ஆனால் அவளுக்கு மேல் பரவசத்தில் இருந்தான் கிரி என அவளுக்கு யார் சொல்லி புரியவைப்பது.
“உக்காரு கமலி” என மல்லிகாவும் வற்புறுத்திட, “ம்மா.. எனக்கு எதுக்கும்மா.. நான்.. நான்..” என இவள் இழுக்க
“ஏன் கமலி குழந்தை பெத்துக்க ஆசையில்லையா என்ன!” பிரபாவின் அம்மா கேட்க, அதற்கு பதில் சொல்ல முடியாமல், எச்சில் கூட்டி விழுங்கியபடி பிரபாவின் அருகில் அமர, மகளின் அந்த கோலத்தை கண்டு மல்லிகாவிற்கு சிரிப்பு தான்.
“என்ன கமலி இதுக்கே இப்படி பயப்படுற? இனி தானே இருக்கு” என சுற்றி இருந்த பெண்கள் அவளை கலாய்க்க, “செத்த வாய மூடுங்கடி.. சின்ன புள்ளைய போய் கிண்டல் பண்ணிகிட்டு” மீனாட்சி சத்தமிட, கப்சிப்பென்று ஆனது அந்த மேடை.
Advertisement
தட்டில் அடுக்கப்பட்டிருந்த வளையல்களில் இவள் சைஸாக பார்த்து இரண்டு வளையல்களை எடுத்து, “முதலில் யார் போடறது, நீங்களே போட்டுவிடுறீங்களா” என மீனாட்சியிடமே கேட்டார் மல்லிகா.
“நம்ப முறையில் நாத்தனா போடறது தானே முறை.. இதோ ஒன்னுக்கு இரண்டு புள்ள பெத்து வச்சிருக்கா கமலியோட நாத்தனா.. அவளையே போட சொல்லுவோம்” என பிரபாவின் அன்னை கூற,
அவளுக்கு பதில் கொடுக்கும் விதமாக, பிரபாவின் பாட்டி “எவடி அவ கூறு கெட்டவளா இருக்க” மகளை சத்தமிட்டவர் “கர்ப்பினிகளுக்கு தான் முதல்ல நாத்தனா வளையல் போடனும். புது ஜோடிகளுக்கு புருசன் தான் போடனும், எங்க இவன் புருஷன்.. பாரின் போனானே வந்தானா இல்லையா” என பிரபாவின் பாட்டி மேடை அதிர சொல்லிட, கிரியோ அவர்களின் பேச்சை ஒரு பக்கம் காதில் வாங்கினாலும், சிவந்த கண்களோடு மனைவியை பார்வையாலேயே தின்னும் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தான்.
Advertisement
“இம்புட்டு அழகான பொண்டாட்டிய விட்டு எவனாவது பாரினில் கிடப்பானா.. பாரின் வேலையையே வேணாம்னு விட்டுட்டு வந்துட்டானாக்கும்” கமலி கதை அறிந்த சொந்தம் ஒன்று சபையில் போட்டுடைக்க
“அப்போ அடுத்த பத்தாவது மாசம் பிள்ளை உறுதி” மீனாட்சி சிரிக்க, கொல்லென்ற சிரிப்பு சத்தம் மேடைய முழுக்க வியாபித்தது.
கமலிக்கு வெட்கம் பிடுங்கி தின்ன, கிரிக்கோ மனதில் எழும் உணர்வுகளை அடக்கி நிற்பதே பெரும் பாடாய் இருந்தது.
Advertisement
“கிரி.. பார்த்தது போதும்.. வாங்க” என கர்ணன் அழைக்க, திடுக்கிட்டு இவன் நிமிர, “போங்க மாப்பிள்ளை” என செல்வமும் உந்த, கமலியை நெருங்கினான் கிரி.
மல்லிகா எடுத்து கொடுத்த கண்ணாடி வளையலை வாங்கி கொண்டு, இவள் முன்பு குனிந்தான். இவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. பார்க்க தைரியமில்லை என்று தான் கூறவேண்டும். தன்னை நெருங்கிய அவன் கால்களை கண்டே இதயம் படபடவென துடித்தது கமலிக்கு. இந்நேரம் இவன் முகத்தை கண்டால் என்னாகுமோ! என்ற பீதியிலேயே இவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை இவள்.
ஒரு கையால் வளையலை பிடித்து கொண்டு, மறுகையை அவள் முன்பு நீட்டினான். இவளும் அவன் கைகளில் தன் கையை கொடுத்திட, மெதுவாய் கண்ணாடி வளையலை பூட்டினான். மல்லிகா மேலும் இரு வளையலை கொடுக்க அவளின் மறு கையிலும் பூட்டினான்.
ஏற்கனவே இவன் வாங்கி கொடுத்திருந்த ரெயின் டிராப் வளையல்கள், தங்க வளையல்கள் அவள் கையை அலங்கரித்திருக்க, இப்போது அணிவித்துவிட்ட கண்ணாடி வளையல்களும் சேர்ந்து நிறைத்தது அவளது கையையும் மனதையும்.
பின் சந்தனம் குங்குமம் இருந்த தட்டை அவன் முன்பு நீட்டி “கன்னம், நெத்தி, புறங்கையில் எல்லாம் பூசி விடுங்கண்ணே” என பைரவி சொல்ல
அவள் சொன்னதை போல இரு கன்னம், அடுத்து நெற்றி என சந்தனம் குங்குமத்தால் தன்னவளை அலங்காரம் செய்தான்.
