Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வசந்தங்கள் வாடுவதில்லை

வசந்தங்கள் வாடுவதில்லை 27

அண்ணியின்மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர் ரோகிணி.  மீனா இப்படி கீழ்தரமாக இறங்கி தனது மகளையும், தங்களையும் பேசியது அவரை காயப்படுத்தியிருந்தது.  வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் உள்ளூர அவருக்கும் வேதனை இருந்தது..

அதற்கடுத்து நேரில் பார்க்கும் போதாவது வருந்தி மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்த்தார்.  அதுவுமில்லை,  மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும், அவரே வந்து சமாதானமாக பேசவாவது செய்வார் என எண்ணியிருந்தார்.  அதுவும் பொய்த்தது.

ரோகிணிக்கும் மனதில், நாங்க என்ன அவ்வளவு தாழ்ந்து போயிட்டமா…?  பொண்ணை பெத்தவங்கன்னா அவ்வளவு இளக்காரமா…?  தப்பு செஞ்சது அவங்க.  அவங்களுக்கே இவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கும்போது நான் ஏன் இறங்கிபோகனும்? என அண்ணியின் மேல் கோவமாக இருந்தார்.

எப்பொழுதும் என்ன சண்டை என்றாலும், எந்த விகல்பமும் இல்லாமல் ரோகிணி அண்ணியிடத்தில் அன்பாக இருப்பார்.  இந்த முறை தன்னிடம் பேசகூட யோசிப்பவரைப் பார்த்து மீனாவுக்கு ஆத்திரமாக வந்தது.



Advertisement

என்கிட்டயே இவள் வீம்பை காமிக்கிறாளா…..? என அவரும் பேசாமல் இருந்தார்.  இப்படி போட்டா போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். இதில் தேவநாதனுக்கும், அஞ்சனாவுக்கும்தான் முழி பிதுங்கியது.

குத்துவிளக்கு, பூஜை சாமான்கள், சந்தன சொம்பு, குங்குமச்சிமிழ், சந்தன கிண்ணம் என எல்லாமே வெள்ளியில் பெண்ணுக்கு சீதனமாக கொண்டு வந்திருந்தார் ரோகிணி.

அதுமட்டும்மில்லாமல், வெள்ளியில் தட்டு, டம்ளர், சொம்பு என இன்னும் சில பாத்திரங்களும் இருந்தது.

Advertisement

மகளுக்கான சீர்வரிசைகள் இன்னும் எதுவும் கொடுக்கவில்லை.  அதுக்கான சந்தர்ப்பம் அமையவில்லை.  திருமணம் கோவிலில் நடந்ததால்… பொண்ணும் மாப்பிள்ளையும் மறுவீடு வரும்போது கொடுத்து விடலாம் என்றிருந்தனர்.  அதுவும் நடக்கவில்லை.

Advertisement

அஞ்சனா இப்போது தங்கியிருப்பதும், வேல்முருகனின் வீடுதான்.

அஞ்சனா வேலையை சென்னைக்கு மாற்றி வந்த சில மாதங்களிலேயே இந்த வீட்டை வாங்கி அஞ்சனாவின் பேரிலேயே ரிஜிஸ்டர் செய்திருந்தார்.  அதிலிருந்த சாமான்கள் எல்லாம்கூட அவர் வாங்கி தந்ததுதான்.

இருந்தும் முறையாக கல்யாணத்திற்கு பிறகு சீர் செய்ய எண்ணி, செல்வதுரையிடம் கேட்டதற்கு, அஞ்சனாவின் விருப்பம் என்றுவிட்டார் அவர்.

Advertisement

அஞ்சனாவோ இருக்கிற பொருட்களே போதும்.  வீணாக வீட்டை அடைக்க வேண்டாம் என்றிருந்தாள்.  ஆகையால் பணமாக கொடுக்க முடிவு செய்து அவளது அக்கௌண்டில் போட்டிருந்தனர்.

முக்கியமான வெள்ளி சாமான்கள், பூஜைக்குரிய சாமான்கள் மட்டும் இன்று ரோகிணி எடுத்து வந்திருந்தார்.  அதில் முக்கால் வாசி வெள்ளியால் ஆன பாத்திரங்களாகவே இருந்தது.  திருமணத்திற்கே மகளுக்கு நிறைய தங்க நகைகள் செய்திருந்தார்.

