Skip to content
Post Views: 670
யுகத்தின் தலைவன் அத்தியாயம் 29
சிவராமன் தன் உயிரினும் மேலாக நேசித்த தன் பூர்வீக வீட்டை விட்டு,வேறு வீட்டிற்கு கங்காவை அழைத்துச் சென்றார்.
அருளும் அடுத்த மாதமே வேறு திருமணம் செய்து கொண்டான்.
இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது.
கங்காவும் அந்த கருப்பு நாட்களின் கசப்பான நினைவுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மீட்க வேறு வழிகளில் எல்லாம் தன் கவனத்தை செலுத்தினாள்.அதில் ஒன்றுதான் ஹிந்தி கற்றுக் கொள்வது.
Advertisement
சமீபகாலமாக ஹிந்தி திணிப்பு என்ற வார்த்தை பிரபலமாகி வந்தது.ஆனால் நாம் எல்லா மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தாள்.முதலில் சற்று சிரமமாக இருந்தது ஹிந்தி மொழி. முயன்று படித்து மாவட்ட அளவில் முதல் மார்க் வாங்கி அதற்கான ஷீல்டையும் வீட்டில் வைத்து கொண்டாள்.
தான் அந்த கறைபடிந்த நாட்களில் இருந்து வெளியே வந்து விட்டதாக வீட்டார்களுக்கு உணர்த்தினாள்.
சிவராமனும் தற்போது கங்காவிற்கு மாப்பிள்ளை தேட ஆரம்பிக்க,எல்லாம் இரண்டாம் தார வரன்கள்தான் வந்தது.
உண்மையை மறைத்து திருமணம் செய்து கொடுத்துவிடலாம் என ப்ரோக்கர் வற்புறுத்த மறுத்து விட்டார்.
எல்லாம் தெரிஞ்ச ஒருத்தே வரட்டும் என்றார்.
Advertisement
விவாகரத்தான வரன், இரண்டு குழந்தை உள்ள வரன்,கங்காவை விட பதினைந்து வருடம் மூத்த வரன்கள் வர சிவராமனுக்கு தயக்கம் ஏற்பட்டது.
Advertisement
கடைசியாக ஒரு வரன் எல்லாம் தெரிந்து வந்தது.சிவராமனும் மாப்பிள்ளை பற்றி விசாரித்ததில் திருப்தி ஏற்பட்டது.
ஒரு நல்ல நாளில் வீட்டிற்கு வந்தனர் மாப்பிள்ளை வீட்டார். கங்காவிற்கு உள்ளூர நடுக்கம்தான்.அவர்களுக்கு காபி கொண்டு சென்று கொடுத்தாள். தற்போதும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை அவளுக்கு.
பெண்ணை எங்களுக்கு பிடித்து விட்டது.எல்லாரும் அந்த வயசுல தப்பு பண்றதுதா இல்லைனு சொல்லுலே. எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. ஆனா எங்க பையனுக்கு சொந்தமா ஒரு கம்பெனி மட்டும் வெச்சு கொடுத்திருங்க என்றனர்.
Advertisement
சிவராமனும் சற்றும் யோசிக்காமல் சரி என்றார்.அவருக்கு மகள் நலமாக இருந்தால் போதும்.
ஆனால் கங்காவிற்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை.நேரே மாப்பிள்ளை வீட்டார் முன்பு வந்து எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல எல்லாரும் வெளியே போங்க என்றாள்.
அனைவருக்குமே அதிர்ச்சி.வந்தவர்கள் நாகரீகமாக வெளியேறினர்.
அவர்கள் போனவுடன் சிவராமன் ,” உனக்கு பிடிக்கலனா என்கிட்ட சொல்லனு கங்கா. அது என்ன இப்படி நாலு பெரியவங்க இருக்கற சபைலவந்து சொல்றது.
அவங்களுக்கு எவ்வளவு அவமானம் கங்கா இது என்றார்.
