Skip to content
Post Views: 203
அத்தியாயம் 21
கிருபாகரன் எழுந்து வந்து ஹாலில் அமர்ந்தவன், ஃபோனில் செய்திகளை பார்த்துக் கொண்டே “நித்தி! காஃபி…” என்று கேட்க
Advertisement
சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தவள் “இன்னைக்கு உஙகள வெச்சி செய்றேன்…” என்று சொல்லிக் கொண்டவள்
காஃபியை போட்டு எடுத்துக்கொண்டு அவனிடம் நீட்டியவள், அவன் வாங்கும் முன்பே அதை எடுத்துக்கொண்டு அவர்களின் அறைக்குள் வைத்துவிட்டு வர
Advertisement
Advertisement
‘என்ன பண்றா…’ என்று மனதில் நினைத்தவன் “நித்தி காஃபி கேட்டேன்…” என்று கேட்க
“அதுதான் அறையில வச்சிருக்கேன்.. எடுத்து குடிச்சுக்கோங்க…” என்று நமட்டு சிரிப்புடன் சொல்ல
Advertisement
“என்னாச்சு உனக்கு.. காஃபி கேட்ட நான் இங்க இருக்கேன்.. அறையில யாருக்கு கொண்டு வச்ச…”
“அட! என்னங்க மறந்து போச்சா.. அறைக்குள்ள மட்டும் தான் புருஷன் பொண்டாட்டின்னு சொன்னீங்க.. நீங்க ஆசையா காஃபி கேட்டு.. நானும் ஆசையா போட்டு கொடுக்க.. அது உங்க தங்கச்சி கண்ணுல விழுந்துட்டா.. அதுதான் நீங்க சொன்ன மாதிரி இனி எதுவா இருந்தாலும் அறைக்குள்ளயே வெச்சிக்கலாம்…” என்றவள் சமையலறைக்குள் செல்ல
பே என முழித்து நின்றான் கிருபாகரன். “ஆரம்பிச்சிட்டா போலயே.. மாரியம்மா என்ன காப்பாத்தும்மா…” என்று இப்போத அம்மனிடம் கோரிக்கை வைத்தவன் தன்னைத்தானே திட்டிக்கொண்டு அறையினுள் சென்று காஃபியை எடுத்து வந்து குடித்தான் .
சிறிது நேரம் கழித்து காலை உணவுக்காக சாப்பாடு மேஜையில் வந்து அமரவும், பிரபாகரனும் அஞ்சனாவுடன் வந்தான்.
அஞ்சனா சாப்பாட்டு பாத்திரங்களை எடுத்து வர சமையலறை செல்லப்போக, குட்டி குட்டியாக மூன்று பாத்திரங்களை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைத்து எடுத்து வந்தாள் நித்தியா.
அதை அஞ்சனாவின் கையில் கொடுத்துவிட்டு, அதேபோன்று மற்றும் ஒரு செட்டை எடுத்து வந்தவள் கிருபாரனை நோக்கி வந்து, அப்படியே யூட்டன் அடித்து தங்களது அறைக்கு செல்ல,
அதனைப் பார்த்த கிருபாகரன் “இன்னைக்கு என்ன ஒரு வழி பண்ணாம விட மாட்டா போல…” என்று முணகியவன் “நித்தி!…” என்று அழுத்தமாக அழைக்க
அறைவாசலில் நின்று திரும்பிப் பார்த்தவள் “என்னங்க…!” என்க
“பசிக்குது நித்தி.. விளையாடாம சாப்பாடு போடு…”
“அட இதெல்லாம் உங்களுக்கு தான்.. வாங்க சாப்பிடலாம்…” என்று கையில் இருந்த பாத்திரத்தை கண்ணால் காட்டி அவள் உள்ளே செல்ல
பாவமாக அண்ணங்காரனை திரும்பிப் பார்த்தான் கிருபாகரன். உள்ளே சென்றவள் பாத்திரத்தை வைத்துவிட்டு மீண்டும் அறை வாசலுக்கு வந்து “இந்தாம்மா!.. மூத்த மருமகளே.. இந்த வீட்டுல புருஷன் பொண்டாட்டி அன்னியோன்யம் எல்லாம் அறைக்குள்ள மட்டும் தான் இருக்கணும்.. நீ பாட்டுக்கு இங்க வச்சு உன் புருஷனுக்கு பாசமா பாத்து பாத்து பரிமாறினா அவங்களுக்கு பிடிக்காது.. அதனால என்ன மாதிரியே அறைக்கு கொண்டு போய் ஆசையா, பாசமா, கரிசனையா பரிமாறு…” என்று சொல்ல
அஞ்சனாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது. இருந்தாலும் அடக்கிக் கொண்டு சரி என்று தலையாட்டியவள், பிரபாகரனை பார்க்க, “எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல…” என்றவன் எழுந்து தனது அறைக்கு செல்ல
“ஐயோ அண்ணா! எனக்கு பிரச்சனையே…” என்று கிருபாகரன் சொன்னதை அவன் கண்டு கொண்டதாக தெரியவில்லை.
