Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மெல்ல மெல்ல என்னை தொட்டு

மெல்ல மெல்ல என்னை தொட்டு – 2

அத்தியாயம் – 2

“ராகவ்! ஆனந்த் கிட்ட பேசுங்க. இந்த வாரம் தூத்துக்குடி சரக்கு எல்லாம் வந்துரும். அதெல்லாம் நீங்க கூடவே இருந்து பார்த்து, முடிஞ்சதும் ஆனந்த் கிட்ட ரிபோர்ட் பண்ணிடுங்க.”



Advertisement

“…”

“நம்ப கோவர்தனன் சார்கிட்ட அக்கவுண்ட்ஸ் செட்டில் பண்ண சொல்லிடுங்க… ஓகே! ராகவ். பார்த்துக்கோங்க… ம்!” என்று பேசி முடித்து தன் அலைபேசியை அனைத்து விட்டு, “ஒரு மாசம் வேலை சமந்தமான ஃபோன் கால்ஸ் எதுவும் ரீச் பண்ணாம இருக்கணும்… ஹ்ம்ம்…” என குளிர் பெருமூச்சு ஒன்றினை வெளியிட்ட ப்ரித்வி, “பச்! லேட் பண்ணிட்டேன். என் பச்சக்கிளி கோவமா இருக்குமே…” தன் காரினை நிறுத்தி விட்டு கையை திருப்பி மணியை பார்த்தவாறே கீழே இறங்கி நின்றான்.

Advertisement

Advertisement

சில மணி நேரங்களாக அவளை பற்றி அவன் நினைத்து பார்த்திருந்த அந்நாட்களின் நினைவில் புன்சிரிப்புடன் நிமிர்ந்து முதல் மாடியிலிருக்கும் அவள் அறையை நோக்கி பார்த்தவனின் கண்களுக்குள் விழுந்தாள் ப்ரித்வியின் மனைவி சம்யுக்தா ப்ரித்வி ராஜ். இளஞ்சிவப்பு நிறத்திலான காட்டன் புடவையில் தன் கூந்தலை வெகு அழகாக பின்னி முன்னால் தொங்க விட்டபடியே சிறு கீற்றான குங்குமம் உச்சந்தலையில் மிளிர சிவந்த கன்னங்களில் தன் இரண்டு கைகளையும் ஊன்றி நின்று அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் பாவை.

லேசான பூரிப்பு மிளிர்ந்த அவள் பார்வை அவனை தலை முதல் கால் வரை நிதானமாக உரசி செல்ல, அவள் முகத்தில் முழு நிலவின் மலர்ந்த புன்னகை. கோபம் தான். அவள் மீது கடும் கோபத்தில் தான் இருக்கிறான். தன்னை விட்டு இப்படி சென்று விட்டாளே என்ற கோபம். இன்று வரை தன்னை போல எதற்கும் அவள் தன்னை தேடவில்லையே என்ற வருத்தம் உள்ளிருந்து அவனை வதைத்துக் கொண்டே தான் இருந்தது ஆனாலும் அவள் பார்வையில் விழுந்த நொடியில் ஜில்லென்ற மழை காற்றின் வாசம் அவனுள் பரவியது.

Advertisement

தான் காண்பது பொய்யோ என அவன் எண்ணும் அளவிற்கு சட்டென தன் பார்வையை மாற்றி அவனுடைய மகிழூந்தை நோட்டமிடும் பாவனையில் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அவளின் கள்ளதனத்தை முழுதாய் கண்டுக் கொண்டதில் இதழ்களில் மலர்ந்த சின்னப் புன்னகையுடன் தன் தலையை சாய்த்து குனிந்து இடவலமாக தலையசைத்து சிரித்தவன் வேகமாக வீட்டினுள்ளே நுழைய காலடி எடுத்து வைத்தான்.  

முதல்முறை அவளின் வீட்டிற்கு வரும்போதிருந்த அதே மன நிலையோடு மீண்டும் அவள் வீட்டிற்குள்ளே நுழைய முயன்றவனின் மனதில் அன்றைய நாளின் நினைவுகள்.

இருப்பத்தெட்டு வயதை எட்டிய ப்ரித்வி ராஜிற்கு அவனுடைய வீட்டினர் பார்த்திருந்த பெண் தான் சம்யுக்தா. முன்னாள் மத்திய அமைச்சரான சிவசுப்ரமணியனின் மகள். தாய்க்கும் தந்தைக்கும் எல்லாமுமாய் திகழும் செல்ல மகள். தாய் சுலோச்சனா போல அழகும் சௌந்தர்யங்களும் பெற்று தந்தையை போல தைரியமும் சாதூரியமும் நிறைந்தவளின் முதல் காதல் பரதம். சிறு வயது முதலே பரதம் கற்று சிறப்பான நாட்டிய கலைஞராக திகழ்ந்து வருபவள். அவளுக்கு மிக பிடித்தது மன தைரியம். அவளுக்கு சற்றும் பிடிக்காதது அலட்சியம். இகழ்ச்சியான சொல்லோ செயலோ என எதுவுமே இதுவரை அவளிடமிருந்து வந்ததே கிடையாது. அதே போன்ற குணத்தை மற்றவரிடமும் எதிர்பார்க்கும் பெண்ணவள். 

