வண்ணம் 29
தமயந்தி ஒரு மாதத்தில் அந்த கட்டிடத்தை செவ்வனே முடித்து அக்கவுண்ட்ஸ் பார்க்க மூன்று பேர், அலுவலகத்தை சுத்தம் செய்ய இரண்டு பேர் மற்ற சின்ன சின்ன வேலைகளுக்கு இரண்டு பேர் என எடுத்து ஆபிஸ் செட் செய்து அமர்ந்தாள். முருகாவின் வழிகாட்டுதலில் சில படங்களை அவர்கள் பேனரில் ரிலீஸ் செய்து லாபமும் ஈட்டினார்கள். இதில் இவர்கள் ரிலீஸ் செய்த படம் ஒன்று விருதுகள் குவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
புவனுக்கு அவன் அலுவலகத்திலேயே நாள் முழுக்க செலவானது. தொடர்ந்து மீட்டிங் செல்வதும்,தொடர்ந்து திட்டங்கள் தீட்டுவது மட்டுமே வேலையாக இருந்தது. இதில் அவனை அறிமுகம் செய்து கொள்ள அழைக்கும் விருந்துகளுக்கெல்லாம் செல்ல வேண்டியதாக இருந்த நிலை. நட்டநடு இரவில் தூக்கத்திலும் கூட மேஜை மீது இருக்கும் இன்டெர்காம் ஒலிப்பது போலவே கேட்டது. சில நேரம் கைபேசியை எங்கேனும் தொலைத்துவிடுவோமா என கூட எண்ணினான்.
அருண் வீட்டில் கொடுக்கும் அழுத்தம் மற்றும் அவன் வேலை கொடுக்கும் அழுத்தத்தில் திண்டாட, சிரஞ்சீவி தமயந்திக்கு உதவி செய்துக்கொண்டு உடலை மெருகேற்றிக் கொண்டும் ஜாலியாக ஊரை சுற்றினான். புவன் அலுவலகத்தில் திண்டாடிக்கொண்டு சிரஞ்சீவிக்கு அழைத்து புலம்பி தீர்த்தான்…
யாரோ பிரான்சிலிருந்து வருகிறார் என்று அவருக்கு வைத்த விருந்துக்கு இவன் செல்ல வேண்டும் என்று புவன் அசிஸ்டன்ட் சொல்லிவைக்க நேரத்துக்கு முடியவேண்டிய மீட்டிங் எப்படா முடியும் என்று அரை தூக்கத்தில் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான். பூமியிடமிருந்து அழைப்பு வந்தது.
Advertisement
பூமிகா “புவன் என் ஜீப் கீயை காணல”
புவனுக்கு இதயம் நின்று துடித்தது. “எங்க இருக்க”
பூமிகா “ஐயோ நான் ஹைவேல இருக்கேன். இளநி குடிக்க ஜீப்பு நிறுத்திட்டு குடிச்சிட்டு பாக்குறேன் கீய காணல”
Advertisement
புவன் “சுத்தி எங்கயாச்சும் புதர்லே விழுந்திருக்கான்னு தேடி பார்த்தியா”
Advertisement
பூமிகா “ஒரு மணி நேரமா தேடிட்டுதான் உனக்கு ஃபோன் பண்றேன். யாருமே போன் எடுக்கல நீ மட்டும்தான் எடுத்துருக்கே” சொல்லிவிட்டு மெதுவான குரலில் “இளநி காரனுக்கு வேற காசு கொடுக்கல என்ன மேலயும் கீழயும் பாக்குறாங்க கொஞ்சம் வந்து என்ன கூட்டிட்டு போறியா” என்று கேட்டாள்
“லொகேஷன் ஷேர் பண்ணு”என்றவன் அடுத்த நொடி அவன் காரில் இருந்தான்.
புவன் பூமி இருக்கும் இடம் சென்று பார்த்தபோது பூமி சாந்தமாக இளநீர் கடையிலேயே உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
Advertisement
பூமியை அழைத்துக்கொண்டு அவள் ஜீப்பை ஊருக்குள் கொண்டுவர ஆளை ஏற்பாடு செய்துவிட்டு காரில் ஏறி இருப்பான் அவன் சித்தப்பாவிடமிருந்து அழைப்பு வந்தது “தயவு செஞ்சு அந்த பார்ட்டிக்கு போ அந்த ஆர்டர் நமக்கு கிடைச்சா நல்லா இருக்கும்” என்றார்
புவன் பூமியிடம் “நான் ஒரு ஈவென்ட்க்கு போகணும் டைம் வேற ரொம்ப கம்மியா இருக்கு” என்று இழுக்க
பூமி “நானும் போகணும் என்ன இன்டெர்நேஷ்னல் ஸ்டார் ஹோட்டல்ல இறக்கி விடுறியா”
புவன் வியப்படைந்தவன் “நானும் அங்கதான் போறேன்”
பூமிகா “ நான் அங்க போய் பாட்டு பாடினா தான் பார்ட்டி தொடங்கும்”
புவன் “அச்சச்சோ அப்படியா” என்றவன் வேகத்தை கூட்டினான்.
