Skip to content
Post Views: 138
அத்தியாயம் 6
துணியை அப்படியே போட்டுவிட்டு, வெளியே வந்தாள். “விளையாடூறிங்களா என்ன?” இவள் கேட்க.. நிமிர்ந்து இவளை தீர்க்கமாய் பார்த்தவன்
“இல்லை” என்றான் “எமர்ஜன்சி போயாகனும், டிக்கெட் கன்பார்ம் தான், எட்டு மணிக்கு இங்க இருந்து கிளம்பிடுவேன். உன் அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டேன். நீ அவங்க கூட போய் இரு..” சொல்லிவிட்டு தனது டிராலி பேக்கை எடுத்தவன் துணிகளை பேக் செய்ய துவங்கினான்.
பீரோவை திறந்து வேண்டிய உடைகளை எடுத்து பேக்கில் திணித்தான்.
Advertisement
திக்கன இருந்தது, இத்தனை நாள் பத்திரமாக இருந்தது போலவும் இப்போது கடலில் தனித்து விடப்பட்டார் போலவும் தவித்து போனாள்.
இப்போது என்ன செய்ய, என்ன பேச தெரியவில்லை. மணியை பார்த்தாள், ஆறரை.. இன்னும் ஒன்றரை மணிநேரம் தானா, பட படவென அடித்துக்கொண்டது இதயம்.
என்ன வாழ்க்கையோ? விரக்தி எழுவதை தடுக்கவே முடியவில்லை. அவனை நிமிர்ந்து பார்த்தால் அழுதிடுவோமோ என பயந்தவளாய் விழிகளை தட்டிதட்டி விழித்து அழுகை வராமல் சமன் செய்தாள்.
Advertisement
ஏதோ ஒன்றை செய்தபடி சமையலறைக்குள்ளயே உருட்டி கொண்டிருந்தாள். அவளை பார்க்கும் யாரையும் கவலை கொள்ள வைக்கும்படி திண்டாடிக்கொண்டிருந்தாள்.
Advertisement
அதை பார்த்த ராஜி, வசந்தா கூட ஏதும் கேட்கவில்லை. அப்படியே பார்த்தபடி இருந்தனர்.
வெறும் வயிறாக கிளம்பிவிடுவானோ என வேகவேகமாய் வெண்பொங்கல் செய்தாள். அவசர சட்னியும் சாம்பாரும் வைத்தாள்.
அதற்கே ஏழாகிவிட்டது. வேகமாய் அதை தட்டில் எடுத்து கொண்டு, தவித்த மனதை அடக்கியபடி அறைக்குள் சென்றாள்.
Advertisement
உடைமைகளை நீட்டாக பேக் செய்துவிட்டு, அடுத்ததாய் இவன் தயாராகி கொண்டிருந்தான்.
சட்டை பட்டனை போட்டு கொண்டிருந்தவனிடம் “சாப்பிடுங்க..” என அவன் முன்பு தட்டை நீட்டினாள்.
அவளையும் உணவையும் பார்த்தவன் “இல்லை வேண்டாம்.. டைம் ஆச்சு, டிராவல் வேற பண்ணனும்” என மறுத்துவிட்டான்.
டேபிளில் வைத்து விட்டு வேக வேகமாய் அடுப்படிக்கு நகர்ந்தவளை கமலி என தடுத்தான்.
திரும்பி இவனை பார்க்க, பர்ஸிலிருந்து மூன்று ஐந்நூறு ரூபாய் தாளை எடுத்து, அவள் முன் நீ்ட்டி “அது இப்போதைக்கு இதான் இருக்கு. செலவுக்கு வச்சிக்க. அங்க போயிட்டு அப்புறமா அனுப்புறேன்” என்றதில் புன்னகையை தத்தெடுத்தது அவள் இதழ்கள்.
கை நீட்டி வாங்கி கொண்டாள். இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்தது. இவள் சிமிட்டாது பார்க்க, இவன் பார்வையை சமாளிக்க முடியாமல் திரும்பி கொண்டான்.
அதன் பின் அடுப்படிக்கு சென்றுவிட்டாள்.
லக்கேஜை எடுத்து கொண்டு ஹாலுக்கு வந்தவனை கலைத்தது “டீ” என்ற கமலியின் குரல்.
திரும்பியவனின் முன் டீ தம்ளரை நீட்டிக்கொண்டிருந்தாள்.
“டீயாவது குடிச்சிட்டு போங்களேன்” என்ற குரல் அவனை கட்டிப்போட்டது.
அப்படியே தலையில் கைவைத்தபடி சோபாவில் அமர்ந்துவிட்டான் கிரி.