அப்படிபட்டவளை பார்த்து தன் முதல் பார்வையிலேயே இகழ்ந்து பேசியவர் அவனின் அத்தை கோகிலா. பெண் பார்க்க சென்ற இடத்தில் அவளையும் அவளின் பரதத்தையும் தப்பர்த்தத்துடன் பேசியவரின் சொற்களை கேட்ட பிறகு சற்றும் தாமதிக்காமல் அந்த சமந்தத்தை உடனே மறுத்து விட்டவளை தான் ப்ரித்விற்கு இன்னமும் அதிகமாக பிடித்தது. 

முக்கியமான வேலைகளில் அன்று அவனால் அவ்விடத்திற்கு செல்ல முடியாமல் போகவும் அவனை பார்க்காமலே அந்த திருமண பேச்சை மறுத்தவளை தன்னுடைய மனதிற்குள் நினைத்து நினைத்தே இரண்டு மாதங்களை கடந்தவனின் உள்ளத்தில் ஏனோ அவள் ஆழமாக பதிந்து போய் விட்டாள். 

‘ரோட்ல போற எவனோ ஒருவன் என்னை துணிக்கடைக்காரன் தானே உனக்கு எதுக்குடா இவ்வளவு திமிர்னு சொல்லும் போது எனக்கும் இதே மாதிரி தான் கோபம் வந்துச்சு… என் தொழிலை குறைவா பேசின எவனோ ஒருத்தன் மேலையே எனக்கு அவ்வளவு கோபம் வந்துச்சு. அவங்க நம்ப வீட்டுக்கு வாழ வர போற பொண்ணு அவங்களை சொன்னா எனக்கு கோபம் வராதா அத்தை. இனிமே இப்படி சொல்லாதிங்க. அப்படி சொல்றதா இருந்தா எங்க வீட்டுக்கு வராதிங்க…’ என அன்றே அவளுக்காக பரிந்து பேசி தன் அத்தையை கோபமாக திட்டியவனின் உள்ளம் அவளை முதல்முறையாக அன்றைய கலை நிகழ்ச்சியில் பார்த்ததுமே சம்யுக்தாவை அடியோடி தன் சொந்தமாக்கி கொள்ள துடித்தது.

‘நானும் எத்தனை எத்தனையோ பெண்களை எல்லாம் கடந்து வந்திருக்கேன்மா. ஆனா என் மனசளவுல யாரையும் நான் இவ்வளவு உணர்ந்தது இல்லை. அவங்களோட அழகு, தைரியம், தன்னம்பிக்கையை தாண்டி அவங்க மேல எனக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கு. எனக்கு அவங்களை ரொம்பவே பிடிச்சிருக்குமா. ஆனா நீங்க இதை பத்தி எதுவும் பேசாதிங்க. இந்த விஷயத்தை நான் பக்குவமா பார்த்துக்கறேன்.’ என அவளை சந்தித்த அன்றே தன் அன்னையிடம் சொல்லிவிட்டான்.

அதைத் தொடர்ந்த மூன்று மாதங்கள் பொறுத்து நிதானமாய் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மீண்டும் உறவுகளும் சொந்தங்களும் சூழ தன் வீட்டினரை அழைத்துக் கொண்டு சம்யுக்தாவின் வீட்டிற்கு வந்திருந்தான் ப்ரித்வி ராஜ். முக்கியமாக கோகிலாவிற்கு வேறு வேலையை கொடுத்து வீட்டிலேயே அமர்த்தி விட்டு வந்திருந்தான். முதல்முறை கிடைத்த கசப்புகள் எதுவும் மனதிலிருந்த சுவடே தெரியாமல் இம்முறை மகிழ்வுடனே தங்கள் வீட்டின் வாசல் வரை சென்று அவர்களை உற்சாகமாக வரவேற்ற சிவசுப்ரமணியன், “வாங்க மாப்பிள்ளை! வாங்க மாப்பிள்ளை!” என அவனை வாய் நிறைய அழைத்து தன் தோளோடு அணைத்து நின்றார்.

