Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வசந்தங்கள் வாடுவதில்லை

வசந்தங்கள் வாடுவதில்லை 18

“மாமா… நில்லுங்க…  நான் சொல்றத கேளுங்க…  ஏன் போய்டேயிருக்கீங்க…? நில்லுங்க… என் மேல கோவமா….?  என்னை விட்டு போகாதீங்க…?  ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க மாமா…?  என்னை விட்டு போகாதீங்க…?  எனக்கு கஷ்டமாயிருக்கு…. இப்படி நீங்க என்னை கண்டுக்காம போறது… ப்ளீஸ்…”

அஞ்சனா சொல்வதை காதில் வாங்காமல் தேவநாதன் பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தான்.

தேவநாதனை எட்டிப் பிடித்த அஞ்சனா, அவனிடம் “பேசுங்க மாமா… ஏன் பேச மாட்டேன்றீங்க…?  நான் என்ன பண்ணேன்…?  அன்னைக்கு கல்யாண மண்டபத்துல தேடி வந்து நீங்களா தான பேசினீங்க….  இப்ப மட்டும் ஏன் பேசாம போறீங்க…?”

“நான் என்ன தப்பு பண்ணேன்.  எனக்கு வருத்தமாயிருக்கு, நீங்க இப்படி பேசாம போறது”.



Advertisement

தேவநாதன் அஞ்சனாவின் கைகளை விளக்கிவிட்டு, அவளது வார்த்தைகளை செவிமடுக்காமல், அவளைத் திரும்பியும் பாராமல் நடந்து கொண்டேயிருந்தான் வேகமாக.  அஞ்சனாவும் விடாமல் அவனைத் தொடர்ந்து…, அவன் பின்னாலேயே நடந்து கொண்டிருந்தாள்.

“ஏன்…, என்கிட்ட பேச மாட்டேன்றீங்க…?  மாமா… ஓடாதீங்க… மெதுவா நடங்க.  எனக்கு கால் வலிக்குது…. நில்லுங்க.  சொல்றத கேளுங்க… என் மேல இன்னும் கோவமா…?  நம்ம கல்யாணத்தைபத்தி நீங்க பேசியும்…., நான் சிரியஸா எடுத்துக்கலன்னு கோவமா….?  அதான் பேச மாட்டேன்றீங்களா….?  நீங்க இப்படி பேசாம போறது…. எனக்கு அழுகையா வருது….” என அழத்துவங்கிவிட்டாள்.

“நிஜமா…., எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல மாமா.  அப்பா சொன்னதாலதான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன்.  உண்மையாதான் சொல்றேன் மாமா.  நான் பொய் சொல்லல….  ப்ராமிசா…. என்னை நம்புங்க… ஆ… ஆ………”

Advertisement

தேவநாதன், “ஹேய் அஞ்சனா….. என்னாச்சு….?” என பாய்ந்து ஒடிவந்து அவளைத் தூக்கி மடியில் சாய்த்து கொண்டான்.

Advertisement

அஞ்சனா தேவநாதனின் கைகளைப் பிடித்துகொண்டு கண்ணீர் சிந்தியவள், “என்னை விட்டு போகாதீங்க மாமா…  என்னால தாங்க முடியாது.  என்னையும் உங்களோட கூட்டிட்டு போங்க… ப்ளீஸ் நீங்க என்கிட்ட பேசாம முகத்தை திருப்பிகிட்டு போறது…. எனக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கு தெரியுமா….?” என விசும்பி அழ ஆரம்பித்துவிட்டாள்.

“அழுதா எல்லாம் சரியாகிடுமா….?  நான் அவ்வளவு சொன்னேன் இல்ல உன்கிட்ட.  நம்ம இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டா…, நம்ம இரண்டு குடும்பமும் சேர்ந்திடும்னு எவ்வளவு எடுத்து சொன்னேன்.  என் பேச்சை நீ மதிக்கல இல்ல.  இனி என்கிட்ட பேசாத.  என்னை பார்க்க வராத… போ உங்கப்பா பார்த்த மாப்பிள்ளைய கட்டிக்கோ… ஏன் என்கிட்ட பேசறே…?  நான் பேசாம போனா உனக்கென்ன….?  உனக்குதான் யாரையும் நினைச்சு கவலையில்லையே…” என அவளை விட்டுவிட்டு சென்றுவிட்டான்.

