Skip to content
Post Views: 168
ஆனால் போக போக இந்த குடைச்சல் தொடர்ந்து கொண்டே இருந்தது. முன்பு ராஜி இருக்கும் போது திட்டிய காந்திமதி, இப்போது அவளில்லாததாலும் திட்ட துவங்கிவிட்டார்.
செந்திலிடம் பேசியது பத்தாது என, ராஜியை பற்றி இல்லாததும், பொல்லாததுமாய், பக்கத்து வீடு, அடுத்த வீடு என அசிங்கபடுத்தவும் ஆரம்பித்து விட்டார். இதெல்லாம் செந்திலின் காதுகளுக்கும் வந்து சேர நிலை குலைந்து போனான். இப்போ அதை நினைத்தபடி தான் படுத்திருந்தான்.
எப்போதும் அழுது ஊரை கூட்டும் குழந்தைகளின் சத்தம் இல்லாமல், அவர்களது அறையே ஐசியூ வார்ட் போல இருந்தது. எடுப்பார் இல்லாமல் கூடையில் கிடக்கும் பொம்மைகளின் நடுவே மகிழ்ச்சியை தொலைத்துவிட்டான்.
சதா சலசலவென பேசிக்கொண்டே இருக்கும் ராஜியின் குரல் கேட்காமல் மயானமாய் தெரிந்தது அந்த வீடு. பெண் மௌனமானால் வீடு மயானமாகும் என்பதை நிரூபிப்பது போல் இருந்தது மனைவி இல்லா வீடு.
Advertisement
மொத்தத்தில் வீடு, வீடு என அலைந்தவனுக்கு மனைவி மக்கள் இல்லாமல் வீடிருந்தும் பயனில்லை என தாமதமாய் தான் கண்டு கொண்டான்.
சுத்தமாய் துவைத்த உடைகளை அழகாய் அயன் செய்து அடுக்கி வைத்து, வேலைக்கு செல்லும் நேரத்திற்கு முன்பே தயாராய் அவனுக்கு பிடித்த பதார்த்தங்களை செய்து கைகாட்டி வழியனுப்பும் ராஜி தேவதையாய் கண் முன் வந்து போனாள்.
‘பொண்டாட்டி இருக்கும் போது யாருக்கும் அருமை புரியாது, போனா தான் புரியும்’ எங்கோ யார் மூலமோ கேட்ட வார்த்தைகள் நியாபகத்தில் வந்து போனது.
Advertisement
*******
Advertisement
இங்கே ராஜியின் நிலை படுமோசம். கணவன், குழந்தை என ஏதோ பொறுப்புகளோடு ஓடிக்கொண்டிருந்தவள், குழந்தைகளை மட்டும் ஏற்று கொண்டு, கணவனை அப்படியே இறக்கிவிட்டுவிட்டு அவள் செய்து கொண்டிருக்கும் பயணம் மிக மோசமானதாய் இருந்தது. பத்து ரூபாயக்கு கூட கணக்கு கேட்கும் வசந்தாவிடம் மாட்டிக்கொண்டு விழித்தாள் ராஜி.
ஏனெனில் அவள் செய்து வேலைகள் அப்படி. புடவை விற்கும் அக்கா, கவரிங் நகை விற்கும் ஆண்டி, கடைக்கார அன்னாச்சி என ஆங்காங்கே ராஜி வாங்கி வைத்திருந்த கடன்கள் தான் இத்தனைக்கும் காரணம்.
இதையெல்லாம் வசந்தா கண்டுபிடித்து ஆடி தீர்த்துவிட்டார். “எவளாவது கவரிங் நகையை இவ்வளவு விலை கொடுத்து வாங்குவளா? அதுவும் கடனுக்கு”
Advertisement
“யாராவது கடனுக்கு போய் புடவை இவ்வளவு எடுப்பாங்களா? வேலைக்கு கூட போகத உனக்கு எதுக்கு இத்தனை புடவை! இவ்வளவு புடவையை வச்சிட்டு நீ என்னடி பண்ணுவ?” சொல்லி சொல்லி ராஜியை குத்தி காட்டிகொண்டிருந்தார் வசந்தா. ஒரு காலத்தில் தானும் இதை தான் செய்தோம் என்பதை மறந்து, மகளை வாட்டி எடுத்தார்.
இருந்தும் மகளை கை விடுபவரா வசந்தா? கிரி அனுப்பும் முப்பாதியிரத்தில் மிச்சபடுத்தி இந்த மூன்று மாதத்தில் சில்லறை கடன்களை எல்லாம் அடைத்துவிட்டார். ஆனால் அடைப்பதற்குள் அவர் வாயை அடக்க முடியாமல் சோர்ந்து போனாள் ராஜி.
திட்டுவது ஒரு பக்கமிருந்தாலும், கடனிலிருந்து மகளை மீட்டு கொண்டு வந்தார். அனாவசிய செலவுகளை குறைத்து கொண்டு வசந்தா, ராஜி குழந்தைகள் என அவர்களது வாழ்வு சுமூகமாய் ஓட துவங்கி இருந்தது.