முடியாது என உரிய இடத்தில்,உரிய நேரத்தில் சொல்லி விட வேண்டும் இது ஆரம்பத்திலேயே பல பிரச்சினைகளை சரி செய்து விடும். ஏற்கனவே முடியாது, வேண்டாம்,பிடிக்க வில்லை போன்ற வார்த்தைகளை சொல்ல தவறியதன் விளைவுதான் இன்றைய தன் நிலை என எச்சரிக்கையாக சொல்லி விட்டாள் கங்கா.
ஆனால் சிவராமனுக்கு இது அவமானம். கோவிலில் பெண் பார்ப்பதுதான் வழக்கம்.இருந்தும் கங்காவின் நிலையை மனதில் கொண்டு வீட்டிற்கு வரவழைத்திருந்தார்.
பிடிக்க வில்லை என்பது
இரண்டாம்பட்சம் தன்னிடம் சொன்னால், எல்லாத்தையும் தான் பார்த்துக் கொள்வேன். அது என்ன வெளியே போங்க என சொல்வது என கண்டிப்புடன் பேச..
இது என்னுடைய வாழ்க்கை இதுல முடிவு எடுக்கற உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு.யாரை கல்யாணம் பண்ணனும் பண்ணக் கூடாதுனு முடிவு எடுக்கற உரிமையும் எனக்கு மட்டும்தான் இருக்கு.
நீங்க யாரும் எனக்கு புத்திமதி சொல்ல தேவை இல்லை என சிவராமனை எதிர்த்து நின்றாள் கங்கா.
இதுவரை சிவராமனின் குணங்களை உள்வாங்கி மட்டுமே வைத்திருந்தவள். தனக்குள் இருந்த சிவராமனை முதன்முதலாக வெளியே கொண்டுவர , எல்லோரும் ஒரு நிமிடம் ஆடித்தான் போனார்கள்.
தன் குணநலன்கள் பெண் உருவெடுத்து தன்னை எதிர்த்து நிற்க சிவராமனுக்கே என்ன செய்வது என தெரியவில்லை.அங்கே இருந்த செம்பை எடுத்து கங்காவை நோக்கி வீச ,அது அவளது தலையில் நங்கென்று விழுந்தது.
பிடிவாதம் மட்டுமே அவளின் குணம். அதுவும் செல்லுபடியாகும் ஒரே இடம் லட்சுமி மட்டுமே. ஆனால் இன்று அவளது செய்கை திகைப்பை தந்தது.
அடுத்தடுத்த வரன்களையும் இவ்வாறே தட்டிக் கழித்தாள்.தற்போது எது வேண்டும் என்பதை விட, எது வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்தாள் கங்கா. விளைவு எவ்வளவுக்கெவ்வளவு ஆசையாக கங்காவை வளர்த்தாரோ, அதே அளவு வெறுக்கவும் ஆரம்பித்தார் சிவராமன்.இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்ப்பதை கூட தவிர்த்தனர்.
கங்காவிற்கு தற்போது தன் வாழ்வை பற்றிய பயம். மீண்டும் தவறாகி போக கூடாது என தெளிவாக இருந்தாள்.
சிவராமன் வீட்டு ஆட்களும்,லட்சுமி வீட்டு ஆட்களும் வீட்டிற்கு வருவது கூட குறைந்தது.அம்மா,அப்பாவிற்கு பிறகு கங்கா பெரிதும் மதிப்பது கலாவைத்தான்,
ஆனால் இன்று கலாவை கூட எட்ட நிறுத்தி விட்டாள்.
சிவராமன் கோவில், குளம் என சுற்ற ஆரம்பித்தார் கங்காவிற்காக…
இதில் ஜோதிடமும் அடக்கம்…ஒரு பக்கம் புரோக்கர்,மறு பக்கம் ஜோதிடம் என சிவராமன் தன் சம்பாத்தியத்தில் பாதியை அழித்தார்.
வார வாரம் புளியோதரை கட்டிக் கொண்டு கோவில் கோவிலாக கங்காவிற்கு தோசம் கழிக்க சென்றனர்.
