அடுத்து வந்த நாட்களில் தமிழ்ச்செல்வன் ஆனந்தமாகச் சுற்றித்திரிந்தான்.
“நான் நினைச்சதை விட நல்லாவே வந்துருக்கு தமிழ்!” சரத்சந்திரன் பாராட்டிவிட்டுத் திரும்ப, படத்தை இயக்கியவனோ நாற்காலியில் சாய்ந்து உறங்கியிருந்தான்.
“டேய் தமிழ்!” அவன் தோள் தட்டி எழுப்பியவர், “என்னப்பா, உன் படத்தைப் பார்த்து நீயே தூங்கிட்டியா?” என்றார்.
“அப்புறம் ஏன் நீங்க தூங்கலை?”
Advertisement
“கொழுப்புடா உனக்கு!” என்றாலும் அவன் கையை இழுத்துப் பிடித்துக் கைகுலுக்கினார். அவருக்குப் பரம திருப்தி, படத்தைப் பார்த்ததில் இருந்து.
“டைரக்ஷன்ல பின்னிட்ட… மிச்ச பாராட்டுகளை மக்கள் கொடுக்கட்டும் உனக்கு.”
“பாராட்டெல்லாம் வேண்டாம், ஒரு வாரம் லீவு தாங்க.”
Advertisement
“படவா, பிச்சிடுவேன்! இனித்தான் புரொமோஷன்ஸ், இன்டர்வியூ எல்லாம் இருக்கு.”
Advertisement
“அதுக்கெல்லாம் வர முடியாது. என்ன நான் படம் கமிட் பண்ணுறப்பவே சொன்னேன்ல?”
சரத், “இதெல்லாம் எல்லாரும் ஒத்துக்க மாட்டாங்க தமிழ். வளர வளர நீ மக்களை நேரடியாக டீல் பண்ண வேண்டி வரும்”
“வளர்ந்ததும் பார்த்துக்கலாம்… வளர விடுவாங்களானே தெரியலை. சரி நான் கிளம்புறேன், வெளியே போக வேண்டிய வேலை இருக்கு. ஒரு வாரம் கேப் டிரைவர் மாதிரி கால் பண்ணி லொகேஷன் கேட்டுட்டு இருக்காதீங்க, வர்றேன்” என்றவன், தயாராக வைத்திருந்த தோள் பையை எடுத்து வாசலை நோக்கி நடந்தான்.
தமிழ்ச்செல்வன், “வந்து என்னத்தடா மாத்த போறீங்க? என்ன வில்லங்கத்தை கூட்டப் போறாங்களோ தெரியலை… ஒழுங்கா இறங்கிடு” என வலுக்கட்டாயமாக மூவரின் வேண்டுதலையும் புறக்கணித்துவிட்டுத் தனியாகவே சென்றான்.
சக்தியை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தனர். தமிழ்ச்செல்வன் அவளிடம் இறுதியாக அன்று அலைபேசியில் பேசியதுதான்; அதன்பின் ஒரு மாதம் ஆகியிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு சக்தியின் பெரியப்பா சேந்தனின் செயலாளர் தமிழ்ச்செல்வனுக்கு அழைத்து, அவனை நேரில் பார்க்க வேண்டுமென அழைத்திருக்க, அதற்கான புறப்பாடுதான் இது. அவர்கள் அழைத்திருந்ததோ ஒரு பெரிய ஐந்து நட்சத்திர விடுதியின் அமைதியான லவுஞ்ச்.
தமிழ்ச்செல்வன் அங்கு வர… அவனுக்காகச் சக்தியின் பெரியப்பா, அவரது செயலாளர், வக்கீல் மற்றும் நவிரன் காத்திருந்தனர்.
சேந்தனைப் பார்த்து, “நல்லா இருக்கீங்களா அங்கிள்?” எனச் சினேகமாக இவன் புன்னகைக்க, “சார் சொல்லுடா!” என்றான் நவிரன் பற்களைக் கடித்துக்கொண்டு.
புருவத்தை உயர்த்திச் சிரிப்பை அடக்கிய தமிழின் முன்பு ஒரு கோப்பை அந்த வக்கீல் வைத்தார். அதில் தமிழ்ச்செல்வன் பற்றிய மொத்தத் தகவல்களும் இருந்தன. அவன் குடும்பம் பற்றிய விபரம், அவன் தற்போதைய படத்தின் சம்பளம், அடுத்த திரைப்படத்தின் வருமானம், அவனது கடன் என அனைத்தும் பட்டியலிடப்பட்டிருந்தது.
“இங்க பாருப்பா…” வக்கீல் துவங்க, “பார்த்துட்டே தானே இருக்கேன்” என்றவன் பார்வை எல்லாம் நவிரன் மேலும், அவன் தந்தை சேந்தன் மேலும் தான் இருந்தது. ஒரு புன்முறுவலோடு கூடிய எதார்த்தப் பார்வை.
வக்கீல் சேந்தனைப் பார்க்க, அவரோ தமிழ்ச்செல்வன் பக்கமே திரும்பாமல் இருந்தார். ஆனால், கோபத்தைக் கட்டுப்படுத்தக் கைபேசியை உள்ளங்கையில் வைத்துத் தட்டிக்கொண்டே அமைதி காத்தார்.
