Skip to content
Post Views: 3,236
*7*
“என்னாச்சுங்க? எதுக்கு இப்படி எல்லார் முன்னாடியும் சத்தம் போடுறீங்க?” இத்தனை வருடத்தில் இது போன்று தன் பிறந்தகத்தில் குரலை உயர்த்திடாத கணவனை நெருங்கவே அச்சமாக இருந்தது சந்தியாவுக்கு. வந்தனா அவள் தோள் இடித்து கண்காட்டவும் ரிஷியிடம் சென்றவள் மெல்லிய குரலில் பேசினாள். அவன் அமைதியாக இருக்கவும், “அக்காவை அப்படி பேசியிருக்க கூடாது நீங்க.”
“இன்னைக்கு நான் பேசலைனா நாளைக்கு எல்லாரும் பேசுவாங்க பரவாயில்லையா. அதுதான் வேணுமா உங்களுக்கு? ஊருல வேற எவனுமே இல்லாத மாதிரி ஏற்கனவே கல்யாணம் ஆனவனை கட்டிக்கிறேன்னு நிக்குற உன் அக்காவை எல்லாரும் எப்படி பேசுவாங்கனு நினைக்குற?”
“மாப்பிள்ளை…” கோபத்தில் ரிஷியின் வார்த்தைகள் தடித்துவிடுமோ என்ற பயத்தில் முன்வந்தார் பிரபா. அதிர்விலிருந்து வெளிவந்திருந்த குழலிக்கும் அவனது பேச்சு அசூயை தர, தங்கையும் அம்மாவும் அவனிடம் பேசுகையில் இடைப்புக யோசித்து நின்றாள்.
Advertisement
“இப்போ சொல்லுங்க மாப்பிள்ளைன்னு. பெரியவங்க தானே நீங்க… சொல்லியிருக்க வேண்டாமா உங்க பொண்ணுக்கு.”
“என்னனு சொல்லாம இப்படி குதிச்சா எங்களுக்கு என்ன புரியும்?” வந்தனா முன்வந்து கேட்க, கோபமாய் முகம் திருப்பியவன் தான் தெரிந்துகொண்ட தகவலைப் பகிர்ந்தான்.
“நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிருப்பீங்க.” அவன் சொன்ன செய்தியில் அகம் கலங்கினாலும் அப்படி இருக்காது என்று திடப்படுத்திக்கொண்டு குழலி வாய் திறந்தாள்.
Advertisement
“தப்பாவா? கண்ணால பாத்து விசாரிச்சிட்டு வந்து சொல்றேன்… நம்ப முடியாத அளவுக்கு அவ்ளோ லவ்வா?” என்றவனின் கோபமான வாரத்தையாடலில் குழலியின் மனமும் முகமும் தன்னால் சுருங்கியது. மனம் லேசான படபடப்பை உணரத் துவங்க,
Advertisement
“இங்க பாருங்க அத்தை அந்த கணேஷ் முதல் வொய்ஃபோடே ஒத்துப்போகாம டிவோர்ஸ் அப்ளை பண்ணது எல்லாம் உண்மை தான். ஆனா இன்னும் விவாகரத்து ஆகல. அந்த பொண்ணுக்கு விவாகரத்து குடுக்குறதுல விருப்பம் இல்லையாம். அவங்களுக்குள்ள இருக்குற பிரச்சனை என்னனுலாம் தெரியல. ஆனா முடிவுக்கு இழுத்துட்டு இருக்கு அவங்க கேஸ்.
சும்மா ஒன்னும் உங்க பொண்ணு போட்ட கண்டிஷனுக்கு எல்லாம் அவன் தலை ஆடல. ஆடு தானா வந்து வகையா சிக்கியிருக்கு கிடைச்ச வரை லாபம்னு நினைச்சிருக்கான். அது தெரியாம அவன் என்னமோ உத்தமன் மாதிரி உங்க பொண்ணுங்க நினைச்சிட்டு இருக்காங்க. நாளைக்கே அந்த பொண்ணு இந்த கல்யாணத்தை வச்சி அவனை கோர்ட்டுல நிறுத்தும் ஏமாத்திட்டான்னு சொல்லி. இந்த ஊரு உலகம் அவனை விட்டுரும் நம்ம வீட்டு பொண்ணை தான் கைகாட்டும். என்னமோ குடி கெடுத்தது மாதிரி. இப்படி ஏமாறவா இவ்ளோ தெளிவும் பேச்சும்?” பிரபாவிடம் துவங்கி குழலியிடம் முடித்தவன் ஆவேசம் குறைய மறுத்தது.
