Skip to content
Post Views: 8,954
தோட்டத்திலிருந்த நெல்லி மரத்தின் நிழலில் அமர்ந்து நகம் கடித்துக்கொண்டிருந்த மகளின் அருகில் வந்து அமர்ந்தார் பழனிச்சாமி.
Advertisement
“ தப்பு என்மேலதான்ப்பா நான் அப்படி பேசியிருக்க கூடாது” என்றாள் கனகாம்பரம்.
Advertisement
Advertisement
“ஏத்தா இங்க பாரு இப்போ என்ன நடந்துடுச்சுனு இப்படி வந்து உக்காந்திருக்க நியாயமா அந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கணும், எவ்ளோ நாள்தான் அமைதியா இருக்குறது இன்னைக்கு நீ கேட்டுட்ட அதுல ஒன்னும் தப்பில்லை அதோட இங்க யாருக்கும் உன்மேல வருத்தமும் இல்ல”.
Advertisement
“உண்மைய சொல்லனும்னா இதோட எத்தனை பேர் வந்தாங்க அவங்க எல்லாரும் பொண்ணு பாத்துட்டு வேண்டாம்னு சொல்லிட்டு போகும்போதெல்லாம் மூத்தவ கண்ணைக் கசக்குவா இன்னைக்கு தான் அவ சிரிச்சு நான் பாக்குறேன்”.
“நம்ம வீட்டுக்குப் பொண்ணு பாக்க வந்த எல்லா பசங்ககிட்டயும் ஏதோ ஒரு குறை இருந்தது ஆனா இதுவரைக்கும் நாம அவங்க யாரையுமே குறை சொன்னதுமில்லை கேவலப்படுத்தினதுமில்லை எல்லாரையும் நம்ம செவ்வந்தி இடத்துல வெச்சு பாத்தோம்”.
“ஆனா அவங்க யாருக்குமே அந்த மனசு இல்லையே அவ முன்னாடியே அவளை எப்படியெல்லாம் பேசிட்டு போயிருக்காங்க இன்னைக்கும் நீ ஒன்னும் தப்பா கேக்கலையே” என்று தந்தை கூறியதும் இன்றைய நிகழ்வு மீண்டும் மனக்கண்ணில் ஓடியது.
இன்று செவ்வந்தியை பெண் மார்க்க வருகிறார்கள் என்றதுமே பழனிச்சாமி பல முறை கேட்டுவிட்டார் “தரகரே போட்டோவை நல்லா பாத்துட்டாங்கல்ல எல்லா விவரமும் சரியா சொல்லிடீங்கள்ல, நேர்ல வந்து பாத்துட்டு பிடிக்கலன்னு சொல்லக் கூடாது ஒருதடவைக்கு பத்து தடவ கேட்டுக்கோங்க” என்றார்.
“இந்தத் தடவ எந்தப் பிரச்சனையும் இல்ல அவங்களுக்கு சம்மதம்” என்று சத்தியம் செய்யாத குறையாகச் சொல்லியிருந்தார் தரகர், மாப்பிளை பையனும் அவனின் தாய் தந்தையும் சித்தப்பா சித்தியும் வந்திருந்தனர்.
காபி பலகாரம் அனைத்தும் முடிந்ததும் அவர்களுக்குள் பேசிக்கொண்டு “தப்பா எடுத்துக்காதீங்க சரியாவரும்னு தோணல, உங்க சின்னப் பொண்ண வேணா பேசலாமே” என்றார்கள்.
மாப்பிளை பையனுக்கு ஓரு பக்கம் பார்வை கிடையாது அதோடு அதிகப்படியான உடல் எடையும், அது என்ன மூத்தவளை பார்க்க வந்துவிட்டு இளையவளை கேட்பது… இன்று கனகாம்பரத்திற்கு பொறுமை பறந்தது.
