Skip to content
Post Views: 356
வழக்கறிஞர் சேரன் செங்குட்டுவனின் அகராதியில், அவனுக்கென்று வகுத்துக் கொண்ட முக்கியமான இரண்டு இரும்பு விதிகள் இருந்தது.
ஒன்று,நீதிமன்றத்திற்குள் உணர்ச்சிகளுக்கு இடமில்லை.
Advertisement
இரண்டு,நீதிமன்றத்திற்கு வெளியே உறவுகளுக்கு அனுமதியில்லை.
அதற்காக அவனது சொந்த உறவுகளையே வெறுக்கக்கூடியவானா என்று கேட்டால்,இல்லை.
Advertisement
Advertisement
வாசல் படியைத் தாண்டி உள்ளே வந்துவிட்டால் அவன் சட்டத்தின் காவலன் இல்லை.
அவன் ஒரு பாசமுள்ள மகன், பொறுப்பான தம்பி,அன்பான அண்ணனாக தான் நடந்துக்கொள்வான்.
Advertisement
ஆனால் திருமணம் என்று வந்துவிட்டால் மட்டும் அதனை அடியோடு வெறுக்கிறான்,இந்த கோமகன்.
ஆதலால்,தாயின் இந்த மனக்குமுறலை கேட்டு சேரன் நெற்றியை நீவிக்கொண்டான்.
வீட்டின் உள்ளே ‘எப்போடா முடிப்பீங்க?’ என்ற ரீதியில் ரகுபதியிருக்க,
அதையறியாத மீனாட்சியோ “இன்னைக்கு அவன் வரட்டும்…நானா?அவனானு இரண்டிலே ஒண்ணு பார்த்திடறேன்” என சூளுரைத்து உட்கார்ந்திருந்தார்.
குசேலனோ மகனைப் பற்றி நன்கு அறிந்தவராக ‘என்ன பேசியும் ஒண்ணும் நடக்கப்போறது இல்லை…இவ எதுக்கு தேவையில்லாமல் தன்னோடு எனர்ஜியை வீணாக்கிட்டு இருக்காள்’ என்றெண்ணி மகள் கொண்டு வந்து கொடுத்த பஜ்ஜியை உண்டுக் கொண்டிருந்தார்.
அவரின் ஒரே மகளான குந்தவை பக்கத்து தெருவில் வசிப்பதால் பெரும்பாலும் தனது தாயின் வீட்டிலே அவள் வாசம் இருக்கும்.
இரவு உறங்குவதற்கு மட்டுமே அவர்கள் வீட்டிற்கு தனது கணவனுடன் செல்வாள்.
அதிலும்,சில நாட்கள் இங்கே தாயின் வீட்டிலே தங்கிவிடுவாள்.
மீனாட்சியும் மகள் தனிமையில் சென்று சிரமப்பட வேண்டாம் என்றெண்ணி “வேலைக்கும் போயிட்டு தனியா சமைச்சு எதுக்கு நீ கஷ்டப்படணும் குந்தவை…மூணு வேளை நீயும் ரகுவும் இங்கியே சாப்பிட்டிருங்க” என்று கூறிவிட்டார்.
ஆனால் ரகுபதிக்கு மாமியாரின் வீட்டில் தங்குவதும் உண்பதும் சங்கடத்தைக் கொடுத்தது.
எப்போதாவது என்றால் சரி…தினந்தோறும் என்பது தான் அவனிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.
தனது மனைவிக்காக அனைத்தையும் பொறுத்துப்போனான் ரகுபதி.
தற்போது தன்னை தனியாக மாட்டிவிட்டு தகப்பனும் மகளும் பஜ்ஜியை ருசிப்பதை கண்டு
‘யோவ் மாமா நான் இங்க நொந்துப்போய் இருக்கேன்…நீங்க என்னடான்னா என்னை மாட்டிவிட்டுட்டு பஜ்ஜி மொக்கிட்டு இருக்கீங்க?’ என மனைவியையும் மாமனாரையும் நொந்துப்போய் பார்த்திருக்க,
அந்நேரம் அவனை காக்கவென சேரன் வீட்டிற்குள் நுழைந்தான்.