நிமிர்வாய் நின்று குடும்பத்தின் அனைத்தையும் பார்த்து தெளிவாக திட்டமிடும் பெண் இப்படி ஏமாறப் பார்த்துவிட்டதே என்ற ஆதங்கம் அவள் மீது கோபமாய் திரும்பியிருந்தது.
Advertisement
“உங்களுக்கு எப்படி தெரியும்? யார் சொன்னா?” பதட்டத்துடன் சந்தியா வினவ,
“நேத்தி ஸ்கூல் விஷயமா கோர்ட்டுல பேப்பர் கலெக்ட் பண்ண போனப்போ அங்க கணேஷை பாத்தேன். முதல்ல அவர்தானானு சந்தேகம், நீ அனுப்புன போட்டோ பாத்து கன்பார்ம் பண்ணிட்டு போறதுக்குள்ள அவர் கிளம்பிட்டாரு. என்ன ஏதுன்னு அங்க இருந்த ரைட்டர் மூலமா விசாரிச்சேன். இப்போ தான் போன் போட்டு சொன்னாரு அவன் வண்டவாளம் எல்லாத்தையும்.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அலைபேசி எடுத்துக்கொண்டு நகர்ந்தாள் குழலி.
தங்கைகள் அவளைப் பார்க்க, “என்ன கதை கட்டுறான்னு வந்து சொல்லட்டும்.” என்ற ரிஷி மகளுடன் ஒன்றிவிட்டான்.
பிரபா மகள்களை பிடித்துக்கொண்டு கவலையில் தோய, அமுதனை வரச்சொன்னாள் வந்தனா.
அலைபேசி அழைப்பு ஏற்கப்பட்டதும், “இன்னைக்கு தங்கச்சிங்க வருவாங்கனு சொன்ன. வரலையா என்ன? அவங்க வந்திருந்தா எனக்கு கூப்பிட்டிருக்க மாட்டியே?” என்றுதான் ஆரம்பித்தான் கணேஷ்.
இவளுக்கு எப்படி ஆரம்பிப்பது என்ற தயக்கம் இருந்தாலும் கேட்டுவிட வேண்டும் என்ற உந்துதலில் ரிஷி வந்து சொன்ன செய்தியை விளக்கிக்கேட்க, அவள் குரலில் தெரிந்த நிதானம் அவனை கலவரப்படுத்தவில்லை.
“அன்னைக்கு சொன்னேனே செட்டில்மென்ட் ஓகே ஆகிடுச்சுனு. அப்போ ஓகே சொல்லிட்டு ரெண்டு நாள்ல பின்வாங்கிட்டா. உடனே ஒத்துக்காம இழுத்தடிச்சா பெரிய அமெளண்ட் தேத்தலாம்னு யாரோ சொன்னதை கேட்டுட்டு இப்படி பண்றா. நம்ம கல்யாணத்துக்குள்ள செட்டில் பண்ணிடுவேன் குழலி. நீ ஒர்ரி பண்ணிக்காத.”
“அப்போ ரிஷி சொன்னது உண்மைதான்ல. இன்னும் டிவோர்ஸ் ஆகாமலேயே என்னை கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆகியிருக்கீங்க.” என்றவள் குரலின் வேறுபாட்டை உணர்ந்தாலும் அதிலுள்ள அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியவில்லை அவனால்.
“ஏன் ஆப் ஆகுற… சரி பண்ணக்கூடியது தான் இது. அவ வீம்புக்கு எனக்கு பிரஷர் கொடுக்க ட்ரை பண்றா.”
“அவங்க என்னமும் பண்ணட்டும். கல்யாணத்துக்குள்ள இது முடியலைன்னா என்ன பண்றதா உத்தேசம்?”
“அதெல்லாம் சரிகட்டிடலாம். முன்ன பின்ன ஆகலாம். அப்படி லேட் ஆனா நம்ம மேரேஜை கொஞ்சம் லேட்டா ரிஜெஸ்டெர் பண்ணிக்கலாம்.” என்று இலகுவாக பேசியவனின் தொனி அவளை சுட்டது.
