Skip to content
Post Views: 1,076
மைவிழி – 11(a)
தோரணங்களும்,வண்ண வண்ண விளக்குகளுமாய் ஆட்களின் சத்தத்துடன் நிறைந்திருந்தது வேதவி – வாசனின் திருமண மண்டபம்.
Advertisement
வேதவி வீட்டின் ஆண்கள் அனைவரும் அங்குமிங்கும் பரபரப்புடன் திருமண வேலையில் கால்களில் சக்கரத்தை கட்டிக் கொண்டு அலைய, மணமகள் அறையில் சலிப்புடன் அமர்ந்திருந்தாள் வேதவி.
அங்கிருந்த வாசன் வீட்டுப் பெண்களைப் பேச முடியாது பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தாள் என்று சொல்ல வேண்டுமோ?
Advertisement
Advertisement
ரதியும், சுஜியும் தான் கண்களால் அவளை அடக்கிக் கொண்டிருந்தனர்.
அண்ணிகளை முறைத்தவள் “ப்ச்” என சலித்தபடி தன்னையே ஒரு முறை குனிந்து பார்த்துக் கொண்டாள்.
Advertisement
ரவிக்கையும், பாவாடையும் அணிந்திருந்தவள் மேல் பகுதியை டவலால் மறைத்திருக்க, அவளை சுற்றியபடி வாசனின் அண்ணியர்களும்,சகோதரிகளும். கூடுதலாய் இவளுக்கறிமுகமாகாத சொந்தக்காரப் பெண்களும்.
அந்த பெண்கள் தான் வேதவியின் திருமண அலங்காரப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தனர்.
ஆனால் இவர்கள் அலங்காரம் செய்வதில் துளியும் விருப்பமிருக்கவில்லை வேதவிக்கு.
தனக்கு பிடித்தவாறு தன் நிறத்திற் கேட்ப செய்ய வேண்டும் என இவள் நினைத்திருக்க அதை குழப்பி விட்டிருந்தாள் வாணி.
வாசன் சொந்தத்தில் ஒப்பனை செய்பவர்கள் இருக்கவும் வெளியிலிருந்து ஆட்கள் எடுக்க இருந்த பெண் வீட்டாரிடம் பேசி இவர்களை தலையில் கட்டி வைத்தது வாணி தான்.
வேதவி வீட்டினர் எவ்வளவு மறுத்தும் அதற்கும் ஒரு ஆட்டம் ஆடி விட்டாள் அவள்.இறுதியில் மறுக்க முடியவில்லை இவர்களால்.
“என்ன சுதா அப்படியே பார்த்திட்டிருக்க? முகூர்த்ததுக்கு இன்னும் ஒரு மணி நேரம் தானே இருக்கு!மேக்கப் போட ஆரம்பிக்க வேண்டியது தானே?” என்றாள் விஜயா,அவள் சொந்தக்காரப் பெண்களை பார்த்து.
“கிரிஜா மேக்கப்புக்கான சில திங்ஸ் எடுக்க போயிருக்கா. அதான் அவ வரும் வரையும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என சுதா பதிலளிக்கையில், கிரிஜா அழகு சாதனப் பெட்டியுடன் உள்ளே வந்தாள்.
“கிரிஜா வந்துட்டா. நீங்க ஆக வேண்டியதை பாருங்க!”என அவசரப்படுத்தினாள் வாணி.
சுதா தலையசைப்புடன் வேதவிக்கான அலங்கார வேலையில் இறங்கி விட,கண்ணாடி வழியாக வாணியைப் பார்த்து முறைத்து பற்களை நறநறத்தாள் வேதவி.
“இன்னும் கொஞ்சம் பூசு சுதா! நம்ம கீர்த்தி பக்கத்துல வேதா கலரா தெரியனும்ல”என இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தபடி இருந்த வாணியை இப்போது வேதவியின் அண்ணிகளும் முறைத்து வைத்தனர்.
“நாம பொண்ணு வீடுன்னா இந்த வாணிக்கெல்லாம் பொறுத்து போகணுமா சுஜிக்கா?” என ரதி கடுப்பாக கேட்க,
“எனக்குமே கடுப்பாத்தான் இருக்கு ரதி! வேதவி வேற இவங்க அலப்பறையால அப்செட்டா உக்காந்திருக்கா. கல்யாணப் பொண்ணவ! இந்த கீர்த்தி தம்பியாச்சும் வேதா சொன்னதை கேட்டிருக்கலாம்ல” என சுஜித்ராவும் தன் பங்கிற்கு புலம்பினாள்.
“என்னவோ அக்கா! இவங்க செய்றது கொஞ்சம் கூட சரியே இல்ல. சின்னத்தையாச்சும் இவங்களை வேணான்னு சொல்லிருக்கலாம்” என்றாள் ஆயாசமாய்.
