முசோரி லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக்கழகத்தின் அந்தப் பனிக காலை, ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைப் போலப் பொலிவுடன் இருந்தது. பயிற்சியாளர்கள் ஆவலோடு காத்திருக்கும் அந்த வாரம் வந்தேவிட்டது. அந்தப் புகழ்பெற்ற ‘ஹிமாலயன் டிரெக்கிங்’ பயிற்சி. இமாலய மலையேற்றம்!
Advertisement
நான்கு பேருந்துகள், கனத்த இதயங்களுடனும், அதைவிடக் கனத்த ரக்சாக் பைகளுடனும் காத்திருந்த 88 பயிற்சியாளர்களைச் சுமக்கத் தயாராக இருந்தன.
“குழு ஒன்று ….ராம்….
“குழு மூன்று …மீரா, வர்மன், ரஞ்சனா,அர்ஜுன்…
Advertisement
இந்த அறிவிப்பு மீராவின் காதுகளில் ஒரு மெல்லிய மின்னலாகத் தைத்தது. கடந்த சில வாரங்களாக அவனது கூர்மையான பார்வைகளிலிருந்து தப்பிக்க அவள் கட்டிய கோட்டைகள், விலகி நிற்க அவள் எடுத்த முயற்சிகள் அனைத்தும், இந்த 15,000 அடி உயரப் பயணத்தில் அர்த்தமற்றதாகப் போயின.
Advertisement
ஒவ்வொரு ஆண்டும் பயிற்சியாளர்கள் பல்வேறு கடினமான பாதைகளைத் தேர்ந்தெடுக்கலாம்…கேதார்நாத், ஹர் கி துன், அல்லது குவாரி பாஸ். ஆனால், குழு மூன்று தேர்ந்தெடுத்தது இமயமலையின் மிகவும் மர்மமான மற்றும் சவாலான பாதையான ‘ரூப்குண்ட்’ .
கத்கோடாமிலிருந்து லோஹாஜுங் நோக்கிய அந்த 13 மணிநேர ஜீப் பயணம், இமயமலையின் வளைவுகளில் ஒரு நடனத்தைப் போல அமைந்தது. மீரா ஏறும்பொழுதே கூடவே ஏறியிருந்தான் வர்மன்.. ரஞ்சனாவை முந்திக்கொண்டு அவள் பக்கத்திலேயே வந்து அமர்ந்தும் விட்டான். மீரா தன் முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டாள். அவளது இதயம் வர்மனின் அருகாமையினால் ஏற்கெனவே ஒரு ரயிலைப் போலத் தண்டவாளத்தில் ஓடிக்கொண்டிருந்தது… அர்ஜுனின் அலப்பறைகள் மெல்லத் துவங்கின.
“டேய் வர்மன், இந்த இமயமலைக்கு யாராவது கொஞ்சம் ‘ரோடு ரோலர்’ வச்சு மட்டம் பண்ணக் கூடாதா? வயிறு வாய் வரைக்கும் வருதுடா! ரஞ்சனா, தயவுசெஞ்சு அந்த எக்ஸ்ட்ரா மிக்ஸர் பாக்கெட்டை எடு… பசியிலயாவது இந்த வாந்தியை மறக்க முடியுதான்னு பார்ப்போம்,”என்று அர்ஜுன் கையை நீட்டினான்.
Advertisement
அர்ஜுன், அகாடமில நமக்குச் சொல்லித் தந்தது ‘எண்ட்யூரன்ஸ்’ . பொறுமை தான் ஒரு ஆபீசருக்கு அழகு. அதுவும் இல்லாம, நீ இப்போ வாந்தி எடுத்தா அதுக்கும் நான் ஒரு ஃபைன் போட வேண்டி வரும்,” என்று வர்மன் சீரியஸாகச்சொல்ல, மீரா தன்னையும் அறியாமல் மெல்லச் சிரித்துவிட்டாள்.
அவளது அந்தச் சிரிப்பைக் கண்ணாடியில் பார்த்த வர்மன், “பார்த்தியா அர்ஜுன், உன் கஷ்டம் மீராவுக்கு எவ்வளவு சிரிப்பா இருக்குன்னு?” என்றான் குறும்பாக.
