Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சோடு ரீங்காரம்

ரீங்காரம் – 10.2

புருவங்கள் இரண்டையும் உயர்த்தி அவளைப் பார்த்தவனுக்கு, செவிகள் வேலையைச் செய்யவில்லையோ எனத் தோன்றியது.

“எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம். ப்ளீஸ்… ப்ளீஸ்!”

சஞ்சீவின் முகம் ஒரு நொடி யோசனைக்குப் பிறகு தெளிந்தது. அழுகையில் சிவந்திருந்த அவள் கண்களை விட்டு அவனால் பார்வையை அகற்ற முடியவில்லை. மூடியிருந்த விழிகளைப் படிக்க முயன்று தோல்வியடைந்தவன், அவளை அங்கு போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர வைத்துத் தானும் அருகில் அமர்ந்தான்.

தேம்பித் தேம்பி அழுது ஓய்ந்தவள் ஒரு கட்டத்தில் விசும்பலில் வந்து நிற்க, வேகமாக கீழே சென்று வந்த சஞ்சீவ் கையில் தண்ணீர் இருந்தது. அவன் கொடுக்க, அதைக்கூட வாங்கவில்லை அவள்.



Advertisement

“ஒழுங்கா குடி சக்தி!” இவன் சற்று குரலை உயர்த்தவும் தான் நிதானித்துத் தண்ணீரைப் பருகினாள்.

அவளின் ஓய்ந்த தோற்றத்தைப் பார்த்தவன், “யார் அது?” என்றான். குனிந்த தலையை உயர்த்தி அவனைப் பார்க்கத் தைரியமற்றவள், தலை தாழ்த்தி, “செல்வா” என்றாள் சிறு தயக்கமும் இல்லாமல்.

தமிழ்ச்செல்வனின் பெயரைக் கேட்டவன் புருவங்கள் இடுங்கியது. “தைரியம்தான் உனக்கு. நமக்குப்பேசி முடிச்ச நேரம் கூட நீ சலனத்தோடு இல்லையே சக்தி. இந்த ரெண்டு மாசத்துல என்ன இந்தத் திடீர் மாற்றம்?”

Advertisement

நடந்தவற்றைச் சுருக்கமாகச் சக்தி கூற, “அப்போ உனக்கு அவன் மேல ஒரு சாஃப்ட் கார்னர், அவ்வளவுதான். இதுக்குப் பரிதாபம்னு இன்னொரு பேர் கூட வைக்கலாம்” என்றான் சஞ்சீவ்.

Advertisement

“சத்தியமா இல்லை. அவனை ரொம்பப் பிடிக்கும். என் அம்மா மாதிரி பார்த்துக்கிற உங்களையே வேண்டாம்னு சொல்ற அளவு பிடிக்கும். என் அப்பா, பெரியப்பா, அண்ணா எல்லாரோடையும் அவனுக்காகச் சண்டை போடுற அளவு பிடிக்கும்!”

“இப்பவும் லவ் எங்கேயும் வரலையே சக்தி?”

“எனக்கு எப்ப வரும்னு தெரியலை அத்தான். எனக்கு வரவே இல்லைனாலும் அவன் என்னை லவ் பண்ணுவான். எனக்கும் சேர்த்து செல்வா லவ் பண்ணுவான்!”

Advertisement

“என்னை வேண்டாம்னு சொல்றதுக்கே நாம வீட்டுல நீ நிறைய போராடணும் சக்திம்மா, இதுல அவன் வேணும்னு பேச உனக்கு ரொம்ப தைரியம் வேணும்.”

சக்தி, “தைரியம் இருக்கு அத்தான், அதைவிடப் பிடிவாதம் இருக்கு” என்றாள். அவள் பதிலில் பற்கள் தெரியச் சிரித்தவன், அவள் தலையில் கை வைத்து ஆட்டினான்.

