Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முதலும் முடிவும் நீயென

முதலும் முடிவும் நீயென! 13

அத்தியாயம் 13

ஒரு சில நொடிகளில் நின்று துடித்தடங்கியது அர்ஜுனின் இதயம். சட்டென மறைத்து விடவும் முடியாமல் அந்த நொடிகளில் கண்கள் அப்பட்டமாய் நிலைபெற்று நின்றிருந்தது அவளிடம் மட்டுமாய்.



Advertisement

அடுத்த நொடி வேறு பக்கம் திரும்பியவன், “இது…” என்று கூற வந்து பின் தன் தொண்டையை சரி செய்து கொண்டவன்,

“இதை பேக் பண்ணிடுங்க!” என்று சொல்லிவிட்டு மீண்டுமாய் “இல்ல ஒரு நிமிஷம்!” என அந்த ஜிமிக்கியை தன் கைகளில் வாங்கிக் கொண்டவன் கலையரசியிடம் திரும்பினான்.

Advertisement

Advertisement

தப்பித்தவறி கூட விஜயலக்ஷ்மி பக்கமாய் திரும்பிட கூடாது என அத்தனை கவனமாய் இருந்தான் அதன்பின்.

காலையில் தான் தோழியின் திருமணத்திற்கு என அன்னையுடன் சென்றிருந்த விஜயலக்ஷ்மி, கலையரசி அழைக்கவே அங்கிருந்து அப்படியே வந்துவிட்டாள் நகைக்கடைக்கு.

Advertisement

“அனுக்காக வாங்கினேன் த்தை!” என கலையரசியிடம் அவன் காட்ட,

“ரொம்ப அழகா இருக்கு ப்பா!” என்றார் அவரும்.

“ஹ்ம்!” என புன்னகைத்தவன் அங்கிருந்தவரிடம் கொடுத்து அனுப்பினான்.

“நானும் அனுக்கு தான் வாங்கலாம்னு வந்தேன். ஒரு கல்யாண வீட்டுக்கு போய்ட்டு அப்படியே வந்தோம்!” என கலையரசி சொல்ல,

“ஓஹ்!” என்றவனுக்கு அங்கிருந்து கிளம்பிவிட்டால் போதும் என்பதை போலிருந்தது.

“அட ப்ரணித்தா! நீயும் வந்திருக்கியா! தூரமா பார்த்தாப்போ அர்ஜுன் மாதிரி இருக்கேன்னு தான் கூப்பிட்டு பார்த்தேன். உன்னை கவனிக்கல டா!” கலையரசி சொல்ல, ப்ரணித்தாவுமே விஜயலக்ஷ்மியின் அலங்காரத்தில் வாயடைத்து நின்றிருந்தவள் பின் அர்ஜுனின் விஜயலக்ஷ்மி மீதான அந்த பார்வையில் என அதிலேயே விக்கித்து நின்றிருந்தாள் கலையரசி அழைக்கும் வரை.

தங்கள் நிச்சயதார்த்தத்தில் என விஜயலக்ஷ்மியை அர்ஜுன் காண நினைத்த அதே கோலம்! 

அடர் சிகப்பு வண்ண பட்டுப்புடவை, ஒருபுறமாய் தோளில் நீண்டிருந்த மல்லிகை, நெற்றியில் சிறு கீற்றாய் சந்தனம் அதன் கீழ் வட்ட வடிவ பொட்டு. கழுத்தில் அவள் எப்பொழுதும் அணிந்திருக்கும் மெல்லிய தங்க சங்கிலியோடு அனன்யாவிற்கு என கலையரசி வாங்க ஆசைப்பட்ட ஆரத்தை விஜயலக்ஷ்மியிடம் கொடுத்து போட்டுக் காட்டு என சொல்லி இருக்க, அதையும் அணிந்து வந்து அப்படி தன்முன் நின்றிருந்தவள் முன் இன்னும் ஒரு நொடி நிற்க முடியாமல் ஏற்கனவே உடைந்திருந்த நெஞ்சைக் கட்டி இழுத்தான் அர்ஜுன்.

