Skip to content
Post Views: 537

இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிஞ்ச கதையா நாரதரை நரேஷா (இரவற் சீலையா) கூட்டிட்டு வந்து இருக்காரு நம்ம பகவான்.
புரியலையா? புரியும்… புரியும்… சீக்கிரம் புரியும்.
Advertisement
யுகா முகம் கடுகடுக்க, “செக்யூரிட்டிஈஈஈ…” என்று கத்தவும் நரேஷ் பதட்டத்தில் நாட்டியமே ஆடத் துவங்கி இருந்தான்.
“டேய் அதான் செக்யூரிட்டின்னு ஆல்ரெடி கூப்டுட்டில்ல வாய மூடேன் கொஞ்சம்!” என்று நரேஷ் கத்தினான் இம்முறை. அது ஏனோ தெரியவில்லை. இந்த நாரத முனிக்கு, யுகா செக்யூரிட்டி… செக்யூரிட்டி… என்று அழைக்கும்பொழுது எல்லாம் அடி வயிற்றில் எலக்ட்ரிசிட்டி பாய்வது போல் ஓர் உணர்வு.
Advertisement
Advertisement
ஹரி நரேஷை முறைப்பதும், நரேஷ் யுகாவை முறைப்பதும், யுகா மீண்டும் இருவரையும் முறைப்பதுமாக இருக்கவே… ஹரியே பேசினான்.
“நாங்க சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க யுகா. என்ன நடக்குது, நாங்க யாருனு உன்கிட்ட சொல்லிடறோம்…!”
Advertisement
“ஆணியும் புடுங்க வேண்டாம்… கெளம்புங்க மொதல்ல!”
“அய்யயோ, டேய் என் பாஸ் யாரு, அவரு பாக்ரௌண்ட் என்னனு தெரியாம மரியாதை இல்லாம பேசாத. அப்றம் ரொம்ப வருத்தப்படுவ டா…”
அவசரப்பட்டு இவர்களை நம்பி வீட்டில் சேர்த்துவிட்டோமோ என்ற பயம் யுகவுக்கு.
“இந்த ஆளு எவ்ளோ பெரிய புடுங்கியா இருந்தாலும், இப்போ என் வீட்ல இடம் இல்ல… கிளம்புங்க ரெண்டு பேரும்!”
“வாயில போட்டுக்க, வாயில போட்டுக்க…!”என்ற நரேஷ் அவனே யுகாவின் வாயில் கைவைத்து பக்கு பக்கென்று அடிக்க,
“ச்சே… கையை எடு மொதல்ல!” என்று அவன் கையை தட்டிவிட்டிருந்தான்.
ஹரி மீண்டும் பொறுமையாய்,
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும், உள்ள வா கொஞ்சம்…!”,என்றான்.
“நான்தான் சொல்லிக்கிட்டே இருக்கேன், கெளம்புறியா மொதல்ல!”
பொறுமை இழந்த ஹரியும் குரலை உயர்த்தி,
“அடிங்கு… நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன். வாய மூடிக்கிட்டு வாடா என்கூட !” என்று யுகாவை இழுக்காத குறையாகப் பிடித்துச் சென்றிருந்தான் ஹரி.
“ஏய், கையை எடு… பாஸ்டர்ட்!”
“டேய், எங்க பாஸ் பாஸ்கர் இல்ல, பரந்தாமன்!”
“டேய், நரேஷு… சும்மா வாடா பேசாம. நேரங்காலம் தெரியாம இவன் வேற”
அவனை இழுத்துக்கொண்டு நடந்தது என்னவோ அவன் வீட்டின் பின்பக்கம் இருந்த ஒரு ஸ்டோர் ரூமிற்கு தான். ஆனால் போய்ச் சேர்ந்த இடம் என்னவென்று அவர்களுக்குத் தான் தெரியும்.