அவனை கண்டதும் அவனது தங்கையோ “அண்ணா நல்ல நேரத்திலே வந்திருக்கீங்க…வாங்க சுடச்சுட பஜ்ஜி சுட்டிருக்கேன்…சூடா இரண்டு சாப்பிடுங்க” என தட்டை எடுத்து நீட்ட,
அவளின் செயலை பார்த்து எரிச்சலுற்ற மீனாட்சியோ “ஏன்டி நான் என்ன பேசிட்டு இருக்கேன்?நீ என்னடி பண்ணிட்டு இருக்கே?” என மகளிடம் சிடுசிடுக்க,
அவளோ “இல்லைம்மா…இப்போ தானே அண்ணா வந்துச்சு…” என இழுக்க,
மீனாட்சியோ அவளை ஒரு பார்வை தான் பார்த்தார்.
அவள் கப்பென்று வாயை மூடிக்கொள்ள,
சேரனோ ஓரக்கண்ணால் தாயின் முகம் கோபத்தில் சிவந்திருப்பதை பார்த்துவிட்டு “இரும்மா…டிரஸ் மாத்திட்டு வர்றேன்” என தங்கையிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
அதில் இன்னும் வெகுண்ட மீனாட்சி “பார்றேன்…இவனுக்காக இங்க நான் கழுதை மாதிரி கத்திட்டு இருக்கேன்…இவன் கொஞ்சமும் மதிக்காமல் போறான்…எல்லாம் நீங்க கொடுக்கிற இடம் தான்” என தனது கணவரையும் சேர்த்து திட்ட,
“நான் என்னம்மா பண்ணேன்” என பாவமாக விழித்த குசேலன்,
தொண்டையைச் செருமி “மீனா நீ ஒரு விஷயத்தை புரிஞ்சுக்க மாட்டிக்கிறே…நம்ப பையன் ஒண்ணும் இருப்பதைஞ்சு வயது இளசு கிடையாது…அவனுக்கு முப்பதைஞ்சு வயசாகுது…இப்போ போய் அவனை நீ கட்டுப்படுத்த நினைச்சா கேட்பான்னு நினைக்கிறே?” என மனைவியிடம் சூழ்நிலையை விளக்க முற்பட,
அவரோ முகம் வாட “இதோ இப்போ சொன்னீங்களே முப்பதைந்து வயசுனு…அது தாங்க எனக்கு வயிற்றெரிச்சலா இருக்கு” என வயிற்றில் அடித்து ஆதங்கத்துடன் கூற,
அதேநேரம் “என்னம்மா ஒரே சத்தமா இருக்கு…என்ன விஷயம்?” என கேட்டுக்கொண்டே சேரனின் தமையன் பாரிவேந்தன் உள்ளே வர,
“வாடா நீயாவது வந்து நியாயத்தை கேளுடா” என பெரிய மகனிடம் தனது மனக்குறைகளை கொட்ட தொடங்கிவிட்டார் மீனாட்சி.
மற்றவர்களோ ‘ஐய்யோ முடியலைடா சாமி’ என தலையில் கைவைத்துக்கொண்டனர்.
ஒரு தாயாக மகனது எதிர்கால வாழ்வை பற்றிய அவரின் கவலை அங்கு இருக்கும் அனைவருக்கும் புரிந்தது.
இருப்பினும்,பூனைக்கு மணியை யார் கட்டுவது என்ற ரீதியில் அனைவரும் அமைதிக்காத்தனர்.
ஏனெனில்,அது சாதாரண பூனையல்ல…யாருக்கும் அடங்காத முரட்டுப் பூனை!
அவ்வாறு இருக்கையில் யாரால் என்ன செய்துவிட முடியும்?
அனைவரும் ஒரு கையறு நிலையில் தான் இருந்தார்கள்.