இன்றும் தட்டுவரிசையில் அவளுக்கு கழுத்துக்கு, காதுக்கு, கைக்கு என இரண்டு செட் எடுத்து வந்திருந்தார்.  அஞ்சனாவுக்கு பிடித்த மாதிரி ரூபி, எமரால்ட் கற்களும், முத்துக்களும் பதித்தது போல நெக்லஸ், வளையல், தோடு, மோதிரம் என்று ஒரு செட் இருந்தது.

சுத்த பவழத்தால் ஆன ஆரம் வளையல், தோடு என்று மற்றொரு செட் இருந்தது.  இதில் மாப்பிள்ளைக்கும் பிரேஸ்லெட், மோதிரம் இருந்தது. திருமணத்தின் போதும் மாப்பிள்ளைக்கும் செயின் பிரேஸ்லெட் மோதிரம் எல்லாம் போட்டிருந்தனர்.  இப்பொழுதும் தேவநாதனுக்கு தனியாக யானை முடி வைத்த மோதிரம், பிரேஸ்லெட் என செட்டாக எடுத்து வந்திருந்தனர்.

கொண்டு வந்திருந்த குத்துவிளக்கு, காமாட்சி விளக்குக்கு பொட்டுவைத்து, பூ வைத்து, அதனை ஏற்றி, நலங்கு வைப்பதற்கு ஏதுவாக எல்லாவற்றையும் தயார் செய்து வைத்தார் ரோகிணி.  பிரேமாவும் வந்து ரோகிணியுடன் சேர்ந்து உதவி செய்தார்.

அஞ்சனா ரெடியாகி வந்ததும்  மனை போட்டு, அவளை உட்கார வைத்தனர்.  தேவநாதனை அழைத்து அவன் கையில் மாலையைக் கொடுத்து அவளுக்கு போடச் சொன்னார்கள் சொன்னார்கள்.

அவனுக்கு இப்பொழுதுதான் முகத்தில் இலகுவான புன்னகை வந்தது.  இதுவரை பெரியவர்களை நினைத்து குழம்பி டென்ஷனாக நின்றிருந்தவனுக்கு, அஞ்சனா கழுத்தில் மாலை போட சொன்னதும்தான் முகம் தெளிந்தது.  மனைவியை மையலாக பார்த்துக் கொண்டே மாலையை அணிவித்தான்.

அதுவரை ஏதும் செய்யாமல் ஒதுங்கியே இருந்த மீனாகூட கணவரின் அழுத்தமான முறைப்பில் பயந்து, அஞ்சனாவின் அருகே வந்துவிட்டார்.

மீனா, ரோகிணி, பிரேமா, காஞ்சனா, கீர்த்தி என ஐந்து பெண்களாக சேர்ந்து, தாலி பிரித்து கோர்த்தனர்.  புதிய செயினில் கோர்த்து அதை தேவநாதனின் கையில் கொடுத்து, அவனையே அணிவிக்க சொன்னார்கள்.

கோர்த்து கொடுத்த தாலி செயினை கையில் வாங்கியவனின் உடலில் சொல்ல முடியாத சிலிர்ப்பு. இதுவரை அனுபவித்திராத ஆனந்தம் மனம் முழுவதும்.  திருமணத்தில் தாலிகட்டும் போதுகூட டென்ஷனாகதான் இருந்தான்.

அன்றைய தினத்தை அவனால் சந்தோஷமாக அனுபவிக்க முடியவில்லை.  எங்கே…?  யார்…? எந்த நேரத்தில்…, என்ன பிரச்சினை செய்வார்களோ? என்ற பதற்றமும், படபடப்பும் நெஞ்சு முழுவதும் இருந்துகொண்டே இருந்தது.  சுழன்றடிக்கும் சூறாவளியாகதான் அவன் மனம் தத்தளித்து இருந்தது, அன்றைய சூழ்நிலையில்.

ஆனால் இப்போது அதையெல்லாம் மறந்தவனாக, மனைவியை மட்டுமே ரசித்து நின்றான்.  கல்யாணத்தின்போது தவறவிட்ட தருணங்களை எல்லாம் மொத்தமாக மீட்டுவிட மனம் துடித்ததுபோல கணவனுக்கு.  கிட்டத்தட்ட அஞ்சனாவின் அனுபவமும் அப்படிதான் இருந்தது திருமணத்தின் போது.  அதனால் அவளுமே அவனை ஆசையாகதான் பார்த்திருந்தாள்.