அந்தப் பயணத்தின் தொடக்கமே ஒரு கலாட்டாவாக அமைந்திருக்க, மீராவின் கண்கள் எதிர்பாராமல் வர்மனின் கண்களைச் சந்தித்தன. அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த ஒரு வினாடிப் பார்வையில், ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை அவன் கடந்துவிட்டதைப் போல மீரா உணர்ந்தாள். அவள் சட்டென்று மீண்டும் ஜன்னல் வழியே வெளியே தெரிந்த ஆழமான பள்ளத்தாக்குகளைப் பார்க்கத் தொடங்கினாள்.
முதல் நாள் பயணம் முடிந்து டிட்னா கிராமத்தில் உள்ள ஒரு சிறிய மலைக்குடிசையில் அவர்கள் தங்கியிருந்தனர். கிராமத்தின் அந்த இரவில், நட்சத்திரங்கள் இமயமலையின் முகடுகளுக்குச் சூட்டிய வைரக் கிரீடங்களாக ஜொலித்தன.
“வர்மன், இந்தப் பையில 12 கிலோ வெயிட் இருக்குன்னு அகாடமில சொன்னாங்க. ஆனா இப்போ எனக்கு இது 120 கிலோ மாதிரித் தெரியுது,” என்று அர்ஜுன் தன் முதுகைத் தேய்த்துக்கொண்டே வந்தான்.
“அது உன் உடல் எடை இல்ல அர்ஜுன், உன் மனசுல இருக்கிற பயத்தோட எடை,” என்றான் வர்மன், மீராவைப் பார்த்தபடி.
“மனசுல பயம் இருக்கோ இல்லையோ, வயித்துல பசி இருக்கு! ரஞ்சனா, அந்த மேகி பாக்கெட் எங்க?” என்று அர்ஜுன் சமையல் அறையை நோக்கி ஓட, ரஞ்சனா பின்னாடியே ஓடினாள். “டேய் அர்ஜுன், அது காமன் ஸ்டாக் தனியா தின்னாத!”
அர்ஜுனின் மேகி சண்டையும், ரஞ்சனாவின் அதட்டலும் கேட்டுக் கொண்டிருக்க, மௌனத்தில் மீராவும் வர்மனும் ஒரு தனித் தீவில் நின்றிருந்தனர்.
“பாத்தியா மீரா? அவங்க ரெண்டு பேரும் எவ்வளவு சாதாரண விஷயத்துலயும் சந்தோஷத்தைத் தேடிக்கிறாங்க… நாம மட்டும் ஏன் இமயமலையையே தலையில சுமந்துட்டு இருக்கணும்?” என்று வர்மன் கேட்க, மீராவின் புன்னகை மெல்ல மறைந்தது.
“எல்லாரோட சுமையும் ஒண்ணா இருக்காது வர்மன். சிலருக்கு மேகி பாக்கெட் பாரமா இருக்கும், சிலருக்கு அவங்க ஞாபகங்களே பாரமாக இருக்கும். நான் கீழே போறேன், தூக்கம் வருது,” என்று கூறிவிட்டு அவள் விறுவிறுவெனப்படிக்கட்டில் இறங்கினாள்.
வர்மன் அங்கேயே நின்றான். அவள் சென்ற திசையைப் பார்த்தபடி, “உன் ஞாபகங்களோட பாரத்தைக் குறைக்க நான் ரெடியா இருக்கேன் மீரா… ஆனா நீ அந்தப் பையை என்கிட்டத் தரணுமே,” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.
குளிரும், நட்சத்திரங்களும், சொல்லப்படாத காதலும் அந்த டிட்னா கிராமத்தின் இரவை இன்னும் மர்மமாக்கின.
அடுத்த நாள் பனிப்பாதை அவர்களைக் காத்துக்கொண்டிருந்தது
படார் நச்சௌனி நோக்கி நடை. இங்கிருந்து பனி ஆரம்பம். ஐம்பது வருடங்களுக்கு முந்தைய ஓக் மரங்களின் காடுகள் மெல்ல மறைந்து, பரந்த ஆல்பைன் புல்வெளிகள் விரிந்தன. அர்ஜுனின் புலம்பல்கள் ஆச்சரியமாக மாறின. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற அந்தப் பேரழகு அவர்களை மெய்மறக்கச் செய்தது.
தூரே த்ரிசூல் சிகரம் 7,120 மீட்டர் உயரத்தில் வெள்ளிப் பிரகாசத்துடன் ஜொலித்தது.
