Skip to content
Post Views: 6,287
திருமணத்திற்கு எடுத்த விடுமுறை முடிந்து திரும்ப வேலைக்கு வந்துவிட்டாள். தேவநாதனே கொண்டு வந்து விட்டுவிட்டு இரண்டுநாள் அவளுடன் தங்கியிருந்து, திரும்ப அவனது தொழிலை கவனிக்க என சென்றுவிட்டான்.
திருமணம் முடிந்து நான்கு நாட்களிலேயே வேலைக்கு வந்துவிட்டாள். அதற்குமேல் அங்கு அவளால் இருக்கமுடியும் என தோணவில்லை. திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு போனதோடு சரி. வேறு எந்த சடங்கு சம்பிரதாயங்கள் ஏதும் நடைபெறவில்லை.
மறுவீடு அழைப்பது, விருந்து வைப்பது என எந்த நிகழ்ச்சியும்…. நடக்கவில்லை. அந்த நான்கு நாட்களை நெட்டித் தள்ளவே அவளுக்கு ஆயாசமாக இருந்தது.
காஞ்சனாவுக்கு தனது தங்கை வரவேண்டிய இடத்துக்கு அஞ்சனா வந்த மனவருத்தம் இருந்ததால், அவளால் சகஜமாக அஞ்சனாவிடம் பழக இயலவில்லை. மீனாவும், காஞ்சனாவும்…. அஞ்சனாவிடம் பேசாமல் ஒதுங்கி இருப்பதால், கீர்த்தியும் அஞ்சனாவிடம் பேச தயங்கினாள்.
Advertisement
அறையிலேயே அடைந்து கிடக்க பிடிக்காமல்… தேவா… செல்வதுரையிடம் சொல்லிவிட்டு சென்னைக்கு வந்துவிட்டாள். அவளது வீட்டிற்கு வந்ததற்கு பின்தான் அவளால் இயல்பாக இருக்க முடிந்தது. எப்படி புகுந்த வீட்டினருடன் சேர்ந்து வாழப்போகிறோம் என அவளுக்கு மனதில் மலைப்பாக இருந்தது.
காலையில் அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தவள்… காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு வந்து கதவைத் திறந்தாள். வெளியில் தேவநாதன் நின்று கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் கண்களை விரித்து நின்றாள். நேற்று காலையில்தான் இங்கிருந்து சென்றிருந்தான். இதோ இன்று காலையில் வந்து நிற்கிறான்.
Advertisement
“ஓய்…. என்ன இளிப்பு…..? வழிவிடுடி…” என அவளை பிடித்து நகர்த்திவிட்டு உள்ளே நுழைந்தான்.
Advertisement
“வேலையிருக்கு, வீக்கென்ட்தான் வருவேன்னு… சொல்லிட்டு போனீங்க…”
“ஏன்டா….. வந்தேன்னு கேட்கறியா…?”
“ம்கூம்… வீக்கென்ட் வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு போனீங்களே. திடீர்னு வந்து நிக்கறீங்களேன்னு… கேட்டேன்…”
Advertisement
“அதை உன் மாமனார்கிட்டதான் கேட்கனும். மனுஷன் என்னை அங்க இருக்க விடலை. துரத்து விட்டுட்டார்….” என்றான் சட்டையின் முன் பட்டனை கழற்றிவிட்டு, தளர்வாக சோபாவில் காலை நீட்டி உட்கார்ந்து கொண்டே.
அவனைப் பார்த்து சிரித்துகொண்டே, பேனை புல் ஸ்பீடில் வைத்தவள், பிரிட்ஜிலிருந்து சில்லென, தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். கணவனைப் பார்த்த மகிழ்ச்சி இன்னும் முகத்தில் மீதமிருந்தது அவளுக்கு.
“என்ன இளிப்பு…..? கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் கூட ஆகலை. அவளை அங்க தனியா விட்டுட்டு, நீ இங்க என்னடா…. பண்ற…? கிளம்பு கிளம்புன்னு துரத்தி விட்டுட்டாரு. என் வேலையகூட கவனிக்க விடமாட்டேன்றார்” என சலித்து கொண்டான்.
