Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முத்தாயி அம்மாச்சி

முத்தாயி அம்மாச்சி 17.1

அத்தியாயம் 17

“மானூத்து மந்தையில மான்குட்டி பெத்த மயிலே

பொட்டப்புள்ள பொறந்ததுனு பொலிகாட்டில் கூவும் குயிலே



Advertisement

தாய் மாமன் சீர்சுமந்து வாராண்டீ அவன்

தங்க கொலுசு கொண்டு வாராண்டீ…”

Advertisement

தஞ்சாவூரில் அந்த பிரமாண்ட திருமண மண்டபத்திற்குள் மாலதியின் அண்ணன்கள் தங்கள் குடும்பங்களோடு சீர் தட்டை எடுத்து கொண்டு நுழைந்தனர்.

Advertisement

பாட்டு சத்தமும் வேட்டு சத்தமும் காதை கிழித்தது.

Advertisement

அனைவருமே வியக்கும் அளவிற்கு சீர் தட்டுகளை அசத்தி இருந்தனர். மாலதியின் அப்பா அம்மாவிற்கு மகன்களின் செயலில் ஏக பெருமை. தங்கள் பேத்தியின் திருமணம் என்பதில் பெருமகிழ்ச்சி.

சிவங்கரி தான் காணும் இடங்களில் எல்லாம் மாலதியின் அம்மாவை முறைத்து கொண்டு இருந்தார். இவரால் தானே இந்த அவசர கல்யாண ஏற்பாடு என்று கடுப்பு அவருக்கு.

மாலதியின் அம்மாவிற்கு குணமாகிவிட்டது என்று அறிந்ததும் துள்ளி குதித்து கொண்டிருந்த சிவங்கரியை “பாட்டி நீங்க எல்லாம் என்ன சாதாரண பரம்பரையா? முன் வச்ச காலை பின்னாடி வச்சா உங்க கவுரவம் என்ன ஆவது?” என்று பலதும் கூறி அவரை சரி கட்டி இருந்தான் ப்ரதமேஷ்.

மண்டபத்தின் வாயிலில் ஒரு புறம் சௌந்தரும் மாலதியும் சிரித்த முகமாக அனைவரையும் வரவேற்றனர்.

மறு புறம் ஸ்ரீகாந்த்தும் பூம்பாவையும் இன்முகமாக அனைவரையும் வரவேற்றனர்.

ஹாசினி, ரம்யா, ப்ரேம், ப்ரதமேஷ் என்று இளைஞர்கள் அணி ஒன்றாக சேர்ந்து கொண்டார்கள்.

நித்யகல்யாணியும் கந்தசாமியும் தான் எடுத்து கட்டி வேலைகளை கவனித்தனர்.

வரவே மாட்டேன் என்று இருந்த கேசவனை முத்தாயி தான் வற்புறுத்தி திருமணத்திற்கு அழைத்து வந்திருந்தாள். கந்தசாமி கேசவனை அவருடனே வைத்து கொண்டார். அவர் பேத்திக்கு யார் எல்லாம் முக்கியமானவர்களோ, அவருக்கும் அவர்கள் அப்படியே.

———

“எப்பவோ அம்மா சின்ன வயசுல சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு வராம இருக்கிறது நியாமா சித்தி”, என்று காதம்பரியிடம் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீகாந்த்.

“நீங்க என்ன மாமா சம்பந்தமே இல்லாமல் நர்ஸ் அம்மாகூட சண்டை போடறீங்க? நீங்க கேசவப்பா கிட்ட தானே கேட்கணும்?” என்று இடையிட்டாள் முத்து.

‘அவர்கிட்ட எப்படி பேச?’ என்று ஸ்ரீகாந்த் பார்த்த பார்வையில் விரக்தியாக சிரித்தார் கேசவன்.

“இங்க பாருங்க கேசவப்பா, நான் உங்களை மாப்பிள்ளை வீட்டு ஆளா கூப்பிடல, பெண் வீட்டு ஆளா கூப்பிடுறேன். நான் உங்களுக்கு முக்கியம் தானே, அப்ப என் கூட நீங்க வரத்தான் வேண்டும்” என்றாள் கண்டிப்பான குரலில்.

அவரும் சரி என்று ஒப்புக்கொண்டார்.

“என்ன நர்ஸ் அம்மா நீங்க மாப்பிள்ளை வீட்டு ஆளா? பொண்ணு வீட்டு ஆளா?”