“அது நீ சொல்லித்தான் எங்களுக்குத் தெரியணுமா? நீ சந்தோஷமா இருந்தா சரிதான் சக்தி.” அவனது சிரிப்பில் அவளின் குற்றவுணர்வு மேலும் கூடியது.

அவன் தோளில் சாய்ந்தவள், “என்னால உங்களுக்கு ரொம்பக் கஷ்டம் வரும் அத்தான். என்னை நம்ம வீட்டுல இருக்கிறவங்களை நூறு பேர் கேள்வி கேட்டா, உங்களை அதுல பத்து பேராவது தப்பா பேசுவாங்க. உங்களால தாங்கிக்க முடியுமா? அதெல்லாம் கேட்கிறப்போ உங்களுக்கு என் மேல கோபம் வர ஆரம்பிக்கும். அதுக்கப்புறம் என்கிட்ட சரியா பேசமாட்டீங்கல்ல?” அவள் கற்பனைக்கு எட்டிய தூரம் வரை சென்றவள் மீண்டும் கண்களை நிரப்ப,

“அந்தக் கேள்வி, ஜாடை பேச்செல்லாம் கேட்டும் கேட்காமல் போயிடுறேன். சஞ்சீவ் எப்பவும் போல உன்னோட அத்தான்தான். என் சப்போர்ட் எப்பவும் உனக்கு இருக்கும். ஓகேவா?”

“உங்களுக்குக் கஷ்டமா இல்லையா அத்தான்? நம்ம கல்யாணத்தைப் பற்றி நீங்க எதுவும் யோசிக்கலையே?” அவள் தயங்கிக் கேட்க, சஞ்சீவ் சத்தமாகச் சிரித்தான்.

“நாம என்ன ராத்திரி பகலா கடலை வறுத்தோமா கனவு காண? ரெண்டு மூணு நாள் பேசிருப்போம், அதுவும் அஞ்சு நிமிடத்துக்கு மேல் பேசுனது இல்லை. அப்போ அது தப்போன்னு தோணுச்சு சக்தி, பட் இப்போ பரவாயில்லை, ஏதோ ஒன்று தடுத்து வச்சிருக்கு. நிம்மதியா இருக்கு. அதே நேரம் உன்னை மிஸ் பண்றேன்ல, கொஞ்சம் வருத்தம்தான்” என்றான் அதே வற்றாத சிரிப்போடு. மெல்லிய சிரிப்போடு அவளோடு சற்று கதையளந்தவன், பெண்ணவளைச் சற்று சிரிக்க வைத்துத்தான் கீழே இறங்கினான்.

கீழே இறங்கி வந்தவன் கண்களுக்கு, அன்பரசியைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்த வீராந்தகன்தான் காட்சி கொடுத்தான். “நீ எப்போ வந்த வீரா?”

“ரொம்ப நேரம் ஆச்சுடா. எதுக்கு இவ்வளவு நேரம் சக்தி கூடப் பேசிட்டு இருந்த, அதுவும் தனியா?” ஒரு கண்டிப்பான சகோதரனாக வீராந்தகன் கேட்க,

“டேய், ஆனாலும் நீ ரொம்ப மோசம்டா. இவர் மட்டும் மணிக்கணக்கா காயத்ரி கூடப் பேசுவாராம், நாங்க பேசுனா…”

ஒரு நொடி நிதானம் இல்லாமல் பேசியவன் வீராந்தகனைச் சிறு பயத்தோடு பார்க்க, அவனோ இவனை நெற்றியில் விரல் வைத்துப் பார்த்து, கழுத்தை வளைத்துத் தன் மனைவியைப் பார்த்தான். அவள் வேலையில் சிறு தடுமாற்றமும் இல்லை, இவர்கள் பேசியது கூடக் கேட்காதது போல் ஒரு அமைதி.

“வந்த வேலை முடிஞ்சதா?” வீராவின் கேள்வியில் புருவம் உயர்த்திப் பார்த்தவன், “நாளைக்கு வர்றேன்டா. பேசணும்” என்றான் சஞ்சீவ்.