“போட்டோவைப் பாத்துட்டுதானே வந்தீங்க வேண்டாம்னா அப்போவே சொல்லவேண்டியது தானே அதைச் சொல்ல நேர்ல வரவேண்டிய அவசியம் இல்லையே” என்றாள் சூடாக.
“என்ன இந்தப் பொண்ணு இப்படி மரியாதை இல்லாம பேசுது, நல்ல வளர்ப்பு போயும் போயும் இதைப் போய்க் கேட்டோமே நல்ல வேலைடா நீ தப்பிச்ச” என்றார் பையனின் சித்தி அவனிடம்.
“என்ன தப்பிச்ச நீங்கக் கேட்டதும் தூக்கி குடுக்க இங்க யாரும் கோழிக்குஞ்சை வளக்குல சாப்பிட்டதுக்கு காசை வெச்சுட்டு கிளம்புங்க” என்றவள் செவ்வந்தியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
ஒருவேகத்தில் பேசிவிட்டாள் இப்பொழுது அது தவறோ, தான் பேசியதை வைத்து நாலு பேரிடம் இந்த வீட்டினர் மரியாதை தெரியாதவர்கள் என்று கூறிவிடுவார்களோ அதானால் தமக்கைக்கு நல்ல வரன்கள் வராமல் போய்விடுமோ என்ற பயம் சூழ்ந்தது.
சரியான நேரத்தில் பழனிச்சாமி வந்து மகளின் குழப்பத்தைத் தீர்த்துவைத்தார்.
“அதையே யோசிச்சுட்டு இருக்காத” என்றவர் சட்டை பையிலிருந்து பணத்தை எடுத்து மகள் கையில் வைத்து “எங்கயாவது வெளில போயிட்டு வாங்க இன்னைக்கு நீ கிடைக்க வர வேண்டாம் நான் பாத்துக்குறேன்” என்று சொல்லிச்சென்றார்.
முதலில் வெளியே போவதை பற்றிப் பெரிதாக நாட்டமில்லை செவ்வந்தியின் பேச்சைக் கேட்டபிறகு வெளியில் சென்றே ஆக வேண்டும் என்ற முடிவுக்குக் கனகம் வந்துவிட்டாள், தந்தை புறப்பட்டுச் சென்றபிறகும் வெகுநேரம் அங்கேயே அமர்ந்திருந்தவள் வீட்டிற்குள் நுழையத் தாயிடம் செவ்வந்தி பேசுவது கேட்டது.
“வேண்டாமா… எனக்கு நம்பிக்கையில்லை எத்தனை பேரு முன்னாடிதான் இப்படி நிக்குறது கஷ்டமா இருக்குமா, இன்னைக்கு கனகம் கேட்டாலே போட்டோல பாத்துட்டுதானே வரீங்க வேண்டாம்னா அங்கேயே சொல்லவேண்டியது தானேன்னு”.
“இந்தக் கேள்வியை ஒவ்வொருதடவையும் நேர்ல வந்து பாத்துட்டு என் முகத்துக்கு நேராவே பிடிக்கல வேண்டாம்னு சொல்லும்போது அவங்கள கேக்கணும்னு நினச்சுருக்கேன் ஆனா என்னால கேக்க முடியல இன்னைக்கு அவ கேட்டதே இத்தனை வர்ஷம் என் மனசுல அடைச்சு வெச்சிருந்த பாரம் கொஞ்சம் கொறஞ்ச மாதிரி இருக்கு”.
“அவளுக்கும் வயசு இருபத்திமூணு ஆகுதுல அவளயாவது நல்லபடியா கட்டிக்குடுங்க எனக்காகப் பாத்து காத்திருந்தா அவளுக்கும் வயசு போயிடும் ஒருவேளை எனக்குக் கல்யாணமே நடக்காம போய்ட்டா அவளையும் வீட்டிலேயேவா வெச்சுக்க முடியும் நீங்க அப்பாகிட்ட சொல்லிக் கனகத்துக்கு பாருங்க” என்றாள்.