அன்னையின் தவிப்பை அறிந்த மகனான பாரிவேந்தனோ “அம்மா நீங்க இப்படி புலம்பிட்டே இருந்தால் மட்டும் அவன் உங்க பேச்சை கேட்டிடப்போறானா?” என ஒரு பெருமூச்சுடன் வினவ,
“அதுக்காக அப்படியே விடச்சொல்லறீயாடா?” என வெதும்பிப்போய் அவனிடம் பதில் கேள்வி எழுப்பினார் மீனாட்சி.
அதுவரை தனக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது போல் தன் அறையில் அடைந்துக்கிடந்த வாசந்தி கணவனது குரல் கேட்டு வெளியே வந்தாள்.
பாரிவேந்தனோ அணிந்திருந்த கண்ணாடியை சரிசெய்தப்படி “நான் அப்படி சொல்லலைமா…இன்னார்க்கு இன்னார்னு கடவுள் எப்பவோ முடிச்சுப்போட்டு வைச்சிருப்பாரு…அதுப்படி தான் எல்லாமே நடக்கும்…அது மாதிரி இவனுக்குனு இருக்கிற பொண்ணு கண்டிப்பா இவனை வந்து சேருவாள்…கொஞ்சம் வெயிட் பண்ணுங்கம்மா” என தாயின் மனதினை மாற்ற சமாதானமாக மொழிந்தான்.
அந்நொடி அச்சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாமல் “எப்போ அறுபது வயசுலையா?” என ரகுபதி நக்கலாக கேட்டுவிட,சட்டென அண்ணனும் தங்கையும் திரும்பி அவனை நன்றாக முறைத்தார்கள்.
அவர்களின் முறைப்பை கண்ட பிறகே தன் தவறு உரைத்தாலும் ‘என்னைய மட்டும் ஈஸியா முறைச்சுப்புடுங்கடா…அவன்கிட்ட ஒரு பையன் பேசாதீங்க’ என உள்ளுக்குள் புலம்பினான் ரகுபதி.
“பாரு…பாரு மாப்பிள்ளையே எப்படி சொல்லறாருனு…” என மீண்டும் தனது அழுகையை மீனாட்சி தொடங்கிவிட,
அதைப்பார்த்த குந்தவையோ “ஏங்க சும்மா இருங்கமாட்டிங்களா?எல்லாம் உங்களால் தான்” என திட்டிவிட்டு “அம்மா அழாதீங்க” என தாயின் அருகே வந்து ஆதரவாக பேசினாள் குந்தவை.
‘நான் இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன்…இப்படியே போனால் அவனுக்கு அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும்னு உண்மைய சொன்னது ஒரு குத்தமா’ என கடுப்பாக அமர்ந்து பஜ்ஜியை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
தன் அறைக்குள் நுழைந்த சேரனோ தாயின் கத்தலை கேட்டும் துளியும் மனமிறங்காமல் மெதுவாக குளித்து உடைமாற்றிக்கொண்டு வெளியே வந்தான்.
வெண்ணிற பனியன் அணிந்து வந்த மகனின் தோற்றத்தை கண்டவருக்கு மனம் சோர்வுற்றது.
அவனது முகத்தில் தெரிந்த வசீகரமும் அவனது உடற்கட்டுகளும் அவனை பேரழகனாய் காட்டிட ‘இவ்வளவு அழகை வைச்சு கிட்டு கடைசி வரை தனியாவே இருந்திடுவானோ?’ என்ற நினைப்பே அவரின் கண்ணிலிருந்து மிகுந்த கண்ணீரை உற்பத்தி செய்தன.
அன்னையின் கண்ணீரை பார்த்தப்பிறகு எந்தவொரு பிள்ளையால் தான் அமைதிக்காக்க முடியும்?
“ப்ச் அம்மா இப்போ எதுக்கு அழுதிட்டு இருக்கீங்க?” என காட்டமாக வெளிவந்தது அவனது குரல்..