வீராந்தகன், “நான் இப்போ பேச ரெடி” என்ன, சஞ்சீவ், “நான் இல்லை. தூங்கப் போறேன், நாளைக்கு பேசலாம்டா” என்று கூறிச் சென்றான். சென்றவன் முகத்தை உற்று கவனித்த வீராந்தகனுக்கு நிச்சயம் ஏதோ சரியில்லை என்பது மட்டும் தெரிந்தது.

“குடிக்க ஏதாவது வேணுமா?” மனைவியின் குரலில் திரும்பிப் பார்த்தவன், “நான் இன்னும் சாப்பிடலை. ஏதாவது இருக்கா?” என்றான்.

“வந்து அரை மணி நேரமாச்சு, முன்னாடியே சொல்ல மாட்டீங்களா?” சமயலறைக்குள் செல்ல இருந்தவளைத் தடுத்தவன், “வெளிய போகலாம், உனக்கு உடம்பு சரியில்லைல்ல…” என்றான்.

“வெளிய போகணும்னா வர்றப்பவே சாப்பிட்டு வந்துருக்கலாம்ல!” இவனைத் திரும்பிப் பார்த்தவள் பார்வையில் உஷ்ணம் சற்று தென்பட்டது. அது அவள் உடல் உபாதையின் விளைவா இல்லை சஞ்சீவின் வார்த்தைகளா என்பது புதிர்தான்.

“எவ்வளவு உடம்பு சரியில்லைனாலும் இந்த வாய் மட்டும் உனக்குக் குறைய மாட்டேங்குது. இந்த டிரஸ் ஓகே தான், ஸ்வெட்டர் மட்டும் போட்டு வா” என்றான் வீராந்தகன். பெரியவர்கள் வீட்டில் இல்லை என்பதால் இலகுவான உடையில் இருந்தவள் தோற்றம், அவளது மெலிந்த தேகத்திற்கு அழகாக இருந்தது.

“நான் வர்றேன்னு சொல்லவே இல்லை” இருமல் அவள் குரலையே மாற்றி இருந்தது. இன்றுதான் சற்று உடல் தேறி இருக்க, மீண்டும் வெளியே சென்று பனிக் காற்றில் உடலை வறுத்த விரும்பவில்லை பெண்.

ஆனால் அவள் கணவன் ஒரு முடிவோடுதானே இருந்தான்! கைபேசியை எடுத்து மாடியிலிருந்து தன் சகோதரிக்கு அழைத்துத் தாங்கள் இருவரும் வெளியில் கிளம்புவதாகத் தகவல் கொடுத்துவிட, இப்போது சென்றாக வேண்டிய கட்டாயம் அன்பரசிக்கு. மனைவியைப் பார்த்துப் புருவம் உயர்த்தி வெளியே சென்ற வீராந்தகனின் இதழில் வழிந்த குறுஞ்சிரிப்பைப் பார்க்கத்தான் எவரும் இல்லை.

ஐந்து நிமிடங்கள் நின்று செல்வதா வேண்டாமா என யோசனையில் இருந்தவளை, “அண்ணி, நீங்க இன்னும் கிளம்பலையா?” என்ற குரல் வந்ததுதான் தாமதம், ‘இதோ’ என வேகமாகத் தன் கணவனை அடைந்துவிட்டாள்.

எப்பொழுதும் அவன் வாகனத்தை நிரப்பி இருக்கும் குளிரூட்டியின் குளிர்ச்சி இல்லாமல், இன்று இதமாக இருந்தது. கைபேசியைக் காற்சட்டையினுள் வைத்தவன் அவளைப் பார்த்து, “ஸ்வெட்டர் போடலையா?” என்றான்.

“இல்லை என்கிட்ட…”

தலையசைத்து வாகனத்தை எடுத்தவன், ஐந்தாவது நிமிடம் வாகனத்தை நிறுத்தி இரண்டு ஸ்வெட்டர்களை அவளிடம் நீட்டினான். “எந்த சைஸ் சரியா வரும்னு போட்டுப் பார்த்துச் சொல்லு.”

