ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ -1

அத்தியாயம்– 1:
கொடைக்கானல் மலைத்தொடரின் மடியில், மேகங்களுக்கு அடியில் மறைந்திருக்கும் ஒரு சொர்க்கம் பூம்பாறை. ஒரு சின்ன கிராமம். அரசு வரைபடத்தில் ஒரு புள்ளி மட்டுமே. ஆனால் இன்று அந்தப் புள்ளி தீயாக எரிந்தது.
நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள்…வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள்….கிராமத்தின் நடு வெளியில் உட்கார்ந்திருந்தனர். மூன்று நாட்களாக உணவு இல்லை. தண்ணீர் மட்டும். அவர்களின் முகங்களில் களைப்பு இருந்தது.ஆனால் கண்களில்…ஒரு கல் போன்ற உறுதி !
பூம்பாறையின் பச்சை பசேல் என்ற மலைச்சரிவுகளுக்குக் கீழே, ஒரு இருண்ட நிழல் படர்ந்திருந்தது. அரசாங்கம் அதை ஒரு “சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டம்” என்று அழைத்தது. அதன் நோக்கம்….மலைச்சரிவுகளைச் சீரமைத்து அமைக்கப்படும் புதிய பாதை….கிராமத்தைச் சுற்றியுள்ள பாரம்பரிய விவசாய நிலங்களை கையகப்படுத்தி, அங்கு வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களை உருவாக்குவது.
அரசாங்கத்தின் “பதிலாக நிலம் தருகிறோம்” என்பது வெறும் காகிதத்தில் தான். அந்த மண், மலை, நீர்நிலைகள் மற்றும் தலைமுறை தலைமுறையாக அவர்கள் கட்டிக்காத்த விவசாய அறிவு….இவை எதையும் காசு கொடுத்து வாங்கிவிட முடியாது என்பதை உணர்ந்த மக்கள், நிலத்தை விட்டு வெளியேற மறுக்கிறார்கள்.
பக்கத்தில் ஒரு அரசு ஜீப் நின்றது. அதிகாரிகள் தூரத்தில் நின்று கலைந்து பேசிக் கொண்டிருந்தனர். யாருக்கும் உள்ளே போக தைரியம் இல்லை.
அப்போது இன்னொரு வாகனம் வந்து நின்றது.
கதவு திறந்தது.
மீரா , ஐஏஎஸ், கலெக்டர், தேனி மாவட்டம் … இறங்கினாள்.
அவள் கோட் போடவில்லை. கோப்பு வைத்துக் கொள்ளவில்லை. ஒரே ஒரு தண்ணீர் பாட்டில் மட்டும் கையில்.
நேரே உள்ளே நடந்தாள்.
பக்கத்தில் இருந்த அதிகாரி பதறினான்.
“மேடம் நேரடியா போகலாமானு…”
“வாங்க.”
கிராமத்தின் நடுவில் ஒரு ஆலமரம். அதன்கீழே உட்கார்ந்திருந்தான் முதியவன்… வேலாண்டி. கிராம தலைவன். எழுபது வயதிருக்கும்.உடல் இளைத்திருந்தது. ஆனால் முதுகு நிமிர்ந்திருந்தது.
மீரா அவனருகே சென்று தரையில் உட்கார்ந்தாள்.
வேலாண்டி அவளை பார்த்தார். ஒரு நொடி ஆய்வு செய்தார்.
Advertisement
“கலெக்டரா?”
“ஆமாம் தாத்தா.”
“நேத்து வேற ஆளு வந்தான். நாளைக்கு வருவோம்னு சொன்னான். வரலை.”
“நீ என்ன பண்ண வந்த?”
“பேசணும்னு வந்தேன். கேக்கணும்னு வந்தேன்.”
வேலாண்டி ஒரு கசப்பான சிரிப்பை உதிர்த்தான்.”எத்தனை கலெக்டர் வந்தாங்க. எத்தனை பேர் கேட்டாங்க?”
“எங்க மலை எங்களுக்கு சொந்தம். எங்க காடு எங்களுக்கு சொந்தம். அதை எடுத்துக்கிட்டு, ‘வேற இடம் குடுக்கிறோம்’ன்னு சொல்றாங்க. எங்களுக்கு வேற இடம் வேண்டாம். இந்த மண் வேணும்.”
கூட்டத்தில் இருந்து சில குரல்கள் எழுந்தன. அதிகமாகின. சில இளைஞர்கள் எழுந்து நின்றனர்.
“கலெக்டர் வந்தா என்ன, போனா என்ன!”
“போங்க! போங்க! அரசாங்கம் எங்களுக்கு எதுவும் பண்ண மாட்டாங்க!”
மீரா எழவில்லை. குரல் உயர்த்தவில்லை.
அமைதியாக வேலாண்டியை பார்த்தாள்.
“தாத்தா. நான் உங்களுக்கு தீர்வ கொண்டு வரலை. ஆனா ஒரு விஷயம்… மூணு நாளா நீங்க யாரும் சாப்பிடலை. குழந்தைங்க சாப்பிடலை. இது உங்களுக்கு என்ன நீதி தரும்னு தெரியலை. ஆனா உங்களுக்கு என்ன ஆகும்னு தெரியுது.”
வேலாண்டி பார்த்தான்.
“நான் இங்கேயே உங்களோடவே தங்கி இருக்கேன்…அரசாங்கத்துகிட்ட பேசுறேன்.. முடிவு வருகிற வரைக்கும் இங்கிருந்து நகர மாட்டேன் ஓகேவா…இப்போ குழந்தைகளுக்காவது சாப்பாடு குடுங்க.”
ஒரு சின்னக் குழந்தை அழுது கொண்டிருந்தது. அதன் தாய் அணைத்துக்கொண்டிருந்தாள்.
அமைதி.
வேலாண்டி மெல்லத் தலையசைத்தான். அவனது கண்களில் இருந்த அந்த “கல் போன்ற” உறுதி, சற்று இளகியது. போலீஸ் வேன்களிலிருந்து உணவுப் பொட்டலங்கள் இறக்கப்பட்டன. மக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். மீரா நேராகச் சென்று, தன் கைகளாலேயே ஒரு பொட்டலத்தைப் பிரித்து, அழுகையோடு இருந்த குழந்தைக்கு நீட்டினாள். குழந்தை அவளிடம் தாவியது.
திடீரென மீராவின் போன் விழுந்தது.
அவள் எடுத்தாள். ஸ்கிரீன் பார்த்தாள்.
டிஎஸ்பி ஆபீஸ், தேனி.
எடுத்தாள். “ஆமாம்.”
Advertisement
“மேடம், புதுசா அப்பாயிண்ட் ஆன எஸ்பி சார் வர்றாங்க. பத்து நிமிஷத்துல ரீச் ஆவாங்க.”
Advertisement
மீராவின் போன் மீண்டும் ஒலித்தது. அந்தப்பக்கம் கேட்டது அதே கரகரப்பான, கம்பீரமான குரல்.
“குட் ஈவினிங் மேம். வாட்ஸ் த ஸ்டேட்டஸ்?”
