மெய்யெனக் கொள்வாய்-4.2
அத்தியாயம் – 4.2
திருமணத்திற்கு பார்க்கும் அந்தக் காலக் கட்டத்தில் வீட்டில் சும்மா இருப்பதற்கு நடிக்கப் போகிறேனே என்று சத்யவதி கெஞ்சி, மிரட்டி, கொஞ்சி அனுமதி வாங்கிவிட்டாள்.
முதலில் மேடை நாடகத்திற்குதான் அந்த நாடகக் குழுவில் அவளைத் தேர்வு செய்தனர். ஆரம்பத்தில் சத்யவதியோடு கூடவே வந்த அவள் தந்தை, அந்தக் குழுவினர் நடந்துக் கொண்ட கண்ணியமான முறை கண்டு நாளடைவில் அவளைத் தனியாகவே அனுப்ப ஆரம்பித்தார். வெளியூர்களில் நடக்கும் நாடகங்களுக்குக் கூட அனுப்பினார்.
மேடை நாடக ரசிகர்கள் என வருபவர்களும் திறமை கண்டு போற்றுபவர்கள். அதனால் ரசிகர்கள் தொந்தரவு என்பது எல்லாம் கிடையாது. இரவு சற்று நேரமானாலும் நாடகக் குழுவின் வேன் நடிகர்களை முக்கியமாக பெண் நடிகைகளை அவர்கள் இருப்பிடத்தில் கொண்டு சேர்த்து விடும். அதனால் மகளைப் பற்றிய கவலையின்றி சத்யவதிக்கு ஏற்ற வரன் தேடும் மும்முரத்தில் இருந்தனர் அவளின் பெற்றோர்.
Advertisement
அந்த சமயத்தில்தான் சந்திரன் வரன் வந்தது. சந்திரன் அப்போது இராணுவத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்தான். பதினெட்டு வயது பூர்த்தியானதும் இராணுவத்தில் சேர்ந்து விட்டான். பி.யு.சி மட்டுமே படித்து இருந்தாலும், வேலையில் சேர்ந்ததும் மேலும் படித்து முதுகலை பட்டம் வரை பெற்று இருந்தான். வருடத்திற்கு ஒருமுறை முப்பது நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து செல்வான்.
சந்திரன் குடும்பமும் பெரியதே. அவன் வீட்டின் தலை மகன். அவனுக்குப் பின் இரு சகோதரிகளும், கடைசியாக ஒரு சகோதரனும் இருந்தார்கள். வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் என்று கூற முடியாவிட்டாலும், இரு பெண்களின் திருமணம், எதிர்காலம் பற்றிய கணக்கீடுகள் என்ற வகையில் சந்திரன் சம்பாத்தியம் அவர்களுக்கு மிகவும் அவசியமே. அத்தோடு மூத்த மகன் என்பதால் பொறுப்புகளை எடுத்துச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகம். சந்திரன் வயது முப்பதை நெருங்கும் வேளையில் தான் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து விட்டு, அவனுக்கு வரன் பார்க்க ஆரம்பித்து இருந்தனர்.
சத்யவதியின் பெற்றோரைப் போல, சந்திரன் பெற்றோருக்கும் ஜாதகத்தில் நம்பிக்கை இருக்க, இருவருக்கும் திருமணம் செய்ய பேச்சு வார்த்தை நடந்தது. சந்திரனைத் தவிர அவன் வீட்டினர் அனைவரும் வந்து பெண் பார்த்துச் சென்றிருந்தனர்.
Advertisement
அந்த காலக்கட்டத்தில் இருபத்தி ஐந்து வயது என்பது பெண் பிள்ளைகள் திருமணத்திற்கு சற்று அதிகம் தான். என்றாலும் சத்யவதியின் அழகு அவர்களுக்குப் பிடித்து இருந்தது. எனவே மகனின் சம்மதம் மட்டுமே தேவை எனக் கூறிவிட்டுச் சென்றனர்.