“சின்னத்த சொல்லித்தான் இருக்காங்க. வாணி ஆடி ஆட்டத்துல வேதவி மாமியாரும் இவங்களை பியூட்டிஸியனா எடுத்தா என்னனு கேட்க, அத்தைக்கு மறுக்க முடியல”என்றவள்,
“இதுல வேதவியோட சின்ன நாத்தனார் (கௌசல்யா)போடற மேக்கப் ஃப்ரீ தானேனு வேறயா பேசியிருக்கு!பாரேன் அந்தம்மாவை. பாக்கத்தான் ஊமைக் கொட்டான் மாதிரி ஆனா நல்லா ஊரைக் கெடுக்குது. உன்னை மாதிரி என்னை மாதிரி வாயாடிங்களுக்கு வாய் மட்டும் தானே தவிர நாமெல்லாம் பொழைக்கத் தெரியாத அப்பாவிங்க ரதி”என்ற சுஜி,கௌசல்யாவை நோக்கி விட்டு தங்கள் இருவரையும் பார்த்து சிரிக்க,
“அக்கா பாத்தியா சைடு கேப்புல என்னையும் வாயாடின்னுட்ட” என ரதி கேலி பேசினாள்.
“நம்மள விடு. அங்கப் பாரு வாணி வேணுண்டே வேதவிக்கு ஜாஸ்தியா மேக்கப் போட சொல்றா போல” என்றவள்,
“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. எங்க வேதவிக்கு மேக்கப் இதுவே போதும். நீங்க இதுக்கு மேல போடீங்கன்னா எங்க பொண்ணுன்னே அடையாளம் கண்டு பிடிக்க முடியாம போயிடும்” என சற்று காரமாகவே சொல்லி விட்டாள் சுஜித்ரா.
அவர்கள் இதற்கு தானே தங்கள் பக்கமிருந்து அலங்காரம் செய்ய ஆட்கள் எடுத்தது. தாங்கள் சொல்வது போல் கேட்டு அதைப் போல அலங்காரம் செய்யவும், மாப்பிள்ளை வீட்டினர் என்று எதிர்த்து பேசாமல் இருக்கவும்!
அதற்காக எத்தனைக்கு தான் பொறுத்துப் போவதாம்! இவர்கள் என்ன நினைத்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என எண்ணிக் கொண்ட சுஜித்ரா சொல்லி விட,
“உங்க பொண்ணு கலருக்கு மேக்கப் கொஞ்சம் கம்மி தான்”என அடங்காமல் சத்தமாகவே முணுமுணுத்த வாணி மீது கொலைவெறியாகி,
“ஸ்ஸ்ஸ்..சுஜிக்கா!பாரமா எதனா கெடச்சா எங்கிட்ட தாங்களேன். இந்த வாணி தலைல ஒரே போடா போடுறேன்”என கடுப்பில் சுஜியிடம் கிசுகிசுத்தாள் ரதி.
எழும் சிரிப்பை அடக்கிக் கொண்டவளாய்,எரிச்சல் முகமாக இருந்த வேதவியைப் பார்த்து கண்களால் அமைதிப்படுத்தியவள்,
“கீர்த்தி தம்பியும் லைட்டா தான் மேக்கப் போட சொன்னார் வாணி அக்கா”என்றாள் சுஜி வாணியிடம்.
அவள் எதுவோ மறுத்துப் பேச வர, இவர்கள் பேச்சைக் கேட்டபடி உள்ளே வந்த விஜயா,
“நல்லாத் தானே இருக்கு வாணி!இதுக்கு மேல எதுக்கு போடணும்”என சொல்ல, விஜியைத் தாண்டி பேச முடியவில்லை, வாணிக்கு. கௌசல்யாவை இழுத்துக் கொண்டு வெளியேறி விட்டாள் அவள்.
இப்படியான அமளி துமளிகளோடு பாந்தமாய் திருமணப் புடவையை அணிவித்து விட்டனர்.
வெங்காய நிறத்தில் சில்வர் ஜரிகையிட்ட புடவையில் அதற்கு தோதாண நகைகள் பூட்டி மிதமான ஒப்பனை சற்றே அதிகமாய் இருந்தாலும் அதையும் மீறி இயல்பான அழகில் மிளிர்ந்தாள் வேதவி.
ஆனால் என்னவோ பெண் முகத்தில் ஒரு வித சுணக்கம் தான் தெரிந்தது.
எல்லாம் இந்த வாணியால் வந்தது!
மனதுக்குள் நொடித்தபடி அவளருகில் வந்தனர் ரதியும், சுஜியும்.