தலையில் கை வைத்தபடி அமர்ந்திருப்பதும், அவன் முன் டீ தம்ளைரை நீட்டிக்கொண்டிருந்த கமலியையும் பார்த்த வசந்தா ‘என்னடி நடக்குது இங்க’ என கேட்க, ‘காதல் நாடகம்’ யோசிக்காமல் ராஜி கூறி வைக்க, வசந்தாவின் நக்கல் பார்வை தான் இருவரையும் சுற்றி.
‘சம்மந்தமில்லாம இந்த பெண்ணை வேறு சித்தரவதை செய்கிறோமோ’ யோசித்து கொண்டிருந்தவனை “ஆறிடும்..” என்ற இவளது குரல் மீண்டும் கலைக்க
வேண்டாம் என சொல்ல நினைத்ததை கைவிட்டு, கை நீட்டி அவளிடம் வாங்கி கொண்டான்.
வாங்குகையில் லேசாய் உரசிக்கொண்டது இருவரின் விரல்களும்.
அதை அவன் உணரவில்லை, ஆனால் இவள் நன்றாகவே உணர்ந்தாள்.
இஞ்சியும், ஏலக்காயும் கலந்த அந்த டீ, அப்போதைய தலைவலியை தீர்த்து வைத்தது.
டீயை குடித்து முடிக்கையில் “கிரி” என குரலெழுப்பி கொண்டு வந்தனர், கிரியின் சித்தப்பா, சித்தி. இவர்களை கண்டதும் விசுக்கென வசந்தா உள்ளே எழுந்து சென்றிட, ராஜி அப்போது தான் பிள்ளைகளை கவனிப்பது போல் திரும்பி கொண்டாள்.
“வாங்க சித்தப்பா, வாங்க சித்தி” என கிரி வரவேற்க, வாங்க என்பது போல் தலையசைத்தாள் கமலி.
பிறகு அவர்கள் சோபவில் அமர்ந்தபடி மெதுவாய் பேச துவங்கிட, மீண்டும் அடுப்படி சென்றவள் இருவருக்கும் டீ வைத்து எடுத்து வந்தாள்.
மூவருமே நிமிர்ந்து இவளை அதிசயமாய் பார்த்து வைத்தனர். பின்னே ராஜி, வசந்தா இவர்களை சீண்ட கூட மாட்டார்களே!
“எடுத்துக்கோங்க” என இவள் மீண்டும்கூற, எடுத்துகொண்டனர்.
ஒரு வழியாய் பேசி முடிக்கையில் கேப் டிரைவர் இவனுக்கு அழைக்க, “வண்டி வந்திடுச்சு.. கிளம்புறேன்” பொதுவாய் கூறி பொதுவாய் இவன் தலையசைத்தான்.
கிளம்பும் அவனை பிடித்து அடுத்து எப்போ வருவீங்க என கேட்க ஆசை, ஆனால் கேட்டு? ஒரு பயனும் இல்லை விரக்தியாய் வளைந்தது இதழ்கள்.
அவள் தயக்கம் சுமந்து வந்த ஏக்கத்தில் ஏதோ போல் இருந்தது இவனுக்கு.
அதை மீறி கேட்டாலும் இவனிடம் பதில் இராது. காரணம் “இனி வரவே கூடாது” என அவன் இந்த ஒரு வாரமாய் எடுத்தமுடிவை எப்படி இவளிடம் சொல்வான்? சொல்ல தான் முடியுமா?
வெளியே முரட்டு தோற்றமாய், உள்ளே குழந்தையாய் இருப்பவளிடம் சொல்லாமல் நிம்மதியாக பிளைட் ஏற தான் முடியுமா? என இவள் முகத்தை கூட பார்க்காமல் எப்படி செல்வது? யோசித்தவன், “கமலி, பர்ஸ் எடுக்கலை” என ரூம் பக்கமாய் விரைய, யாரையும் கண்டு கொள்ளாமல் அவன் பின்னேயே இவளும் சென்றாள்.
பர்ஸை எடுத்து கொண்டு இவன் திரும்ப, தனக்கு முதுகு காட்டியபடி ஹேண்ட் பேக்கில் எதையோ தேடிக்கொண்டிருந்தவளிடம்
“பாரினில் வேலைனு தெரியாமலா கல்யாணம் பண்ணிகிட்ட. எதுக்கு இப்படி பார்த்து வைக்க, அங்கே போன பிறகும் நிம்மதியா இருக்க விட கூடாதுனு முடிவு பண்ணிட்டியா?” உன் நடவடிக்கைகளை நான் கவனித்து கொண்டே தான் இருக்கிறேன் என்பது போல் வெகு காட்டமாய் இவன் பேச
பதில் வரவில்லை அவளிடம். “நான் பேசிட்டு இருக்கேன் நீ அந்தபக்கம் திரும்பி என்ன பண்ணிட்டு இருக்க?” மேலும் ஏறியது கோபம்
சட்டென திரும்பியவள் “இதை இதை தான் தேடிட்டு இருந்தேன்” கையில் இருந்த பேப்பரை பிரித்து திருநீரை எடுத்து அவன் நெற்றியில் வைத்துவிட, அவன் பேச்சு அப்படியே நின்று போனது.
