Skip to content
Post Views: 739
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 7
சிவராமன் தன் அயராத உழைப்பு மூலம் தனது சம்பாத்தியத்தை சேமித்து வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஒவ்வொன்றாக வாங்கினார்.
இதுவரை தங்கவேலுவிடம் மாத சம்பளத்திற்கு வேலை செய்து வந்தவர் தனியாக கடை வைக்க திட்டமிட்டார்.
ஊரில் கருணாம்பிகா பைனான்ஸில் சீட்டு கட்டி வந்தார்.சீட்டு முழுவதும் முடிந்தவுடன் எடுக்க நினைத்தார். அதனால் கடைக்கு தேவையான மூலப் பொருட்கள்,கடை அட்வான்ஸ் இதெற்கெல்லாம் லட்சுமியின் மூன்று பவுன் அடமானம் வைக்கப்பட்டது.
Advertisement
செயினை அடமானம் வைக்க அவருக்கு விருப்பமில்லை,லட்சுயின் தாய்க்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் ஏதோ இந்த மூன்று பவுனுக்காகதான் நான் அவர் மகளை திருமணம் செய்து கொண்டது போல பேசுவார் என தயங்கினார்.
ஆனாலும் சீட்டு முடியும் தருவாயில் உள்ளது. எப்படியும் அடுத்த மாதம் எடுத்து விடுவோம் அப்போது செயினை திருப்பி விடலாம் என எண்ணினார்.
இவ்வளவு நாட்களாக வேலைக்கு பஸ்ஸில் பயணம் செய்து வந்தார். புதிதாக கடை அமைந்திருக்கும் இடத்தில் பஸ் வசதி இல்லாததால் ஒரு சிறிய மொபட்டை இஎம்ஐ இல் வாங்கினார்.
Advertisement
அன்றைய விலைவாசிக்கு அவர் கட்டி வந்த சீட்டு தொகையை எடுத்தால், இந்த கடன்களை அடைத்தது போக மீதத் தொகைக்கு கடைக்கு தேவையான ரீடுகளை வாங்கிக் கொள்ளலாம் எனத் திட்டமிட்டார்.
Advertisement
யானைக்கும் அடி சறுக்கும் என்பதை போல,இடி போன்ற செய்தி அவர் தலையில் வந்து இறங்கியது.
அவர் சீட்டு கட்டி வந்த கருணாம்பிகை பைனான்ஸ் குடும்பத்தோடு விஷ மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது என…
பிரசவத்திற்காக பத்து மாதம் குழந்தைய சுமந்து பிறக்கும் போது அது இறந்தால் எப்படி வலிக்குமோ அந்த மாதிரியான வலியை அனுபவித்தார் சிவராமன்.
Advertisement
யார் சொன்னது ஆண்களுக்கு பிரசவ வலி இல்லையென பெற்றவர்களின் ஆலோசனை இல்லாமல் பண வசதி இல்லாமல் தன் அயராத உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் சறுக்கி விடாதவாறு பார்த்து பார்த்து எடுத்து வைத்து வெற்றியின் விளிம்பு வரை சென்று பொத்தென கீழே விழுந்த ஒவ்வொரு ஆணும் உணர்ந்திருப்பான் பிரசவ வலியை…
போலிஸ் கேஸ் எல்லாம் எடுத்து விசாரித்தனர்.அந்த பைனான்ஸில் சீட்டு கட்டி வந்த எவருக்குமே தொகை திருப்பி தரப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.
பின் ஊரில் உள்ள பிரபல பணமுதலைகளும்,அரசியல் வட்டங்களும் கேசை ஒன்றுமில்லாம் செய்து விட்டது.
லட்சுமியின் மூன்று பவுன் நகை,வண்டி எல்லாம் போய்விட்டது.
“நாங்க வெயில்லே காட்டுலேயும் மேட்டுலேயும் பாடுபட்டு மூனு பவுனு போட்டோம் அதை வித்து தின்னுட்டே…
சும்மா வித்து தின்னுருந்தா கூட பரவாயில்லை..