“அப்படியில்ல மாமா…, எனக்கும், என்ன பண்றதுன்னு தெரியல.  அப்பாகிட்ட போய்…. என்னன்னு…., ம்ப்ச்…. அப்பாவ மீறி…. எப்படி மாமா…?  என்னை புரிஞ்சுக்கோங்க… ப்ளீஸ்….” என அவளை புரியவைத்துவிடும் வேகத்துடன் எழுந்து அவன் பின்னாலேயே… அவனைத் துரத்தி கொண்டு ஓடினாள்.

Advertisement

இவள் வருவதற்குள், அவன் மாயமாக மறைந்திருந்தான் அங்கிருந்து.  அழுதுகொண்டே கால் நோக சுற்றி சுற்றி தேடிப் பார்த்தவள், அவனைக் காணாமல்……, “மா…மா….” என அடித்தொண்டையில் இருந்து கத்தினாள்.

இவளது சத்தத்தில் அடிபிடித்து எழுந்து உட்கார்ந்த நிஷா, பயந்துபோய் லைட்டைப் போட்டாள். அழுதுகொண்டே கண்ணை இறுக மூடி தூக்கத்தில் பிதற்றிக் கொண்டிருப்பவளை பார்த்து, அஞ்சனாவின் பக்கத்தில் வந்து அவளைப் பிடித்து உலுக்கினாள்.

நிஷா உலுக்கி எழுப்பியதில்… திடுக்கிட்டு கண்ணைத் திறந்து சுற்றும் முற்றும் கண்களை சுழல விட்டாள்.  அஞ்சனாவின் முகம் பயத்தில் வெளிறி, உடம்பு முழுவதும் வேர்த்திருந்தது.

நிஷா, “ஹேய்… ஏன்டி…… அப்படி கத்தின…..?  நானே பயந்துட்டேன். ப்பா… என்னா… சத்தம்.  ஒரு நிமிஷத்துல என் ஹார்ட்டே நின்னுடுச்சு, உன் சத்தத்துல.  என்ன மறுபடியும் கனவா…..?  வர வர உன் கனவு தொந்தரவு தாங்க முடியல….” என நொந்துகொண்டாள்.

இத்தனை நேரம் நடந்தது எல்லாம் கனவில் என்பது பிடிபடவே அஞ்சனாவுக்கு சற்று நேரம் பிடித்தது.  நெஞ்சின் படபடப்பு இன்னும் அடங்கவில்லை.  மெல்ல நெஞ்சை பிடித்து கொண்டு எழுந்து உட்கார்ந்தவள், பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தாள். அதன் மூடியை திறந்து மொத்த தண்ணீரையும் தொண்டையில் சரித்து, நெஞ்சின்  படபடப்பை ஆசுவாசப்படுத்த முயன்றாள்.

“உன் முகமெல்லாம் இப்படி வேர்த்திருக்கு…” என்ற நிஷா எழுந்து சென்று துண்டு எடுத்து வந்து கொடுத்தாள், துடைத்துகொள்ள சொல்லி.

துண்டை வாங்கி முகமெல்லாம் அழுந்த துடைத்தவள், எழுந்து சென்று சாமி முன்னாடி கைகூப்பி நின்றுவிட்டாள்.  சிறிது நேரம் கண்மூடி தெய்வத்தை கும்பிட்டவள், விபூதியை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு வந்து படுத்தாள்.