“ஆஹா!” என்று கத்தினாள் ரஞ்சனா, தன் கேமராவைக் குறிவைத்தபடி. “இது சொர்க்கமா இருக்கணும்! அர்ஜுன், ஒரு ஐ.எஃப்.எஸ் அதிகாரியா நான் இந்தக் காட்டைப் பாதுகாக்கப் போறேன். ஆனா இந்த அழகைப் பார்த்தா, எனக்கே இதைக் கொள்ளையடிக்கணும் போல இருக்கே!”
அர்ஜுன் தன் ரக்சாக் பையைச் சரிசெய்தபடி, “கொள்ளையடி, ஆனா ‘கிப்ட் டேக்ஸ்’ மட்டும் ஒழுங்கா கட்டிடு ரஞ்சனா. இந்த உயரத்துல ஆக்சிஜன் கம்மியா இருக்குன்னு பார்த்தா, என் பசி மட்டும் ‘ஜிஎஸ்டி’ மாதிரி ஏறிக்கிட்டேபோகுது,” என்று மூச்சிரைக்கப் பதிலளித்தான்.
அவர்களுக்குச் சற்றுப் பின்னால், ஒரு நிதானமான மௌனத்துடன் வர்மனும் மீராவும் நடந்து கொண்டிருந்தனர். வர்மன் தன் பார்வையைத் திருப்பாமலேயே பேசத் தொடங்கினான்.
“இந்த இடம் உன்னை மாதிரியே இருக்கு மீரா,” என்றான் வர்மன்.
“இந்த ஆக்சிஜன் கம்மியா இருக்குற இடத்துலயும் வாய் மட்டும் ஃப்ளர்ட்டிங் வேலை நல்லா செய்யுது,”
அவளது நடை வேகம் சற்று குறைந்தது. வர்மன் அவளுக்கு இணையாக நடக்கத் தொடங்கினான். அந்தப் பரந்த புல்வெளியில், அவர்கள் இருவரின் நிழல்களும் ஒன்றையொன்று உரசிச் செல்வது போலத் தெரிந்தன.
நான்காம் நாள் விடியல் ஒரு எச்சரிக்கையுடனேயே பிறந்தது. கலு விநாயக் நோக்கிய அந்த ஏற்றம், மரணத்திற்கும் வாழ்விற்கும் இடையிலான ஒரு மெல்லிய கோடாகத் தெரிந்தது. சுற்றிலும் வெள்ளை நிறப் போர்வை போர்த்திய மலைகள். காலடியில் பனி நசுங்கும் சத்தம் ஒரு பயங்கரமான இசையைப் போலக் கேட்டது.
“ஜாக்கிரதை!” வழிகாட்டி தேவ் சிங் குரல் காற்றில்அதிர்ந்தது. “மென்மையான பனி பாதங்களைக் கட்டிக்கொள்ளும், ஆனால் இந்தக் கடினமான பனி வழுக்கினால் ஐநூறு மீட்டர் கீழே அதல பாதாளம் தான்!”
குழு வரிசையாகச் சென்றது. வர்மன் வழிகாட்ட, அர்ஜுன் சோர்வுடன் பின்தொடர, மீராவும் ரஞ்சனாவும் விழிப்புடன் வந்தனர். அர்ஜுனின் சுவாசம் சீரற்று இருந்தது, ஆனால் அவன் அதை மறைக்க முயன்றான். ஒரு குறுகிய, சரிவான திருப்பத்தில் அந்தப் பயங்கரம் நிகழ்ந்தது.
“ஆஆஆ!”
அர்ஜுனின் கால் தப்பியது. பனியின் மீது சறுக்கியவன் விளிம்பிற்கு அப்பால் வீழ்ந்தான். அதிர்ஷ்டவசமாக, ஒரு கூர்மையான பாறையின் விளிம்பில் அவனது இடது கை மட்டும் சிக்கிக்கொண்டது. அவனது கால்கள் ஆயிரம் அடி பள்ளத்தாக்கின் வெற்றிடத்தில் அலைபாய்ந்தன.
“அர்ஜுன்!” வர்மன் கத்தினான்.
ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், வர்மன் தன் ரக்சாக்கில் இருந்த மலையேற்றக் கயிற்றை உருவினான். “மீரா, இதைப் பிடி!”என்று கயிற்றின் ஒரு முனையை அவளிடம் தந்துவிட்டு, மறுமுனையைத் தன் இடுப்பில் மின்னல் வேகத்தில் முடிச்சிட்டான். அவன் பனியில் குப்புறப் படுத்து, மெல்ல விளிம்பிற்கு கீழே இறங்கினான்.
