Skip to content
Post Views: 234
அடுத்த பேருந்து வந்ததும் சின்ன பொண்ணு கல்லூரிக்கு சென்றபோது தாமதமாகிவிட்டிருந்தது. அதனால் பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியர் அவளை வெளியே நிற்க சொல்லவிட, கலங்கிய கண்களுடன் நின்றிருந்தாள்.
அதே வளாகத்தில் சரவணன் வசீகரன் இருவரும் பேசிக் கொண்டே வந்தனர். “என்னடா திடீர்னு காலேஜ் பக்கம் வந்திருக்கே?”
Advertisement
“சும்மா உன்னை பாத்து பேசிட்டு போகலாம்னு வந்தேன்”
இருவரும் வெளியே நின்றிருந்த சின்னபொண்ணை பார்த்ததும், “வேண்டா, ஏன் வெளியே நின்னுட்டு இருக்கே?” சரவணன் கேட்க
Advertisement
Advertisement
மறந்தும் வசீகரனை பார்க்காமல் “பஸ் மிஸ் பண்ணிட்டேன், லேட்டாயிருச்சுனு வெளியே நிக்க சொல்லிட்டாங்க சார்” என்றாள்
அவள் சாதாரணமாக அவனை பார்த்திருந்தால் கூட அவன் அவளை கவனித்து இருக்கமாட்டான். ஒவ்வொரு முறையும் அவள் அவனை தவிர்ப்பது, அவனுக்கு ஏனோ கோபத்தை உண்டு பண்ணியது.
Advertisement
“ஆட்டோவுல வந்திருக்கலாமில்ல?”
அவள் பதில் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டதில் அவளிடம் பணமில்லை என்று உணர்ந்த சரவணன் தன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து நீட்டினான். “எதுக்கும் கைல பணம் வச்சுக்கோ, பஸ் மிஸ் பண்ணிட்டா ஆட்டோவுல வந்துடு. ஆனா பஸ்ஸையும் மிஸ் பண்ணாத மாதிரி பாத்துக்கோ, சரியா?” என்றான்.
அவளும் சம்மதமாக தலையை ஆட்டி, அவன் கொடுத்த பணத்தை வாங்கி கொண்டாள். உள்ளே இருந்த பேராசிரியரிடம் பேசி அவளை உள்ளே அனுப்பிவிட்டு வந்தான்.
வசீகரன் அனைத்தையும் பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தான். சரவணன் தன் தம்பியிடம் “எல்லா ஸ்டுடென்ட்ஸ்ம் அவங்கவங்க பெத்தவங்களோட அட்மிஷனுக்கு வந்திருந்தாங்க, பாவம் இந்த வேண்டா மட்டும் தனியா நின்னு முழிச்சுட்டு இருந்தா. பாக்கவே பாவமா இருந்துச்சுடா. ஹாஸ்டலுக்கு பணம் கொடுக்கறேன்னு சொன்னா வேணாம்னுட்டா, வேலை செய்யறேன்னு சொன்னவள நான் சும்மா ஒத்தாசைக்கு தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். ஆனா நம்ம வீட்ல இவள நிஜமான வேலைக்காரியாவே நடத்தறாங்க. நீயும் அவங்கள மாதிரி இருக்காதடா. பாவம் சின்னபொண்ணுடா அவ” என்றான்
காலையில் நடந்ததை மனதில் வைத்துக் கொண்டு சரவணன் பேசுவது புரிய, சம்மதமாக தலையசைத்தான் வசீகரன்.
“சரி, நெக்ஸ்ட் என்ன பிளான்”
“யுஎஸ்ல படிச்சுட்டு டிரைனிங் எடுத்துக்கிட்டதால அங்கேயே வேலைக்கு கூப்பிடறாங்க. நான் இந்தியாவுல தான் வேலை செய்வேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். பேங்க் லோன் கிடைச்சதும் புதுசா பிசினஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்”
“புது பிசினஸ்ஸா? அப்பாவோட பிசினஸ் டல்லா போகுதே அத பாத்துக்கலாமில்ல”
“ஏன் நீ பாத்துக்கறது?”
