன்.” தன்மையாகவே அவர் சொன்னாலும் மாரியம்மாள் பிடித்த பிடியில் மீண்டுமொரு சண்டை அரங்கேறியது.
“உன் வாய்க்கு பயந்துட்டு தான் என் தங்கச்சிங்க இந்த பக்கமே தலைகாட்ட மாட்டேங்குறாங்க.” என்று இடையே வார்த்தை விட்டார் கந்தசாமி.
“பெத்தவங்க இல்லை எதுலையும் குறை வைக்காம செஞ்சிடணும்னு எல்லாத்தையும் உங்க தங்கச்சிகளுக்கு பாத்து பாத்து செஞ்சா இதுதான் சாக்குன்னு எல்லாத்துக்கும் இங்கேயே வந்து டேரா போடப்பார்த்தா நான் எங்க போறது? அதான் இன்னும் இரண்டு அண்ணனுங்க இருக்காங்கல்ல அவங்களுக்கு, அங்கேயும் போய் கொஞ்சம் சுரண்டிக்கட்டும்.”
Advertisement
“அப்படி என்ன சுரண்டிட்டாங்கனு இப்படி குதிச்சிகிட்டு இருக்க? எல்லாம் அவங்க அவங்க குடும்பத்தை பாத்துக்குற அளவுக்கு சம்பாரிக்குறாங்க, நம்மள எதிர்பார்த்து இருக்குற நிலைமையில் யாருமில்லை.”
“அதேதான் எல்லாரும் நல்லா இருக்காங்க. எல்லாருக்கும் முதுகொடிய செஞ்சிட்டு நாந்தான் நல்லா இல்லை.”
“என்ன குறை வச்சாங்க உனக்கு இப்போ? நம்ம குடும்பத்தை அவளோடதா தாங்குறா, நம்ம புள்ளைக்கும் கூடப்பொறந்தவங்க இருந்தா நல்லா இருக்கும்னு நான் நினைச்சதுக்கு எதிரா அடுத்தடுத்து புள்ளைங்க வந்துட்டா என்னை மாதிரியே முகிலும் செஞ்சி செஞ்சி ஓஞ்சிடவான்னு சொன்னதால உன் விருப்பப்படி ஒரே புள்ளை போதும்னு நானும் ஒதுங்கிட்டேன். இப்போகூட உனக்கு ஒத்துப்போற மருமகளை தான் தேடுற, எல்லாத்துக்கும் நான் வளைஞ்சு கொடுத்து போகல. எல்லாம் ஒரு அளவுதான் மாரி.”
அந்தோபரிதாபம் இவர்களின் சண்டையை பிரித்துவிட மகன் உடன் இல்லாததால் தங்களுக்குள்ளாகவே அடித்துக்கொண்டு சோர்ந்து போய் ஒருகட்டத்தில் அமைதியாகிவிட்டனர். ஒரு வாரம் முகத்திருப்பல்களுக்கு பின் அவர்களாக இறங்கி வந்து அந்த ஜோசியரை பார்த்து வந்தனர்.
முகிலன் ஜாதகத்தை கணித்தவரோ அவன் எதிர்பார்க்கும் முன்னேற்றங்களை சந்தித்தாலும் இடையிடையே சிறு சிறு இடைஞ்சல்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். நிறைவான மணவாழ்க்கை அமைத்தாலும் சண்டை சச்சரவுகள் அவ்வப்போது வருவதும் போவதுமாய் இருக்கும் என்றுவிட்டார். மாரியம்மாள் விடாது தோண்டித்துருவி கேள்வி எழுப்ப, தாயின் எதிர்ப்போ இல்லை விருப்பமின்மையோடு தான் அவன் திருமணம் நடக்கும். நீங்கள் இன்ன பரிகாரம் செய்யலாம் என்று ஒரு பரிகாரத்தையும் சொன்னார். சிரத்தையுடன் கேட்டுவந்தவர் வீட்டில் புலம்பிய புலம்பலில் வள்ளியின் நினைவுகள் தூர போய்விட்டது முகிலனுக்கு.