Advertisement
சத்யவதிக்கு சந்திரன் போட்டோ காட்டப்பட்டு இருக்க, அவளுக்கும் மறுத்துக் கூற எதுவும் இல்லாததால் சம்மதித்து விட்டாள். இதில் சத்யவதியின் பெற்றோர் செய்த ஒரு தவறு, பொழுதுபோக்காக நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாள். திருமணம் முடிந்ததும் நிறுத்தி விடுவாள் என்று கூறியிருந்தனர். சத்யவதியும் மேடை நாடகம் மட்டுமே அதுவரை நடித்து இருந்ததால், மக்களுக்கு பிரபலம் இல்லை. அதனால் சந்திரன் வீட்டினருக்கு அது பெரிய விஷயமாகவும் படவில்லை.
சத்யவதியின் போட்டோவும், அப்போது ஈமெயில் புதிதாக புழக்கத்தில் இருந்ததால் பிரவுசிங் சென்டர் மூலமாக சந்திரனுக்கு அனுப்பி இருந்தனர். சந்திரனுக்கும் பெண்ணைப் பிடித்திருந்தது. ஒரு மாதத்தில் லீவிற்கு சொந்த ஊர் வருவதாக இருந்தான்.
முப்பது நாள் லீவில் வந்து செல்லும்போது பெண் பார்த்தல், நிச்சயம் பின் திருமணம் என்று நாட்கள் சென்று கொண்டிருந்தால், திருமணம் முடிக்க அடுத்த வருடமே ஆகிவிடும் எனக் கூறி, திருமணத்திற்கே ஏற்பாடு செய்யக் கூறியிருந்தான் .
Advertisement
சத்யவதி மற்றும் சந்திரன் இருவருக்கும் மற்றவரிடம் பேசிப் பழக ஆசை இருந்தாலும், வாய்ப்பு கிடைக்கவில்லை. கைப்பேசி அறிமுகம் ஆகியிருந்தாலும், பெரிய பெரிய பணக்காரர்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகிருந்த காலம் அது. அதனால் தெருவுக்குத் தெரு எஸ்டிடி பூத்கள் மற்றும் காயின் பேசிகள் இருந்தன.
இராணுவத்தில் முக்கிய அதிகாரிகள் தவிர மற்றவருக்கு எந்த ஒரு சலுகையும் கிடையாது. பொதுவாக எல்லாருக்கும் வார விடுமுறையன்று எஸ்டிடி பேச அனுமதி உண்டு. ஆனால் அதிக நேரம் பேசவும் முடியாது. அதிக நபர்களுக்கும் பேச முடியாது. எப்போதும் சந்திரன் தன் வீட்டினருக்கேப் பேசிப் பழகியதால், திருமணம் நிச்சயம் ஆன பின்பும் அவர்களுக்கேப் பேசினான்.
கடிதம் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றாலும் இடையில் நாட்கள் குறைவாகவே இருந்தது. கடிதம் சென்று, பதில் கடிதம் வரவே ஒரு வாரம் ஆகி விடும். அதிகபட்சம் இரண்டு கடிதங்கள் எழுதலாம். அது எதற்கு என்று சந்திரன் விட்டு விட, சத்யவதிக்கும் எழுதலாமா கூடாதா என்ற குழப்பம். சாதாரணமாக வெளியூரில் பணி என்பது வேறு. இராணுவம் எனும்போது கட்டுப்பாடுகள் அதிகம் இருக்குமே என்ற காரணத்தினால், சத்யவதியும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
நாட்கள் வேகமாக நகர, சந்திரனின் விடுமுறை ஆரம்பமாகியது. சந்திரன் சொந்த ஊர் திருச்சி அருகே இருக்க, டெல்லியில் இருந்து சென்னை வந்து, பின் திருச்சி செல்வதாக இருந்தான். இந்த விவரங்கள் அனைத்தும் சந்திரன் குடும்பத்தினர் வழியாக சத்யவதியின் பெற்றோருக்கும், அவர்கள் மூலம் அவளுக்கும் தெரிய வந்தது. திருச்சி செல்லும்முன் சந்திரன் தன்னை வந்து பார்த்துச் செல்வாரோ என சிறு எதிர்பார்ப்பு சத்யாவிற்கு இருந்தது.
