Skip to content
Post Views: 984
“ஏன் டா லோகி கம்முன்னே இருக்க மாட்டியா?”
“நான் என்ன பண்ணேன், அவங்க ரெண்டு பேரும் தான் விளையாட கூப்பிட்டாங்க “
“நான் அத சொல்லல, அம்மாகிட்ட ஏன் என் பிரச்சனைய பத்தி சொல்ல ட்ரை பண்ற, நான் தான் இந்த விஷயம் எல்லாம் அம்மா அப்பாக்கு தெரிய வேணாம்ன்னு சொல்லிருக்கேன் ல “
“இன்னும் எத்தனை நாள் தான் நீ இப்படியே அந்த ஆளுகிட்ட திட்டு வாங்கிட்டு இருப்ப “
Advertisement
“அவர் திருந்துவாரு டா கண்டிப்பா, அது வரைக்கும் மட்டும் நீ அம்மா அப்பாக்கு தெரியாம பாத்துக்கிட்டா போதும், “
“நீ என்ன முட்டாளா? இத்தன நாளா இல்லாம இப்போ என்ன?”
“இத்தன வருஷத்துல இன்னிக்கு தான் நான் அவரை விட்டுட்டு பிரிஞ்சு வந்துருக்கேன் கண்டிப்பா என்னோட அருமை அவருக்கு புரியும் “
Advertisement
“அவருக்கா புரிய போகுது? இந்நேரம் மனுஷன் ‘என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா ‘ன்னு பாட்டு பாடிட்டு இருப்பாரு “
Advertisement
“எது எப்படியோ எனக்கு அவர் மேல நம்பிக்கை இருக்கு, இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த சண்டை சச்சரவு எல்லாம் அதுக்கு அப்றம் சந்தோசமா தான் இருப்போம், தேவ இல்லாம அப்பா அம்மா சந்தோசத்தை ஏன் கெடுக்கணும் “
“இதைய தான் நீ ஒவ்வொரு தடவை போன் பண்ணும்போதும் சொல்ற, அந்த மனுஷன் மாறி நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா வாழ்ந்தா என்னை விட உலகத்துல வேற யாரும் அவ்ளோ சந்தோச படமாட்டாங்க “
தம்பியின் வார்த்தைகளை கேட்ட உமாவிற்கு இவ்வளவு பாசம் வைத்திருக்கும் தம்பியிற்கு நாம் என்ன கைமாறு செய்ய போகிறோம் என குழப்பம் தான் ஏற்பட்டது.
Advertisement
“அங்க என்ன அக்காவும் தம்பியும் அன்ன நடை போட்டு நடந்து வந்துட்டு இருக்கீங்க? சீக்கிரம் வாங்க இட்லி போட்டு காயுது ” என ருக்மணி குரல் குடுக்க விரைந்து சென்று சாப்பிட அமர்ந்தனர் இருவரும்.
“அப்படி என்ன ரெண்டு பேரும் பேசிட்டே வந்திங்க?”
“அது ஒன்னும் இல்லம்மா, சும்மா தான் லோகி பிஸ்னஸ் எப்படி போகுதுன்னு கேட்டுட்டு இருந்தேன் “
“இல்லையே, ஏதோ? அவர் என்ன புரிஞ்சுப்பாரு… அப்படி இப்படின்னு காதுல விழுந்துச்சு “
“ஏன்ம்மா இதெல்லாம் மட்டும் கரெக்ட் ஆஹ் கேக்குதாம்மா உனக்கு , நான் நேத்து அந்த பைக் சாவி எங்கன்னு காட்டு கத்து கத்திட்டு இருந்தேன், பதிலே பேசாம இருந்த , ஏன் ம்மா பதில் பேசாம இருக்கன்னு கேட்டதுக்கு வர வர காது கேக்க மாட்டேங்குதுன்னு சொன்ன,இப்போ என்னடான்னா அரை கிலோமீட்டர் தள்ளி நின்னு பேசிட்டு வந்தது கேக்குதா?” என லோகி வினவ,
“ஆமா டா நீ கண்ட கண்ட இடத்துல சாவியை தூக்கி போட்டுட்டு என்கிட்டயே வந்து கேட்டுட்டு இருப்ப, நான் உனக்கு பதில் சொல்லிட்டு இருப்பேனே, சாவி தெரிலன்னு சொன்னா விடுவியா நீயி, என்னம்மா தெரிலன்னு சொல்ற, தேடி கொடும்மான்னு சொல்லுவ, அதான் நேத்து காது கேக்காத மாதிரி நடிச்சேன் ” என நக்கலாக கூற,
“மாமாக்கு பல்பு ” என ஹரியும், ஆராதனாவும் கோரசாக சொல்லி சிரிக்க,
“இருக்கு உங்க ரெண்டு பேருக்கும், நாளைக்கு வயலுக்கு கூட்டிட்டு போக சொன்னிங்கள பாத்துக்கறேன் ” என செல்லகோபத்துடன் அதட்ட இருவரும் அமைதியாகிவிட்டனர்.
