Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

76. Rythm - ரிதம் சரிகமபதநிContest Stories 2026

ரிதம் 16

ரிதம் 16

மறுநாளிலிருந்து, சரியான நேரத்திற்கு அவர்கள் இருவரும் அந்த அகாடமிக்குள் வந்துவிடுவார்கள். மாலை வரை பொதுவான பயிற்சிகள் நடக்கும்.



Advertisement

ஸ்ரீதரே அவளுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தான்.

‘அவ்வளவு மோசம் இல்லை. ஆனால் இன்னும் மேம்படுத்த வேண்டும்’ என்று கூறினான்.

Advertisement

Advertisement

மாலை பிராக்டிஸ் முடிந்து செல்லும்போது, அதைத் கௌதமிடமும் கூறிவிடுவான். அந்த ஒரு வாரமும் கௌதமும் நத்தாஷாவும் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை. எங்காவது தூரத்தில் எப்போதாவது பார்ப்பார்கள். அப்பொழுது புன்னகையுடன் கடந்து விடுவார்கள்.

ப்ரீத்தியும் அமர்ந்து அவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருப்பாள். சிறிது நேரம் பிராக்டிஸ் செய்பவர்கள், சிறிது நேரம் கதையடிப்பார்கள். தேநீர், ஜூஸ் என்று தேவைக்கேற்ப பிரீத்திக்கு வந்து சேர்ந்தது. ஆனால் மற்றவர்கள் தேநீர், காபி தான் பருகுவார்கள்.

Advertisement

“பாட்டு பாடுறதுக்காக ஜூஸ் சாப்பிடாம இருக்கணும்னா, எனக்கு அப்படி ஒரு பாட்டே பாடத் தேவையில்லை” அங்கலாய்த்துக் கொள்வாள் ப்ரீத்தி.

“இது ஒரு தவ வாழ்க்கை மாதிரி தான். பாடகியாகணுன்றது ஒன்னும் சும்மா கிடையாது. அதைத் தக்க வச்சுக்கிறதும் விளையாட்டு கிடையாது. நிறைய சாக்ரிஃபைஸ் பண்ணனும். அதுல முக்கியமானது கோல்டு ஐட்டம்ஸ், ஐஸ்கிரீம்ஸ் இதெல்லாம். ஸ்வீட்ஸ் கூட அதிகம் எடுத்துக்கக் கூடாது” திவ்யா அளந்து விட்டுக் கொண்டிருந்தாள்.

“ரொம்ப கஷ்டம் தான் போல? நல்லவேளை எனக்குக் குரல் அந்த அளவுக்கில்ல. என்னால ஜூஸ் சாப்பிடாம எல்லாம் இருக்க முடியாது. அதுவும் சென்னையியுல் அடிக்கிற வெயிலுக்கு. மதுரை வெயிலுக்கே நாங்க எல்லாம் ஒரு நாளைக்கு எவ்வளவு ஜூஸ் சாப்பிடுவோம் தெரியுமா?” என்றாள் பிரீத்தி.

இப்படியே அவர்கள் நல்ல தோழமை வட்டத்திற்குள் வந்தார்கள். நத்தாஷா மட்டுமல்லாமல் பிரீத்திக்குமே அங்கு இருப்பவர்கள் தோழி தோழர்களாக மாறினார்கள்.

இப்படியே நாட்கள் செல்ல, அவர்களின் பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பாடலை விரும்பாதவர்கள் இந்த வையகத்தில் உள்ளார்களா என்ன? நிறைய பேரின் பார்வைக்கு அந்தப் பேட்டி சென்றது.

வருண் வீட்டில் அந்தப் பேட்டியைப் பார்க்கவில்லை. ஆனால் அவன் திருமணத்திற்கு வந்திருந்த நெருங்கிய உறவுகள் பார்த்துவிட்டு, வருணின் பெற்றோர் காதில் அதைப் போட்டு வைத்தனர்.

“பாரு, உன் மருமகள் புடிச்சாலும் புளியங்கொம்பா புடிச்சிருக்கா? சினிமாவில் பாடப்போறாளாமே? அதுவும் ஹீரோ ராகவோட படத்துல. கௌதமுன்ற பெரிய மியூசிக் டைரக்டர்கிட்ட போய் சேர்ந்து இருக்காள். இனி பணத்துல புரளப் போறாள். நீ என்னன்னா அவளை உங்க கட்டுக்குள்ள வச்சுக்காம விட்டுட்டீங்க? இப்பயும் கெட்டுப் போகல. கூட்டிட்டு வந்து நாலு சாத்து சாத்தி மூலையில் அடைச்சுவைங்க” என்று அங்கலாய்த்தனர்.

