Skip to content
Post Views: 10,987
அத்தியாயம் 17
“எத்தனை கால் பண்ணினேன்? என்ன பண்ணிட்டு இருந்த?” தன்னைத் தேடி வந்திருந்த விஜயலக்ஷ்மியிடம் கோபமாய் ப்ரணித்தா கேட்க,
Advertisement
“வேலையா இருந்தேன் ப்ரணி!” என்றவளுக்கு அத்தனை தயக்கம். கையில் மொபைலை அழுத்தமாய் பிடித்துக் கொண்டு தன்னை சமாளித்து நின்றாள்.
எதற்காக இதெல்லாம் என நினைக்காமலும் இருக்க முடியவில்லை விஜயலக்ஷ்மிக்கு.
Advertisement
Advertisement
ப்ரணித்தா விடுதியின் முன்பு இருந்த தோட்டத்தில் தான் இருந்தனர் இருவரும்.
“எதுக்காக கால் பண்ணி இருந்த? நான் ஆபீஸ் ஒர்க்ல போனை கவனிக்கல. திரும்ப என்னவோ ஏதோனு நூறு கால் பண்ணினேன். நீ எடுக்கவே இல்ல. அப்புறம் எடுத்ததும் மீட் பண்ணனும் சொல்ற? எதாவது முக்கியமான விஷயமா விஜி?” என்றாள் ப்ரணித்தா.
Advertisement
“ஹ்ம்!” என்றவள் சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டு தன்னை சமாளித்து,
“ஏன் ப்ரணி என்கிட்ட மறைச்ச?” என்று கேட்டதும் திக்கென்ற மனதுடன் அதுவரை இலகுவாய் நின்ற ப்ரணித்தா அதிர்ந்து விழித்தவள்,
“என்ன மறைச்சேன்?” என்றாள் முகம் நிறைந்த பீதியுடன்.
“எங்க வீட்டுல தான் எல்லாரும் மறைச்சுட்டாங்க! நீயாவது கயல் அத்தை இறந்ததை சொல்லி இருக்கலாம் இல்ல?” என்று கேட்க, அதுவே அதிர்ச்சி தான் என்றாலும் வேறெதுவோ என நினைத்தவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது.
“என்னால தான ப்ரணி? நான் மட்டும் அன்னைக்கு எல்லார் முன்னாடியும் அந்த நிச்சயத்தை ஸ்டாப் பண்ணாம இருந்திருந்தா….” என விஜயலக்ஷ்மி கூறும் போதே,
“என்னைப் பாத்திருக்கவே முடியாது நீ!” என முடித்திருந்தாள் ப்ரணித்தா.
“ப்ரணி?” என்று விழித்தவள் அதிர்வில்,
“அவங்க ஹார்ட் பேஷன்ட்னு உனக்கு தெரியாதா? அதுவும் யூஎஸ்ல இருக்க உனக்கு சொல்லணும்னு என்ன அவசியம்?” என்றவள் கேள்வியில் இன்னும் இன்னும் அதிர்வு கூடியது விஜயலக்ஷ்மிக்கு.
“நீ ஏன் இப்படி எல்லாம் நினைக்குற? அவங்க விதி அவ்வளவு தான்னு விடுவியா!” என்ற ப்ரணித்தா,
“நானே உன்னை பார்த்து பேசணும்னு நினைச்சுட்டு தான் இருந்தேன். நீயே கூப்பிட்டுட்ட. ஆமா இப்ப எதுக்காக நீ யூஎஸ்ல இருந்து வந்த? அங்கேயே இன்னும் ஒரு ஒண்ணு ரெண்டு வருஷம் இருந்திருக்கலாம் இல்ல?” என்று கேட்க,
“ஏன் ப்ரணி? என்னால உனக்கு என்ன பிரச்சனை?” என்றாள் விஜயலக்ஷ்மி.