தனது சகோதரனை கண்டதும் “சேரா அம்மா தான் இவ்வளவு தூரம் கஷ்டப்படறாங்களே…அம்மாவுக்காகவாது கல்யாணத்துக்கு ஒத்துக்கலாம் இல்லைடா” என மனம் தாளாமல் சொல்லிப்பார்க்க,
அவனை அழுத்தமாக நோக்கிய சேரன் “அண்ணா இதைப்பத்தி பேச வேண்டாம்” என பட்டென முகத்திலடித்தாற் போன்று கூறிவிட,
“என்னமோ பண்ணு போடா” என பாரியும் கடுப்பாகி தன்னறைக்கு சென்றுவிட்டான்.
அவனின் பின்னோடு வாசந்தியும் சென்றுவிட்டாள்.
அவளிற்கு இந்த வீட்டில் என்ன நடந்தாலும் பிரச்சனையில்லை…அவளை பாதிக்காத வரை!
தாம்,தனது கணவன்,தனது குழந்தை இவர்கள் மட்டுமே தனது குடும்பம் என்று நினைக்கும் சுயநலமான பெண் அவள்.
திருமணம் செய்து வந்ததிலிருந்தே அவளின் குணம் அறிந்த மற்றவர்களும் அதனை பெரிதுப்படுத்துவதில்லை.
ஆனால் அவர்களது மகளான சாம்பவி தன்னுடைய உறவுகளோடு சகஜமாக பழகியதை கண்டு பொறுக்காமல் அவளை வெளியூரில் பள்ளி விடுதியில் கொண்டு சேர்த்ததை தான் யாராலும் ஏற்க முடியவில்லை.
தன்னுடைய மகள் தன் மீது மட்டுமே பாசமாக இருக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சி அவளிற்கு!
தன் கணவனிடம் மகளின் படிப்பிற்காக என்று நயவஞ்சகமாக பேசி அவனை சமாளித்திருந்தாள்.
பாரிவேந்தனும் குழந்தையின் படிப்பு விடயம் என்பதால் அவளின் கல்மிஷம் அறியாமல் உடனடியாக ஒப்புக்கொண்டுவிட்டான்.
ஆனால் தனிக் குடுத்தனம் செல்ல அவள் எடுத்த பிரம்மப் பிரயத்தனங்கள் எல்லாம் அவளது கணவனால் முறியடிக்கப்பட்டது.
பாரி அவளிற்கு ஏற்ப இசைவது போல் தோன்றினாலும் தன் குடும்பத்தின் மீது அலாதி பிரியம் கொண்டிருப்பவன்.
அப்படியான ஒரு ஆடவன் அவ்வளவு எளிதில் அவளின் வலையில் விழுந்துவிடுவானா என்ன?
அதனால் தன் முடிவில் அவன் உறுதியாய் இருந்து,அவளின் எண்ணத்தில் மண் விழ செய்திருந்தான்.
ஆயினும்,அவளின் எண்ணத்தில் இன்று வரை எவ்வித மாற்றமும் நிகழவில்லை.
உரிய சந்தர்ப்பம் வேண்டி காத்திருந்தாள் அவள்.
இப்போது மாமியார் அழுவதை இளக்காரமாய் பார்த்துவிட்டு கணவனின் பின்னோடு அவள் சென்றுவிட “அம்மா நீங்க என்ன தான் அழுதாலும் எதுவும் நடக்காதுனு உங்களுக்கே தெரியும்…அப்புறம் எதுக்கு வீணா இந்த டிராமா போட்டு உங்க உடம்பை கெடுத்துக்கிறீங்க” என தாயை திட்டிக்கொண்டே அங்கிருந்த நீள்விரிக்கையில் சென்று அமர,
சட்டென விழி உயர்த்தி அவனை ஏறிட்டவர் “சரி நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்…இப்போதைக்கு நான் சொல்லறதை மட்டும் செய்…எனக்கு அது போதும்டா” என கண்ணீரை துடைத்துக்கொண்டு உரைக்க,
“என்ன?” என இமைகள் இடுங்க தாயை அவன் கைகள் கட்டி ஏறிட,
அவனை நேருக்கு நேர் பார்த்தவர் “நீ நாளைக்கு என்னோட கோவிலுக்கு வரணும்” என்றார் உறுதியாக…
சட்டென முகத்தில் படர்ந்த கோப ரேகைகளுடன் “சோ முதல்ல இருந்து போட்ட டிராமா எல்லாம் இதுக்கு தான்…அப்படி தானே?” என்றவனின் குரலில் ஸ்ருதி ஏறியிருந்தது.
