Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வசந்தங்கள் வாடுவதில்லை

வசந்தங்கள் வாடுவதில்லை 5

தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடிவிட்டு நிஷாவும் அஞ்சனாவும் பெங்களூருக்கு திரும்பியிருந்தனர்.

இருவருக்கும் பெங்களூர் வாழ்க்கை பழகியிருந்தது.  வேலையும் பிடிபட்டிருந்தது.  ட்ரெயினிங் பீரியட் முடிந்து, வேலையும் நிரந்தரமாகியிருந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை.  விடுமுறை என்பதால் இருவரும் நிதானமாகவே எழுந்தனர்.  நேற்று இரவு வேலையிலிருந்து வரும்போது நாச்சியப்பனுடன் பிரேமாவை கீழே பார்க்க நேர்ந்தது.  பிரேமாவுக்கு உடம்பு முடியவில்லை என அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று வந்திருந்தார் நாச்சியப்பன்.  அந்தநேரம்தான் இவர்களும் பார்த்திருந்தனர்.  பிரேமா மிகவும் சோர்வாக தெரிந்ததால் அவரிடம் எதுவும் பேசமுடியவில்லை.   மறுநாள் விடுமுறைதானே நேரில் சென்று பார்க்கலாம் என மேலே வந்துவிட்டனர் பெண்கள்.

அஞ்சனாவுக்கு காலையில் எழுந்து குளித்து முடித்து கிட்சனுக்குள் நுழையும் பொழுதுதான் பிரேமாவின் நினைவே வந்தது.  அச்சோ…… ஆன்டி நேத்தே உடம்பு முடியாம இருந்தாங்களே.  சாப்பாட்டுக்கு என்ன பண்ணாங்களோ…?  இப்ப எப்படி இருக்காங்களோ…?  போய் பார்த்துட்டு வந்துரலாமா… என யோசனையோடே கிட்சனில் இருந்து வெளி வந்து கடிகாரத்தைப்  பார்த்தாள்.



Advertisement

மணி ஒன்பது.  அறையை எட்டிப் பார்த்தாள்.  நிஷா இன்னும் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள்.  கீழ்வீட்டுக்கு ஆன்டியை பார்க்க போறேன் என அவளுக்கு ஒரு மெசேஜை அனுப்பிவிட்டு, பிரேமாவை பார்த்து வருவதற்காக கீழே சென்றாள் அஞ்சனா.

வெளிக்கேட்டை திறந்து உள்ளே சென்றவள், காலிங்பெல் அழுத்திவிட்டு காத்திருந்தாள்.  சத்தமேயில்லை.  இன்னைக்கு சன்டேதான.  அங்கிள் வீட்லதானே இருப்பாங்க… என யோசனையாக கதவைத் தட்டிப் பார்த்தாள்.

ம்கூம்.  நிசப்தமே..  கதவும் தாழிடப்படாமல் வெறுமனே மூடிதான் இருந்தது.  எனவே மெல்ல கதவைத்திறந்து உள்ளே எட்டிப் பார்த்தாள் யாராவது இருக்கிறார்களா… என்று.

Advertisement

சரியாக அந்த நேரம் பார்த்து உமாபதி கதவைத் திறப்பதற்காக வந்து நின்றான்.  முகத்தில் வழிந்த வியர்வையை கையில் இருந்த துண்டால் துடைத்துக் கொண்டே உள்ள வா….. என தலையசைத்தான் அஞ்சனாவைப் பார்த்து.

Advertisement

அஞ்சனா, “ஸாரி…., வேலையா இருந்தீங்களா……?  டிஸ்டர்ப் பண்ணிட்டேனா….?”

உமாபதி, “இல்லல்ல……  கிட்சன்லதான் இருந்தேன்.  உள்ள வா….”.

“ஓஹ்… ஆன்டிக்கு இப்ப எப்படி இருக்கு.  தூங்கறாங்களா….?  ஆன்டிய பார்க்கலாம்னுதான் வந்தேன்….

Advertisement

உமாபதி, “ஏன் வெளியவே நின்னிட்டுருக்க.  உள்ள வா…. அஞ்சனா,  இப்ப தான் அம்மா சாப்டுட்டு……, மாத்திரை போட்டு படுத்தாங்க.  தூங்கியிருப்பாங்கன்னு நினைக்கறேன் இரு பார்க்கிறேன்” என பிரேமா படுத்திருந்த அறைக்கதவைத் திறந்து பார்த்தான்.