“எனக்கென்ன பிரச்சனையா? எல்லாமே பிரச்சனை தான்! ஹெல்ப் பண்ற மாதிரி உன் கல்யாணத்தை ஸ்டாப் பண்ணிட்டு நீ போய்ட்ட! இங்க எல்லாம் அப்படி அப்படியே தான் இருக்கு. எதுவும் மாறல! நானே மாமாகிட்ட எப்படி பேசனு தெரியாம குழம்பி போய் இருக்கேன். இப்ப நீயும் வந்தா? இதுல என்னால பிரச்சனையான்னு வேற கேட்குற!” என்றவளுக்கு அத்தனை கோபம் விஜயலக்ஷ்மி மீது.
‘எல்லாம் இவளால் மட்டும்! இவள் இல்லை என்றால் அர்ஜுனிடம் தான் என்றோ சேர்ந்திருக்கலாம்’ என்ற எண்ணம் வலுவாகிக் கொண்டே இருந்தது.
அதுவும் அன்று அர்ஜுன் விஜயலக்ஷ்மியைப் பார்த்த பார்வை இப்பொழுதும் கண்களை நிறைத்து தலைவலியை உண்டு பண்ண தவறவில்லை.
“அர்ஜுன்க்கு உன்னை பிடிக்கும்னு சொன்னியே! அப்புறமும் ஏன் இத்தனை வருஷம் உன் லவ்வை சொல்லாம இருக்கனும்? நான் வேணும்னா உனக்காக பேசட்டுமா ப்ரணி?”
“நீ எனக்காக பேச போறியா? யார்கிட்ட? என்னனு?” ப்ரணித்தா கேட்க,
“நேத்து வளையல் போட அர்ஜுன் கூட வந்த தான? அப்ப உன்னையும் அர்ஜுனையும் ஒன்னா பார்த்துட்டு என் அம்மாவும் அண்ணாவும் கூட சொன்னாங்க உங்க ஜோடிப் பொருத்தம் நல்லாருக்குன்னு. அதனால உன் பெரியப்பாகிட்ட பேசி அர்ஜுன்கிட்ட உங்க கல்யாணமா விஷயமா பேசலாமானு யோசிச்சுட்டு இருக்காங்க!” என்று சொல்ல, விரிந்த கண்களோடு ஆச்சர்யம் தாங்காமல் பார்த்த ப்ரணித்தா,
“நிஜமாவா விஜி?” என்று ஆர்வமாய் கேட்க,
“ஹ்ம் ஆமா! ஆனா அர்ஜுன்கிட்ட பேச அனு அண்ணியே பயப்படுறாங்க. அர்ஜுன் ரொம்ப டிப்ரெஸ்டா இருக்காங்களாம் அவங்க அம்மா இறந்ததுல இருந்து! அதான் நான் வேணா பேசி பாக்கட்டுமான்னு கேட்டேன்!” என்று விஜயலக்ஷ்மி கூற, கண்களை அங்கும் இங்கும் சுழற்றி விழித்து நகத்தைக் கடிக்க ஆரம்பித்தாள் ப்ரணித்தா.
‘எப்படி சரி பேசு என்று சொல்ல முடியும்? என்னிடமே அன்று அவ்வளவு பேசினானே! இவளை அனுப்பினால்? அவன் காதலை அவன் கூறி விட்டால்?’ என்று நொடிக்குள் பல கேள்வியும் பயமும்.
“சரி வேண்டாம்! அப்போ உன் பெரியப்பாவையே பேச சொல்லலாம்!” விஜயலக்ஷ்மி கூறவும் அதற்கும் பயந்தவள்,
“வேண்டாம் வேண்டாம் விஜி!” என உடனே மறுத்தாள்.
