Skip to content
Post Views: 2,188
மிளகாய் : 1
“அடியே இங்க வாடி , வாடிங்கரேன் , அப்படியே புடிச்ச வெச்ச கொழுக்கட்டை மாதிரி நிக்கற “
“என்னாச்சுங்க , சொல்லுங்க “
“என்ன ஆச்சா நேத்து உன்கிட்ட என்ன சொன்னேன் , ஹான் என்ன சொன்னேன் ?”
Advertisement
“என்ன சொன்னீங்க ?”
“நான் உன்கிட்ட கேட்டா நீ எங்கிட்டயே திருப்பி கேக்கற”
“நிஜமா தெரிலங்க சொல்லுங்க என்ன சொன்னீங்க?”
Advertisement
“இப்படி பட்ட ஒரு மட சாம்பிராணிய உங்க அப்பன் என் தலைல கட்டிட்டு போயிட்டான், நேத்து ராத்திரி தான் சொன்னேன் அதுக்குள்ள மறந்துட்டு வந்து நிக்குது பாரு “
Advertisement
தன் கணவர் திட்டுவதை கேட்டு கொண்டு கண் கலங்கிய படி நின்றார் உமா.
“உடனே கண்ல இருந்து கொட்டிருமே , ஏண்டி நமக்கு கல்யாணம் ஆகி பதினஞ்சு வருஷம் ஆச்சு ஒரு நாள் ஆச்சும் நான் சொல்ற வேலைய சரியா செஞ்சுறுக்கியா ? வேலை வெட்டின்னு ஒன்னும் இல்ல உனக்கு , அப்றம் என்ன நான் சொல்ற வேலைய செஞ்சு வெக்க ? நேத்து உன்கிட்ட என்ன சொல்லிட்டு போனேன் நாளைக்கு எனக்கு மீட்டிங் இருக்கு, இந்த சட்டைய தேச்சு வெய்ன்னு சொன்னேன் ல , ஏன் செய்யல?”
“இல்லங்க நான் அயன் பண்ணி தான் வெச்சேன் “
Advertisement
“அப்போ நான் பொய் சொல்றேன்னா ,அப்படியே அரஞ்சேனு வெய் ” என கைகளை தூக்கி அரைய போனவரை கண்டு பயந்து கண்களை மூடி கொண்டார் உமா. ஏனோ உமாவின் நல்ல நேரம் அரை விழவில்லை கண்களைத் திறந்து பார்த்தார் .
கைகளை உயர்த்திய படி அவர் நிற்க , அவர் கால்களை கட்டி அணைத்த படி நின்றாள் பத்து வயதே ஆன அவர்களின் இரண்டாவது குழந்தை ஆராதனா .கைகளை இறக்கியவர் ஆராதனாவை தூக்கினார்.
“ஏன்டா செல்லம் ?”
“அப்பா, எதுக்கு அம்மாவை அடிக்க போறிங்க?”
“அம்மா சரியா வேலையே செய்ய மாட்டிங்கரா அதான் “
“என்ன வேலை செய்யல ?”
“அப்பாக்கு இன்னிக்கு மீட்டிங் இருக்கு டா அதுக்கு தான் இந்த சட்டைய அயன் பண்ணி வெக்க சொன்னேன் , ஆனா அவ பண்ணல அதான் கோவம் வந்துருச்சு அப்பாக்கு “
“அப்பா சாரி “
“அம்மா பண்ண தப்புக்கு நீ ஏன் டா சாரி கேக்கற “
“இல்லப்பா நான் தான் தப்பு , அம்மா அயன் பண்ணி தான் இங்க வெச்சு இருந்தாங்க நானும் அண்ணனும் தான் அத எடுத்து போட்டு பாத்து ப்லே பண்ணிட்டு இருந்தோம், அம்மா மேல தப்பு இல்ல “
உமா மீது தவறு இல்லை என்ற போதிலும் அதனை ஏற்க அவருக்கு மனமில்லை .