“எனக்கு புரபசர் வேலை தான்டா பிடிச்சிருக்கு”
“அதே தான் எனக்கும், தனியா பிசினஸ் பண்றது தான் பிடிச்சிருக்கு. வேணும்னா அப்பப்போ ரெண்டுபேரும் அப்பாவுக்கு ஹெல்ப் பண்ணுவோம்”
“அதுசரி கல்யாணம் எப்போ?”
“அதுக்கெல்லாம் லேட் ஆகும்டா”
“நீ வந்ததும் கல்யாணம் சம்மந்தம் பேசறதுக்கு அம்மா வெயிட்டிங்டா. லதாவோட பிரண்ட், அவகிட்டயும், அவங்க அம்மா நம்ம அம்மாகிட்டயும் அப்ளிகேஷன் போட்டு வச்சிருக்காங்க”
“இதவேற சமாளிக்கணுமா?” என்று சிரித்தான்.
“என்கிட்ட பேசறதுக்கு காலேஜ் வரைக்கும் வந்திருக்கியே என்ன விஷயம்?”
“சும்மா தான்டா, லோன் கிடைக்கணும்னா மன்த்லி சேலரி வாங்கறவங்க சூயூரிட்டி கொடுக்கணும்னு பேங்க் மேனேஜர் சொன்னாரு. அதான் நீ என்ன சொல்றேன்னு கேக்கலாம்னு வந்தேன்”
“என்ன பிசினஸ் பண்ண போறே?”
“Infrastructure company ஆரம்பிக்கணும், நம்ம நாட்ல போடற ரோடு கொஞ்ச நாள்கூட ஸ்ட்ராங்கா இருக்கறது இல்ல. எங்கே பார்த்தாலும் குண்டும் குழியுமா மழை தண்ணி தேங்கிட்டு கிடக்கும். ஆனா வெளிநாட்டுல எல்லாம் ரோடும், பாலுமும் எவ்வளவு ஸ்டாரங்கா இருக்கு. இதுக்கு காரணம் நாம சில நுணுக்கங்கள மிஸ் பண்றோம், டென்டர் எடுக்கற கம்பெனி லாபத்துக்காக மலிவான பொருட்கள போட்டு வேலைய முடிச்சிடறாங்க, இதுக்கிடையில லஞ்சம் அது இதுனு பெரிய ஊழலே நடக்குது. மழை தண்ணி போகறதுக்கு பெரிய வாய்க்கால் இல்லாம தண்ணி எல்லாம் ரோடுலயே தேங்கி சீக்கிரமா சேதமடைஞ்சிடுது. நான் ஆரம்பிக்கற கம்பெனில இதையெல்லாம் முறியடிச்சு நல்ல தரமான ரோடு பாலம் அமைக்கணும்”
“சரிடா, கவர்மென்ட் டென்டர் கொடுக்கணும்னா உன்னோட கம்பெனி பெரிய லெவல்ல இருக்கணும், அதுக்கு நிறைய உழைக்கணுமே, பணமும் நிறைய தேவைப்படும்”
“வெளிநாட்ல சம்பாரிச்ச பணம் கொஞ்சம் இருக்கு, அதுமட்டும் பத்தாது லோன் வாங்கி சின்னதா ஸ்டார்ட் பண்ணனும், வார்டு லெவல்ல ஆரம்பிச்சு நாட்டோட மெயின்ரோடு கான்ட்ராக்ட் எடுத்து தரமான ரோடு, பாலங்களை அமைக்கிறது தான் என்னோட பிளான்” என்று அவனுடைய திட்டங்களை அண்ணனிடம் விவரித்துக் கொண்டிருந்தான்.
அந்தவழியாக கல்லூரி முதல்வர் வரவும், இருவரும் அவரிடம் கைகுலுக்கினார்கள். “சரவணா இது உன் தம்பி வசீகரன் தானே? யுஎஸ் போயிருக்கறதா சொன்னியே?”
“ஆமா சார், படிப்பு முடிஞ்சதும் வந்துட்டான்”
“அப்படியா அங்கே என்ன படிச்சீங்க வசீகரன்?”
“இந்தியாவுல பிடெக் சிவில் இன்ஜினியரிங் முடிச்சிட்டு, யுஎஸ்ல M.S. Structural Engineering” என்றான் வசீகரன்
“சூப்பர், அடுத்து என்ன பண்ண போறீங்க?” என்று அவர் விசாரிக்க, தன்னுடைய குறிக்கோளை அவன் சுருக்கமாக கூறினான்.