“எனக்குத்தெரியும் இவன் அந்த வள்ளியை தான் கட்டிக்க போறான். அவ வழிஞ்சி பாக்குறதும் இவன் அதுக்கு சிரிக்குறதும் ஒன்னும் சரியில்லை. நாமளா எதுவும் பேசி உசிப்பிடக்கூடாதுனு தான் அமைதியா இருந்தேன் இத்தனை நாளா…
அந்த ஜோசியரும் என்ன சொன்னாரு கேட்டீங்கள்ல என்னை எதிர்த்து கல்யாணம் பண்ணிப்பானாம். அப்போ அந்த சின்ன சிறுக்கி தான் என் மருமவளா? அவ அம்மாகாரிக்கு பெரியாம்மாகாரிக்கு செஞ்சது பத்தாதுன்னு இவளுக்கும் சேவகம் செய்யணுமோ? ஆமாமாம் அதுதான் நடக்கும். அப்பாவும் புள்ளையும் சேர்ந்துக்கிட்டு அவளை பாப்பா செல்லம்னு தலை மேல தூக்கி வச்சிட்டு என்னை கீழ போடப்போறிங்க. தங்கச்சி பொண்ணு மருமவளா வந்தா உங்க கால் தரையில நிக்குமா இல்லை உங்க தங்கச்சிங்க கால் தான் இந்த வீட்டு தரையை மதிக்குமா? சும்மாவே ஆடுவாளுங்க இது நடந்தா கூட்டு சேந்துக்கிட்டு என்னை மூலையில தள்ளிடுவாளுங்க.”
“அடியே ச்சீ நிறுத்து. நீயே ஒத்துக்கிட்டாலும் உன் வாய்க்கு பயந்தே அவ பொண்ணை கொடுக்க மாட்டா என் தங்கச்சி.” கந்தசாமி அதட்ட,
“இதே வார்த்தை தான் அன்னைக்கும் சொன்னீங்க. இன்னைக்கும் சொல்றீங்க. உங்க இஷ்டப்படி வளைஞ்சி கொடுத்து வாயில்லா பூச்சியா இருக்குணுமோ நாங்க? இல்லை வர்ற மருமகளை ஏசிட்டே இருக்குற அளவுக்கு அத்தனை கொடுமைக்காரியா நானு. கட்டுனவரே இப்படி சொன்னா மத்தவங்க என்னலாம் சொல்லுவாங்க.”
“உங்களை யாரு ஜோசியம் அதுஇதுனு பாக்க சொன்னது. அவங்க சொல்றதெல்லாம் நம்ப முடியாது. சும்மா அடிச்சி விடுவாங்க. அதை புடிச்சுகிட்டு மல்லுக்கு நிக்குறீங்க ரெண்டு பேரும்.” அவர்களின் சண்டையை தாள முடியாமல் முகிலன் உள்புகுந்தான்.
மகனிடம் திரும்பிய கந்தசாமியோ, “இந்தா இன்னைக்கு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. இந்த மாதிரி நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நிக்குறவகிட்ட வள்ளி பாப்பா வந்து கஷ்டப்படணுமா? அப்படியொரு நினைப்பு இருந்தா அதை அடியோடு அழிச்சிடு. அந்த புள்ளை இங்க வந்தா காலம் முழுக்க பொழுதொரு சண்டையா இருக்கும். ஒருத்தரும் நிம்மதியா இருக்க முடியாது.”
“நான் கொடுமைக்காரின்னு என் புள்ளையை நம்ப வச்சி என்கிட்ட இருந்து அவனை பிரிக்கணும்னு பாக்குறீங்களா. டேய் முகிலு அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்றேன். உன் அத்தைகாரிங்கள விடு உன் மாமங்காரனுங்க ஒன்னும் லேசுப்பட்ட ஆளுங்க கிடையாது. பொண்ணை கொடுக்குற மாதிரி கொடுத்துட்டு முதல்ல இந்த வீட்டு மாப்பிள்ளை அப்புறம் தான் பொண்ணை கொடுத்தவன்னும் முறுக்கிட்டு திரிவாங்க. ஒவ்வொன்னுத்துக்கும் அவங்க விரல் காட்டுற திசையிலதான் நீ ஆடணும் பாத்துக்கோ. அப்புறம் இந்த அம்மா அடுப்பங்கரையில உலையோட சேர்த்து பொங்கி வேக வேண்டியதுதான்.” கணவரிடம் மல்லுக்கு நின்று மகனிடம் முடித்தார்.