“எங்க சித்தி எங்க கூட தான் நிப்பாங்க, மாப்பிள்ளை வீட்டு ஆளா” என்றார் ஸ்ரீகாந்த் உர்ரென்று.

“என்ன மாமா, அவங்க, அவங்க ஆள் கூட வராம உங்க கூடவா வர போறாங்க?

ஹய்யோ ஹய்யோ.. சின்ன பிள்ளை தனமா இல்ல இருக்கு..” என்று ஸ்ரீகாந்த்தை வெறுப்பேற்றி கேசவனை அழைத்து வந்திருந்தாள்.

சிவங்கரி ஒரு வாரம் முன்பே ஊருக்கு வந்து விட்டிருந்தார்.

காதம்பரியும் கேசவனும் நேரே பெண் வீட்டிற்கு தான் சென்றனர். அவர்களை அங்கே விட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்த ஸ்ரீகாந்த்தை சிவங்கரி ஒரு பிடி பிடித்துவிட்டார்.

“எங்க டா உன் தங்க சித்தி? உன் கூடத்தானே வரேன்னு சொல்லி இருந்தா?”

“நீ தான் சித்தப்பாவை கூப்பிடலையே, அதான் அவங்க முத்து வீட்டுக்கு போய்ட்டாங்க”

“டேய், அவருமா வந்திருக்காரு?”

“ஆமா “

“நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர வேண்டியது தானே.. இது என்ன கல்யாணத்துக்கு முன்ன பொண்ணு வீட்டுக்கு போறது. நம்ம மரியாதை என்ன ஆகும்.. நம்மளை பத்தி என்ன நினைப்பாங்க” என்று மூச்சு பிடிக்க பேசிக்கொண்டிருந்தார்.

“சித்தப்பா முத்துக்காக தான் வந்திருக்காரு.. நம்ம வீட்டுக்கு எப்ப வந்தாரு.. அவ்வளவு நோக வச்சிருக்கோம் அவரை..”

“ஏதோ ஒரு சொல் சொன்னா, வருஷக்கணக்கா அதயே பிடிச்சிக்கிட்டு இருக்கிறதா?”

“அந்த சொல்லோட வீரியம் அப்படி… ஒரு துளினாலும் விஷம் விஷம் தானே? இல்லம்மா நான் கூட இத்தனை வருஷத்துல அவர்கிட்ட நேரடியா பேசுனதே இல்ல.. ஆனா முத்து எவ்வளவு நல்லா பேசுறா தெரியுமா அவர்கூட.. நீ என்னை நல்லா வளர்கலம்மா” என்றார் ஸ்ரீகாந்த்.

“என்ன டா இப்படி பேசுற? நீ கல்யாணம் ஆகி கூட மாறல, ஆனா மருமக வரதுக்குள்ள ரொம்பவே மாறிட்ட டா..” என்றார் மோவாயில் கை வைத்து.

“மாற்றம் நல்லது தானே பாட்டி” என்றனர் ஹாசினியம் ஹிருதய்யும்.

“என்னமோ போங்க.. என் பேச்சு எல்லாம் அம்பலம் ஏறுமா” என்று பொருமி கொண்டிருக்கத்தான் அவரால் முடிந்தது.

—————–

சுப முகூர்த்த வேளையில், உற்றாரும் உறவினர் சூழ, மூத்த தம்பதியினரான மாணிக்கவல்லி கார்மேகம் ஜோடி தாலி எடுத்து கொடுக்க சீரும் சிறப்புமாக நடந்தேறியது முத்தாயி-ஹிருதய் திருமணம்.

பெண்ணும் மாப்பிள்ளையும் அவ்வளவு பாந்தமாக இருந்தார்கள். ஜோடி பொருத்தம் அருமையா இருக்கு என்று கூறாதவர்கள் பாக்கி கிடையாது.

முத்து திருமணத்திற்கு என ஒரு வாரமே விடுப்பு எடுத்திருந்தாள். திருமணம் முடிந்து முதலில் பூம்பாவை வீட்டிற்கு தான் அழைத்து வந்தனர். அதில் சிவங்கரிக்கு கொஞ்சம் வருத்தம். நம்ம வீட்டுக்கு தானே முதலில் அழைத்து வரணும், இப்படி இவ அப்பன் வீட்டுக்கு வர மாதிரி ஆயிடுச்சே என்று மகளிடம் புலம்பி கொண்டு தான் வந்தார்.

