Skip to content
Post Views: 1,974
அத்தியாயம் – 18 -2
சத்யாவிற்கு விருது கிடைத்து இருக்கும் சந்தோஷத்தைக் கூட காமாட்சி அனுபவிக்க விடவில்லை. அமுதா, அகிலா மற்றும் தன் கணவரோடு நேராகக் கிளம்பி சத்யாவின் வீட்டிற்கு வந்துவிட்டார்.
அன்றைய நாள் முழுதும் சண்டை போட்டார். எப்படி சினிமாவில் வேலை செய்யலாம் என அத்தனை சண்டை. ஒரு கட்டத்தில் சத்யாவின் அப்பா உங்கள் மகனின் அனுமதியோடு தான் செய்கிறாள் என்று கூற அதிர்ந்து நின்று விட்டார்கள்.
அமுதா, அகிலா இருவரும் இந்த விஷயத்தில் அன்னையின் பக்கம் தான். தன் அன்னை வேண்டாம் என்று சொன்னதை சத்யா செய்திருக்கிறாளே என்ற கோபம், வருத்தம் இரண்டுமே இருந்தது. அதில் தன் அண்ணனும் சம்மதித்து இருக்கிறான் என்றதும் சத்யா தன் கைக்குள் அண்ணனைக் கொண்டு வந்துவிட்டாள் என்று தோன்றி விட்டது. எனவே அவர்களும் சத்யாவின் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.
Advertisement
சத்யாவின் தந்தை சந்திரனுக்கு ஃபோன் செய்து நடப்பதைக் கூறியிருக்க, சந்திரன் அவன் தந்தையின் போனில் எல்லோரையும் அழைத்துக் கொண்டு கிளம்பும்படி கூறினான்.
காமாட்சி எல்லோர் எதிரிலும் சத்யா இனிமேல் தங்கள் வீட்டிற்கு வரக்கூடாது என்று கட்டளையிட்டார். அத்தோடு அடுத்த முறை சந்திரன் வரும்போது குழந்தை மட்டுமே அவனோடு வரவேண்டும் என்றும் கூறிவிட்டு கிளம்பினார் காமாட்சி.
சந்திரனின் தந்தை லோகநாதனால் எந்தப் பக்கமும் பேசமுடியவில்லை. காமாட்சியின் புலி வருது பயமே, இன்றைக்கு அந்த புலியை வீட்டிற்குள் வரவைத்து விட்டது என்று நினைத்துக் கொண்டார்.
Advertisement
சந்திரனிடம் லோகநாதன் தனியாகப் பேசியதில், சத்யா நிலைமையும் அவரால் புரிந்துக் கொள்ள முடிந்தது. கணவன் இராணுவத்தில், அவள் தன் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படுத்திக் கொள்ளவே இந்த வேலை செய்கிறாள். இதைச் சந்திரன் கூறிய போது சரிதானே என நினைத்தார்.
Advertisement
சத்யா விருது வாங்கியதில் சந்திரனுக்கு மகிழ்ச்சி தான் என்றாலும், வீட்டினரின் பேச்சுக்களைக் கேட்டு வருந்தினான். அதனால் வெளிப்படையான மகிழ்ச்சியை சத்யாவிடம் காட்டிக் கொள்ளவில்லை.
சத்யா விருது வாங்கும் விழாவிற்கு சந்திரனை அழைக்க, அவனால் வரமுடியவில்லை. சத்யாவிற்கு மிகுந்த வருத்தம் அதில். தன் குடும்பத்திற்கு என்றால் விமானம் மூலம் கூட வந்து விடுகிறான். தனக்கு அதில் பாதி வழி தான். டெல்லியில் விழா. ஒருநாள் விடுமுறை போட்டாலும் போதும். ஆனால் வரவில்லை என்றதில் வேதனை ஆகியது. அதோடு அவர்கள் உறவில் சிறு விரிசலும் விழுந்தது.
தினமும் பேசிக் கொள்ளும் நேரம் குறைந்தது. சத்யாவின் விருது நிகழ்ச்சிக்குப் பிறகு அவளின் தோற்றத்தைக் கண்ட சில இயக்குநர்கள் அவளை நடிக்க அழைத்தனர். முதலில் மறுத்த சத்யா, கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறினாள். தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஒப்புக் கொண்டாள். அதுவும் அவள் மிகவும் மதிப்பு வைத்திருந்த மனோகர் சர் அழைக்கவும் சம்மதித்து இருந்தாள்.