“விஜி! மாமா அவங்க அம்மா இறந்ததுல இருந்து நார்மலாவே இல்ல! அவங்க யார் சொன்னாலும் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்க!” என்றவள் என்ன சொல்ல வருகிறாள் என விஜயலக்ஷ்மி ஆராயும் பார்வை பார்க்க,
“பட் நீ பேசினா கண்டிப்பா கேட்பாங்க! ஆனா…” என்றவளுக்கு அவளை அனுப்பவும் விருப்பமில்லை. எங்கே வேறெதையும் பேசி பகிர்ந்து கொள்வார்களோ என்ற பயம் கூடவே வேறு யார் பேச்சிற்கும் அவன் செவி சாய்க்க மாட்டானே என்ற பயம் என நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன ப்ரணி!” விஜயலக்ஷ்மி கேட்க,
“ஹான்! அது! மாமா… மாமா ஏற்கனவே ஒரு பொண்ணை கொஞ்ச வருஷம் முன்னாடி லவ் பண்ணினாங்க!” என்றதும் இதென்ன புது கதை என்பதை போல விஜயலக்ஷ்மி பார்க்க,
“ப்ச்! அது ஜஸ்ட் ஒன் சைட் லவ் தான்!” தானே உளறிவிடுவோமோ என பயந்து எப்படி என்னவென்று சொல்லி இவளை அனுப்ப என ஏகத்திற்கும் சிந்தித்தாள் ப்ரணித்தா.
“ஓஹ்! இப்போ எதுக்கு அதெல்லாம்?” விஜயலக்ஷ்மி கேட்க,
“அதுவா… மாமாக்கு ஏற்கனவே லவ் அண்ட் உன்னை நிச்சயம் பண்ண வந்ததுன்னு….” என சொல்லிக் கொண்டிருக்க,
“அனு! உன்னை பார்க்க கெஸ்ட் வந்திருக்காங்க. லாபில வெயிட் பன்றாங்க!” என சொல்லி சென்றாள் ஒரு பெண்.
யாராக இருக்கும் என சிந்தித்தபடி விஜயலக்ஷ்மியோடு அங்கே செல்ல, அர்ஜுன் தான் அங்கே காத்திருந்தான்.
“மாமா!” என்றவளுக்கு இப்போதே நெஞ்சின் படபடப்பு கூடிவிட்டது.
அர்ஜுன் நிதானமாய் விஜயலக்ஷ்மி மொபைலோடு இணைத்திருந்த தன் ப்ளூடூத்தை கட் செய்து காதில் இருந்து எடுத்திருந்தான்.
***********************************
“என்ன சொன்ன? ப்ரணி என்னை விரும்பினாளா?” என அவள் கூறியதை கேட்டு அர்ஜுன் கூர்மையான பார்வையோடு கேட்க, வெறும் தலையசைப்பும் மிரண்ட பார்வையும் என எச்சிலை விழுங்கினாள் அவன் பார்வை கொடுத்த பயத்தில்.
இத்தனை கோபம்! அதுவும் அர்ஜுனிடம்? எதிர்பார்க்கவே இல்லை விஜயலக்ஷ்மி. எதையும் எளிதாய் இலகுவாய் கையாண்டு தானே அவள் பார்த்திருக்கிறாள். அதனால் தானே அவனிடமே ப்ரணித்தாவிற்காக இவள் பேச வந்தது!.
“ஹ்ம்! நல்லாருக்கு! ரொம்ப நல்லாருக்கு! இது யாரோட தாட்? உன் அம்மாவா அண்ணாவா? நீங்களா நினச்சு நீங்களா பேசிப்பிங்களா?” என்றவன்,
“ப்ரணித்தா ப்ரணித்தா ப்ரணித்தா!…. தயவு செஞ்சு இதே மாதிரி அவகிட்ட போய் யாரும் பேசிடாதீங்க! தாங்க மாட்டா! என்னை மாதிரி தான் அவளும்! தனக்குன்னு பேசவோ தான் பேசுறதை கேட்கவோ யாரும் இல்லாம ஒருத்தர் படுற வலி எனக்கு தெரியும்!” என்றவன் சொல்லை கவனித்த விஜயலக்ஷ்மிக்கு ஒரு ஆறுதல்.
ப்ரணித்தாவின் மேல் இந்தளவுக்கு புரிதல் இருக்கிறதே என்ற ஆறுதலில் மனதை திடப்படுத்தி விஜயலக்ஷ்மி பேசத் தயாராக, அவன் கூறிய வார்த்தைகளின் வலியை கவனிக்க தவறிவிட்டாள்.