ஆனால், என்றைக்கும் இல்லாத திருநாளாய், பாவை அனைத்தையும் சிவங்கரியை முன் நிறுத்தியே செய்தார். நீங்க சொல்லுங்க அத்தை என்று அவரை கேட்டு கேட்டு அனைத்தையும் செய்யவே, அவர் மனம் கொஞ்சம் சமாதானம் அடைந்தது.

கல்யாண செளவு முழுவதையும் இவர்கள் பகிர்ந்து கொள்வதாக கூறியும் பெண் வீட்டினர் மறுத்து தாங்களே பார்த்து கொண்டனர்.

“நீங்க சீர்ன்னு எதையுமே எதிர் பார்க்கல. எங்களுக்கு தெரியும் இப்ப நீங்க கல்யாணத்துக்கு தயாராவே இல்லன்னு. அதனால் கல்யாண செலவு நாங்க செய்றது தான் முறை” என்று சௌந்தரும் மாலதியும் கூறிவிட்டனர்.

இருபது நாளிலே கல்யாணம் எனவே யாருக்கும் நேரமே இல்லை. கந்தசாமி கல்யாண வேலைகளை கவனிக்கையில் அவரது வேலைகள் அனைத்தும் ஹிருதய் பார்த்துக்கொண்டான். கல்லூரிக்கு விடுப்பு எடுப்பதற்காக சப்மிட் செய்ய வேண்டிய ப்ராஜெக்ட்கள் முடிக்கவேண்டும் என்று முத்தாயியும் பிஸியாக இருந்தாள். இருவருக்கும் பேசவே நேரம் இருக்கவில்லை.

———–

அன்று இரவு தனிமையில் சந்தித்த இருவருக்கும் அப்பாடா என்று இருந்தது.

முத்து, கால் நீட்டி கட்டிலில் அமர்ந்து விட்டாள்.

ஹிருதய்யும் கட்டில் அருகிலே ஒரு சேர் போட்டு அமர்ந்து காலை கட்டிலில் மேலே நீட்டி அமர்ந்து கொண்டான்.

இருவர் கால்களும் பக்கம் பக்கம் இருந்து.

இருவருமே சில நிமிடங்கள் இருவர் பாதங்களையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“முத்து எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு.. எத்தனை சொந்தகாரங்க உங்களுக்கு.. எல்லார் கால்லயும் விழுந்து விழுந்து எனக்கு இடுப்பு முதுகு கால் எல்லாமே வலிக்குது..” என்று கூறினான் ஹிருதய். உண்மையிலே அவன் அலண்டு விட்டான். எப்பொழுதுடா விடுவார்கள் என்ற நிலைமைக்கு வந்துவிட்டான்.

இரவு அறைக்கு வருவதற்கு முன்பு கூட பெரியவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு போங்கப்பா என்று கந்தசாமி கூறவும், மிரண்டு விழித்தான். அதனை கவனிக்க தான் யாரும் இல்லை.

முத்துவுக்கு களைப்பாக இருந்தாலும், ஹிருத்யயை பார்க்கவே பாவமாக இருந்தது. அவன் நல்ல சிவப்பு நிறம். சோர்வில் அவனது முகம் இன்னும் சிவப்பாக தெரிந்தது.

“எனக்கு என்ன கவலைன்னா, இந்த ப்ர்ஸ்ட் நைட் செட் அப் எல்லாம் ஒரு தடவை தான் செய்வாங்க இல்லையா?” என்றாள் முத்து சீரியசாக.

“இது என்ன கேள்வி?” என்று தன் புது மனைவியை பார்த்தான் ஹிருதய்.

“இல்ல உங்களை பார்த்தாலே புரியுது, இன்னிக்கு நம்ம ரெண்டு பேரும் எப்படியும் தூங்கத்தான் போறோம். இது எல்லாம் திரும்ப பண்ண மாட்டாங்க இல்ல அதான்..”

ஹிருதய் பாவமாக முழிக்கவும்,

“விடுங்க விடுங்க பார்த்துக்கலாம்.. நம்ம உண்மையான ப்ர்ஸ்ட் நைட் நடக்கும் போது நாமளே அலங்காரம் எல்லாம் பண்ணிக்கலாம். இது கொஞ்சம் சுமாராத்தான் இருக்கு” என்றாள் கணவனை சமாதானம் செய்யும் பொருட்டு.

அவளது பேச்சை கேட்க கேட்க களைப்பு குறைவதாக தோன்றியது ஹிருதய்க்கு.