அவள் தயங்க, “ம்ம்ம்… நேரமாகுது” எனவும் உடனே உடுத்திப் பார்த்துப் பொருந்தியதைக் கூறினாள்.

“இந்த ரெண்டு கலர்ல எது பிடிக்கும்?”

கருப்பு, ஆலிவ் பச்சை. இரண்டுமே அவளுக்குப் பிடித்திருக்க, “ரெண்டுமே பிடிக்கும். எதுனாலும் ஓகே” என்றாள்.

இறுதியில் இரண்டையும் வாங்கி, அதோடு காதிற்கும் ஒரு மஃப்ளர் வாங்கி வந்திருந்தான். இரண்டையும் பெண் உடுத்தவும், அடுத்து அரை மணி நேரப் பயணம் தொடர்ந்தது. செல்லும் வழியிலேயே அசதியில் அன்பரசி உறங்கிப்போனாள்.

அவள் உறக்கத்தைக் கெடுக்காமல் உணவை வாங்கி வர வீராந்தகன் சென்றிருக்க, மெல்ல முகத்தில் வீசிய காற்றில் துயில் கலைந்தாள். அவள் முன்பு மரத்திலான பலகை ஒன்று, இரண்டு பக்க ஜன்னல் கதவில் பிடிமானத்திற்காக இருப்பதைப் புரியாமல் பார்க்க, “கேர்ஃபுல், அரசி” என்ற கணவனின் குரலில் திரும்பினாள். அவள் மேல் படாமல் அந்த மரப் பலகையைச் சற்று தள்ளி வைத்தவன், தானும் வாகனத்தில் ஏறி, ஒரு குடிகலத்தை ஆவி பறக்க அவள் முன்பு வைத்தான்.

“பார்த்துச் சாப்பிடு, சூடா இருக்கு.”

“எனக்கு பசிக்கலை, நீங்க சாப்பிடுங்க.”

“உனக்கு என்னைக்குத்தான் பசிச்சிருக்குன்னு நீயா வாயைத் திறந்து சொல்லிருக்க?”

“சும்மாவே இருக்கிற எனக்குப் பசி ஒன்றுதான் கேடு!”

“டாப்பிக் கிராஸ் ஆகுறோம். உனக்கு பசிக்கலைனாலும் இட்ஸ் ஓகே, சூப்தானே இது, குடி.”

“எனக்கு சூப் பிடிக்காது.”

“உனக்குப் பிடிக்காதது எத்தனையோ விஷயம் நடக்குது, அப்போதெல்லாம் எப்படி அமைதியா இருந்தியோ, இப்பவும் அதே மாதிரி நினைச்சிட்டுக் குடி. நாட்டுக்கோழி சூப்தான் இந்த நேரத்துல உனக்கு நல்லா இருக்கும்.”

“வெயிட், எனக்குப் பிடிக்காத விஷயம்ன்னா எதை மீன் பண்றீங்க?”

“நான்…” கடைக்கண்ணால் மனைவியைப் பார்த்தவண்ணம் அவன் கூற, இன்னும் அவளுக்கு அந்த உணவில் ஆர்வம் செல்லவில்லை.

‘இவ்வளவு கூட இவனுக்குப் பேசத் தெரியுமா?’ என்கிற ஆராய்ச்சியில் வீராந்தகன் குடிகலத்தை ருசிப்பதையும், தன்னை அவன் பார்ப்பதையும் மட்டுமே உள்வாங்கிக்கொண்டிருந்தவளுக்கு, அவன் கொடுத்த பதில் உணவின் பக்கம் கவனத்தைத் திசைதிருப்பப் போதுமானதாக இருந்தது.