“உங்களோட லோன் பிராசஸ் முடிஞ்சு பிசினஸ் ஸ்டார்ட் ஆகறவரைக்கும், நீங்க ஏன் நம்ம காலேஜ்ல temporary Professor ஆ ஜாயின் பண்ணக்கூடாது?” என்று அவர் கேட்க, சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கேள்வியாக பார்த்துக் கொண்டனர்.
“யோசிச்சு சொல்லவா சார்?”
“டேக் யுவர் ஓன் டைம் யங்மேன்” என்று அவன் தோளை தட்டிவிட்டு சென்றார்.
வசீகரன் அண்ணனிடம் விடைப்பெற்றுக் கொண்டு திரும்பும் போது இயல்பாக சின்னபொண்ணு இருந்த வகுப்பறையை நோக்கினான். அதே நேரம் அவளும் எதேச்சையாக திரும்ப அவளை நன்றாக முறைத்துவிட்டு சென்றான்.
வீட்டிற்கு சென்றதும் சரவணன் பணிபுரியும் கல்லூரி முதல்வர் சொன்னதை அலமேலுவிடம் சொன்னான். “அதெல்லாம் வேணாம் வசி, லோன் கிடைக்கறவரைக்கும் அப்பாவோட பிசினஸ் பாரு. அதுல லாபம் வந்தா உன் பிசினஸ்க்கு உதவியா இருக்குமில்ல” என்று அவர் சொல்லவும் அதுவும் சரியென பட்டதால் தந்தை தயாரிக்கும் காபிதூள் கம்பெனிக்கு செல்ல ஆரம்பித்தான்.
சின்னபொண்ணு கல்லூரி முடிந்து வந்ததும் குழந்தையை ஹாலில் வைத்து விளையாட்டு காட்டி கொண்டிருப்பாள். வசீகரன் வீட்டிற்குள் நுழைந்ததும் குழந்தையை தூக்கி கொண்டு அறைக்குள் சென்று விடுவாள். இப்படி பல சமயங்களில் அவன் வரும்போதெல்லாம் அவள் தன் அறைக்குள் செல்வதை கவனித்தான். குறிப்பாக அவனை கண்டதும் அவள் விலகி செல்வது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. அதுவே அவள்மீது அவன் கவனத்தை திருப்பியிருந்தது. திரும்பி செல்பவளை நிறுத்தி, “ஏன்டி என்னை பாத்து ஓடறே?” என்று அவளை உலுக்க வேண்டும் என்று ஆத்திரமாக வந்தது.
ஞாயிறு விடுமுறை அன்று அனைவரும் ஹாலில் அமர்ந்து குழந்தையுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். “சின்னபொண்ணு, துணியெல்லாம் வாஷிங்மிஷின்ல போடாம கைல துவைச்சுடு” என்று லதா கூறவும், அவள் பின்பக்கமிருந்த துணிதுவைக்கும் கல்லில் ஆடைகளை துவைத்து அலசி எடுத்துக் கொண்டு அந்தபக்கமிருந்த படிக்கட்டில் ஏறி மொட்டைமாடியில் துணிகளை காய வைத்து கொண்டிருந்தாள். அவள் இருப்பது தெரியாமல் வசீகரன் போன் பேசிக்கொண்டே மாடிப்படியேற, அவனை கண்டதும் அவளின் மனதுக்குள் படபடப்பு தோன்றியது. தனியாக மாடியில் இருவரும் இருப்பதாக அலமேலு தவறாக நினைத்துக் கொள்ளக்கூடும் என்று நினைத்தவள் அவசரமாக துணிகளை அள்ளி கொடியில் போட்டுவிட்டு படிக்கட்டை நோக்கி சென்றாள்.
வசீகரன் வேண்டுமென்றே படிக்கட்டை அடைத்தபடி நின்றான். தலையை குனிந்து கிடைத்தவழியில் நுழைய நினைத்தாள். ஆனால் அவன் அவள் நுழைய நினைத்த சிறுவழியையும் வேண்டுமென்றே மறைத்தபடி நின்றான். அவன் செயல் புரியாமல் பலமுறை முயன்று தோற்றவள் அப்போது தான் அவனின் சீண்டல் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.