“என்னங்க இப்படி சொல்றாங்க? நாம தப்பு பண்ணிட்டோமா?” என்று வருணின் தாய் கேட்க,

“சினிமாவில் பாடுறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. அவள் ராசி இல்லாதவள் தான். எங்க போனாலும் அவள் ராசி அவளைப் பின்தொடர்ந்துட்டே இருக்கும். அவளை நம்ம வீட்ல வச்சிருந்தா நம்மளுக்குன்னு இருக்கிற இன்னொரு பொண்ணு வாழ்க்கையும் நாசமாகும். சட்டப்படி சொத்தையும் பிரிச்சுக் கேட்க ஆரம்பிச்சிடுவாள். நாம பண்ணது தான் சரி. இருந்த ஒரே பையனும் போய் சேர்ந்துட்டான். நம்ம வீடு நம்ம பொண்ணுக்குத் தான் போய் சேரணும். அவள் எக்கேடாவது கெட்டுப் போகட்டும். இவள் போய் சேர்ந்த நேரம், கொடிகட்டிப் பறந்துட்டு இருக்கவனையும் கீழ தள்ளி விட்டுடுவாள்” என்றார் கேசவன்.

என்னதான் அவர் மகன் குடித்துவிட்டு வண்டி ஓட்டி விபத்தில் இறந்திருந்தாலும், இத்தனை நாட்களும் அதைத் தானே அவன் செய்தான்? அப்பொழுதெல்லாம் நடக்காத விபத்து, இப்பொழுது மட்டும் ஏன் நடந்தது? இவளின் வருகையும், இந்தப் பெண்ணின் ராசியும் தான் தன் மகனை அடித்துச் சாய்த்து விட்டது என்று நம்பினார் அவர். அதனால் அவள் அவர்கள் வீட்டிற்கு வராமல் இருப்பதே மேல் என்றுதான் நினைத்தார்.

……..

இப்படியே இரண்டு வாரங்கள் சென்றிருந்தது. தினமும் தோழிகள் இருவரும் தான் அகாடமி சென்றுவிட்டு மாலை திரும்பி வருவார்கள். பெரும்பாலும் ரமேஷே அழைத்துச் சென்று, அவனே அழைத்து வந்து விடுவான். ஒரு சில நேரங்களில் முன்னதாக முடிந்தால் மட்டும்தான் இவர்கள் தனியாக வருவார்கள். பழக்கமானவர், தெரிந்தவர் என்று கேப் டிரைவரை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருந்தான் கௌதம்.

அவருடன் போவதும் அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தான் கொடுத்திருந்தது.

ஒருநாள் மாலை, நத்தாஷாவின் வீட்டிற்கு வந்த ப்ரீத்தி, கணவனுக்கு முக்கியமான மீட்டிங் இருப்பதாகவும், மறுநாள் மாமனாரை அழைத்துக் கொண்டு செக்கப் செல்ல வேண்டும் என்றும் கூறி, “நீ மட்டும் தனியாகச் செல்வாயா?” என்று கேட்டாள்.

“நான் பாத்துக்குறேன்டி. அதே கேப் டிரைவர் தான் நமக்கு பழக்கம் ஆயிட்டாருல்ல? அவர் கூடவே போயிட்டு வந்துடுவேன். நீ ரொம்ப பயப்படாத. நான் பாத்துக்குறேன்” என்று தைரியம் கூறினாள் நத்தாஷா.

காலையில் ரமேஷே அழைத்துச் சென்று இறக்கி விட்டான். “சாயங்காலம் வரைக்கும் ஆச்சுன்னா நான் வரேன் நத்தாஷா. அதுக்கு நடுவுல முடிஞ்சா மட்டும் அந்த கேப் டிரைவர் கூட போ” என்று அவளுக்கும் பத்திரங்களைச் சொல்லிவிட்டுத் தான் சென்றான் ரமேஷ்.

அவள் அகாடமி உள்ளே நுழைந்தாள். எதிர்பட்ட ரிசப்ஷனிஸ்ட்டிடம் புன்னகைத்து விட்டு, ரிகர்சல் நடக்கும் கேபினை நோக்கிச் சென்றாள்.

எல்லோரும் நேரத்திற்கே வந்திருந்தார்கள். அங்கிருந்த தொலைபேசி அடிக்க, ஸ்ரீதர் தான் அதை எடுத்தான்.