கிரி சொன்னது போல, வசந்தா வட்டிக்கு விட்ட இடங்களில் எல்லாம் திருப்பி பணத்தை கொடுக்கும்படி கூறியிருக்க, கால அவகாசம் கேட்டிருந்தனர் கடன் வாங்கியவர்கள்.
இப்படியிருக்கையில் கையில் மகனை பிடித்து கொண்டு, காய்கறி வாங்க மார்க்கெட் வந்திருந்தாள் ராஜி. ‘கடந்து போகும் கடைகளில் கை காட்டி ஏதாவது கேட்டு கொண்டே இருந்தான் மகன்..’
‘போகும் போது ஐஸ்கீரிம் வாங்கி தரேன்டா.. இப்போ அமைதியா வா’ என ராஜி சொல்லி கொண்டிருக்கையிலேயே, எதிரில் பைக்கில் வந்து கொண்டிருந்த செந்திலை கண்டு கொண்ட மகனோ, “ம்மா.. அப்பா..” என கூக்குரல் இட்டுவிட, அந்த குரல் செந்திலின் காதுகளை எட்டி, ராஜியை இவன் விழிகள் தேடி பிடித்திட, செந்திலை இவள் விழிகள் பிடித்துவிட்டது. மகனுக்கோ அப்பாவை பார்த்துவிட்டதில் ஏக குஷி.
செந்திலும் அது போல தானோ என்னவோ? மகனின் குரலில் வண்டியை பிரேக்கடித்து நிறுத்திவிட்டான். ஓரிரு நொடிகள் மகனின் மீது பார்வை நிலைத்தது, மறு நொடி செந்தில் பைக்கை ஓரமாய் நிறுத்திவிட்டு ரோட்டை கடந்து மகனிடம் வர, ராஜியின் கையை உதறிவிட்டு ‘ப்பா..’ என துள்ளி ஓடி, செந்திலின் கைக்குள் தாவி புகுந்தான்.
“கண்ணா..” என அழைத்த செந்தில், மகனின் முகத்தில் எண்ணிலடங்கா முத்தத்தை வைக்க, ராஜியோ அவர்கள் முன் பார்த்தும் பார்க்கததும் போல ஏதோ மூன்றாம் மனிதனாய் நின்றிருந்தாள்.
“பாப்பா எங்கடா” என செந்தில் கேட்க
“பாப்பா தூங்கிட்டா.. அம்மாச்சிட்ட விட்டுட்டு மார்கெட் வந்தோம்” என இவன் கூற, செந்திலின் பார்வையோ ராஜியிடம் பாய்ந்தது.
எப்போதும் திமிரான தோரனையுடன் பளிச் என இருப்பவள், நலிந்த ஆடை, ஒளியில்லாத முகமுமாய் ஓய்ந்து காணப்பட்டாள். ஏன் இவள் இப்படி இருக்கிறாள் என அவளையே பார்த்திருந்தான். செந்திலின் பார்வை தன் மேல் தான் படுகிறது என உணர்ந்தவள் “டேய், வர்றியா.. இல்லை நான் போகவா” என மகனை மிரட்ட..
“அப்பா.. ஐஸ்கிரீம் வாங்கி தாப்பா.. அம்மா ஒன்னுமே வாங்கி தர மாட்றா” என்ற மகனின் ஏக்கம் கண்டு, பக்கத்தில் எங்கே ஐஸ்கிரீம் கடை இருக்கிறது என இவன் தேட துவங்கிட
“வான்னா.. வர மாட்டியா நீ.. இப்ப நீ வரலை.. அப்படியே அவர் கூடவே போய்டு” என சொல்லிவிட்டு, செந்திலை தாண்டி கொண்டு இவள் நடக்க, உதடுபிதுக்கிய மகனோ, செந்திலின் கைகளில் இருந்து திமிறிகொண்டு இறங்கி, ஓடி போய் ராஜியின் கையை பிடித்து கொண்டான்.
செந்தில் செய்வதறியாது நிற்க, மகனோ செந்திலை திரும்பி திரும்பி பார்த்த வண்ணம் ராஜியோடு சென்று கொண்டிருந்தான். இங்கே பிரச்சனை என்னவென்றே தெரியாமல் பாதிக்கப்பட்டவன் ஆனான் அந்த சிறுபாலகன். தன் பார்வையிலிருந்து அவர்கள் மறையும் மட்டும் அங்கேயே நின்றிருந்தான் செந்தில்.
**********
இப்படியே யாருக்காகவும் நிற்காமல் என் கடமையை நான் செய்து கொண்டிருப்பேன் என கிழமைகள். கடந்து கொண்டிருக்க, கமலி வேலைபார்க்கும் கல்லூரியில் செமஸ்டர் விடுமுறை விட்டிருக்க, தாய் வீடு வந்து சேர்ந்தாள் கமலி.