அவரை அத்தனை கவர்ந்தான் ப்ரித்வி. தன் மருமகனாக அவனை அவர் தேர்ந்தெடுத்ததன் முக்கிய காரணமே அவனுடைய பணிவும் தன்னம்பிக்கையும் தான். முதல்முறை அவனை பார்க்கும்போதே தன் மகளிற்கு ஏற்றவன் ப்ரித்வி ராஜ் தான் என்று அவர் மனதில் ஆழமாய் பதிந்து போயிருந்தது. அது நடக்காது என்று எண்ணியிருந்த சிவசுப்பிரமணியனை பேசி பேசியே அவருக்கு தன் மனதை உணர்த்தி அவரை மீண்டும் தன் பக்கமாய் ஈர்த்து முழுதாய் சாய்த்திருந்தான் ப்ரித்வி ராஜ்.

“மாப்பிள்ளை! சம்யு மேல தான் இருக்கா… நீங்க போய் பார்த்து பேசிட்டு இருங்க…” என மற்ற மாமனார்களை போல இல்லாமல் தன் ஒரே மகள் மீதான முழு உரிமையையும் அவனுக்கு கொடுத்திருந்தார் அப்போதே. 

“பரவால்ல மாமா! அவங்க முதல்ல ரெடியாகி வரட்டும். நாங்க அப்பறமா பேசிக்கறோம்.” என அவன் நழுவ பார்க்க மீண்டும் அவனிடம் வலியுறுத்தி ப்ரித்வியை மேலே மாடிக்கு அனுப்பி வைத்தார்.

பேச்சில் மட்டும் தான் தயக்கம் இருந்தது மற்றபடி உள்ளுக்குள் பூத்த சிரிப்புடன் அவளை பார்க்க வேண்டுமென தவமிருந்தவன் தன் வரத்தை வேண்டி கேட்பதை போல வேக வேகமாக தான் மாடி படிகளில் பறந்தான். முழுக்கை சட்டையின் மடிப்புகள் கலையாத வண்ணம் பார்த்து பார்த்து அவன் கிளம்பியதென்ன இப்போது அவளை காண அதை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு வேகமாக அவளை காண ஓடுவதென்ன! என தன் மனவாயை பிளந்து பார்த்தது அவன் உள்ளம்.

கரும்பச்சை நிற பட்டு புடவையில் தங்க நகைகளுடன் எளிமையான அலங்காரத்தில் திரும்பி நின்றுக் கொண்டு அலைபேசியில் மூழ்கி போயிருந்த பெண்ணவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து அசையாமல் நின்றுவிட்டான் ப்ரித்வி. அவள் கவனத்தை ஈர்க்க ஓரடி முன்னால் எடுத்து வைத்து அவளை அழைக்க முயன்றவன் சட்டென்று அப்படியே நின்றான். 

லேசாக கலைந்து போயிருந்த தலையுடன் காற்றில் பறந்த சேலை நுனியை தன் சுண்டு விரலால் சுருட்டி பிடித்தபடி நடந்து கொண்டிருந்தவளின் மென் நடைக்கேற்ப அதிர்ந்தது அவன் இதயம். தன்னை யாரோ உற்று கவனிப்பதை போல இருந்ததில் சட்டென திரும்பினாள் அவனின் பச்சைக்கிளி. முகத்தில் செம்மை படர அவன் தன்னை விடாமல் பார்த்துக் கொண்டிருந்ததில் சிறு கோபம் பரவிய முகத்துடன் தன் புருவத்தை உயர்த்தி அவனை பார்த்தாள் முகத்தில் எந்தவித அதிர்வையும் காட்டாமல். 

அவள் நெற்றியில் தீட்டியிருந்த சிறு கோடான சந்தன கீற்றில் சென்று நின்றது அவன் பார்வை. அதை சார்ந்த வளைந்த புருவம் அவன் இதயத்தை கீறி விட அஞ்சனம் பூசிய விழிகள் அவனை கொன்று புதைக்க போதுமாய் இருந்தது. அதற்கு மேல் அவள் மீது பார்வை பதிக்கவே முடியவில்லை அவனால். ‘அம்மாடியோவ்! ரொம்ப தப்பா யோசிக்கதே இந்த மனசு. நம்ப பார்வையை வச்சு நாம நினைச்சதை அவங்க கண்டுபிடிச்சு இருப்பாங்களா?’ என மனதிற்குள் யோசிக்கவே துவங்கி இருந்தது மனம்.

சம்யுக்தாவும் அவனை தன் பார்வையால் எரிக்கவும் அமைதியானான் ப்ரித்வி. ‘என்ன?’ என விழிகளில் கேள்வியுடன் அவனை சிடுசிடுப்பாக ஏறிட்டவளை கண்டு இரண்டொரு நிமிடங்கள் மூர்ச்சையானது அவன் நெஞ்சம். முயன்று சுற்றம் உணர்ந்து தன்னிலை அடைந்தவன்,

“என்னங்க! இது உங்க வீடுங்களா?” என கேட்க,

“ஏன் உங்களுக்கு தெரியாதா?” என்று சிடுசிடுப்புடன் அவள்.