அரைக்கால் சட்டை அணிந்திருந்தவன் மேல் சட்டை அணியாமல் இருந்தான். உருண்டு திரண்ட தோள்கள் அவன் கைகளை கட்டியிருந்ததில் இன்னும் அவன் புஜபலத்தை பட்டவர்த்தனமாக எடுத்துரைத்தது. கழுத்தில் ஹெட்போன் தொங்கி கொண்டிருந்தது. அகன்று விரிந்திருந்த வெற்று மார்பை மறைத்தபடி கைகளை கட்டிக் கொண்டு அவளை உறுத்து விழித்தான்.
துணிதுவைத்ததில் அவள் அணிந்திருந்த ஆடையும் அவளும் நன்றாகவே நனைந்திருக்க, தண்ணீரில் நனைந்த கோழிகுஞ்சாகவே அவன் பார்வைக்கு தெரிந்தாள்.
“பாக்க தான் சின்னபொண்ணு, மனசுக்குள்ள பெரிய ரதினு நினைப்பாே? போனா போவட்டும் சின்ன பொண்ணாச்சே (சின்ன என்பதில் மட்டும் அதிக அழுத்தமும் நக்கலும் இருந்தது) காலேஜ்ல டிராப் பண்ணிடலாம்னு கூப்பிட்டா, நான் என்னவோ உன்னைய கடத்திட்டு போயிடற மாதிரி சீன் போட்டுட்டு இருக்க?” என்றான் மிரட்டும் குரலில்
அவள் பதில் சொல்லாமல் அவனை கண்டு மிரண்டு விழிக்கவும், “பாக்கறப்போ எல்லாம் ஓடி ஒளியறே, என்னை பாத்தா உனக்கு எப்படி தெரியுது?” என்றான் அதட்டலாக
அவன் அதட்டலில் மிடறு விழுங்கியவள் பதில் சொல்லாமல் அப்படியே நிற்கவும், “பதில் சொல்லு” என்றான் கோவமாக
“வசி யார்கிட்ட பேசிட்டு இருக்கே” என்று அலமேலுவின் குரல் கீழே படிக்கட்டு அருகில் கேட்டது.
“சின்னபொண்ணுகிட்ட” என்று அவன் தொடங்கும் முன் அவள் எட்டி அவன் வாயை தன் விரல்களால் பொத்தியிருந்தாள். இதை சற்றும் எதிர்பார்க்காத வசீகரன் அவளை குழப்பத்துடன் பார்க்க, அதே வேகத்தில் கைகளை கூப்பிவிட்டு ஓடிச்சென்று காயப்போட்டிருந்த புடவை மறைவில் தன்னை மறைத்துக் கொண்டாள்.
அவள் செய்கை அவனுக்கு விசித்திரமாக இருந்தது. அதன் காரணத்தை ஆராயும் முன் “என்னால மாடிப்படி ஏற முடியல, மூச்சு வாங்குது. கீழே இறங்கி வாடா. உன்னை பாக்கறதுக்கு லதாவோட பிரெண்ட்ம், அவ அம்மாவும் வந்திருக்காங்க” என்றார்.
சூடான அவன் இதழ்களில் சில்லென்று பதிந்த அவள் விரல்களின் குறுகுறுப்பை இன்னுமே உணர்ந்தவன் அவளை திரும்பி பார்க்க, அவள் ஈரப்புடவைக்குள் தன்னை மறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
“வசி” என்று அலமேலு மீண்டும் அழைக்க, “வரேன்” என்றபடி கீழே இறங்கினான். ஹாலில் லதாவின் தோழி நவ்யாவும் அவள் அன்னை மஞ்சுளாவும் அமர்ந்திருந்தனர். வசீகரன் வந்ததும், நவ்யா அவன் அருகே வந்து “வசி, உங்களுக்கு என்னை நினைவிருக்கா? ஐயம் நவ்யா, லதாவோட பிரெண்ட்”
உடலை ஒட்டிய மாடர்ன் உடையில் நின்றிருந்தவளை கவனிக்காமல் பின்பக்கமிருந்த மாடிப்படியை பார்த்தவாறு “யெஸ், எப்படியிருக்கீங்க?” என்றான்
“நான் எப்படியிருக்கேன்னு நீங்க தான் சொல்லணும், நீங்க மட்டும் ஹாட்டா இருக்கீங்க” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்
தொண்டையை செருமியவன், “நீங்க பேசிட்டு இருங்க, நான் போய் குளிச்சுட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடறேன்” என்று ஹாலில் இருந்த மாடிப்படியேறி தன் அறைக்குள் சென்றான். அவன் உடைமாற்றி கீழே வந்தபோது சின்னபொண்ணு அங்கே இருந்தவர்களுக்கு பழரசம் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளை அழுத்தமாக பார்த்தபடி இருக்கையில் அமர்ந்தான்.