மூவரும் உள்ளே சென்று ஓர் அரை மணி நேரம் கடந்திருக்கும். என்ன சொன்னார்களோ, எதைக் காண்பித்தார்களோ… வெளியே வரும் யுகாவின் முகத்தில் ஈ ஆடவில்லை. முகம் வெளிறி இருந்தது. கை கால்கள் கூட கொஞ்சம் நடுக்கம் எடுத்தது. நடை சரியாக இல்லாமல் தள்ளாடியபடியே நடந்து வந்தான். அவன் வெளியே வந்த நேரம் தான் அந்த செக்யூரிட்டி வந்து தலையை சொரிந்தபடி எட்டிப் பார்க்கிறார்.
“சார், கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு? கூப்பிட்டீங்களா?”
நரேஷ் யுகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“இவனை கூப்புட்டு தான் என்னைய மிரள விட்டியா?” என்று மேலும் கீழும் ஒரு பார்வையை வீசினான்.
“ஆனாலும் உன் மன தைரியத்தை நான் பாராட்டியே ஆகணும் டா. அப்போ கத்துன கத்துக்கு இப்போதான் கூப்பிட்ட மாதிரி இருக்குன்னு வந்து நிக்குறான். இவனை நம்பி இவ்ளோ பெரிய வீட்டையும் உன் பொண்டாட்டியையும் விட்டுட்டு போற பாத்தியா. அங்க நிக்குற நீ!”
“அது இல்லைங்க…!”
“எது இல்லைங்க? சரி அதிருக்கட்டும். இப்போ என்ன விஷயம் தெரிஞ்சதும் பயப்பக்தியோட பேசுற? முன்னாடி அந்த துள்ளு துள்ளுன!”
யுகாவின் வாய், பூட்டுப் போட்டது போல் திறப்பேனா என்றது. கொஞ்சம் முகம் வாடியவனாகத் திரும்பி அந்த செக்யூரிட்டியை அனுப்பியவன், இவர்களைப் பார்த்து,
“என்னைய மன்னிச்சுருங்க!” என்றான்.
அந்த மன்னிப்பில் நம் மனதே கனத்துவிடும் போல. கண்கள் கலங்க, உதடுகள் துடிக்க, உடலும் உதர ஆரம்பித்து இருந்தது. சற்றும் யோசிக்காமல் ஹரியின் கால்களைப் பிடித்த யுகாவின் கண்ணீர் ஹரியின் கால்களைத் தவறாமல் நனைத்தது.
“அட யுகா, எழுந்துரு. எதுக்கு இப்போ நீ கண்ணீர் வடிக்குற?”
“ஆயிர கணக்குலச் செலவு செஞ்சு பூஜை புனஸ்காரம் பண்ணி, கோவில்ல அன்னதானம் செஞ்சு, விரதம் இருந்து, படையல் வச்சு வரம் கேக்குறேன்… ஆனா இப்போ கண்ணு முன்ன வந்து நிக்கிற சாமி அஹ் எனக்கு தெரியல. அப்போ நான் எவ்ளோ பெரிய பாவியா இருப்பேன்… என்னை மன்னிச்சுருங்க… ப்ளீஸ்”
“நீ பாவியும் இல்லை, ஆவியும் இல்லை. இவன் என்ன பாஸ் இவ்ளோ பீல் பண்றான்…!”
“விடு விடு… எல்லாக் கஷ்டமும் அவங்க அவங்களுக்கு வந்தாதான் தெரியும்…!”
“ஏங்க! நான் சொல்லி உங்களுக்கு தெரியணும்னு இல்லை. இருந்தாலும். எனக்கு எல்லாமே இலக்கியா தான். அவ சந்தோசமா இருக்கனும்ன்னு தான் நான் ஓடி ஓடி உழைக்குறேன். ஆனா அவ குழந்தைக்கு ஏங்கி தவிக்கிறா. எங்களுக்கு ஒரு வழி காட்டக் கூடாதா?!”
இடை புகுந்த நரேஷ், “ஒரு நிமிஷம் இரு! இப்போ நீ என்னமோ வர்ஷகணக்குல தவம் இருந்த மாதிரியும், அதுல சந்தோஷப்பட்டு இவரு உனக்கு வரம் கொடுக்க வந்த மாதிரியும்ல நீ பேசிகிட்டு இருக்க!” என்று போறப் போக்கில் ஒன்று உளறி வைக்க, ஹரிக்கு ரத்தக்கொதிப்பு வராமல் இருப்பது ஆச்சர்யமே.