இரண்டு பொட்ட புள்ளைகளை பெத்து வெச்சிட்டு குடிச்சு அழிச்சுட்டே…
உனக்கு போய் எம்புள்ளைய கல்யாண ம் பண்ணி கொடுத்த பாரு என்னைய நானே அடிச்சுகனு” என்று தலையில் அடித்து அழுதார் பழனியம்மாள்.
கங்காவிற்கு அப்பாவின் கவலை தோய்ந்த முகமும், அம்மத்தாவின் ஆக்ரோசமான முகமும் ஒருவித பயத்தை தந்தது. அம்மா தங்கையை கையில் வைத்திருக்க அப்பாவின் காலை கட்டிக் கொண்டு நின்றாள்.
ராதாவும் பதிலுக்கு எங்க அம்மா போட்ட மூனு பவுன் செயின் திருப்பி கொடுங்க உங்களுக்கு வேனுனா லட்சுமிக்கு புதுசா எடுத்து போடுங்க என சவால் விட்டாள்.
கணவருக்கு மரியாதை இல்லாத இடத்தில் இதற்குமேலும் நிற்க பிடிக்காமல் மூவரையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார் லட்சுமி.
” கவலை படாத இந்த காசு, நகை, வண்டி எல்லா போனா என்ன இந்த மாறி ஆயிரம் சம்பாதிச்சு நீ எனக்கு தருவே,எங்க அம்மாக்கும்,ராதாவுக்கு உன்ன பத்தி என்ன தெரியும்?
கெளசி வயித்துல இருக்குபோது எனக்கு மஞ்சள் காமாலை வந்த அப்பவே நான் அவங்கள தெரிஞ்சிகிட்ட.. அதுனால தான் கங்காவை கூட அங்க விட வேண்டானு உன்னையவே பாத்துக்க சொன்னே”..
“இல்ல லட்சுமி அவங்க பேசறது சரிதான்.என்ன இருந்தாலும் அவங்க போட்ட நகைல நான் கை வெச்சுருக்க கூடாது.நான் எப்படியாச்சு அந்த நகையை திருப்பி கொடுத்துருவே… இனியும் நான் அந்த கடைய வெச்சா கடனுக்கு மேலே கடன்தா ஆகும், ரீடு எல்லாம் பாதி காசுக்குதான் எடுத்து இருக்கேன்.மீதி இந்த சீட்டு பணத்தை நம்பிதான் இருந்தேன். அது இப்படி ஆகுனு நினைக்கலே.
மளிகை பொருள் மாறி இல்லை ரீடு அந்த ரக துணி நெய்யும் போது மட்டுதா ரீடு வாங்குவாங்க.. ஒரு தடவ ரீடு வாங்குனா திரும்ப புது ரீடு வாங்க ஆறுமாசம்,ஒரு வருஷம் கூட ஆகும். இப்ப இருக்கற நிலைமைலே நான் இன்னமும் இதை வெச்சா நட்டம்தான்.
கவர்மென்ட்டும் திடீர்னு நூல் விலை, கரண்ட் பில் ஏத்துவாங்க,அப்ப ஸ்ட்ரைக் வரும் அந்த மாதிரி இக்கட்டான நிலை வந்தா ரீடு எடுத்த இடத்தில் பணத்தை கொடுக்க முடியாம போய்ரும், என்ன பண்ண போறேனு தெரிலே” என்றார்.
“நீ எதே நினைச்சும் கவலை படாதே நீ கும்பிடறே முருகன் உனக்கு ஒரு நல்லவழியை காட்டுவான். எதை பத்தியும் யோசிக்காமா சாப்பிட்டு தூங்கு” – லட்சுமி.
எவ்வளவு முயன்றும் உணவு உள்ளே போக வில்லை.கண்களும் தூக்கத்தை ஏற்க தயாராக இல்லை.
தான் மட்டும் என்றால் பரவா இல்லை. தற்போது தன்னை நம்பி மூன்று ஜீவன்கள் வேறு உள்ளது. எப்படியாவது இந்த நிலையை கடந்து வர வேண்டும் என பல சிந்தனைகள் சிவராமன் உள்ளத்தில்..
காலை விடிந்தது..
இன்று கங்காவை பள்ளியில் சேர்க்க வேண்டும்.தேவையான ஆவணங்களை எடுத்துக் கொண்டு கங்காவை பள்ளி அழைத்துச் சென்றார்.