“வர்மன், ரிஸ்க் எடுக்காதே!” என்று மீரா அலறினாள்.
“வேற வழியில்லை மீரா, அவன் பிடி நழுவுது!” வர்மன்கீழே தொங்கியபடி அர்ஜுனின் கையைப் பற்ற முயன்றான். ஆனால் பனிப்பொழிவால் பாறை வழுக்கியது.வர்மனாலும் அர்ஜுனை மட்டும் தனியாக மேலே இழுக்க முடியவில்லை.
மீரா தன் புத்தியைக் கூர்மையாக்கினாள்.”வர்மன், நில்! உங்க ரெண்டு பேர் எடையையும் எங்களால மட்டும் இழுக்க முடியாது. நாங்களும் சரிஞ்சுடுவோம்!” என்று கத்தியவள், சட்டென்று ரஞ்சனாவைப் பார்த்தாள்.”ரஞ்சனா, நீ கீழே போ! நாங்க உன்னைத் தாங்குறோம். நீ அர்ஜுனைப் பிடிச்சா, வர்மனுக்கு லோடு குறையும்!”
“சரி!” ரஞ்சனா சற்றும் யோசிக்கவில்லை. அவளது இடுப்பில் மற்றொரு கயிறு கட்டப்பட்டது. மீராவும் வர்மனும் கயிற்றை இறுக்கிப் பிடிக்க, ரஞ்சனா பக்கவாட்டில் இருந்த ஒரு சரிவின் வழியாகக் கீழே இறங்கினாள்.
அர்ஜுன் மரண பயத்தில் இருந்தான். “விட்றாதீங்க…ப்ளீஸ் விட்றாதீங்க!” அவன் குரல் நடுங்கியது.
“அர்ஜுன்… என்னைப்பார்!!” ரஞ்சனா காற்றிலேயே ஊசலாடி வந்து அர்ஜுனின் வலது கையைப் பற்றினாள். இப்போது வர்மன் ஒரு கையையும், ரஞ்சனா ஒரு கையையும் பிடித்துக்கொள்ள, அர்ஜுன் ஒரு மனித ஊஞ்சலாக மாறினான்.
“இப்போ இழுங்க!” வர்மன் கத்தினான்.
மீரா தன் முழு பலத்தையும் கைகளில் குவித்தாள்.வர்மன் தன் கால்களைப் பாறையில் ஊன்றித் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, மீராவுடன் இணைந்து கயிற்றை இழுக்கத் தொடங்கினான்.
தோளோடு தோள் இடித்துக்கொள்ள, மீராவும் வர்மனும் மிக நெருக்கமாக நின்றனர். வர்மனின் மூச்சுக் காற்று மீராவின் கன்னத்தில் பட்டது.அந்த உறைபனிக் குளிரிலும், அவர்களுக்குள் ஒரு வெப்பம் பரவியது. இருவரின் தசைகளும் முறுக்கேறின, கயிறு அவர்கள் கைகளை அறுத்தது, ஆனால் அவர்கள் பிடியைத் தளர்த்தவில்லை.
“இன்னும் கொஞ்சம்… ரஞ்சனா, அர்ஜுன் கம் ஆன் !” மீரா கத்தினாள்.
கடைசி ஒரு இழுப்பு! வர்மனும் மீராவும் ஒரே நேரத்தில் தங்கள் முழு சக்தியையும் பிரயோகித்தனர். அர்ஜுன் முதலில் விளிம்பைத் தொட்டான், அவனைத் தொடர்ந்து ரஞ்சனா மேலே வந்தாள்.
பனிச்சரிவின் விளிம்பில் மரணத்தைத் தொட்டுவிட்டு வந்த அர்ஜுன், இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. ரஞ்சனா அவனை மெல்லத் தூக்கி அமரவைத்தாள்.
“அர்ஜுன், இங்க பாரு…. மூச்சை நல்லா உள்ள இழுத்து விடு,”என்றாள் ரஞ்சனா, அவனது நடுங்கும் தோள்களைத் தேய்த்தபடி.