அவருக்கு அதற்கெல்லாம் அசரவே இல்லை.
‘அடப்போடா நீ விடாக்கண்டன்னா நான் உன்னோட அம்மாடா’ என மனதிற்குள் எண்ணி “டேய் என்னடா இது அநியாயம் கல்யாணம் தான் பண்ணிக்கமாட்டேன்னு சொல்லிட்டே…கோவிலுக்கு கூட வரமாட்டேன்னு சொன்னால் எப்படிடா?” என ஆற்றாமையுடன் அவர் வினவ,அவனோ தனது கண்களை ஒரு முறை மூடி திறந்தான்.
“கடவுளே உங்க ஆப்ளிகேஷனை ஏத்துக்கிட்டாலும் நான் ஒத்துக்கமாட்டேன்னு உங்களுக்கே நல்லாத்தெரியும்…அப்புறம் எதுக்கு இதெல்லாம்” என முகத்தில் ஒரு அலுப்புடன் அவன் வினவ,
“நடக்குதோ இல்லையோ?ஒரே ஒரு தடவை என் மன நிம்மதிக்காக வாவேன் சேரா…அம்மாவுக்காக…” என இறைஞ்சு கேட்டுக்கொள்ள,
சேரன் நீள்விரிக்கையின் பின்னால் சாய்ந்து தன் தாயை உறுத்து விழித்து “அம்மா…” என்றான் அழுத்தமாக.
“ம்ம்ம் சொல்லு?” என அவர் ஆர்வமாக அவனை ஏறிட,
“இந்த உலகத்துலே கடவுளுக்கு ஏற்கனவே ஏகப்பட்ட வேலைகள் இருக்கும்…அவரை எதுக்கு தொந்தரவு பண்ணறீங்க”
“அவர் வேலைய பத்தி நீ ஏன்டா கவலைப்படறே? கோடிக்கணக்கான பக்தரோட தேவைய நிறைவேத்த தான் அவர் கோவில்லே குடியிருக்காரு..”
‘சபாஷ் சரியான போட்டி’ என குந்தவை ஆர்வமாக அனைத்தையும் பார்த்திருக்க,
உடனே தனது தாடையை நீவிய சேரன் “ஓ…உங்க எல்லாருடைய கஷ்டத்தையும் தீர்க்க தான் அவரு மக்கள் கிட்ட கொள்ளையடிச்சு பல கோடி பெறுமானமுள்ள கோவிலை கட்டி அதிலே குடியிருக்காரு…அப்படி தானே?” என நக்கலாக அவன் கேட்டதும் கணவனின் அருகே அமர்ந்திருந்த குந்தவைக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அவள் தன்னை மீறி சத்தமாக சிரித்துவிட,ரகுபதிக்கு கூட சிரிப்பில் இதழ்கள் துடித்தது.
சட்டென மீனாட்சி திரும்பி அவளை ஒரு முறைக்க,அவள் கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.
‘அது’ என்பது போல் ஒரு பார்வை பார்த்தவர் மீண்டும் மகன் பக்கம் திரும்பினார்.
“சேரா…” என ஒரு எதிர்பார்ப்புடன் அவனை ஏறிட,
தாயின் விழிகளில் தெரிந்த அந்த தவிப்பை கண்டவனால் மறுக்க முடியவில்லை.
பின்பு நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றி “சரி” என ஒப்புக்கொண்டான்.
அதற்கே அகமகிழ்ந்துப்போனார் மீனாட்சி.
“நன்றி பையா” என மகனின் கரம் பற்றி நன்றி தெரிவித்தவர் கணவனை நோக்கி ‘எப்படி’ என புருவம் உயர்த்தி கேட்டார்.
‘பலே ஆளு தான்’ என அவரின் கணவரும் மெச்சுதலாய் புன்னகைத்தார்.