“ஓகே கௌதம், இதோ அனுப்பி வைக்கிறேன்” என்று எதிர்முனையில் இருப்பவரிடம் பேசியவன், அழைப்பைத் துண்டித்துவிட்டு நத்தாஷாவைப் பார்த்தான்.

“கௌதம், அவரோட கேபினுக்கு உன்னை கூப்பிடுறாரு. இன்னைக்கு உனக்கு ரிகர்சல் அங்க தானாம்” என்றான் ஸ்ரீதர்.

ஸ்ரீதருக்கும், கௌதமுக்கும் பெரிதாக வயது வித்தியாசம் இல்லை என்பதால், அவர்கள் பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் மற்றவர்கள் அவனைச் சார், அல்லது கௌதம் சார் என்று தான் அழைப்பார்கள்.

“இன்னும் பிராக்டிஸ் முடியலையே? அவர் கேபின்ல ரிகர்சல்னா, எப்படி ஸ்ரீதர் சார்? எனக்குப் புரியல”? என்றாள் நத்தாஷா.

“அவருக்குன்னு ரிகர்சல் ஹால் இருக்கு நத்தாஷா. அவர் இங்க பெரும்பாலும் வர மாட்டார். ரொம்ப ரேர் தான். நம்மளோட ரிகர்சல கவனிக்கணும்னா மட்டும்தான் வருவாரு. அதுவும் இங்கே கேமரா இருக்கிறதுனால, அப்பப்ப அதுலேயே பார்த்துப்பாரு. மெயின் பிராக்டீஸ் எப்பயும் அங்க தான் நடக்கும். சில டைம்ல டைரக்டர், புரொடியூசர்ஸ் எல்லாம் பாடலைக் கேட்கணும்னு நினைப்பாங்க, இல்ல ரிகர்சல் பார்க்கணும்னு வருவாங்க. அவங்களையும் அங்க தான் கூட்டிட்டுப் போவாரு. அதுபோல நேரங்கள்ல, நாம அங்க தான் போய் பாட வேண்டியதாயிருக்கும். இதைவிடவும் கொஞ்சம் ஹைஃபையா, குவாலிட்டியா இருக்கும். நீ போனால் உனக்குத் தெரிஞ்சிடப் போகுது. எதுக்கு பயப்படுற?, அதான் கௌதம் கூட இருக்கப் போறாருல்ல?” என்று தைரியம் கொடுத்து அனுப்பி வைத்தான்.

அது இரண்டாம் தளத்தில் இருந்தது. காரியதரிசி அவளை அழைத்துச் செல்ல, அவளும் இரண்டாம் தளத்திற்கு வந்து சேர்ந்தாள்.

லிப்டிலிருந்து வெளியில் வந்தவுடன், எதிரில் அவன் பெயர் பதாகையைத் தாங்கிய கருப்புக் கண்ணாடிகளாலான பெரிய அறை இருந்தது. லிப்டிற்கும் அந்த அறைக்கும் இடையே சிறிய இடமிருக்க, அதில் சோபா போடப்பட்டிருந்தது. வருபவர்கள் அங்கு அமர்ந்து காத்திருக்க வேண்டும். பிறகு அவன் அழைத்ததும் உள்ளே செல்லலாம்.

காரியதரிசி அவளுக்குக் குறிப்பைக் காட்டிவிட்டு, அவளை அமர வைத்துவிட்டு, இங்கு போன் அடித்து உள்ளே அழைக்கும்போது செல்லலாம் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டாள்.

அந்த இடத்தில் ஒரு மூலையில் அமைக்கப்பட்டிருந்த டெலிபோனைப் பார்த்தபடி அமர்ந்து விட்டாள் நத்தாஷா.

சிறிது நேரத்தில் அது அழைக்க, அவளும் எடுத்துப் பேசினாள்.

“உள்ள வா நத்தாஷா” என்றான்.

அவளும் கதவைத் தட்டிவிட்டுச் சிறிது தயக்கத்தோடு அந்தப் பெரிய கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு சென்றாள்.

உள்ளே யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்று வெளியில் தெரியாதளவிற்குத் தான் இருந்தது. உள்ளே சென்று பார்த்தால், வெள்ளை நிறத்திலான கண்ணாடிகள் அந்த அறை முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. அங்கிருந்து வெளியில் பார்த்தால் வெளியில் நடப்பது தெரியும் விதத்தில் இருந்தது. அப்படியென்றால் யார் வந்தாலும் உள்ளே இருப்பவர்களுக்குத் தெரியும் என்பதை மனதில் குறித்துக் கொண்டாள்.