“நான் அனுகிட்ட பேசிக்கிறேன்! இந்த பேச்சு இத்தோட நிக்கட்டும். ப்ரணித்தாக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் சீக்கிரமே!” என்று சொல்லி நெற்றியில் கை வைத்தவன் வேறுபக்கம் திரும்பிக் கொண்டான்.
‘முதலில் ப்ரணித்தாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையை தன் பெரிய தாய்மாமாவிடம் கொடுக்க வேண்டும்!’ எனவும் நினைத்துக் கொண்டான்.
“என்னை கொஞ்சம் பேச விடுங்க அர்ஜுன்! இது யாரோட தாட்டும் இல்ல! ப்ரணித்தா தான்… அவளே தான் என்கிட்ட என்னைப் பார்த்து சொன்னா! அவ உங்களை தான் லவ் பண்றா! அவளுக்காக இவ்வளவு யோசிக்குற நீங்க அவளை கல்யாணம் பண்ணிக்குறதுல என்னை தப்பு?” என வேகமாய் விஜயலக்ஷ்மி சொல்ல வந்ததை கூறிவிட, அதிர்ந்து நின்றிருந்தான் அர்ஜுன்.
“என்ன சொல்ற நீ? உன்கிட்ட ப்ரணியா? என்ன உலர்ற?”
“சத்தியமா அர்ஜுன்! அவளுக்கு நீங்கன்னா அவ்வளவு இஷ்டம்! நிச்சயதார்த்தம்னு பேசின அப்புறம் ப்ரணித்தா என்னைப் பார்க்க வந்தாங்க!” என்று சொல்ல சொல்ல நம்ப முடியாமல் அதிர்வு மாறாமல் தான் கேட்ட செய்தியில் தலை சுற்றி நின்றிருந்தான்.
“ப்ரணித்தாவா? நிஜமாவா?” என்றவனுக்கு நம்ப கடினமாய் இருந்த போதும் சொல்வது விஜயலக்ஷ்மி எனும் போது அதை நம்பாமல் விடவும் முடியாதே!
எதுவும் தவறான புரிதலாய் இருக்க வேண்டுமே என வேண்டுதல் தான் முதலில் அர்ஜுனிடம்.
“உங்ககிட்ட ப்ரணி பேசணும்னு நினச்ச நேரத்துல தான் உங்களுக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் ஏற்பாடு நடந்திருக்கு. அப்புறம் எப்படி அவ சொல்வா? நீங்க சொன்ன மாதிரி சொல்ல யாருமே இல்லாம தான் ப்ரணித்தா என்கிட்ட வந்து சேர்ந்தது!” விஜயலக்ஷ்மி கூறவும் அர்ஜுனின் சிந்தனையும் அந்த நேரத்திற்கு தாவி இருந்தது.
ஆனால் நிச்சயதார்த்தம் என பேசும் முன்பே இவன் தான் விஜயலக்ஷ்மி மீதான இவன் காதலை ப்ரணித்தாவிடம் கூறி இருந்தானே! அதனால் தான் ப்ரணித்தா தன்னிடம் கூறவில்லையோ! என நினைத்தாலும் அடுத்தடுத்து விஜயலக்ஷ்மி பேச்சில் குழம்பி குழம்பி தான் முழுதாய் அதிர்ந்து தெளிந்தான் தான் அறிந்த உண்மையில்.
“நீங்க கூட நினைச்சிருப்பிங்கல்ல நீங்க கேட்கும் போது கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டு இப்படி பண்ணிட்டாளேன்னு! கயல் அத்தையும் என்னை அப்படி தான் நினைச்சிருப்பாங்கல்ல?” என்றவள் சில நொடி அமைதிக்கு பின்,
“எனக்கு அப்ப வேற வழியே தெரியல அர்ஜுன்! நீங்க உங்க அம்மாக்காக தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருப்பிங்க! நான் இல்லைனா இன்னொரு பொண்ணு அவ்வளவு தானே!” என்ற போதும் அவன் அமைதியாய் பார்த்து தான் நின்றான்.