Advertisement
அதைச் சந்திரனிடம் கூற, சந்திரன் மிகவும் மறுத்தான். சத்யா இந்தமுறை பிடிவாதம் பிடிக்க, சந்திரனுக்கு வெறுத்து விட்டது. சட்டென்று ஃபோன் வைத்து விட்டான்.
சத்யாவின் பெற்றவர்கள் கூட மறுத்தனர். ஆனால் சத்யாவிற்கு திருமணத்திற்கு மறுநாள் காமாட்சி செய்ததில் ஆரம்பித்து தற்போது வரை தன்னை நடத்திய விதத்தில் இந்தப் பிடிவாதம் தலை தூக்கி இருந்தது.
காமாட்சியின் தன்னலம் மற்றும் பிடிவாதம் ஒரு விதமான மனநோய் என்றால், சத்யாவிற்கு அதை எதிர்க்கும் மனநிலை வந்ததும் மனநோய் தான்.
ஆனால் சத்யா மட்டும் நடிப்பதாக இருந்ததை கீர்த்தியையும் நடிக்க வைக்கும் முடிவை நோக்கித் தள்ளிச் சென்றதும் காமாட்சி தான்.
சத்யா நடிக்க ஆரம்பித்தது தெரிந்ததும், காமாட்சி தன் மகனை வரவைத்தார். சந்திரன் வரவும் சத்யா நடிப்பது தொடர்ந்தால், கீர்த்தியைத் தாங்கள் அழைத்துச் சென்று விடுவோம். சந்திரன், சத்யா இருவருக்கும் எந்த தொடர்பும் இருக்கக் கூடாது என்றார்.
சத்யா அதற்கு மறுக்க, சந்திரன் எவ்வளவோ கெஞ்சினான். தான் அம்மாவிற்காக மட்டும் சொல்லவில்லை. உனக்கு அந்த ஃபீல்ட் செட் ஆகாது. டப்பிங் வேறே விஷயம். நடிப்பு என்றால் நிறைய சந்திக்க வேண்டி வரும் என்று எல்லாம் எடுத்துக் கூறினான்.
சத்யா அதை எல்லாம் மறுத்தாள். இதுவரை அவள் எந்த பிரச்சினையும் சந்திக்கவில்லை. வெளியில் இருந்து பார்த்துக் குறை சொல்லாதீர்கள். வெளியே வேலைக்குப் போனால் கூட எத்தனை பேர் தப்பாகப் பார்க்காமல் இருக்கிறார்கள். அதை எல்லாம் தாண்டி தானே எல்லாப் பெண்களும் சாதிக்கிறார்கள். நானும் சாதிப்பேன் என்று எல்லாம் பேசினாள்.
சந்திரனின் அம்மாவால் தான் இத்தனைப் பிரச்சினையும். ஒன்றும் தெரியாமல் வீட்டினுள் வாழ்ந்துக் கொண்டிருக்கும் உங்கள் அம்மாவின் சொல் இத்தனை தூரம் எடுபடுகிறது. ஆனால் எனக்கெனத் தனி அடையாளம் வைத்திருக்கிறேன். என்னை ஒரு பொருட்டாகக் கூட இந்த குடும்பத்தில் மதிக்கவில்லை என்று எல்லாம் கூறினாள்.
மேலே சொன்னவை எல்லாம் நாசூக்காக இருக்கும். உண்மையில் வார்த்தைகள் தடித்தே தான் இருப்பக்கமும் இருந்தது.
ஒரு கட்டத்தில் காமாட்சியின் வாதம் வெற்றி பெற, அந்த இடத்தில் சத்யா, சந்திரன் திருமணவாழ்க்கை முடிந்து இருந்தது.
பரஸ்பர புரிதலில் இருவரும் ஒப்புக் கொண்டிருக்க விவாகரத்தும் கிடைத்து விட்டது. ஸ்ரீகீர்த்தியை சத்யா பொறுப்பில் விட்ட நீதிபதிகள், குழந்தையை சந்திக்க சந்திரன் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று உத்தரவிட்டனர். அவளைப் பற்றி சந்திரனிடம் தெரிவிக்க வேண்டியது சத்யாவின் கடமை என்றும் கூறினார்கள்.