புவன் வளைத்து வளைத்து ஓட்ட பூமிகா “மெதுவா… பரவால்ல சாரி சொல்லிக்கலாம்… எனக்கு என் உசுரு முக்கியம்…” என்று புலம்பிக்கொண்டே வந்தாள்.
ஐந்து நிமிடம் முன்னே வந்து சேர்ந்தார்கள். பூமிகா “என் ட்ரெஸ் மேக்கப் எல்லாம் ஓகே தானே” கேட்டாள்
புவன் “என் பெர்பியும் ஓகே தானே” கேட்டான்
பூமிகா “அதெல்லாம் நல்லாத்தான்டா இருக்கு. எப்பவும் போல ஹீரோ மாதிரி இருக்க வா ”
புவன் “நீயும் எனக்கேத்த ஹீரோயின் போல இருக்க” என்றான்.
பூமிகா “ஹப்பப்ப இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என்று பழிப்பு காட்டிவிட்டு ஓடோடி அலங்கார அறைக்கு சென்றாள்.
புவன் சிரித்துக்கொண்டான். அந்த நாளின் சோர்வெல்லாம் எங்கேயோ பறந்துவிட்டது போல உணர்ந்தான்.
பூமிகா சின்னதாக இரண்டு பாட்டு பாட விழா தொடங்கியது. புவன் எல்லோரிடமும் பேசிவிட்டு வந்து பார்க்கும்போது பூமிகா அவளுக்கென கொடுத்திருந்த அலங்கார அறையில் அலங்கார மேஜைமீது சாய்ந்து நல்ல தூக்கத்தில் இருந்தாள்.
பூமிகாவை எழுப்பி கூட்டிச்சென்று அவள் வீட்டில் விட்டான்.
அம்பிகா “அவங்க அப்பா கேஸ் நல்ல வேகமா மூவ் ஆகுது. தேங்க்ஸ்”
புவன் “ எனக்கு எதுக்கு ஆன்டி தேங்க்ஸ்”
அம்பிகா “எனக்கு தெரியும் புவன் நீ அந்தப்பக்கம் பயங்கரமா வேலைபார்த்து தான் இந்த அளவுக்கு வந்திருக்குன்னு”
புவன் “நான்லாம் எதுவும் செய்யல” என்று சிரித்துக்கொண்டே தட்டிவிட
அம்பிகா “ஓகே அப்படியே இருக்கட்டும். ஆனா இத பார்த்து நான் என் பொண்ண உனக்கு கட்டி தருவேன்னு மட்டும் நினைக்காத. அவளுக்கு உன்ன பிடிக்கணும்.அவ வந்து என்கிட்டே சொல்லணும் உன்னை பிடிச்சிருக்குன்னு. அப்போதான் யோசிப்பேன். போதும் அப்பாவுக்கு பிடிச்சிருக்கு, அம்மாவுக்கு பிடிச்சிருக்குன்னு கல்யாணம் பண்ணி கஷ்டப்படறது எல்லாம் போதும்…”
பதிலுக்கு என்ன சொல்வதென தெரியாத புவன் “ஓகே ஆண்டி வரேன்” என்றவன் கிளம்பவும்
அம்பிகா “நல்லது போயிட்டு வாங்க” என்று அழுத்தமாக சொன்னார்.
கபிலன் வீட்டிற்கு திரும்பும் வழியில் புவன் ‘எங்கத்த ஒரு ஜான் ஏறுனா நாலு முழம் சறுக்குறேன். இதுல அவளுக்கு பிடிக்கணுமாமே’ என்று அவனுக்கு அவனே பேசிக்கொண்டு வீடு சேர்ந்தான்.
தமயந்தி அவள் வேலையில் கொஞ்சம் கொஞ்சமாக காலூன்ற தொடங்கினாள்.