வீரா குடிகலத்தை முடிக்க, அவனுக்கான உணவு இரண்டு இட்லி வந்தது. “ஆபீஸ் வேலையா வந்தீங்களோ?” பல நிமிடங்களாக அவள் கேட்கவே கூடாதென்று முடிவெடுத்து வைத்திருந்த கேள்வியைக் கேட்ட பிறகுதான், ‘கேட்டிருக்கக் கூடாதோ’ எனத் தோன்றியது.

“இல்லை” என்றான் அவன் நிதானமாகவே.

“சக்தி அண்ணி நல்லா இருக்காங்க, வீட்டுல யாரையும் அவங்களை நினைச்சு பயப்பட வேண்டாம்னு சொல்லுங்க” என்றவள் நொடி பொறுத்து, “நீங்களும்” என்றாள்.

சக்தியைப் பார்க்கத்தான் வீராந்தகன் வந்துள்ளான் என அன்பரசி மொழிய, அவள் கவனத்தில் பதியாதது—வீராந்தகன் சென்னை பட்டினம் வந்து இன்னும் சக்தியைப் பார்க்காதது. அவனுக்கும் அவளிடம் விளக்கம் கொடுக்கும் எண்ணம் இல்லை. அவளாகவே அவளைச் சுற்றி நடப்பவற்றைக் கவனிக்கட்டும் என்று விட்டிருந்தான்.

“ஓஹ், சூப்பர்” என்றதோடு லாவகமாக முட்கரண்டி வைத்து, சாம்பாரில் பட்டும் படாமல் நிதானமாக உண்டுக்கொண்டிருந்தான் வீரா. ‘பெரிய வெள்ளைக்காரத் துறை இவரு, கைல சாப்பிட மாட்டாரு!’ மனத்தினுள்ளே திட்டினாலும் அவன் உண்ணும் முறையை முறைத்த பார்வையோடு உள்வாங்கிக்கொண்டிருந்தாள் பெண்ணவள்.

“உனக்கு அப்படி என்னதான் என் மேல கோபம்?” அவள் பார்வையின் வீரியம் தொடர்ந்து அடிக்க, கணவன் வாய்விட்டே கேட்டுவிட்டான்.

“கைல சாப்பிட்டா எப்படி இருக்கும்? ரொம்பத்தான் சீன் போடுறீங்க!” அவளது முகத்தைப் பார்த்தவனுக்கு வாய்விட்டுச் சிரிக்கத் தோன்றியது. ஏதோ வேற்றுகிரகவாசி போல் தன்னைப்பார்க்கும் மனைவியின் பாவனை அவனுக்குப் பிடித்திருந்தது.

“சாப்பிட்டே முடிக்கப் போறேன்.”

“ம்ம் சரி, போற வழியில மயங்கி விழாம என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனா சரிதான்.” அவன் உணவின் அளவிலும் அவளுக்குக் கோபம் எனப் புரிந்தவன், இன்னும் ஒரு இட்லி உண்டுவிட்டுத்தான் கிளம்பினான்.

கண்ணாடியில் தலை சாய்த்து, மின்விளக்குகளின் அணிவகுப்பைக் கோபத்தோடு அமைதியாகப் பார்த்து வர, அவளை அடிக்கடி திரும்பிப் பார்த்து வாகனத்தின் வேகத்தை மெல்லக் குறைத்தான் வீரா. அதை உணர்ந்தவள், “இல்லை வேகமாவே போகலாம், என…”

“சஞ்சீவ் பேசுனதைப் பற்றி உனக்கு நான் கிளாரிஃபிகேஷன் கொடுக்கணும்.”

“நான் கேட்கலை.”

“பட், ஐ ஹவ் டு கிவ் இட் (But, I have to give it).”

அன்பரசி, “சண்டை போடுற எண்ணம் எனக்கு இல்லை” என, “எனக்கும் இல்லை, அவன் சொன்னதைப் பெருசா எடுத்துக்காத. அது பாஸ்ட் (Past)” என்றான் வீரா.

“ம்ம்ஹ்ம்ம்… இன்னும் அது ப்ரெசென்ட் (Present) தான் உங்களுக்கு.”