“என்னடி ஆச்சு உனக்கு….?  முன்னெல்லாம் எவ்வளவு தைரியமா இருப்பே.  இப்ப என்ன அடிக்கடி… ஏதாவது கனவு கண்டு அலறியடிச்சுட்டு எழுந்துக்கறே…?  என்ன கனவு கண்ட இந்த அளவு பயப்படுற மாதிரி….” என விசாரிக்க ஆரம்பித்தாள் நிஷா.

“ம்ப்ச்…. ஒன்னும் இல்ல நிஷா….”

“என்ன ஒன்னும் இல்ல.  எப்ப கேட்டாலும் இதையே சொல்லி சமாளிக்கற நீ…” என முறைத்தவள் “சும்மா……, மழுப்பாம என்ன கனவு கண்டேன்னு சொல்லு” என்றாள் நிஷா விடாப்பிடியுடன்.

“ஒன்னும் இல்லடி….”

“ம்கூம்…. நான் நம்ப மாட்டேன்.  ஏதோ உன் மண்டைய குடையுது.  அதுமட்டும் எனக்கு கன்பார்மா… தெரியுது.  இப்பல்லாம் உன் முகத்துல சிரிப்புக்கே பஞ்சயமாயிடுச்சு…. என்னன்னுதான் சொல்லி தொலையேன்டி… வெளிய சொன்னா… உனக்காவது ரிலாக்ஸா இருக்கும்.  இப்படி உனக்குள்ளயே பூட்டிவச்சு கஷ்டப்படறதுக்கு…”

“இருந்தா சொல்ல மாட்டேன்னா….  ஒன்னும் இல்ல நிஷா.  சும்மா என்னை தொந்தரவு பண்ணாத…”

“வர… வர… உன்போக்கே… சரியில்ல.  என்கிட்டகூட பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டே நீ…” என்ற நிஷா முறைத்துக்கொண்டு அஞ்சனாவைத் தனியாக விடாமல், அவள் பக்கத்திலேயே படுத்துக்கொண்டாள்.

சற்று முன் கண்ட கனவை திரும்பவும் நினைவு படுத்திப் பார்த்தாள் அஞ்சனா.  அன்று கோவிலில் தேவநாதன் சரியாக தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல் சென்றது மனக்கண் முன்னே தோன்றி இம்சை செய்தது அவளை.

அதுவும் இவளது திருமணத்தைபற்றி ஏதாவது பேசுவான்…, கேள்வி கேட்பான்… என எதிர்பார்த்தவள் ஏமாந்துதான் போனாள், அவனின் புறக்கணிப்பில்.

அன்று இவளுக்கு அடிப்படவில்லையென்றால் சுத்தமாக இவள் பக்கம்கூட திரும்பிகூட இருக்க மாட்டான்போல… என மனதுக்குள்ளேயே தவித்துப் போனவளுக்கு, இப்பொழுதுதான் அவன் மீதான தன் பிடித்தத்தை உணர தொடங்கியிருந்தாள்.

அன்றைய நிகழ்ச்சி அவளுக்கு தெரியாமலேயே , அஞ்சனாவின் மனதின் ஆழத்தில்…  இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா…? என அவளுக்கே ஆச்சர்யம்தான்.

அவங்க பேசலனா எனக்கென்ன…?  அவங்க பாராமுகம் என்னை ஏன் தவிக்க வைக்கனும்.  எதுக்கு இப்படி நான் கஷ்டப்படனும். என்னவோ… அவங்க என்னை அவாய்ட் பண்ற மாதிரி…, ஏன் இப்படி துடிச்சு போகனும் நான் உள்ளுக்குள்ளயே…?

அவங்க பார்க்கனும்…, பேசனும்னு ஏன் என் மனசு ஆசைப்படனும். ஒருவேளை…. ஒருவேளை…. என சரியாக எதையும் கணிக்க முடியாமல் மனதினிலேயே தவித்தவள், அப்படினா…. அந்த அளவுக்கு அவங்கள எனக்கு பிடிச்சிருக்கா…?  அப்பனா… நான் அவங்கள விரும்பறேனா….?