ஊரில் அம்மாவிடம் கடன்காரர்கள் தொல்லை சுத்தமாக இல்லாமல் போனது.அது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஹாஸ்டலில் தினமும் ராத்திரி பண்ணிரெண்டு மணிக்கு தமயந்தி திரும்புவது ஹாஸ்டெல் நடத்துபவருக்கு தொல்லையாக போனதும் “தினமும் இப்படி வரது நல்லாயில்ல… மத்த காலேஜ் பொண்ணுங்க உன்ன பார்த்து கத்துகிட்டா கஷ்டம். பெட்டர் நீ வேற இடம் பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டார்.
தமயந்தியும் “சரி வேற இடம் பார்த்துட்டு வந்து ரூம் காலி பண்ணிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வேறு ஹாஸ்டல் தேட தொடங்கினாள்.சம்பாதிக்கும் பணம் மிச்சம் செய்வதில் குறிக்கோள் இருக்க.., ஆபீஸ் சுற்றியே பல இடங்களில் ஹாஸ்டல் தேடினாள். மகளிர் விடுதிகள் எல்லாம் சினிமா சான்ஸ் தேடுபவர்கள் நிரம்பி வழியவும் வீடு தேடினாள். வாடகையும் கூடுதலாக இருந்தன. விஷயத்தை கேள்விப்பட்ட புவன் “நான் அந்த ஏரியால ஒரு அப்பார்ட்மெண்ட்ல பெண்ட் ஹவுஸ் பாத்திருக்கேன் அங்கதான் தங்க போறேன். அங்கேயே முதல் மாடியில ஒரு வீடு காலியா இருக்கு சொல்லு உனக்கே அந்த வீடு கொடுக்க சொல்லி பேசுறேன்” என்றான். அடுத்த ஒரு வாரத்தில் தமயந்தி அழகான புது அப்பார்ட்மெண்ட் வீட்டில் குடியேரினாள்.
அம்பிகா தமயந்தியின் வேலை விவரம் அறிந்தவர் “இந்தா இன்ஸ்டன்ட் ரைஸ் மிக்ஸ்,டைம் இல்லாதபோ சாதம் மட்டுமே வச்சிக்கிட்டு இதை கலந்து சாப்பிடு” என்று அவர் கையால் செய்துக்கொண்டு வந்து கொடுத்தார்.
பூமிகாவோ மிகவும் ஆசையாக துள்ளிக் கொண்டு “இந்த வீட்டு டெக்கரேஷனை என் கையில விடு தம்மு இந்த வீடு மாத்தி காட்டுறேன்” என்று அவளுக்குள் இருக்கும் படைப்பு திறனெல்லாம் கொட்டி வீட்டை அழகு படுத்தினாள்.
சோகம் என்னவென்றால் தமயந்திக்கு வீட்டை ரசிக்கவும் வீட்டுக்குள் இருக்கவோ நேரமே இல்லை.மும்பையில் இருந்துக் கொண்டு அடிக்கடி போனில் அழைத்து பேசும் கல்யாண் அவள் எது செய்தாலும் அதை சின்னதாக பாராட்டி விட்டு அவள் செய்யாத ஒன்றை பெரிதாக குறை சொல்லி பேசினார். அப்படி பேசும் நேரம் கோபம் வந்தாலும் அதை அவரிடம் நன்றாக செய்து காட்டி பாராட்டு வாங்கியே ஆகவேண்டும் என்ற உத்வேகமும் பிறக்கும் . தூக்கம் சாப்பாடு மறந்து உழைக்க தொடங்கினாள்.
ப்ரொடியூசர்கள் யூனியன் மீட்டிங் மாதம் முதல் சனிக்கிழமை நடக்குமாம் அதற்கு தமயந்தி செல்ல வேண்டும் என்றார் கல்யாண்.அழைக்காத மீட்டிகிற்ங்கு நாம் எப்படி செல்வது என்ற தயக்கம் இருக்க, கல்யாண் பேசும் பேச்சில் அவள் இயலப்பையும் மீறி தைரியத்தை திரட்டிக்கொண்டு ப்ரொடியூசர் யூனியன் நடக்கும் கூட்டத்திற்கு சென்றாள்.
பேச தயங்கும் தமையந்தி அங்கே கொஞ்சம் கொஞ்சமாய் அவள் கூட்டை விட்டு வெளிவந்து “ஹலோ சார் நான் தமயந்தி ஸ்கை புரொடக்ஷன்ஸ் வெச்சிருக்கோம்” என்று பேச தொடங்கினாள்.