“எல்லாருக்குமே பாஸ்ட் இருக்கத்தான் செய்யும்.”

“ஆனா எல்லாரும் அதுலேயே வாழுறது இல்லையே! அந்தக்காலம் நமக்குச் செஞ்ச நல்லதுக்கும், சந்தோஷமான நினைவுகளுக்கும் நன்றி சொல்லிட்டு அடுத்த கட்ட வாழ்க்கைக்கு மூவ் ஆகிடுவாங்க.”

வீரா, “சரி, நான் மூவ் ஆகாமல் அப்படியேதான் இருக்கேன்னு எப்படி நீ சொல்ற?” என்றான்.

அன்பரசி அவனை அழுத்தமாகப் பார்வையிட்டு, “நீங்க எனக்கு அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை ஒருநாளும் கொடுத்தது இல்லை. கொடுக்கிற மாதிரி பேசுனது இல்லை, நடந்தது இல்லை, ஏன் சிரிச்சது கூட இல்லை. ஏதோ உங்க வீட்டுல, உங்க ரூம்ல இருக்கிற ஒரு பொருள் மாதிரி… இல்லை இல்லை, ரோபோ மாதிரி நடமாடிட்டு இருக்கேன். 

உணர்ச்சிகளைத் துடைச்சு உங்க அம்மா, சித்தி பேசுற பேச்சைக் கேட்டு, ‘தாத்தா பாட்டி என் பேரன் மனசை மாத்திட மாட்டியா’ன்னு அமைதியா கேட்கிற பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல் சுத்திட்டு இருக்கேன். 

எல்லாத்துக்கும் மேல நீங்க… நீங்க கல்யாணத்தை நிப்பாட்ட சொல்லியும் செய்யாமல், ஆக மொத்தம் ஒரு குடும்பத்துக்கே துரோகம் பண்ண மாதிரி மனசு வலிக்க, மனசாட்சி குத்த சுத்திட்டு இருக்கேன். அந்த வலிக்கு ஆறுதலா உங்ககிட்ட இருந்து ஒரு சின்ன பார்வையா, சிரிப்போ எதுவும் இல்லாதப்போ, எந்த வகையில நீங்க எல்லாத்தையும் மறந்து வர்றீங்கன்னு நான் நம்புறது?”

நிதானமாகத் துவங்கியவள் தன் உணர்வுகளை மெல்லக் கொட்டித் தீர்க்க, அவளது வேதனைச் சுவடுகளின் காயமாகக் கண்ணீர்த் துளிகள் கன்னத்தைத் தழுவி நழுவின.

வாகனத்தின் வேகத்தைக் குறைத்தவன், அவள் நிதானமாகும் வரை சாலையிலும் மனைவி மேலும் கவனத்தை மாறி மாறி வைத்தான். மனம் ஏதோ அவளிடம் பேச ஆசைக்கொண்டு அலைபாய்ந்தது. ஆறுதல் வார்த்தைகள் பேசிப் பழகிராதவன் சிந்தனையில் ஆயிரம் சமாதானங்கள் முதல்முறை சுற்றிக்கொண்டிருக்க, திக்குமுக்காடிப் போனவனுக்கு மேல் பேச்சு வரவில்லை.

அன்பரசி தன்னை முற்றிலும் தேற்றிக்கொண்டு தெளிந்துவிட்டாள் என உணர்ந்த நொடி, “முன்னாடி எப்படியோ தெரியலை, இப்போ இந்த நிமிஷம் நீ அழுகுறதைப் பார்த்து உன் கையைப் பிடிக்கத் தோணுது. அது ஆறுதலுக்கா, தைரியம் கொடுக்கவான்னு எல்லாம் தெரியலை… ஆனா தோணுது” என்றான் வீரா.

அதிர்ச்சியில் திரும்பிய அன்பரசியின் பார்வை, உறைந்த நிலையில் கணவனின் இறுக்கமான கைகளைப் பார்த்து அப்படியே நின்றுபோனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!