“ப்ரணித்தா!” என விஜயலக்ஷ்மியுமே தாமதமாய் தான் கவனித்தாள் அவளை.

சுள்ளேன்று பொங்கி வந்த கோபத்தை அப்படியே காட்டிட முடியவில்லை ப்ரணித்தாவிற்கு. இன்னமும் அர்ஜுன் அவளைப் பார்த்த விதம் கண்ணுக்குள் நின்று பயம் காட்டியது ப்ரணித்தாவை.

“எப்படி இருக்க விஜி?” ப்ரணித்தா கேட்க,

“நல்லாருக்கேன். உங்களை இங்க எதிர்பார்க்கல. ரொம்ப சந்தோஷம்!” என்று நிஜமாய் கூறினாள் விஜயலக்ஷ்மி.

விஜயலக்ஷ்மி அர்ஜுனைப் பார்த்ததும் அவன் தன்னை தற்போது தவிர்ப்பது மட்டும் தெரிந்த பின் என்னவென்று அவனிடம் பேசிட என நினைத்து நின்றவள் அவனோடு ப்ரணித்தாவையும் கண்டதும் சிறு வலி இதயத்தில் ஊடுருவினாலும் இதுவே நிதர்சனமாய் அமைய தான் வேண்டினாள் ப்ரணித்தாவிற்காக மட்டும்.

“போலாமா ப்ரணி! கொஞ்சம் ஒர்க் இருக்கு!” அர்ஜுன் சொல்ல,

தலையசைத்தவள் உடனே நியாபகம் வந்தவளாய், “விஜி! நீ ரிட்டர்ன் எப்ப போனும்?” என்று கேட்க,

“எங்க?” என்றாள் விஜயலக்ஷ்மி புரியாமல்.

“அதான்! யூஎஸ்! அங்க தானே ஒர்க்ல இருக்க?” ப்ரணித்தா கேட்க,

“ப்ச்! சாரி ப்ரணி! உன்கிட்ட சொல்லல இல்ல? நானே கால் பண்ணனும் நினச்சேன். நான் இங்கயே ஒரு ஹாஸ்பிடல்ல ஜாயின் பண்ணிட்டேன்!” என்று மருத்துவமனை பெயரைக் கூற, அதிர்ந்து விழித்தாள் ப்ரணித்தா.

“ஏழு கழுதை வயசாச்சு. இனி எங்க தூரமா அனுப்பி வைக்க?” என்றார் மகளை முறைத்த கலையரசியும்.

“ப்ரணி!” அர்ஜுன் அழைக்க,

“போலாம் மாமா!” என்றாள் அவன் அழைப்பில்.

“வர்றேன் த்தை!” என்று சொல்லி அவன் விடைபெற, செல்லும் இருவரையும் தான் பார்த்து நின்றனர் கலையரசியும் விஜயலக்ஷ்மியும்.

“இந்த பொண்ணும் அம்சமா தான் இருக்கு. அர்ஜுன்க்கும் பொருத்தமா இருக்குற மாதிரி தான் தெரியுது. அனுகிட்ட சொல்லி பார்க்கணும்!” என்ற கலையரசி மகளை மீண்டுமாய் முறைக்க தவறவில்லை அவள் முட்டாள் தனத்தை எண்ணி.

காரில் ஏறியதும் தண்ணீரை எடுத்துக் குடித்தவன் அப்படியே அசையாமல் அமர்ந்திருக்க, “மாமா!” என்று அழைத்தாள் ப்ரணித்தா.

“ஹ்ம்!” என்றவன் ஸ்டீரிங்கில் கைமுட்டிகளை வைத்து தலையைப் தாங்கிக் கொண்டான்.

“என்னா… ச்சு மாமா?” என கேட்கவே பயந்து தவித்து ப்ரணித்தா கேட்க,

“ம்ம்ஹ்ம்ம்!” என தலையசைத்தவன் காரை இயக்க ஆரம்பித்தான்.