அதனால்தான் அன்னைக்கு அவங்க பேசாம போனதுகூட என்னால தாங்கிக்க முடியலையா…? இந்தளவுக்கா… நான் அவங்கள நினைக்கிறேன்… என போராட்டம்தான் மனதுக்குள் அஞ்சனாவுக்கு.

இன்னும் அவளுக்கு தன்னை புரிந்தும் புரியாத நிலைதான்.  குழப்பத்தின்பிடியில் சிக்கி தவித்தாள் நீண்ட நேரமாக.

இவ்வளவு நாள் ஒன்னுமே தெரியலையே நமக்கு.  இப்ப மட்டும் எப்படி…?  அதனாலதான் என்னைப் பார்க்க வந்த மாப்பிள்ளைய எல்லாம் எனக்கு பிடிக்காமல் போச்சா….?  அடக்கடவுளே…. என தலையில் கைவைத்தவள், இதை எப்படி நான் கொஞ்சம்கூட உணராம… போனேன்.

ஹைய்யோ… இருக்கறது பத்தாதுன்னு, இது என்ன புது குழப்பம்…? என ஒய்ந்துவிட்டாள்.

அ…ப்பா…, அப்பாவுக்கு தெரிஞ்சா…, ஐயோ…!  என்ன சொல்லபோறாரோ….?  நிச்சயம் இதுக்கு ஒத்துக்க மாட்டார்.  அப்பத்தா…. வேற என்ன சொல்லுமோ….?  அதுவும் ஒத்துக்காது.  கடவுளே…. என புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.

தேவநாதனை திருமணத்தில் சந்தித்தபோது அவன் பேசிச் சென்றதை, இவள் சாதாரணமாக எடுத்துகொண்டதுபோல் இருந்தாலும், அஞ்சனாவின் மனதில் ஆழப்பதிந்திருந்தது, அவனது பேச்சின் சாராம்சம் மொத்தமும்.  அது பத்தாதென்று அன்று ரோகிணி வேறு காரில் வருத்தப்பட்டுக்கொண்டே வந்தது அவளை உள்ளுக்குள் உலுக்கியிருந்தது எனதான் சொல்லவேண்டும்.  மனம் இப்போ சரியான நேரம் பார்த்து அதற்கான வேலையை தெளிவாக காட்டியிருந்தது.

வேல்முருகன் அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கும் வரை, எதைப்பற்றியும் நினையாமல் கிடப்பில் போட்டிருந்தவளுக்கு, அதன்பிறகுதான் தேவநாதன் அன்று பேசி சென்ற பேச்சின் தாக்கமும், ரோகிணியின் தோற்றமும், அவளை பாடாய் படுத்த துவங்கியிருந்தது உள்ளுக்குள்ளேயே.  அதனை எல்லாம் இத்தனைநாள் வெளியே சொல்லமுடியாமல் தவித்தவளுக்கு வேதனைதான் மனதில்.

அதன் அடையாளமாகதான் அவள் வரிசையாக கனவுகள் கண்டு அலறி எழுவதும், பின் அதையே நினைத்து… நினைத்து… உள்ளுக்குள் பயந்து உருகுவதும்.

மகள் தேவாவைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ரோகிணிக்கும் மனதுக்குள் ஆசை இருக்கிறது என தெரிந்ததால்… அவனை கல்யாணம் செய்துகொண்டால்தான் என்ன…? ஏன் மறுக்கவேண்டும்….? என்ற எண்ணம் உதித்தது அஞ்சனாவுக்குள்.

இத்தனை வருஷ கோவத்தை மறந்து மாமாவும் அத்தையுமே வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டிருக்காங்க.  அப்ப அவங்களுக்கும் விருப்பம் இருக்குன்னுதானே அர்த்தம்….. என்று திரும்ப திரும்ப அதையே மனதில் போட்டு உழப்பிக் கொண்டிருந்தாள்.

