யுகத்தின் தலைவன் அத்தியாயம் 20
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 20
பள்ளி வாழ்க்கையை முடித்து பிரியாவிடை பெற்ற கங்காவும் சுமதியும்,தங்கள் ஊரை அடுத்து ஊரில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியில் சேர்ந்தனர்.ஆனால் இருவரும் வெவ்வேறு துறைகளை தேர்வு செய்ததால், தினசரி சந்திப்பு குறைந்தது.
கல்லூரி வாழ்க்கையின் தேர்வு முறைகள் ஆரம்பத்தில் சற்றே சிரமமாக இருந்தாலும், காலப்போக்கில் அவற்றை கற்றுக் கொண்டு, பழகிக் கொண்டனர்.
கங்காவின் வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றம் இரண்டாம் ஆண்டில் ஏற்பட்டது.அவளது பேராசிரியர் கோமதி மேம்மை பார்த்ததும், அவரைப் போலவே ஒரு பேராசிரியராக வேண்டும் என்ற கனவு மனதில் வேரூன்றியது. அதோடு, அரசியல் மீதான ஆர்வமும் மெதுவாக வளரத் தொடங்கியது.
Advertisement
முன்பு அப்பா கட்டாயப்படுத்தி செய்தி படிக்க வைத்ததும்,அரசியல் விவாதங்களை கேட்க வைத்ததும் சலிப்பாக இருந்தது.ஆனால் இப்போது அவள் அதில் ஈடுபாடு கொண்டு, நாட்டின் நிலவரங்களை புரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.
தந்தையும் மகளும் சேர்ந்து சட்டசபை முதல் ராஜ்யசபை வரை விவாதித்து பேசும் அளவிற்கு அவளின் அறிவு வளர்ந்தது.
காலா காலத்துல கங்காவுக்கு கல்யாணம் செஞ்சு பேரன், பேத்தி பாப்பேனு நினைச்சா… நீ உன் புள்ளைக்கு அரசியல் கத்துக் கொடுத்து அரசியல்வாதியாவா ஆக்கப் போறே?” என லட்சுமி சிரித்தபடி கேட்டார்.
Advertisement
அதற்கு சிவராமன், “என் புள்ள குடும்பமா வாழ்றத பாக்க,எனக்கு சந்தோஷம் தான்… ஆனா படிப்பு மட்டும் இல்லாமல், உலகம் எப்படி ஓடுதுனு தெரியணும்,” என்றார்.
Advertisement
அதே ஆண்டில் சுமதிக்கு திருமணம் நடைபெற்றது.திருமணத்திற்குப் பிறகு அவள் தனது குடும்ப வாழ்க்கையில் முழுமையாக மூழ்கி விட்டாள்.
“இனி நீ நித்யா கூடதான் இருக்கணும். அவ கதை சொல்ல ஆரம்பிச்சா… அமெரிக்கா, ஆப்ரிக்கா எல்லாம் போய்ட்டுதா வருவா. கொஞ்சம் கவனமா இரு,” என சுமதி சிரித்தபடி கூறி பிரிந்தாள்.
இந்நிலையில், சிவராமனின் தொழிலில் மீண்டும் சிக்கல்கள் தோன்றின. கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து சொந்தமாக தறிகுடோன் வைத்து உயர்ந்து விட்டார்.
Advertisement
ஆனால் நூல் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு..இவை அனைத்தும் விசைத்தறி தொழிலாளர்களை கடுமையாக பாதித்தது.
சங்க முடிவின் படி, எந்த தறியும் இயங்கக் கூடாது என்று வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
அரசாங்கம் கவனிக்க வேண்டுமென பொருளாதார அழுத்தம் கொடுக்க முயன்றனர்.
ஆனால் அதன் விளைவாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
சிவராமனும் மிகவும் போராடினார்.
இறுதியில் தனது தறிக் கூடத்தை விற்று, மீண்டும் பழைய ரீடு கடையை மட்டும் நடத்த ஆரம்பித்தார்.
அந்த நேரத்தில் கங்கா இறுதி ஆண்டு படித்து கொண்டிருந்தாள். கெளசி கல்லூரியில் முதல் ஆண்டு சேரத் தயாராக இருந்தாள்.