“எல்லாரும் சந்தோசமா தான் இருக்காங்க மாமா.. நீங்க தான் இன்னும் இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க!” ப்ரணித்தா சொல்ல அர்ஜுனிடம் அமைதி.

“அனு அண்ணி மேல கூட எனக்கு வருத்தம் தான்!” ப்ரணித்தா சொல்லவும் அர்ஜுன் கேள்வியாய் அவளை திரும்பிப் பார்க்க,

“நான் அனு அண்ணியை பார்க்க போயிருந்தப்போ அவங்க விஜிக்காக ரொம்ப வருத்தப்பட்டு என்கிட்ட பேசினாங்க. விஜி கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லாருக்கும் ஆனா பண்ணிக்க மாட்றானு சொன்னாங்க. என்ன இருந்தாலும்…. கயல் அத்தைக்கு இப்படி ஆக விஜி தானே……” என்று சொல்லும் போதே காரை நிறுத்தி இருந்தான் அர்ஜுன்.

“மாமா!”

“என்ன பேசுற ப்ரணி நீ? இப்படி எதுவும் விஜி நினைச்சுட கூடாதுன்னு தான் அக்காவே அமைதியா இருக்கிறா! ஏன் அம்மாக்கே விஜி மேல வருத்தம் மட்டும் தான் கோபமெல்லாம் இல்ல. தெரியும் தானே?” கோபத்தை மறைத்து பேச நினைத்தாலும் அர்ஜுன் குரலில் காரம் இருந்தது.

“நீயே இப்படி சொன்னா எப்படி ப்ரணி! அனுவும் விஜி மேல கோவமா தான் இருந்தான்னு உனக்கு தெரியாதா? அந்த கோவமும் விஜி முன்னாடியே சொல்லாத கோவம் மட்டும் தான். அம்மாக்கு நடந்தது விதி! அதை மறுபடி இப்படி ஒரு நினைப்போட நீ பார்க்காத பேசாத!” அழுத்தமாய் கூற, அவன் கோபத்தில் விழிகள் தெறித்து விடுவதை போல விழி விரித்து அதிர்ந்திருந்தாள் ப்ரணித்தா.

ப்ச்!” என மீண்டுமாய் நீரை எடுத்துப் பருகினான்.

மனம் ஒருநிலையில் இல்லை. மீண்டும் ஒரு இம்சையான நினைவுடன் அவளை நினைத்துக் கொண்ட அர்ஜுன் திரும்பிப் பார்க்க, அப்பட்டமான பயந்த பார்வை பிரணித்தாவிடம்.

ஆழ்ந்த மூச்செடுத்து விட்டுக் கொண்டவன், “என் நிலைமை எல்லாம் யாருக்குமே வர கூடாது ப்ரணி!” என்று சொல்ல, தன்னை வருத்தும் எதையோ தான் அவன் கூற போகிறான் என தவித்தவள் பயத்தின் உச்சத்தில் இருந்தாள்.

“அடிச்சாலும் அம்மாவை தான் குழந்தை தேடும். அவங்களை தான் கட்டிகிட்டு அழும். அதே நிலைமை தான் எனக்கும். வேண்டவே வேண்டாம்னு நான் நினச்சு ஒதுங்கிப் போக பார்த்தாலும் முடியல என்னால. ஏன்னா அம்மாவை எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவுக்கு அவளையும் பிடிச்சிருந்தது!” என்றவன் இறுக்கமாய் கண்களை மூடி அழுத்தமாய் கைகளை அதில் தேய்த்துக் கொண்டான்.

தன் உணர்வுகளை தனக்குள் அடக்கிக் கொள்ள தான் நினைத்தான். ஆனாலும் முடியவில்லை. மொத்தமாய் கொட்டி தீர்த்திடவும் முடியாமல் மனதுக்குள் தன்னோடு வைத்துக் கொள்ளவும் முடியாமல் என போராட்டமாய் இருந்தது.