“நீங்க ரெண்டு பேரும் சின்ன குழந்தைங்க தான, உங்களுக்கு என்ன தெரியும் ? அவளுக்கு தான் அறிவு வேணும் பிள்ளைங்க முன்னாடி வெக்க கூடாதுன்னு ” என்றவர் உமாவை முறைத்தார். உமாவும் செய்வதறியாது கரண்டியை பிசைந்து கொண்டே நின்றார்.
“இப்போ ஏன் மசமசன்னு நிக்கற போய் சமையல் என்னாச்சுன்னு பாரு “
“சரிங்க ” என்றவர் சமையலறையை நோக்கி நடந்தார் .
இவ்வளவு நேரம் நாம பாத்தோமே அந்த ஹிட்லர் பேரு கௌரி சங்கர் எல்லாரும் சங்கர்ன்னு தான் சொல்லுவாங்க ,அவங்க பொண்டாட்டி தான் இந்த பாவப்பட்ட உமாபார்வதி இவங்கள உமான்னு தான் எல்லாரும் கூப்டுவாங்க , பேரு பொருத்தம் என்னவோ நல்லா அருமையா தான் இருக்கு சிவபெருமானும் பார்வதியும் சேந்த மாதிரி ஆனா என்ன மனப்பொருத்தம் தான் சுத்தமா இல்ல. என்னங்க சொல்றிங்க மனசே ஒத்துபோகாம எப்டிங்க ரெண்டு குழந்தை இருக்குன்னு கேட்டா அதுக்கு எல்லாம் பதில் கிடையாது. கல்யாணம் ஆன புதுசுல என்னவோ இந்த ஹிட்லர் கொஞ்சம் ரெமோ மாதிரி தான் இருந்தாரு கொஞ்ச நாள் கழிச்சு அன்னியனாவே மாறிட்டாரு . இதுல மாட்டிகிட்டது என்னவோ நம்ம உமா தான் இந்த ஆம்பளைங்க நினைச்சா ரெமோவாவும் மாறுவாங்க அன்னியனாவும் மாறுவாங்க. ஆனா இந்த பொம்பளைங்க எப்பவும் அம்பி மட்டும் தான் . மாற தெரியாம இல்லை மாற கூடாதுன்னு தான இருப்பாங்க மாறுன்னா இந்த உலகம் தாங்குமா .
இவங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு குழந்தை . முதல பையன் அப்றம் பொண்ணு, பையன் பேரு ஹரி பதிமூணு வயசு எட்டாவது படிக்கிறான் .பொண்ணு பேரு ஆராதனா பத்து வயசு அஞ்சாவது படிக்கிறாள். வெளில இருந்து இவங்க குடும்பத்தை பாத்தா அளவா நாலு பேரு அம்சமான குடும்பம்ன்னு தான் தோணும் . உள்ள போய் பாத்தா தான தெரியும் நம்ம ஹிட்லர் பத்தி.
சங்கர் குளிச்சு ரெடியாகி சாப்பிட உக்காந்தாரு. பசங்க ரெண்டு பேரும் ஸ்கூல் டிரஸ் போட்டுகிட்டு நல்லா ஜம்முனு அவங்களும் சாப்ட வந்துட்டாங்க . உமா எல்லாருக்கும் சுட சுட இட்லியும் தொட்டுக்க தக்காளி சட்னியும் வெச்சுட்டு சங்கருக்கு மட்டும் புதினா சட்னி வெச்சாங்க .
“அம்மா அப்பாக்கு மட்டும் ஏன் மா ஸ்பெஷல் புதினா சட்னி ” என்றான் ஹரி .