இதனாலோ என்னவோ அவளுக்குள் இத்தனை நாட்களில், தன்னையறியாமலேயே மாமன் மகன் மீது பிடித்தமும்…, அன்பும்… வந்திருந்தது மனதில்.  ஆனால் அதைப்புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமோ வாய்ப்போ அவளுக்கு அமையாததால்… அஞ்சனாவால் அதை முழுதாக உணரமுடியாமல் இருந்தாள்.

அன்று மயிலம் முருகன் கோவிலின் சன்னிதானத்தில் தேவநாதனைப் பார்த்தது, அவளுக்கு தெய்வ சங்கல்பமாகவே தோன்றியது.  இத்தனை நாள் அவள் மனதில் இருந்த குழப்பத்திற்கு எல்லாம் தீர்வு கிடைத்த மாதிரியே இருந்தது.

ஆனால் அதை எண்ணி மகிழமுடியாதபடி, தேவநாதன் அவளைக் கண்டுகொள்ளாமல், அவளிடம் சரியாக பேசாமல் இருந்தது, மனதினில் அவளுக்கு ஏமாற்றத்தைத் தந்திருந்தது.

அன்று கீழே விழுந்து அடிபட்டபொழுது அவன் காட்டிய அக்கறை, பாசம் எல்லாம் அவன்மீதான மதிப்பை இன்னும் கூட்டியிருந்தது.  இதுவரை தேவநாதனை கோவிலில் பார்த்ததை ரோகிணியிடம்கூட சொல்லிக்கொள்ளவில்லை அஞ்சனா.

பலதையும் எண்ணி குழம்பி தவித்தவள்… மனதுக்குள் ஒரு ஸ்திரமான முடிவை எடுத்தபின்தான் உறக்கத்தை தழுவியிருந்தாள்.

அன்றே வேல்முருகனுக்கும் போன் செய்து… தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டாள்.  இவள் எதிர்பார்த்த அளவு தந்தையிடம் இருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை.

இதை அவர் ஓரளவு முன்னமே எதிர் பார்த்திருந்தார் எனதான் சொல்ல வேண்டும்.  திருமணத்திற்கு பின் ஜெகன் வேலைக்கு செல்ல மறுப்பு சொல்லக்கூடும் என பயந்து மகள் இந்த திருமணத்தை மறுக்கிறாள் என தந்தை மனதில் நினைத்து கொண்டார்.  மகளின் மனது தெரிய அவருக்கு வாய்ப்பில்லையே.

அவருக்கும் இந்த வரன்மேல் அதிருப்தி வந்திருந்தது.  மாப்பிள்ளை நல்லவனாக இருந்தால் போதுமா….?  அவனது குடும்பத்தையும் பார்க்க வேண்டாமா….? என்ற எண்ணம் அவருக்கு.

நிச்சயத்தை வேல்முருகன் எண்ணியபடி…. அவரது ஊரில் கௌரவமாக நடத்துவதற்கு மறுப்பு தெரிவித்திருந்தனர் ஜெகன் வீட்டினர்.  அதற்கும் வேல்முருகன் ஒத்து வந்து, சரி… அவங்க ஆசைப்பட்டபடியே…. சென்னையிலயே ஹோட்டல்ல நடத்தலாம் என முடிவு செய்தார்.

அதற்கும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து மாற்று கருத்து வந்திருந்தது.  நிச்சயத்திற்கு நாங்களே எல்லா ஏற்பாடுகளையும் செய்து விடுகிறோம்….. அதற்கான செலவை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று செய்தி வந்தது.

அதற்குகூட அவர் சரி எனதான் நினைத்தார்.  அவர்கள் அதற்கு சொன்ன காரணத்தைதான் அவரால் ஏற்கமுடியவில்லை.

மாப்பிள்ளை வீட்டார், இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி… நவீன முறையில் மாடர்னாக…. நிச்சயத்தை செய்ய வேண்டும் என எண்ணினர்.  பெண்வீட்டாருக்கு அந்த அளவுக்கு இதைப்பற்றின விஷய ஞானம் இருக்காது.  ஆதலால் தாங்களே பார்த்து கொள்வதாக ஒளிவு மறைவு இல்லாமல் நேரிடையாகவே கூறியிருந்தனர் வேல்முருகனிடம்.