அஞ்சனா, “எழுப்பாதீங்க… தூங்கட்டும்.  டிஸ்டர்ப் பண்ண வேணாம்.  நான் போயிட்டு அப்புறமா வரேன்…” என பதறினாள்.

இரவெல்லாம் உடல் உபாதையால் உறங்காமல் விழித்தே இருந்தவர், இப்பொழுது ஆகாரம் எடுத்து மாத்திரை போட்டதும் அயர்ந்து உறங்கியிருந்தார்.  பிரேமா உறங்கிக்கொண்டிருப்பதை பார்த்த உமாபதி சத்தமில்லாமல் மெல்ல  கதவை சாற்றியவன், “தூங்கிட்டிருக்காங்க…..” என்றான் சைகையில்.

அஞ்சனாவும் குரலைத் தாழ்த்தி “பரவாயில்லை.  தூங்கட்டும்.  டிஸ்டர்ப் பண்ண வேணாம்.  ஆன்டிய பார்க்கலாம்னுதான் வந்தேன்.  நேத்து நைட் அங்கிள் அவங்கள ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்வந்தப்ப பார்த்தேன்.  அதான் இப்ப எப்படி இருக்காங்கன்னு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.   அப்புறமா வரேன் என கிளம்பியவள் நினைவு வந்தவளாக திரும்பி “ஆன்டிக்கு என்ன உடம்புக்கு……?” என கேட்டாள் உமாபதியிடம்.

உமாபதி, “பீவர்……தான்.  பர்ஸ்ட் இரண்டு நாள் எங்ககிட்ட எதுவும் சொல்லாம அவங்களே டேபிலட் எடுத்திருக்காங்க.  நேத்து ரொம்ப முடியலன்னதுக்கு அப்புறம்தான் டாக்டர்கிட்ட போயிட்டு வந்தாங்க…”

“இப்ப பரவாயில்லையா…….?”

“ம்ம்… காலையில கொஞ்சம் பெட்டராயிருக்குன்னாங்க…  இரண்டு முனு நாளைக்காவது ரெஸ்ட் எடுக்கனும்னு டாக்டர் ஸ்டிரிக்டா சொல்லியிருக்காங்க…”

அஞ்சனா, சரி.., நான்…….. அப்புறம் வரேன் என கிளம்பியவள், யோசனையாக… “நீங்க சாப்பிட்டீங்களா..?  நான் ஏதாவது செஞ்சு தரவா…?” என கேட்டாள் உமாபதியைப் பார்த்து.

உமாபதி, “உனக்கெதுக்கு சிரமம்.  இருக்கட்டும்…”

“அப்ப இன்னும் நீங்க சாப்பிடலையா…?  ஆன்ட்டி என்ன சாப்பிட்டாங்க காலையில….?”

உமாபதி, “பிரட்…தான் சாப்பிட்டாங்க…..  காபியும் பிரட்டும் போதும்னுட்டாங்க”.

அஞ்சனா, “அப்போ நீங்களாம்……..”

“ஹ்ம்ம்…. இனிமே…..  தான்…..”

கொஞ்சம் முன்னமே வந்திருக்கனுமோ….  இவங்களை பத்தின ஐடியாவே இல்லாம போயிடுச்சி நமக்கு, என மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டாள்…. அஞ்சனா.

அதற்குள்… கிட்சனில் இருந்து தீய்ந்த ஸ்மல் வரவே… உமாபதி ஓடினான் கிட்சனுக்குள்.  பின்னாடியே அஞ்சனாவும் சென்று பார்த்தாள்.  பாத்திரத்தில் வேக வைத்திருந்த பருப்பு அடிப்பிடித்து கருகியிருந்தது.  பக்கத்திலேயே பாலும் பொங்கி வழிந்திருந்தது அடுப்பின் மேல்.

அடுப்பை ஆப் செய்த உமாபதி… ஐயோ… என தலையில் கைவைத்து நின்றுவிட்டான்.  அஞ்சனாவிடம் பேசிக்கொண்டிருந்ததில் அடுப்பில் வைத்த பாலையும் பருப்பையும் மறந்திருந்தான்.

எரிச்சலானது அவனுக்கு.  காலையிலிருந்து ஒரு காபி குடிக்க முடியுதா…, ச்சை… என ஆற்றாமையாக வந்தது.  முன் அனுபவம் இல்லாமல் கிட்சனுக்குள் புகுந்தவனுக்கு கடுப்பாக இருந்தது.   இப்படி பால் பொங்கி வீணாவது… இன்று மட்டும் இரண்டாவது முறை.

