Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

76. Rythm - ரிதம் சரிகமபதநிContest Stories 2026

ரிதம் 21

ரிதம் 21

அன்று அந்த வீடு பரபரப்பாக இருந்தது. ரமேஷ் வீட்டில் பெரியவர் ராஜேஷ் மட்டும்தான் இருந்தார். மற்ற இருவரும் மேலே நத்தாஷாவின் வீட்டில்தான் இருந்தார்கள்.



Advertisement

ரமேஷ் ஒட்டடையைச் சுத்தம் செய்து கொண்டிருக்க, பொருட்களை மாற்றி வைக்கும் பொறுப்பைப் ப்ரீத்தியும் ராகினியும் செய்து கொண்டிருந்தார்கள்.

நத்தாஷாவும், புஷ்பவல்லியும் சமையல் வேலையில் மும்மூரமாக இருந்தார்கள்.

Advertisement

Advertisement

“என்னங்க, வரவங்களுக்குக் கூல்டிரிங்க்ஸ் கொடுக்க வேண்டாமா? வெயில் இல்லையா? அதை வாங்கிட்டு வர மறந்துட்டீங்களே?” என்று கூறினாள் ப்ரீத்தி.

“கூல்டிரிங்க்ஸ் அவங்களுக்கா இல்ல உனக்கா?” ரமேஷ் நக்கலாகக் கேட்டான்.

Advertisement

“இதென்ன சந்தேகம்? வரவங்களுக்குத்தான். வந்த உடனே சாப்பிட வாங்கன்னு உட்கார வைக்க முடியுமா? முதல்ல ரிசீவ் பண்றதுக்குக் கூல்டிரிங்க்ஸ் கொடுக்கணும் தானே? உங்க ஊரு வெயில் வேற சும்மாவா? பத்தாததுக்குப் பாப்புலேஷன் வேற? எல்லா வெக்கையும் இங்க சென்னையிலதான் இருக்கு” என்றாள் ப்ரீத்தி.

தொண்டை வரை வந்த வார்த்தைகளை ரமேஷ் சொல்லாமல் நிறுத்தினான். சென்னை என்பது சென்னைவாசிகளுக்கு மட்டும் உரியதல்லவே? வந்தோரை வாழ வைப்பதுதானே சென்னை? ஒட்டுமொத்த கம்பெனிகளும் அங்கே இருக்க, வேலைவாய்ப்பு அங்கே இருக்க, சென்னைக்குப் படையெடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியிருக்க, சென்னையும் விஸ்தாரமாகிக்கொண்டே போக, வெயிலின் தாக்கமும், அங்கு இருப்பவர்களின் அனல் மூச்சுகளும் சென்னையை ஆக்கிரமித்துத்தானே இருக்கும்?

சும்மா ஊரிலிருந்து வந்துவிட்டு, சென்னை என்ற மாவட்டத்தைக் குறை சொன்னால், காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்குக் கடுப்பாகத்தானே இருக்கும்? ஆனால் அதைச் சொன்னால் மனைவி மட்டுமல்ல, மற்றவர்களும் சங்கடப்படுவார்கள் என்று நினைத்தவன்,

“என்னதான் பொண்ணுங்க கல்யாணம்கட்டி வந்தாலும், உங்க ஊரு எங்க ஊருன்னு பிரிச்சுப் பேசுறதை நிறுத்த மாட்டீங்களே? மதுரை மட்டும் என்ன குளு குளுன்னு ஏசியில இருக்குற மாதிரியா இருக்கும்?” என்று அவனும் கவுண்டர் கொடுத்தான்.

“சும்மா மசமசன்னு பேசிட்டிருக்காம, சீக்கிரமா போய் வாங்கிட்டு வாங்க. நானும் இவளும் சேர்ந்து மத்ததெல்லாம் ஏரகட்டிடுறோம்” என்றாள் ப்ரீத்தி.

அவன் கிளம்ப எத்தனிக்க, “அண்ணா இருங்க. காசு எடுத்துட்டு வரேன்” என்றாள் ராகினி.