இதுதான் வேல்முருகனுக்கு உறுத்தலாக இருந்தது.  இதில் பெண்ணுடைய மேக்கப்பிலிருந்து அவள் நிச்சயத்திற்கு அணியும் ஆடை அணிகலன்வரை அவர்களது முடிவாகத்தான் இருக்கும் என தெரிவித்திருந்தனர்.

பாரம்பரியமாக நிச்சயத்திற்கு சேலை உடுத்துவதுதான் எங்களுடைய பழக்கம் என வேல்முருகன் கூறியதற்குகூட… சேலையெல்லாம் வேண்டாம். இப்பொழுதுள்ள நியு டிரன்டிற்கு ஏற்றது போல தாங்களே உடையை சூஸ் செய்வதாக கூறியிருந்தனர்.

வேல்முருகனுக்கு அப்பொழுதே சப்பென்று ஆனது.  மனதில் என்னடா இது, ஆரம்பத்திலேயே இவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தால் இன்னும் போக போக என்ன செய்வது.

இது மட்டும் இல்லையே.  திருமணத்திற்கு பின்னான மகளுடைய வாழ்க்கை என்ன ஆகும்?  அவசரப்பட்டுவிட்டோமோ….?  உடையைகூட பெண் விருப்பத்திற்கு விடாமல், இவர்கள் விருப்பத்திற்கு, இஷ்டத்திற்கு வளைக்க நினைக்கிறார்களே… என சஞ்சலம் வந்திருந்தது வேல்முருகனுக்கு.

இப்பொழுது மகளும் இந்த வரனில் விருப்பமில்லை என சொல்லவே… இதுதான் சாக்கு என யோசிக்க ஆரம்பித்தார்.  இருப்பது ஒரே மகள்.  இதுவரை அவரது வார்த்தையை மீறி அவள் நடந்தது இல்லை.  அவளுக்கு பிடித்த மாதிரியான வாழ்க்கையை அமர்த்தி கொடுப்பது தனது பொறுப்பு இல்லையா….?  அவளுக்கு பிடிக்காததை எதற்கு கட்டாயப்படுத்த வேண்டும் என எண்ணினார்.

முடிவு செய்தபிறகு தள்ளிப்போடாமல்…. மாப்பிள்ளை வீட்டை அழைத்து தங்களுக்கு விருப்பமில்லை என்பதை நேரிடையாகவே சொல்லிவிட்டார்.

அவர்கள் காரணம் கேட்டதற்கு…. மகளுக்கு இப்பொழுது கல்யாணத்தில் விருப்பமில்லை.  இரண்டு வருடம் சென்று செய்யலாம் என முடிவு செய்துள்ளோம்…. என கூறிவிட்டார் பொத்தாம் பொதுவாக தட்டிக் கழிக்க.

மாப்பிள்ளை வீட்டாரும் இதனைக் கேட்டு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.  அவர்களுக்கும் ஆரம்பத்திலிருந்து பெரிதாக இந்த வரனில் ஈடுபாடில்லை.  சிட்டியிலேயே அவர்கள் கல்ச்சருக்கு ஏற்ற மாதிரி இருந்தால் நன்றாகயிருக்கும் என எதிர்பார்த்திருந்தார்கள்.

முதன்முறை பெண் பார்க்க வந்தபொழுதே இவர்களைப் பார்த்து சரிவருமா… இவர்களோடு என யோசித்தவர்களை, ஜெகனின் பிடிவாதம்தான் இழுத்து வந்திருந்தது இதுவரை.  அவர்களும் ஒத்துக்கொண்டது மகனின் விருப்பத்திற்காகதான்.  இப்பொழுது பெண்வீட்டாரே விருப்பமில்லை என மறுத்ததும்  அவர்களுக்கும் வசதியானது.