தலையை பிடித்துவிட்டான் முகிலன். அம்மா சொல்வது போல் அத்தனை தோரணையெல்லாம் மாமன்களோ அத்தைகளோ காட்ட மாட்டார்கள் தான். ஏன் மாரியே சொத்து பிரிக்கும் வரை அனைவரையும் சரிகட்டி குடும்பத்தை ஒற்றுமையாய் வழிநடத்தியவர்தான். என்று சொத்து பிரித்தார்களோ அன்று துவங்கியது பிரச்சனை. பெரிய அத்தை கொஞ்சம் வசதி குறைவானவர். இரண்டுமே பெண்கள் அதுவும் திருமண வயதில் நின்றவர்கள், ஒருவளுக்கு நிச்சயமாகி இருந்ததால் மூதாதையரின் நகைகள் அவருக்கு சற்று அதிகம் கொடுத்துவிட்டனர். அதை தெரிந்துகொண்ட வள்ளியின் அப்பா முறுக்கிக்கொண்டு நின்றார். சரிகட்டவென கையிருப்பை கரைக்க வேண்டியிருந்தது, அது ஒப்பவில்லை மாரியம்மாளுக்கு. கந்தசாமியின் சிறு பாரபட்சம் மாரியின் மனதில் பெருங்குறையாய் பதிந்துவிட்டது. கந்தசாமியின் தம்பிகளும் நாசூக்காய் ஒதுங்கிவிட்டார்கள். பேச்சு வார்த்தை குறைந்து விசேஷங்களில் கலந்துகொள்வதோடு நிற்கிறது. அவர்களுக்கும் ஆண் வாரிசுகள் மட்டுமே, அதனாலோ என்னவோ தங்கை மகள்கள் மேல் தனிப்பிரியம் கந்தசாமிக்கு.
“இங்க பாரு முகிலு அம்மா சொல்றேன் அத்தை பொண்ணு, கூடவே வளந்த பொண்ணு, ஒரே ஊருன்னு சுத்தி உள்ளவங்க உசுப்புனதுல அவளை ஆர்வமா பாத்திருப்ப. பாக்குறது வேற கட்டிக்குறது வேற. குடும்பத்தோட நெளிவு சுளிவுவெல்லாம் இப்போ புரியாது உனக்கு. வயசு கோளாறுல இப்போ எல்லாம் சரினு தோணும், பின்னாடி உண்மை புரியுற நேரம் ஒன்னும் பண்ண முடியாது. எல்லாத்தையும் என்கிட்ட விடு. அம்மா உனக்கு ஜம்முனு ஒரு பொண்ணை பாக்குறேன்.” என்ற மாரியை பரிதாபமாக பார்த்தான் முகிலன்.
சில நாட்களாகவே அம்மாவுக்கு வள்ளியை பிடிக்கப்போவதில்லை என்ற நிதர்சனம் உறுத்திக்கொண்டேதான் இருந்தது. இன்று இப்படி வெளிப்படையாய் பேசவும் மனம் படபடவென அடித்துக்கொண்டது. வள்ளியின் ஆர்வம் மிகுந்த பார்வையும் மாரியம்மாளின் உக்கிரப் பார்வையும் மாறி மாறி அவன் அகக்கண்ணில் வந்து கலவரமூட்டியது. பிடித்தத்தை மட்டுமே முன்னிறுத்தி அம்மாவின் பிடித்தமின்மையை சம்பாரித்துக்கொண்டு வாழ்ந்திட முடியுமா என்று அவன் சிந்தனை சென்ற நேரம், ‘வள்ளியை தனக்கு பிடித்திருக்கிறதா?’ என்று மனம் ஒருபுறம் கேள்வியெழுப்பி நின்றது.