“அவ்வளவு பெரிய ஆள் ஆயிட்டியா நீ? வரவங்க உங்க வீட்டுக்கு மட்டும் இல்ல, எங்களையும் பார்க்கத்தான் வராங்க. ஏதோ உன் அக்கா கையால சாப்பிடணும்னு சொன்னாங்க. அதனாலதான் இங்க விட்டுருக்கேன். இல்லன்னா கீழதான் சமையல் வேலையைப் பார்க்கச் சொல்லி இருப்பேன்” என்றான் ரமேஷ்.

“ஐயோ அண்ணா, தப்பா எடுத்துக்கிட்டீங்களா? சாதாரணமாதான் சொன்னேன். நீங்க எங்களுக்காக எவ்வளவோ பண்ணியிருக்கீங்க. செலவுகளும் உங்களுக்கு நிறைய, அதனால ஏதோ வாய் தவறி சொல்லிட்டேன். மன்னிச்சிடுங்க” என்று கரம் குவித்தாள் ராகினி.

“பாருடா, சின்ன குட்டி சீரியஸ் மோடுக்கு போறதை? பொறுப்பா பேசுற ராகினியைப் பார்த்தா எனக்குச் சிரிப்புதான் வருது. இந்த ஃபேஸ் உனக்கு செட்டாகல, ரொம்ப பவ்யமா நல்ல பொண்ணா நடந்துக்கிறது உனக்கு சூட்டாகல” என்று கிண்டலடித்தான்.

“நான் உண்மையாதான் அண்ணா சொன்னேன்” அவள் சிறு குரலில் சினுங்கினாள்.

“நானும் விளையாட்டுக்குத்தான் சொன்னேன்” என்று அவள் தலையைக் கலைத்துவிட்டவன், “எப்படியும் வாங்கிட்டு வர ஜூஸை உன் ப்ரீத்தி அண்ணிதான் லிட்டர் லிட்டரா குடிப்பாள். அதனால நானே போயி வாங்கிட்டு வரேன்” என்றவன், மடித்து வைத்திருந்த சட்டைக் கையையெல்லாம் சரிசெய்தபடி வெளியில் சென்றுவிட்டான்.

அவன் சரியாகத் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தும்போது, அவனுக்குப் பின்னால் ஹாரன் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். கௌதம், கார் முன்கண்ணாடி வழியாகக் கையை ஆட்டிக்கொண்டிருந்தான். அருகில் அவருடைய தாய் முகம் மலர இறங்கினார்,

“வாங்க கௌதம் சார், உங்களால என்னோட வீடு பெருமைப்படட்டும்” மிக பவ்யமாகக் கூறினான் ரமேஷ்.

“என்ன ரமேஷ், பேச்செல்லாம் பலமாயிருக்கு?” அவன் தோள்களைத் தட்டியபடி கூறினான் கௌதம்.

அவன் தாயும் இறங்குவதைப் பார்த்துவிட்டு நெஞ்சில் வலது கையை வைத்துக் கொண்ட ரமேஷ், “வாங்க அம்மா. உங்களோட வரவு நல்வரவாகுக. நீங்க வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்று பணிவாகக் கூறினான்.

“உன்னோட வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்” என்று பூடகமாகப் பேசினார் மகாலட்சுமி.

ரமேஷுக்கு அது புரியவில்லை. சாதாரணப் பேச்சாகத்தான் எடுத்துக் கொண்டான். ஆனால் கௌதமுக்கு அது புரிந்தது. தன் தாயைக் கண்டிக்கும் பார்வை பார்த்தான்.

வாயைத் திறக்கக் கூடாது என்று கட்டளைகளைப் பிறப்பித்துத்தான் அவரை அழைத்து வந்திருந்தான். அவர் இறங்கியவுடனேயே தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்.

அவர்களை விருந்தோம்பும் வகையாக வீட்டிற்குள் அழைத்துச் சென்றவன், தன் தந்தையிடம் அறிமுகப்படுத்திவிட்டுப் பிறகு, மாடிப்படிகளில் அழைத்துச் சென்றான்.

