Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எண்ணமெல்லாம் உன் வண்ணமே

வண்ணம் – 5.2

“நமக்குனு ஒரு குழந்தை இருந்தா இந்நேரம் இதெல்லாம் நடந்துருக்காதுல?” அவள் பக்கம் திரும்பியவன் மனதில் தோன்றியதை வெளியில் கூறாமல் இருந்திருக்கலாம்,

“எதுக்கு குழந்தைக்காக சரி படாத வாழ்க்கையை விருப்பம் இல்லாம வாழவா?” சட்டென நீர் கோர்த்து நின்ற கண்களை இமை தாழ்த்தி மூடினாள்.

உணர்ச்சியின் மிகுதியில் இருந்தவள் அவன் வார்த்தைகளில் இருந்த கோவத்தை கவனியாமல் அதில் இருந்த வெறுப்பை மட்டுமே பார்த்தாள்.

“பிடிக்காம ஏன் விடாப்பிடியா நிக்கணும்? நீ…” மேலும் பேச துவங்கியவன் வார்த்தையை அழைப்பு மணி தடுத்து நிறுத்தியது.



Advertisement

ஆழ்ந்த மூச்சை விட்டவன் அவளை தீர்க்கமாக பார்த்து எழுந்தான். மனதில் தேங்கிய குப்பை, கசடு, கோவம் அனைத்தையும் யோசிக்காமல் வெளிப்படுத்தியவளிடம் இன்று ஒரு வார்த்தை பேசவே தயக்கம் வருகிறது.

இத்தனை மோசமடைந்ததா தங்கள் உறவு என்ற எண்ணத்தினோடே கதவை திறந்தவன் ஆச்சிரியத்தில் ஒரு அடி பின்னே சென்றான்.

“என்ன பார்வை நகரு” சிலையாய் நின்ற ரகுவை தள்ளிவிட்டு உரிமையாய் உள்ளே அவன் அன்னை கார்த்திகா நுழைய, அவர் பின்னே மகனை முறைத்து சென்றார் அவன் தந்தை, மோகன்.

Advertisement

அவர்களை சிறிதும் எதிர்பாராத திவ்யா வியப்பில் பேசாது நிற்க, அவள் முன்னே அமர்ந்த கார்த்திகா, “என்ன மருமகளே வீட்டுக்கு வந்த மாமியாரை இப்டி தா வரவேற்பியா?”

Advertisement

நேர் கேள்வி கேட்டு பார்த்த அத்தையை பார்த்து அரண்ட திவ்யா வரவேற்ப்பையே மறந்திருந்தாள் அவர் கேட்கவும் தான் நினைவு வந்தவளாக, “சாரி… சாரி அத்தை. வாங்க, வாங்க மாமா”

“ம்மா இந்த வீடு உங்களுக்கு எப்படி தெரியும்? என்ன திடீர்னு, வர்றேன்னு ஏன் போன் பண்ணி சொல்லல? எனக்கு கால் பண்ணிருந்தா நானே உங்கள வந்து பாத்துருப்பேனே? சரி ஏதாவது சாப்பிடுறீங்களா?”

“நில்லு, ஏன்டா இத்தனை கேள்வி. பெத்தவங்க நாங்க எங்க புள்ளய பாக்க வர கூடாதா?” என்றார் மோகன் மகனை முறைத்து.

Advertisement

“அப்டி இல்ல ப்பா திடீர்னு வந்து நிக்கிறிங்க அதுவும் இந்நேரத்துல” என்றான் அன்னை அருகில் அமர்ந்து.

“உன்ன பாக்கணும் தோணுச்சு. வந்தேன் அதுக்கு ஏன்டா இத்தனை கேள்வி கேக்குற? ஆறு மணிக்கெல்லாம் பஸ் ஏறிட்டோம், டிராபிக் ஜாஸ்தியா இருந்துச்சு லேட்டா ஆகிடுச்சு”

அன்னையை எதிர்த்து எதுவும் பேசவில்லை அவன், “டீ, காபி எதுவும் போடவா அத்தை?” திவ்யா அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினாள்.