“தெரியுங்க! ஆனா நான் இங்க பார்க்க வந்தது சம்யுக்தானு ஒரு பொண்ண தாங்க… உங்களை… அது வந்து வேப்பிலை கட்டாமலே சாமியாடுற மாரியாத்தாவை இல்லைங்க…” என அவன் கூறும்போது அவன் விழிகள் காட்டிய பயந்த பாவனையில் உள்ளுக்குள் சிரிப்பில் விரிய துவங்கிய இதழ்களை கஷ்டபட்டு அடக்கி அவனை முறைத்தாள்.

“என்னங்க முறைப்பொண்ணு மாதிரி முறைக்கறிங்க?”

“…”

“என்னங்க கொஞ்சம் சிரிங்களேன். சிரிக்கவே மாட்டிறிங்க?”

“…”

“சரி! அதை விடுங்கங்க. நாங்க பார்க்க வந்த பொண்ணு சம்யுக்தா எங்கங்க இருக்குது? பொண்ணு உங்களை மாதிரி ரொம்ப அழகா இருக்குமாங்க?” என்று கூறி அவள் முகத்தை ஆங்காங்கு தொட்டு விலகிய அவன் பார்வையில் சிலிர்த்து அடங்கியது அவள் தேகம்.

‘ரொம்ப அழகா இருக்கீங்க!’ என்று சொல்ல துடித்த நாவை கட்டுப்படுத்தி தலை கோதி அவன் அவளையே பார்த்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவன் விழிகளில் விரிந்த புன்னகையுடன் தன் கண்களை மெதுவாக உருட்டி சுருக்கி என என்னென்னமோ செய்யவும் நிமிர்ந்து ப்ரித்வியை முறைத்து பார்த்து, “உங்களை யாரு இப்படி மேல எல்லாம் வர சொன்னது? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? முதல்ல நீங்க கீழ இறங்குங்க…” என்று சுற்றிலும் தன் பார்வையை விரைவாக ஓட்டிய சம்யுக்தாவை அதே மாறாத புன்னகையுடன் பார்த்து நின்றான் ப்ரித்வி ராஜ்.

“ஏங்க என் பொண்டாட்டிய பார்க்க வர நான் யாரைங்க கேக்கணும்?”

அவளிடம் சொல்லிவிட்டதும் தான் தன்னுடைய வார்த்தையின் வீரியத்தை உணர்ந்தது அவன் உள்ளம். அவளுடைய ஒவ்வொரு முகபாவங்களையும் அவன் தன் விழிகளால் அப்படியே படித்துக் கொண்டிருக்க, அதில் பெரியதாக எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை சம்யுக்தா.

“உங்க குடும்பத்துக்கு எல்லாம் நாட்டியகாரியங்க மருமகளா வந்தா சரியா வராதுனு சொன்னாங்களே.. உங்க அத்தை”  

“ஏங்க!” என சற்று உயர்ந்த குரலில் அவளை அதட்டியவன், 

“உங்களோட வாழ போறது நான் தாங்க… எனக்கு உங்களோட எல்லாமும் தாங்க பிடிச்சிருக்கு. அவங்க அப்படி சொல்லி இருக்க கூடாது தான். அதுக்கு நான் உங்ககிட்ட மனசார மன்னிப்பு கேட்டுக்கறேங்க… இனிமே எப்பவும் அப்படி நடக்காதுங்க…” என தவிப்பாக தன் நிலையை அவன் விளக்க முயன்றான்.

“ஏங்க உங்களுக்கு என்னை பிடிக்கலையாங்க…” மீண்டும் விடாமல் அவனின் கேள்வி.

பதிலே பேசவில்லை அவள். தன் முகத்தை அவனிடமிருந்து திருப்பி சுவற்றை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏங்க! பிடிச்சிருக்குனா பிடிச்சிருக்குனு சொல்லுங்க. பிடிக்கலைனா பிடிக்கலைனு சொல்லுங்க. எதையுமே சொல்லாம இப்படி சுவத்தை மட்டும் பார்த்தா என்னங்க அர்த்தம்? நான் என்னனுங்க எடுத்துக்கட்டும்? என்னை உங்களுக்கு பிடிக்கலைனா?” 

“…”

“பிடிக்கலையாங்க? என்னை உங்க..உங்களுக்கு பிடிக்கலையாங்க?” தவிப்பாக வெளிவந்தது அவனுடைய குரல்.

“…”

“ப்ளீஸ்ங்க என் முகத்தை பார்த்து எதாவது சொல்லுங்க!” என்று அவள் முகத்தை மட்டுமே பார்த்து கொண்டு ‘அவள் என்ன பதில் கூறுவாளோ?’ என்ற அதீத மன அழுத்தத்தில் படபடப்பாகவும் எக்கச்சக்க எதிர்பார்ப்புடனும் நின்றிருந்தான் ப்ரித்வி ராஜ்.

