Skip to content
Post Views: 39
ரிதம் 37
இரவு இரண்டு மணியானது அவர்கள் வீட்டை அடைவதற்கு.
Advertisement
கௌதம் வீட்டு வரவேற்பறையில் வந்து அமரும் வரை அவர்கள் அனைவரிடத்திலும் பெருத்த மௌனம் தான். நத்தாஷாவின் மௌனத்தை அவர்களும் கடைப்பிடித்தனர்.
அவர்களின் அந்த நிகழ்வு முடிந்த பிறகு, அவர்கள் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.
Advertisement
Advertisement
அமைதியாக விரல்களில் இருந்த மோதிரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவள், அங்கு நிலவிய நிசப்தத்தை உடைத்தாள்.
அவன் சாவதானமாக வந்து அவள் அருகில் அமர்ந்தான். அதுவரை சிலையாய் இருந்தவளுக்கு உயிர்ப்பு வந்து, தள்ளி அமர்ந்தாள்.
Advertisement
“எதுக்கு சார் இப்படி பண்ணீங்க?? அவ்வளவு பெரிய ஸ்டேஜ்ல?? அத்தனை பேர் முன்னாடி கேட்கும்போது, என்னால அவாய்ட் பண்ண முடியாதுன்னு பண்ணீங்களா?? இல்ல இவளுக்குக் கேக்குறதுக்கு யாரும் இல்லைன்னு நினைச்சீங்களா?? அவ்வளவு பேர் முன்னாடி உங்களை அசிங்கப்படுத்தக் கூடாதுன்ற ஒரே காரணத்துக்காகத் தான் அமைதியா மோதிரத்தை வாங்கிக்கிட்டேன். ஆனா எனக்கு இதுல சுத்தமா உடன்பாடில்ல” என்றபடி கைவிரலில் இருந்த மோதிரத்தைக் கழற்றச் சென்றாள்.
அவளால் கழற்ற முடியாதபடி, அவன் அந்த விரலை அப்படியே பிடித்துக் கொண்டான்.
“மோதிரத்தைக் கழட்டினா அவ்வளவுதான். நான் உன்கிட்ட முதல் முறையா கேட்ட கிஃப்ட்டைக் கொடுக்க மாட்டேன்னு சொல்றியா?? இல்ல கொடுத்த கிஃப்ட்டைத் திருப்பி வாங்கப் போறேன்னு சொல்றியா??” அவன் அழுத்தமாகக் கேட்டான்.
“சார் உங்களுக்கு என் வாழ்க்கையில நடந்ததைப் பத்தி முழுசா தெரியாது. நான் மிஸ் இல்ல, மிஸஸ். உங்ககிட்ட நான் இதை எப்பயோ சொல்லிட்டேன்” என்றாள்.
“என்ன சொன்ன?? எதைப் பத்திச் சொல்ற?? நீ வீட்டுக்குக் போறதுக்குள்ள கழுத்திலிருந்து இறங்குன அந்தத் தாலியைப் பத்திச் சொல்றியா?? இல்ல கோயில்லயே உன்னை அம்போன்னு விட்டுட்டுக் குடிக்கிறதுக்குப் போனவனைப் பத்திச் சொல்றியா?? அவன் ட்ரங்கன் மட்டுமில்ல, ட்ரக் அடிக்ட். அது உனக்குத் தெரியுமா?? இல்ல ட்ரக் கன்ஸ்யூம் பண்ணிட்டுத் தான் உன் கழுத்துல தாலியைக் கட்டியிருக்கான், இதுவாவது உனக்குத் தெரியுமா? லீகலாப் பார்த்தா அது கல்யாணமே இல்லை. சுயநினைவில் இல்லாதபோது, அது ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் அப்ப நடக்கிறது கல்யாணமே இல்லை. உனக்கு நான் பேசறது டவுட்டா இருந்தா?? இரு உனக்கு அந்த ரிப்போர்ட்டைக் காட்டுறேன்” என்றபடி எழுந்து சென்று, அதை எடுத்து வந்து அங்கிருந்த டேபிளின் மீது போட்டான்.
அவள் தடுமாற்றத்தோடு அதை எடுத்தாள். பிரித்துப் படித்தாள். அவன் சொன்னது உண்மைதான் என்று தெரிந்தது. இது எல்லாம் அவளுக்கும் அவள் குடும்பத்திற்கும் சுத்தமாகத் தெரியாது.