“உனக்குச் சொல்ல வேண்டியதில்லை, இவங்க எவ்வளவு பெரிய ஆளுங்கன்னு!”
“இவனை…” எனத் தமிழை அடிக்க வந்த நவிரனைத் தந்தை தடுத்து நிறுத்தி, “நேரா விஷயத்துக்கு வாங்க” என்று வக்கீலுக்குக் கூறினார்.
“உன் வாழ்க்கையே இப்போ நீ எடுக்குற படத்தை வச்சுத்தான் இருக்குன்னு தெரியும். அதை நிறுத்தத்தான் வேலு சார் (சக்தியின் தாத்தா) என்கிட்ட பேசினார். நான் தான் பேசிப் பார்க்கலாம்னு வந்தேன்.”
அவர் கையைப் பிடித்துக் குலுக்கி, “நல்ல மனசு சார் உங்களுக்கு!” எனப் பாராட்டினான் இவன்.
“என் பொண்ணு பக்கத்துல நீ வரக்கூடாது, அதுக்கு நான் என்ன செய்யணும்?” நேரடியாகச் சேந்தன் விஷயத்திற்கு வர, ‘இதைத் தான் எதிர்பார்த்தேன்’ என்பது போல அவர் திசை நோக்கித் திரும்பினான் தமிழ்.
“நல்ல கேள்வி! ஆனா, எனக்கு இப்போதைக்கு எதுவும் தேவையில்லை” என்று அவர்கள் அவனிடம் நீட்டியிருந்த கோப்பையை அவர்கள் பக்கமே தள்ளி வைத்தான்.
“உன் எதிர்காலத்தையே அழிச்சாலும் தேவை இருக்காதா?” அவர் பேசியதில் சட்டெனச் சிரித்துவிட்டான் தமிழ்.
“மாமா…”
“யாருக்கு யாருடா மாமா? வாயை உடைப்பேன்!” நவிரன் குரல் உயர்த்தினான்.
“பேசிட்டு இருக்கோம்… ஷ்ஷ்…” உதட்டில் கை வைத்து நவிரனை நிறுத்தியவன், “மாமா…” என வேண்டுமென்றே ராகம் இழுத்தான்.
“வில்லன் மாதிரி பேசாதீங்க. சக்திக்குக் கல்யாணம்னு தெரிஞ்சு நான் உடைஞ்சிருந்தாலும், அவ வாழ்க்கையில இனி போகவே கூடாதுடா தமிழுன்னுதான் இருந்தேன். ஆனா, இப்போ நிலைமையே வேற!” என்றான் உல்லாசமாக.
“தப்பு பண்ற தமிழ்ச்செல்வன்!” அவரது எச்சரிக்கை சற்று அதிகாரக் குரலாகவே இருந்தது.
“சக்தியை லவ் பண்றது தப்புன்னா, அந்தத் தப்பை நான் நிறுத்தவே மாட்டேன்.”
“எல்லாம் பணத்துக்காகப்பா!” மகன் கூறுவதுதான் சரி என்பது போலத் தந்தையும் தமிழைப் பார்த்து இளக்காரமாக உதட்டை வளைக்க, தமிழ் வக்கீலிடம் திரும்பினான்.
தந்தையின் சொல் மீறி அசைய முடியாமல் நின்றவன் கண்கள் சிவந்தே போயிருந்தன.
“ஆமான்னா ஆமான்னு சொல்லு, இல்லைன்னா இல்லைன்னு சொல்லு. அதை விட்டுட்டு லவ் பண்ற பொண்ணைப் பார்க்குற மாதிரி இந்தப்பார்வை பார்க்குறடா… சரி, அவளைப் பார்க்கத்தான் ஊருக்குக் கிளம்பிட்டேன், சொல்லு. வர்றேன் மாமா, வரட்டா மச்சான்!”
பணிவான வணக்கத்தை வைத்துச் சென்றிருந்தவனை எப்படி அடிக்கலாம் என அந்த அக்குடும்பமே யோசனைக்குள் மூழ்கியது.
சக்தியை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்த வீராந்தகன் வீட்டில் உண்மையைக்கூற, அத்தனை பேருக்கும் அதிர்ச்சி. வீட்டின் மூத்த தம்பதிகளுக்குக் கேட்டதை ஜீரணிக்கவே முடியவில்லை. அதைவிட அதிர்ச்சி, அவர்கள் பேத்தி முகம் வீங்கித் துவண்டு நிற்பது. வீராவின் மௌனம் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
வீட்டின் ஆண்களும் முதலில் நம்ப மறுக்க, மகளின் அமைதியும், அவள் அன்னையிடம் அடி வாங்கியும் பிடிவாதமாக நிற்பதும் அவர்களை அசைத்துப் பார்த்தது.
“நிர்மலா வீட்டுக்குத் தெரிஞ்சா என்ன ஆகுறது? நம்ம வீட்டுப் பொண்ணோட மரியாதை என்ன ஆகுறது அங்க?” அவள் தந்தை முரளி கொதித்துப் போனார்.