இரண்டு நிமிடத்திற்கு பிறகே அவனை நோக்கி திரும்பி நின்று, “நீங்க கீழ போங்க… நான் கீழ வரும்போது சொல்றேன்…” என்று கூறிவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டாள் சம்யுக்தா.

வரும்பொழுது இருந்த அதே குழப்பமான மனதுடனே கீழே சென்று தன் உறவுகளுக்கு நடுவே அமர்ந்தான் ப்ரித்வி. அடுத்து முறையாய் அவளை அழைத்து வந்து சபையின் நடுவே நிற்க வைத்தனர். இப்போதாவது தன் மீதான பிடித்தம் அவள் முகத்தில் தெரிகிறதா என்று அவள் முகத்தையே ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தான் ப்ரித்வி ராஜ். அவன் அருகில் நின்றிருந்த ஆனந்த், “எங்க அண்ணிய உட்கார வைங்களேன்… எவ்வளவு நேரம் தான் நிப்பாங்க…” என முகம் நிறைந்த புன்னகையுடன் கூற,

அவன் சொல்லியவாறே அவளை ப்ரித்வியின் எதிரே அமர வைத்து விட்டு மற்றவர்களும் அந்த நீண்ட வரவேற்பறையில் அமர்ந்தனர். மற்றவர்கள் அவளிடம் ஏதேதோ கேட்கவும் அதற்கெல்லாம் புன்சிரிப்புடன் மென் குரலில் பதில் கூறியவளை கவனித்து தன் முகத்தை திருப்பினான் ப்ரித்வி. கீழே வந்தது முதல் ஒருமுறை கூட அவன் முகத்தை பார்க்கவில்லை அவள். அதை நினைத்து கடுப்பானாவன் அமைதியாக அமர்ந்திருக்க, “என்ன எங்க அண்ணனை யாரும் கண்டுக்க மாட்றிங்க… என்னங்க அண்ணி நீங்க கூட எங்க அண்ணனை பார்க்க மாட்டேன்றிங்க? நிமிர்ந்து பாருங்க அண்ணி! உங்க முகத்தையே தான் பார்த்திட்டு இருக்காரு எங்க அண்ணன்…” என குறும்பாக தன் அண்ணனின் வருத்தமான முகத்தை பார்க்க முடியாமல் கூறிவிட்டான் ஆனந்த்.

அதை கேட்டு மற்றவர்கள் சிரிக்க தன் யோசனைகளில் இருந்து கலைந்து அங்கிருந்தவர்களை பார்த்து இதழ் பிரியாமல் புன்னகைத்து விட்டு ஆனந்த் புறமாய் திரும்பி அவனிடம் ஏதோ கூறிய ப்ரித்வி தன் பார்வையை திருப்பவும் அவனுக்கு எதிரில் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது அவனுடைய பச்சைக்கிளி. ஆரேழு இளையராஜாக்கள் மனதிற்குள் ஒன்றாக இசைக்க எவ்வளவு முயன்றும் முடியாமல் தன்னாலே விரிந்தது அவன் முகம். ‘ஹோய்! என்னங்க இப்படி பாக்கறிங்க?’ என அவளிடம் கேட்க வேண்டும் போலிருந்தது.

அவள் பார்வையின் வீரியம் தாங்காமல் வெட்கினான் ப்ரித்வி. கன்னங்கள் குழைய சிவந்து போய் நெளிந்தவனை அவளருகே நிற்க வைத்து மேலும் சோதித்தார்கள். அவன் எடுத்து கொடுத்த பூக்களை அவள் தலையில் சூடினார் சுகந்தியின் தங்கை சரஸ்வதி. புன்சிரிப்புடன் குனிந்தவள் புடவை மறைவில் தன் மென் கரத்தினால் அவள் அருகில் நின்றிருந்தவனின் கையை தொட முயல சட்டென அவளை நோக்கி திரும்பியது அவன் பார்வை. அதை கண்டுக் கொள்ளாமல் மீண்டும் அவன் கையை பிடித்தவள் அவனுடைய உள்ளங்கையில் மெதுவாக எதையோ கிறுக்க ஷாக் அடித்தது போல நின்றிருந்தான் ப்ரித்வி.

“என்னங்க பண்றிங்க?” என தன் தலை சாய்த்து அவன் அவள் காதுகளில் மெதுவாக முனங்க, 

“கவனிங்க!” என மீண்டும் அவன் உள்ளங்கையில் கிறுக்கினாள்.

தன் முகத்தை முன்னால் சாய்த்து அவள் எழுதுவதை அறிய அவன் அவள் செய்கையை கூர்ந்து கவனிக்கவும் ‘மிஸ்டர். சம்யுக்தா!’ என அவன் கையை தொட்டு அவள் வரைந்து காண்பித்து நிமிர அவனுடைய கண்கள் அவள் மீதே சாய்ந்தது. “என்னங்க இப்படியெல்லாம் பண்ணாதீங்க!” என்று மீண்டும் சன்னமான குரலில் முனங்கினான் அவன்.