அந்த யூனியனுக்கு அருணும் வந்திருந்தான். அமைதியாக ஒரு ஓரத்தில் கடுகடு முகத்துடன் யாரையும் கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தான். அந்த சந்திப்பில் ஒவ்வொருவரும் பேசுவதை பார்த்து தமயந்திக்கு கிலி பிடித்தது. ஒருவர் என்னவென்றால் அவர் பிசினஸ் மட்டுமே நடக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் பேசிக் கொண்டிருந்தார், இன்னொருவரோ அந்த யூனியனுக்கு வராத ப்ரொடியூசரை பற்றி தப்பாக பேசிக் கொண்டிருந்தார். முருகா சொன்ன “கவனிச்சுக்கோ ஆனா அத பத்தி பேசாதே” நினைவுக்கு வர முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் உட்கார்ந்திருந்து யூனியன் மீட்டிங் முடிந்ததும் எழுந்து வெளியே வந்தாள்.
லிப்டில் அருண் “இந்தக் கழுகு கூட்டத்துக்குள்ள நீ கஷ்டப்பட வேணான்னு நினைச்சுதான் தமயந்தி இந்த ஃபீல்டு வேணாம்னு சொன்னேன்”மெதுவாக அவளுக்கு புரியவேண்டுமென எண்ணி பேசினான்.
திரும்பவும் கடன், மூணு வருஷம் வேலைக்கு பாண்ட் போட்டிருக்கேன் என்றெல்லாம் சொல்ல தமயந்திக்கு விருப்பமில்லை “எனக்கு எது ஒத்து வரும் எனக்கு வராதுன்னு நான் முடிவு செய்துக்கறேன். என்னால முடியும். இங்க நான் நிலைச்சி நின்னு காட்டுறேனா இல்லையான்னு மட்டும் பாரு” என்று சவாலாக பேசிவிட்டு மிடுக்காக நடந்து சென்றாள்.
கோபம் வரவில்லை அருணுக்கு மாறி காதல் தான் பொங்கி வழிந்தது.
அன்று பூர்ணிமா கல்யாணத்தில் “உனக்காக என்றைக்குமே என் பிரார்த்தனை இருக்கும்” என்றவள் இன்றைக்கு கோபத்தை காட்டி பேசிவிட்டு செல்கிறாள். உள்ளுக்குள் ‘ஐயோ அவனை கஷ்டப்படுத்தி பேசிட்டோமே’ என பேசிக்கொள்வாள். கண நிமிடம் மனதில் ஒரு இன்னதென சொல்லத்தெரியாத உணர்வு பொங்கி அடங்கியது. எல்லோருமே காதலை சொல்லி காதலை திகட்ட திகட்ட பேசி அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாய் சண்டை போடுவார்கள். ஆனால் இவர்களோ அவர்களுக்குள்ளேயே காதலை நினைத்துகொள்வது, அவர்களுக்குள்ளேயே காதலில் வாழ்ந்து அவர்களுக்குள்ளே குழம்பி கொண்டு அந்தக் குழப்பத்தில் தவறாக புரிந்து கொண்டு சண்டையும் போட்டுக் கொள்கிறார்கள். தனியே தனியே காதலை அனுபவிக்கும் இவர்களை என்ன சொல்வது?
திடுமென நாட்டில் வைர கடத்தல் மற்றும் அந்த கேசை பற்றிய விவரங்கள் மீடியா வெளிச்சத்தில் விழுந்து பரபரப்பு உண்டாக்கியது. இந்த கேசில் யாரெல்லாமென சம்மந்தப்பட்டிருக்கும் ஆட்கள் என்கிற பட்டியலும் யாரெல்லாம் பாதிப்படைந்தார்கள் என்ற பட்டியலும் வெளிவந்தது. விசராணையும் தீர்ப்பும் வெளிவரும் வரை வைர கடத்தல் கேஸ் மீடியா வெளிச்சத்தில் இருந்துகொண்டே இருந்தது. நியூஸ் பேப்பர்களிலும், யூடுயூப் சேனல்களிலும் அதுவே தலைப்பாக இருந்தது.
அருண் புவன் சிரஞ்சீவி மூவரும் அன்று கபிலன் வீட்டில் இருந்த நேரம்
பூமிகா பரபரப்பாக கபிலன் வீட்டுக்குள் நுழைந்தாள்
கூடத்தில் நடுவே நின்று கொண்டு கபிலனை பார்த்து “இது உங்க வேலையா சொல்லுங்க இது உங்க வேலையா” என்று அவரை கேள்விகேட்டாள்
கபிலன் “இல்ல பாப்பா நான் எதுவும் செய்யல இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லம்மா ” என்று சமாதானம் பேச
“புவன் புவன்” என்று கத்தி அழைத்தவள் புவனை பார்த்து “இது உன் வேலை தானே இது உன் வேலை தானே எங்க அப்பாவ அசிங்கப்படுத்தனும் நெனச்ச அசிங்கப்படுத்திட்ட தானே” என்று கோபமாய் கேட்டாள்.