“ரஞ்சனா… நான் இன்னும் அந்தப் பள்ளத்தையே பார்க்குற மாதிரி இருக்குடி,” என்றான் அர்ஜுன் தழுதழுத்த குரலில்.
“அதெல்லாம் முடிஞ்சு போச்சு. வா, கொஞ்சம் தூரம் தள்ளி அந்தப் பாறைல போய் உட்காரலாம். அங்க காத்து கம்மியா இருக்கும். இவங்க ரெண்டு பேரும் வரட்டும்,”என்று ரஞ்சனா அர்ஜுனை மெல்லத் தாங்கிப்பிடித்து அழைத்துச் சென்றாள்.
அவர்கள் சற்றுத் தள்ளிச் சென்றதும், அந்தப்பனிப் பரப்பில் மீராவும் வர்மனும் மட்டும் தனியாகக் கிடந்தனர். இருவருமே மூச்சிரைக்க வானத்தைப் பார்த்தபடி படுத்திருந்தனர். இதயத் துடிப்பு காதுகளில் இடியாக ஒலித்தது.
“மீரா…” வர்மன் மௌனத்தைக் கலைத்தான். அவன் குரலில் ஒரு நடுக்கம் இருந்தது, ஆனால் அது குளிரினால் அல்ல.
“உம்…” மீரா கண்களை மூடிக் கொண்டாள். அவளது கைகள் இன்னும் அந்த இறுக்கமான கயிற்றின் தழும்புடன் சிவந்து கிடந்தன.
“இப்போ நான் மட்டும் அர்ஜுனோட சேர்ந்து கீழே விழுந்திருந்தா… நீ என்ன பண்ணிருப்ப?”
மீரா சட்டென்று கண்களைத் திறந்து அவனைத் திரும்பிப் பார்த்தாள். “என்ன பேச்சு இது வர்மன்? லூசு மாதிரி பேசாதீங்க.”
“நிஜமா கேக்குறேன் மீரா. எங்களை இழுக்க முயற்சி பண்ணும்போது உன் கைகள் நடுங்குறதை நான் கவனிச்சேன். அது வெறும் எடையால வந்த நடுக்கம் இல்லை,” என்றான் வர்மன், மெல்லத் தலைசாய்த்து அவளது விழிகளைப் பார்த்தபடி.
“உன் பிடியில இருந்த வேகம், நீ என்னைக் காப்பாத்தணும்னு நினைக்கிறதை விட, நான் உன்னை விட்டுப் போயிடக்கூடாதுன்னு நினைக்கிற மாதிரி இருந்தது,”என்றான் வர்மன் உறுதியான குரலில்.
என்று வர்மன் சொல்லும்போது, அவன் குரல் ஒரு ரகசியத்தைப் பகிரும் மென்மையுடன் இருந்தது
வர்மன் மெல்லத் தன் உடலைச் சாய்த்து,மீராவை நோக்கி இன்னும் நெருங்கினான். அவளது சிவந்த கைகளையும், குளிரில் நடுங்கும் உதடுகளையும் பார்த்தான்.
“என்கிட்ட இருந்து உன்னை நீயே காப்பாத்திக்கப் பார்க்குற… ஆனா உன்கிட்ட இருந்து என்னை யாராலயும் காப்பாத்த முடியாது போலயே மீரா,” என்று வர்மன் சொல்ல, அவனது கண்கள் மீராவின் கண்களை ஆழமாக ஊடுருவின.
மீராவின் இதயத் துடிப்பு இப்போது அவளுக்கே வெளியே கேட்கும் அளவுக்கு வேகம் எடுத்தது. அவள் ஏதோ சொல்லத் துவங்க, வர்மன் சட்டென்று தன் கரங்களை நீட்டி அவளை வளைத்துப் பற்றினான். அந்தப் பனிச் சரிவில், உறைந்த இமயமலையின் சாட்சியாக, அவன் அவளை இறுக்கமாகக் அணைத்துக் கொண்டான்.
வர்மனின் வலுவான கரங்கள் அவளது முதுகைச்சுற்றி வளைக்க, மீரா அவனது அகன்ற மார்போடு மிக நெருக்கமாக …
இது வெறும் ஆறுதலுக்கான அணைப்பு அல்ல.