‘ஏன்?’ என கேள்வியாக அவள் அருகிலிருந்தவனை நிமிர்ந்து பார்க்கவும், “ப்ளீஸ்ங்க! இப்படி நீங்க பண்ணும்போது உங்க கைய இறுக்கமா பிடிச்சுக்கணும் போல இருக்குதுங்க…” என்று அதே போல மெதுவாக அவன் கூறி நிமிர சட்டென்று அவன் கையை விட்டு விலகியது அவள் கை விரல்கள். ‘பச்! தப்பா சொல்லிட்டேனோ!’ என அவன் அவள் புறமாயிருந்த தன் கை விரல்களை விலக நினைக்கும் போதே வேகமாக அவன் வலது கையை பற்றிய அவள் இடது கையின் விரல்கள் ஜில்லென்று சில்லிட்டு போய் இருக்க, “பிடிச்சுக்கோங்களேன்! யார் வேணாம்னு சொன்னது?” என்று ரகசியமாக முணுமுணுத்த அவள் உதடுகளில் சிறு பனி துளியாய் வியர்வை துளிகள் அரும்பியது.

“என்னங்க… நான் ஒன்னு கேப்பேன் நீங்க தப்பா நினைச்சுக்க கூடாது!”

“ம்ம்! மாட்டேன். கேளுங்க!”

“இப்ப நீங்க சம்யுக்தாவா இருக்கிங்களா இல்ல மாரியாத்தாவா மாறிட்டிங்களா இல்ல என்..என்னோட பச்சக்கிளியா?” என அவளின் முதல் தொடுகையில் அவன் முற்றிலும் தடுமாறினான்.

“ம்ம்! உங்களுக்கு எப்படி தெரியுது?”

“…”

“சொல்லுங்க!”

“சத்தியாமா தெரியலைங்க…” 

“ஹாஹா…” சிரிப்புடன் அவன் விரல்களை வருடியவளின் கரம் இப்பொழுது அவன் கைக்குள் சிறைப்படுத்தப்பட்டிருந்தது.

“ரொம்ப அழகா இருக்குங்க…” 

“என்னது?”

“நீங்க சிரிக்கும்போது உங்க கண்ணு ரெண்டும் ரொம்ப அழகா இருக்குங்க…” 

“சும்மா தானே சொல்றிங்க?”

“நிஜமாங்க…” என்று சொல்லிய ப்ரித்வியின் குரலில் பெருகி வழிந்தது காதல் பெருவெள்ளம். 

இத்தனை வருடங்களில் அவள் மீதான அன்பின் அளவு அணுவளவும் குறையாமல் அவள் மீதிருக்கும் அவனுடைய காதலும் நேசமும் வளர்ந்து கொண்டே தான் போனது அவன் மனதில். இன்றும் மலையளவு நேசம் கொட்டிக்கிடந்தும் எது அவளை தன்னிடமிருந்து பிரித்தது என்பதனை கூட அறியாமல் அவன் வாழும் வாழ்க்கையின் வலி எத்தகையது என்பது அதை அனுப்பவித்தவர்களுக்கு மட்டும் தான் புரியும் என்று நினைத்துக் கொண்டான் ப்ரித்வி. கசப்பான முறுவலுடன் அவளை கடந்து உள்ளே செல்ல முயன்றவனின் கால்கள் தன்னாலே அவனை மேல் நோக்கி இழுத்து வரவும் வேகமாக மாடி படிகளில் ஏறி வந்தவன் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் முகத்தையே பார்த்தவாறு அப்படியே நின்றிருந்தவளை பார்க்கையில் சற்று முன்பு அவன் மனத்திரையில் விரிந்து அவளை பெண் பார்க்க முதல்முறையாக அவள் வீட்டிற்கு வரும்போது எவ்வாறு பல்வேறு சுனாமிகளை உள்ளடக்கிய கடலலையை போல அமைதியாக நின்றிருந்தாளோ அதுபோலவே தான் இருந்தது.

“என்னங்க! என்னோட வைஃப் இங்கருக்காங்களாங்க?” என முயன்று தன் மனகசப்பை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அவனே முதலில் பேச்சை துவங்க பதிலே பேசவில்லை சம்யுக்தா.

