Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 27 2

நீட்டிய விரலை இவள் இறுக பிடித்து இழுக்க, சுவற்றில் சாய்ந்திருந்தவளின் மேல் வந்து விழுந்தவனை, இடைவழியே கையிட்டு அவனை இறுக அணைத்து கொண்டாள் கமலி.

“எனக்கு பயமா இருக்கு கிரி. ஒரு வேளை நான் திரும்பவும் வெயிட் போட்டுட்டா, இதே மாதிரி லவ், அபக்‌ஷன் என்கிட்ட இருக்குமா கிரி!” அவன் நெஞ்சுக்குள் இருந்தபடியே இவள் கேட்க

அவள் வார்த்தைகளில் பட்டென அவளை தன்னைவிட்டு பிரித்து தள்ளி நிறுத்தி “அப்படின்னா.. நான் உன் மேல வச்சிருக்கிறது  லவ் தான்னு உனக்கு புரிஞ்சிடுச்சுல்ல” கேட்டவனின் முகத்தில் அத்தனை பரவசம்.

இமை தட்டி தட்டி இவனை பார்த்தாள் கமலி. இவள் கேட்டது என்ன? இப்போது இவன் கேட்பது என்ன?” திரு திருத்து நின்றவளின் முகத்தை கையில் ஏந்தி அவள் நெற்றியில் முதல் முத்தத்தை பதித்து, “ஒரே ஒரு முறை வாழ்ந்து தான் பார்ப்போமே கமலி. என்னை நம்புடி” என இவன் கேட்க “திரும்ப தனியா விட்டுட்டு போக மாட்டீங்கல்ல” மீண்டுமாய் தவித்து வந்தது வார்த்தைகள்.



Advertisement

ஏந்திய முகத்தின் தாடையை இறுக பிடித்து ‘ஏண்டி இந்த நம்பிக்கை மட்டும் என மேல வரவே வராதா?’ என்றபடி கோபமாய் பார்த்தவன்

“ஒரு வேளை இப்போ உன்கிட்ட ‘போக மாட்டேன்னு’ உறுதி கொடுத்திட்டு, பிறகு உன்னை விட்டுட்டு ஒரேயடியா போயிட்டா என்னடி பண்ணுவ” என கேட்டு முடிக்கையில், கிரியின் கன்னம் எரிந்தது. சப்பென அறைந்திருந்தாள் அவனை.

அடித்தது கமலியா, ஷாக்கா? என தெரியாமல் அதிர்ந்து போய் அவளை பார்க்க, கோபத்தில் மூக்கு முகமெல்லாம் சிவந்து போக, அவனது டீசர்ட்டின் காலரை பிடித்து வேகமாய் இழுத்து “ஒருவேளை என்னை விட்டு போறதா இருந்தா என்னை கொன்னுட்டு போயிடுங்க. இல்லை எங்க இருந்தாலும் உங்களை தேடி வந்து உயிரோட கொன்னுடுவேன்” ரௌத்திரத்தோடு கத்தியவள், அவனில் இருந்து தன் கைகளை பிரித்து கொண்டு, தடதடவென படிகளில் இறங்கி, கேட்டை திறந்து தன் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டாள்.

Advertisement

கிரி பேசிய எத்தனையோ வார்த்தைகளை அசால்ட்டாய் கடந்து வந்தவளுக்கு ‘விட்டு போனால் என்ன செய்வாய்’ என கேட்ட கிரியின் வார்த்தைகளை தாண்டி அவளால் வரவே முடியவில்லை.

Advertisement

முன்பு இவள் நினைத்த போது கிடைக்காத கிரியின் நெருக்கமும், இப்போது இவளே விலக்கி வைக்கையில் கிடைத்த மறுக்க முடியாத நெருக்கமும் அவளை இரு தலை கொள்ளியாய் பந்தாடியது.