இதுவரை கல்லூரி பஸ்ஸில் சென்ற கங்கா, அப்பாவுக்கு சுமையாக இருக்க வேண்டாம் என்று நினைத்து, பஸ் பாஸ் எடுத்து டவுன் பஸ்ஸில் பயணம் செய்யத் தொடங்கினாள்.அவளுடன் நித்யாவும் தொத்திக் கொண்டாள்.
ஒரு நாள் மாலை, “கங்கா நம்ம ஊர் பஸ் வர லேட் ஆகும்… அதுக்குள்ள ஒரு டாப் வாங்கலாம் வாடீ,” என்று நித்யா வற்புறுத்தினாள்.
கங்காவிற்கு அவளுடன் ஷாப்பிங் போவது பிரச்சனை இல்லை.ஆனால் அவள் சொல்லும் மிகைப்படுத்திய கதைகள் தான் அவளுக்கு பிடிக்காது.
கடைக்குள் சென்று, பல ஆடைகளை கலைத்து பார்த்த பிறகு, “இங்க எதுவுமே நல்ல டாப் இல்லே … என் சித்தி சிங்கப்பூர்ல இருந்து அடுத்த வாரம் வர்றாங்க… அவங்க கிட்ட சொல்லி எடுத்துட்டு வர சொல்லிக்கறேன்,” என்று கடைக்காரருக்கே கேட்கும் அளவிற்கு பேசிவிட்டு வெளியே வந்தாள் நித்யா.
அந்த கடைக்காரர் கங்காவை பார்த்த விதம் அவளுக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது.
அவள் அமைதியாக வெளியே வந்தாலும், உள்ளுக்குள் ஒரு அவமான உணர்வு இருந்தது…
கல்லூரியின் இறுதி வருடம்.நிறைய கனவுகள் கங்காவின் தோழிகளிடம் இருந்தது.அதில் முதன்மையானது
வாழ்க்கைத்துணை பற்றிய எண்ணங்கள்.
ஒருத்தி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஐஸ்வர்யா ராய் பாணியில்… இடி,மழை,புயல்,மின்னல் இதிலெல்லாம் இருந்து ஒருத்தன் வரணும் என்றாள்.
இன்னொருத்தி அஜித்
மற்றொருத்தி மாதவன், சூர்யா என பட்டியல் நீண்டது.
கங்கா உனக்கு எப்படி? என்றாள் மீனா.
அவள் இதுவரை அப்படியெல்லாம் யோசித்தது இல்லை. எப்படியும் அப்பா பார்த்து வைக்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்யப் போகிறோம் என்று எண்ணி இருந்தாள். அதையே தோழிகளிடமும் சொல்ல ஓவரா சீன் போடதே டீ. உனக்குன்னு ஆசை இருக்கும் இல்ல. உன் கணவர் எப்படி இருக்கும்னு என விடாமல் வற்புறுத்தினர்.
கங்கா யோசித்தவாறே, கொஞ்சம் ஹைட்டா, கலரா இருக்கனும். ரொம்ப கலரா எல்லா வேண்டா கொஞ்சமா கலரா இருந்தா போதும். அப்பறோம் சிரிச்சா கண்ணத்துல குழி விழனும் என்றாள்.
“ஓஹோ!” என ஒரே ஆர்ப்பரிப்பு.சரி கங்கா அப்படியே ஒரு பாட்டு எடுத்து விடுனு நச்சரித்தனர்.
“கங்கா :மூஞ்சிய தூக்காம
காஞ்சிப்புரப்பட்டு வாங்கி கொடுக்கணும் டோய்
தோழிகள் : ஆமாமாமா வாங்கி கொடுக்கணும் டோய்
கங்கா : ராத்திரி ஷோவுக்கு
டூரிங் டாக்கீஸ் கூட்டிட்டு போகணும் டோய்
தோழிகள்: எங்களையும் கூட்டிட்டு போகணும் டோய்
கங்கா : ஹாங்
ஆம்பிள்ளத்தான் பெத்துக்கணும் ஆரிராரோ பாடிக்கணும்.
ஊர் உலகம் மெச்சும்படி ராணி என்ன வச்சுக்கணும்
தோழிகள்:ஆஹா மொத்தத்தில் பொண்டாட்டி நீயில்ல மாப்பிள்ளை டோய்
தோழிகள்: அடடடட ……..