“அவங்ககிட்ட மிஸ்டர். சம்யுக்தா வந்திருக்கேன்னு சொல்லுங்களேங்க”

“…”

“க்ரீன் சேரி கட்டிருக்கலாங்க! அது உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்ங்க…” 

“…” 

அவளின் அமைதி அவனை உயிரோடு கொல்ல அதுவரை தான் கொண்டிருந்த விளையாட்டு தனத்தை எல்லாம் கைவிட்டுவிட்டு, “போஜோ!” என அவளை நோக்கி முன்னேற முயன்றவனை கண்டு சட்டென்று இரண்டடி பின்னால் எடுத்து வைத்து நகர்ந்தவளை கூர்ந்து பாரத்தவனின் நெஞ்சம் சட்டென்று புடைத்தெழுந்து காற்றிற்கு கூட இடமளிக்காத வண்ணம் அவளை தன்னோடு இறுக்கமாக சேர்த்தணைத்துக் கொள்ள சொல்லி உறுமியது.

“போஜோ! என்னை ரொம்ப.. ரொம்ப கஷ்டப்படுத்தற டி நீ!” என இதழ் கடித்து கோபமாக இரைந்த ப்ரித்வியின் கால்களை சட்டென்று கட்டிக் கொண்டன தளிர் கரங்கள் இரண்டு.

இளஞ்சிவப்பு வண்ண ஃப்ராக் அணிந்து கழுத்து வரை சிறிதாய் நீண்டிருந்த முடியை அழகாக விரித்து விட்டபடியே நெற்றியில் வழிந்த முன்னுச்சு முடிகளை தன் பார்பி டால் க்ளிப்பில் அடக்கி, காதுகளில் சிறு தங்க தோடுகள் மின்ன, தன் பால் பற்கள் தெரிய புன்னகை பூத்து நின்றிருந்தாள் அவனின் செல்வ மகள் யுவஶ்ரீ. 

“ஶ்ரீ குட்டி!” என்றவாறு அவளை தன் கைகளில் அள்ளிக் கொண்டவனின் கன்னங்களில் மாறி மாறி முத்த மழையை பொழிந்தாள் அவனுடைய மனைவியின் மறுபதிப்பான ஐந்து வயது மகள் யுவஶ்ரீ.

மகளின் பாசத்தில் நனைந்தவன் திரும்பி தன் மனைவியை அழுத்தமாய் ஒரு பார்வை பார்க்க அதன் அர்த்தத்தில் அவள் தலை தன்னாலே நிலம் நோக்கி தாழ்ந்தது. “ஶ்ரீ! உங்களுக்காவது அப்பாவை பார்த்ததும் முத்தம் கொடுக்கணும்னு தோணுச்சே. சில பேர் பார்டா கல்லு மாதிரி அசையாம நிக்குறாங்க…” என விளையாட்டாய் தன் மகளின் காதுகளில் ப்ரித்வி மெதுவாக முணுமுணுக்க, “ப்பா! கல்னா ஸ்டோன் தான்..னே…” என தன் முக்கியமான சந்தேகத்தை கேட்டது அவனுடைய இரத்தம்.

“ஆமாடா! குட்டி பொண்ணு!” என்று அவளை தன் மார்போடு அணைத்து கொண்டவனின் நெஞ்சம் குழந்தைகளின் பிரிவில் அதிகமாய் தவித்து போயிருப்பதை உணர்ந்தது. “அண்ணா எங்கடா?” என தன் மகளிடம் அவளின் இரட்டை சகோதரனை பற்றி அவன் வினவ, “யுவா ப்பாக்கு ஜூஸ் எடுக்க போய்ருக்கான்…” என்று சமத்தாக கூறியவள் அவன் பரந்த தோளில் அழகாக தன் கன்னம் பதித்து சாய்ந்து கொண்டாள். தன் கையில் பிடித்திருந்த தட்டில் ஒரு கண்ணும் தன் தந்தையின் மீது மறு கண்ணுமாக கவனமாக ப்ரித்விவை பார்த்தவாறே யுவராஜ் நடந்து வர அவன் கைகளை பிடித்தவாறே அருகே நடந்து வந்தார் சுலோச்சனா.

“வாங்க மாப்பிள்ளை!” என அவனை பார்த்து வரவேற்பாக அழைத்தவர் யுவராஜின் கையிலிருந்த குளிர்பானங்கள் நிறைந்த தட்டினை தானே வாங்கிக் கொள்ளவும் ஓடி வந்து ப்ரித்வியின் கால்களை கட்டிக் கொண்டான் யுவராஜ். 

“ஹாய்! யுவா! யூ ஆர் க்ரோன் அப் மேன்…” என சிரிப்புடன் தன் மகனின் தலையை கலைத்து விளையாடிய ப்ரித்வியை தன் விழிகளால் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. 

‘போன மாசம் தானே பார்த்தாங்க. அதுக்குள்ள க்ரோன் அப்பாம்!’ என உள்ளுக்குள் சிரித்தவளுக்கு நன்றாகவே தெரியும் அது தன் கணவன் தன்னுடைய மகனை மகிழ்விக்க அடிக்கடி அவனை பார்த்து சொல்லுவது தானென்று. 