இது சரியாக வராது என்று முடிவுசெய்த கனகாம்பரம் “அம்மா சினிமாக்கு போலாமா” என்று அவர்களுக்கிடையில் சென்று அமர்ந்தாள்.
“சினிமாக்கா வேல கிடக்குடி நீங்கப் போயிட்டு வாங்க நேரத்தோட போயிட்டு இருட்டறதுக்குள்ள வந்துடனும்” என்றவர் சின்ன மகளுக்குக் கண் காண்பித்துவிட்டு சென்றார்.
“நான் வரல புள்ள நீ தம்பிய கூட்டிட்டு போ, இன்னும் பத்து நாள்ல பாத்தப்புக்கு பள்ளிக்கூடம் ஆரம்பிச்சுடும் நீயும் கடைய விட்டா வீடுன்னு இருக்க போயிட்டு வாங்க” என்றாள் செவ்வந்தி.
“ஆமா நாங்க மட்டும்தான் வெளில போறதில்ல நீ நாள் பூரா ஊர் சுத்திட்டு தூங்கமட்டும்தான் ஊட்டுக்கு வர, ஏன்க்கா நீவேற இங்க பாரு நீ வரலைனா நாங்களும் போகமாட்டோம் ஆமா” என்றவள்.
“சூர்யா படம் வந்திருக்காம் படம் பேரு சிங்கம், அப்புறம் சிம்பு படம்கூட வந்திருக்கு விண்ணைத்தாண்டி வருவாயா” என்க.
“அக்கா… அக்கா ரஜினி படம் கூட வந்திருக்காம் அந்தச் செந்தில் பய பாத்துட்டானாம் நாலு நாலா அதைப் பத்திதான் பேசுறான் அதுக்கு போலாம்” என்றான் மகேஷ்.
“டேய் ரஜினி படத்துக்குகெல்லாம் டிக்கெட் கிடைக்காதுடா அப்புறமா அப்பாகிட்ட சொல்லி டிக்கெட் வாங்கி ஒருநாள் போலாம்” என்றாள் கனகம்.
“அதுக்குள்ள படமே போய்டும்க்கா” என்றான் மகேஷ்.”
“இருடா… போறோமாண்ணே தெரியல” என்றாள் தமக்கையை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே, இரண்டுபேரின் சேட்டையைப் பார்த்துச் செவ்வந்தி சிரித்துவிட்டாள்…
“சரி வாங்க போலாம் ஆனா என்ன படம்” என்க.
“மூணுல ஒரு விரலைத் தொடு” என்றாள் கனகாம்பரம் மகேஷிடம்.
“சாமி ரஜினி படத்துக்குப் போகணும்” என்று வேண்டிக்கொண்டவன் ஆள்காட்டி விரலைத் தொட “சிங்கம் படம்” என்றாள் கனகம்.
அவன் முகமே வாடிவிட்டது தமக்கைகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர் “வரியா இல்லையா” என்றாள் இளையவள்.
“போலாம்” என்றான் மெதுவாக, மூவரும் தயாராகச் சென்றனர்.
எது உடுத்தினாலும் தன் முகம் மாறவா போகிறது என்ற கழிவிரக்கம் அதிகமாகத் தோன்ற பழைய புடவை ஒன்றை எடுத்தாள் செவ்வந்தி, அதைப் பிடுங்கி தூர போட்ட கனகம் இளம் நீல நிறத்தில் வெள்ளை பூக்கள் போட்ட பூனம் புடவைய அவளிடம் கொடுத்துக் கட்ட சொன்னாள்.
“வேண்டாம் புள்ள எனக்கு இதெல்லாம் பிடிக்கவேயில்ல வெளில போகவே என்னமோ போல இருக்கு கனகம்” என்றவளின் மனதை புரிந்துகொள்ள முடிந்தது, அதற்காக அப்படியே விடமுடியாதே.