சிரித்துக்கொண்டே…. “சாப்பிட வாங்க. நானும் இப்பதான் சாப்பிட உட்கார்ந்தேன். வாங்க சேர்ந்து சாப்பிடலாம்” என அழைப்பு விடுத்தாள்.
“நீ உனக்கு மட்டும் செஞ்சிருப்பே. நீ சாப்பிடு…. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வெளிய போய் சாப்பிட்டுக்கறேன்” என்றான். அவள் வேலைக்கு கிளம்புவதற்குள் வந்துவிட வேண்டும் என வேக வேகமாக காரை ஓட்டி வந்திருந்தான்.
“இல்லயில்ல… மாவிருக்கு. வாங்க சாப்பிடலாம்…” என கிட்சனுக்குள் நுழைந்தாள். அவளுடனே கிட்சனுக்குள் நுழைந்தவன், அங்கு பேக் செய்து வைத்திருந்த லன்ச் பாக்சை திறந்து பார்த்தான். எலுமிச்சை சாதமும், வாழைக்காய் வறுவலும் அதனுள்ளே இருந்தது.
ஒரு ஸ்பூன் எடுத்து…, அதை வாயில் எடுத்து போட்டு சுவைத்தவன், “ம்ம்… டேஸ்ட் நல்லாயிருக்கு…..’’ சமைக்கலாம் தெரியுமா…..?” என்றான் கேள்வியாக.
அவனை திரும்பி பார்த்து மென்மையாக முறைத்தவள்…, “வீட்ல இருக்கும்போதே அம்மாவோட சேர்ந்து… கொஞ்சம் கொஞ்சமா செய்ய கத்துகிட்டேன். பெங்களூர் வேலைக்கு போனதும் நாங்களேதான் சமைச்சு சாப்பிட்டோம்”.
அஞ்சனா கேஸை ஆன் செய்து சுடச்சுட அவனுக்கு தோசை ஊற்றிக் கொடுத்தாள். “வெங்காயச் சட்னியும், பூண்டு மிளகாய் பொடியும் வைத்து கொடுத்தாள் தொட்டுக்கொள்வதற்கு……”
தோசையை பொடியில் தொட்டு வாயில் வைத்தவன்…, “நல்லாயிருக்கு அனு” என்று சுவைத்து சாப்பிட்டான். சாப்பிட்டு முடித்து கைகழுவியவன்… “நீ போய் சாப்பிடு… நான் ஊத்தறேன்” என அவளிடம் இருந்து கரண்டியை வாங்கினான்.
“எனக்கு ஏற்கனவே சுட்டு வச்சிட்டேன். ஹாட்பேக்ல இருக்கு. உங்களுக்கு கொஞ்சமா டீ போடவா…..?” என்றாள்.
“இப்ப வேணாம்… கொஞ்ச நேரம் ஆகட்டும். நான் அப்புறமா குடிச்சுக்கறேன். நீ கிளம்பு. உன்னை ட்ராப் பண்றேன்”.
சாப்பிட்டு முடித்து கிளம்பிவள், “லன்ச்சுக்கு நான் வேணா உங்களுக்கு ஆர்டர் பண்ணிடவா…? இங்க பக்கத்துல ஒரு மெஸ் இருக்கு. வீட்டு சாப்பாடுதான். நாம முன்னமே சொல்லிட்டா… செஞ்சு கொண்டுவந்து வீட்டிலே கொடுத்துடுவாங்க. போன் பண்ணி சொல்லிடவா….?” என நின்றாள்.
“தேவையிருக்காது அனு. சப்ளையரை மீட் பண்றதுக்காக, நான் வெளியே கிளம்பறேன். அங்கேயே பார்த்துக்கறேன்”.
“சரி” என்றவள், “கதவை லாக் பண்ணிக்கோங்க நான் கிளம்பறேன்…” என்றாள்.