‘அவளை பிடிக்கிறதா?’ கேட்டுப்பார்த்துக்கொண்டான் ‘அவள் தன்னை உரிமையுடன் பார்ப்பது பிடிக்கிறது, நண்பர்கள் கேலியாய் அவளுடன் இணைத்து பேசும் பொழுதுகளில் தன்னால் வெட்கப்புன்னகை வந்துவிடுகிறது. அது பிடித்தத்தினால் தானோ?’ என்று யோசித்தவனுக்கு திண்ணமான விடை கிடைக்கவில்லை.
“உன் விருப்பத்தை சொல்லிட்டீல்ல அதோட விடு. அவனை போட்டு வாட்டாத.” மனைவியை கடிந்த கந்தசாமி மகனிடம், “ரொம்ப யோசிக்காத. வள்ளிக்கு படிப்பு முடிய இன்னும் மூணு மாசம்தான் இருக்கு. முடியவும் உன் அத்தை மாமா என்ன நினைப்புல இருக்காங்கனு தெரிஞ்சிடும். பிறகு பாக்கலாம். நீ எல்லாத்துக்கும் தயாரா இரு. உன் அம்மா சொல்றான்னு எல்லாம் பாக்காத உன் முடிவுல உறுதியா இரு.” என்று மேலும் அவனை குழப்பிவிட்டார்.
இப்போ கட்டிக்கணுங்குறாரா வேணாங்குறாரா என்று அவரை பார்த்தவன் ஒன்றும் சொல்லவில்லை.
“இதுதாண்டி வெட்டிங் சாரி. பிஸ்தா ஷேட்ல பிங்க் பார்டர், பிளவுஸ் இன்னொரு ஷேட் அதிகமா போட்டா செட் ஆகும்ல?” ராஷ்மியிடம் அலைபேசியில் புகைப்படத்தை காட்டியபடி குழலி கேட்க, அவளை முறைத்து வைத்தாள் ராஷ்மி.
“உங்க வீட்ல எப்படி ஒத்துக்கிட்டாங்கனு எனக்கு சத்தியமா புரியல.”
“ப்ச் அமுதன் மட்டும்தான் சப்போட்டிவா இருக்காரு.” என்று உதடு பிதுக்கினாள் குழலி.
“இது தேவையாடி? எனக்கு என்னவோ கணேஷ் உனக்கு செட் ஆவாருனு தோணவே மாட்டேங்குது.”
“உனக்கு ஏன் அப்படி தோணுதுன்னு எனக்கு தெரியல. எங்க தாட்ஸ் அலைன் ஆகுது. அது போதாதா வாழ்க்கைக்கு.” என்றவளை வெட்டவா குத்தவா என்று பார்த்த ராஷ்மி,
“வயசுதான் முப்பது ஆகுது மண்டையில ஒன்னும் இல்லை. இங்க பாருடி இது என் பாய்பிரெண்ட். ரெண்டு வருஷமா ரிலேஷன்ஷிப்ல இருக்கோம். எங்க காம்ப்ரமைஸ் ஆகணும் எங்க ஆகக்கூடாதுனு இன்னுமே எனக்கு புரியல. நீ என்னடான்னா இவ்ளோ சீக்கிரம் ஒரு டெசிஷன் எடுத்து அதுல உறுதியா இருக்க.” என்றவளை அதிர்ந்து பார்த்தவளோ, “கமிட்டட்னு சொல்லவே இல்லை நீ.”
“இப்போ அதுவா முக்கியம். லவ் இருந்தாலுமே எங்களுக்குள்ள காம்பேடபிளிட்டி கம்மியா இருக்கு. அதெப்படி கொஞ்ச நாள்லேயே நீ சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டுறாரு இந்த கணேஷ்? உங்களுக்குள்ள எங்க இருக்கு இந்த லவ்?”