ஊரில் மொத்தமே மூன்று பள்ளிகள்தான்.
அதில் கிருஸ்தவ பள்ளியை மகள்களுக்காக தேர்வு செய்திருந்தார் சிவராமன்.
ஊரில் கங்கா வயதுடைய மொத்த கூட்டமும் பள்ளியில் நீண்ட வரிசையில் நின்றிருந்தது.இவர்களும் வரிசையில் நிற்க,”அப்பா கால் வலிக்குதுப்பா”இன்னும் கொஞ்ச நேரம் சாமி ஸ்கூல்ல சேந்துட்டு அப்பறோம் வீட்டுக்கு போய்ரலாம் என மகளை தூக்கிக் கொண்டார்.
பக்கத்தில் வந்ததும் உணவு இடைவேளை, கங்கா கீழே இறங்கி அருகில் இருந்த குழந்தைகளுடன் ரைம்ஸ் சொல்லி விளையாடிக் கொண்டிருந்தாள்.
பக்கத்து அறையில் உணவருந்திக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர் அல்போன்ஸாவின் கவனம் கங்காவின் பக்கம் திரும்பியது.
உண்டு முடித்தபின், பாப்பா இங்க வா உன் பேரு என்ன?
கங்கா
அழகா ரைம்ஸ் பாடறே வேறு ரைம்ஸ் பாடு
ஒன்றுக்கு இரண்டாக பாடி முடித்தாள்.
வேறு என்னவெல்லா உனக்கு தெரியும்?
“எனக்கு எல்லாமே தெரியுமே.. எங்க கலா சித்தி எல்லாமே சொல்லி கொடுத்து இருக்காங்க” என்றாள்.
ஒரு சிலேடையும் பென்சிலையும் கொடுத்து ஒன்று, இரண்டு, உயிர் எழுத்து, மெய் எழுத்து எழுத சொல்ல அனைத்தையும் எழுதி முடித்தாள்.
அதோடு விடவில்லை எஸ்.கங்கா,ஏ.சிவராமன் என தனது பெயரையும் தந்தை பெயரையும் எழுதி வியக்க வைக்க, அவளது வலது கையால் இடது காதை தொட வைத்தனர்.
பின் சிவராமனை அழைத்து,கங்காவிற்கு எல்லாமே எழுத தெரிகிறது.ஏன் கேஜியில் சேர்க்க வேண்டும்? உங்கள் மகளை நேரே ஒன்றாம் வகுப்பில் சேர்த்துக் கொள்கிறோம் என தலைமை ஆசிரியர் சொல்ல, சிவராமனுக்கு சந்தோசம்தான் அவர் சேர்த்த வந்தது,கேஜி வகுப்பிற்குதான்.
ஓய்வு நேரத்தில் கலா எழுத படிக்க சொல்லி கொடுப்பது வழக்கம். அது இந்த அளவிற்கு உதவும் எனவும் , கங்கா அதில் தன்னை இந்த அளவிற்கு மெருகேற்றி கொள்வாள் எனவும் அவருக்கு தற்போதுதான் தெரிந்தது.
மகிழ்ச்சியாக ஒன்றாம் வகுப்பில் சேர்த்துவிட்டு மகளுடன் வீடு திரும்பினார்.திக்குதெரியாத காட்டில் ஒரு கும்மிருட்டில் வழி தெரியாமல் நடந்தவருக்கு கங்காவின் படிப்பு ஒரு தீக்குச்சி வெளிச்சத்தை தந்தது.
வரும் வழியில் சிவராமனின் மாமா மணி “சிவராமா அந்த கருணாம்பிகா பைனான்ஸ் காரன் கிட்ட நீயும் தானே சீட்டு கட்டிட்டு வந்தே, உனக்காச்சும் ஏதாவது பணம் தந்தாங்களா?”
இல்ல மாமா எதுவும் தரலே,உங்க பணம் என்னாச்சு?