அவன் எதிர்பார்த்தது போலவே அவள் அவசரமாக சமையலறைக்கு செல்லவும், “சின்னபொண்ணு எனக்கெங்கே ஜூஸ்?” என்றான் சத்தமாக
நின்ற இடத்திலிருந்து திரும்பி தயக்கத்துடன் அலமேலுவை பார்த்தாள். “அம்மா நான் மாடியில யார்கிட்ட பேசிட்டு இருந்தேனு கேட்டே இல்ல?” என்றான் அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே
“ஆமாடா, பதில் சொல்லுனு கோவமா யார்கிட்டயோ பேசிட்டு இருந்தியே அதான் கேட்டேன்” அலமேலு நினைவு வந்தவராய் கேட்க
அவள் விழிகளில் பதட்டத்தை கண்டவனுக்கு அதன் காரணம் புரியாவிட்டாலும் அவளின் பதட்டத்தை அதிகரிக்க முடிவெடுத்தவனாக. “ஜூஸ் எடுத்துட்டு வானு சொன்னா ஏன் சிலை மாதிரி அங்கேயே நின்னுட்டு இருக்கே?” என்றான் அதட்டலாக
அவள் அவனெதிரே சென்று கண்ணாடி டம்ளரை நீட்டும் போது கைகள் நடுங்குவதை கவனித்தான். “அம்மா மாடியில நான் யார்கிட்ட பேசிட்டு இருந்தேன் தெரியுமா?” என்றபடி அவள் கண்களை குறும்புடன் பார்த்தான்.
“நீ யார்கிட்ட பேசிட்டு இருந்தா என்ன? இப்போ அதுவா முக்கியம்? முதல்ல வீட்டுக்கு வந்தவங்க கிட்ட பேசு” என்றார் அலமேலு எரிச்சலுடன்
சின்னபொண்ணு பழரசம் இருந்த தட்டோடு குனிந்தபடி அவன் முன்னால் நின்றிருக்க, அவளை அழுத்தமாக பார்த்தபடி அவன் டம்ளரை எடுத்ததும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவள் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
“வசி, நவ்யாவ பத்தி என்ன நினைக்கிறே?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் மஞ்சுளா
“நான் நினைக்கிறதுக்கு என்ன இருக்குது?” என்றான் புருவம் சுருக்கி
“நான் வசிக்கிட்ட உங்க விஷயமா இதுவரைக்கும் எதுவும் பேசல. அதான் அவனுக்கு புரியலனு நினைக்கிறேன்” என்ற அலமேலு, “வசி, இவங்க அமைச்சர் பொன்னுரங்கத்தோட வைஃப் மஞ்சுளா, இவங்களோட ஒரே பொண்ணு நவ்யாவ உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசப்படறாங்க. சரவணன் கல்யாணத்துலயே கேட்டாங்க, நான் தான் நீ படிச்சு முடிச்சு வந்ததும் பேசிக்கலாம்னு சொல்லி வச்சிருந்தேன்.
நீ வெளிநாட்டுல இருந்து வந்துட்டேனு லதா போன் பண்ணி சொல்லியிருக்கா. அதான் ரெண்டு பேரும் உன்னை பாக்க வந்திருக்காங்க” என்று சொன்னதும் பழரசத்தை அருந்தி கொண்டிருந்த வசிகரனுக்கு புரை ஏறிவிட்டது.