பெருமூச்சை இழுத்து விட்டவன் அஞ்சனாவைத் திரும்பி பார்த்து  “காலையில காப்பி…. போடலாம்னு பால் வச்சேன்.  அம்மாவுக்கு மாத்திரை குடுத்துட்டு வரதுக்குள்ள….. எல்லாம் பொங்கி வழிஞ்சிடுச்சு.  அதையெல்லாம் க்ளீன் பண்ணி எடுக்கவே அவ்வளோ டையடாயிடுச்சி.  சரி  இப்பவாவது உருப்படியா ஒரு காபி சாப்பிடுவோம்னு பால் வச்சேன் அடுப்புல.  இப்பவும் பொங்கி வழிஞ்சிடுச்சி, ச்ச…” என்றான்.

“ம்ப்ச்…. கிட்சன் பக்கமே அம்மாவுடமாட்டாங்க.  அதனால எனக்கு எது எங்க இருக்குன்னுகூட தெரியாது.  இப்ப அம்மாக்கு உடம்பு சரியில்லாம போனதால… செய்ய வேண்டியதாயிடுச்சு”.

அஞ்சனா, “என்னை கூப்பிட்டுருக்கலாமில்ல…..?  நீங்க ஏன் இவ்வளவு கஷ்டப்படனும்….?”

“அப்பாகூட சொல்லிட்டு போனாங்க.  மேல அஞ்சனாவ கூப்பிடுடா…  அம்மாவுக்கு வந்து கஞ்சி வச்சி குடுப்பா… ன்னு.  நான்தான் இன்னைக்கு சன்டேவாச்சே.  தூங்குவீங்க டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு…. நினைச்சேன்”.

“அங்கிள் இல்லையா…..?”

“அவர் பிரண்ட் பொண்ணுக்கு இன்னைக்கு கல்யாணம்.  காலையிலே கிளம்பி யோயிட்டார்”.

அஞ்சனா, சரி… பழைய துணி ஏதாவது இருந்தா குடுங்க, இதையெல்லாம் கிளீன் பண்ணிடறேன்.

உமாபதி, “இல்லல்ல. ..  நான் க்ளீன் பண்றேன்.  நீ இப்படி வா…” என்றான் அடுப்பின் அருகில் நின்றிருந்தவளைப் பார்த்து.

அஞ்சனா, “பரவாயில்லை குடுங்க… காலையிலிருந்து நீங்களும்தான கஷ்டப்படறீங்க” என அவனிடம் பிடிவாதமாக துணியை கேட்டு வாங்கியவள்,  கொட்டியிருந்த பாலை எல்லாம் துடைத்து எடுத்துவிட்டு, சோப்பு தண்ணீர் வைத்து……, ஸ்கரப் போட்டு அந்த இடத்தை சுத்தமாக துடைத்துவிட்டாள்.

“காலையிலிருந்து காபியாவது குடிச்சீங்களா….. இல்லையா….?”

இல்லை என உதட்டை பிதுக்கி இடமும்… வலமும்… தலையசைத்தான் உமாபதி.

அஞ்சனா, “பால் இருக்கா…?”

இருக்கு என தலையசைத்துகொண்டே பிரிட்ஜிலிருந்து பால் பாக்கெட்டை எடுத்து கொடுத்தான்.

ஏற்கனவே பொங்கி வழிந்திருந்த பால் பாத்திரத்தையே கழுவி சுத்தம் செய்தவள்…, அதில் பாலை பிரித்து ஊற்றி காய்ச்ச ஆரம்பித்தாள்.  பிரேமாவைப் பற்றி தெரியும்.  ஏற்கனவே அவர் கையால் இரண்டு மூன்று முறை காபி குடித்திருக்கிறாள்

எப்போதும் அவர் வீட்டில் பில்டர் காப்பிதான்.  ஆதலால் பக்கத்தில் பில்டரைத் திறந்து பார்த்தாள்.  அதில் டிகாஷன் தீர்ந்திருந்தது.  அங்கிருந்த ஷெல்பில் காப்பி பொடியை தேடினாள்.

இவளது எண்ணத்தை புரிந்தவன்.. காபி பொடி இருக்கும் டப்பாவை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.  பில்டரையும் கழுவி சுத்தப்படுத்தியவள்…., அதில் காப்பி பொடியை போட்டு…., வெந்நீர் கொதிக்க வைத்து ஊற்றி…., புதிதாக டிகாஷன் இறக்கினாள்.