ஸ்ரீகீர்த்தியின் பத்து வயதில் இவர்கள் பிரிந்திருக்க, அதுவரை சந்திரன் வரும்போது எல்லாம் வெளியூர்களுக்கு சென்று வருவார்கள். கீர்த்தியின் தந்தையின் பணி குறித்துப் பெருமை தான் என்பதால், சந்திரன் வந்து தங்கும் ஒரு மாதமே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.
தற்போது அவை எல்லாம் நின்று இருக்கவே, குழந்தை சோர்வடைய ஆரம்பித்தாள். அதைக் கவனித்த சத்யா, ஸ்ரீகீர்த்தியைத் தன்னோடு படப்பிடிப்பிறக்கு அவ்வப்போது அழைத்துச் சென்றாள்.
அங்கே ஒரு குழந்தைகள் நிகழ்ச்சிக்கு வரவேண்டிய குழந்தை கடைசி நேரத்தில் வரமுடியாமல் போய்விட அதில் பங்கேற்கும் வாய்ப்பு கீர்த்திக்குக் கிடைத்தது.
சத்யாவிற்கு உள்ளூர பயம் தான் என்றாலும் கீர்த்தி ஆசையாகப் பார்க்கவும் சம்மதித்தாள். அதில் இருந்து தொடர்ச்சியாக சிறு சிறு வாய்ப்புகள் கிடைக்க, கீர்த்தியும் அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றாள்.
இதன் தொடர்ச்சி சத்யாவின் மேல் சந்திரன் குடும்பத்திற்கு முழு வெறுப்பு வந்தது. ஆனால் சந்திரனால் வெறுப்புக் கொள்ள முடியவில்லை. கோபம் மட்டுமே அதிகம் இருந்தது.
சில வருடங்களில் சத்யாவின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக மறைந்து இருந்தனர். அவர்களுக்கு ஏற்பட்ட மனக் கவலையும் அவர்களின் மரணத்தை விரைவாக்க ஒரு காரணம் தான்.
கீர்த்தியின் பத்து வயதுக்குப் பிறகு சந்திரன் இராணுவத்தில் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு ஏதாவது தொழில் செய்யலாம் என்று நினைத்து இருந்தான். நடந்த விஷயங்கள் அவனை எல்லாவற்றையும் வெறுக்க வைத்து, இராணுவமே கதி எனக் கிடக்க வைத்தது.
வாரம் ஒரு முறை கீர்த்தியிடம் பேசுவது, வருடத்திற்கு ஒரு முறை கீர்த்தியைச் சந்திப்பது என அவனின் வாழ்க்கை ஓடியது.
ஸ்ரீகீர்த்தி பிளஸ் டூ முடித்த சமயம், அவளின் மேல்படிப்பு ஆரம்பிக்க மூன்று மாதம் இடைவெளி இருந்தது. சத்யா அப்போது நடிப்பு மற்றும் டப்பிங் என்று இரண்டிலும் பிஸியாக இருந்தார். அதனால் கீர்த்தி தன் தந்தையிடம் ஒரு மாதம் சென்று இருந்து வந்தாள்.
அப்போது தான் கருணாகரன் விஷயம் நடந்தது. கருணாகரன் மனோகர் சர் மருமகன் என சத்யாவிற்கு தெரியும். ஒருநாள் ஷூட்டிங் முடித்து விட்டு, மனோகர் சர் எடுக்கும் நாடகம் ஒன்றிற்கு டப்பிங் பேச ஸ்டுடியோ சென்று இருந்தாள்.
அது கருணாகரன் நண்பனின் ஸ்டுடியோ தான். அன்றைக்கு டப்பிங் முடிய நிறையவே நேரம் எடுக்க, கிட்டத்தட்ட நள்ளிரவில் கிளம்பினாள். இதுவரை இந்த மாதிரி சமயங்களில் மனோகர் சர் டிரைவர் ஒருவரே அவளை வீட்டில் விட்டு விடுவார். மிகவும் நம்பிக்கையானவர்.
அன்றைக்கு கருணாகரன் அங்கிருக்க, டிரைவரை வீட்டிற்கு அனுப்பி இருந்தான். டிரைவர் சிறு சந்தேகத்தோடு மனோகருக்குத் தகவல் கொடுத்து விட்டார்.
மனோகர் ஸ்டுடியோ வருமுன், சத்யா டப்பிங் முடித்து வந்து கார் தேடினாள். கருணாகரன் வரவே அறிமுகப் புன்னகை சிந்தினாள். அவளிடம் சாதாரணமாகப் பேசிய கருணாகரன் தான் வீட்டில் கொண்டுவிடுவதாகக் கூற, தயங்கி நின்று இருந்தாள்.