அண்ணிகளை நிமிர்ந்து பார்த்தவள்,
“நல்லாருக்கேனா அண்ணி? முகத்துல மேக்கப் ஜாஸ்தியான மாதிரி அன்ணீசியா பீல் பண்றேன்”என்றாள் வேதவி. பெண் முகத்தில் திருமணக் கலையைத் தேடி தோற்க வேண்டியதாய் இருந்தது இருவருக்கும்.
“அதெல்லாம் இல்லடா வேதா! நல்லாத்தான் இருக்க. இவங்க சில்லறைத் தனமா செய்றதுக்கு நீ உன் ‘டேவ’ (day) கெடுத்துப்பியா? ஹேப்பியா இருக்கனும்” என்ற சுஜி அவள் கைகளை அழுத்திக் கொடுத்தாள்.
“உன்னைப் பத்தி தெரியாம இந்தம்மா ஓரக்கத்தி பவரை காட்டுது.நீ என்ன செய்ற அந்த வீட்டுக்கு போனதும் இந்த வாணிக்கு நல்ல பேதி மாத்திரையா போட்ட காபி போட்டுக் கொடுத்துடு”என்று சொல்லி கண்ணடித்தாள் ரதி.
மெல்ல புன்னகை அரும்பியது வேதவிக்கு.
“என்னண்ணி என்னை வில்லி ரேஞ்சுக்கு இறங்க சொல்றீங்க?”என சிரிக்க,
“எல்லாருக்குல்லயும் வில்லத்தனம் இருக்கிறது தான். எப்பவும் நல்லவங்களா இருக்கனும்னு அவசியமில்லை!சோ,அதை ஒரு சிலவங்க கிட்ட காட்டலாம். அதுவும் இந்தம்மாக்கு காட்றதுல தப்பே இல்ல! என்ன சுஜிக்கா நான் சொல்றது?”என கண் சிமிட்டினாள் ரதி.
சுஜியும், வேதவியும் சத்தமாய் சிரித்தனர்.
“ஹா, இப்படித்தான் இருக்கனும் வேதவி. இதே ஹேப்பினஸோட கல்யாணம் மேடைக்கு போ”என்றாள் ரதி புன்னகையுடன்.
“தேங்க்ஸ் அண்ணீஸ்”என இருவரையும் அணைத்துக் கொண்டாள் வேதவி.
அந்நேரம் உள்ள வந்த சரஸ்வதி இவர்கள் மூவரின் பிணைப்பையும் பார்த்து கண் கலங்கியவர், மகளை கன்னம் வழித்தார்.
“என் பொண்ணு இப்பவெல்லாம் அடிக்கடி பொண்ணா மாறிடுறா”என்றார் உதட்டில் சிரிப்பும் கண்களில் நீருமாய்.
“சரஸு!” பல்லைக் கடித்தாள் வேதவி.
“அழகா இருக்கடி”என்றவர், இவர்களைப் புன்னகையுடன் பார்த்திருந்த விஜயாவின் கைகளைப் பற்றிக் கொண்டு,
“என் பொண்ணை பத்ரமா பார்த்துக்கோங்க”என்றார் கரகரப்புடன்.
“இனி வேதா எங்க பொண்ணு! நீங்க அந்த கவலையெல்லாம் விட்டுடுங்க” என்றாள் விஜயா.
மனம் நிறைந்தவராய் தலையசைப்போடு வெளியேறி விட, சற்று நேரத்தில் தமக்கையை அழைக்க சைந்தவியும்,சங்கவியும் அறை வந்தனர்.
“பூதவி இன்னைக்குத் தான் வேதவியா இருக்கா”என கேலி செய்தபடி, முறைத்தவளைக் கண்டு கொள்ளாமல் வேதவியுடன் சுயமி எடுத்துக் கொண்டனர், அவள் தங்கைகள்.
அதன் பின்,அவளை அழைத்துக் கொண்டு மணமேடை நோக்கி செல்ல,
“டி சங்கு! ஓவர் மேக்கப்பா டி?”என இளைய தங்கையிடம் கிசுகிசுப்பாய் கேட்டாள் வேதவி. என்னவோ அவளுக்கு இவ்வலங்காரம் அதிருப்தியைத் தான் கொடுத்திருந்தது.
சற்றே மேக்கப் அதிகம் தான் என்றாலும்,அவள் கேட்டதை ஒத்துக் கொண்டு தமக்கையின் மனநிலையைக் கெடுக்க விரும்பாது,
“அழகாத்தான் இருக்கு வேதா! நீ மாமாவக் கவனி”என வாசனைக் காட்டினாள் சங்கவி.
பட்டு வேட்டி சட்டையில் முகத்தில் இளம் முறுவலுடன் மணமேடையில் அமர்ந்திருந்தான் கீர்த்தி வாசன்.