“சரி, சரி விடுங்க நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க ” என ருக்மணி இடையில் குறுக்கிட, இனி அம்மாவிடம் இருந்து தப்பிக்க முடியாது என தெரிந்து கொண்டவன்,
“அது ஒன்னும் இல்லை, நீ எங்க ரெண்டு பேரையும் சாப்பிட கூப்பிடும் போது என்ன சொல்லி கூப்பிட்ட “
“இட்லி காயுதுன்னு சொல்லி கூப்பிட்டேன் “
“ஹான் அதே தான் இங்க உனக்காக இட்லி காயுது, உன்ன பாக்காம அங்க மாமா காஞ்சிருப்பாருன்னு சொல்லிட்டு இருந்தேன், இல்லக்கா?”
“ஆமாம்மா ஆமா, அதான் நானும் அதுக்கு இல்ல அவரு என்ன புரிஞ்சுப்பாருன்னு சொல்லிட்டு இருந்தேன் “
“அக்காவும், தம்பியும் புது புது ரீலா விடுறிங்க பாத்துக்கலாம் “
உமாவும் லோகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இட்லியையும் கோழிக்குழம்பையும் சுவைத்து கொண்டிருந்தனர்.
இரவு உணவை முடித்துவிட்டு அவரவர் அறைகளை நோக்கி சென்றுவிட்டனர். அனைவரும் நித்திரையின் ஆழத்தில் இருந்தனர்.உமா மட்டும் பால்கனியில் தொங்க விடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு நிலவை ரசித்துக்கொண்டு இருந்தார். சில்லென வீசிய காற்று உடம்பை சிலிர்க்க வைக்க மறக்கவில்லை, அந்த மெல்லிய தென்றல் மங்கையவளின் கூந்தலை அவ்வப்பொழுது கோதிவிட்டு சென்றது.
ஒருவரின் சப்தமும் இல்லாமல் போர்வையை போர்த்திக்கொண்டு ஊஞ்சளின் மீது தலை சாய்த்து கொண்டு தன் கையில் இருந்த போன் பட்டனை ஆன் ஆஃப் செய்து கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் ஆன் செய்த போது சங்கரும் உமாவும் ஜோடியாக எடுத்த புகைப்படம் மிளிர்ந்தது. அதை தான் வால்பேப்பராக வைத்துள்ளார் உமா.
என்ன தான் சங்கர் உமாவிடம் வெறுப்பாக நடந்து கொண்டாலும், உமாவின் மனது முழுக்க சங்கரே நிறைந்து இருந்தார். ஏன் இந்த பெண்களுக்கு அறிவே இல்லையா? எத்தனை தான் ஆண்கள் செய்தாலும் பெண்ணவள் மட்டும் ஏன் வெக்கமே இல்லாமல் பொறுத்து போகிறாள் காரணம் அவள் பெண் என்பது தான். உமாவிற்கும் சங்கரின் மீது கோவம் இல்லாமல் இல்லை, அளவுகடந்த கோவம் இருக்கத்தான் செய்கிறது, இருப்பினும் அதை மீறி அலாதி பிரியமும் இருக்கத்தான் செய்கிறது. காரணம் என்ன? சங்கருடன் வாழ்ந்த இத்தனை வருட திருமண வாழ்வில் கடந்த இரண்டு வருடங்கள் தான் இவ்வளவு சண்டையும் சச்சரவும். அதற்கு முன் இவர்கள் இருவரும் ஷாட்சாட் அந்த சிவனும் சக்தியும் போலத்தான். ஏன் என்னவருக்கு என்னாயிற்று? எல்லாம் நான் சொன்ன அந்த ஒற்றை வார்த்தையால் வந்த வினை தான் என இந்த இரண்டு வருடங்களை என நினைத்து நினைத்து கண்கள் கலங்கியது. கண்கள் கலங்கி சோர்வடைந்த பின் சிறிது நேரத்திலேயே தென்றல் வந்து தேகத்தை தீண்ட தன்னை மறந்து கண்கள் இரண்டும் துயில் கொண்டது.
சரி உமா நித்திரையில் ஆழ்ந்து இருக்கட்டும் நாம் இவர்களின் திருமண வாழ்க்கையைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம்.