“ஹாய் நத்தாஷா, குட் மார்னிங்” என்று மலர்ந்த புன்னகையோடு அவள் முன்னால் வந்து கூறினான் கௌதம் .

“குட் மார்னிங் சார்” என்றவள், அசௌகரியமாக அந்த அறையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது அவனுக்கு.

“இன்னைக்கு உன்னோட பிராக்டிஸ் என்னோட தான். அன்னைக்கு சொன்னேல்ல? அந்தப் படத்தோட பாடல் பிராக்டிஸ் இருக்கு. நோட்ஸ் அதோ இருக்கு. பீட் என்ன, எந்த ராகம் எடுக்கணும், எல்லாமே இதுல இருக்கு. இந்த பாடலை ஓரலா ரெண்டு செஷனும் நானே பாடி வச்சிருக்கேன். அதைக் கேட்டிடு” என்று அவளிடம் நீட்டினான்.

அதைக் கையில் வாங்கினாள், ஆண் பெண் என்று மாறி மாறிப் பாடும் காதல் பாடல் அது. மெலடி லவ் சாங் என்று எழுதியிருந்தது.

“சார், டூயட்டா, உங்க கூடவா?” அவள் தயக்கத்தோடு கேட்டாள்.

“ஏன் அதுல உனக்கு ஏதாவது பிரச்சனையா? இல்ல நாம இதுக்கு முன்னாடி டூயட் சாங் பாடினதில்லையா?” அழுத்தமாக அவளைப் பார்த்துக் கேட்டான்.

“இல்ல சார், அப்படிச் சொல்லல. அன்னைக்கு நீங்க சொல்லும்போது சோலோ சாங்குனு நினைச்சேன்” என்றாள் தயக்கமாக.

“நான் அப்படிச் சொல்லவே இல்லையே நத்தாஷா? இன்ட்ரோடக்ஷன் பண்ணப் போறேன்னு மட்டும்தான் சொன்னேன். சோலோவா, டூயட்டான்னு எல்லாம் நான் விளக்கம் சொல்லலையே? இப்ப பேசிட்டிருக்கறதற்கு நேரம் இல்லை. இன்னைக்கு மத்தியானம் டைரக்டர் வராரு. அதுக்கு முன்னாடி நாம பாட்டை பிராக்டிஸாவது பண்ணி வச்சிருக்கணும். பெரிய ஹீரோவோட சாங். மே பி ஹீரோவும் சேர்ந்து வரலாம். ஏன்னா இந்தப் பாட்டு அந்தப் படத்தோட முக்கியமான பாட்டு” என்றான் கௌதம் பொறுமையாக.

அவள் தயங்கிக் கொண்டு நின்றாள்.

“டூயட் பாடுறது பிரச்சனையா? இல்ல என் கூட டூயட் பாடறது பிரச்சனையா? இந்த இரண்டு வாரமும் பிராக்டிஸ் பண்ணும்போது நீ டூயட் பாடலையா?” ஆழமாக அவளைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

“இல்ல சார், பெரிய ஹீரோ, பெரிய பிராஜெக்ட், அதான் தயக்கமாயிருக்கு. ஒருவேளை நான் பாடுறதுனால இந்தப் பாடல் சரியா ஹிட் ஆகலைன்னா?” என்று அழுதுவிடும் குரலில் கேட்டாள்.

அவள் தாழ்வு மனப்பான்மையில் தத்தளிக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன், “உன் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு. கண்டிப்பா இந்தப் பாடல் ஹிட்டாகும். முதல்ல பாட்டைக் கேளு. அதுக்கப்புறம் முடிவு பண்ணு. போ, உள்ள போய் பாட்டைக் கேளு” என்றான்.

“முக்கியமான பாட்டுன்னு சொல்றீங்க, புது சிங்கரை எப்படிப் பாட ஒத்துக்குவாங்க?” மேலும் அவள் தயக்கத்தோடு கேட்க, அவனுக்குச் சலிப்பாக இருந்தது.