“ஆனா ப்ரணித்தா பாவம்! அவளுக்குன்னு யார் பேசுவாங்க? நீங்களே சொன்னிங்க தானே? அவளுக்கு பேச யாரும் இல்லைனு? அதனால தான் அவளுக்காக அவ விரும்புறதை அவகிட்ட குடுக்க நினச்சேன்! அவளுக்கு சொந்தம்னு நீங்க எப்பவும் இருக்கனும் நினச்சேன்!”
“ப்ரோமிஸ் அர்ஜுன்! இந்த நிச்சயத்தை ஸ்டாப் பண்ண சொல்லி ரெண்டு நாள் முன்னாடியே உங்ககிட்டயோ அத்தைகிட்டயோ பேச தான் ட்ரை பண்ணினேன்! நான் சொன்னா நடந்துடுமா? அப்புறம் தான் ப்ரணி சொன்னா! எல்லாரும் என்னையும் உங்களையும் கன்வின்ஸ் பண்ணிடுவாங்கனு! அவளுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சாலும் அவ விரும்பினது இல்லைனா அது எப்பவும் இல்லைனு ஆகிடும் தானே?” என்று கூற, கேட்டவன் உச்சபச்ச அதிர்ச்சியில் நிற்பதை அவள் அறியவில்லை.
“அதனால தான் நிச்சயம் அன்னைக்கு எல்லார் முன்னாடியும் சொல்ல சொன்னா! அப்போ நான் ப்ரணியை தவிர வேற யாரையும் நினைக்கல. கயல் அத்தை ஹெல்த் இஸ்ஸுஸ் எல்லாம் எனக்கு நியாபகத்துலயே இல்ல!” என கண் கலங்கியவள்,
“உங்களை எல்லாம் ஃபேஸ் பண்ண முடியாம தான் கிளம்பிட்டேன்!” என்று சொல்லி அர்ஜுனைப் பார்க்க, அவன் இறுகிய முகம் கண்டு எதுவும் புரியவில்லை அவளுக்கு.
“பிரண்ட்டா ப்ரணியை உங்களுக்கு நல்லா தெரியுமே அர்ஜுன்! இப்ப கூட ஒண்ணுமில்ல! ப்ரணிக்கு உங்களை அவ்வளவு பிடிக்கும்! உங்க வாழ்க்கை நிச்சயம் ஹாப்பியா இருக்கும்!” என்றவள்,
“யூஎஸ்ல ரெண்டு வருஷத்துல என் படிப்பு முடியவும் ப்ரணி கால் பண்ணினா!” என அப்போது நடந்ததையும் தான் பார்த்த கோணத்தில் கூறினாள் விஜயலக்ஷ்மி.
“நான் வந்தா எங்க நீங்க டென்ஷன் ஆகிடுவீங்களோனு பயந்து, கயல் அத்தை ஆறு மாசத்துக்கு அப்புறம் கல்யாண விஷயமா பேச சொன்னதா சொல்லி என்னை இந்தியா வர வேண்டாம்னு சொன்னா! நானும் ஒன் இயர் அங்கேயே இருந்துட்டேன்!”
“அத்தை அப்ப உயிரோட இல்லைனு எனக்கு தெரியாதே! இப்ப அவங்க இல்லைனதும் தான் நான் இன்னும் கொஞ்சம் யோசிச்சி பேசியிருக்கனுமோனு தோணுது! ப்ரணி சொன்னதை நான் கேட்டிருக்க கூடாது! முன்னயே பேசி இருக்கனும்!”
இன்னும் ஏன் இவ்வளவு யோசிக்கிறான் என்பதை போல விஜயலக்ஷ்மி மீண்டும் தயங்கி நிற்க, மொத்த பலமும் இழந்தவனாய் சோர்ந்திருந்தான் அர்ஜுன்.
தன்னை சுற்றி இத்தனை பெரிய விஷயம் நடந்திருக்கும் என அறியாதவன் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.
காதலித்தாளா? இது தான் காதலா? ப்ரணித்தாவின் செயல்கள் இப்படி தான் நினைக்க வைத்தது அர்ஜுனை.