“ஆனா எதுவும் வேண்டாம். கேட்க தைரியமும் இல்ல.. நிராகரிப்பை தாங்குற சக்தியும் இல்ல.. கூட வச்சு பார்த்துக்க முடியும்னும் தோணல!” என்றவன் பேச்சின் அர்த்தத்தில் சீட்டோடு ஒன்றி வெறித்தப் பார்வை மட்டுமே ப்ரணித்தாவிடம்.

“மாமா? நீங்க இன்னும்….” என்ற ப்ரணித்தாவிற்கு அந்த கேள்வியை கேட்கவே முடியவில்லை.

“இன்னும் என்ன இன்னும்? எப்பவும் என்னோட காதல் ஒண்ணு தான். ஆனா வேண்டாம். கிடைக்குமானு எல்லாம் தெரியாது. ஆனா கிடைக்க வேண்டாம்னு தான் வேண்டிப்பேன். அம்மா ஆசைப்பட்டது. அவங்க இல்லாம இப்போ எனக்கு கிடைச்சாலும் என்னால நிம்மதியா வாழ முடியாது!” என்று சொல்ல, அடுத்தடுத்த எரிமலைகள் வெடிப்பதை போன்று நெஞ்சம் வெடித்துக் கொண்டிருந்தது ப்ரணித்தாவிற்கு.

“அம்மாக்கு விஜினா ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவங்க எவ்வளவு சந்தோஷப்பட்டாங்க தெரியுமா என்கிட்ட விஜி உனக்கு சம்மதமானு கேட்கும் போது! அவங்களால அந்த இடத்துல என் பக்கத்துல வேற பொண்ணை வச்சு நினச்சு பாக்கவே முடியல கடைசிவரை. அதனால தான் அப்போ நான் பல தடவை கேட்டும் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லியும் அம்மா சரினு சொல்லல!” அந்த நாட்களுக்கே சென்று விட்டவன் போல இருந்தது எங்கோ பார்வையை வெறிக்க பார்த்து பேசிய அவன் குரலும்.

“மாமா! அப்போ நீங்க கல்யாணமே பண்ணிக்க போறதில்லயா?” அதிர்ந்து அதிர்ச்சி விலகாமல் ப்ரணித்தா அவனை மட்டும் பார்த்து கேட்க, சில நொடி மௌனம் காத்தவன்,

“அம்மா சொல்லிருந்தா அன்னைக்கு நிச்சயம் நான் கல்யாணம் பண்ணிருப்பேன். யார் என்னனு கேட்டிருக்க கூட மாட்டேன். ஆனா அம்மாக்கே அதுல விருப்பம் இல்லாதப்போ என்னால மட்டும் இப்போ எப்படி முடியும்?” என்றவன் பதிலில் ப்ரணித்தா ஆடிப் போனாள்.

“மாமா! மாமா… ஒருவேளை… ஒருவேளை விஜி இப்போ சம்மதம் சொன்னா நீங்க… நீங்க என்ன சொல்லுவீங்க மாமா?”

“அவ சொல்ல மாட்டா ப்ரணி! என்கிட்ட சம்மதம் சொல்லிட்டு ஊர் பார்க்க வேண்டாம்னு சொன்னதுக்கு என்ன ரீசன்னு இப்ப வரை என்னால கெஸ் பண்ண முடியல. ஆனா ஸ்டடிஸ் மட்டும் ரீசனா இருக்க வாய்ப்பில்லை!” என அவன் கூறியதில் நாவறண்டது ப்ரணித்தாவிற்கு.

“இனி அவ வேற நான் வேற தான். வேற யாரையும் என்ன அவளையுமே இனி என்னால என் பக்கத்துல வச்சு பார்க்க முடியாது. என் அம்மா ஆசைப்பட்டு பார்க்க நினச்ச என்னோட வாழ்க்கை, இனி அது எனக்கு கிடைக்க போறது இல்லை. கிடைச்சாலும் அம்மா இல்லாம என்னால நிம்மதியா அந்த வாழ்க்கையை வாழ முடியும்னு எனக்கு தோணல” என்றவனின் பதிலில் மூளையெல்லாம் குழம்பிப் போனது ப்ரணித்தாவிற்கு.