“அம்மா, போற வரைக்கும் வாயைத் திறக்கக் கூடாது. நான் பாத்துக்குறேனா, நான் பாத்துக்குறேன். நீங்க தேவையில்லாத வேலை பண்ணாதீங்க” என்று சிறு குரலில் கூறினான் கௌதம்.

“வாயைத் திறக்காமல் எப்படிச் சாப்பிடுறதுன்னு நீ கத்துக் கொடுக்கலையே?” உனக்கு நான் சளைத்தவள் இல்லை என்ற ரீதியில் பேசினார் மகாலட்சுமி.

“கிரேட் ஜோக். நான் சிரிச்சிட்டேன்” என்று இளிப்பது போல வாயைத் திறக்காமல் உதடுகளை மட்டும் இழுத்துக்காட்டியவன், “நான் எதைப்பத்திச் சொல்றேன்னு உங்களுக்குத் தெரியும். நார்மல் பேச்சுகளைப் பேசுங்க. தேவையில்லாத பேச்சுக்கள் வேண்டாம்” அழுத்தமாக அவன் கூறுவதற்குள் படிகள் முடிந்திருந்தன.

“நத்தாஷா, கௌதம் சார் வந்துட்டாரு” என்று ஓங்கிக் குரல் கொடுத்தான் ரமேஷ்.

பரபரவென்று வேலை பார்த்துக் கொண்டிருந்தவளுக்குப் பதற்றம் தொற்றிக் கொண்டது. கையில் இருந்த பாத்திரத்தைத் தவறவிட்டுவிட்டாள். நல்லவேளை பாத்திரத்தில் தண்ணீர் மட்டும்தான் இருந்தது.

“ஐயோ! அம்மா அவங்க வந்துட்டாங்களாம், இன்னும் பொரியல் செஞ்சு முடிக்கலையே? வத்தக்குழம்பு வேற எப்படி வந்திருக்குன்னு தெரியல? சிக்கன் கிரேவி எப்படி இருக்கோ பயமாயிருக்கு?” அவள் ஒவ்வொன்றாகச் சொல்லிப் படபடக்க ஆரம்பித்துவிட்டாள்.

“எல்லாம் நல்லா இருக்கும்மா. நீ பதற்றப்படாத, முதல்ல அவங்களைப் போய் கவனி, நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன்” என்றார் புஷ்பவல்லி.

“ஐயோ, அதை மறந்துட்டேன்” என்று தலையில் அடித்துக் கொண்டவள், வெளியில் வேகவேகமாக வந்தாள்.

“வாங்க வாங்க கௌதம் சார், வாங்க அம்மா” என்று கையெடுத்துக் கும்பிட்டவள், ப்ரீத்தியின் பார்வையை உணர்ந்து, சொருகி இருந்த தன் புடவையை இறக்கிவிட்டாள்.

வியர்வையுடன், கலைந்த ஓவியமாக இருந்தவளை ரசித்தபடி உள்ளே நுழைந்தான் கௌதம்.

“எப்படிம்மா இருக்க? பார்த்து ரொம்ப நாளாச்சு?” என்றபடி அவரும் வீட்டினுள்ளே நுழைந்தார்.

ராகினி புன்னகை முகமாக அவர்களை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

கிட்டத்தட்ட நத்தாஷாவின் ஜாடையில் தன்னைப்பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன், “ஹாய் ராகினி, நைஸ் டு ஸீ யூ” என்றபடி அவளிடம் கைகுலுக்கக் கையை நீட்டிவிட்டான்.

அவளோ, தன்னை மறந்து அவனையும், அவன் கையையும் பார்த்துவிட்டுப் பிறகு பரபரவென்று தன் இரண்டு கைகளையும் சுடிதாரில் துடைத்துக் கொண்டவள், கையை நீட்டினாள். மீண்டும் மடக்கிக் கொண்டவள்,

“சார் ஒரே நிமிஷம், ப்ளீஸ்” என்று கூறிவிட்டுத் தன் அறையை நோக்கி விடுவிடுவென்று ஓடினாள்.