“நடந்தது கல்யாணமே இல்லைன்னு நான் சொல்றேன். நீ அதுக்காக இன்னும் வருத்தப்பட்டுட்டிருக்க. உன் கழுத்தில ஏறுன தாலியை அடுத்த கொஞ்ச நேரத்திலேயே பறிச்சிட்டாங்கல்ல?? ஏறுன வேகத்துல இறங்கிடுச்சு. கோயிலையும் ரெஜிஸ்டர் பண்ணல, நீங்க தனிப்பட்ட முறையிலயும் ரிஜிஸ்டர் பண்ணல. அதுக்கான நேரமும் இல்லை. எந்த இடத்திலும் நீ இன்னாரோட மனைவின்னு எந்த அங்கீகாரமும் இல்லை. உன் மனசுலையும் அவன் இல்லை.”
அவளிடம் பதில் இல்லை
“அந்தக்கோயில்ல இருந்த ரெண்டு வீட்டுச் சொந்தங்களைத் தவிர வேற யாருக்கும் இந்த விஷயம் தெரியாது. ஆனா எல்லாரும் இத்தனை வருஷம் வாயை மூடிட்டுத்தானே இருந்தாங்க?? ஏன் அப்ப தாலியைப் பறிக்கும்போதும் வாயை மூடிட்டுத்தானே இருந்தாங்க?? உனக்காகப் பேசறதுக்கு, உங்க அப்பாக்காகக் குரல் கொடுக்குறதுக்குன்னு யாருமே வரல. அப்புறம் எந்தக் கல்யாணத்தைப் பத்தி ?? எந்த மிஸஸைப் பத்தி பேசுற நத்தாஷா??”
“ஓகே, என் வாழ்க்கையில நடந்ததெல்லாம் துரோகமாவே இருக்கட்டும். அதுக்காக நான் திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கணும்னு எந்த அவசியமும் இல்லையே? ஸ்டேஜ்ல அவ்வளவு பொய் சொல்லணும்னு என்ன அவசியம் இருக்கு?? என்கிட்ட முன்னாடியே எதுவும் இன்ஃபார்ம் பண்ணாமல் அத்தனை பேர் முன்னாடி மோதிரம் போடுறீங்க? அந்த உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது??” என்று அவள் கேட்க,
“ரொம்ப சிம்பிள், நீ நார்மலா கேட்டா ஒத்துக்க மாட்ட. அதனால உன் ஃபேமிலிகிட்ட கேட்டுப் பண்ணிட்டேன்.”
அவள் தன் குடும்பத்தைத் திரும்பிப் பார்த்தாள்.
“கசப்பா இருக்கிற மருந்து உடம்புக்கு நல்லதுனாலும் சின்னப் பிள்ளைங்க குடிக்க மாட்டாங்க. பிடிச்சு அவங்க வாயில ஊத்துற மாதிரி இருக்கும். அதுதான் நாங்களும் பண்ணியிருக்கோம். ஆனா ரொம்ப கசப்பாவெல்லாம் இருக்க மாட்டேன். ட்ரஸ்ட் மீ, இனிப்பாவும் இருப்பேன். என்னை நீ நம்பலாம். உன்னை நல்லா பார்த்துப்பேன். கண் கலங்காம வச்சுப்பேன்” என்றான்.
“ஆண்ட்டி நீங்க எப்படி இதுக்கு ஒத்துக்கிட்டீங்க??”
“இதுல என்னமா இருக்கு?? உன்னோட வாழ்க்கையை நாங்க முன்னாடியே காப்பாற்றியிருக்கணும். அப்ப அவன் ப்ரொஃபஷன்ல இல்ல, நீயும் படிச்சு முடிக்கல. அதனால முடிச்சிட்டு வரட்டும்னு நாங்க வெயிட் பண்ணோம். ஆனா உங்க அப்பா அதுக்குள்ள முந்திக்கிட்டாரு” என்றார்.
அவள் புரியாமல் விழித்தாள்.
“எனக்குத் புரியல?? எல்லாருக்கும் இதைப் பத்தித் தெரிஞ்சிருக்கு, என்கிட்ட மட்டும் சொல்லல?? காரணம் கேட்டா ஏதேதோ சொல்றீங்க? இப்ப நீங்க சொல்றதும் எனக்குச் சரியாப் புரியல??” என்றாள் நத்தாஷா.
“உனக்கு ஆரம்பத்துல இருந்து சொன்னாத் தான் புரியும்” என்று மகாலட்சுமி எதையோ கூற வந்தார்.
ராகினி அனைவருக்கும் ஜூஸைக் கொண்டு வந்து கொடுத்தாள். நத்தாஷாவைத் தவிர அதை எல்லோருமே எடுத்துப் பருகினார்கள்.