வேறு வழி இல்லாமல் கிருபாகரனும் எழுந்து அறைக்குள் வர, நமட்டு சிரிப்புடன் தட்டில் சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் நித்தியா.
அறைக்குள் இருந்து சாப்பிடுவது கிருபாகரனுக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. போதாக்குறைக்கு கதவை வேறு அடைத்து விட்டிருந்தாள் நித்தியா.
“நித்தி சொந்த வீட்டுலயே திருடி சாப்பிடுற மாதிரி இருக்குடி..
ஏன்டி இப்படி பண்ற…”
“என்னங்க பண்ணுறேன்.. நீங்க தானே எதுவா இருந்தாலும் ரூமுக்குள்ள இருக்கணும்.. தங்கச்சி கண்ணுல பட்டுச்சுன்னா மனசு கஷ்டப்படும்னு சொன்னீங்க.. இப்போ தாலி வேற கழுத்துல இருக்கு.. நமக்கும் புருஷன் இருக்கு நம்மளால இந்த மாதிரி வாழ முடியலையேனு உங்க தங்கச்சி வருத்தப்படும் இல்ல.. உங்க தங்கச்சி வருத்தப்பட்டா நீங்க வருத்தப்படுவீங்க இல்ல.. உங்களுக்காக நான் யோசிச்சு.. உங்க மனச அறிஞ்சு நடந்துக்கிறேன் என்ன போய் தப்பா பேசுறீங்களே…!” என்று நித்தியா அப்பாவியாக கூற
“அடியே போதும்டி..! புரிஞ்சிடுச்சு..! தப்புதான்.. தங்கச்சி பத்தி அண்ணாவ பத்தி யோசிச்சேன் உன்ன பத்தி யோசிக்கல.. நான் வேணும்னே உன்ன அவாய்ட் பண்ண மாதிரியோ, இல்ல இதெல்லாம் ஆசைப்பட்டு பண்ண மாதிரியோ நினைக்காத.. எனக்கும் எத்தனையோ கனவுகள் எத்தனையோ ஆசைகள் இருக்கு.. ஆனா என் சந்தோஷம் தான் முக்கியம்னு யோசிக்க முடியலடி.. இருந்தாலும் அறைக்குள்ள அன்பையும் அன்னியோன்யத்தையும் வெளிப்படுத்தின நான் சின்ன சின்னதா சரி வெளியில உன்கிட்ட நெருக்கமா இருந்து இருக்கணும்.. போனதெல்லாம் போகட்டும்டி புதுசா ஸ்டார்ட் பண்ணலாம் …”என்று சொல்லி நித்தியாவை நிமிர்ந்து பார்க்க,
நின்ற இடத்தில் அவன் இல்லை. எங்கே என்று அறையில் கண்களை ஓடவிட, அறையின் ஒரு ஓரத்தில் அவன் செருப்பை துடைத்து கொண்டு இருந்தாள்.