புவன் “ இல்ல இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை பூமி நான் எதுவுமே செய்யல” என்றான்
பூமிகா “இத்தனை நாள் அமைதியா இருந்த கேஸ் இப்போ எப்படி இவ்வளவு அட்டென்சன் கிடைக்குது. அதுவும் தீர்ப்பும் விசரனை முடிவும் தெரியவரப்ப எப்படி.? என்னை என்ன முட்டாள்ன்னு நெனச்சிட்டு இருக்கீங்களா” சிரஞ்சீவி பார்த்து முறைத்தவள் பொதுவாக “என் அப்பா பேருக்கு எதனா கலங்கம் வந்துச்சு உங்க யாரையும் நான் சும்மா விடமாட்டேன். உங்களை அசிங்கப்படுத்தி நடுரோட்டுக்கு இழுப்பேன் ஜாக்கிரதை” என்றவள் வெளியே வந்தாள்.
அவள் வீட்டை நோக்கி சென்றவள் அம்பிகாவிடம் “அப்பா நிறைய கெட்டது செய்தவரா இருக்கலாம் ஆனால் திருந்துறேன்னு சொல்லிட்டு திருந்திதான் இறந்து போனார். அவர் எல்லாத்தையும் சரி செய்யறத நான் நேர்ல பார்த்தேன் ப்ளீஸ் அவருக்கு இந்த கஷ்டம் வேண்டாம் ப்ளீஸ்” என்று அழுதாள்.
அம்பிகாவுக்கு பூமிகா சொல்வது புரியவில்லை என்றாலும் சிந்தனையில் ஆழ்ந்தார். நடப்பதெல்லாம் பார்க்க அவருக்கும் குழப்பம்தான் என்றாலும் கஷ்டமெல்லாம் முடிவுக்கு வருவது போல் தெரிந்தது.
கமலநாதன் ஆக்சிடென்ட் கேஸ் விசாரணை முடிவுக்கு வந்தது. கமலநாதன் விபத்துக்குள்ளாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவரிடம் இருக்கும் பணம் எல்லாம் ஒப்படைத்து விடுவதாகவும் அந்த நெட்வொர்க்கில் இருந்து இனி வேலை செய்ய முடியாது என்று விடுபடுவதாகவும் பேசியிருக்கிறார். கமலநாதன் ஈசிஆர்ரில் ஒரு ரிசார்ட்டில் பணத்தை ஒப்படைக்க ஈசிஆரில் பயணம் செய்யும்போது முன்னும் பின்னும் துரத்தி வந்த லாரிக்கு பயந்து காரை மற்றொரு லாரி மீது மோதியிருக்கிறார்.அப்படி இடித்து உயிர் போகும் தருணத்திலும் அவரது இரண்டாவது கைபேசியில் இருந்து வைர கடத்தல் வியாபாரம் செய்யும் ஆளுக்கு அழைத்து “என் பொண்ணையும் ஃபேமிலியும் தொந்திரவு செய்யாம விட்டுடு உனக்கான காசு எல்லாமே இந்த கார்லதான் இருக்கு” என்று கெஞ்சி அழுதே உயிரை விட்டிருக்கிறார். கமலநாதன் மரணத்திற்கு பின் இருக்கும் சில கூட்டங்களை அறிந்து தெரிந்து பிடிக்க போலீசுக்கு மிகவும் காலம் தேவைப்பட்டது.
வைரக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்த நெட்வொர்க் கும்பலின் தலைவனை துபாயிலிருந்து இந்தியாவுக்கு வரவழைத்து அவரை கைது செய்யவே காலம் வெகுவாக எடுத்துக் கொண்டது.
அவரைப் பிடித்து விசாரித்ததில் கமலநாதனுக்கும் அவருக்கும் இருக்கும் தொடர்பை அறிந்து இந்த கேசுக்கு தீர்ப்பு கொடுத்தனர். கமலநாதன் மரணத்திலும் இப்போது அந்த ஆள் மாட்டிக் கொண்டிருப்பதால் அவருக்கு தூக்கு தண்டனை வரை விதிக்கப்படலாம் என்கிற நிலை உண்டானது.
அம்பிகா ஓர் முடிவுக்கு வந்தார். இனி நிம்மதியாக மனதில் உள்ளதை மகளிடம் பேசப்போகிறார்.