எண்பத்தெட்டு கிலோவில் இருந்து எழுபத்தைந்து கிலோவாக குறைந்து வந்திருந்த மகளை பார்த்து “என்னடி இப்படி மெலிஞ்சு போய்ட்ட..” அதிர்ந்த தாய்க்கு “உன் சாப்பாட ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் மா” என கட்டிக்கொண்டாள்.
“அத்த” என அழைத்து ஓடி வந்து மருமகனையும் “செல்லகுட்டி” என அள்ளி அணைத்து தூக்கி கொண்டாள்.
சமையலறையை விட்டு வெளியே வந்த பிரபா மட்டும் கண்களை சுருக்கி இவளை பார்க்க, “பிரபா.. கமலிக்கு காபி கொண்டு வாம்மா” என மெலிந்து வந்த மகளை கண்ட அதிருப்தியில், மறந்து போய் பிரபாவை வேலை வாங்கினார் மல்லிகா.
பதிலுக்கு சரியென கூட சொல்லாத பிரபா, ‘வந்துட்டா மகாராணி, காணாததை கண்டது போல தலையில தூக்கி வச்சு ஆடுவாங்க. இனி இவ எப்ப ஊருக்கு போக போறாளோ?’ என சலிப்பாய் சலித்து விட்டு சமையலறைக்குள்ளேயே சென்றுவிட்டாள்.
மல்லிகாவின் சத்தத்தில் வெளியே வந்த கர்ணனோ, அவளை ஆச்சர்யமாய் பார்த்துவிட்டு “மாடு என்ன செம்மறிஆடா மாறிடுச்சு” என தலையில் குட்ட, இவளோ “ண்ணா.. போடா” என அவனை முறைத்து வைத்தாள்.
“பிள்ளைய தலையில அடிக்காதன்னு எத்தனை முறை தாண்டா சொல்றது” மல்லிகா கர்ணனை துட்ட துவங்க
அதை தடுப்பது போல் “டேய், கர்ணா.. போய், கறி வாங்கிட்டு, அப்படியே மீன் வாங்கிட்டு வாடா?” என ஆர்டர் போட்டார் செல்வம்.
“ஆடு, மீனு மட்டும் போதுமா? வேற தாவுறது தவ்வுறது எதுவும் வாங்கனுமா” என கமலியை இவன் மேலும் கேலி செய்ய
“ம்.. பிரான் வாங்கிட்டு வான்னா.. அம்மா கையால சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு” என சீரியஸாகவே இவள் சொல்ல,
“பிரபா.. காபி போட இவ்வளவு நேரமா” என்ற மல்லிகாவின் குரலில் சமையலறையில் அதிகமாய் உருட்டும் சத்தமும் கேட்டிட, ஒரு கனம் நிதானித்தாள் கமலி.
தன் வீட்டிலும்.. இல்லையில்லை தன் கணவனின் வீட்டில் தானும் இதே பிரபாவின் இடத்தில் தானே இருந்தாள்.
தனக்கு வீட்டோடு இருக்கும் நாத்தனார், பிரபாவிற்கு ஹாஸ்டலில் இருக்கும் நாத்தனார் அவ்வளவு தான் வித்யாசமே, மெலிதாய் வளைந்தது கமலியின் இதழ்கள்.
அதற்குள் கமலியின் அருகில் வந்த கர்ணா “உடம்பு சரியில்லையா கமலி.. ஏன் இப்படி மெலிஞ்சுட்ட” என கேட்டபடி, அவளை சோபாவில் அமர்த்தி தானும் அருகில் அமரந்தான்.
“திடீர்னு பாசமெல்லாம் காட்டாத, உனக்கு செட்டாகலடா அண்ணா..” என இவள் பேச
“அதான நீயாவது திருந்துறதாவது, ரொம்ப மெலிஞ்சு போய்ட்டியேனு கவலையா கேட்டா, பேச்சை பாரு.. போடி எருமமாடு” என இவன் திட்ட
“உடம்புக்கு ஏதும் இல்லைன்னா, அப்புறம் ஏன்மா இவ்வளவு மெலிஞ்சிட்ட” செல்வமும் கேட்டிட
“விட்டா ஆளாளுக்கு ஏதாவது நோயை என் தலையில் கட்டிடுவீங்க போல, நோய் வந்தா மட்டுமில்ல, ஜிம் போனாலும் வெயிட் லாஸ் ஆகும், தெரியுமா” என்றாள் அசட்டையாய்.
“என்ன? ஜிம் போறியா?” என குடும்பமே அதிர,
“நீ ஏண்டி போற..” தாய் தந்தையை மிஞ்சி கொண்டு சத்தமாய் கேட்டான் கர்ணா.
“ப்ரண்டுக்காக துணைக்கு போனேன் ணா.. எனக்கும் வெயிட்டை குறைக்க ஆசையா இருந்தது அதான் ஜிம் போனேன்” என பாதி உண்மை, பாதி பொய் என கலந்து கட்டி அடித்தாள்.
error: Content is protected !!