“ஏய் என்னடி பண்ற…?” அதிர்ந்தவனாக கேட்க
“என்னங்க எதுக்கெடுத்தாலும் என்ன பண்ற, என்ன பண்றனு.. இத்தன நாளா என்ன பண்ணனுனேனோ அததான் பண்றேன்.. என்ன அறைக்குள்ள பண்றேன்.. உங்க செருப்ப துடைக்கும் போது கூட காதலோட தாங்க துடைப்பேன்.. அத்த காதல் தப்பி தவறி என் கண்ணுல தெரிஞ்சு.. உங்க தங்கச்சி பாத்துட்டா கஷ்டம் இல்ல…” என்றாள்.
அவள் வார்த்தைகளில் நக்கல் கிண்டல் அனைத்தையும் தாண்டி அதிகப்படியான காதலும் வலியும் இருந்ததை கிருபாகரனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் எழுந்து, அவளை நெருங்கி, கையைப் பிடித்து தூக்கியவன் இழுத்து இறுக அணைத்துக் கொண்டான்.
அவனுக்கும் அவள் மீது காதல் இருக்கின்றது தான். ஆனால் அவளைப் போல் காதலிக்க முடியாது என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றாள்.
கிருபாகரன் எது சொன்னாலும் அவன் பேச்சுக்கு மறு பேச்சு அவளிடம் இருந்ததில்லை. அவன் மனம் அறிந்து இத்தனை நாட்கள் அனுசரணையாக நடந்து கொண்டவள். இப்போது கூட அவனை அவனாக இருக்க வைக்கவே இந்த அரும்பாடு படுகின்றாள்.
ஆம் கட்டிய மனைவியிடம் சகஜமாக தன் அன்பை வெளிப்படுத்த முடியாமல் அவன் மறுகி தவிப்பது அவளுக்கும் தெரியுமே. இருவருக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமண தான் ஆனால் திருமணமான நாள் முதல் அதிகப்படியான அன்பை வெளிப்படுத்துவாள் நித்தியா.
அவளது அன்பில் உருகி கரைந்து கிருபாகரனுமே அவளை ஆழமாக நேசிக்க ஆரம்பித்து இருந்தான். அவனுக்குமே சின்ன சின்ன ஆசைகள் நிறைய இருந்தது.
மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு கடைவீதி சுத்த வேண்டும், கோயில் திருவிழாவிற்கு ஒன்றாக செல்ல வேண்டும், வீட்டில் இருக்கும்போது கள்ளத்தனமாக கட்டி பிடிக்க வேண்டும், சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்து அவளை சிவக்க வைக்க வேண்டும், என்று அவனுக்குமே நிறைய நிறைய கனவுகள்.
ஆனால் அவற்றில் சிலவற்றை மட்டும் அறையினுள் வெளிப்படுத்தி விடுவான். நான்கு சுவற்றுக்குள் எத்தனை காதலை வெளிப்படுத்தி விட முடியும், அது இறுதியில் காமத்தில் தான் சென்று முடிந்தது.
அவளுக்காக வாங்கிய பூச்சரத்தை கூட மறைத்து தயக்கமாக கொண்டு வந்து அறையிலுள் தரும் போது நித்தியாவிற்கு அத்தனை ஆதங்கமாக இருக்கும்.
இருந்தும் துர்க்காவின் மனது மாறும் என்று பொறுமை காத்தவள், இப்போது கணவன் தவித்து நின்றானே அன்றி தடைகளை உடைக்க எந்த முயற்சியும் செய்யாத கோபத்தை இவ்வாறு வெளிப்படுத்தினாள்.
ஆனால் கோபத்துக்கு பதிலாக வெளியானது அவள் அளப்பரிய காதல்தான்.
கிருபாகரனின் அணைப்பு அத்தனை இறுக்கமாக இருந்தது. “நித்தி!… நித்தி!…” என்று விடாமல் அவள் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தான்.
அவன் அணைப்பில் மூச்சுமுட்ட, அவனை விலக்கி விட நித்தியா முயற்சிக்க, அவளது முதுகுப்புறம் ஈரமானது.
