யுகத்தின் தலைவன் அத்தியாயம் 13
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 13
அடுத்தநாள் காலைப் பொழுது அழகாக விடிந்தது. இந்தமுறை லட்சுமி தவறாமல் கங்காவை எழுப்பி, பாப்பம்மாள் உடன் கோவிலுக்கு அனுப்பி வைத்தார். நேற்றைய நிகழ்வால் இன்று உஷாராகி விட்டார்.
கங்காவும் பாப்பம்மாளுடன் சைகை மொழியில் பேசிக் கொண்டே கோவில் வைபவத்தில் இணைந்து கொண்டாள்.
சிவராமன் கூறியது போல்,அடி வாங்கி பள்ளிக்கு சென்றால் அங்கு எப்படி படிப்பாள்? என எண்ணி,இருவரும் மகள்களின் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இருந்தும் நாளுக்கு நாள் கங்கா பிடிவாதம் அதிகமானது.
“நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கனும்” என்ற மாதிரியான பிடிவாதம். லட்சுமியும் அவளுக்காக எவ்வளவோ இறங்கி வந்துவிட்டு முடியாத கட்டத்தில் சிவராமனிடம் கூறிவிட்டார்.
Advertisement
சிவராமனும் உணர்ந்து கொண்டார். ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என,சாட்டையை வாங்கி வந்து அடி வெளுத்து விட்டார்.
“அப்பா அடிக்காதே, அப்பா அடிக்காதே” என கெளசியின் சத்தம் காதை பிளந்ததே தவிற கங்கா வாயில் இருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. மெளனமாக எல்லா அடியையும் வாங்கிக் கொண்டாள்.
இவளுக்கு விழுந்த அடியில் பயந்து போன கெளசி, கங்காவை ஒட்டி அமர்ந்து கொண்டாள்.
Advertisement
“கங்கா நீ வா நம்ம ரெண்டு பேரு எங்காச்சும் போய்ருவோம்” என தேம்பிக் கொண்டே கூறினாள்.
Advertisement
“அடிவாங்குன அவளே சும்மாதான் இருக்கா நீ எதுக்குடி இப்படி அழறே” என்றார் லட்சுமி.
‘அப்பா கங்காவை அடிக்கும் போது நீ கூட அடிக்க வேண்டானு சொல்லுலே,நீ கெட்ட அம்மா’ என கூறி, கங்காவின் லன்ச் பேக்கை எடுத்து தனது இரண்டு துணிகளை அதில் திணித்து “நா எங்கையோ போறேன்” என வெளியே கிளம்பி விட்டாள் கெளசி.
சிவராமனும் லட்சுமியும் எவ்வளவோ அழைத்தும் உள்ளே வர மறுத்துவிட்டாள். இனிமே நீங்க கங்காவை அடிக்க மாட்டேனு சொல்லுங்க அப்பதா நான் வருவே என உறுதியாக நின்று விட்டாள்.
Advertisement
சிவராமன் மகளை எடுத்து கண்ணீரை துடைத்து விட்டார். கெளசி!”கங்காக்கு உடம்பு சரியில்ல. அதுதா அப்பா அடிச்சேன்.இனிமே அடிக்க மாட்டேன்” என உறுதி தந்தார்.
நாமெல்லாம் ஒரு வாய்வழி கதை கேட்டிருப்போம்.அதுதான் லட்சுமியின் நிலைப்பாடு.
ஒருவன் சிறியவனாக இருக்கும் போது ஒரு பொருளை திருடிக் கொண்டு வந்து அம்மாவிடம் காட்ட அந்த தாய் எதுவும் கூறாமல் வாங்கி கொள்வாள்.தான் செய்வது சரி என நினைத்து அவன் மேலும் மேலும் திருடிக் கொண்டு வருவான். சிறு சிறு திருட்டு வேலை செய்து வந்தவன்,காலப் போக்கில் பெரிய கொள்ளை அதற்காக கொலை என அத்தனை அட்டூழியங்களையும்செய்வான்.
ஒரு கட்டத்தில் போலீஸிடம் மாட்டிக் கொண்டு, தூக்கு தண்டனை விதிக்கப்படும்.கடைசி ஆசையாக அம்மாவை பார்க்க வேண்டும் என்பான்.