“இன்னொருத்தி ஹஸ்பண்டை வளைச்சி போட்டவன்னு நாளைக்கு எல்லாரும் என்னை பாத்து கை நீட்டனும் அதை கைகட்டி நீங்க வேடிக்கை பாக்கலாம்னு இருக்கீங்களோ?” என் கெளரவமும் மரியாதையும் உனக்கு முக்கியமில்லையா என்று காட்டமாகவே கேட்டாள் குழலி. ரிஷி சொல்ல யோசித்த வார்த்தையை அம்பென அவள் பிரயோகிக்க அதன் இலக்கை துல்லியமாய் அடைந்தது.
இலகுவாக கையாண்டவன் சற்று பதட்டமாவது அலைபேசியிலேயே தெரிந்தது, “ஹே.. என்ன இப்படியெல்லாம் பேசுற, வீட்ல பேசிட்டு இருக்காங்க இன்னும் ரெண்டு நாள்ல எல்லாம் முடிஞ்சிடும்.” நம்பிக்கை கொடுப்பது போல் அவன் பேச, ஏற்கவில்லை அவள்.
“ஓ ஆமாம்ல உங்க வீட்டை மறந்துட்டேனே… உங்க அம்மா… எவ்ளோ நல்லா நடிச்சிருக்காங்க இல்லை.”
“நடிப்பா? பாத்து பேசு.” கணேஷ் கோபத்தில் குரல் உசத்தியது இவளை உசுப்பியது.
“பெருந்தன்மையா நடந்துக்குற மாதிரி சிரிச்சி சிரிச்சி பேசுனதுக்கு பின்னாடி இப்படி ஒரு சுயநலம் இருக்கும்னு நினைக்கவே இல்லை.”
“என்ன சுயநலம் கண்டுட்ட? நான் நல்லா இருந்தா போதும்னு என்னையே தூக்கி உங்க வீட்டுக்கு விட்டுக்கொடுத்திருக்காங்க என் அம்மா. அவங்களை என்ன வார்த்தை சொல்ற நீ.”
“விட்டுக்கொடுக்குறதா?” இகழ்ச்சியாய் வளைந்த குழலியின் இதழ்களுக்குப் பின் இருந்த ஏமாற்றபட்டதின் வலி அவனுக்கு புரிய வாய்ப்பில்லை.
“இப்படி செட்டில்மென்ட்ல இஸ்யூ ஆகிடுச்சு, கேஸ் முடிய லேட்டாகும்னு உண்மையை சொல்லி என்னை வெயிட் பண்ண சொல்லியிருந்தா சந்தோஷமா வெய்ட் பண்ணி இருப்பேன் கணேஷ். அதைவிட்டு உண்மையை மறைச்சி, கல்யாணம் தேதி குறிச்சி இப்படி என்னை ஏமாத்துறதுல என்ன லாபம் உங்களுக்கு?”
“என்ன ஏமாத்துனாங்க உன்னை? கல்யாணம் பண்ணிக்குறேன்னு வாக்கு கொடுத்து தப்பா பழகி விட்டுட்டு போன மாதிரி என் கேரக்டரை இன்சல் பண்ற நீ.” பொங்கிக்கொண்டு வந்தவன் மீது ஆத்திரமாய் வந்தது குழலிக்கு.
“நீங்க பண்ணதுக்கு பேர் என்ன அப்போ? சட்டப்படி முதல் மனைவிகிட்டயிருந்து விவாகரத்து வாங்காமலேயே என்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்குறது என்னை இன்சல் பண்ற மாதிரின்னு இன்னுமே உங்களுக்கு புரியலைல. ம்ம்க்கும் நான் ஒருத்தி என்னை புரிஞ்சிகிட்டு எனக்காக உங்க வீட்டை விட்டுவர்றீங்க நீங்க நல்லவரு வல்லவருனு எங்க வீட்ல எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி அவங்களுக்கு நம்பிக்கை கொடுத்துட்டு இருந்தா நீங்க எவ்ளோ ஈஸியா என் நம்பிக்கையை உடைச்சிட்டீங்க.”
“என்ன விட்டா நம்பிக்கை, சுயநலம்னு ஓவரா பேசிட்டே போற. ஏன் மேடம் உங்க அம்மா, தங்கச்சியை பாத்துக்க வீட்டோட மாப்பிள்ளை தேடி பொது சேவை செய்றீங்களோ? நீ தேடுறது ஒரு பாடிகார்ட், நான் எனக்கு ஒரு பார்ட்னரை தான் தேடுனேன்.”