“ப்ச்… லவ்னு எதை சொல்ற நீ? கிப்ட்ஸ் கொடுக்கிறது, இம்ப்ரெஸ் பண்ணணும்னு இயல்பை மீறி ஒருவிஷயத்தை ஆரம்பத்துல செஞ்சிட்டு போக போக அதை பாலோ பண்ண முடியாம போறப்போ லவ் குறைஞ்சிடுச்சுனு சொல்லிட்டு சுத்துறீங்களே… அந்த ‘லவ்’ அதை எப்படி மெஷர் பண்றீங்க?
மேபீ வெளில இருந்து பாக்குறதுக்கு எங்களோடது காம்பிரமைஸ்ட் ரிலேஷன்ஷிப்பா தெரியலாம் ஆனா போகப்போக சரியாகிடும்னு நம்புறேன். முப்பதுகள்ல வர்ற லவ் இப்படித்தான் இருக்குமோ என்னவோ? என்னோட குடும்ப சூழல் கூட என்னை இப்படி மாத்தி இருக்கலாம். இல்லை கல்யாணம் ஆன பிறகு நானும் நீ சொல்ற கிறுக்குத்தனம் எல்லாம் பண்ணுவேனோ என்னவோ…” என்று நீண்ட விளக்கம் கொடுத்தவள் தனக்குத்தானே வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்றும் சொல்லிக்கொண்டாள்.
அந்த நேரம் அங்கு வந்த கணேஷ் காபி என்று சைகையில் கேட்க, குழலி எழும்முன் எழுந்துகொண்டாள் ராஷ்மி. கணேஷ் யோசனையாய் பார்க்க குழலியும் எழுந்து அவர்களோடு சேர்ந்துகொண்டாள்.
“இன்னைக்கு உங்க பிரெண்ட தனியா விடமாட்டேன்னு ஏதாவது சபதமா?” என்று விளையாட்டாய் கேட்டுக்கொண்டே குழலி புறம் மெல்ல நகர்ந்தான் கணேஷ்.
“இது ஆபீஸ் கணேஷ். எப்போவும் நானும் இவளும்தான் சேர்ந்து பிரேக் எடுப்போம். உங்களுக்கு தனியா டைம் வேணும்னா ஆபீஸ் ஹவர்ஸ் முடிஞ்சதும் போங்களேன் யார் கேட்கப்போறா?” என்று யோசனை கொடுக்க, அன்று மாலையே கடற்கரைக்கு அழைத்தான் கணேஷ்.
இதுவரை அலுவலகத்தில் பார்த்துக்கொள்வதோடு சரி இப்போது தான் முதன்முதலில் தனியாக அவன் அழைப்பதால் குழலி ஒத்துக்கொண்டாள்.
“இதுகூட நான் சொல்லித்தான் அவருக்கு தோணுது.” தோழியின் காதில் முணுமுணுக்கவும் தவறவில்லை ராஷ்மி. அதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் குழலி தன் வண்டியிலேயே கடற்கரை செல்ல, பின்தொடர்ந்தான் கணேஷ்.
இடைவெளி விட்டு நடந்தவர்கள் தங்களின் பிடித்தங்களை பகிர்ந்துகொண்டு, ரசனைகளை கேட்டு தெரிந்துகொண்டனர். இயல்பான உரையாடல்கள் என்றாலும் உரிமையாய் அவன் பேசினால் நாணத்திற்கு பதில் தயக்கமாய் உணர்ந்தாள் குழலி.
மாலை கவிழ்ந்த நேரம் தேகம் தீண்டிச் செல்லும் கடற்கரை காற்றினில் அவள் முடிகள் அங்குமிங்குமாய் பறக்க, அவள் முகம் பார்த்து ஏதோ சொல்லத் திரும்பிய கணேஷ் நொடிப்பொழுதினில் அவள் கற்றைகளை காதின் பின் ஒதுக்கிவிட, அன்னிச்சையாய் நகர்ந்துவிட்டாள் குழலி.