மகாலட்சுமி, கௌதம் வாழ்க்கையில் நடந்தவற்றைக் கூறினார்.
…….
சிறு வயதிலிருந்தே நல்ல சாரீரத்தை உடையவனுக்குச் சரிகமபதநி ஸ்வரங்களின் மீது தீராத ஆசை. தாயின் உதவியோடு அதைக் கற்றுக் கொள்வதற்காக இசை சங்கமம் என்ற அகாடமியில் சேர்த்து விட்டார். அங்கு அவனுக்குப் பரிச்சயமானவள் தான் நந்திதா.
அதை அவர் கூறும்போது, நத்தாஷாவின் புருவம் நெருங்கியது. ஆனால் மகாலட்சுமி தன் பேச்சைத் தொடர்வதில் மும்முரமாக இருந்தார். கௌதம் மட்டும்தான் அதைக் கவனித்தான்.
காலையிலேயே பாட்டு வகுப்பிற்குச் சென்று விட்டுத் தான் பள்ளிக்குச் செல்வான். நந்திதாவிற்கும் நல்ல சாரீரம் இருந்தது. இருவரும் நல்ல தோழமை வட்டத்திற்குள் வந்தனர். எந்த அளவிற்கு என்றால்?? அடுத்த வருடம் ஒரே பள்ளியில் சேர்ந்து படிக்கலாம் என்ற முடிவை எடுக்கும் அளவிற்கு.
இருவரும் தத்தம் வீட்டில் அதைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. இப்படி இரண்டு வருடம் சென்றது. அவர்களின் நட்பும் வேரூன்றி வளர்ந்தது.
இருவருமே பாடல் பாடுவதில் நல்ல தேர்ச்சி பெற்றனர். கௌதமுக்கு மேடையில் இசைக்கச்சேரி வைக்க வேண்டும் என்று எண்ணமில்லை. ஆனால் நந்திதாவிற்கு ஆசையாக இருக்க, அவளின் பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர்.
அதன் பிறகு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரிகமபதநி’ என்ற புதிய நிகழ்ச்சியைப் பார்த்ததும் அதில் பங்கேற்க வேண்டும் என்று ஆசை துளிர்விட்டது நந்திதாவிற்கு.
அதையும் பெற்றோர்களிடம் சொல்ல, அவர்களும் மகளின் ஆசைக்காக அதில் பங்கேற்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதுவரை பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நடத்திக் கொண்டிருந்தவர்கள், அப்போதுதான் இளைய தலைமுறையினர் பங்கேற்கும் யங் சிங்கர் கான்டெஸ்ட் சரிகமபதநி என்று முதல் முதலில் பாடல் நிகழ்வு ஒன்றை ஆரம்பித்தார்கள். அதில் அவளும் பங்கேற்றாள்.
பாட்டு வகுப்பில் இருந்து நின்றவள், அதற்காகப் பிரத்தியேகமாகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேறு ஒரு வகுப்பில் சேர்ந்தாள்.
“என்ன நந்திதா என்னை விட்டுப் போறியா?? ஒரே ஸ்கூல் சேரலாம்னு சொன்ன?? இப்ப திடீர்னு விட்டுட்டுப் போற??” என்று பாவமாகக் கேட்டான் கௌதம்.
“நான் அந்த கான்டெஸ்ட்ல பார்ட்டிசிபேட் பண்ணி நிறைய ப்ரைஸ் வாங்குவேன். ஃபேமஸ் சிங்கர் ஆயிடுவேன். அதுக்கப்புறம் பணம் நிறைய வந்துருச்சுன்னா, வேற ஒரு ஸ்கூல்ல ஜாயின் பண்றதுக்கு ஈஸியா இருக்கும். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ கௌதம். ரெண்டு பேரும் கண்டிப்பா வேற ஸ்கூல் ஜாயின் பண்ணிடலாம்” என்றாள்.
அவனும் தன் தாயிடம் வந்து அதைச் சோகமாகப் பகிர்ந்து கொண்டு அழுது கரைந்தான்.
அதன் பிறகுதான் அவன் அந்த நிகழ்ச்சியைத் தன் தாயோடு சேர்ந்து தொலைக்காட்சியில் பார்க்க ஆரம்பித்தான். அது அவர்களின் தொலைக்காட்சி என்றோ, அதை நடத்திக் கொண்டிருப்பது தன் தந்தைதான் என்றோ அந்த வயதில் அவனுக்குப் புரியவில்லை. அதை அவன் அன்று ஆராயவுமில்லை.
எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருந்தது. நந்திதாவும் நன்றாகப் பாடினாள். இறுதிச் சுற்று வரை தேர்வானாள். வெற்றியைக் கௌதமும் சேர்ந்து கொண்டாடினான். இறுதிச் சுற்றில் வெற்றியடையும்போது அவளுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று நினைத்தான்.
ஆனால் அந்த நேரத்தில் பள்ளியில் பரீட்சை இருந்தது. “அம்மா, நாங்க எல்லாம் எக்ஸாம்க்கு படிக்கிறோம். இந்த ப்ரோக்ராம்ல பாடுறவங்க எல்லாம் எக்ஸாமுக்கு படிக்க மாட்டாங்களா??” என்று கேட்டான் கௌதம்.
தெரியவில்லை என்ற பதில்தான் மகாலட்சுமியிடமிருந்து வந்தது.
ஆவலாக அந்த இறுதிச் சுற்றைப் பார்ப்பதற்காகக் கையில் பாப்கார்னுடன் அமர்ந்தவன், அதைக் கொறித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்.
தன் தோழி பாட ஆரம்பித்ததும், சோபாவின் அருகில் வைத்துவிட்டு ஊன்றிக் கவனித்தான். அவளுடைய குரலில் அவள் தன்னை மறந்து பாடினாள்.
இறுதிச் சுற்றில் முடிவு வாசிக்கப்பட, அவன் தோழியின் பெயர் கடைசி வரை வாசிக்கப்படவேயில்லை.
“அம்மா நந்திதா நல்லாப் பாடினாளே?? எதுக்கு அவளோட பெயரை கூப்பிடல??” அவன் கேட்ட கேள்விக்கு, பதில் சொல்லத் தெரியவில்லை மகாலட்சுமிக்கு. சேனலைப் பற்றியோ, அதில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றியோ மகாலட்சுமிக்குச் சுத்தமாகத் தெரியாது.
எல்லோரும் வெற்றியாளர்களை நோக்கிச் செல்ல, இவன் பார்வை மட்டும் தன் தோழியைத் தேடியது. ஆனால் கேமரா அவன் தோழியின் புறம் வரவே இல்லை. டிவியின் அருகில் சென்று கூட எட்டி எட்டிப் பார்த்தான். ஒரே ஒரு முறை அவள் அழுது கரையும் காட்சியை காட்டினார்கள். அதைப் பார்க்கும்போது அவன் உள்ளம் வெதும்பியது.
“அம்மா, என்னை உடனே அங்க கூட்டிட்டுப் போங்க. அவள் அங்க அழுதுட்டிருக்காள். ஒரு ஃப்ரெண்டா அவள் கூட நான் இருக்கணும். ப்ளீஸ் மா, என்னை அங்க கூட்டிட்டுப் போங்க” என்று கெஞ்சினான் கௌதம்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவனும் அழ ஆரம்பித்துவிட, வேறு வழி இல்லாமல் மகாலட்சுமி அங்கு அழைத்துச் சென்றார்.
அவர்கள் வரும்போது அவளை அங்கு காண முடியவில்லை. வெற்றி பெற்றவர்களைத் தான் மற்றவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
அங்கே அவளுடைய வீட்டு முகவரியை விசாரித்தார்கள், ஆனால் கிடைக்கவில்லை……. அகாடமிக்குச் சென்று அங்கு அட்ரஸைக் கேட்டுக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
ஆனால் அங்கு அவள் இல்லை. அக்கம் பக்கத்தினர், மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறினார்கள். அடித்துப் பிடித்து அங்கே வந்து பார்க்கும்போது, நந்திதாவின் உயிர் பிரிந்தே விட்டிருந்தது. அந்த வயதில் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று கூட அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் இனி அவளைப் பார்க்க முடியாது என்று மட்டும் தோன்றியது.
அழுத்தம், தோல்வி, எதிர்பார்ப்பு என்று அதன் காரணமாக அழுது அழுது கரைந்து, ஃபிட்ஸ் வந்து மருத்துவமனையில் சேர்த்து, காப்பாற்ற முடியாமல் தெய்வமடி சேர்ந்திருந்தாள்.
அதைச் சொல்லி முடிக்கும்போது, கௌதம் வீட்டில் அசாத்தியமான நிசப்தம் நிலவியது.
‘பெரியவளான தன்னாலேயே அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும்போது, சிறிய பெண்ணிற்கு அது எத்தனை மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும்?? எத்தனை ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும்??’ என்று நத்தாஷாவால் உணர முடிந்தது.