“பணம் எல்லா வராது சிவராமா அதுதா நான் மகாராஷ்டிராலே நிலத்தடி போர் போடரே வேலைக்கு போலானு இருக்கறே”,
அது ரொம்ப தூரம்..மொழி தெரியாத மாநிலத்துல போய் என்ன பண்ண போறீங்க…
எல்லா யோசிச்சுதான் இந்த முடிவே எடுத்தே, சிவராமா “நம்ம சீட்டு கட்டுன காசை திரும்ப வாங்கனுனா,நம்ம ஊருலே வேலை செஞ்சு வாங்க சம்பளத்துக்கு குறைஞ்சது இன்னும் அஞ்சு வருஷமாது ஆகும். அங்க ஒருநாள் கூலி ஐந்நூறு ரூபாய் காசை மிச்சம் பண்ணி கொஞ்சம் சேர்த்து வைக்கலாம்”என்றார்.
சிவராமனுக்கு ஒரு வழியை கடவுள் காட்டிவிட்டதாக தோன்றியது.
“மாமா நானும் உங்க கூட வரே ஏதாச்சு வேலை இருந்தா என்னையும் கூட்டிட்டு போங்க என்றார்.
வேலை இருக்கு சிவராமா ஆனா கண்டிப்பா ஒரு வருஷம் வேலை செய்யனும்,இடையிலே நிக்க கூடாது. அதுமட்டுமல்ல ஒரு வருஷம் முழுசா அங்கதான் இருக்கனும் வீட்டே பார்த்துட்டு வரேனு ஒரு நாள், இரண்டு நாள் லீவு கூட தரே மாட்டாங்க.. உனக்கு இதெல்லா சரிபட்டு வருமா?யோசிச்சு சொல்லு..
இதுலே யோசிக்க என்ன மாமா இருக்கு .. மொத்த சேமிப்பும் போச்சு இனி சொந்த ஊருலே இருந்து இங்க கிடைக்கற சம்பாத்தியத்துல குடும்பத்தை ஒட்டறது கஷ்டம்.. நானும் வரே என்று உறுதியாக நின்றார்.
கங்காவை வீட்டில் விட்டுவிட்டு கடை திறப்புக்காக வாங்கிய ரீடுகளை பழைய முதலாளியான தங்க வேலுவிடம் விற்று வந்த பணத்தை , ரீடுகளை கொள்முதல் செய்த கடனை அடைத்தார்.
மீதமிருந்த பணத்தில் வீட்டிற்கு ஒரு மாதம் தேவையான அரிசி, பருப்புகளை வாங்கி கொடுத்து விட்டு, லட்சுமியின் கையில் ஐந்நூறு செலவுக்கு தந்து தான் மகாராஷ்டிரா செல்கிறேன் என்றார்.
அழுகை மட்டுமே லட்சுமியின் பதில்..
நா எப்புடி உன்னை பிரிஞ்சு இருப்பே என தேம்பினார்.
“அழாதே புள்ளே நம்ம கஷ்டம் எல்லாம் கொஞ்ச நாள்தா ஒரு வருஷம் தான் நா திரும்பி வந்துருவே..
கங்காவை பத்தி எந்த கவலையும் இல்ல கங்காக்கு அதோட படிப்பு துணை நிக்கும்..
கெளசியை கொஞ்ச நாள் பாத்துட்டா போதும் அப்பறோம் அதுவும் கங்கா மாறி நல்லா வளர்ந்துரும்.
நீ நேரத்துக்கு சாப்பிட்டுக்கோ,என்னயவே நினைச்சுட்டு அழுதுட்டு இருக்காதே..
ஒரே வருஷம் கண்ண மூடி முழிக்கறதுக்குள்ள போயிரும்,நான் வந்துருவே என சமாதானம் கூறினார்.
விடிந்தால் பட்டாபிஷேகம் ஆனால் கைகேயியின் சூழ்ச்சியால் பதினான்கு வருடம் காடாள சென்றார் ராமபிரான்.
அதுபோலவே சிவராமனும் கஷ்டபட்டு தினக்கூலிக்கு உழைத்து சிறுக சிறுக பணம் சேர்த்து சொந்த கடை வைக்கும் நேரத்தில் விதியின் சூழ்ச்சியால் வனவாசம் கிளம்பிவிட்டார்.
–தலைவன் வருவான்..
error: Content is protected !!