முழுமை பெற்ற காதல் என்றால் 3
முதல் நாள் எடுத்த முடிவின் படி நடை பயில சென்றாள்.
காலை நேரத்து மெல்லிய சிலுசிலுப்பு, அதிகம் வாகனம் புழங்காத சாலை, பசும் கருவேப்பிலை கட்டு வழிய செல்லும் சைக்கிள், என்று அவளுக்கு பார்த்து ரசிக்க ஆயிரம் சுவாரிசியம்.
பார்க்கிலும் கசியும் பழைய பாடல்களின் வாத்திய இசை, செயற்கை அல்லி குளம், கலைவையான மணம் கண்ணை மூடிக்கொண்டு நடந்தால் கூட, சந்தனம் என்றால் ஐயப்பன் கோயில், பூரி மசால் என்றால் டிபன் கடை, மல்லி முல்லை கதம்பம் என்றால் பூக்கடை என்று உணர்த்தும் சுகந்த காற்று, தெரிந்த முகம் பார்த்து சின்ன புன்னகை, என்ன ரொம்ப நாளாய் காணோம்,என்ற அக்கறை விசாரிப்பு என்று அனைத்தையும் அனுபவித்து கடந்தாள்.
ஆனால் அன்று நடை பயிற்சி முடிந்து வீடு திரும்பிய போதே கால் வலி இருந்தது, சுருட்டி மடக்கி உட்கார்ந்தால் போதும் என்று கெஞ்சியது கால்கள், இருந்தும் உடனே கவனிக்க வேண்டிய வேலைகளை முடித்து விட்டே அமர்ந்தாள்.
அன்று மாலையே மெல்ல கால் வலியுடன் சேர்ந்து உடம்பும் வலித்தது. அவளுடைய குட்டிஸ் ஒரு ஆர்வ கோளாரில் ஜிம் போய் அதிகம் பளு தூக்கி விட்டு இது போல் நகர முடியாமல் அவஸ்தை படுவதை கண்டு, கேலி செய்தது உண்டு, நோ கயின் விட்டாவுட் பெயின் என்று அவர்கள் அசால்ட்டாக அதை கடப்பது உண்டு.
அதையே தனக்கும் இப்போது சொல்லி கொண்டாள், ஆனால் மறுநாள் காலையில் உடம்பு முறுக்கி போட்டது போல் வலித்தது, காலை தூக்கி அடுத்த அடி வைத்து அவள் காலை கடன்களை முடிப்பதே பெரிய விஷயமாக போனது.
ஆனால் அதை கவனித்த அவள் கணவன் ஒன்றும் அலட்டி கொள்ளவில்லை!
டாக்டர்களை கல்யாணம் செய்து கொள்ளுவதில் இது ஒரு பெரிய கஷ்டம், ஆயிரம் வலி அவஸ்தைகளை நாளுக்கு நாள் சந்திப்பதால் இது போன்ற உபாதைகளை அவர்கள் எளிதில் கடந்து விடுவார்கள், மேலும் இதற்காக ரொம்ப அலட்டி கொள்வதும் கிடையாது, இன்னும் கேட்டால் தனக்கும் இது போல் தான் வலிக்குது என்றும், வயசானால் இதெல்லாம் சகசம் என்றும் கூறுவார்!
அதாவது இந்த நிலையில் தான் நான் தினமும் என் கடமைகளை செய்கிறேன், நீயும் புலம்பாமல் எழுந்து ஓடு என்று அர்த்தம். இதற்கு மேல் என்ன பேச!
பொதுவாக நீண்ட இடைவெளிக்கு பின்னானா எந்த உடல் உழைப்பும் வலியை கொடுக்கும் என்பது உண்மை என்றாலும், இதன் அளவு சற்று கூடுதலாக இருந்ததாகவே அவளுக்கு பட்டது, இருந்தும் தி டாக்டர் இஸ் ஆல்வேஸ் ரைட் என்று, அவளும் சமாதான படுத்திக்கொண்டாள் தன்னையே.
வழக்கமாக அம்மாவுடன் பேசும் போதும் அதையே சொன்னாள். இருந்தும் தாய் அல்லவா, அவரை போல் அசட்டையாக கடக்காமல், அவளை அதிகம் அலட்டி கொள்ளாமல் இருக்கும் படி அறிவுரை சொல்லியே முடித்தார்.
அவளுக்கு அந்த இதம் தேவை பட்டது. மறுநாளும் அவள் சுருண்டு கிடக்க அவர் இப்போது சற்று கவனித்து, ஒரு வாரதிற்கு சாப்பிடும் மாறு வலி மாத்திரை எழுதி தந்தார்.