“சாரி மிஸ்டர். கணேஷ். நீங்க தேடுற அந்த பார்ட்னர் நான் இல்லை. நான் அந்த மாதிரி பொண்ணும் இல்லை.” என்று அந்த பார்ட்னரில் அழுத்தம் கொடுத்தவள் முடிந்தது என்பது போல் அழைப்பை துண்டித்து அவன் எண்ணை அலைபேசியில் இருந்து அழித்தாள்.
உடனே அழைப்பு வந்தது அவன் எண்ணிலிருந்து. விரக்தியாக பார்த்தவள் அந்த எண்ணை பிளாக்கில் போட்டுவிட்டாள்.
‘போன்ல பிளாக் பண்லாம். நாளைக்கு ஆபீஸ்ல எப்படி பிளாக் பண்ணுவ?’ அவள் மனம் கேள்வி எழுப்பி நிற்க தொண்டை அடைத்து, கன்னக்கதுப்புகள் இறுகி, விழிப்பைகளில் விழிநீர் சுரந்தது.
‘எத்தனை எளிதில் ஏமாற இருந்தேன்.’ என்று கழிவிரக்கம் சேர்ந்துகொள்ள, தொண்டையிலிருந்து வெடித்துக் கிளம்பிய சத்தத்தை மென்று விழுங்கினாள்.
‘பாடிகார்ட் தேடுறேனாம்.’ அனுசரணையான துணை எதிர்பார்த்தது குற்றமா? என்று அடுத்த சுற்று கேவல் வெளிவரத் துடித்தது. இம்முறை அதை அடக்க முயலும் சமயம் தங்கைகள் அவளை நெருங்கி,
“அக்கா.” என்று தான் அழைத்திருப்பார்கள் நொடி நேரத்தில் சத்தத்துடன் கண்ணீர் ஆறாய் இறங்கியது. தங்கைகள் சமாதானப்படுத்த அவனுடன் பேசியதை பகிர்ந்துகொண்டாள்.
“இப்போவாச்சும் தெரிஞ்சுதேனு சந்தோஷபட்டுக்கணும்.” என்ற வந்தனாவை பார்த்தவளின் அழுகை நின்றிருந்தது.
“அவ்ளோ ஈஸியா போயிட்டேன்ல. சாதாரணமா சொல்றான், குற்றவுணர்ச்சியோ வருத்தமோ எதுவுமே இல்லை அவன் குரல்ல.”
“பாத்துக்கலாம் விடுக்கா.” சந்தியா தோளோடு ஆறுதலாய் அணைக்க,
“இப்போவாச்சும் புரிஞ்சுதே. காலாகாலத்துல எல்லாம் நடக்கணும் இல்லைனா இப்படி தான் கண்டவனெல்லாம் உள்ள வர பாப்பான்.” என்ற ரிஷியின் குரலில் சகோதரிகள் கவனம் அறை வாயிலுக்கு சென்றது. எப்போது வந்தான் என்று இவர்கள் பார்க்க,
“இனிமேலாச்சும் கொள்கை, சலுகைனு எதிர்பாக்காம இருங்க.” ரிஷியின் வாய் அடங்க மறுத்தது.
“அந்த கண்டவனுக்கு பயந்துட்டு நாங்க எவனையாச்சு கட்டிக்கணுமா? எங்களுக்குனு ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் இருக்கக்கூடாதா?” சந்தியா ஏந்துகொண்டு செல்ல, மனைவியை முறைத்தவன் குழலியைப் பார்த்தான். அவள் நிமிர மறுத்து ஒருவித சங்கடத்தில் இருக்க,
“இது இதோட முடிஞ்சுது. விடுங்க. யாரும் யாரையும் குத்தம் சொல்லி நம்மள நாமளே கிழிச்சிக்க வேணாம். அடுத்தது என்னனு பாக்கலாம்.” அமைதியாய் நின்ற அமுதன் சந்தியாவையும் வந்தனாவையும் பார்வையிலேயே அடக்கி லேசாக ரிஷி கையைப் பிடித்து வெளியே இழுக்க, அவனோடு நகர்ந்து கூடத்திற்கு சென்றான் ரிஷி.