“எனக்கு ஸ்வீட்ஸ் ரொம்ப பிடிக்கும். உனக்கு தெரியும் இல்ல? ஆனா நான் இப்ப சாப்பிடுறது இல்ல! ஏன் தெரியுமா?” என பேசியவன் பேச்செல்லாம் அன்னையோடு விஜயலக்ஷ்மியையும் சேர்த்த பேச்சாய் இருக்க, வாயடைத்து அமர்ந்திருந்தாள் ப்ரணித்தா.

“இதோ! இந்த டேஷ்போர்ட்ல அப்போல்லாம் ஸ்வீட் இல்லாத நாளே இல்லை! நான் அவளை விரும்புறேன்னு எனக்கு புரிஞ்ச அப்புறம் விஜி கூட ஃபர்ஸ்ட் டைம் ட்ராவல் பண்ற ஒரு சான்ஸ் கிடைச்சது. ரொம்ப பேசிக்கல அன்னைக்கும். ஆனா அன்னைக்கு பேசின ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் என் நியாபகத்துல இருக்கு. நானே நினைச்சாலும் மறக்க முடியாததா இருக்கு. அன்னைக்கு என்கிட்ட ஸ்வீட்டை பார்த்ததும் கேட்டா. நானும் ஸ்வீட் புடிக்கும்னு சொன்னேன். என் கூட அவளும் சாப்பிட்டா. எப்ப எங்கேஜ்மென்ட் ஸ்டாப் ஆச்சோ அன்னைக்கு இருந்து எனக்கு ஸ்வீட் பார்த்தாலே அவ நியாபகம் தான்! அதனாலேயே என்னால சாப்பிட முடியல. ஆனா அப்புறம் அம்மாவும் இல்ல! எனக்கு வாங்கித் தரவும்…” என்றவன் கைகளை விரிக்க, அர்ஜுனின் அந்த கோலம் ப்ரணித்தாவாலேயே காண முடியாததாய் இருந்தது.

“மாமா! என்ன சொல்றிங்க?” என்றவள் கண்கள் கலங்கியது எங்கே தன் மனதை சொல்லவே முடியாதோ என்ற பயத்தில் மட்டுமாய்.

“முடியல ப்ரணி! எங்கேயாவது போய்டணும்னு இருக்கு. நரகமா இருக்கு. அஃப்டரால் ஒன் சைட் லவ்! அது என்ன செய்யும்னு தோணலாம். எனக்குமே தோணும் இதுக்கேன் இவ்வளவு பீல் பண்ணனும்னு. ஆனா அதுவும் ஒரு உணர்வு தானே?” என்றவன்,

“உனக்கொண்ணு தெரியுமா ப்ரணி? எங்கேஜ்மென்ட் ஃபிக்ஸ் ஆன அன்னைக்கு தான் என்னோட காதலை அவகிட்ட சொல்ல நினைச்சிருந்தேன். அன்னைக்கே அம்மாகிட்ட கூட சொல்லிடனும்னும் நினைச்சிருந்தேன். அடுத்து மூணு மாசம் மேரேஜ் கேப்ல என்னோட லவ் என்னனு அவளுக்கு காட்ட நினைச்சிருந்தேன்!” என்றவன் உதட்டில் சிறு மென்னகை. அவன் மறைக்கும் வலியை அந்த புன்னகை உதிர்த்தது.

“நல்லவேளை அன்னைக்கே ஸ்டாப் பண்ணிட்டா. ஒருவேளை அம்மாக்கு மட்டும் என் லவ் தெரிஞ்சிருந்துச்சுன்னு வச்சுக்கோ!” என்றவன் அகல கண்களை விரித்து தலையை உலுக்கிக் கொண்டான்.

“தாங்கிருக்கவே மாட்டாங்க இல்ல?” என்றவன் கண்கள் முழுதும் நிரம்பி இருந்தது கண்ணீர்.