ஆம் அழுதான், காதல் இருந்தும் மனைவியை இத்தனை நாள் தவிக்க விட்ட தன் மடத்தனத்தை எண்ணி அழுதான்.
நித்தியாவே இதை எதிர்பார்க்கவில்லை. உள்ளம் நெகிழ்ந்து மறுபடியும் அவனுக்காக உருகியது. அவன் வாயை திறந்து சொல்லவில்லை என்றாலும், அவன் காதலும், அவன் தவிப்பும் அவள் அறிவாளே.
“ஏங்க! என்னாச்சு?.. நான் சாதாரணமா தான் சொன்னேன்…” என்று அவன் முதுகை தடவி குடுக்க, அவள் கழுத்து வளைவில் இருந்து முகத்தை எடுத்தவன்,
அவள் முகத்தை தான் இரு கைகளிலும் தாங்கி “சாரிடி!.. சாரி சொல்ல கூட எனக்கு மனசு வரல.. நான் கேட்குற மன்னிப்பு நீ சொன்ன மாதிரி எல்லாத்தையும் மாத்திடாதே.. நீ இழந்ததெல்லாம் மீட்டு தந்துடாது.. நான் என்ன பண்ணனும்னு சொல்லு.. உனக்காக எது வேணாலும் பண்றேன்…” என்று கிருபாகரன் உருக்கமாக கேட்க
“எதுவும் வேணாம்.. கொஞ்சமே கொஞ்சம் மன வருத்தம்.. மத்தபடி நீங்க முயற்சி பண்ணி இருந்தாலும் அவ்வளவு சீக்கிரம் எதுவும் சரியாகி இருக்காதுன்னு எனக்கு தெரியும்.. நான் உங்கள வம்பு பண்ணேன்.. இதுக்கே இப்படி சரண்டர் ஆனா என்னோட மத்த ஐடியா எல்லாம் என்ன பண்றது?…” என்று அந்த சூழலின் இறுக்கத்தை குறைக்க அவள் சிரித்தபடி கேட்க,
“நான் தான் சொன்னேனே.. நான் அவஸ்தைப்படறத பாத்து உன் மனசு ஆறுதல் படும்னா.. நீ என்ன வேணாலும் பண்ணு.. ஐடியா எல்லாம் பாதியில விட வேணாம்.. எல்லாத்தையும் தாங்கிக்க நான் தயாரா தான் இருக்கேன்…” என்று அவன் சொல்ல
“எதுக்கு இப்படி ஒப்பாரி வச்சு ஊர கூட்ட வா…” என்று அவள் கேட்க
தன் முகத்தை அவள் மார்புச் சேலையிலேயே அப்படியும் இப்படியும் புரட்டி துடைத்தவன் “இல்லையே.. நான் அழல.. அப்படி நீ என்னதான் பண்ணிடுறனு நானும் பாக்கிறேன்…” என்றவன் “நித்தி!…” என்று செல்லமாக சிணுங்க
“என்ன?…” என்றாள் தோரணையாக
“முத்தம் கொடுக்கணும் போல இருக்குடி…” என்று ஆசையாக கேட்க
“பாக்க பாவமா இருக்கீங்க.. பொழைச்சு போங்க.. போனா போகுதுன்னு ஒரே ஒரு முத்தம் குடுங்க…” என்று சொன்ன மறு கணமே மலையிலிருந்து விழும் அருவியாக அவள் உதட்டு வழி உயிரினுள் ஊடுருவும் அளவிற்கு இதழ்களை இணைத்துக் கொண்டான்.
நீண்ட, நெடிய, ஆழமான முத்தம். நேற்றைய இரவு முத்தம் போல் தாபம் அதிகமாக இருக்கவில்லை, காதல்தான் அதிகமாக இருந்தது.
ஒற்றை முத்தம் என்று சொல்லி விட்டாளே அதனால் மூச்சு முட்ட முட்ட முத்தமிட்டு கொண்டிருந்தானே அன்றி இதழ்களைப் பிரிக்கும் எண்ணமே அவனுக்கு இல்லை போலும்.