இன்னும் சில நாட்களில் தூக்கு மேடை சென்று உயிரை விடும் நிலையில் தன் தாயை பார்த்து கேட்பான்.”நான் முதல் தடவை திருடிக் கண்டு வரும்போதே ஏன் என்னை கண்டிக்கவில்லை? அப்போது நீ என்னை கண்டித்திருந்தால், இன்று நான் இந்த நிலையில் இருக்க மாட்டேன்”.
இது ஒரு சாதாரண கதைதான்.ஆனால் அதில் மறைந்திருக்கும் நீதி மிகப் பெரியது.ஒரு குழந்தை நல்லவராக வளர்வதும் தீயவராக வளர்வதும் அன்னை கையில் மட்டுமே உள்ளது.
அதனால்தான் “பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்.அறிவூட்டும் தந்தை நல்வழிகாட்டும் இறைவன்” என கவிஞர் வாலி எழுதியுள்ளார்.
லட்சுமி தன்னால் முடிந்த அளவு சமாளித்து விட்டு, முடியாத பட்சத்தில் சிவராமனிடம் கொண்டு சென்று விடுவார் மகள்களின் விஷயத்தை.
கங்காவும் தனது பிடிவாதம் எல்லாம் அப்பாவிடம் செல்லுபடியாகது என உணர்ந்து கொண்டாள்.ஆனால் அதே சமயம் அவரின் குட்டி சாம்ராஜ்யத்தின் மகாராணி தான்தான் என்பதையும் உணர்ந்து கொண்டாள்.இரவு வெறுங்கையோடு வீடு திரும்ப மாட்டார்.என்ன வாங்கி வந்தாலும் முதலில் கங்காவிற்கு, அதன் பிறகே மற்ற மூவருக்கும்.
தேவைக்கு தவிர எதையும் வாங்கி தர மாட்டார்.ஆனால் இல்லை என்று இல்லாமல் அனைத்தும் கொடுத்து நிறைவாகவே வளர்த்தார் சிவராமன்.
அதேசமயம் கங்காவின் பிடிவாதம், சாதாரண பிடிவாதம் அல்ல. அவள் கனவுகளையும், ஆசைகளையும் கொண்ட பிடிவாதம்.
“இறுதியில் அவள் வென்றாள்”என்ற லட்சியத்தை நோக்கிய பிடிவாதம். அவளை பெற்றவர்களுக்கு தலைவலியை தரக் கூடிய பிடிவாதம்.
கங்கா தற்போது அவளது ஆறாம் வகுப்பு கோடை விடுமுறையில் இருக்கிறாள், அவளது தோழிகள் அனைவருக்கும் ஏழாம் வகுப்பிற்கு செல்ல ‘பாஸ்’ என்ற செய்தி இன்லேண்ட் லெட்டரில் வீடு வந்து சேர்ந்து விட்டதாகவும், அவளுக்கு மட்டும் வரவில்லை என்றதும் அடி வயிற்றில் பயங்கர வலி.
இப்போது உள்ள ஆல்பாஸ் முறை அப்போது இல்லை. இரண்டு மூன்று வருடங்கள் கூட தோல்வி அடைந்து ஒரே வகுப்பில் படித்தவர்கள் வரலாறும் உண்டு.
அதே சமயம் இந்த முறையால் நிறைய பேர் தங்கள் படிப்பை பாதியில் இடைநிறுத்தி தங்கள் எதிர்கால வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி உள்ளனர்.இடை நிற்றலை தவிர்க்கவே ஆல்பாஸ் முறை கொண்டு வரப்பட்டது.
அன்று வெள்ளிக் கிழமை வீட்டிற்கும் வாசலிற்கும் நடக்க ஆரம்பித்தாள், பதினொன்றை மணி லெட்டரும் வர அவளும் பெரிய மனுஷி ஆகி விட்டாள். வெள்ளி கிழமை என்பதால் வெயில் தாழத்தான் தண்ணீர் ஊற்ற வேண்டும் என கூறி, வீட்டில் உள்ள ஜாதிமல்லி பூ மரத்தின் கீழ் அமர வைக்கப் பட்டிருந்தாள். அவளின் சித்தி கலா அந்த இன்லேண்ட் கவரை பிரித்து “வெற்றி! வாழ்த்துக்கள்!” என படித்தார்.அவ்வளவு சந்தோசம் கங்காவிற்கு.