பல வருடங்களுக்கு முன்,
அப்பொழுது தான் உமா தன் பட்டபடிப்பை முடித்து இருந்தார். காலேஜிலேயே கேம்பசிலும் செலக்ட் ஆகி இருந்தார். ஆனால் வீட்டிலோ உமாவின் அப்பா ராஜன் வேலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை. உமாவும் தன்னிடம் உள்ள சக்தியை பயன்படுத்தி எவ்வளவு முடியுமோ அவ்வளவு சொல்லி பார்த்தார் ஆனாலும் ராஜன் ஒரே பதிலாக வேண்டாம் என்றுவிட்டார். இதற்கு மேல் தன்னால் பேச முடியாது என அமைதியாகிவிட்டார். உமாவிற்கும் கல்யாண வயசு வந்துவிட மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பமானது. கிட்டத்தட்ட நூறு வரன்கள் வந்திருக்கும், உமா என்னென்ன காரணங்கள் சொல்ல முடியுமோ அத்தனையும் சொல்லி தட்டிகழித்தார். இப்படி திருமணம் தள்ளிப்போனால் எதாவது காரணம் சொல்லி வேலைக்கு சென்றுவிடலாம் என எண்ணினார். நூறு வரன்களை நிராகரித்தவர் நூற்றி ஒன்றாவதாக வந்த ஜாதகத்தை மட்டும் கண் கொட்டாமல் பார்த்தார். அதுவே சங்கரின் ஜாதகம், உமாவிற்கு தான் பிடித்து இருந்ததே தவிற ராஜன் அந்த ஜாதகத்தை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. வரிசையாக எல்லா மாப்பிள்ளையையும் உமாவிடம் காட்டியவர் இதனை மட்டும் காட்டாமலேயே தள்ளிவைத்து விட்டார்.
“அப்பா ஏன் அத தனியா வெக்கறீங்க?”
“அது நமக்கு ஒத்து வராதும்மா”
“ஏன் பா?”
“நம்ம வசதி எங்க? அந்த பையன் வசதி எங்க? நமக்கு இருக்கறதுல ஒரு பங்கு கூட கிடையாது அந்த பையன்கிட்ட “
“அப்பா இன்னுமா இந்த வசதி வாய்ப்பு எல்லா பாத்துட்டு இருக்கீங்க?”
“எனக்கு இருக்கறது ஒரே பொண்ணு, நான் தான நல்ல மாப்பிளையா பாக்கணும் அதான், இந்த பையன் நமக்கு வேணாம் “
“அப்பா நான் ஒன்னு சொல்லட்டா “
“சொல்லு சாமி “
“நீங்க காட்டின இந்த நூறு பேருல எனக்கு இவர தான் பா பிடிச்சிருக்கு “
“அவசரப்படாத உமா, இன்னும் நிறையா இருக்கு அதெல்லாம் பாரு “
“இல்லப்பா, எனக்கு இவர தான் பாத்த உடனே மனசுக்கு பிடிச்சிருக்கு “
“என்னம்மா நீ இப்படி சொல்ற? சரிம்மா அத ஒரு ஓரமா வெக்கறேன், மத்த மாப்பிள்ளையையும் ஒரு வாட்டி பாத்துட்டு முடிவு எடு “
“அப்பா, மத்ததை எல்லாம் பாக்க வேணாம் இந்த உலகத்துல ஒன்ன விட ஒன்னு பெஸ்ட்டா தான் பா இருக்கும், அதுக்காக எல்லாம் நம்ம மனசு மாத்திக்க முடியாது, எனக்கு அவர பிடிச்சிருக்குப்பா “
“உமா இந்த சினிமா டயலாக் எல்லாம் நிஜ வாழ்க்கைக்கு ஒத்து வராதும்மா “
“என்னமோ விடுங்கப்பா, நான் இது வரைக்கும் இந்த அளவுக்கு ஒரு மாப்பிள்ளைய பிடிச்சிருக்குன்னு சொன்னனாப்பா”
“இல்ல “
“அப்போ எனக்கு பிடிச்சத சொன்னா அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்கப்பா “
ராஜன் என்ன சொல்வது என்று தெரியாமல் இரண்டு நாட்களில் யோசித்து சொல்வதாக முடிவு கூறினார். இரண்டு நாட்கள் உமாவும் தன் அப்பாவை தொந்தரவு செய்யவில்லை. ராஜனும் சரியாக உமாவிடம் முகம் குடுத்து பேசவில்லை. போனும் கையுமாகவே திரிந்து கொண்டு இருந்தார். அந்த இரண்டு நாட்களும் முடிவுக்கு வந்தது உமாவை வீட்டிற்குள் தேடியவர் வெளியே தாழ்வாரத்தில் அமர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து அவரின் அருகில் சென்று நின்றார். யாரென்று ஏறிட்டு பார்த்த உமா,
“அப்பா, கூப்டுருந்தா நானே வந்துருப்பேனே “
“இல்ல பரவால்லம்மா “
“சொல்லுங்கப்பா என்ன விஷயம் “
“நானும் ரெண்டு நாள் யோசிச்சேன் மா, அப்றம் நம்ம சித்தப்பா, மாமா, அத்தைன்னு எல்லாருகிட்டயும் அந்த பையன பத்தி பேசி பாத்தேன் “
“என்னப்பா சொன்னாங்க எல்லாரும்?”
“நமக்கு அந்த பையன் வேணாம் உமா “
error: Content is protected !!