“ஏய்… இரு. நான் டிராப் பண்றேன். நானும் கிளம்பறேன்….”
வீட்டின் ஒரு சாவியை அவனிடம் கொடுத்தாள். “எனக்கு முன்னமே நீங்க வந்துட்டா, உங்களுக்கு கதவு திறக்க வேணுமே, வச்சுக்கோங்க”.
அவளை கொண்டு சென்று அவளது அலுவலகத்தில் இறக்கிவிட்டான். “ஈவ்னிங் நானே வந்துடறேன்…. நீங்க அலைய வேணாம்…” என்று அலுவலகத்துக்குள் சென்று விட்டாள்.
மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வரவே எட்டு மணிக்குமேல் ஆனது. இவளுக்கு முன்பே தேவநாதன் வந்திருந்தான் வீட்டிற்கு.
இவளை இத்தனை நேரம் கழித்து பார்த்தவனுக்கு ஏதும் சொல்ல முடியவில்லை. ‘’தினமும் இவ்வளவு நேரம் ஆகுமா அனு’’ என்றான்.
“டைம்லாம் சொல்ல முடியாது. சிலநாள் ஒன்பதுகூட ஆகும்”.
“நீங்க எப்ப வந்தீங்க……?”
“நான் நாலு மணிக்கே வந்திட்டேன். வந்து ஒரு தூக்கம் போட்டும் முழிச்சாச்சு….”
“மதியம் சாப்பிட்டீங்களா……?”
“ம்ம்… போன இடத்துலே சப்ளையரோட சேர்ந்து சாப்டுட்டேன்….”
அவளுக்கும் அசதியாக இருந்தது. லன்ச் பாக்சை எல்லாம் கொண்டு வந்து சிங்கில் பிரித்து போட்டவள், பாத்ரூம் சென்று, ஒரு குளியல் போட்டு… கிட்சனுக்கு ள் வந்தாள்.
டீப்போட்டு குடித்திருப்பான்போல. சிங்கிள் டீப்போட்ட பாத்திரம் டம்ளர் எல்லாம் இருந்தது. அடுப்பில் சர்க்கரை துகள்… டீத்தூள் என சிந்தி இருந்தது. அதனை பார்த்து சிரித்துக் கொண்டவள்… டீப் பாத்திரத்தை கழுவி, பாலைக் காய்ச்சி…., ஒரு டம்பளரில் கொஞ்சம் காப்பி சேர்த்து எடுத்துக்கொண்டு, டேபிளில் வந்து அமர்ந்தாள்.
அவளைப் பார்த்தவன், “இந்நேரத்துல காப்பி குடிக்கிறே… பசிய அடக்கிடாதா….., சாப்பிடற நேரத்துல காப்பி எதுக்கு…?” என்றான் அக்கறையாக.
“ஹ்ம்ம்….. தலைய வலிக்குது, சூடா குடிச்சா கொஞ்சம் தேவலையா இருக்கும்…” என சூடான டம்ளரை நெற்றிமீது வைத்து ஒத்தடம் கொடுப்பது போல உருட்டினாள்.
அவள் பின்பக்கம் வந்து நின்றவன் “ரொம்ப வலிக்குதா…?” என அவள் நெற்றியைப் இதமாக பிடித்துவிட்டான். அவன் விரல்கள் மிதமான அழுத்தத்தை கொடுத்து பிடித்து விட்டதில், சுகமாக இருந்ததால், கண்ணை மூடி, பின்பக்கமாக நின்றிருந்த, அவன் வயிற்றின் மேலேயே தலையை பின்பக்கமாக சாய்த்து கொண்டாள்.
சில நிமிடங்கள் அந்த சுகத்தை அப்படியே அனுபவித்து சாய்ந்திருந்தவள், “தேங்க்ஸ்…” என சிரித்துகொண்டே அவனிடமிருந்து விலகி எழுந்து கிட்சனுக்கு சென்றாள்.
அவள் பின்னாலேயே வந்தவன், “உனக்கு முடியலனா….. கடையில வாங்கிக்கலாம் மா.. கஷ்டப்படாத…” என்றான் கனிவாக.