அதை பார்த்தபடி இவள் அவனை நெருங்கி வர “என்ன?” இரண்டடி பின் நகர்ந்தான் கிரி.
“ஒரே ஒரு முத்தம்.. கொடுத்துக்கட்டுமா?” இவள் கேட்டதிலா
இல்லை வெளியே கேட்ட கேப்-ன் ஹாரன் சத்தத்திலா.. திடுக்கிட்டு நிதானத்திற்கு வந்து, பின் “கிளம்புறேன்” சொல்லிவிட்டு அவளை பார்த்தபடியே வெளியே வந்தான்.
எதிர்பார்த்தது தானே..! தடதடத்த இதயத்தை நீவியபடி வெளியே வந்தாள்.
“கிளம்புறேன்” என எல்லோருக்கும் பொதுவாய் கூறிவிட்டு லக்கேஜ் சகிதம் வெளியே வர, சுற்றி வளைத்தனர் கமலியின் தாய் தந்தை அண்ணன் மூவரும்.
காலையிலேயே ஏற்கனவே இவன் போனில் கூறியிருந்தான் ஆனால் நேரில் வருவார்கள் என நினைக்கவே இல்லை.
அவர்களையும் சமாளித்து காரில் ஏறுவதற்குள் தலை வெடித்து போனது கிரிக்கு.
மூவரிடமும் முகம் காட்டாமல் பேசி சமாளித்தான். சிரித்த முகமாய் தன் வீட்டாரிடம் பேசிய அளவிற்கு கூட தன்னிடம் சிரித்து பேசவில்லை, எப்போதும் எரிச்சல், கோபத்துடன் தான் பேசுகிறான் என்பது இன்னும் வலித்தது கமலிக்கு.
இறுதியாய் செல்வமும், கர்ணனும் வழியனுப்ப வருவதாய் அவனுடனேயே காரில் ஏறிக்கொண்டனர்.
மல்லிகா, கமலி அருகில் வந்து நிற்க, கமலியின் பார்வை முழுதும் கிரியின் மேல் தான்.
அடக்கி வைக்கும் முன்பே உதடு பிதுங்கியது அழுகையில். எங்கே கண்ணீர் வடிந்திடுமோ, கோவல் வெடித்திடுமோ என அடக்குவதற்குள்ளாக உயிர் போய் வந்தது.
அருகில் தன் தாய் இருக்கிறார் என அத்தனையையும் உள்ளுக்குள் போட்டு அடக்கினாள்.
“சரிடி, ஏதோ கம்பெனில அவசரம்னு தானே இத்தனை சீக்கிரம் கிளம்பிருக்காரு மாப்பிள்ளை. அடுத்து ஆறு மாசத்தில் வரேன்னு சொல்லி இருக்காப்ல. மூஞ்ச இப்படி வைக்காத.. மாப்பிள்ளை கிளம்பும் போது அழுகாத” கணவன் மனைவி பிரிவு என இவர் தப்பாக ஊகம் செய்தார்.
அதற்குள் அவள் வெடித்து அழுதிடவே, காரில் இருந்தவன் திரும்பி இவளை பார்த்துவிட்டான்.
‘தனக்காக அழும் ஒருத்தி’ இதயத்தில் எங்கோ ஓர் இடத்தில் சாரல், ஓரிடத்தில் வலி.
ஆனால் மல்லிகாவோ, எங்கே கமலியின் அழுகை மற்றவர்களின் பார்வைக்கு விருந்தாகுமோ என தன் தோளில் சாய்த்து கொண்டு உள்ளே அழைத்து சென்றுவிட்டார்.
அதன் பின் ஒரு வாரம் இவள் அங்கே இருக்கட்டும் சம்மந்தியம்மா என மல்லி கமலியை அழைத்து வந்து விட்டார் அவர்கள் வீட்டிற்கு.
ஒரு வாரம் என கூறி பத்து நாட்களாகி விட்டது அம்மா வீடு வந்து.
பிடித்த பாடல் யாரும் அழைக்காமலேயே, நினைவில் ஓரமாய் ஓடிக்கொண்டே இருக்குமே அப்படி கிரியின் நினைவுகள் ஓடிக்கொண்டு தான் இருந்தது.
ஆனாலும் கமலியை சிறிதும் தனியாய் விடாமல் கூடவே வைத்து கொண்டார் மல்லி.