கேரளாவில் உள்ள சோட்டனிகரை வரை கங்காவை அழைத்துச் சென்றார் சிவராமன். தோசத்திற்கு பரிகாரம் செய்து விட்டு, ட்ரெயினில் இரவு கிளம்ப டிக்கெட் வாங்க வரிசையில் நின்றார்.
அது எதோ பண்டிகை காலம் சரியான கூட்டம்.டிக்கெட் கிடைப்பதே பெரும் பாடாக இருந்தது. கங்காவிற்காக அலைந்து அலைந்து சிவராமன் சோர்வடைந்திருந்தார்.என்றுமே ஓய்வறியாதவர் அல்லவா.
கங்காவிற்கு பார்க்க பாவமாக இருக்க, காசை வாங்கிக் கொண்டு லைனில் நின்றாள்.டிக்கெட் கவுண்ட்டர் பக்கம் சென்றவுடன் திடீரென இரண்டு கைகள் தன்னை அரணாக காப்பதை உணர்ந்தாள்.சுற்றிலும் ஆண்கள் நிற்க சிவராமன் கங்காவை பாதுகாத்து நின்றார்.அவரின் அன்பை நினைத்து ஒரு பெரும் மூச்சு விட்டுக் கொண்டாள்.
ஒருவழியாக ரயிலில் பயணம். கெளசிக்கு உற்சாகத்தை தந்தது. “அப்பா நீ இந்த கங்காவுக்கு தோசம் கழிக்கற காச சேர்த்து வெச்சினா நாம இந்த மாதிரி ட்ரெயின் கூட வாங்கிகலாம்ப்பா” என்றாள்.அவள் கூறுவதற்கு சிரிக்க கூட தெம்பில்லாமல் லட்சுமியும் சிவராமனும் சோர்ந்து போனார்கள்.
இனி ஜாதகமெல்லா பாக்க வேண்டாமா. இதுவரைக்கும் செஞ்ச பரிகாரமே போதும் என்றாள் சிவராமனுக்கு சொல்வது போல லட்சுமியிடம்.
இல்ல லட்சுமி இனி காளஹஸ்தி மட்டும் போய்ட்டு வந்தரலாம். அங்கே போனா நல்ல வரன் அமையுனு சொல்றாங்க என்றார் கங்காவிற்கு பதில் சொல்வது போல..
ஜோதிடம் என்பது வெறும் மூடநம்பிக்கை அல்ல, காலத்தையும் வானியல் மாற்றங்களையும் கவனித்து நம் முன்னோர்கள் உருவாக்கிய அரிய கணிப்பு கலை. கிரகங்களின் நகர்வு, நட்சத்திரங்களின் நிலை, கால மாற்றங்கள் இவற்றை அடிப்படையாக கொண்டு மனித வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளை அவர்கள் கணித்தனர்.
ஒரு காலத்தில் ஜோதிடம் பார்த்தவர்கள் வெறும் பலன் சொல்லுபவர்கள் இல்லை; வானியலும், கணிதமும், மனித மனமும் அறிந்தவர்கள்.
ஆனால் இன்றைய காலத்தில் அதே அளவு ஆழமாக அதை உணர்ந்து கூறுபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான்.
கங்காவிற்கு இப்போது ஒரு சந்தேகம் மட்டும் மனதை தின்றது. “என் ஜாதகத்தில் அப்படி என்ன எழுதப்பட்டிருக்கிறது?ஏன் என் வாழ்க்கை மட்டும் இவ்வளவு சிக்கலாக மாறியது?”
சிவராமன் இப்படி பணத்தை செலவழிப்பதை அவள் விரும்பவில்லை.
அனைத்தையும் தனக்கே செய்தால், கெளசியின் நிலை?இந்த கேள்விக்கான பதிலை வேறொருவரிடம் தேடுவதற்குப் பதிலாக, தானே தேட முடிவு செய்தாள். அதற்காக ஜாதகம் பார்க்க கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள் கங்கா.