அவன் புன்னகையோடு தலையை ஆட்டிக்கொள்ள, ரமேஷ் அதற்கு விளக்கம் கொடுத்தான்.

“அது நீங்க வரீங்கன்னு சொல்லி, வீடெல்லாம் சுத்தப் பண்ணிட்டிருந்தோம். திடீர்னு வந்ததுனால, அம்மணி கையைக் கூட கழுவல, அதான் கழுவுறதுக்கு ஓடிப்போறாள்” என்று விளக்கம் கொடுத்தான்.

ஓடிய வேகத்தில் திரும்பி வந்தவள், அமர்ந்திருந்தவனின் முன்னால், மூச்சுவாங்கியபடி கையை நீட்டினாள் ராகினி.

அவன் மலர்ந்த முகத்தோடு அவள் கையைப் பற்றிக் குலுக்கினான். அவளும் கையை விடாமல் குலுக்கிக்கொண்டேயிருக்க, ‘மானத்தை வாங்குறாள்’ என்று நத்தாஷா மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

அதற்குள் தண்ணீரை எடுத்துக்கொண்டு புஷ்பவல்லி வந்துவிட்டார். வந்தவர்களை வரவேற்றார். தாயின் குரலில்தான் தன்னைச் சுதாரித்துக் கையை விலக்கிக் கொண்டாள் ராகினி.

அவனுக்கு இதெல்லாம் ஒன்றும் புதிதல்ல, கடந்த சில வருடங்களாக அனுபவித்துக் கொண்டிருக்கும் விஷயங்கள்தான் என்றாலும், ராகினி செய்யும்போது அவனுக்கு அது ஏதோ புதிதாகத் தெரிந்தது.

“சாரி சார், அவள் உங்களோட மிகப்பெரிய ஃபேன். நான் தான் சொன்னேனே?” என்று மன்னிப்பு யாசித்தாள் நத்தாஷா.

“ஐ நோ, இதுக்கு எதுக்கு சாரி?” என்றவன், எழுந்து நின்று புஷ்பவல்லி கொடுத்த தண்ணீரை எடுத்துக் கொண்டான்.

அவனுடைய பணிவு அவரை வெகுவாக ஈர்த்தது.

“ரொம்ப சந்தோஷம் தம்பி, உங்களைப் பார்க்கணும்னு நான் கூட ஆசைப்பட்டேன். ஆனா வீட்டுக்கே வருவீங்கன்னு எதிர்பார்க்கல. எங்களுக்கு அவ்வளவு சந்தோஷம் நீங்க வந்ததுல. அதுவும் உங்க அம்மாவைக் கூட்டிட்டு வந்திருக்கீங்க” என்றபடி ட்ரேயை வைத்துவிட்டுக் கும்பிடு போட்டபடி மகாலட்சுமியை வரவேற்றார்.

“எதுக்குங்க பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க? அதுவும் இதென்ன?” என்றவர், அவர் கையை இறக்கிவிட்டுவிட்டுப் புஷ்பவல்லியைக் கட்டியணைத்துக் கொண்டார்.

அந்தச் செயலில் திக்குமுக்காடிப்போனார் அவர். நத்தாஷாவிற்குமே அதிர்ச்சிதான், மற்றவர்களின் நிலையைச் சொல்லவும் தேவையில்லை. எல்லோரும் ஸ்தம்பித்த நிலையில் இருந்தார்கள்.

சிறு கர்வமும் இல்லாமல் அவன் பழகுவது, அவன் தாயிடமிருந்து வந்திருக்கிறது என்பதை அந்நொடியில் புரிந்து கொண்டார்கள்.