“இங்க வாயேன் நீ!” என்று நரேஷை கழுத்தோடு வளைத்துப் பிடித்த ஹரி,
“உள்ள ஏதோ புகையுற மாதிரி இருக்கு, என்னனு போய் பாத்துட்டு வா!” என்று அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முனைப்பில் கூறினான்.
“பாஸ், என்னைய தள்ளிவிடத் தான் பாக்குறீங்கன்னு எனக்கு கிளியர் அஹ் புரியுது. பட் புகையிறது அங்க இல்லை, இவன் வயிறு தான்!” என்று கூறி அதை நகைச்சுவை என்று அவனே எண்ணிக்கொண்டு அவனே சிரித்தும் விட்டுப் போகிறான்.
நரேஷை அனுப்பிவிட்டு அப்பாடா என்று யுகாவின் புறம் திரும்பியவன், “அடுத்து இவனை வேற சமாளிக்கணும். முடியல டா, என்னைய ரொம்ப சோதிக்குறிங்க!” என்று புலம்பித் தீர்த்தான்.
பாவம் யுகாவின் முகம் எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தது.
“இங்க பாரு யுகா! எல்லாத்துக்கும் அது அதுக்குன்னு ஒரு நேரம் இருக்கும். அதுக்கான காலம் கனியனும். நீ எது நடந்தாலும் நன்மைக்கேன்னு மட்டும் மறந்துராத! அதில்லாம நானே என் பொண்டாட்டியே காணும்னு தேடி வந்துருக்கேன். எனக்கும் பர்சனல் ப்ரோப்லேம்ஸ் எல்லாம் இருக்கும்ல. எனக்குக் கொஞ்சம் லீவ் கொடுக்க மாட்டிங்களா யாரும்? நானும் எத்தனைய தான் சமாளிக்குறது சொல்லு பாப்போம்”
“உங்க மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. இத்தனை கோடி மக்கள் இருக்குற உலகத்துல என்னை சூஸ் பண்ணி வந்துருக்கீங்க. என்ன கை விட மாட்டீங்க!”
“டேய் நான் என்ன சொல்றேன், நீ என்ன பேசிக்கிட்டு இருக்க?”
“அட யார்ரா இவன், பாஸ் ஆப் டூட்டி. இங்க அவரு பர்சனல் விஷயமா வந்துருக்காருன்னு சொல்றாருல்ல. இங்கையும் வந்து வரம் குடுங்க வேலை பாருங்கன்னு சொன்னா அவரும் பாவம் என்ன பண்ணுவாரு? போங்கய்யா போய் வேலைய பாருங்கய்யா..!” என்று சுவரின் ஓரமாய் செல்லாமல் மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த நரேஷை ‘இவனை பேசாம கொன்னுருவோமா! ரொம்ப சோதிக்கிறான்’ என்னும் அளவிற்கு பார்த்து வைத்தான் ஹரி.
இப்படியாக ஒரு பெரும் அமளி துமளிக்கு பின் யுகாவோடு ஒரு சுமுக நிலைக்கு வந்திருந்தனர் நம் இருவர் குழு.
“இங்க பாரு யுகா, எங்கள பத்தின உண்மைய உன்கிட்ட சொல்லிட்டோம். அதுக்காக இப்படி பேயரஞ்ச கணக்கா மூஞ்சிய வச்சுக்கிட்டு சுத்தாத மேன். எங்களையும் ப்ரெண்ட்ஸ் மாதிரி ட்ரீட் பண்ணு. அப்றம் இந்த விஷயம் எதுவும் வெளிய தெரிஞ்சுது…!”
“சொன்னா சபிச்சுருவீங்களா ஜீ!”
“க்கும்… அந்த சாபத்தால தான் நாய் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கேன். நமக்கும் இந்த சாபத்துக்கும் செட் ஆகாது, அதனால ஏதாச்சும் புதுவிதமா யோசிச்சு உன்னைய டார்ச்சர் பண்ணுவேன். பீ கேர்புல்…”
யுகாவிடம் உண்மை உடைபட்டது இப்படித் தான்.