‘பரவாயில்லை நம்ப அத்தை கில்லாடி தான்…வக்கீல் மகனையே வாதாடி கோவிலுக்கு வர வைச்சிட்டாங்க…ஆனால் இவங்களுக்கு தான் அவங்க மகனை பத்தி சரியா தெரியலை…கோவிலுக்கு போனால் மட்டும் கல்யாணம் நடந்திடுமா என்ன?’ என தனது மாமியாருக்காக வருத்தம் கொண்டான் ரகுபதி.
அவன் எண்ணியது போலவே சேரனும் அதையே தான் எள்ளலாக மனதிற்குள் நினைத்திருந்தான்.
ஆனால் அவனது எண்ணத்திற்கு நேரெதிராக அவனது வாழ்வு அடியோடு தடம் மாறப்போவதை அறியாமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் சேரன் செங்குட்டுவன்.
அதேநேரம் வேறொரு இடத்தில் வேலைகளை முடித்துக்கொண்டு உறங்க தயாரானவளை “தேவி” என அழைத்தார் சங்கரி.
அவரின் குரல் கேட்டு “சொல்லுங்க அம்மா” என அவரை நோக்கி திரும்பியவளின் குரல் மென்மையாய் வெளிவந்தது.
“நாளைக்கு நம்ப ஸ்ருதி பாப்பாவுக்கு பிறந்தநாள்…மறக்காமல் காலையிலே கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டு வந்திடுமா” என்று அவர் சொல்ல,
அவளும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் “சரிங்கம்மா” என தலையாட்டினாள்.
தன் பேச்சுக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அவள் ஒப்புக்கொண்டதை பார்த்தவுடன் அவரின் மனதில் பாரமேறியது.
நியாயமாக பார்த்தால் அவளின் செயலில் அவர் மகிழ்ச்சிக்கொண்டிருக்க வேண்டும்.ஆனால் அவளின் இந்த சகிப்புத்தன்மை அவரின் நெஞ்சை மேலும் அழுத்தியது.
அதனால் அவளை அதீத வருத்தத்துடன் பார்த்தவர் “அம்மாடி நான் சொல்லறேன்னு தப்பா நினைக்காதே…நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கே?” என்று கேட்டதும் அவளின் கண்ணில் முணுக்கென்று நீர் நிறைந்தது.
அவளின் மேனி கூட திருமணம் என்றதும் நடுங்க ஆரம்பித்தது.
உடனே அவரை அடிப்பட்ட பார்வை பார்த்தவர் “எல்லாம் தெரிஞ்சும் நீங்களே எப்படி பேசலாமாம்மா?” என கரகரத்தக்குரலில் அவள் கேட்க,
அவளை இரக்கத்துடன் நோக்கியவர் “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஒண்டியாவே இருக்கப்போறே?உனக்குனு ஒரு வாழ்க்கை வேணுமே தேவி” என கண்ணீருடன் சொல்லிப் பார்க்க,
அதைக்கேட்டு மறுப்பாக தலையசைத்தவள் “எனக்கு கல்யாணமெல்லாம் வேணாம்மா…எனக்கு துணையா நீங்க எல்லாம் இருக்கீங்க அதுவே போதும்…பிளீஸ் இனிமேல் இதைப்பத்தி பேசாதீங்கம்மா” என கையெடுத்து கும்பிட்டு விட்டு தன்னறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.
அவள் மூடிக்கொண்டது அறைக்கதவை மட்டுமல்ல…அவளது உள்ளத்து கதவுகளையும் தான்!
அவளது மூடிய அறைக்கதவை வெறித்த சங்கரி ‘கடவுளே!இந்த பிள்ளையோட வாழ்க்கை நாசமா போனதுக்கு காரணமே நான் தான்…வெரசா இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சுக்கொடுத்திடுப்பா…உன்னைய நான் கெஞ்சுக்கேட்டுக்கிறேன்’ என கண்ணோரம் கசிந்த நீருடன் இறைவனிடம் பிரார்த்தித்தார்.
error: Content is protected !!