சொந்ததில் ஒரு வரன் வந்தது. சிவராமனுக்கு சந்தோசம்தான். ஆனால்
மாப்பிள்ளைக்கு கொஞ்சம் கடன் சீதனத்தோடு அதை சிவராமன் அடைக்க வேண்டும் என்றனர். எவ்வளவுதான் சிவராமனும் இறங்கி போவார்.நான் என் புள்ளைக்கு சீர் செய்றே,ஆனா உங்க கடன எல்லாம் என்னாலே கட்ட முடியாது என்றார்.
உடனே அவர் உம்புள்ள ஒரு ‘எச்சிலை’ அதை நீ எங்க தலைலே கட்டப் பார்க்கறே அப்போ, நாங்க ஏன் எங்க கடனை உன் தலைலே கட்டக் கூடாது என்றனர்.
கோபம் தலைக்கேறியது சிவராமனுக்கு .நான் எம்புள்ளைய உழைச்சு காப்பாத்தறே ஒரு ஆம்பளைக்கு கட்டி கொடுக்கனுனு நினைக்கறேன்.நான் ஆரம்பத்துல இருந்தே எம்புள்ளைக்கு பாட்டாளி மாப்பிள்ளையாதா தேடிட்டு இருக்கே. அவனுக்குதா உழைப்போட அருமை தெரியும்.
கால் வயிறு கஞ்சினாலும் அவன் உழைச்ச பணத்துல கொடுக்கனும். அந்த மாதிரி மாப்பிள்ளை எனக்கு போதும்.நீங்க சொன்ன வார்த்தைக்கு உங்களை வெட்டி எறிய எனக்கு ஒரு நிமிஷம் போதாது.ஆனா என் பக்கம் தப்பு இருக்கறதாலே நான் இப்போ அமைதியா போறே என வீடு வந்தார்.
மெளனமாக மனதினுள்ளே அழுது புலம்பினார் கங்காவிற்காக. அடுத்தடுத்து எவ்வளவோ மாப்பிள்ளை பார்த்து விட்டார் ஒன்றும் அமையவில்லை.
இதில் ப்ரோக்கரின் அராஜகம் அதிகமானது.தினமும் காலை டீ குடிக்கவே சிவராமன் வீடுதான் அவருக்கு.எப்படியோ தனக்கு கமிஷன் வந்தால் போதும் என எண்ணினார்.
சிவராமா முதல் புள்ளையே பாத்துட்டு இருந்தா போதுமா ரெண்டாவது புள்ளையும் கொஞ்சம் பாரு.எனக்கு தெரிஞ்ச ஒரு வரன் இருக்கு, கல்யாணம் ஆன ஒரு வாரத்துல பொண்ணு ஓடிபோச்சு,இப்போ அந்த பையனுக்கு பொண்ணு தேடிட்டு இருக்காங்க, பையன் நல்லா படிச்சு இருக்கு. உம்புள்ளக்கு ஏத்த மாதிரி இருக்கும்.
அவங்க சித்தப்பா பையனுக்கும் பொண்ணு பாக்கறாங்க.உன் சின்ன பொண்ண அவங்களுக்கு பேசி முடிச்சுகலாம்.நீ சரினு சொன்னா ஒரே முகூர்தத்துல இரண்டு கல்யாணமும் முடிச்சரலாம் என்றார். ஒரே வீட்டுல ரெண்டு கமிஷனும் அவருக்கு கிடைக்கும் அல்லவா.
மீண்டும் பெண் வேடம்,கோவில் அழைத்துச் செல்லப்பட்டாள் கங்கா. இந்த முறை சிவராமனும்,கங்காவும் மட்டுமே கோவில் சென்றனர்.
அரச மரத்தடி பிள்ளையார் கோவிலில் கங்கா நின்று கொண்டாள். சற்று தள்ளி சிவராமன் புரோக்கரிடம் பேசிக் கொண்டிருக்க மாப்பிள்ளை வீட்டார் வந்தனர்.
மாப்பிள்ளையும் பெண்ணும் தனியாக பேசட்டும் என அனைவரும் சற்று தள்ளி நின்றனர்.
நான் ஒரு சேல்ஸ் மேனேஜர்.கஸ்டமர் ஒரு ப்ராடக்ட் வாங்க வந்தாலே அவங்கள பாத்த உடனே நான் கண்டுபிடிச்சிருவே.