அவன் மூச்சு காற்றை அவளுக்கு வழங்கி, அவள் மூச்சு காற்றை அவன் எடுத்துக் கொண்டு, இதமாக இன்பமாக மீண்டும் மீண்டும் அவளுள் மூழ்கிக் கொண்டிருந்தான்.
*****
இங்கோ பிரபாகரன் அறையில் தட்டு நிறைய உணவு இருந்தாலும், தன் முன் அமர்ந்து கொண்டு தனக்கு உணவு பரிமாறும் அஞ்சனாவைத்தான் விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான் பிரபாகரன்.
எவ்வளவு நேரம்தான் அவன் பார்வை தன்னை தாங்கவில்லை என்று பாவலா செய்வது, அவளையும் கேட்காமல் அவள் கன்னங்கள் வெட்கத்தில் சூடேறி சிவந்து விட, “போதும் மாமா!.. அப்படி பாக்காதீங்க…” என்று சொல்ல
“ஏன் பாக்க கூடாதா?…” என்று அவன் கேட்க
“அப்படி இல்ல மாமா.. முதல்ல சாப்பிடுங்க…” என்று அவள் சொல்ல
“தப்பா எல்லாம் இல்ல செல்லம்மா.. இது போல ஒரு நிகழ்வு நடக்காதானு ஏங்கி, காத்திருந்து.. அது எப்பவும் நடக்காதுன்னு ஆனா பிறகு, இப்போ நிறைவேறவும் கனவு போல இருக்கு…” என்று பிரபாகரன் சொல்ல
தனக்காக எவ்வளவு ஏங்கி இருக்கின்றான் என்று நினைக்கும் போது மனது கனத்தது.
“ஏன் மாமா சாப்பாடு பரிமாறுறதுல என்ன இருக்கு.. ஏன் உங்க சம்சாரம் கையால சாப்பிட்டது இல்லையா?…” என்று கேட்க
அவன் அவளை இமை சிமிட்டாமல் ஆழ்ந்து பார்க்க, அவன் பார்வையின் அர்த்தம் புரியாதவள், பழைய வாழ்க்கையை எடுத்துக் காட்டியதில் கோபம் வந்து விட்டதோ என்று எண்ணி “சரி, சரி.. இனி தினமும் என் கையால தானே சாப்பிட போறீங்க…” என்று சமாளித்தவள்
அவன் மனதை மாற்றும் பொருட்டு தட்டில் இருந்த சாப்பாட்டை எடுத்து அவனுக்கு ஊட்டி விட முனைய, ஆனந்த திகைப்பை கண்களில் காட்டி வாயை திறந்து வாங்கிக் கொண்டான். கண்ணின் ஓரம் துளிர்த்த நீர் மணிகளை அவளுக்கு தெரியாமல் கட்டை விரலால் சுண்டி விட்டுக் கொண்டான் .
அவன் வாழ்ந்த வாழ்க்கை என்னவென்று ஒரு போதும் அவளுக்கு சொல்லக்கூடாது என்ற முடிவை எப்போதோ எடுத்து விட்டான். தெரிந்தாள் அவன் செல்லம்மா தாங்க மாட்டாள் என்று நன்கு தெரியுமே.
தன்னவள் கையினால் வயிறு நிறைய சாப்பிட்டவன், அவளுக்கும் ஊட்டி விட்டு “செல்லம்மா இன்னைக்கு நம்ம ஊர்ல சந்தை.. எட்டு ஊரும் அங்க தான் இருக்கும்.. ஒரு அட்டெணட் போட்டுடு பஞ்சாயத்து தலைவர் கௌரவத்த கதிகலங்க வைப்போம் ரெடியாகு…” என்று சொல்ல
அஞ்சனாவும் தயாராகி வந்தவள் துணைக்கு நித்தியாவையும் அழைக்க, மனைவியுடன் கிருபாகரனும் ஒட்டிக் கொள்ள, நால்வரும் ஜீப்பில் சந்தை நடக்கும் இடத்திற்கு புறப்பட்டனர்.
error: Content is protected !!