“அப்ப, இந்த ப்ரோக்ராம் என் தகப்பனோட சேனல்லதான் நடந்துட்டிருக்குன்னு எனக்குத் தெரியாது. அந்த வயசு அப்படி. அதெல்லாம் தெரிஞ்சுக்கறதுக்கு ஒரு வயசு வந்தது. அதுக்கப்புறம் திரும்பவும் தொடர்ந்து அந்த ப்ரோக்ராமை பார்க்க ஆரம்பிச்சேன். அந்த ப்ரோக்ராம்ல தோல்வியடைஞ்சவங்களுக்கு ஏதாவது பண்ணனும்னு யோசிச்சிட்டிருந்தேன். ஆனா அப்பயும் என்ன பண்றதுன்னு தெளிவா முடிவெடுக்க முடியல??”
“அந்த வயசுல என் ஃப்ரெண்டை என்னால காப்பாத்த முடியல. அடுத்து என்ன பண்ணனும்னு என்னோட பிளஸ் ஒன் பிளஸ் டூல நான் முடிவெடுத்துட்டேன். பி.எஸ்.சி மியூசிக் காலேஜ்ல சேர்ந்தேன். நான் முடிச்சவுடனே மியூசிக் அகாடமி ஆரம்பிக்கணும்னு முடிவு பண்ணேன். டேலன்ட் இருந்து ஆப்பர்சூனிட்டி கிடைக்காத மியூசிஷியன் ஒவ்வொருத்தரையும் தேடிக் கண்டுபிடிச்சு என்னோட குரூப்ல முதல்ல சேர்த்தேன். கரெக்டா அப்ப இந்த ப்ரோக்ராம் ஸ்டார்ட்டாச்சு..”
“இந்த ப்ரோக்ராமில் வெற்றி விளிம்புல தோக்குற ஒவ்வொருத்தரையும் என்னோட ட்ரூப்ல சேர்க்க ஆரம்பிச்சேன். அதுல முதல்ல சேர்ந்தது ஸ்ரீதர். என் மேல நம்பிக்கையோட என் கூட ஜாயின் பண்ணவன். அந்த டைம்ல எல்லாருக்கும் என்னால சரியா பேமெண்ட் கொடுக்க முடியல. ஆனாலும் அந்த நேரத்தில் என்னை விட்டுப் போகாமல் என் கூடவே இருந்தாங்க. அந்த நன்றி உணர்வு இன்னைக்கு வரைக்கும் எனக்கு இருக்கு” என்று கௌதம் கூறி முடித்தான்.
“நீங்க அந்தப் பொண்ணை விரும்பினீங்களா??” என்று கேட்டுவிட்டாள் ராகினி.
அவன் அவளைத் திரும்பிப் பார்த்துச் சத்தமாகச் சிரித்தான்..
“உங்க அப்பா உங்களைப் படிக்க வச்சதெல்லாம் கேர்ள்ஸ் ஸ்கூல், கேர்ள்ஸ் காலேஜ். அதனால உனக்கு ஃப்ரெண்ட்ஷிப் பத்தித் தெரியல. பத்து வயசுல என்ன காதல் வேண்டிக்கிடக்கு?? அதுவும் இன்னொரு சின்னப் பொண்ணு மேல?? அந்த உணர்வுக்கு என்ன பேருன்னு கூட எனக்குத் தெரியாது. அவள் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். நான் அவளை என்னோட ஒன்பது வயசுல பார்த்தேன். கிட்டத்தட்ட மூணு வருஷம் எங்களோட ஃப்ரெண்ட்ஷிப் ரொம்ப ஆழமா இருந்துச்சு. ஸ்கூல்ல கூட அதுபோல ஒரு ஃப்ரெண்ட்ஷிப் இல்லன்னு சொல்லலாம்” என்று கூறினான் கௌதம்.
“ஓகே, நந்திதா சிஸ்டர் இறப்பு காரணம்தான் உங்களை இதுபோல மாத்துச்சு. இதுல எங்க அக்கா எங்க வந்தாங்க?? அவங்க மேல நீங்க வச்ச காதல் எங்க வந்துச்சு??” என்று கேட்டாள் ராகினி.
அவள் பேச அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், வார்த்தையை அவள் முடிக்கும்போது நத்தாஷாவைத் திரும்பிப் பார்த்தான். சரியான நேரத்தில் அவளும் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் ஆவலாக அந்தப் பதிலுக்குக் காத்துக் கொண்டிருப்பது அவள் பார்வையில் தெரிந்தது. கௌதமுடைய பார்வையை அவள் எதிர்கொள்ளும்போது, அவள் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.
error: Content is protected !!