மாலையில் தாய் மாமன்கள் மூவரும் சீர் கொண்டு வந்து தண்ணீர் ஊற்றி உள்ளே விட்டனர்.ராகு காலத்திலே குத்த வச்சிட்டா. தாய் மாமனுகளுக்குதா ஆகாது என பழனியம்மாள் குறை பட்டுக் கொண்டார்.
பெரிய அளவில் மண்டபம் பிடித்து சீர் செய்ய திட்டமிட்டார் சிவராமன். பத்திரிக்கை அடிப்பது. சொந்த பந்தங்கள் அழைப்பு.சாப்பிட மெனு தயாரிப்பது என பிஸியாக இருந்தார்.
தாய் மாமன்கள் சீருக்கு மஞ்சளும், லைட் கீரினும் கலந்த நிறத்தில் புடவை எடுக்க அது சிவராமனுக்கு பிடிக்க வில்லை.அதுமட்டுமல்ல விலையும் கொஞ்சம் கம்மியாக இருந்தது.
அவரே கொஞ்சம் கூடுதல் விலையில் பீட்ரூட் கலரில் மகளுக்கு சேலை எடுத்தார்.சும்மா ஆடுகிறவன் காலில் சலங்கையை கட்டினால் எப்படி ஆடுவானோ?அப்படிப்பட்ட நிலை பழனியம்மாளினது.
லட்சுமியின் பெரிய அண்ணன் செல்வம் கோபித்துக்கொண்டு சீருக்கு வரமாட்டேன் என்று சொல்லி விட்டார். லட்சுமி” முதன் முதலில் பெண்ணுக்கு தேவை செய்கிறோம் மனஸ்தாபம் வேண்டாம். என் அண்ணனை சாமாதானம் செய்து கூப்பிடு” என கூற, பத்திரிக்கை வைப்பே, வந்தா வரட்டும் இல்லைனா போட்டும் என்று கூறிவிட்டு தன் வேலையை பார்க்க கிளம்பி விட்டார்.
சீருக்கு முந்தைய இரவு மண்டபம் அழைத்து செல்லப்பட்டாள் கங்கா. அவளுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.அங்கிருந்த டெக்கரேசனை அவ்வளவு அழகாக ஜோடித்திருந்தார் சிவராமன் .
வானபுழு கலரில் ஸ்டேஜ் பேக்கரவுண்ட் அதில் எஸ். கங்கா என எழுதப் பட்டிருந்தது. அவள் அமர சிவப்பு நிற சேர்,ஸ்டேஜிற்கு செல்லும் வழியில் இருபக்கமும் ப்ளாஸ்டிக் செடி என ரம்மியமாக இருந்தது. இதுவரை இதை யெல்லாம் அவள் படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறாள்.
சிவராமன் அங்கிருந்த செடிகளை அடுக்கி கொண்டிருந்தார். இரவே மண்டபத்தில் விருந்து அமர்களமடைந்தது.சொந்த பந்தங்கள் வந்த வண்ணம் இருந்தது.
கலா,”கங்காவை அழைத்து ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருக்காதே நேரமா தூங்கு,அப்போதா மேக்கப் பண்ணா நல்லா இருக்கும்,இல்ல டல்லா தெரியும்” என்றார்.
“சித்தி, உன்னோட நெக்லஸ் போட்ட சேலை வேணும். மாமாங்க புடவை கொடுக்கறதுக்கு முன்னாடி நான் உன்னோட சேலை கட்டிக்கறே” என்றாள்.
அடுத்த நாள் காலை,சீர் வரிசை தட்டுகள் மாமன் வீட்டில் இருந்து ஊர்வலமாக சிவராமன் வீட்டு எல்லைக்குட்டபட்ட மாரியம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று பூஜை செய்யப்பட்டு மேளதாளத்தோடு மண்டபத்திற்கு எடுத்து வந்தனர்.
கலாவின் மெரூன் கலர் நெக்லஸ் டிசைன் பதித்த பட்டுப் புடவையை அணிந்து, மணையில் உட்கார வைக்கப்பட்டாள் கங்கா. சிவராமன் எடுத்த புடவையை, மாமன்கள் எடுத்ததாக கொடுக்கப்பட்டது.
அது பீட்ரூட் நிற சரிகை பட்டு புடவை, அந்த புடைவைக்கு ஏற்ப வெள்ளை கல் வைத்த நெத்திச்சூட்டி, நெக்லஸ்,ஆரம் ஒட்டியாணம்,கைக்கு வாங்கி என அழகாக அத்தைகள் அவளை ஜோடித்திருந்தனர்.