மொத்தத்தில் அவனை விலக்கவும் முடியாமல், நெருங்கவும் முடியாமல் தத்தளித்து போனாள். அவள் எண்ணங்களை தடுப்பது போல் பலமாய்  ஒலித்த ஹாரன் சத்தத்தில் திடுக்கிட்டு இவள் தன் வெஸ்பாவை பட்டென பிரேக் அடித்து நிறுத்திவிட, அவளுக்கு முன்பாக சடன் பிரேக் போட்டு தன் யூனிகார்னை அழுத்தி நிறுத்தினான் கிரி.

இவனென தெரிந்து பலத்த முறைப்பொன்றை இவனுக்கு கொடுத்துவிட்டு, பைக்கை ஒடித்து திருப்பி இவள் மீண்டும் முன் செல்ல, அதற்கு அப்படியே எதிர்பதமாய் வில்லனாய் சிரித்தபடி பைக்கில் இவனும் பின் தொடர்ந்தான் அவளை.

Advertisement

அவன் சிரிப்பை வினோதமாய் பார்த்து ‘கன்னம் பழுக்க, அடிச்சிட்டு வந்திருக்கேன். இவனென்ன இப்படி சிரிச்சிட்டு வரான்’ என யோசனையில் வண்டியை ஓட்டினாள் கமலி.

******

கமலி வீட்டு போர்டிகோவில் நின்றிருந்தனர் இருவரும். அவரவர் பைக்கில் அமர்ந்தபடி. விழிகள் நான்கும் கூட்டணி போட்டு பார்த்திருந்தது தன் இணைகளை.

கோபமும் ஆதங்கமும் இவளிடம் என்றால், ஏக்கமும் ஏகாந்தமும் இவனிடம். ‘விட்டுட்டு போனா என்ன செய்வன்னு’ கேட்குறான்.. இவனை என்ன செய்யலாம், வெறியோடு அவனை முறைத்திருந்தாள் கமலி.

‘புருஷனு கூட பார்க்காமல் அடிச்சிட்டு, எவ்வளவு தைரியமா நிக்கிற’ கன்னங்களை தடவியபடி இவன் வில்லங்கமாய் பார்த்து வைக்க

அடுத்து என்ன பேசியிருக்குமோ விழிகள். “கிரி.. உள்ள வாங்க.. என்ன அங்கேயே நின்னாச்சு!” என வாசல் படியிலிருந்து போர்டிகோவிற்கு இறங்கி வந்தான் கர்ணா.

அவன் குரலில் இருவரும் சட்டென திரும்பிட, வேகமாய் இவர்களை நெருங்க இருந்தவன், போர்ட்டிகோ லைட் வெளிச்சத்தில் அவர்களது முகம் கண்டே, “சாரி பார் தி ராங் என்ட்ரி” என கையிரண்டையும் உயர்த்தியபடி, “நீங்க பேசிட்டே வாங்க” என மீண்டும் உள்ளே சென்றுவிட்டான் கர்ணா.

அதற்கு மேல் வீட்டினுள் வராமல் போனால் நன்றாக இருக்காது என வண்டியை இருவருமே  போர்டிகோவில் விட்டுவிட்டு வந்தனர். எதுவுமே பேசாமல் கமலி உள்ளே சென்றிட, சாதாரணமாய் முகத்தை மாற்றி கொண்டு பின் தொடர்ந்தான் கிரி.

வீட்டினுள் வரும் போதே, இம்முறை, பிரபாவும், சந்தோஷூம் இவன் கண்ணில் பட்டிட, ஒருவரை ஒருவர் விசாரித்து கொண்டனர். பிரபா பெயருக்கு பேசுவது போல இருந்தாலும், சந்தோஷ் கிரியுடன் “மாமா” என  ஒட்டிக்கொண்டான்.

“வாங்க மாப்பிள்ளை” என செல்வமும், “வாங்க தம்பி” என மல்லிகாவும் இனிதாய் வரவேற்றனர்.

பின் செல்வம், கர்ணா, கிரி மூவரும் சோபாவில் அமர்ந்து கொள்ள, டைனிங் சேரை இழுத்து போட்டு அதில் அமர்ந்தனர் மல்லியும் கமலியும்.