அதற்குள்  அடுப்பில், பாலும் காய்ந்து விடவே…. டம்பளரில் காய்ந்த பாலை ஊற்றி…, டிகாஷன், சர்க்கரை சேர்த்து….. நுரை பொங்க ஆற்றி… அவனிடம் நீட்டினாள்.

அங்கேயே நின்று அவள் செய்வதை எல்லாம் கண்ணெடுக்காமல் பார்த்து இருந்தவன்.  ப்பாஹ்…….. ஒரு காபிக்கு இத்தனை மெனக்கடனுமா……. என்று இருந்தது அவனுக்கு உள்ளுக்குள்.

காபியை வாங்கி முகர்ந்தவனுக்கு……. ஹப்பாடா……….. என்று இருந்தது உள்ளுக்குள்.   அந்த காபியும், அதன் மணமும், ருசியும் புத்துணர்வைக் கொடுத்தது உமாபதிக்கு என்று சொன்னால் மிகையாகாது.   எதையோ சாதித்தவன் போல மனதுக்குள் அப்படி ஒரு ஆசுவாசம்.

காலையிலிருந்து இந்த ஒரு டம்பளர் காபிக்குதான் எத்தனைபாடு…? என்ற எண்ணம் உமாபதிக்கு.  அந்த கசப்பும் இனிப்பும் கலந்த சுவை நாக்கில் பட்டு தொண்டையில் இறங்கவும்தான் சற்று தெம்பு வந்தது.

ஒவ்வொரு மிடறாக ரசித்து குடித்தான்.  வாழ்நாளில் காபியை இப்படி அனுபவித்து குடித்திருப்பானா என கேட்டால் அது அவனுக்கும் சந்தேகம்தான்.  காலையிலிருந்து அவன் பட்ட அவஸ்தைக்கு, இப்பொழுது இந்த காபி அவனுக்கு அமிர்தமாகதான் இருந்தது.  அப்படியே அவன் அம்மா பிரேமாவின் காபியை ஒத்திருந்தது அஞ்சனா கொடுத்த காபியின் டேஸ்ட்.

“அம்மா போடற காபி மாதிரியே… இருக்கு அஞ்சனா.  தேங்க்ஸ்..” என்றான் மனதார… அஞ்சனாவைப் பார்த்து முகம்மலர புன்னகையுடன்.

பதிலுக்கு அவனைப் பார்த்து முறுவலித்தவள், “ஆன்டிக்கு……, மதியம் சாப்பிட என்ன கொடுக்க சொன்னாங்க டாக்டர்…..?” என்றாள்.

“உமாபதி, கஞ்சி…., ரசம் சாதம்னு….. மைல்டா…. ஈசி டைஜசன் உள்ள புட்டா குடுக்க சொல்லியிருக்காங்க….  கஞ்சி வச்சா…. கூடபோதும்.  நானும் அதையே சாப்பிட்டுப்பேன்…..”

“அப்ப அங்கிள் லன்ச்க்கு  வரமாட்டாங்களா…?”

உமாபதி, “தெரியலை.  எப்ப வருவாங்கன்னு சொல்லிட்டு போகல.  நீ கஷ்டபடவேணாம்.  அப்பா வந்தாக்கூட அவங்களும் கஞ்சி சாப்பிடுவாங்க…”

அவனை நேருக்கு நேர் நின்று பார்த்தவள்…, “அப்புறம் ஏன்…… பருப்பு வச்சீங்க……..?” என்றாள் கேள்வியாக.

“அ….து…., அம்மாக்கு உடம்பு முடியாததால… இரண்டு நாளா….. வெறும்  தயிர்… சாதம்தான்…. சாப்பிட்டோம்.  சரி இன்னைக்கு லீவ்தான.., யுடியூப் பார்த்து…. சாம்பார் ட்ரை பண்ணலாம்னு…. ஒரு ஆசை வந்தது.  அதான் பருப்பு வேக வச்சேன்.   அதுவும் தண்ணி பத்தாம தீஞ்சு போயிடுச்சு”.

அஞ்சனா, “வீட்ல காய் இருக்கா….”

“ம்ம் இருக்கு…..” என பிரிட்ஜிலிருந்து கேரட், பீன்ஸ், உருளை, முட்டைகோஸ் போன்றவற்றை எடுத்து வெளியே வைத்தான்.  அவற்றை பார்த்தவள், பருப்பு எங்கே இருக்கிறது என கேட்டு……, அதை குக்கரில் போட்டு வேக வைத்தாள்.