“ஸ்பெஷல் இல்ல ஹரி , அவருக்கு தக்காளி சட்னி புடிக்காது அதான் அவருக்கு தனியா புதினா சட்னி , அவருக்கு மட்டும் செய்யல உங்களுக்கும் சேத்தி தான் பண்ணேன், உங்களுக்கு வேணும்னா புதினா சட்னி வெக்கறேன் ஆனா தக்காளி சட்னி தான உங்க ரெண்டு பேருக்கும் புடிக்கும் அதான் வெச்சேன்”
“ஆமா ஆமா, எனக்கு தக்காளி சட்னி தான் புடிக்கும் ,ஆனா அன்னிக்கு அப்பா தான் எங்கிட்ட சொன்னாரு எல்லாமே சாப்டனும் அது புடிக்காது இது புடிக்காதுன்னு சொல்ல கூடாதுன்னு சொன்னாரு ஆனா இப்போ அப்பாக்கு மட்டும் தனியா சட்னி அதான் கேட்டேன்”
இதை கேட்டு கொண்டிருந்தவர் மெதுவாக ஹரியின் காதருகே சென்று ,
“இங்க பாரு ஹரி , நம்ம பசங்க அதனால நமக்கு பிடிச்சத தான் இந்த பொண்ணுங்க செய்யணும் புரியுதா ? அன்னிக்கு உன் கூட உன் தங்கச்சியும் இருந்தா அதான் அப்டி சொன்னேன் மத்தபடி நீ உனக்கு பிடிச்ச மாதிரி இரு சரியா ?” என்று முணுமுணுத்தார்.
இதை கேட்ட ஹரி ஓஹோ , நம்ம இப்டி தான் இருக்கணும் போல பொண்ணுங்க தான் நமக்கு கீழ போல ,நம்ம என்ன சொல்றமோ அதை தான் அவங்க செய்யணும் போல என்று பசுமரத்தாணி போல பதிய வைத்தான்.மூவரும் சாப்பிட்டு முடித்தனர் .
ஆராதனா தான் சாப்பிட்ட தட்டை எடுத்து கொண்டு போய் சிங்கிள் போட்டு விட அதை பார்த்த ஹரியும் தன் தட்டை எடுக்க ஆயத்தமானான். ஆனால் தன் அப்பா அவர் சாப்பிட்ட அதே தட்டில் கை கழுவி விட்டு எழுந்து சென்றதை பார்த்தவன் அதே போல் அவனும் அவன் சாப்பிட்ட தட்டில் கை கழுவி விட்டு எழுந்தான் . இதனை பார்த்த உமாவிற்கு சற்று வேதனையாக தான் இருந்தது எங்கே இவனும் தன் கணவன் போல் வந்து விடுவானோ என்று. சின்ன பையன் தானே என்று ஒரு போக்கில் விட்டு விட்டார் உமா.
பிறகு அனைவருக்கும் மதிய உணவு பேக் செய்து கொடுத்து விட்டார்.இவர்கள் அனைவரையும் கிளப்பி விடவே மணி ஒன்பது ஆகி விட்டது.
அவர்களை வலியனுப்பிவிட்டு உள்ளே வந்த உமா சிங்கிள் சேர்ந்த பாத்திரங்களை ஒன்று விடாமல் கழுவினார் .பிறகு அடுப்பை சுத்தம் செய்துவிட்டு , வீட்டை கூட்டி துடைத்து முடித்து , அழுக்கு துணிகளை துவைத்து முடித்து விட்டு அதற்கு பிறகு நீராடி விட்டு சாமியை வணங்கி முடித்து டிபன் சாப்பிட அமர்ந்த போது மணி பதினொன்று . வீடே நிசப்தமாக இருந்தது, அந்த நிசப்தத்தை கலைக்க விரும்பியவர் டி.வியை ஆன் செய்து பாட்டு போட்டு விட்டார். அவருக்கே விருப்பமான 80’s பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது . கமலின் பாடல் தான் ஒலித்து கொண்டிருந்தது,
“கன்னத்தில் முத்தத்தின் ஈரம்
அது காயவில்லையே,
கண்களில் ஏன் இந்த கண்ணீர்
அது யாராலே”
அதனுடன் இவரும் முணுமுணுத்து கொண்டே சிற்றுண்டியை முடித்தார் .
மதியம் ஒரு மணியளவில் தன் அன்னைக்கு போன் செய்தார் .