“ஏன்….? நீங்க சமைச்சு தர மாட்டீங்களா…?”
“ஹா…. ஹா….. நானா….? யார் சாப்டறது…. அதை…? எனக்கு தெரிஞ்சது ஒன்னே ஒன்னு டீப்போட மட்டும்தான். சமயத்துல எப்பவாவது தோசை ஊத்துவேன். இதுவே ரேர்தான். கிட்சனுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்…” என்றான் பெருமையாக.
“பரவாயில்லை. இனிமே கத்துக்கோங்க…”
“இதுவேறயா… ஹ்ம்ம்…. என்ன பண்ணனும்…. சொல்லு…?”
“சும்மாதான் சொன்னேன். இட்லி ஊத்தவா… சாப்பிடறீங்களா….?”
“உன்னால என்ன முடியுமோ…..? அதையே செய். எது இருந்தாலும் நான் சாப்பிடுவேன்”.
“ஹ்ம்ம். சப்பாத்தி செய்யலாம்னு பிளான் வச்சிருந்தேன். ஆனால் இப்ப மூட் இல்ல. இட்லி ஊத்திடறேன். தொட்டுக்க சாம்பார் வச்சிடவா….”.
“பொடி இருந்தாகூட போதும் அனு… கஷ்டப்படாத”.
“இருக்கட்டும். நாளைக்கு காலைலயும் யூஸ் ஆகும்…” என குக்கரில் பருப்பு வைத்துவிட்டு, கேரட்டை எடுத்து தோள் சீவி, நறுக்க ஆரம்பித்தாள்.
அவள் எடுத்து வைத்த சாம்பார் வெங்காயத்தை உரித்து வைத்தவன்…, “வேற ஏதாவது செய்யவா…..” என கேட்டு நின்றான்.
“அவ்வளவுதான்… நீங்க உட்காருங்க. தாளிச்சு விட்டா… வேலை முடிஞ்சுடுச்சு…”
“இருக்கட்டும் நீ செய்யறத பார்க்கிறேன். கத்துகிறேனா பார்க்கலாம்”.
அவனைப் பார்த்து சிரித்தவள், அவனிடம் பேசிக்கொண்டே காயை வதக்கி சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விட்டவள், பருப்பு வெந்ததும், அதனுடன் சேர்த்து கொதிவிட்டு, தாளித்து கொட்டினாள்.
“இட்லி உப்புமா.. பிடிக்குமா உங்களுக்கு…?”
“ஏன் கேக்கற…? உனக்கு பிடிக்குமா….? எப்பவாவது சாப்பிடுவேன். ரொம்ப பிடிக்கும்னுலாம் சொல்ல முடியாது. பிடிக்கும்…”
“எனக்கு ரொம்ப பிடிக்கும். அம்மா எனக்காகவே இட்லிய எக்ஸ்ட்ரா பண்ணி, பிரிட்ஜில எடுத்து வச்சி, மறுநாள் உப்புமா செஞ்சு கொடுப்பாங்க. அதுவும் அந்த உப்புமால…. நெய் முந்திரி பருப்பு பச்ச பட்டாணி, காய் எல்லாம் சேர்த்து அம்மா பண்றது எனக்கு ரொம்ப பிடிக்கும்”.
“அதே மாதிரி… இராத்திரி மீந்த சாதத்துல, மறுநாள் காலையில புளி ஊத்தி ஊறுகா மிளகாய் எல்லாம் சேர்த்து, கிளறி குடுப்பாங்க…. அதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்…”
அவள் சொல்லும் போதே, அவளது கண்களில் தெரிந்த ஏக்கத்தை பார்த்தவன்.., “அத்தைய ரொம்ப மிஸ் பண்றியா……?” என்றான் கண்டு கொண்டவனாக.