பொதுவாக உடனே வலி மாத்திரை முழுங்கும் ரகம் இல்லை அவள் என்ற போதும், இப்போது அது தேவையே என்று பட, ஒரு வாரத்திற்கு சாப்பிட்ட போதும் எந்த முன்னேற்றமும் இல்லை!
வார கடைசியில் வந்த மகன் அவள் நிலை கண்டு அதிர்ந்தான்!
கல்யாணம் ஆகி கொஞ்சம் நாள் கழித்து செப்டம்பர் மாத நடுவில் அவர்கள் தேனிலவு கொண்டாட கிளம்பினர். காஷ்மீரில் அது உகந்த காலம், அதிகம் குளிர் ஆரம்பிக்காத கால கட்டம்,என்பதும் காரணம், அத்துடன் போகும் வழியில் இருக்கும் தாஜ் மஹாலுக்கும் செல்ல பிளான் செய்தார்கள்.
டெல்லியில் இறங்கி ஆக்ரா சென்றனர்.
அங்கு ஒரு தாஜ் ஹோட்டலில் இரவு தங்கி, மறுநாள் விடியலில் தாஜ் மஹால் காண சென்றனர்.
சொல்லவும் வேண்டுமோ அதன் அழகை,உயர்ந்த பளிங்கு டூம்ஸ், செயற்கை நீரூற்று வரிசையாய் இருக்க, இரு புறமும் நடை பாதையில் நிறைந்த மக்கள், அவர்கள் எண்ணங்களில் சூழ்ந்து நிற்கும் அந்த ரொமான்டிக் அலைகள், என்று அசர வைத்தது தாஜ்!
உலக வழக்கப்படி தாஜ் மஹால் பின்னால் கம்பீரமாக தெரிய, முன்னாள் அமைக்க பட்ட மேடையில் இருவரும் அமர்ந்து போஸ் கொடுக்க, அதற்கென இருந்த புகைப்பட கலைஞர் அதை சுட்டு அவர்களுக்கு அழியாத இனிய நினைவுகளாய் சேமித்து, அவ்வப்போது எடுத்து பார்க்க, வழி வகை செய்தார்.
அவளுக்கு அந்த பெஞ்சில் தனியாக அமர்ந்த, இங்கிலாந்து இளவரசி டயானா ஞாபகம் வந்தது.
அவளுக்கு டயானாவை ரொம்ப பிடிக்கும், இங்கிலாந்து இளவரசர் என்ற போதிலும் சார்லஸ் பிடிக்காது, அவளுக்கு சரியான ஜோடி இல்லை என்றே நினைத்துக் கொள்வாள்! அந்த வருட ஆரம்பத்தில் ஆக்ரா வந்த டயானா தனியே சற்று சோகமாய் அங்கே அமர்ந்தது
, உலக கவனத்தை ஈர்த்தது!
அதை ஒரு நியூஸ் ஆக படித்த போது அவள் இங்கே பின்னாளில் தன் ஹனிமூனுக்கு வருவாள் என்று கனவிலும் நினைத்ததில்லை!
நினைக்காத அதிசயங்களையும் நடத்தி காட்டுவது தான் வாழ்க்கை, அத்துடன் கஷ்டங்களையும் சேர்த்து கொள்ள வேண்டும்.
ஆனால் அப்போது அவளுக்கு உள்ளம் மகிழ்ச்சியிலும், கணவனின் பால் கனிந்த காதலிலும் நிறைந்திருந்தது.
அவன் கை கோர்த்து நடை பாதையில், தாஜ் மஹாலை பார்த்தவாறு, நடுவில் செயற்கை நீரூட்டின் சல சலப்புடன் நடக்க இன்பமாய் இருந்தது.
அதன் கூடவே ஓடி வரும் யமுனா நதியையும், சுற்றி பதிந்திருந்த பளிங்கு கற்களின் வேலைபாடு, உள்ளே நிலவிய அமைதி, கடைசியாக தாஜ் மஹாலை பார்த்தவாறு இருக்கும் ஒரு கட்டிடத்து ஜன்னல்.
ஆம் அங்கு தான் ஷாஜஹான் தன் கடைசி காலங்களை கழித்தாராம்.
தன் மகன் ஜெகாங்கீரால் சிறை வைக்கப்பட்டு, தன் காதல் மனைவிக்கு தான் கட்டிய வசந்த மாளிகையை பார்த்துக்கொண்டே தன் முடிவை எதிர்பார்த்து காத்திருந்தது கொடுமையே! பாவம் அப்படித்தான் அவருக்கு விதிக்கபட்டது போலும்.
காலை ஒரு முறையும், மாலை நிலவொளியில் ஒரு முறையும், அட்டகாசமாக இருந்த அந்த உலக அதிசயத்தை ரசித்துவிட்டு, அடுத்து அவர்கள் காஷ்மீர் சென்றனர்.