சற்றுமுன் நடந்தை எல்லாம் ஒத்திவைத்து, தங்களுக்கான உலகத்தில் மூழ்கியிருந்தனர் இருவருமே.  கொஞ்சம் முன் கணவனாக மனைவிக்கு மாலையிட்ட தருணத்தில், இருந்த உற்சாகத்தைவிட இன்னும் ஆனந்தம் தெரிந்தது தேவநாதனின் முகத்தில்.

தாலி செயினை கையில் பிடித்திருந்தவன் முகத்தில் குறும்பு புன்னகை மின்னியது, மனைவியைப் பார்த்து.

அச்சோ இவங்க என்ன எல்லார் எதிர்லயும் இப்படி பார்த்து வைக்கிறாங்க… என அஞ்சனாவுக்கும் கூச்சமாக இருந்தது.

அவனது இமையிறகால் அவளை வருடிக்கொண்டே, நிதானமாக மனைவியின் கழுத்தில் தாலிச்செயினை போட்டுவிட்டான்.  காந்தம்போல அவளையும் கட்டியிழுத்து கொண்டிருந்தான் கண்களால்.  ஆதலால் அஞ்சனாவாலும் பார்வையை அவனைவிட்டு அசைக்க முடியவில்லை.

சுற்றம் மறந்து தங்களை மட்டுமே நினைவில் நிரப்பிக் கொண்டிருந்தனர் தம்பதியர்.

என்னவோ எல்லோரது கண்களும் இவர்கள் மீதுதான்.  ரோகிணிக்கு இரண்டு பேரும் எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா, இருக்கனும் என்ற எண்ணம் மனதில்.  மகள் மருமகனின் முகத்தில் தெரிந்த அன்பின்  சங்கமத்தில் சந்தோஷமும் நிம்மதியும் வந்திருந்தது மனதில் அவருக்கு.

லஷ்மி மனதில், பிள்ளைங்க எப்பவும் இதேமாதிரி கண்ணுக்கு நிறைவா, ஒத்துமையா, சந்தோஷமா தீர்காயுசோட இருக்கனும் என  வாழ்த்திக் கொண்டிருந்தார்.

மீனாவுக்கே வெட்கம் வந்தது… மகனைப் பார்த்து.  இத்தனை பேர் மத்தியில கொஞ்சம்கூட கூச்சமில்லாம என்ன பண்றான் இவன், என அழகாக வெட்கப்பட்டு கொண்டே திரும்பினார்.   அங்கே செல்வதுரையோ நீண்ட நாள் கழித்து மனைவியைதான் அன்பாக பார்த்துக் கொண்டிருந்தார்.

மீசையை நீவிக்கொண்டே… தன்னை பார்த்து நின்றிருந்த கணவரைப் பார்த்ததும் இன்னும் வெட்கத்தில் முகமெல்லாம் சிவந்து போனார் மீனா.

அச்சோ கூறுகெட்ட மனுஷன், எங்க வந்து என்ன வேலைப் பார்க்கிறாரு…?  இவரை மாதிரியேதான் இருக்கான், சின்னவனும் என முகம்முழுக்க புன்னகையுடன், முகத்தை திருப்பி நின்றார்.

நிஷாவோ, “ம்க்கும்….” என தொண்டையை கனைத்தவள் “அண்ணே…  பப்ளிக்… பப்ளிக்…, நாங்கல்லாம் இருக்கோம்.  பொண்டாட்டிய தனியா சைட் அடிச்சுக்கங்க’’ என்றாள் கிண்டலாக.

ஹா… ஹா…. என கொல்லென எல்லோரும் சிரித்துவிட்டனர்.  அஞ்சனாவுக்கும் நாணத்தில் முகம் சிவந்துவிட்டது.  தேவநாதனுக்கும் எல்லோர் முன்னிலையிலும் வெட்கமாக இருந்தது போல.  விரிந்த புன்னகையுடன் தலையை கோதிக்கொண்டே முகத்தை திருப்பிக் கொண்டான்.

மீனா, “அவனிடம் குங்குமச் சிமிழை எடுத்து நீட்டி தாலில பொட்டு வச்சிட்டு…, அப்படியே அவள் நெத்தியிலேயும் பொட்டு வைச்சுவிடு…’’ என்றார்.

அவரின் வார்த்தைகளில் ஆச்சர்யமாகப் அவரை நிமிர்ந்து பார்த்தான்.