“உமாபதி, ஓஹ்……. பருப்ப குக்கர்ல வேக வைக்கனுமா….? இது எனக்கு தெரியல….”

அஞ்சனா, “குக்கர்லயும் வைக்கலாம்.  அப்படியே பாத்திரத்துலயும் வேக வைக்கலாம்.  நீங்க இன்னும் கொஞ்சம் தண்ணிவிட்டு…, கொஞ்சம் தீயை குறைச்சு வச்சிருந்தீங்கன்னா…… கருகியிருக்காது…” என்றாள் அவனைப் பார்த்து சிரித்துகொண்டே.

அவள் அவனிடம் பேசிக் கொண்டிருந்தாலும், கை மளமளவென வேலை பார்த்துக் கொண்டிருந்தது.  காய்களை கழுவி அவற்றை அவள் ஒன்றுபோல் வேகவேகமாக நறுக்கிக்கொண்டிருந்தாள்.  அஞ்சனா செய்வதை அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு இவ்வளவு நறுவிசாகவும், வேகமாகவும்…., நறுக்க வராது என்பதால்……., நான் நறுக்கி தரவா……… என தொண்டை வரை கேட்க வந்ததை கேட்காமலேயே நிறுத்திக் கொண்டான்.

வெந்த பருப்பிலிருந்து கொஞ்சமாக எடுத்து, பருப்பு ரசம் வைத்து…. கொத்தமல்லி துவையலும் அரைத்து வைத்தாள்.  உருளையை அவித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வறுத்தவள்,  கேரட் பீன்ஸ் போட்டு சாம்பார் வைத்தாள்.

சாதம் வெந்ததும், பாத்திரத்தின் அடிப்பகுதியிலிருந்த சாதத்தை கரண்டியால் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு குழைவாக கடைந்து அதில் ரசம் சேர்த்து கரண்டியாலே கலந்து, ஒரு ஸ்பூன் வைத்து தட்டு போட்டு மூடி வைத்தாள்.

அதன் மேலேயே அரைத்து வைத்த மல்லி துவையலையும் எடுத்துவைத்து மூடினாள்.

அஞ்சனா, “இதை ஆன்ட்டி எழுந்ததும்…. அவங்களுக்கு கொடுத்துடுங்க..   துவையல் காரமில்லாமதான் செஞ்சிருக்கேன்.  அவங்களுக்கு பிடிக்கும்”

“தேங்க்ஸ்.. அஞ்சனா……. நீயும் இங்கயே சாப்பிடேன்…” என்றான் உமாபதி.

“இருக்கட்டும்.  நிஷா இந்நேரம் எழுந்தாலும் எழுந்திரிச்சிருப்பாள்…..  நான் ஆன்டிய பார்க்கலாம்னுதான் வந்தேன்.  ஈவ்னிங்கா வரேன்.  நீங்க சாப்பிடுங்க…” என அவனிடம் சொல்லிக்கொண்டு செல்ல ஆரம்பித்தாள்.

“இரண்டு எட்டு எடுத்து வைத்த வைத்தவள்…, திரும்பி அவனைப் பார்த்து “நைட்டுக்கும் நான் டிபன் செஞ்சு கொண்டு வரேன்.  நீங்க எதுவும் செஞ்சு கஷ்டப்படாதீங்க…” என்றாள்.

“நீ கஷ்டபடவேணாம் அஞ்சனா.  இதுவே நைட்டுக்கும் வரும்.”

“இருக்கட்டும்ங்க.  ஆன்டிக்கு உடம்பு முடியலன்றதால செய்யறேன்.  தயங்காதீங்க. வந்த புதுசுல ஆன்ட்டி எங்களுக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ணியிருக்காங்க…..  அவங்க சரியாகர வரைக்கும்தான…… நான் எடுத்துட்டு வரேன், ம்ம்…. ” என தலையசைத்து கிளம்பிவிட்டாள்.

மேலே வந்த அஞ்சனாவைப் பார்த்து…. நிஷா முறைத்தாள்…….  “எங்கடி போன…..?  அதுவும் இவ்வளவு நேரம்……?”

அஞ்சனா, “உன் போன் எங்க…? உனக்கு மெசேஜ் பண்ணிட்டுதான போனேன்….  நீ பார்க்கலயா….?”