“யு மீன் என்னை மாப்பிள்ள பாக்க வந்திருக்காங்களா?”
“அப்படியும் வச்சுக்கலாம்” மஞ்சுளா
“அம்மா, இப்பாே தான் படிப்பு முடிஞ்சு வந்திருக்கேன். நான் இன்னும் வாழ்க்கையில செட்டில் ஆகல, பிசினஸ் தொடங்கணும், எனக்கு எவ்வளவோ ஆம்பிஷன் இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு இப்போ கல்யாணம் பண்ணிக்க முடியாது”
“சரவணன்கிட்ட நீங்க பேசினது எல்லாத்தையும் அவர் என்கிட்டயும் சொன்னாரு வசி. நானும் மஞ்சுளா ஆன்ட்டிகிட்ட சொன்னேன். அவங்க உங்க பிசினஸ்க்கு தேவையான பணத்தை கொடுக்க தயாரா இருக்காங்க. அன்ட் கவர்மென்ட் பிராஜெக்ட்டோட டென்டர் உங்களுக்கு ஈசியா கிடைச்சுடும், ஏன்னா நவ்யாவோட அப்பா போக்குவரத்துதுறை அமைச்சரா இருக்காரு” என்றாள் லதா
“ஆமாடா வசி, நவ்யாவும் பாக்கறதுக்கு எவ்வளவு லட்சணமா அழகா இருக்கா பாரு. அவங்க உனக்காக ஒருவருஷமா காத்துட்டு இருந்தாங்கடா” என்றார் அலமேலு
வசியின் பார்வை தன்னியல்பாக சமையலறை பக்கம் சென்று மீண்டது. சரவணனும் நடராஜனும் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ஜூஸ் குடிச்ச டம்ளரை யார் எடுத்துட்டு போவாங்க? என்ன வேலை வாங்கறீங்க அண்ணி?” என்றான் லதாவை பார்த்து
“சின்னபொண்ணு” லதா அதட்டவும் பெரிய தட்டுடன் தலையை குனிந்தபடி வந்தாள்.
வசீகரனை தாண்டி வந்தவள் டீபாயின் மீதிருந்த கண்ணாடி டம்ளர்களை தட்டில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.
“நான் இன்னும் மூணு வருஷத்துக்கு கல்யாணத்தை பத்தி யோசிச்சுகூட பாக்க முடியாது. தேவையில்லாம என்னை கன்வின்ஸ் பண்றதா நினைச்சு உங்க நேரத்தை வீணாக்காதீங்க” என்றான் முடிவாக
“சரிடா மூணு வருஷத்துக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கோ, இப்போ நிச்சயம் மட்டும் பண்ணிக்கலாம்” என்று அலமேலு சொல்ல, “மறுபடியும் அதே தப்ப பண்ணாத அலமு” என்று எச்சரித்தார் நடராஜன்
அலமேலு பதட்டத்துடன் கணவனை பார்த்து முறைக்க, “மறுபடியும் அதே தப்பா? என்னப்பா அது?” தந்தையை பார்த்து கேட்டான் வசீகரன்.
இருவரும் பதில் சொல்லாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருக்க, கண்ணாடி டம்ளர்கள் இருந்த தட்டை பிடித்திருந்த சின்னபொண்ணுவின் கைகள் இறுகியது. அதில் வசீகரன் கால் நீட்டியதை கவனிக்காது சென்றவள் அவன் காலை மிதி்த்து விட்டாள். திட்ட போகிறானோ என்று பதட்டத்துடன் அவள் அவனை பார்க்க, அவளின் கால்மீது தன் இன்னொரு காலை வைத்து அழுத்தி இருபுருவங்களையும் ஏற்றி இறக்கியவனின் முகத்தில் வசீகரமான புன்னகை கீற்று நொடியில் தோன்றி மறைந்தது.
ஆவென அவள் அதிர்ச்சியோடு பார்த்திருக்க, “இங்கே என்ன பராக்கு பாத்துட்டு இருக்கே, உள்ளே வேலை எதுவும் இல்லையா, கிளம்பு” என்று எரிந்து விழுந்தான்.
(தொடரும்)
error: Content is protected !!
Ellarumey avalai pottu ippidi padutthunaa ava pavam enna pannuvaa