“எல்லாம் சரியாகும்க்கா நீ மொதல்ல மத்தவங்கள யோசிக்குறத விட்டுட்டு எனக்கு என்ன நான் பாக்க நல்லா தானே இருக்கேன்னு நினை நாமளே நம்மள நல்லா இல்லனு சொன்னா மத்தவங்க எப்படி மாத்தி சொல்லுவாங்க நாங்க இல்லையா உனக்கு” என்றவள் எலுமிச்சை மஞ்சளில் பழுப்பு நிற இலைகள் சிதறிக்கிடக்கும் புடவையைக் கட்டிக்கொண்டாள்.
செவ்வந்தி அப்படியே வெளியில் செல்லப் பார்க்க அவளைப் பிடித்து நிறுத்தி அழகாகப் பின்னலிட்டு முகத்திற்கு கொஞ்சம் பவுடரை போட்டுவிட்டு நீலநிற ஸ்டிக்கர் பொட்டு ஒன்றையும் வைத்துவிட்டாள்.
அவள் நிமிர்ந்து நேரே பார்க்கும்போது விழிகளின் மாற்றம் தெரியும் அவ்வளவே ஒரு பெண்ணிற்கு அதுவே பெரிய குறை அவளுக்கு வாழ்வு கொடுப்பதே பெரும் தியாகம் என்பதுதானே பொதுவான அபிப்பிராயம்.
“பாத்து பத்திரமா போய்ட்டுவாங்க” என்ற செல்லியம்மா கனகத்தின் கையில் இருநூறு ரூபாயை கொடுக்க “அப்பா குடுத்தாரும்மா” என்றாள் அவள்.
“இருக்கட்டும் வெளில போறீங்க கொஞ்சம் கூடக் காசு கைல இருந்தா ஒன்னும் தப்பில்ல” என்றவர் “தம்பி அக்காளுங்கள பத்திரமா பாத்துக்கணும்” என்றார் ஒரு சராசரி கிராமத்து பெண்மணியாக.
ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை அல்லவா தங்கள் காலத்திற்கு பிறகு அவன்தானே இவர்களுக்கு அனைத்தும் செய்யவேண்டியவன் அந்த உணர்வை அவனுள் சமயம் கிட்டும்போதெல்லாம் பெற்றவர்கள் கடத்திக்கொண்டே இருந்தனர்.
பத்துநிமிட நடைப்பயணத்துக்கு பிறகு சோளக்காட்டை கடந்து பேருந்து நிற்கும் மைல் கல் அருகில் வந்து நின்றனர் கால்மணி நேரத்தில் மினி பஸ் வந்து சேர்ந்தது, மீன்சுருட்டி சென்று அங்கிருந்த தியேட்டரில் கேட்க எந்திரன் படம் டிக்கெட் இல்லை.
“ஏத்தா வாறீங்கன்னு சொல்லியிருந்தா மூணு சீட்டு போட்டுருப்பேன்ல, உங்க அப்பனுக்கு புத்தியேயில்ல” என்றார் அதன் உரிமையாளர் பழனிச்சாமியின் சிநேகிதர்.
அலைபேசியில் யாருக்கோ அழைத்துப் பேசியவர் “ஜெயம்கொண்டான் போங்க மூணு டிக்கெட் சொல்லியிருக்கேன் இன்னும் அரைமணி நேரம் இருக்கு சீக்கிரம் கிளம்புங்க” என்க மூவரும் அவசரமாக ஓடிக் கிளம்ப தயாராக நின்ற பேருந்தில் ஏறிக்கொண்டனர்.
இருக்கையும் கிடைத்துவிட்டது வெகுநாட்கள் ஆகிறது செவ்வந்தி இப்படி வெளியில் வந்து ஜன்னலோரம் அமர்ந்து அவள் வேடிக்கை பார்த்து வருவதை பார்த்திருந்தாள் கனகம்.