இந்த செய்தியை கேட்டதிலிருந்து ஜெகனுக்குதான் ஏமாற்றமாக இருந்தது.  அஞ்சனாவுக்கு தனது போனில் இருந்து பலமுறை போன் செய்து பார்த்தான் காரணத்தை அறிய.  ஆனால் அஞ்சனா அவனது காலை அட்டென்ட் செய்யவேயில்லை.

ஜெகனுக்கு அத்தனை ஆத்திரம் வந்தது, அவளது செயலில்.  கூடவே ஆற்றாமையும் வந்தது.  இத்தனை நாள் அவனது மனதில்…. கட்டி வைத்திருந்த ஆசைகள் எல்லாம் கரைந்து காணாமல் கானல் நீரானது போல எரிச்சலானது பெண் வீட்டார் மறுப்பு கூறியதிலிருந்து.  ஏமாற்றமும் ஆத்திரமும் அவனை ஆட்கொண்டு புத்தியிழக்க செய்து கொண்டிருந்தது கொஞ்சம் கொஞ்சமாக.

பெங்களூர் நேரில் சென்றாவது அவளை பார்த்து என்ன…? ஏன்…. விருப்பமில்லை…?  எதற்காக திருமணத்தை நிறுத்திவிட்டாய் என்று காரணத்தை அறிந்து வர மனது கிடந்து துடித்தது.

ஆனால் அவனது ஈகோ அதற்கு இடம் கொடுக்க மறுத்தது.  அவளே உன்னை வேணாம்னு சொன்னதுக்கு அப்புறம், அவள்கிட்டபோய் எனக்கு வாழ்க்கை குடுன்னு…, கெஞ்சிட்டிருக்க போறியா…?  அப்படியென்ன பெரிய இவ… அவ…  அதான் பெங்களூர் போன அன்னைக்கே பார்த்தியே, திமிர் பிடிச்சவ.  எப்படி பேசினா… அன்னைக்கு?  ஒருத்தன் நம்மள பார்க்கறதுக்காக சென்னையிலிருந்து வந்திருக்கானேன்னு கொஞ்சம்கூட நினைச்சு பார்க்காம…, என்னவோ நாயைத் துரத்துனமாதிரி… வீட்டை விட்டு துரத்துனா இல்ல.  அந்த ராங்கி பிடிச்சவ.

இவள் இல்லைனா எனக்கு வாழ்க்கையே இல்லையா….?  இவள் எல்லாம் என் கால் தூசுக்கு சமம்.  என் ஸ்டேடஸ்க்கு கொஞ்சமும் அருகதையில்லாதவ.  ஏதோ பார்த்ததும் பிடிச்சு போயிடுச்சேன்னு இறங்கி போனா… ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கறா.  என் ஆசைக்கு விரோதமா… அவள் வேலைக்கு போறதுக்குகூட நான் ஓகே சொன்னேன்.  ஆனால் அவள் என்னை ஒரு பொருட்டாவே மதிக்கலை…

அவள் என்ன சொல்றது என்னை வேணாம்னு….,  நானே சொல்றேன்…. அவள் எனக்கு வேணாம்…. என உறுபோட்டுக் கொண்டிருந்தான் உள்ளுக்குள்.

ஆபிஸிலிருந்து வீட்டிற்கு வந்ததற்கு பிறகுதான் தனது போனில் ஜெகனிடம் இருந்து போன் கால் வந்திருப்பதையே பார்த்தாள் அஞ்சனா.  ஆபிஸில் போனை சைலன்ட் மோடில் போட்டு வைத்திருந்ததினால், கால் வந்ததே அவளுக்கு தெரியாமல் போனது.

ஜெகன் எதற்காக போன் செய்திருப்பான் என்று தெரியும்.  இருந்த டையர்டில் அவனிடம் பேச மனம் விழையவில்லை.  திரும்ப கூப்பிட்டா… பார்த்துக்கலாம் என விட்டுவிட்டாள்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!