அவங்க பொருள் வாங்குவாங்கலா இல்ல ஜஸ்ட் டைம் பாஸானு.உங்கள பாத்ததுமே நான் கண்டுபிடிச்சிட்டே உங்களுக்கு இந்த திருமணத்துல விருப்பம் இல்லைனு.
நீங்க யாராவது லவ் பண்ணீறீங்களா?என்றான்.
எனக்கு இப்படி பெண் பார்க்க வரும் படலத்துல விருப்பமில்லைதான்.
ஒரு பெண்ணுக்கு விருப்பமில்லைனா ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். உடனே வேறு யாரையாவது லவ் பண்றானு நீங்களே ஏன் தீர்மானிச்சுகறீங்க என்றாள் இவளும் திடமாக..
ஓ அப்போ உங்களுக்கு காதல் ஏதுமில்லை. திருமணத்தில் விருப்பம்தான் போல, எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அது முடிந்தும் விட்டது.அது உங்களுக்கு தெரியும்தானே…
தெரியும்.
உங்களுடைய கதையும் எனக்கு தெரியும். எனக்கு உங்கள பிடிச்சிருக்கு ஆனா எனக்கு உங்களோட வெர்ஜினாலிட்டி டெஸ்ட் வேணும் என்றான்.
கங்காவிற்கு அதிர்ச்சி. இப்படியொரு நிலையை எண்ணிக் கூட பார்த்தது இல்லை. சற்று எட்டி சிவராமனை பார்க்க இந்த வரனாவது கங்காவிற்கு அமைந்து விடக் கூடாதா என ஏக்கமாக பார்ப்பதை போல தோன்றியது.
மனதை திடப்படுத்தி, அவன் கண்களை நேராக பார்த்து,சரி… நான் டெஸ்ட் எடுக்க ரெடி.ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்.இந்த உலகத்துல ஒரு பெண்ணோட கற்பை மட்டும் தான் பரிசோதிக்கணுமா?ஆண்களுக்கு எந்த சோதனையும் இல்லையா?
ஒரு பெண்ணை திருமணம் செய்ய முன்னாடி அவளோட உடம்பை சோதிக்க நினைக்கிற நீங்க பரிசுத்தமானவர் தானானு நான் எப்படி நம்பறது?
என்கூட நீங்களும் டெஸ்ட் எடுத்து கொடுங்க என்றாள். அது அவனுக்கு சற்று அவமானத்தை தர கங்காவை நோக்கி கத்த ஆரம்பித்தான்.
சும்மா கத்தாதீங்க. எங்க அப்பா என்னை மரியாதையா வளர்த்திருக்கார்.அந்த மரியாதையை இழக்கிற இடத்துல நான் வாழ்க்கை நடத்த மாட்டேன்.பொண்ணு பிடிக்கலன்னு சொல்லிட்டு போங்க என அவனை நிராகரித்து விட்டு வீடு வந்தாள்.
கங்காவிற்கு இந்த வரன் அமைந்தால், அவரது சகோதரனை கெளசிக்கு முடிக்கலாம் என நினைத்திருந்தார் சிவராமன்.கங்காவால் தற்போது கெளசி வாழ்வும் கேள்விக் குறியாகி விட்டது.
இவர்கள் நிலை இப்படி இருக்க,அருள் தனக்கு மகன் பிறந்திருப்பதாகவும், தன்னை மன்னித்து விடும்படியும் கங்காவிற்கு ஃபோன் செய்திருந்தான்.
கர்மா ,விதி எல்லாம் கங்காவிற்கு மட்டுமே வேலை செய்கிறது போலவே. எல்லா சூழ்ச்சி வேலையும் செய்த அருள் தன் மணவாழ்வில் சந்தோசமாக இருக்க.. ஏன் தன்னை மட்டும் இவ்வளவு சோதிக்கிறது விதி என எண்ணினாள்.
மன்னிப்புதானே இந்தா என கொடுத்து விட்டாள்.இனி என்னை எந்த நிலையிலும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றாள்.
–தலைவன் வருவான்..
error: Content is protected !!