“ம்.. அவ்வளவு தான், நீங்க அவ பக்கத்தில உக்காந்துகோங்க” என மல்லி கூறிட, கமலிக்கு அந்த பக்கமாய் போய் முழங்கால் உரச அவளருகில் அமர்ந்து கொண்டான்.
அமர்கையில் ‘என்ன பார்க்கமாட்டியாடி’ ஹஸ்கி வாய்ஸ் அவள் காதுகளை நிறைத்திட, ம்ஹூம் நிமிர்வேனா என இருந்தாள் கமலி.
தாலி கட்டுவதற்காக மணமேடையில் அமர்ந்திருப்பதை போல இருந்தது அவர்களது ரகசிய சீண்டல்களும் பார்வைகளும். மேடையில் இருந்தவர்கள், மேடை முன்பு இருந்தவர்கள் என நிறைய பேரின் கண்கள் இந்த ஜோடியை தான் வட்டமடித்து கொண்டிருந்தது.
பிறகு வசந்தா, மல்லிகா, சுபா, ராஜி இன்னும் சில பெரியவர்களின் கையால் வளையலை பூட்டிக்கொண்டாள் கமலி..
இறுதியாக வந்த மீனாட்சி பாட்டி, “இந்தாடா நீ ஏன் மட்டும் சும்மா இருக்குற” என வெறுமனையாய் இருந்த கிரியின் கன்னத்திலும் சந்தனம் குங்குமத்தை அப்பிவிட்டார் மீனாட்சி.
சந்தனம் குங்குமம் மணக்க, ஜோடியாய் இருந்தவர்கள் மீனாட்சியின் காலில் விழுந்து ஆசிர்வாதமும் வாங்கி கொள்ள
‘எனக்கு வளைகாப்பா இல்லை இவளுக்கா’ என்ற ரிதீயில் பார்த்துவைத்தாள் பிரபா.
இதுவரை கேஷிவலாக எல்லாவற்றையும் அமைதியாய் போட்டோ எடுத்து தள்ளிகொண்டிருந்தவன், அந்த நிகழ்வுகள் முடிந்த பின் “அப்படியே ஜோடியா திரும்பி ஒரு போஸ் கொடுங்க” என்றார் போட்டோ கிராபர்.
கிரியின் வசீகரித்த முகமும், கமலியின் வெட்கம் நிறைந்த முகமும் அழகாய் புகைபடமாய் மாறிக்கொண்டிருந்தது.
“அடுத்து பேமிலி போட்டோ ஒன்னு எடுத்துடலாம்” என பொதுவாய் கூற, ஏற்கனவே நிறைபேர் மேடையிலேயே இருந்ததால், எஞ்சி நின்ற ராஜி குடும்பம், மோகன், சுபா என அவர்களையும் உள் இழுத்து கொண்டது கேமரா. ஒரே குடும்பமாய் பதிவாகினர் அந்த போட்டோவில்.
இப்படியாக நல்ல முறையில் வளைகாப்பு விழா முடிந்து, பந்தியும் முடிந்திட, குடும்பம் குடும்பமாய் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
எல்லோரும் ஜோடி ஜோடியாய் அமர்ந்திருக்க, கமலி மட்டும் மிஸ்ஸிங். கமலியை தேடி தேடி ஓய்ந்து போனது கிரியின் விழிகள்.
ஒரு கட்டத்தில் தேடியவிழிகள் சலித்துபோக, அருகில் வந்த கர்ணனிடமே கேட்டுவிட்டான். “மேடையில் இருக்குற ரூமில் இருந்தா கிரி. ரூமிலிருந்த பொருளை எல்லாம் அம்மா எடுத்து வைக்க சொன்னாங்க, அங்க தான் இருப்பா” என இவன் கூற மேடைக்கு, சற்றும் யோசிக்காமல் சுற்றி இருப்பவர்களை மறந்து, மேடைக்கு விரைந்தன இவன் கால்கள்.
மேடைக்கு இருபுறமும் அறைகள் இருக்க, ஒரு அறையில் சத்தம் கேட்டு கொண்டிருக்க, இன்னொரு அறையில் சத்தமே இல்லாமல் இருந்தது. இவ எதில் இருக்கான்னு தெரியலையே! என திணறியவன், ‘ப்ச்.. இதை முதல்லயே செஞ்சிருக்கலாம்’ என தன் போனில் இருந்து அவளுக்கு அழைப்பு விட்டான்.
“உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு…” என்ற பாடல் வரிகள் இடது பக்க அறையில் இருந்து கேட்டிட, ‘இது.. இது தான் இந்த பாடல் தான்.. அன்று கல்லூரியில் வைத்து கேட்ட பாடல் என இவனுக்கு உரைத்திட’ ஏற்கனவே சிவந்து போயிருந்த கண்கள், ‘அப்படியானால் இது தனக்காக மட்டுமே பிரத்யேகமாக வைக்கபட்ட ரிங் டோனா’ என ஒன்றோடொன்று முடிச்சிட்டு, கண்களெ மேலும் சிவக்க வைத்தது அடுத்த நொடி சத்தமே இல்லாத அந்த அறைக்குள் சென்றுவிட்டான்.
அறைக்குள்ளே தனியாய் இருந்த இவளோ போன் காலை அட்டெண்ட் செய்து “கிரி சொல்லுங்க..” என இவள் கூறிய நொடி, இரு கைகள் இவளை சுற்றி வளைத்து சுவற்றில் சாய்த்தது.
காதை ஒட்டி இருந்த இவள் போன், கையில் இருந்த ட்ரே எல்லாம் பிடிப்பாரின்றி கீழே விழுந்து சிதற, இவளை சிதற விடாமல் இடையோடு இறுக்கி பிடித்தது இவன் விரல்கள்.