கங்கா:நான் புடிக்கும் மாப்பிள்ளை தான்
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் போடுற கோட்டுக்குள்ள
கட்டுப்பட்டு வாழணும் வீட்டுக்குள்ள..
நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்
தோழிகள்:டும் டும் டும் டும் டும்”
கல்லூரி படிப்பு முடிந்தது.மேலும் ஒரு டிகிரி படிக்க ஆசை கங்காவிற்கு. இன்னமும் விசைத்தறி ஸ்ட்ரைக் முடியவில்லை.
தன் படிப்பு செலவுகளை தானே சமாளிக்க வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டாள்.தனது வீட்டருகே இருந்த ஒரு மோட்டார் மேனுபேக்சரிங் கம்பனிக்கு பார்ட் டைமில் கணக்கு எழுத சேர்ந்தாள் .நாற்பது ஆண்களும் கங்காவோடு சேர்ந்து இரண்டு பெண்கள் வேலை செய்யும் இடம் அது.
ஒருநாளைக்கு நூற்று அறுபது ரூபாய் சம்பளம் தரப்பட்டது. படிப்பு செலவு போக வீட்டிற்கும் கொஞ்சம் கொடுத்தாள்.
தினமும் வந்தவுடன் வருகை பதிவேடு கணக்கு எடுக்கும் பொறுப்பு கங்காவினுடையது. அந்த கம்பெனியில் அருள் என்ற ஒருவன் குவாலிட்டி கனிட்ரோலராக வேலை செய்தான்.
நோட்டை எடுத்து லேபர்கள் வேலை செய்யும் பகுதியில் நுழைந்த கங்காவை இடைமறித்து, தானாகவே முன் வந்து அவளுக்கு உதவினான் அருள். தினமும் இதை வழக்கமாக்கிக் கொண்டான். அந்த ஒரு உதவியில் இருந்து தான் அவர்களது உரையாடல் ஆரம்பமானது.
முதலில் சாதாரணமாக ஆரம்பித்த வருகை பதிவேடு பணி. கொஞ்சம் கொஞ்சமாக நட்பாக மாறியது.
தனக்கு ஐஏஎஸ் படிக்க விருப்பம் வீட்டின் சூழ்நிலை காரணமாக இங்கே வேலைக்கு வந்துவிட்டேன்.சிலசமயம் எனக்கு சரியான சட்டை கூட இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளேன் என்றான்.
அவன் அதை சும்மா சொல்லவில்லை.
ஒவ்வொரு வார்த்தையும் அவன் உள்ளம் எவ்வளவு போராடுகிறது என்பதை கங்கா உணர்ந்து கொண்டாள். அவளுக்கு மனம் கேட்க வில்லை.தன்னை போலவே லட்சியங்களை கொண்டவனாக அவள் பார்வைக்கு அருள் தோன்றினான்.
கங்கா அம்மாவிடம் எதையும் மறைக்கமாட்டாள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வாள். அருளை பற்றியும் கூறி, அவனுக்கு நட்புடன் ஐஏஎஸ் சம்பந்தப்பட்ட புத்தகம், சட்டை எல்லாம் வாங்கிக் கொடுத்தாள்.
ஒருநாள் மாலை, “கங்கா, நான் ஐஏஎஸ் படிக்க சென்னை போறேன்” என்றான். கங்காவிற்கு மிகுந்த மகிழ்ச்சி அவனது கனவை நோக்கி அவன் செல்வது.
அதோடு தயங்கியபடியே , எனக்கு உன்னை பிடிச்சுருக்கு கங்கா.நான் உன்னை கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்றான்.
கங்காவுக்கு அப்பாவை நினைத்து தூக்கி வாரிப்போட்டது.
அவளுக்கு காதல் என்றெல்லாம் யார் மீதும் எந்த உணர்வும் வந்தது இல்லை.
சொல்லப் போனால் அந்த வயதில் அதன் அர்த்தம் கூட புரியவில்லை. இவ்வளவு நாட்கள், அப்பா ஏதாவது சொன்னால் கிளிப்பிள்ளையாக அதை நிறைவேற்றி முடிப்பது.அம்மாவிற்கு சிறு சிறு வேலைகள் செய்து கொடுப்பது. தங்கையுடன் வாய்க்கு வாய் வாயாடி சண்டை போடுவது, தோழிகளுடன் சேர்ந்து படிப்பது,கதை பேசி சிரிப்பது.புத்தகமும் கையுமாக இருப்பது. இதுவே இவள் வாழ்க்கை முறை.