சத்யவதியின் எதிர்பார்ப்பு சரியே என்பது போல சந்திரனும் அவளின் வீடு தேடி வந்தான். ஆனால் அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக சத்யாவின் அடுத்த வீட்டில் இறப்பு ஒன்று நிகழ்ந்து இருந்தது. அதனால் அவர்கள் தெரு அடைத்துப் பந்தல், மேளம் என்று பலமான ஏற்பாடுகள் செய்து இருந்தனர். அவர்கள் வீட்டைத் தாண்டி தான் சத்யா வீட்டிற்கு செல்ல வேண்டும். அக்கம்பக்கம் நெடுநாள் பழகிய மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களையும் எதுவும் கூற இயலவில்லை.
ஆனால் மாப்பிள்ளை முதல்முறையாக வரும்போது இதைக் கடந்து வரணுமா என்று சங்கடமடைந்த சத்யாவின் பெற்றவர்கள் சந்திரனை அந்த தெரு முனையிலே திருப்பி அனுப்பி இருந்தனர். சத்யா அவளின் வீட்டு வாசலில் நின்று இருக்க, சந்திரன் நூறு அடி தொலைவில் நின்று இருந்தார். இருவரும் தூரத்தில் இருந்து ஒருவரையொருவர் வரி வடிவம் மட்டுமே பார்த்தனர்.
சந்திரன் தங்கள் ஊர் சென்ற பின் அவனுக்கு வேலையேச் சரியாக இருந்தது. சரியாக திருமணத்திற்கு ஏழு நாட்கள் மட்டுமே இருந்ததால், உடை எடுப்பது, சத்யா வந்து தங்குவதற்கு ஏற்றார் போல தன் அறையில் மாற்றம், மற்றவர்களுக்கு உடை எடுத்து முடித்து இருந்தாலும், பெண்ணுக்குப் போட வேண்டிய நகை வாங்குவது என்று நேரம் சரியாக இருந்தது. உறவினர்களுக்கு அழைப்புகள் முடிந்து இருந்தாலும், தன் நண்பர்களுக்குப் பத்திரிகை வைக்கச் செல்ல வேண்டியிருந்தது.
பணியிடத்தில் இருந்து கிளம்பும்போது திருமண விவரம் கூறி, தனது அதிகாரிகளிடம் லீவு எக்ஸ்டென்ஷன் கேட்டு இருந்தான். அதற்கு அவர்கள் சில தகவல்கள் கேட்டு இருக்க, அதையும் தயார் செய்து மெயில் அனுப்பும் வேலை வேறு அவனுக்குச் சேர்ந்தது. இத்தனையும் முடிக்கும் போது மறுநாள் திருமணம் என்ற நிலைக்கு வந்திருந்தான் சந்திரன் .
பகலில் அலைச்சல், வீடு திரும்ப நள்ளிரவு என இருக்க, படுத்தவுடன் உறக்கம் தான் வந்தது. மறுநாள் திருமணம் எனவும் தான் தன் வருங்கால மனைவியைப் பற்றிய எண்ணங்கள் சந்திரன் மனதில் உலா வர ஆரம்பித்தது.
திருமணத்திற்கு முதல் நாள் மதியம் மாப்பிள்ளை வீட்டார் சென்னை செல்வதாக இருக்க, அன்று காலை தான் சற்று ஓய்வாக சந்திரன் அமர முடிந்தது. அது கூட அவர்களின் உறவினர்கள் வந்திருக்க, என்ன கல்யாண மாப்பிள்ளையை அலைய விடறீங்க என்று அவன் வீட்டினரைக் கேள்வி கேட்கவே, எல்லோரும் சேர்ந்து வெளியில் செல்ல விடாமல் செய்தனர்.
-தொடரும்-