“ஏன் ஒருமாதிரி அன்கம்ஃபோர்டபிளா இருக்க குழலி? நான் எதுவும் தப்பா?”
“ஐயோ இல்லை கணேஷ். கொஞ்சம் டையர்டா இருக்கு… கிளம்பலாமா?” என்று கேட்டவள் அவன் பதிலுக்கு காத்திராது வாகன நிறுத்துமிடம் நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
பெருமூச்சுடன் அவளை தொடர்ந்த கணேஷ் அதன்பின் அவளை தனியாக சந்திப்பதை குறைத்துக்கொண்டான். குறுஞ்செய்தி பரிமாற்றங்கள் கூட பொதுவான பேச்சுகளோடு முடித்துக்கொண்டார்கள்.
திருமணத்திற்கு இன்னும் பதினைந்து நாட்கள் இருக்கையில் அன்று வாரவிடுமுறை. தங்கைகள் இருவரும் ஆஜராகிவிட்டாலும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சுற்றினர்.
“ரொம்ப பண்ணாதீங்கடி. இத்தனை நாள் ஓகே சொல்லுன்னு குடைச்சல் குடுத்தீங்க இப்போ என்னடான்னா மூஞ்சை திருப்பிட்டு போறீங்க.”
“இதுக்கு நீ ஓகே சொல்லாமையே இருந்திருக்கலாம்னு எங்களை நினைக்க வச்சிட்ட.” என்றாள் சந்தியா.
“இப்படி இங்க வந்து உரிமையா மூஞ்சை தூக்கி வச்சிட்டு இருக்கீங்களே என்னைக்கும் இப்படியே இருக்கணும்னு தான்…”
“எது இப்படி கோச்சிக்கிட்டு இருக்கணுமா நாங்க?” வந்தனா சண்டைக்கு வருவது போல் வர,
“ஏய் ச்சீ அதில்லைடி. கணேஷ் பேசும் போதெல்லாம் உங்களையும் அவர் குடும்பமா சேர்த்துதான் பேசுவாரு. வேற என்னடி வேணும் எனக்கு.” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே படாரென்று உள்ளே வந்த ரிஷி,
“கல்யாணம்னு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்களா?” என்று குரல் உயர்த்த,
“என்னங்க?” அதிர்ந்து போனவளாய் சந்தியா எழுந்து நின்றாள். அவன் பார்வை என்னவோ குழலியை எரித்துகொண்டிருந்தது.
“அப்போவே வேண்டாம்னேன் கேட்டீங்களா. என்னமோ எனக்குதான் எல்லாம் தெரியும்னு இருந்தீங்கல்ல அதான் நல்லா மொளகா அரைச்சிருக்கான். இனி அம்மாவை பாக்கணும் ஆட்டுக்குட்டி ஒதுங்க குடுசை வேணும் வீட்டோட மாப்பிள்ளைதான் கட்டுவேன்னா மனுஷனா இருக்கமாட்டேன் நானு. இவ்ளோ கஷ்டப்பட்டு மேல வந்தது இப்படி ஒரு வாழ்க்கைக்காகவா? இதுக்கு மத்தவங்க மாதிரி தூரமா தள்ளி வாழ்ந்தாலும் தன்மானத்தோட வாழ்ந்துடலாம். இன்னையோட எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு நான் கொண்டுவர வரன்ல எதையாவது ஒன்னை ஒத்துக்குற வழியைப் பாருங்க. பெரிய தியாகி இவங்க, குடும்பத்துக்காக எல்லாம் பாப்பாங்களாம். இவங்களுக்கு மட்டும்தான் அக்கறை இருக்காம்.” என்று ரிஷி காய்ச்சியதில் தலையும் புரியாது வாலும் புரியாது திகைத்து நின்றிருந்தனர் அவ்வீட்டு பெண்கள்.
error: Content is protected !!
நாங்களும்தானுங்க தலையும் புரியாம வாலும் புரியாம விழிக்கிறோம்… சீக்கிரம் அடுத்து போடுங்கோ