“நீ வேற மன்னிப்பெல்லாம் எதுக்குமா கேக்குற? இதுக்கு மேல ஃபேன்ஸையெல்லாம் பார்த்திருக்கோம். ஃபேன் பேஸ் அவனுக்கு ரொம்ப அதிகம் தான். வீட்டு வாசல்ல வந்து கேட் மேல ஏறி நின்னுட்டு, ஐ லவ் யூ கௌதம்னு கத்துற எத்தனை பேரைப் பார்த்திருக்கேன் தெரியுமா? அது மட்டுமா?? எங்க போனாலும், இவனைப் பாதுகாக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும் மேம்னு அவனோட பாடிகாட் சொல்லும்போது எனக்குச் சிரிப்புதான் வரும்.”

“இப்பன்னு இல்லம்மா, காலேஜ் டேஸ், ஸ்கூல் டைம்ல இருந்தே அவனுக்கு ஃபேன் பேஸ் அதிகம்தான். ஸ்கூல் காலேஜ் எல்லா இடத்திலும் அவனுடைய பெர்ஃபாமன்ஸ் நடந்துட்டே இருக்கும். ஆனா அது மட்டும்தான் காரணமா? இல்ல வேற எதுவுமான்னு தெரியல?” என்றபடி தன் மகனை ஏற இறங்கப் பார்த்தார்.

அவன் மீண்டும் அவரை கண்டிக்கும் பார்வை பார்த்தான்.

“தெரியும் ஆண்ட்டி. நாங்களும் டிவியில பார்த்திருக்கோமே? அவரோட ஹேண்ட்ஸமும், குரலும், குட் லுக்கிங்கும் அது போல” என்று அங்கலாய்த்தாள் ப்ரீத்தி.

‘ஐயோ! இவள் வேற சொதப்புறாளே? அண்ணனை வச்சுட்டு என்ன பேசுறாள்?’ என்று நினைத்தபடி தன் தோழிக்கு அவள் செய்கைகள் காட்டிக்கொண்டிருக்க, அதை அவள் கவனித்தாள் தானே?

தவிப்பாக ரமேஷைப் பார்த்தாள். ஆனால் அவனோ எப்பொழுதும் அவன் முகத்தில் இருக்கும் அக்மார்க் புன்னகையுடன் சாதாரணமாக இருந்தான்.

‘நல்லவேளை அண்ணன் தப்பா எடுத்துக்கல. உண்மையிலேயே ப்ரீத்தி லக்கிதான்’ என்று மனதினுள்ளே நினைத்துக் கொண்டாள் நத்தாஷா.

அதன் பிறகு பொதுவான நலவிசாரிப்புகளும், அறிமுகப் படலங்களும் தொடர்ந்தன. அதற்குள் நத்தாஷா ஜூஸைக் கொண்டு வந்து கொடுத்தாள். அவர்களும் வாங்கிப் பருகிவிட்டுப் பொதுப்படையான பேச்சுகளில் இறங்கினார்கள்.

“ஒரு நிமிஷம்” என்று கூறிவிட்டு, வேகவேகமாகச் சமையலறைக்குள் சென்றவள், எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ருசி பார்க்க ஆரம்பித்தாள்.

கடைசியாகச் சிக்கன் கிரேவியிடம் வந்தவள், முகத்தைச் சுருக்கிவிட்டுப் பிறகு அவர்களுக்காக அதை முதல் முறையாக ருசி பார்த்தாள்.

மூளை அசௌகரியமாக உணர்ந்தாலும், நாக்கு அதன் ருசியை அவளுக்கு எடுத்துக் கூறியது. மனதில் ஒரு திருப்தி ஏற்பட்டது. அவர்களுக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று அவள் கௌதமிடம் கேட்கவில்லை; ஸ்ரீதரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

ஆனால் அவர்கள் சைவ இனத்தைச் சேர்ந்தவர்கள். அசைவத்தைத் தொடக்கூட மாட்டார்கள்; அந்த இடத்திற்குக்கூடச் செல்ல மாட்டார்கள். முதல் முறையாகக் கௌதமுக்காக அவள் அசைவத்தைச் செய்தது மட்டுமல்லாமல், அதை ருசித்துப் பார்த்திருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!