அதற்குள் கருணாகரன் அருந்தியிருந்த போதை அவரை உந்த, சட்டென்று அவள் தோளில் கைவைத்தார். சத்யா அனிச்சை செயலாய்க் கையைத் தட்டி விட்டுவிட்டு அடித்தும் விட்டார்.
அப்போது “என்னடி? பெரிசா அலட்டற. புருஷனை விட்டுட்டு இருக்க. பொண்ணையும் நடிக்க விட்டு இருக்க. எதுக்கு பணத்துக்குத் தானே. அது எவ்ளோ வேணும்னாலும் நான் தரேன். என்னோட வந்துடு” என்றான்.
“ச்சீ. உன் புத்தி அப்படித் தான் போகும்” என்று துப்பினாள்.
அதில் வெறி கொண்ட கருணாகரன் அவளின் கையை பிடித்து முறுக்கி தன் அருகேக் கொண்டு வரும்போது மனோகர் வந்துவிட்டார்.
மனோகர் கருணாகரனின் இரு கன்னத்திலும் அறைந்தார். பின் சத்யாவை தன் காரில் அழைத்துக் கொண்டு அவளை வீட்டில் விட்டவர், வெகுவாக தைரியம் சொன்னார்.
அன்று இரவு சத்யாவிற்கு பயத்தில் காய்ச்சல் வர, கீர்த்தியும் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டார். நேரம் கூடப் பார்க்காமல் கீர்த்திக்கு அழைக்க, அவள் தூங்கிக் கொண்டிருக்கவும் சந்திரன் எடுத்து ஹலோ என்றார்.
சந்திரன் குரல் கேட்கவும் அதுவரை அடைத்துக் கிடந்தது போல பெரிதாக ஒரு கேவல் வந்தது. சந்திரன் மீண்டும் மீண்டும் ஹலோ ஹலோ என, ஃபோன் வைத்து விட்டாள்
இரவெல்லாம் அழுததில் காய்ச்சல் அதிகமாகக் காலையில் வேலையாள் வந்து பெல் அடிக்கவும் கஷ்டப்பட்டு வந்து கதவைத் திறந்தார். சத்யாவின் நிலைப் பார்த்து பதைத்தவர், என்ன செய்வது என்று புரியாமல் நின்றார்.
அப்போது மனோகர் அவர் மனைவியோடு வர, இருவருமாக சத்யாவை மருத்துவமனையில் சேர்த்தனர். அதிர்ச்சியில் காய்ச்சல் என, மனோகரின் மனைவி தான் சத்யாவைக் கவனித்துக் கொண்டார்.
சத்யா இரண்டு நாளில் வீட்டிற்கு வர, மனோகர் அவள் வீட்டிற்கு இரண்டு வாட்ச்மேன் மற்றும் நம்பிக்கையான வேலையாள் இருவரை ஏற்பாடு செய்தார்.
மனோகர் கருணாகரன் மேல் போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கிறாயா என்று கேட்க, சத்யா பயத்தில் வேண்டாம் என்றாள். ஏன் எனக் கேட்க, ஏற்கனவே தான் கணவரை பிரிந்து வாழ்வது தெரிந்து தான் கருணாகரன் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார். போலீஸ் என்று போனால் தன் கணவர் குடும்பமே தன்னைத் தவறாக நினைக்கக் கூடும் என்று அஞ்சினாள்.
அதே சமயம் மனோகரின் மனைவி, தன் மகள் உமா மகேஷ்வரி மேஜர் ஹார்ட் சர்ஜரி ஒன்று முடிந்து தன் வீட்டில் இருக்கிறாள் என்றார். இந்த நேரத்தில் தன் கணவன் பற்றித் தெரிய வந்தால் உமாவின் இதயம் தாங்காது என்றும், தன் பேரன் தாயில்லாமல் போய் விடுவான் என்றும் அழுதார்.
மனோகர் அதற்கு மனைவியின் மீது கோபப்பட்டார். இறுதியில் மனைவியின் மகள் மீதான பாசம் வென்றது.