“ம்ம்…. ரொம்ப…. ஸ்கூல் டேஸ் மட்டும்தான் அம்மாவோட இருக்க முடிஞ்சது. அப்புறம் காலேஜ் படிக்க, வேலைக்குன்னு வெளிய வந்தாச்சு. எப்ப வீட்டுக்கு போனாலும். அம்மா கையால ஒரு பிடி பிடிச்சுடுவேன். அவங்க சாப்பாடுன்னா… அவ்வளவு பிடிக்கும்…” என்றாள் ராகமாக.
“அத்தை கால் பண்ணாங்களா…….?”
“ம்ம். அப்பாதான் பேசவேயில்ல. நானா பேசனாகூட இரண்டு வார்த்தைக்கு மேல பேச மாட்டேன்றாங்க. என்மேல இன்னும் கோவம் போகலன்னு நினைக்கறேன்…”
அஞ்சனாவுக்கு பேசும்போதே கண்கள் கலங்கியது வேல்முருகனை நினைத்து.
“சரியாயிடுவார் அனு. உங்கப்பாக்கு உன்மேலவிட என்மேலதான் கோவம். அவருக்கும் கொஞ்சம் டைம் வேணும் இல்ல. இதெல்லாம் தெரிஞ்சுதான நாமளும் கல்யாணம் பண்ணோம். உடனே அவங்க நம்மள ஏத்துக்கனும்னு, எதிர்பார்க்க முடியுமா…? இது என்ன சினிமாவா…? எல்லாம் உடனே உடனே மாறுறதுக்கு…”
“அவங்களுக்கு இதை எல்லாம் ஏத்துக்க… டைம் எடுக்கும் இல்ல. வெயிட் பண்ணுவோம். விடு…. சீக்கிரமே பேசுவார் உன்கிட்ட. வருத்தப்படாத…. பசிக்குது. வா சாப்பிடலாம்…” என பேச்சை மாற்றி இட்லியை எடுத்து வந்து டேபிளில் வைத்தான்.
திருமணம் பேசியதிலிருந்தே வேல்முருகன் மகளிடம் சரியாக பேசவில்லை. திருமணத்திற்கு ஒத்துக் கொண்டிருந்தாலும், தான் ஆசையாக வளர்த்த ஒரே மகளின் வாழ்வு இப்படியா அமைய வேண்டும் என உள்ளூர உறுத்தல் இருந்தது அவருக்குள்.
எத்தனை ஆசை இருந்தது? அந்த தந்தையின் நெஞ்சுக்குள். மகளின் திருமணத்தை ஊர் மெச்ச கோலாகலமாக, திருவிழாபோல் நடத்த வேண்டும் என்று.
ஆனால் இப்பொழுது எதற்குமே வழியில்லாமல் சிம்பிளாக நடந்ததை எண்ணி வருத்தமாக இருந்தது அவருக்கு. எதிலும் தலையிட, அவருக்கு விருப்பமும் இல்லை. மனமும் இல்லை. மகளுக்காக, அவளது ஆசைக்காக அனைத்தையும் கையைக் கட்டிக்கொண்டு பார்த்திருந்தார் பொம்மைபோல்.
திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு வந்த பின்பும், அஞ்சனாதான் அவரை போனில் அழைத்து பேசுவாள். அதற்கும் இரண்டொரு வார்த்தைகளில் பதில் கூறிவிட்டு வைத்துவிடுவார். ரோகிணியும் லட்சுமியும் தினமும் பேசி விடுவார்கள் பெண்ணிடம்.
இன்றும் ரோகிணி பேசும்பொழுது… வேல்முருகனிடம் பேச முயன்றாள். ஆனால் அவர்.. சில நொடிகளிலேயே பேச்சை முடித்து கொண்டார்.
தந்தையின் விருப்பத்துக்கு எதிராக, தான் தேவாவை திருமணம் செய்ய நினைத்தது, அவருக்கு வருத்தத்தை தந்திருக்கிறது என புரிந்துகொண்டாள். இருந்தும் அவரது ஒதுக்கத்தை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து மருகினாள் உள்ளுக்குள்.
தொடரும்.
error: Content is protected !!