மீனா, “என்ன டா பார்க்கறே…?  எடுத்து வை. என ஒரு அதட்டல் போடவும், புன்சிரிப்புடனே தலையசைத்து கொண்டே குங்குமத்தை எடுத்து மீனா சொன்னது போலவே, மாங்கல்யத்திலும், அஞ்சனாவின் நெற்றியிலும் வைத்துவிட்டான்.

பெண்கள் எல்லோரும் நலங்கு வைத்து முடித்த பிறகு, தேவநாதனையும் அழைத்து அவனையும் நலங்கு வைக்க சொன்னார்கள்.  வேண்டுமென்றே சந்தனத்தை எடுத்து மனைவியின் கன்னத்திலும், கைகளிலும், கோடு போல நீளமாக இழுத்தவன், நெற்றியில் சின்னதாக திலகமிட்டான்.

தேவநாதனை கிழக்கு முகமாக பார்த்து நிற்க வைத்து, அஞ்சனாவை அவனது காலில் விழுந்து வணங்க சொன்னார்கள்.  மனம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க மனைவியை அட்சதை தூவி ஆசிர்வதித்து இரண்டு கைகளாலும், தூக்கி நிறுத்தினான்.

கணவன் மனைவி இருவரும் தம்பதியராக நின்று பெரியவர்கள் எல்லோரின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார்கள்.

ஆரம்பிக்கும்போது இருந்த சலசலப்பு எல்லாம் மறைந்து மகிழ்வாகவே நடந்திருந்தது பங்ஷன்.

அடுத்து பந்தி பரிமாறும் வேலை ஆரம்பமானது.  கார்த்திக், விவேக், தேவநாதன் முவருமே பரிமாறும் வேலையை எடுத்துகொண்டனர்.

சாப்பிட்டு முடித்ததுமே நாச்சியப்பன் குடும்பத்தினர் புறப்பட்டிருந்தனர்.  நிஷா மறுநாளே பெங்களூர் செல்ல இருப்பதால், தாய் வீட்டிற்கு அவளது வீட்டாருடன் கிளம்பியிருந்தாள்.

நிஷா போகும்போது தேவநாதனிடம், “அண்ணா… உங்க கல்யாணத்துக்கு வந்திருந்தப்பவே, உங்க பொண்டாட்டிகிட்ட, இரண்டு பேரையும் விருந்துக்கு வர சொல்லி சொல்லியிருந்தேன்.  அவள் இதோ அதோன்னு  இன்னும் வரல.  ஏற்கனவே நான் அவள் மேல கோவமாயிருக்கேன்.  அட்லீஸ்ட் நீங்களாவது அவளை அழைச்சிட்டு எங்க வீட்டுக்கு வாங்க…” என உரிமையாக அழைத்தாள்.

உமாபதியும் தேவநாதனிடம் “கண்டிப்பா வாங்க பிரதர்.  உடனே கிளம்பற மாதிரி வராதீங்க.  இரண்டு மூனு நாள் தங்கற மாதிரி வாங்க…” என அழைப்பு விடுத்தான்.

“நிச்சயம் வரேங்க….” என வாக்கு கொடுத்து அனுப்பியிருந்தான் தேவநாதன் அவர்களை.

சாப்பிட்டு முடித்தவுடன் புறப்படத் தயாரான பெற்றோர்களை இருந்துவிட்டு செல்லலாம் என பிடிவாதம் பிடித்து அஞ்சனா தங்க வைத்திருந்தாள்.  மாலை வரை இருந்த அஞ்சனாவின் பெற்றோர் கிளம்புவதற்காக ஆயத்தமானார்கள்.

லட்சுமி தேவநாதனின் கையைப் பிடித்துகொண்டு, “வயசுல சின்னப் பிள்ளையா இருந்தாலும்… என் பேரன்ற உரிமையில கேட்கறேன்.  மனசுல எதையும் வச்சுக்காம….. என் பேத்திய அழைச்சிட்டு வீட்டுக்கு வாயா…..” என்றார் கண்களில் கண்ணீர் நிரம்ப.

“அச்சோ… என்ன பாட்டி இப்படியெல்லாம் பேசறீங்க…?  கண்டிப்பா வரேன்.  எனக்கு மாமா என்கிட்ட பேசலையே…, எங்களை வீட்டுக்கு கூப்பிடலையேன்னுதான் வருத்தம்.  வேறெந்த வருத்தமும் இல்லை”. என்றான் வேல்முருகனைப் பார்த்து, அவரின் முகத்திற்கு நேராகவே.