நான்கு வருடங்கள் முன் வரை மனோகர் சத்யாவிற்கு எல்லாவிதத்திலும் பாதுகாப்புக் கொடுத்தார். ஸ்ரீகீர்த்தி நடிக்க வரும்போது கூட நல்ல கம்பெனியா என்ன என்பதை எல்லாம் விசாரித்தே சத்யாவிடம் பேசவே அனுப்புவார். தன் மகள் உமா போல சத்யாவைப் பார்த்துக் கொண்டார் மனோகர்.
அதற்கு பின் சத்யா தானே நல்லவர்களை அருகில் வைத்துக் கொண்டு முடிந்தவரை தன்னையும் , தன் மகளையும் பாதுகாத்துக் கொண்டாள்.
இதை எல்லாம் சத்யா நினைத்துப் பார்த்த போது முதல்நாள் சத்யன், பிரபஞ்சன் இருவரிடமும் கூறும்போது இருவரும் கேட்ட கேள்வி ஸ்ரீகீர்த்திக்கு இது எல்லாம் தெரியுமா என்பதே.
இல்லை என்றவர், கருணாகரன் தன்னிடம் ஸ்ரீகீர்த்தியை நடிக்கக் கேட்கும் போது எல்லாவற்றிற்கும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யவேண்டும் என்று கண்டிஷன் போட்டார். அதை எதிர்த்து மனோகரிடம் போனதால் தன் மீது கோபம் என்று மட்டும் கூறியிருந்ததாகச் சொன்னாள் சத்யா.
சத்யா பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த சந்திரன் ஏதோ சொல்ல வந்து நிறுத்தியதைக் கவனித்தான் பிரபஞ்சன். தான் ஒரு ஃபோன் பேசிவிட்டு வருவதாகக் கூறி வெளியேறினான்.
பிரபஞ்சன் வெளியேறவும் சத்யாவின் புறம் திரும்பினான் சந்திரன். என் குரல் கேட்டதும் அன்றைக்கு இரவு என்னிடம் அழத் தெரிந்த உனக்கு இது நடந்தது என்று கூற முடியாதா? என்று கேட்டான்.
“இல்லை. எனக்கு குற்றவுணர்ச்சி ஆகி விட்டது. உங்கள் சொல்லை மீறி நான் நடித்தத்தில், சட்டென்று கீர்த்திக்கும் கெட்ட பெயர் வந்துவிடுமோ என்று பயம் வந்து விட்டது” என்றாள் சத்யா.
“சத்யா. இந்த விஷயம் எதுவுமே எனக்கு எப்போதும் பெரிசு இல்லை. ஆனால் என்னோட மனநிலைல தான் எல்லோரும் இருப்பாங்கனு சொல்ல முடியாது. சொந்த பந்தங்களோட வாழும் வாழ்க்கையில் தான் நிறைவு இருக்கும். யாரும் வேண்டாம்னு நினைச்சா ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையாகத் தான் இருக்கும். தவறுகளைக் கண்டிச்சு, அதை உணரும்போது அரவணைச்சுப் போறது தான் நிறைவான குடும்பமா இருக்கும். இதை உனக்கு மட்டும் சொல்லலை. என் அம்மாக்கும் சேர்த்து தான் சொல்றேன். சில நேரங்களில் வயது, உறவு முறையில் நேரடியா கண்டிக்க முடியாது. ஆனால் அதை உணர்த்த முடியும். உணர்த்தியும் இருக்கேன். அதனால் நீ தப்பே செஞ்சாலும் என்னால் கண்டிக்கத் தான் முடியும். தண்டிக்க முடியாது. அப்படி இருக்கும் போது தவறு உன் பக்கம் இல்லாதப்போ உனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் தேவையில்லை.” என்று எடுத்துக் கூறினான் சந்திரன்.
அப்போது தான் சந்திரன் பதினைந்து வருடங்களாகத் தன் அன்னையின் வீட்டிற்கு செல்லவில்லை என்றான். அத்தோடு தங்கைகள் வீட்டு விசேஷங்களுக்கு நேராகச் சென்று விட்டுத் திரும்பி விடுவதாகவும் கூறினான். அவர்கள் கொடுக்கும் பதில் மரியாதையை ஏற்றுக் கொள்வது இல்லை. எப்போது சத்யாவை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ அப்போது எனக்கான மரியாதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டான்.
இதை எல்லாம் சந்திரன் கூறும்போது தான், சந்திரனுக்கு அவன் அன்னை மட்டுமல்ல. தானும் அதிகக் கஷ்டம் கொடுத்து விட்டோம் என்று புரிய ஆரம்பித்தது.
error: Content is protected !!