“உஃப்ப்!” என ஜன்னல் பக்கமாய் மூச்சை இழுத்துவிட்டு கண்களை மூடித் திறக்க, கண்கள் சிவந்துவிட்டது.

“ஓவர் ட்ரீம்ஸ் உடம்புக்காகாது போல!” என அந்த சிவந்த கண்களோடு புன்னகைத்தவனில் நிச்சயம் ஜீவன் இல்லை.

சில நிமிடங்கள் கண்களை மூடி கைகளை கட்டிக் கொண்டு சீட்டோடு சாய்ந்து அமர்ந்துவிட்டவனை விழி இமைக்காது பார்த்து வைத்தாள் ப்ரணித்தா.

கண்களை திறந்தவன் மெதுவாய் ப்ரணித்தாவை திரும்பிப் பார்த்து புன்னகைக்க பதில் செய்கை அவளிடம் இல்லை.

“நீ ஏன் அழுற? ரொம்ப ப்ளேட் போட்டேனா?” கலங்கிய அவள் கண்களைப் பார்த்து கேட்டவன் கொஞ்சம் தெளிந்ததைப் போல, சில நிமிடங்களுக்கு முன் பேசியவன் நான் இல்லை என்பதைப் போல நிதானத்திற்கு வந்திருந்தான்.

“ப்ச்! டைம் ஆச்சுல்ல! நான் வேற! என்னென்னவோ உளறிக்கிட்டு! செம்ம போரா உனக்கு?!” என்றவன் காரை இயக்க ஆரம்பித்தான்.

“சாரி ப்ரணி! எனக்குன்னு நான் வேற யார்கிட்ட பேச?” என புன்னகைத்தவனிடம் அவள் அமைதியாய் இருக்க,

“தீபக்கிட்ட எல்லாம் தப்பித் தவறி கூட வாய் திறக்க மாட்டேன். என் அம்மா மாதிரி என்னைப் பார்த்தே எல்லாம் கண்டு பிடிச்சிடுவான் அந்த ராஸ்கல். அப்புறம் சும்மா இருப்பானா? அதான் அவன்கிட்ட எதுவும் சொல்றது இல்ல!” என்றவன் வலிகளை மறைத்து மீண்டுமாய் புன்னகைக்க ஆரம்பித்திருந்தான்.

அவள் விடுதி முன் அவளை இறக்கிவிட்டவன் “தேங்க்ஸ் ப்ரணி!” என்று சொல்லவும் அவள் திரும்பிப் பார்க்க,

“எனக்கு யாருமே நிலையா இல்லைனாலும் பிரண்ட்ஸ்னு நீங்க கிடைச்சதுல நான் ரொம்ப லக்கி தான்! எப்பவும் என் கூடவே இருக்கனும் நீ, தீபக் எல்லாம். உங்களை மிஸ் பண்ற நிலைமை மட்டும் வரவே கூடாது!” அர்ஜுன் புன்னகையோடு சொல்ல, இதயம் வேகமாய் துடித்தது ப்ரணித்தாவிற்கு. அத்தனைக்கு கோபமும் பெருகியது விஜயலக்ஷ்மியின் மீது.

“மாமா!” ப்ரணித்தா அழைக்க,

“ஹ்ம்!” என்றான் ஜன்னலை மூட இருந்தவன்,

“நீங்க இன்னும் விஜியை விரும்புறீங்க தானே?” இல்லைனு மட்டும் சொல்லிடு என்ற வேண்டுதலோடு ப்ரணித்தா கெஞ்சலாய் பார்த்ததெல்லாம் வீணாக, நொடியும் யோசிக்காமல்,

“அதான் சொன்னேனே! அப்பவும் இப்பவும் எப்பவும்!” என்று புன்னகையோடு அவன் பதிலை கூறி விடைபெற்று கிளம்பி சென்று அவன் கார் கண்களை விட்டு மறைந்த பின்னும் கூட அசையாமல் நின்றுவிட்டாள் ப்ரணித்தா.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!