ஒவ்வொரு நிறுத்தத்திலும் பஸ் நிற்கும்போதும் “அக்கா படம் போட்ருவாங்களா நேரம் ஆச்சா” என்று பரபரத்தான் மகேஷ், ஒரு வழியாக எந்திரன் படம் முடிந்து வெளியில் வருகையில் அத்தனை சந்தோசம் அந்த முகங்களில்.
“சூப்பரா இருந்துச்சு இல்லக்கா, பெரியக்கா உனக்கு எந்தப் பாட்டு பிடிச்சுச்சு சின்னக்கா உனக்கு” என்று கேள்விகளால் அவர்களைக் குடைந்துவிட்டான் இளையவன்.
படம் முடிய மாலை ஐந்து மணி ஆகியிருந்ததது வீட்டிற்கு பஸ் ஏறும் முன் அனைவருக்கும் பொரோட்டாவும் குருமாவும் வாங்கிக்கொண்டார்கள், அதோடு தாய்க்கு பிடித்த வெள்ளை பணியாரமும் தந்தைக்கு தனியாக இடியாப்பம் தேங்காய் பாலும் வாங்கிக்கொண்டனர்.
திரும்பிப் போகையில் கூட்டம் அள்ளியது பேருந்தில் இடமே இல்லை செவ்வந்தி கொஞ்சம் உள்ளில் நகர்ந்துவிட மகேஷை தன் கைவளைவில் வைத்துக்கொண்டு கொஞ்சம் பின்னில் நின்றுகொண்டாள் கனகம்.
அவளுக்கு நேரே இருந்த சீட்டில் அமர்ந்திருந்த பெண்மணி பட்டுடுத்தி கழுத்து நிறைய நகை அணிந்திருந்தார் ஏதோ விஷேஷத்திற்கு சென்று வருகிறார் போல என்று எண்ணிக்கொண்டாள் கனகம்.
அவர் கொண்டையில் சுற்றியிருந்த பூச்சரம் அறுந்து அவர் கழுத்தை உரசிக்கொண்டிருந்தது இடையில் ஒருமுறை அதைப் பின்னில் தள்ளிவிட்டவர் அதன் பிறகு அதைக் கண்டுகொள்ளாமல் உறங்கத் தொடங்கினார்.
அவருக்குப் பின்னிலிருந்த சீட்டில் தலையை முக்காடிட்டு கம்பியில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தவன் அந்தப் பெண்மணியின் கழுத்தில் கிடந்த நெக்லஸ் ஒன்றை லாவகமாக அறுத்து எடுத்துக்கொண்டான்.
பூச்சரம்தான் கழுத்தில் இழைக்கிறது என்று அந்தப் பெண்மணி நினைத்துக்கொண்டார், அதுவும் அவன் வேலைதான் முதலில் பூச்சரத்தை நறுக்கிவிட்டான் பிறகு காத்திருந்து நகையைத் திருடிவிட்டான் கூட்ட நெரிசலில் யாரும் அதைக் கவனிக்கும் நிலையில் இல்லை.
இல்லையென்றாலும் கைதேர்ந்த திருடன்தான் அத்தனை நேக்காகக் கழற்றிவிட்டானே கையில் நகையைச் சுருட்டிக்கொண்டு அவன் எழுந்துகொள்ள அவனை நேரே பார்த்து உறுத்துவிழித்தாள் கனகம்.
இந்தமுறையும் அவன் முகம் தெரியவில்லை மூக்குவரை துண்டைவைத்து மூடியிருந்தான் அந்தப் பெரிய கண்கள் மட்டுமே அவளுக்குத் தெரிந்தது துண்டை மீறி வெளியில் துள்ளிக்கொண்டிருந்த சுருண்ட முடியிழைகள் சிலதும்.