“எல்லாரையும் மாதிரி நீங்களும் முத்துன்னு கூப்பிடறீங்க.. வித்யாசமா கூப்பிடுவீங்கன்னு நான் நினைச்சேன்..”

“எங்க அப்பா எங்க அம்மவை ஹனின்னு தான் கூப்பிடுவாரு.. எங்க அம்மாவுக்கு அவங்க பேரை சொல்லி கூப்பிடலைன்னு வருத்தம்.. அதான் உனக்கு பேர் சொல்லி கூப்பிட்ட தான் பிடிக்கும்முன்னு நினச்சேன்..”

“நீங்க வேற பேர் சொல்லி கூப்பிட்டிருந்தீங்கனா, நானும் அப்படி கேட்டிருப்பேன். இது தான் உலக பெண்கள் மனசு.. அதாவது கணவர் என்ன செஞ்சாலும் அதுக்கு ஆப்போசிட்டா ஒன்னை எதிர் பார்க்கிறது..”

“ஒரே நாள்ல எப்படி பேர் வைக்க முடியும், எனக்கு தோணும்போது வேற பெயர் சொல்லி கூப்பிடறேன். அது வரைக்கும் முத்துன்னே கூப்பிடறேனே?”

“சரி சரி… நான் உங்களை எப்படி கூப்பிட?”

“உனக்கு பிடிச்ச மாதிரி கூப்பிடு.. “

“தயான்னு கூப்பிடவா?”

“ஓகே..” என்றான் கொட்டாவி விட்டு கொண்டே.

இருங்க வரேன் என்று முத்து அந்த அறையில் இருந்த குளியலறைக்கு சென்று ஒரு வாளியில் வெந்நீர் எடுத்து கொண்டு வந்தாள்.

“கொஞ்ச நேரம் இதுல காலை வச்சுக்கோங்க தயா..” என்றாள் அக்கறையாக.

“உனக்கும் வலிக்கும் தானே, நீ முதல்ல வச்சுக்கோ முத்து ..”

“எனக்கு இது எல்லாம் பழக்கம் தான். தூங்கி எழுந்தா சரி ஆயிடும்.. நீங்க வைங்க” என்று அவளே அவனது கால்களை எடுத்து வாளிக்குள் வைத்தாள்.

“எனக்கு தூக்கம் ரொம்ப வருது.. இருங்க, கால் வலி அதிகமா இருந்தா அப்புறம் குடையும்.. தூக்கம் நல்லா வராது.. ஒரு பத்து நிமிஷம்..”

“அதுவரைக்கும் எதாவது பேசு முத்து… இல்லன்னா அப்படியே தூங்கிடுவேன் போல.. நாம் இன்னும் ஒண்ணுமே பேசலையே? அடுத்து என்ன செய்ய போறோம்? உனக்கு காலேஜ் இன்னும் ஒரு வருஷம் இருக்கே.. நீ அதுவரை எங்க வீட்ல இருக்கியா?”

“உங்க வீட்லன்னா?”

“சென்னையில எங்க வீடு இப்ப பூட்டி தான் வச்சிருக்கோம். நான் இங்க கொஞ்ச நாள் அங்க கொஞ்ச நாள்னு இருந்துக்கவா?”

“உங்க பிசினெஸ் ஆரம்பிக்க எங்க இருந்தா உங்களுக்கு வசதி? எல்லாத்தையும் பார்க்கணும் இல்ல?”

“ஓரளவுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டுத்தான் இருக்கேன். உன்கிட்ட அது பத்தி பேசவே நேரம் இல்லை… கல்யாண ஏற்பாடுகளால வேற எதையுமே யோசிக்கவும் முடியல, பேசவும் முடியல “

“பிரீயா விடுங்க தயா.. இன்னும் ஒரு வாரம் எனக்கு லீவிருக்கு.. பேசுவோம்.. இப்ப ரெஸ்ட் எடுங்க.. எதுவும் அவசரம் இல்லை.. மெதுவா பொறுமையா ஒன்னொன்னா செய்யலாம் சரியா”

வெந்நீரில் கால் வைத்தது உண்மையிலே சுகமாகத்தான் இருந்தது.

“தேங்க்ஸ் முத்து..”

சிரித்து கொண்டாள் பெண்.

அதற்கு மேலே இருவரும் பேசவில்லை. இருந்த அசதியில் அப்படியே தூங்கி விட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!