“நீதான அவனுங்க சம்பந்தம் பேசும் போது முன்ன நின்ன. இப்போ என்ன பண்ற நீயே போய் நாக்கை புடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டு அவங்க எடுத்து கொடுத்த புடவையெல்லாம் போய் கடாசிட்டு வா. நம்ம வீட்டு பொண்ணுன்னா அவ்ளோ லேசா போச்சா அவங்களுக்கு.” என்று ரிஷி அமுதனை பிடித்துக்கொள்ள, கணேஷ் வீட்டில் கொடுத்த பரிசுகளை பையில் வைத்து கொண்டுவந்து கொடுத்தார் பிரபா.
“என்ன அத்தை அங்க போய் சண்டை போட சொல்றீங்களா நீங்களும்?” என்று அதிர்ந்து பார்த்தான் அமுதன்.
“அவங்க சம்பந்தப்பட்டது எதுவும் இங்க இருக்க வேண்டாம் மாப்பிள்ளை.” என்ற பிரபாவுக்கு அடுத்து என்ன ஆகுமோ என்ற பயம்.
“நீ சரிப்பட்டு வரமாட்ட, நானே போறேன். குடும்பமே சேர்ந்து ஏமாத்த பாத்திருக்காங்க. அன்னைக்கு அந்த அம்மா நல்லவங்க மாதிரி பேசுசுன்னு சொல்லும் போதே டவுட் வந்துச்சு. நாந்தான் பட்டுக்காம இருந்துட்டேன். சந்தேகம் வந்தப்போவே நானாவது விசாரிச்சிக்கணும்.
அவன் பக்கம் தப்பு இருக்கவும்தான் எல்லாத்துக்கும் ஓகே ஓக்கேன்னு தலையாட்டி நல்ல பேர் எடுத்திருக்கான். இவன் எல்லாம் பெரிய வேலைல இருந்தாலும் அதுக்கேத்த ஒழுக்கம் இல்லை. இவன் மேல தான் தப்பிருக்கணும் அதான் மொதோ பொண்டாட்டி அத்துக்கிட்டு போயிருக்கும். கல்யாணம்னாலே நாலு பக்கமும் தீர விசாரிச்சு முடிவு பண்ணுவாங்க இங்க ரெண்டாவதுங்கிறப்போ இன்னும் சுதாரிப்பா இருந்திருக்கணும்.” என்று ரிஷி விடாது பேச, அவனை நிறுத்த போராடிக்கொண்டிருந்தான் அமுதன்.
“விடுங்க அண்ணா. அதுதான் சரியான நேரத்துல நீங்க விசாரிச்சு உண்மையை கண்டுபுடிச்சிட்டீங்களே.” என்று கொஞ்சம் ஐஸ் வைத்தான் அமுதன்.
“இனி வீட்டோட மாப்பிள்ளை தான் வேணும்னு இல்லாம ஒழுக்கமா பொழைக்குறவனா பாக்கணும்.” என்று ரிஷி மீண்டும் துவங்க,
“நீங்க சொல்ற மாதிரியே பாத்திடலாம் மாப்பிள்ளை.” அவனை சாந்தப்படுத்தவென முன்வந்தார் பிரபா.
“நீங்க சொல்லி என்ன ஆகுறது? இங்க உங்க பொண்ணுங்க தான எல்லாம்…” எனும்போதே சமாதானமாகி உள்ளிருந்து வந்தனர் சகோதரிகள்.
மனைவியைப் பார்த்தவன், “உன் அக்காக்கு கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்கு போயிட்டா உங்க அம்மா தனியா இருப்பாங்கன்னு தானே கவலை? ஏன் நாங்க இருக்கோம்னு எல்லாம் சொல்ல மாட்டியா நீ?”
என்னடா இது? நம்ம புருஷனா இப்படி பேசுறாரு எனும் விதமாய் சந்தியா ரிஷியை பார்த்துவைக்க, “ஒண்ணுக்கு மூணு பேர் இருக்கீங்க. ஆளுக்கு நாலு மாசம்னு பிரிச்சி பாத்துக்கிட்டா சரியா போச்சு. அதைவிட்டு கண்டிஷன்ஸ் போட்டா இப்படித்தான் எவனாவது நுழைவான்.”
சந்தியாவே அதிசயத்து பார்க்கையில் மற்ற உறுப்பினர்களை கேட்கவும் வேண்டுமா. இவனா இப்படி சொல்கிறான் என்றுதான் அவனையே பார்த்தனர்.
error: Content is protected !!