இன்று காதல் என்றவுடன் சிவராமன் முகம் மட்டுமே வந்து பயத்தை தந்தது. அதுமட்டுமல்ல அருள் மீது எந்தவித ஈர்ப்பும் இல்லை.நட்பு மட்டும்தான்.
இவன் இப்படி கூற என்ன சொல்வது என்றே அவளுக்கு தெரியவில்லை. பின் அவனே ஆரம்பித்தான் நான் ஐஏஎஸ் முடித்துவிட்டு, உன் அப்பாவிடம் வந்து பேசுகிறேன் என்றான். கங்கா எதுவும் சொல்லாமல் வீடு வந்துவிட்டாள்.
அன்றே தனது மனதில் உள்ளதை சொல்லி இருந்தால் பின்னால் நடக்க போகும் விபரீதங்களில் இருந்து தப்பி இருப்பாள். எதுவும் சொல்லாது தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டாள்.
பிஜி முடித்தவுடன் கங்காவிற்கு பிஎச்டி படிக்க ஆசை. நித்யாவும் அவளும் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதி பாஸ் செய்து விட்டனர்.நித்யா பிரபல அரசு கல்லூரியில் பிஎச்டி சேர்த்து விட்டாள்.
சிவராமன் கங்காவின் ஜாதகத்தை எடுத்து மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்.இரண்டு டிகிரி படித்த பெண் என்றதுமே மாப்பிள்ளை வீட்டார் யோசித்தனர். காரணம் சிவராமன் சொந்தத்தில் யாரும் அவ்வளவாக படித்தது இல்லை. சொந்த தொழில் சொந்த வீடு என்றுதான் இருப்பார்கள்.
குழம்பு வெச்சு, வீடு வாசல் கூட்ட பன்னிரண்டாம் வகுப்பு படித்த பெண் போதும் என்று விட்டனர். அதுவும் ஊர் விட்டு வேறு ஊர் சென்று படித்த பெண்ணெல்லாம் வேண்டாம் என்று சொல்லி விட்டனர்.
ஒரு டிகிரி முடித்த உடன் திருமணம் செய்து வைத்திருக்கலாமோ என யோசித்த சிவராமனிடம் வந்து, அப்பா நான் பிஎச்டி படிக்கறே. கவர்மென்ட் காலேஜிலே சேர்த்து விடு என்றாள். அது இருபாலரும் சேர்ந்து படிக்கும் கல்லூரி.
அவ்வளவுதான்,ஏற்கனவே ஊர்விட்டு ஊர் போய் படிச்ச புள்ள வேண்டானு சொல்றாங்க.இதுல ஆம்பள பசங்க படிக்கற காலேஜா? என யோசித்து,
நமக்கு இரண்டு டிகிரி போதும் கங்கா என்று மறுத்து விட்டார். கங்காவிற்கு பெருத்த ஏமாற்றம் யுஜி இரண்டாம் ஆண்டு படிக்கையில் இருந்தே லெக்சரர் ஆக வேண்டும் என்பது அவளது ஆசை.
ஆனால் தந்தை ஒரு நிமிடத்தில் அனைத்தையும் வேண்டாம் என்று சொல்லி விட்டார். இருந்தும் அவளுக்கு மனம் கேட்க வில்லை.
தாயும் தந்தையும் படிக்கவில்லை என்பதால் தன்னை இரண்டு டிகிரி படிக்க வைத்துள்ளனர். அந்த அறிவை தன்னோடு வைத்து கொள்ளாமல் பிறருக்கும் கொடுக்க நினைத்தாள்.
லட்சுமிக்கு இரண்டு நாள் வீட்டுவேலை செய்து அவரை நைஸ் பிடித்து, அப்பாவிடம் சம்மதம் வாங்கி
வீட்டில் இருந்து இரண்டு ஸ்டாப் தள்ளி உள்ள வெங்கடாஜலபதி பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்து கொண்டாள்.
சிவராமனுக்கு தன் விருப்பப்படி மகள் டீச்சர் ஆனது சந்தோசமே.ஆனாலும் அவளின் திருமண வாழ்வு நினைத்து பயம் வந்தது .
— தலைவன் வருவான்…