“மெசேஜா….  இல்லயே.  எழுந்ததிலிருந்து போனே பார்க்கலயே…?  எங்க போன……?” என கேட்டுக்கொண்டே அறைக்குள் சென்று அவளது போனை எடுத்துப்பார்த்தாள் நிஷா.  “ஆமா…மெசேஜ் வந்திருக்கு.  நான் பார்க்கலடி…  எங்கடி போன காலையிலே…?”

அஞ்சனா, “கீழே ஆன்டிய பார்க்க போனேன்…. நிஷா”

நிஷா, “ஏன் என்னை எழுப்பல.  நானும் வந்திருப்பேன் இல்ல.  என்னையும் கூட்டிட்டு போயிருக்க வேண்டியதுதான….?  இப்ப எப்படி இருக்காங்க…?”

அஞ்சனா, “ஈவ்னிங் போலாம்…… தூங்கிட்டிருக்காங்க.  நானும் பார்க்க முடியல” என்று அங்கே நடந்ததை கூறிக்கொண்டிருந்தாள் நிஷாவிடம்.

நிஷாவிடம் பேசிக்கொண்டே கிட்சன் சென்று பார்த்த அஞ்சனாவுக்கு மயக்கமே வந்தது.  கிட்சனை ஒரு வழியாக்கி வைத்திருந்தாள் நிஷா.

அவள் பின்னாடியே வந்த நிஷா…….. அஞ்சனாவைப் பார்த்து அசடு வழிந்தாள்.  “ரொம்ப பசியாயிருந்தது.  அதான் தோசை ஊத்தலாம்னு ட்ரை பண்ணேன்.  ஒரு தோசைகூட ஒழுங்காவே வரல..டி.   ஹி….. ஹி…… ஸாரி…டி”

அஞ்சனா இடுப்பில் கைவைத்து திரும்பி நின்று நிஷாவை முறைத்தாள்.

நீஷா, “ஏய் முறைக்காதடி.  என் மேல எந்த தப்பும் இல்ல.  அது மாவு சரியில்ல போல” என்றாள் நைசாக.

அஞ்சனா, “அப்படியே ஒன்னு வச்சேனா தெரியும்.  அதே மாவுலதான நானும் தோசை ஊத்தறேன்.  எனக்கு மட்டும் கரெக்டா  வரலையா.  கீழ போய்ட்டு வரதுக்குள்ள…….. இப்பிடியா….. பண்ணி வச்சிருப்பே கிட்சனை…” என முறைத்து நின்றாள்.

நிஷா, “ஆத்தா….., முறைக்காத…டி  நானே கிளீன் பண்ணிடறேன்.  நல்லதுக்கே காலமில்ல.  நீயும் சாப்பிட்ட மாதிரி தெரியலயே.   சரி கடைக்கு எங்கயும் போயிருக்கியோ, பசியோட வருவியேன்னு…. உனக்கும் சேர்த்து ஊத்தி வச்சேன் பாரு என்னை சொல்லனும்”.

அஞ்சனா, “ஏன்டி  தோசை ஊத்தவாடி இந்த பாடு.  நல்லா வருவடி.  உங்கம்மா சொல்ற மாதிரி….. முதல்லை ஒழுங்கா சமையல் கத்துக்கோ….. நீ”

நிஷா, “அஸ்கு புஸ்கு.  அதெல்லாம் நமக்கு ஒத்து வராதுப்பா.  ம்கூம்…… என்னால முடியாது”.

அஞ்சனா, “அப்படிங்…களா……. அம்மணி.  எவ்வளவு நாளைக்குன்னு பார்க்கலாம்…? கல்யாணத்துக்கு அப்புறம் என்ன பண்ணுவீங்க..? மேடம்….. சமைக்காம…..”

“சமைக்க தெரிஞ்ச ஆளா பார்த்து கல்யாணம் பண்ணிகிட்டா போச்சு……”

“அது சரி… பார்க்கதான போறேன்.  அங்க போய் அம்மணி……. நீங்க சமைக்கறீங்களா…..?  இல்ல சமைச்சு போட சொல்லி சாப்பிட போறீங்களான்னு…….?”

இருவரும் கதையடித்துகொண்டே சமையல் வேலையை முடித்து, அந்த வாரத்திற்கு தேவையான துணிமணிகளை அயர்ன் செய்து.. என  வேலைகளை எல்லாம் செய்து முடித்தனர்.

அஞ்சனா உமாபதியிடம் சொல்லிவிட்டு வந்தது  போலவே, மாலை டிபன் செய்து எடுத்து கொண்டுபோய் கொடுத்து விட்டு பிரேமாவையும் பார்த்து பேசிவிட்டு வந்தனர் இருவரும்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!