அவனிடமே வைஷ்ணவி பற்றிக் கூறி அவள் புகைப்படத்தையும் காட்டி இருந்தார்கள். காட்டிய நொடியே அவனுக்குத் தெரிந்தது இது மனோவின் அக்கா தான் என்று. அந்த மனோ தன் கம்பெனியில் தான் வேலை செய்கிறாள் என்றும், அவளைப் பிடித்தால், அவள் அக்காவையும் பிடித்துவிடலாம் என்று யோசனையோடு இருந்தார்கள்.
ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் ஹரியும் நரேஷும் ஓரளவு தொழில் முறை தகவல்கள் தெரிந்துகொண்டும், யுகாவின் மூலம் அறிந்துகொண்டும்… புதுப் பொலிவுடன் அலுவலகம் நோக்கிச் செல்லத் தயாராய் இருந்தார்கள்.
அன்று தான் ஹரி புது எம்டியாக வந்திறங்கியது. அதாவது புதிய எம்டியாக நடிக்க வந்தது. மனோவை பார்த்ததும் மனம் பட்டாசு போல் வெடிக்கிறது.
அவள் மாலையைப் போடுவதும், அவளை ஒரு மார்க்கமாய் ஹரி பார்த்து வைப்பதும் என்று இருக்க, இதைத் தவறாமல் நரேஷும் யுகாவும் பார்த்து வைத்தார்கள்.
ஹரியின் காதோரமாய் கிசுகிசுக்கிறான் நரேஷ்.
“பாஸ் இது உங்க மச்சினிச்சி. இப்படி பாக்குறீங்களே. தப்பில்லையா?”
“இல்ல நான் தெரியாம தான் கேக்குறேன். எனக்கு ஏதாச்சும் ஏழ்ரைய இழுத்துவிட தான் வந்தியா என்கூட?”
“என்ன பாஸ் இப்படி கேக்குறீங்க?”
“பின்ன என்ன? வந்ததுல இருந்து ஏதாச்சும் ஒன்னு எனக்கு உதவுற மாதிரி உறுப்புடியா பண்ணியா?”
“அதான் உங்க வைப் அஹ் கண்டுபுடிச்சு காமிச்சேனே”
“அதுதான் என் வைப்ன்னு இன்னும் நாம கன்பார்ம் பண்ணவே இல்லை!”
“சரி அதுக்கு என்ன இப்போ பண்ண போறிங்களாம்?”
“வெயிட் அண்ட் வாட்ச்!” என்று ஸ்டைலாக சிரித்துவிட்டு கண்களில் அந்தக் குருட்டுக் கண்ணாடியை, ஐ மீன் அந்தக் குளுமை கண்ணாடியை அணிந்து கொண்டு உள்ளே சென்றான்.
அவர்கள் இருவரும் அலுவலகம் வர ஆரம்பித்து இரு வாரங்கள் ஆகி இருந்தது. ஹரி மனோவிடம் பேச முயல்வதும், அதற்கு அவள் பிடி கொடுக்காமல் பேசிவிட்டுச் செல்வதும் என்று ஒரு பெரிய அக்கப்போராய் சென்றுகொண்டு இருந்தது.
அன்று வழக்கத்திற்கு மாறாக முன்னதாகவே அலுவலகம் வந்திருந்தாள் மனோ. முடிக்கவேண்டிய வேலை ஒன்று கிடப்பில் இருந்தது போல. அதற்காக வந்திருக்கிறாள்.
அவள் வந்த பத்தே நிமிடத்தில் ஹரியும் வந்திருந்தான்.
அவனை இத்தனை சீக்கிரம் அலுவலகத்தில் கண்டவளுக்கு எதற்கென்றே தெரியாமல் ஓர் எரிச்சல்.
எப்பொழுதும் உள்ளே வரும்பொழுது அனைவரையும் தேடிச் சென்று வணக்கம் வைப்பதை வழக்கமாக்கிக் கொண்டான் ஹரி. அது மனோ ஒருத்தியை நெருங்கத்தான் என்பது நமக்குத் தெரிந்த உண்மை.