“காய்ச்சல்னு கமலி சொன்னா! திடீர்னு என்ன காய்ச்சல்” என செல்வம் ஆரம்பிக்க, தண்ணீர் குடித்து கொண்டிருந்த கமலிக்கு புரையேறி இரும துவங்கிட, பட்டென இவன் எழுந்து வரும் முன் “எரும மாடு மாதிரி வளர்ந்திருக்க, தண்ணிய ஒழுங்கா குடிக்க தெரியாதாடி” என அவள் தலையிலேயே தட் தட்டென தட்டினார் மல்லிகா.

இவனை பார்த்தபடியே இருமியவளுக்கு, இருமலோடு கண்களும் சிவந்து போக,  ‘பட்டென ஒற்றை கண்ணை அடித்தான் கிரி’, கமலிக்கோ பட்டென நின்று போனது இருமல்.

உதட்டிற்குள் சிரிப்படக்கி நின்றவனிடம், காய்ச்சல் ஏன் வந்தது, எப்படி வந்தது, எதற்கு வந்தது என மல்லிகாவும், செல்வமும் அவனிடம் விசாரனைகளை தொடுத்து கொண்டிருக்க, இருவருக்கும் மாற்றி மாற்றி பதில் சொல்லி ஓய்ந்து போனான் கிரி.

“அப்புறம்.. கடை வேலையெல்லாம் எப்படி போகுது” என இடையில் புகுந்து அவனை காப்பாற்றினான் கர்ணா. சிறிதாய் பெருமூச்சுவிட்டு நிதானப்படுத்தி கொண்டு, கடை பற்றிய பேச்சிற்கு மாறினர்.

பின் நியாபகம் வந்தவனாய் “அப்புறம் மாமா.. ஒரு ஹெல்ப் வேணும்” என கிரியே துவங்கிட, அனைவரும் இவனையே பார்த்தனர். “அக்கா, மாமா, குழந்தைங்கன்னு எல்லாரும் தனி வீட்டுக்கு போக போறாங்க.. அவங்க வீட்டுக்கு தேவையான பர்னீச்சர் எல்லாம் வேணும். உங்க கடையில் எடுத்துக்கவா?” பேச்சில் மாமனாரை இழுத்தவன், பார்வையில் மச்சானை இழுத்தான்.

“இதுக்கெல்லாம் கேட்கனுமா மாப்பிள்ளை!” என செல்வமும்

“எப்போ வேணும் கிரி” என கர்ணாவும் ஒன்றாய் கேட்டிட

“நாளைக்கு காலையில் ஆறு மணிக்கு பால் காய்ச்சுன்னு அக்கா சொன்னா. பொருள் எல்லாம் ஒரு ஒன்பது மணிக்கு வீடு போய் சேர்ந்தால் போதும்” என கிரியும் கூறிட

அதன் பின் சிறிதும் யோசிக்காத கர்ணா “காலையில் ஒரு எட்டு மணிக்கு கடைக்கு வந்திடுங்க கிரி! என்னென்ன வேணுமோ எடுத்துக்கலாம்” என்றதும், “அப்போ நான் காலையில் போன் பண்ணிட்டு வரேன்” என இவனும் கிளம்ப ஆயத்தமானான்.

அவனை பார்த்தபடி ‘ஊருக்குள்ள வேற கடையே இல்லையா!’ என யோசித்தவள், ‘ஆமாம் ஓசிக்கு இங்க தான கிடைக்கும்’ மற்றவர்களுக்கு கேட்காமல் முனுமுனுத்தாள் பிரபா. ஒரு வேளை கேட்டுவிட்டால், கர்ணா அவளை உண்டில்லை என செய்துவிடுவானே! என அடக்கி வாசித்தாள் பிரபா.

“சாப்பிட்டுட்டு போகலாம் கிரி” என கர்ணா அவனை நிறுத்த, “உங்க தங்கச்சி கையால வயிறார சாப்பிட்டாச்சு கர்ணா. இங்க தானே இருக்க போறேன் பார்த்துகலாம்” என இவன் உறுதியாய் மறுத்துவிட்டு, மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டு, இவளிடம் தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!