மீரா முதலில் திடுக்கிட்டாள். அவளது உடல் ஒரு நொடி விறைத்தது. ஆனால் அடுத்த வினாடி, வர்மனின் உடலின் வெப்பமும், அவனது அணைப்பில் இருந்த அந்த அபூர்வமான பாதுகாப்பும் அவளது அத்தனை பிடிவாதங்களையும் உருக்கின. அவளது கைகள் மெல்ல உயர்ந்து, வர்மனின் ஜாக்கெட்டை இறுக்கமாகப் பற்றிக்கொண்டன. வெளியே வீசும் பனிப்புயல் அவளுக்கு ஒரு மெல்லிசையாகத் தோன்றியது. மீரா தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். அவனது நெஞ்சில் முகம் புதைத்தபோது, வர்மனின் வாசம் அவளை மொத்தமாக ஆக்கிரமித்தது. வர்மன் அவளை இன்னும் கொஞ்சம் தன்னோடு பிணைத்துக்கொள்ள, மீரா அவனது அணைப்பிற்குள் தன்னை முழுவதுமாகத் தொலைத்திருந்தாள். அந்த ஒரு அணைப்பு, மீரா கட்டி வைத்திருந்த பல வருடச் சுவர்களைத் தரைமட்டமாக்கியிருந்தது
சட்டென்று ஒரு நினைவு, ஒரு நிழல் அவளது ஆழ்மனதிலிருந்து எட்டிப்பார்த்தது!
அடுத்த நொடி, மீரா மின்னல் வேகத்தில் அவனைத் தள்ளிவிட்டுத் தள்ளி நின்றாள்.
“வேண்டாம் வர்மன்! இதை இதோட நிறுத்திக்கோங்க,” என்று அவனது கண்களைப் பார்க்காமல் கத்தினாள்.
வர்மன் சற்று அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.”மீரா… நான்…”
“நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா இது நிஜம் கிடையாது. இது ஒரு அட்ரினலின் ரஷ், நாம சாகுறதுல இருந்து தப்பிச்சோம், அந்த வேகத்துல நீங்க ஏதோ ஒரு உணர்ச்சி வசப்பட்டுட்டீங்க. நானும் தான். ஆனா இதுக்குமேல ஒரு அடி கூட முன்னே வராதீங்க,”
என்று மூச்சிரைக்கச் சொன்னாள்.
“மீரா, இது வெறும் உணர்ச்சி வேகம் இல்லன்னு உனக்கே தெரியும். என் கண்களைப் பார்த்துப் பேசு,” என்றான் வர்மன், அவளருகே நெருங்க முயன்று.
மீரா இரண்டு அடி பின்வாங்கி, தன் ரக்சாக்பையை வெடுக்கென்று தூக்கிக் கொண்டாள்.
“இல்லை! இது தப்பு.. ஒரு டீம் மெம்பரா மட்டும் என்னைப் பாருங்க. அதுக்கு மேல ஒரு இன்ச் கூடக் கிட்ட வராதீங்க.”
அவளது குரலில் இருந்த அந்த உறுதியும், அதே சமயம் தெரிந்த நடுக்கமும் வர்மனுக்கு உண்மையைச் சொல்லியது. அவள் அவனை விரும்புகிறாள், ஆனால் ஏதோ ஒரு பயம் அவளைப் பின்னுக்கு இழுக்கிறது!
தூரத்தில் ரஞ்சனாவும் அர்ஜுனும் இவர்களை நோக்கி வருவதைப் பார்த்த மீரா, “அர்ஜுன், ரஞ்சனா! வாங்க சீக்கிரம் போவோம். லேட் ஆகுது,” என்று கத்தியபடி, வர்மன் பதில் சொல்லக் கூட இடைவெளி கொடுக்காமல் விறுவிறுவெனப் பனிப்பாதையில் வேகமெடுத்தாள்.
முன்னால் வேகமாகச் சென்று கொண்டிருந்த மீராவின் இதயம் இன்னும் படபடவெனத் துடித்தது. வர்மனின் அணைப்பின் சூடு இன்னும் அவளது சட்டையில் ஒட்டியிருப்பதைப் போலத் தோன்றியது.
“இல்லை மீரா… நீ இங்க வந்தது ஜெயிக்க மட்டும்தான், தோற்க இல்லை,”
என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள். ஆனால், அவள் எவ்வளவு வேகமாக ஓடினாலும், வர்மனின் அந்தத் தீர்க்கமான பார்வை அவளைப் பின்தொடர்ந்துகொண்டே இருந்தது.