அது ஒருபுறம் இருக்க, இவனது நடை உடை பாவனை என எதையுமே விரும்பவில்லை மனோ. ஆகையால் அவன் வைக்கும் வணக்கத்தையும் முக சுழிப்போடு தான் வாங்கிக்கொள்வாள்.
ஏன் என்று கேட்டாள் அவளுக்கே தெரியாது.
“சிலரைக் காரணமே இல்லாம பிடிக்காதுல்ல, அப்டித்தான் இந்த சில்மிஷத்தையும் பிடிக்கல.” என்று கூறுவாள்.
அவள் அவனை சில்மிஷம் என்று கூறவும் காரணம் உண்டு. போகவும் வரவும் இருக்கும் பொழுதுகளில் எல்லாம் குரு குருவெனப் பார்ப்பதும், பாதி நேரம் பெண்களுடன் கடலை வறுப்பது, கேரம் ஆடுவது, பல்லாங்குழி, பரமபதம் முதல் ஆடுபுலி ஆட்டம் வரை ஒன்றையும் விட்டுவைக்கவில்லை.
இதில் வேறு ஹரி அமர்ந்திருக்கும் அறையின் சுவர்கள் மட்டும் பிரத்தியேகமாய் வடிவமைக்கப் பட்டு இருந்தது. உள்ளே இருந்து வெளியே தெளிவாய் பார்க்கலாம். ஆனால் வெளியே இருந்து உள்ளே பார்க்க முடியாது. இது ஹரி வந்த அடுத்த நாளே மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது.
“இதெத்துக்கு இப்போ இந்தத் தேவை இல்லாத வேலை. வெளிய இருக்க பொண்ணுங்களை நோட்டம் விடவா?” என்று அதையும் பிடிக்காமல் தான் பார்த்தாள் அந்தப் பாவை.
மனோ தான் அவனிடம் பிடிகொடுக்காமல் செல்கிறாளே தவிர மற்ற பெண்கள் அவ்வகையில் சேரவில்லை. ஹரி இருக்கும் இடம் தான் எங்கள் சரணாலயம் என்பது போல் சதா சர்வ காலமும் ஹரியின் முன்னால் வந்து தவம் கிடக்கிறார்கள்.
அதற்குக் காரணம், ஒன்று அவன் யுகாவை விடவும் பணம் படைத்தவனாய் இருக்கலாம் என்ற ஊகமும், பார்ப்பதற்கு நல்ல சினிமா ஹீரோ கணக்காய் இருக்கும் அவன் தேக வனப்பின் மோகமும் தான்.
ஹரியின் ஆட்டமும் ஆர்ப்பாட்டமும் கூட அதற்கு ஏற்றார் போலத் தான் இருந்தது.
இப்படித் தான் ஒருநாள் மனோ ஏதோ வேலை சம்பந்தமான கோப்புகளுடன் அவன் அரை தேடி வந்தாள். வந்தவள் அவனிடம் அந்தக் கோப்பை கொடுத்துவிட்டு… அதற்கு மேல் அவனிடம் நின்று பேச மனம் இல்லாமல் திரும்புகையில், மேஜை மேலே இருந்த காகிதம் கீழே விழுந்தது. அதுவும் அவள் கால் அருகிலேயே விழுந்து தொலைத்தது.
நாகரீகமாய் அதை அப்படியே தான் எடுத்துக்கொடுக்க எண்ணினாள், இருப்பினும் க்ஷண நேரத்தில் அவள் கண்ணில் பட்ட அவள் பெயரைப் பார்த்து அதில் கவனம் செலுத்தியவளுக்கு கோவம் புசுபுசுவென எகிறியது.
ஹரியை ஒரு பார்வை, அந்தக் காகிதத்தை ஒரு பார்வை.
அவள் பார்வையிலேயே அருவருப்பு அப்பட்டமாகத் தெறித்து விழுந்தது.
“சார், என்ன இதெல்லாம்?”
“என்ன?” என்பது போல் அவன் அவளைக் குழப்பமாகப் பார்க்க,
“என்ன சார் இது?” என்று இதைத் தான் கேட்கிறேன் என்பது போல் அந்தக் காகிதத்தை எடுத்துக் காண்பித்தாள்.