மளிகை கடை சென்றால் அம்மா அழைத்து சென்றுவிடுவாள்.
பாப்பா.. இந்த கணக்கு சரியா இருக்கா பாரு என அரிசி மூட்டை கணக்கை எடுத்து கொடுத்து செல்வம் அவளை தன்னருகிலேயே பிடித்து வைத்துவிடுவார்.
தன் மகனை தூக்கி வந்து “போ உன் அத்தைகிட்ட” என அவளை தனியாகவே விடவில்லை கர்ணன்.
ஹோட்டல் சினிமா என்றால் குடும்பத்தோடு கிளம்பிவிடுவார்கள்.
பத்துநாட்கள் கடந்து “அக்கம் பக்கமெல்லாம் விசாரிக்காக, கமலியை அழைச்சுட்டு வாங்க” என வசந்தா சொன்ன பிறகே கமலியை அழைத்து வந்தனர்.
ஏற்கனவே திருமணமான பத்து தினங்களில் வசந்தா அவளுக்கு கொடுக்கப்பட்ட டிரெயினிங் அப்படியே மனதில் இருக்க, சில வேலைகளை சொல்லியும், பல வேலைகளை சொல்லாமலும் செய்தாள்.
எப்படி பிசியாக வைத்து கொண்டாலும் அவர்களது அறைக்குள் சென்றுவிட்டால் கிரியின் நியாபகம் வந்துவிடும்.
இப்படியே ஒரு மூன்று நாட்கள் சென்றிருக்கும், “ராஜியும் புள்ளையும் உங்கூட தூங்கட்டுமே” என லேசாய் அவளோடு கோர்த்துவிட்டுவிட்டார் வசந்தா.
முன்பெல்லாம் தோன்றாதது இப்போது தோன்றியது, எங்கே இவள் வீடு, எங்கே இவள் கணவன்? என்னை மட்டும் இங்கே அழைத்து வந்தவர்கள் ராஜியை மட்டும் ஏன் அவள் மாமியார் வீட்டிற்கு அனுப்பாமல் இருக்கிறார்கள்.
வாய் வரை வரும் கேள்விகள் ‘ஏதும் ஏடாகூடம் பண்ணிடாதடி’ என்ற மல்லிகாவிற்காக தடைபோட்டு அப்படியே நின்றுவிடும்.
அப்போதைக்கு அந்த பெரிய கட்டிலில் சிறு இடம் கிடைத்தது. அதற்கு அடுத்த நாள் இடம் போதவில்லை என தரையில் போர்வை வைத்து படுத்து கொண்டாள்.
மறுநாள் பாத்ரூம் செல்கிறேன், என கமலியின் காலை நன்றாக மிதித்துவிட்டாள் ராஜி.
நீ ஹாலுக்கு சென்று படு, என ராஜி சொல்லவில்லை. ஆனால் மறுநாளில் இருந்து ஹாலுக்கு அவளே செல்லும் படி செய்துவிட்டாள் ராஜி.
கோபமே வராத கமலிக்கு கோபமும் எரிச்சலும் தலைக்கு மேல் எகிறியது.
அதற்கும் அடுத்த இரண்டு நாட்கள் இவள் ஹால் தரையில், சோபாவில் என மாற்றி மாற்றி உறங்கி பொழுது கழித்தாள்.
மறுநாளே வந்தான் செந்தில். யாரென இவளுக்கு தெரியவில்லை. அப்பா என கத்திகொண்டு சென்ற குழந்தைகளை வைத்தே கண்டு கொண்டாள் ராஜியின் கணவன் என்று.
இவர் எதுக்கு இங்க வரணும் எரிச்சலானாள். ஆனால் வசந்தாவும் ராஜியும் அனுமார் போல் கையில் தூக்கி வைத்து கொள்ளவில்லை மற்றபடி, கீழே ஒடிந்து விழும் அளவுக்கு தாங்கு தாங்கென தாங்கினர்.
பத்தாதென்று கமலியை சமையலறையிலேயே வைத்து அங்கேயே புதைத்து விடுபவர்கள் போல் அத்தனை வேலை வாங்கினர், மாமியாரும் நாத்தனாரும்.
விருந்துபச்சாரம் இனிதே முடிந்திட, மகனையும், மகளையும் தூங்க வைத்து அம்மாவின் கையில் கொடுத்துவிட்டு இவள், கமலியின் அறைக்குள் சென்றிட, பின்னோடு செந்திலும் சென்றுவிட, ஆதீத எரிச்சலுக்கு உள்ளானால் கமலி.
குழந்தைகளை நடுவில் போட்டு, மாமியார் அந்தபுறமும், மருமகள் இந்தபுறமும் என தூங்கி போயினர்.
error: Content is protected !!