“அம்மா ,என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”
“உமா , சும்மா தான் இப்போ தான் ஆடு மாடுக்கு எல்லாம் தண்ணி காட்டிட்டு வந்தேன், நீ என்ன பண்ணிட்டு இருக்க ?”
“நான் சும்மா தான் மா இருக்கேன் , நான் என்ன வேலைக்கா போறேன், வெட்டியா தான இருக்கேன் “
“ஏன் உமா ஒரு மாதிரி பேசற , மாப்பிளை ஏதாச்சும் திட்டுனாரா?”
“இல்ல இல்ல அவர் எதுக்கு திட்ட போறாரு, அவர் தான் நீ வீட்லயே ரெஸ்ட் எடுன்னு சொல்றாரு , நான் தான் வேலைக்கு போறேன்னு சொல்றேன் , ஏதோ நானும் போனா வீட்டு செலவுக்கு யூஸ் ஆகும் ல “
“வீட்டு செலவுக்கு எதும் காசு பத்தலயா, நான் வேணும்னா அனுப்பி விடட்டுமா , நேத்து தான் குத்தகைக்கு விட்ட காசு வந்துச்சு “
“அதெல்லாம் ஒன்னும் வேணாம் மா , காசு பத்தாம எல்லாம் இல்ல , எனக்குன்னு தனியா இருந்தா நல்லாருக்கும்ல அதான் “
“அப்போ உன் அக்கவுண்ட் நெம்பர் குடு உனக்கு அனுப்பி விடறேன்”
“ஐயோ , அம்மா என்னை விடு உன்கிட்ட சொல்லியே இருக்க கூடாது “
“உனக்கு என்னம்மா தெரியும் பெத்தவங்க எங்களுக்கு தான் தெரியும் பிள்ளைய நினைச்சுட்டு இருக்கறது “
“அம்மா எனக்கு ஒன்னும் கல்யாணம் ஆகி பதினஞ்சு நாள் ஆகல பதினஞ்சு வருஷம் ஆச்சு, இன்னும் என்னை பத்தி நினைச்சு கவலை படாதீங்க, நான் இங்க ரொம்ப நல்லா இருக்கேன்”
“நீ தான் சொல்லிகனும், ஆராதனா பொறந்தப்ப அஞ்சு மாசம் இங்க இருந்த அவ்ளோ தான் , அப்போ உன்ன கூட்டிட்டு போனவரு அதுக்கு பொரவு நீ இங்க வரவே இல்லயே சாமி , பத்து வருஷம் ஆச்சு நீ நம்ம ஊருக்கு வந்து , நாங்க தான் உன்ன பாக்க வரோம் நீ எப்ப தான் வருவ “
“வரேன் மா கண்டிப்பா வரேன் “
“இதே தான் இத்தன நாளா சொல்ற “
“நான் வந்துட்டா அவரு எப்டிம்மா சாப்டுவாரு “
“அதெல்லாம் கடைல சாப்டுப்பாரு நீ வா”
வெறும் புன்னகை தான் உதிர்த்தார் உமா.
“என்னம்மா பதிலையே காணோம்?”, இன்னும் ஒரு வாரத்துல பிள்ளைங்களுக்கு லீவ் தான மாப்பிளைட்ட சொல்லிட்டு வா”
அவர் சொல்ல சொல்ல உமாவிற்கும் ஆசையாகத்தான் இருந்தது .
“சரிம்மா நான் டிரை பண்றேன் , வெச்சரட்டுமா “
“சரிம்மா “
போன் கட் செய்தவர் , இதை பற்றி எப்டி தன் கணவனிடம் பேசுவது என்று குழம்பி போனார் . எத்தனை முறை கேட்டிருப்பார் , அத்தனை முறையும் ஏமாந்து தான் போனார் . சரி இன்றும் கேட்டு பார்ப்போம் வந்தா லாபம் தானே என்ற முடிவில் மாலையில் நடக்க போவதை அறியாது பேதை போல் காத்திருந்தார் .
error: Content is protected !!