அவள் தன்னை கண்டுகொண்டாள் என்று தெரிந்தததும் கத்தியை மகேஷின் புறம் காட்டி கண்களால் அவளை மிரட்டத் தம்பியைத் தன்னோடு இன்னும் சேர்த்து நிறுத்தித் தள்ளிநின்றாள் கனகம்.
பஸ் நிற்பதற்கு காத்திருக்காமல் அவன் படியை நெருங்குவதை பார்த்தவள் “திருடன் திருடன் புடிங்க” என்க, ஒரே தாவில் வெளியில் குதித்தவன் பின்னில் வந்த பைக்கில் ஏறிப் பஸ்ஸை கடந்து பறந்துவிட்டான்.
பஸ் நின்றுவிட்டது யாருக்கும் ஒன்றும் புரியவில்லை “என்னம்மா என்னாச்சு” என்று ஆளாளுக்கு அவளிடம் கேட்க “உங்க நகையை அறுத்துட்டு போய்ட்டான்” என்றாள் அந்தப் பெண்மணியிடம்.
தன் கழுத்தை பார்த்தவர் அங்கேயே கூப்பாடு போடத் தொடங்கிவிட்டார் “ஐயோ ஐயோ போச்சே நாலு பவன் போச்சே, வௌங்குவானா நான் என்ன பண்ணுவேன்” என்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தார் அனைவரும் கீழே இறங்கிவிட்டனர்.
வெகுநேரம் கத்திக்கொண்டிருந்தவர் அவர் அருகில் நின்ற மனிதரைப் பார்த்து “யோவ் தரகரே என்ன சம்பந்தம்மயா காமிச்ச வெளங்காதவ அவளைப் பாத்துட்டு வீடு திரும்பல அதுக்குள்ள என் நகை போச்சு அவளைக் கட்டி வீட்டுக்குக் கூட்டி வந்திருந்தா என் வீடே போயிருக்கும் அவ அப்பனுக்கு போனை போட்டு அவன் பொண்ணு வேணாம்னு சொல்லு” என்றார் ஆங்காரமாக.
அதுவரை அந்தப் பெண்மணியைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்த கனகம் பார்வையாலே அவரை எரித்துக்கொண்டிருந்தாள்.
‘என்ன மனுஷி இவங்க எவனோ களவாணி பய திருட்டிட்டு போனதுக்கு அந்தப் பொண்ணு என்ன பண்ணும் நல்லவேளை அந்தப் பொண்ணு தப்பிச்சுடுச்சு’ என்று மனதார கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டாள்.
அவள் பக்கத்திலேயே பாய் போட்டுப் படுத்துக் காத்துவங்கிக்கொண்டிருந்த விதி விழுந்து புரண்டு சிரித்துக்கொண்டிருந்தது.
“ஏம்மா பொண்ணு அவனை நீ பாத்தல்ல போலீஸ்ல வந்து அடையாளம் சொல்றியா” என்றார் நடத்துனர்.
“ஆத்தி… அம்மாக்கு தெரிஞ்சது இன்னைக்கு விளக்குமாறு பிஞ்சிரும்” என்று எண்ணியவள் “இல்லண்ணே கண்ணு மட்டும்தான் தெரிஞ்சது முகத்தை முழுசா மூடியிருந்தான்” என்றாள் அவள்.
அப்படி இப்படி பேசிப் பயணிகளோடு பஸ் புறப்பட அந்தப் பெண்மணியும் அவர் கணவரும் தரகரும் மட்டும் காவல் நிலையத்தில் இறங்கிக்கொண்டனர்.
அங்கு நடந்ததை உடன்பிறப்புகள் உடன்படிக்கை போட்டுக்கொண்டு மறைத்துவிட்டனர், அன்றிலிருந்து கனகத்தின் நினைவிலும் கனவிலும் அந்தக் களவாணியே, பேருந்தில் ஏறினாலே இதில் இருப்பானோ இன்று யார் நகையை அறுத்திருப்பான் என்ற சிந்தனைகளே.