“சேந்தா, நிர்மலாக்கும் மாப்பிள்ளைக்கும் போன் பண்ணி வரச் சொல்லு. யார் மூலியமாவது தகவல் போறதுக்கு முன்னாடி நாமளே பேசி முடிவு பண்ணலாம்.”
“உங்களுக்கு அவ்வளவு சிரமமெல்லாம் தேவையில்லை தாத்தா, அதெல்லாம் நம்ம வீட்டு மகாராணியே பார்த்துட்டாங்க” சக்தியைத் தீயாய் முறைத்தவாறு வீரா உரைக்க, வீட்டினருக்கு என்ன செய்வதென்று புரியாத நிலை.
“கல்யாணத்தை நிறுத்திட்டுத்தான் சக்தி வந்துருக்கா” என்று பேரன் கூறக் கேட்க, பெரியவருக்குத் தன்னுடைய மொத்த நம்பிக்கையும் உடைந்தது போல் தளர்ந்தார்.
“கல்யாணத்தை நிறுத்துற அளவு நீ வளர்ந்துட்ட, இல்ல சக்தி?”
“தாத்தா…” அழுகையோடு துவங்கினாள் சக்தி. அவளை ஒதுக்கிவிட்டு எழுந்தவர், “கிளம்புங்கப்பா, நிர்மலா வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்” என்றார்.
“உன்னை…” முரளி மகளை அடிக்க வந்தவர், சட்டென நிறுத்தி, “என் அப்பாவையே தலைகுனிய வச்சுட்ட நீ!” என ஆதங்கமாய் மகளை முறைத்துவிட்டுத் தந்தை பின் சென்றார்.
செல்லும் வழிநெடுக நால்வரிடமும் அதீத அமைதிதான் நிலவியது. நிர்மலா வீட்டிலும் அவர் கணவர், அத்தை, மாமா மற்றும் சஞ்சீவ் இருந்தனர். சஞ்சீவ் ஏற்கனவே வீட்டினருக்குக் கூறியிருந்ததை அந்த அமைதியே உணர்த்தியது.
பெரியவர் பார்வை நிலத்தில் மட்டுமே படிந்திருக்க, அதைப் பார்த்த அவரது மகன்களுக்கும் பேரனுக்கும் மனம் தாளவில்லை; இப்பேர்ப்பட்ட நிலையிலா தந்தையைப் பார்க்க வேண்டும் என்று! மகள் வீட்டில் கொடுத்த சிற்றுண்டியைக் கூட அந்தத் தந்தை எடுக்கவில்லை, தொண்டையில் வார்த்தைகள் அடைப்பது போல இருந்தது அவருக்கு.
தந்தையின் போராட்டத்தை உணர்ந்த நிர்மலாதான் அவர் அருகே அமர்ந்து கையைப் பிடித்தார். “அப்பா, சாப்பிடுங்க.”
தன்னைப் பிடித்த மகள் கையை இரண்டு கைகொண்டு பிடித்தவர், கண்ணீர் மல்க, “எங்களை மன்னிச்சிருமா…” என்றார் வேதனை பொங்க.
“உங்க மன்னிப்பை வச்சு நாங்க என்ன மச்சான் பண்றது?” நிர்மலாவின் மாமனார் கேள்வி எழுப்ப, சூழல் இன்னும் கனமானது.
“அப்பா…” மகன் சஞ்சீவ் அவரைத் தடுக்கப் பார்க்க, அதற்குள் நிர்மலாவின் அத்தை, “பாதி ஊருக்குத் தெரிஞ்சு போச்சு கல்யாணம் நிச்சயம் பண்ண விஷயம். தப்பா நினைக்க வேண்டாம் அண்ணா, எங்களுக்கு இது சுத்தமா பிடிக்கலை” என்றார் ஆதங்கம் குறையாமல்.
“இப்பவும் சக்தி மகாலட்சுமிதான்!” சஞ்சீவ் வேகமாக அவளுக்குத் துணை நின்றான்.
இரண்டு வீட்டினரின் பார்வையும் ஒரே அர்த்தத்தை மட்டுமே தாங்கி இருந்தது; இவனை வேண்டாம் எனக் கூற அந்தப் பெண்ணிற்கு எப்படி மனம் வந்தது என்று? வீட்டிற்கு ஒரே வாரிசு இவன், அவன் வாழ்க்கையின் முதல் படி இந்தத் திருமணம் தான். அந்தத் திருமணத்தில் இப்படியொரு அடி விழுக, பெரியவர்கள் மனம் சாந்தியடைய மறுத்தது.
“தாத்தா, சக்தியைப் பிடிக்கும் எனக்கு, அதுக்குன்னு நீங்க நினைக்கிற நேசம் அது இல்லை. அவளுக்கு வேற ஒரு பையன்கூடக் கல்யாணமாகி, பேரன் பேத்தி எடுத்தாலும் இந்த நேசம் நிக்கும்” நிச்சயம் இது காதல் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை இரு வீட்டினர் இருக்கும் இடத்தில் அழுத்திக் கூறிவிட்டான் சஞ்சீவ்.