“எஸ்! டாட்! யுவா இஸ் க்ரோயிங் பிக் எவ்ரி டே…” என்றவன் தன் தந்தையை நோக்கி தன்னை தூக்கிக் கொள்ளுமாறு தன் கைகள் இரண்டையும் விரிக்க சம்யுக்தாவை நோக்கி திரும்பிய ப்ரித்வி அவளை நெருங்கி சென்று யுவஶ்ரீயை அவளிடம் கொடுக்கும் சாக்கில் அவளோடு ஒட்டிக் கொண்டு நிற்க அவளும் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே அவனிடமிருந்து தங்களின் மகளை வாங்கிக் கொள்ளவும் அதையே சாக்காக வைத்து வேண்டுமென்றே சம்யுக்தாவை அழுத்தமாக தீண்டி சென்றது ப்ரித்வியின் விரல்கள்.

முகத்தில் எதையும் காண்பித்து கொள்ளாமல் உதட்டுக்குள் பூத்த குறும்பு சிரிப்புடன் அவன் யுவராஜின் பக்கமாய் குனிந்து ஒற்றை காலில் அமர்ந்து அவனை தன்னோடு இறுக்கமாக கட்டிக் கொள்ளவும் அவன் விரலால் தீண்டி விலகிய இடமெல்லாம் குறுகுறுக்க சம்யுக்தாவின் மேனி கூச்சத்தில் சட்டென சிலிர்த்தது.

“டாட்! ஐ மிஸ் யூ சோ மச்” என்று யுவராஜ் ப்ரித்வியின் தோளில் இறுக்கமாக தன் கரத்தினை பதிக்கவும் கீழே தன் இரண்டு கால்களையும் முட்டிபோட்டு அமர்ந்தவாறே அவனை தன்னில் சாய்த்து கொண்ட ப்ரித்வி, “நா..நானும் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணேன் யுவா…” என வருத்தமாய் கூறினான்.

இருவரையும் பார்த்து நின்ற சம்யுக்தா தன் கலங்கிய கண்களை மறைத்து, “ராஜ்!” என அதட்டலாக கத்தவும் அதில் தந்தை மகன் இருவருமே அவளை திரும்பி பார்த்து விட்டு மீண்டும் தங்கள் முகத்தினை பார்த்து வாய்விட்டு சிரித்தனர்.

“டைமாச்சு! கிளம்புங்க!” அவர்கள் இருவரும் தன்னை கேலி செய்த கோபத்தில் அவள் யுவஶ்ரீயை அங்கிருந்து அழைத்து செல்ல மற்ற இருவரும் பாவமான முகத்துடன் அவளை பார்த்தனர். “யுவா! உங்க அம்மா உன்னை ராஜ்னா கூப்பிடுறா?” என சத்தம் வெளிவராத குரலில் வாயசைத்து ப்ரித்வி கேட்க, “எஸ்! டாட்! என்னை இப்பல்லாம் மாம் அப்படி தான் கூப்பிடுறாங்க…” என்று சிரிப்பு பொங்க அழகான அபிநயத்துடன் தன் தந்தையை போலவே அவன் காது கடித்து கூறினான் யுவராஜ்.

‘அதானே! என் பேர சொல்லாம உன்னால இருக்க முடியுமா என்ன? என்னை கூப்பிட முடியாம என் பையனையா என்னை கூப்பிடுற மாதிரி ராஜ்னு கூப்பிடுற! பச்சக்கிளி… இருடி உனக்கு இருக்கு… உன்னை நல்லா வச்சு செய்யணும் டி…’ என தன் மனதிற்குள் நினைத்து கொண்டவாறு அவன் அப்படியே அமர்ந்திருக்க, “டைமாச்சு இன்னும் என்ன பண்றீங்க ரெண்டு பேரும்…” என தங்கள் அறையிலிருந்து கேட்ட சத்தத்தில் மின்னல் வேகத்தில் ப்ரித்வியின் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு சட்டென்று உள்ளே ஓடி விட்டான் யுவராஜ்.

அவன் செய்கையில் மலர்ந்த சிரிப்புடன், “சரியான அம்மா கோந்து இவன்… என்னை மாதிரியே….” என தன் தலையை கோதி விட்டு சிரித்தான் ப்ரித்வி.

அடுத்த அரைமணி நேரத்தில் தங்களுக்கு தேவையான சில பொருட்களுடன் அவர்கள் நால்வரையும் சுமந்தவாறு கொடைக்கானல் நோக்கி பறந்து கொண்டிருந்தது ப்ரித்வியின் வெள்ளை நிற ஸ்கார்பியோ.

‘…கரு மேகங்களுக்குள்

ஒளிரும் மின்னலை

போல சில நொடிகள்

பார்த்தாலும்

பல ஜென்மங்கள்

மனதில் நிற்கும்

உன் ஓரவிழி பார்வைகள்!..’

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!