கஸ்தூரி ஓடி ஓடி மருமகளுக்காக அனைத்தையும் செய்து,ஸ்டேஜிற்கு அழைத்து வந்தார். அவிநாசியப்பனின் பெரிய அண்ணி முதலில் வந்து கங்காவிற்கு குங்குமம் வைத்தார். அவரை தொடர்ந்து தாய் மாமன்கள் அத்தைகள் வைத்தனர்.
சிறுசிறு குடும்ப அரசியல்களுக்கு நடுவே அவளது சீர் நடந்து கொண்டிருக்க லட்சுமி அழுது கொண்டே கங்காவை திடீரென ஸ்டேஜை விட்டு இறக்கி வெளியே கூட்டி வந்தார். அவரின் பெரிய அண்ணன் செல்வம் மண்டப வாசலில் நின்றிருக்க கையில் குங்குமத்தை கொடுத்து கங்கா நெற்றில் பொட்டு வைக்க சொன்னார். கங்கா தாய் மாமன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பின்,அவள் நெத்தியில் அவர் குங்குமமிட்டார்.
சாப்பிட அழைக்க, மறுத்து விட்டார். பழனியம்மாள் வந்தவர்களிடம் புடவை கதையை கூறி மனதை தேற்றிக் கொண்டார். இருந்தும் இரண்டு பவுன் பேத்திக்காக போட்டு,சபையில் கெத்தாக நின்றார்.
குடும்ப புகைப்படம் அனைவரும் கங்காவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்டனர். பாப்பம்மாள் முதன்முறையாக புடவை கட்டிய பேத்தியை ஆசையாக தொட்டுப் பார்த்துக் கொண்டார்.
ஏழு பேத்திகள்,மூன்று பேரன்கள் என தன் குடும்பம் விரிவடைந்து இருந்தது மகிழ்ச்சியை தந்தது அவிநாசியப்பனுக்கு.
அன்றிரவு சிவராமன் மகிழ்ச்சியில் மது அருந்திக் கொண்டே எதையோ சாதித்த உணர்வில் இருந்தார். காரணம் அவருடைய சொந்தத்தில் யாருமே இந்த அளவு சீர் நடத்தியது இல்லை. அப்படி சொந்த பந்தங்கள் மெச்சும் அளவிற்கு கல்யாணம் போல் நடத்தி முடித்தார்.
வந்த வாரம் கறிவிருந்து வீட்டில் போடப்பட்டது.கலாவும் அவளது கணவருக்கும் ஏதோ மனஸ்தாபம் சாப்பிடாமல் ஊருக்கு சென்று விட்டனர். இது சிவராமனுக்கு கொஞ்சம் கெளரவ குறைச்சலாகி விட்டது.எப்படி என் வீட்டில் சாப்பிடாமல் போகலாம்? என.. கலாவின் கணவரும் சிவராமனுக்கு சற்றும் சளைத்தவர் அல்ல.
தராசில் வைத்து அளந்தால் கூட எந்த பக்கம் சாய்ந்து யாரை மேலே ஏற்றி, யாரை கீழே இறக்கி பிடிப்பது என தாராசே கொஞ்சம் குழப்பமடைந்து விடும். அந்தளவிற்கு இருவரும் தங்கள் கொள்கைகள்,பழக்க வழக்கங்களில் உறுதியாக இருப்பவர்கள்.
நாட்கள் வாரங்களாகினர்,வாரங்கள் மாதங்களாகினர்.மாதங்களும் வருடங்களாகி விட்டது.இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்ப்பதையோ பேசுவதையோ தவிர்த்து விட்டனர்.
உறவினர்களும் அவர்களாகவே இறங்கி வந்து பேசட்டும் என விட்டுவிட்டனர்.யார் சமாதான பேச்சை எடுத்தாலும் இருவரும் பிடிகொடுக்காமல் இருக்க இவர்களும் என்ன செய்வர்?
இருவரும் பேசிக் கொள்ளாமலே கலாவின் கணவர் காலம் சென்று விட்டார்.ஆம் அவர் காலமாகிவிட்ட செய்தி அனைவர் தலையிலும் இடி போல இறங்கியது.
–தலைவன் வருவான்..