அவனைத் தேடி தேடி இப்பொழுதெல்லாம் சுருட்டை முடியோடு யாரை பார்த்தாலும் அவன்தானோ என்று மனம் பரபரக்கிறது ‘நம்மள கிறுக்கியாக்கிட்டானே’ என்று தனிமையில் புலம்பிக்கொண்டிருந்தாள்.
இரண்டு மாதங்களும் கடந்துவிட்டது இந்த முறை புதிய ஒரு வரனின் தகவலோடு வந்துசேர்ந்தார் தரகர்.
“எல்லா விஷயத்தையும் சரியா சொல்லிடீங்களா தரகரே, வேணும்னா பொண்ணை கோவில்ல வெச்சு பாக்கட்டும் என் மகளுக்குத் தெரிய வேண்டாம் அவங்க மட்டும் பாத்துக்கிட்டும் அதுக்கப்புறமும் அவங்களுக்கு சம்மதம்னா வீட்டுக்கு வரட்டும், எத்தனை தடவ என் புள்ளய காயப்படுத்து வாங்க வேணாம்” என்றார் பழனிச்சாமி.
“சரிங்க அப்படியே செய்யலாம்” என்றார் தரகர்.
அதன்படி வெள்ளிக்கிழமை செல்லியம்மா மூத்த மகளை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச்சென்றார், கனகத்திடம் மட்டும் சொல்லியிருந்தனர் செவ்வந்திக்கு கூடத் தன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்று தெரியாது.
ஞாயிறன்று காலைச் செவ்வந்தியை பார்க்க மாப்பிளை வீட்டினர் வந்துவிட்டனர், வெள்ளிக்கிழமை கோவிலில் வைத்துப் பார்த்து அவர்கள் சம்மதமும் சொல்லியிருந்தனர் ஆகையால் நேரம் கடத்தாமல் இரண்டே நாட்களில் வீட்டிற்கும் வந்துவிட்டனர்.
“எதுக்குமா மறுபடியும்… இவங்களும் பிடிக்கல தான் சொல்லப்போறாங்க” என்றாள் செவ்வந்தி.
“அதெப்படி சொல்லுவாங்க உன்னை நேர்ல பாத்து பிடிச்சிருக்குனு அவங்க சொன்ன அப்புறம்தான் அப்பா வீட்டுக்கே வரசொல்லியிருக்காங்க” என்றார் செல்லியம்மா.
“என்னய பாத்தாங்களா! எங்க? எப்போ?” என்றாள் ஆச்சர்யமாக.
“அதெல்லாம் அப்புறம் பேசலாம் சீக்கிரம் கிளம்பி நில்லு” என்றவர் “சின்னவளே பாத்துக்கோ” என்றுவிட்டு அடுப்படிக்கு சென்றார்.
சரியாகப் பத்துமணிக்கு வந்துவிட்டனர், மாப்பிள்ளையும் வந்திருந்தான் ஜன்னலின் வழியே வந்தவர்களை எட்டி பார்த்த கனகாம்பரத்தின் விழிகள் அதிர்ச்சியாகி தமக்கையை திரும்பிப் பார்த்தது.
“என்னாச்சுடி?” என்று அவள் அருகில் நெருங்கி எட்டி பார்த்த செவ்வந்தி “ஆத்தி இந்த அம்மாவா” என்று நெஞ்சில் கைவைத்துக்கொண்டாள்.
வந்தவர் வேறுயாருமில்லை அன்று பேருந்தில் நகையைப் பறிகொடுத்துவிட்டு பழியை பார்த்துவிட்டு வந்த பெண்ணின் தலையில் சுமத்திய புண்ணியவதி.
அதோடு முடிந்ததா அவரேதான் பழஞ்சநல்லூரின் நடமாடும் வட்டிக்கடை ராக்காயி.
error: Content is protected !!