தான் விரும்பியது நடக்க என்ன வேண்டுமானாலும் செய்யும் பெண்ணா ப்ரணித்தா? என எண்ணும் போதே அவன் தன் ஒவ்வொரு ரகசியத்தையும் கூட அவளிடம் சொல்லி தன் மனதை இலகுவாக்கிக் கொண்ட கணங்கள் கண் முன் தோன்றி கைகொட்டி சிரித்தது.
ஒரு பெண்ணின் கருணையையும் அக்கறையையும் நம்பிக்கையையும் எப்படி தனக்கு எற்றார் போல பேசி தனக்கு சாதகமாய் அத்தனையும் நிகழ்த்தி இருக்கிறாள்?
இத்தனை வருடங்கள் தன்னையும் அல்லவா முட்டாளாக்கி இருக்கிறாள்? என நினைக்கும் போதே அன்னையின் தோற்றம் மனதில் எழுந்தது.
நீண்ட நேர அவன் அமைதியில், “அர்ஜுன்!” என மெதுவாய் விஜயலக்ஷ்மி அழைக்க, தாங்க இயலா அவன் பார்வையில் இவள் தான் அதிர்ந்தாள்.
ப்ரணித்தா இன்னுமே தன் விருப்பத்தை அர்ஜுனிடம் கூறிடவில்லை. இதற்கு மேலும் தாமதித்து என்ன ஆகிவிட போகிறது? கயல்விழி இல்லை என்றாகிவிட்டது மனதை மொத்தமாய் நொறுக்கி இருக்க, அவரின் ஆன்மா சாந்தியடையவாவது அவர் மகன் திருமணம் அவனை விரும்பும் பெண்ணுடன் அமைய வேண்டும் என நினைத்து தான் அவனிடம் பேசிட வந்ததே!
“அம்மாவும் அண்ணாவும் உங்களுக்காக பேசினாங்க. எவ்வளவு நாள் நீங்க இப்படியே இருப்பிங்க? நீங்க ப்ரணித்தாவை அப்படி நினைக்காம இருக்கலாம்! ஆனா அவளுக்கு உங்களை பிடிக்கும்னா நீங்க ஏன் அதை கண்சிடர் பண்ண கூடாது? ப்ரணித்தாக்காக இவ்வளவு பேசுற உங்களை மாதிரி வேற யார் பார்த்துக்க முடியும்?” தயக்கம் இருந்த போதும் விஜயலக்ஷ்மி கூறிவிட, அவன் பார்த்த விதம் இவளை அசைத்திட்டது.
இப்படி இவ்வளவு நடந்திருக்கும் போதும் எதுவும் தெரியாமல் இருக்கிறாளே என கவலைப்படுவதா இல்லை கொஞ்சமும் தன் சொந்த விருப்பம் முக்கியம் என்று நினைக்காமல் இவளுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு பெண்ணின் வாழ்க்கைக்காக தன்னிடம் கெஞ்சி நிற்கிறாளே என நினைப்பதா? என்று நினைத்தவன் சில நொடிகள் கண்மூடி அமர்ந்துவிட்டான்.
இன்னுமே தெளிவு வேண்டும்! கூடவே கொஞ்சமும் புரியாமல் பேசும் விஜயலக்ஷ்மிக்கும் தெரிய வேண்டும்! என பல சிந்தனைகளுக்கு பின் முடிவுக்கு வந்தவன்,
“ப்ரணித்தாக்கு கால் பண்ணு!” என்றான்.
“ஏன்? நீங்க பேசுங்களேன்! நீங்க நேர்ல பேசினா அவ சந்தோசப்படுவா இல்ல!” என்று உடனே கண்கள் ஒளிர விஜயலக்ஷ்மி கூற,
“கால் பண்ணி பேசணும் சொல்லு! முதல்ல நீ பேசு! அப்புறம் பார்க்கலாம்!” என்றவன் சொல்லின் அடிப்படையில் தான் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.
தொடரும்..
error: Content is protected !!