எந்த முக மாறுதலும் இல்லாமல், அவனும் அசட்டையாய்…
“நேம் லிஸ்ட்!” என்று கூறினான்.
“என்ன நேம் லிஸ்ட் அஹ்? பொண்ணுங்க பேரை மட்டும் வரிசையா எழுதி வச்சு பக்கத்துல மார்க் எல்லாம் போட்டு எழுதி வச்சிருக்கீங்க? அதுவும் எனக்கு 55 பெர்ஸன்ட்? அவெரேஜ்ன்னு போட்ருக்கீங்க. என்ன சார் இதெல்லாம்?” அவளுக்கு வேலை செய்யும் கம்பெனி எம்டியிடம் பேசுகிறோம் என்ற எண்ணமெல்லாம் இல்லை. அவளுக்கு இந்த வேலை ஒன்றும் வாழ்வாதாரத்திற்கு அத்யாவஸ்யம் கிடையாது. சொல்லப்போனால் அவள் படித்த படிப்புக்கும் இப்பொழுது செய்யும் வேலைக்கும் பொருத்தமே இல்லை என்பதால், அது கொடுத்த தைரியத்தில் அவள் கொஞ்சமும் தயங்காமல் பட்டெனப் பேசிவிடுவாள்.
“என்னனு கேட்டா என்ன சொல்றது? எல்லாரையும் அப்செர்வ் பண்ணி, அவங்க ஒர்கிங் எபிஸியன்ஸி எப்படி இருக்குனு ஜட்ஜ் பண்ற!” என்றான் பிசகாமல் கூலாக.
“எப்படி, எப்படி, பொண்ணுங்களை மட்டும், ஒர்கிங் எபிஸியன்சி பாக்குறீங்க. அதுக்குத்தான் இந்த மார்க்கெல்லாம். அதுவும் எனக்கு பக்கத்துல அவரேஜ்ன்னு வேற?”
“எஸ். அப்கோர்ஸ். உங்களுக்கு அதுல என்ன ப்ரோப்லம். வொய் டூ யூ அஸ்க்?”
அதைச் சத்தியமாய் அவள் நம்பவில்லை. இதற்கு மேல் பேசுவது நம் முட்டாள்தனம் என்று எண்ணிவிட்டு வெளியேறிவிட்டாள்.
அருகில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த நரேஷிற்கே இந்த லிஸ்ட் விஷயம் புதிது போல. அவனும் வாயைப் பிளந்து தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.
‘இதுதான் அந்த வெயிட் அண்ட் வாட்ச் போல.
கருமம், கருமம்… இவரு என்ன, பொண்டாட்டிய பாலோவ் பண்றதை விட்டுட்டு… ஊருல உள்ள பொண்ணெல்லாம் பாலோவ் பண்ணுவாரு போல. இவரு கூட சுத்தி நான் கெட்டு போயிர கூடாது டா யப்ப்பா… பிரம்மச்சர்யம் பிரேக் ஆகம பாத்துக்கணும்’ என்று அவன் மனதிற்குள் தான் நினைத்தான், ஆனால் அவன் மனதைப் படம் போட்டுக் காட்டும் முகவழகை வைத்துக்கொண்டு ஒரு மைண்ட் வாய்ஸ் கூட சுதந்திரமாய் பேச முடியாத நிலை அவனுக்கு. பெருமாளிடம் சிக்கிக்கொள்வான், அவ்வப்போது சிக்கி சின்னாபின்னமும் ஆவான்.
இதெல்லாம் சேர்ந்து தான் மனோவின் மனதில் ஹரி தாஸ் என்பவனைப் பற்றிய எண்ணம் வேறுமாதிரியாக இருந்தது. அவன் ஓர் ஒழுக்கமில்லாத பணக்காரன்.
பெண்களிடம் ஒருவாராக இருக்கும் சில்மிஷம் என்று.
ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை அவன் புறம் இருந்து பார்த்தால் தானே தெரியும்…! புரியும்..!
-பிரிவோம் சந்திப்போம்
error: Content is protected !!