அன்ன நடையிட்டு அவனருகில் வந்தமர்ந்த வேதவி சில நொடிகளிலே அவன் உருவத்தை கண்களில் நிறைத்து மனதில் பதித்துக் கொண்டாள்.
அளவாய் கத்தரிக்கப்பட்டிருந்த தலை முடி ஜெல் வைத்து சீவப்பட்டிருக்க, அடிக்கடி சிரிக்கும் அதரங்களும் அதன் மேல் கத்தை மீசையும், அளவாய் ட்ரிம் செய்யப்பட்ட தாடியும் என அமரிக்கையாய் அமர்ந்திருந்து பெண் நெஞ்சை அசைத்து கொண்டிருந்தான் அவன்.
அவள் அமர்ந்ததும்,
“மருதாணி போடலையா வேதா?” என அவனிடமிருந்து வந்த கேள்வியில் திகைத்துத் தெளிந்து ஓரக் கண்ணால் அவனை முறைத்தாள் பெண்.
“நேத்து ராத்திரி மருதாணி போட்ட பிக்ஸ் கேட்டேனே..! நீ தான் பிகு பண்ணி அனுப்பவே இல்ல!”என கிசுகிசுத்தான் வாசன்.
அவள் உள்ளங்கையை தொட்டு மீண்டது அவன் பார்வை.
‘அடங்கவே மாட்டான்’என குறுகுறுத்த கன்னங்களோடு புறங்கையை திருப்பிக் காட்டினாள் வேதவி.
கண்களால் சிரித்தவன், மீண்டுமாய் அவள் உள்ளங்கையைப் பார்க்க,
‘சரியான சேட்டை புடிச்சவர்’ என மனதில் நினைத்தபடி,
“நே.. நேத்து நைட் டிரஸ் வாஷ் பண்ணேன். உள்ளங்கைல இருந்த மருதாணி அழிஞ்சு போச்சு” என்றாள் அவளும் கிசுகிசுப்பாய்.
முறுவலுடன் சிறிய தலையசைப்பு அவனிடமிருந்து.
“மேக்கப் ஓவரா இருக்கற மாதிரி தெரியுதா வாசன்?” மணாளனிடமும் கேட்டாள் வேதவி.
“ம்ம்”என்றவனின் உண்மையில் அவள் முகம் கலக்கத்தைக் காட்ட,
“டே, அவ்வளவா ஒன்னும் இல்ல! இனி செய்யப்போற சடங்குக்கு இதெல்லாம் போயிடும்”என்று சமாதானம் செய்தவன்,
“இப்ப கர்சிஃப் இருந்தாலும் உனக்கு துடைச்சு விட முடியாத நிலைல இருக்கேன்டா வேதா” என்று கண்கள் சுருங்க சிரித்தான்.
நாணத்தில் தலை குனிந்தாள் அவள்.
“அப்பறம் பேசிக்கலாம் குழந்த! மந்திரத்தை சொல்லுங்கோ” என்ற ஐயரின் குரலில் அவர்களுக்கான உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இருவருக்குமே வெட்கப் புன்னகை.
திரும்பி அவனை பார்த்து விட்டு மந்திரத்தில் கவனமானாள் வேதவி.
குறிப்பாய் அவள் பார்வை அவன் தாடியில் பதிந்து மீள அதைக் கவனித்தவனுக்கும் தன்னைப் போல் புன்னகை விரிய, மந்திரத்தை உச்சரித்தது அவனுதடுகள்.
திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு வேதவியே அவனை போனில் தீடீரென அழைத்து,
“தாடியை எடுத்த உன்னைக் கொன்னுடுவேன்டா ராஸ்கல்”என மிரட்டி விட்டு போனைத் துண்டித்திருந்தாள்.
முதலில் திகைத்தாலும், தான் அனுப்பிய குறுஞ்செய்தி தான் காரணமென அறிந்தவன் சிரித்தபடி பின் தலையைக் கோதிக் கொண்டான்.
அந்நினைவில் இப்போதும் அவன் முகமதில் மந்தாகசப் புன்னகை.
“கட்டிமேளம்! கட்டிமேளம்!” என ஐயர் அவன் கரங்களில் மாங்கல்யத்தை கொடுக்க, இதழ்களில் நாணப் புன்னகை தவழ இருந்தவளின் விழிகளை ஆழ்ந்து பார்த்தவன், தானும் புன்னகைத்து மனம் நிறைய மங்கலநாணை அவள் கழுத்தில் பூட்டி அவளை தன் சரிபாதியாக்கிக் கொண்டான் கீர்த்தி வாசன்.
error: Content is protected !!