“நம்மகிட்ட இருக்கிறவங்க எல்லாருமே புது சிங்கர் தான் நத்தாஷா. ஏன் அவங்களைப் பொறுத்தவரைக்குமே நாம எல்லாரும் புதுசு தான். நாம அவங்க கேட்கிற விதத்தில் பாடலை எப்படிப் புரோசீட் பண்றோன்றதுல தான் இருக்கு. சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி பாடல் இருக்கணும். நான் லிரிக்ஸ் எழுதி அவங்ககிட்ட கொடுத்துட்டேன். கம்போசிங்கும் மேலோட்டமா அவங்களுக்குக் காட்டிட்டேன். இப்ப பிராக்டிஸ் செஷன் பார்க்க வராங்க. அது பிடிச்சிருச்சுன்னா, மேற்கொண்டு நாம அந்தப் பாடலை முடிக்க வேண்டியதுதான். பாடல் முடிஞ்ச பிறகு தான் அவங்க பாடலைக் கேட்பாங்க” என்று நீண்ட விளக்கமாகக் கூறினான்.

“ஒருவேளை நான் பாடுறது அவங்களுக்குப் பிடிக்கலன்னா?”

அவன் எவ்வளவு தைரியம் கொடுத்தாலும், அவளுக்கு இன்னுமே தயக்கம் இருந்தது.

“பிடிக்கிற மாதிரி பாடணும். கண்டிப்பா இந்தப் பாட்டை நீ தான் பாடணும். அவங்களுக்கு என் மேல நம்பிக்கை இருந்து தான் இந்தப் படத்தோட பாடலை என்கிட்ட கொடுத்திருக்காங்க. அதே நம்பிக்கையை உன் மேல வச்சுதான் இந்தப் பாட்டை உன்கிட்ட கொடுத்திருக்கேன். எந்தப் பாட்டுக்கு யாரைப் போடணும்னு நான் தான் முடிவு பண்ணனும். அதுல அவங்களால தலையிட முடியாது. அவங்களுடைய எதிர்பார்ப்பு என்னன்னு எனக்குத் தெரியும். அதை என்னால கொடுக்க முடியும். கண்டிப்பா உன்னாலையும் சரியா பாட முடியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. உன் கூட டூயட் பாடப் போறது நான் தான். சப்போஸ் நீ ஏதாவது பிசகு பண்ணாலும் நான் அதைச் சரிகட்டிடுவேன். என்னை நம்பித்தான் இவ்வளவு தூரம் வந்திருக்க. அதே நம்பிக்கையை இப்பயும் வை. உனக்கு இருக்கிறது தயக்கம் மட்டும்தான். அதை நீ தான் தகர்த்து எறியணும். அதுக்கு நான் துணையாக இருப்பேன்.”

 அவன் பேசினாலும் அவள் முகம் தெளிவில்லாமல் தான் இருந்தது. ஆனாலும் அவளை தெளிவுபடுத்த வேண்டியது தன்னுடைய கடமை என்று நினைத்தான்.

 “உன் மேல நம்பிக்கை வச்சிருக்க உன்னோட குடும்பத்துக்கு, உன் தோழி குடும்பத்துக்கு, எனக்கும், எல்லாருக்கும் நீ ஒரு நல்ல பாடகின்னு புரூஃப் பண்ண வேண்டாமா? உன்னை வேண்டான்னு சொன்னவங்க முன்னாடி தலைநிமிர்ந்து நின்னு, இவளைப் போய் வேண்டாம்னு சொல்லிட்டோமேன்னு நினைக்க வைக்க வேண்டாமா? எல்லாத்தையும் நாம செய்யுறோம்” என்று அவள் முன்னால் தன் வலது கையை நீட்டினான்.

நம்பிக்கை கொடுக்கும் விதமாக அவன் கையை நீட்டிக் கொண்டிருக்கிறான். பற்றச் சொல்லி அவள் மனது எடுத்துக் கூறிக் கொண்டிருந்தது. ஆனாலும் தடுமாற்றம், தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

அவளாகப் பிடிக்க மாட்டாள் என்று நினைத்தவன், அவனுடைய இடது கை கொண்டு அவள் வலது கையைப் பிடித்து, தன் வலது கையின் மீது வைத்தவன், தன் இடது கை கொண்டு கெட்டியாகப் பற்றிக் கொண்டான்.

“பண்றோம். இந்த ஒரு பாடல் உன்னை கண்டிப்பா மேல உயர்த்தும்” என்று கண்களை மூடித்திறந்து அவளுக்கு நம்பிக்கை ஊட்டினான்.

இதற்குமேலும் அவளால் மறுதலிக்க முடியாது. கையில் வைத்திருந்த காகிதத்தையும், சிறிய வகை டிக்டாபோனையும் (Dictaphone) வைத்துக் கொண்டு எங்கே செல்வது என்று அவள் தடுமாறினாள்.

அவன் அதற்கான இடத்தைக் காட்ட, அவள் அதை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!