தேவநாதன் கூறியதைக் கேட்டு வேல்முருகனுக்கும் மனம் சுணங்கியது.  அவன் சொல்வதும் நியாயம்தானே.  ஆயிரம் இருந்தாலும், வீட்டின் மாப்பிள்ளை இல்லையா…?  அவனுக்கான மரியாதையை கொடுத்துதானே ஆகவேண்டும் என மனம் நினைத்தாலும், வெளியில் பேச இன்னும்  தயக்கம் இருந்தது அவருக்கு.

ரோகிணிக்கும் என்ன இருந்தாலும் மருமகன் இல்லையா…?  அந்த முறுக்கு இருக்கதானே செய்யும்.  இத்தனை வயசாகியும் இவருக்கு இருக்க அதே வீம்பு தானே, மருமகனுக்கும் இருக்கும் என எண்ணினார் மனதில்.

போகும் பொழுது எல்லோரிடமும் பொதுவாக தலையசைத்து புறப்பட்டு விட்டார் வேல்முருகன்.

அஞ்சனா மட்டும் அவரது கையை விடாமல் பிடித்துகொண்டே, கார் வரை நடந்து வந்தாள்.  பாட்டியின் கைகளை பிடித்துகொண்டே, ரோகிணியுடன் பேசியவாறு, தேவநாதனும் கார் வரை வந்திருந்தான்.

வேல்முருகன் காரில் ஏறுவதற்கு முன்னர், “மாப்பிள்ளைய அழைச்சுட்டு வீட்டுக்கு வாங்கடா…” என்றார் மகளிடம்.  அஞ்சனா சந்தோஷமாக சரி எனத் தலையசைத்தாள்.  தேவநாதனும் அங்கேதான் நின்றிருந்தான்.  அவன் காதிலும் வேல்முருகன் சொன்னது விழுந்தது.  இருந்தாலும் பார்வையை அவர் பக்கம் திருப்பவில்லை.

காரின் பின்பக்கம் லஷ்மி ஏறியவுடன், ரோகிணியும் ஏறி அமர்ந்தார்.  லஷ்மியும், ரோகிணியும் அஞ்சனா தேவநாதனைப் பார்த்து கையசைத்து, போய்வருகிறேன் என தலையசைத்தனர்.

காரில் ஏறி உட்கார்ந்தாலும் மருமகனிடம் பேச வேண்டும், வீட்டிற்கு அழைக்க வேண்டும் என மனதுக்குள்ளேயே தவித்துக் கொண்டிருந்தாரே தவிர,  நேரிடையாக பேச ஏதோ தடுத்தது வேல்முருகனை.

குரல்வளைக்கும் நெஞ்சுக்குழிக்கும் இடையே ஒரு பெரும் போராட்டம்தான் அவருக்கு.  பேரவஸ்தையாக இருந்தது நினைத்ததை வெளியில் சொல்ல முடியாமல்.

தேவநாதன் லஷ்மியிடம் சொல்லி வருத்தப்பட்டதை கேட்டதிலிருந்து, மருமகனை வீட்டிற்கு அழைக்க எண்ணம் இருந்தாலும், இன்னும் வார்த்தை வடிவம் பெறவில்லைபோல அவருக்கு.  எண்ணம் மட்டுமே உள்ளுக்குள் தடுமாறிக் கொண்டிருந்தது வேல்முருகனுக்கு.

மகளிடம் பேசினாலும் பார்வையெல்லாம் மருமகனிடம் தான் இருந்தது.

வேல்முருகனின் எண்ண அலைகளின் ஆழமோ, அல்லது அவரது பார்வையின் வீரியமோ… எதுவோ ஒன்று, தேவநாதன் தன்னையும் அறியாமல் டக்கென்று திரும்பி வேல்முருகனை நேருக்கு நேர் பார்த்தான்.

அந்த க்ஷணத்திற்காகவே காத்திருந்தவர் போல, மருமகனைப் பார்த்து புன்சிரிப்புடன் போய்வருகிறேன் என தலையசைத்தார்.  சம்மதமாக அவனது தலையும் தானாகவே அசைந்தது.

இதைப் பார்த்த பெண்களுக்கு முகத்தில் மகிழ்ச்சி.  இத்தனை நாள் தவத்திற்கு விடியல் கிடைத்ததுபோல.  ரோகிணிக்கும் லட்சுமிக்கும் சொல்லொணா நிம்மதி மனதில்.

கார் சென்ற பிறகும் அந்த திசையையே பார்த்து நின்றிருந்தாள் அஞ்சனா.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!