“நான் போடுறேன் திவ்யா. நீ ரூமை ஒதுங்க வை” கண்களை சுருக்கி அவளிடம் கெஞ்சியவன் சமயலறைக்குள் நுழைந்துவிட்டான்.

‘போடா இன்னைக்கு இல்லனாலும் நாளைக்கு உன் அம்மாக்கு என் கையாள தான் காபி’ மனதிலே ரகுவை திட்டி அவன் கூறிய வேலையில் இறங்கினாள்.

தலைகீழாக மாற்றியிருந்தான் அந்த அறையை. அதோடு நிறுத்தினானா சுவர் எங்கும் வகை வகையான புகைப்பங்களை ஒட்டியிருந்தான், அவன் மனம் கவர்ந்த அத்தனை புகைப்படங்களும் நடிகர், நடிகை, வாகனம் என பதின்ம வயது மாணவன் அறைபோல் இருந்தது அது.

அதிலும் அவன் நேற்று ஒட்டியிருந்த அந்த நடிகைகளின் புகைப்படங்களை பார்க்கவே முகம் தானாக சுளித்தது. அவனுக்கு இதெல்லாம் பிடிக்கும் என தெரிந்தவள் இதை ஓரளவு எதிர்பார்த்திருந்தாலும் அவனை துணியை போல் அடித்து துவைக்க தோன்றியது திவ்யாவுக்கு.

எரிச்சலோடு அவை அருகினில் சென்றவள் முகத்தை திருப்பி வைத்து எரிச்சலோடு அந்த புகைப்படத்தை ஒரே இலுவையில் இரண்டாக கிழித்து அடுத்த புகைப்படத்திற்கு சென்ற நேரம் கதவை புயல் வேகத்தில் திறந்து மூடி அவள் செய்த காரியத்தை அதிர்ச்சி விளங்காமல் பார்த்தான் ரகுநந்தன்.

“என்னடி இது?” எது நடந்திட கூடாதென்று அன்னையிடம் கூறி வேகவேகமாக அறையினுள் ஓடி வந்தானோ அதுவே நடந்திருந்தது. ஆனால் அவனவளோ அந்த காகிதத்தோடு அவன் இதயத்தையும் சுக்கு நூறாக கிழித்திருந்தாள்.

“அந்த கருமத்தை நான் கேக்கணும், என்னடா இது கண்றாவி? நேத்து காலைல கூட இல்ல”

“அட பாவி சண்டாளி இத நான் எவ்ளோ கஷ்டப்பட்டு ஆபீஸ்ல இருந்து பிரிண்ட் எடுத்துட்டு வந்தேன் தெரியுமா? ஒரே செகண்ட்ல கிழிச்சிட்டியேடி” அவள் கிழித்த நகலை எடுத்து தரையில் வைத்தவன் அறையில் தேடி செலோடேப்பை எடுத்து வந்து இரண்டு பக்கமும் ஒட்டி வைத்தான்.

“கருமம், பண்ணதே கேவலமான பொழப்பு அதுக்கு வருத்தம் வேற” அடுத்த புகைப்படத்தை அவள் கிழிக்கும் முன்பு அவளை பிடித்து மெத்தையில் தள்ளி சுவற்றில் இருந்த புகைப்படங்களை அகற்றி பத்திரப்படுத்திக்கொள்ள மேல் அலமாரியில் தூக்கி வைத்தான்.

“இனி பாதுகாப்பா இருக்கும்” அவளை திரும்பி பார்த்து ரகு அசடு வழிய பார்வையாலே எரித்தாள் திவ்யா.

“நாய் கூட அதெல்லாம் சீண்டாது. உன்ன மாதிரி நாய்க தான் பாத்துட்டே இருக்கனும்” காரமாக வந்தவள் வார்த்தைகளை சட்டையே செய்யவில்லை அவன்.

“அதுக்கெல்லாம் ஒரு ரசனை வேணும். ரசிச்சு ரசிச்சு…”

“ச்சீ. வாய மூடு” அவனை நெருங்கி வந்து வாயை மூடியவள் அவன் கையை பிடித்து அறை வாயிலை விட்டு வெளியேற்றும் முயற்சியில் இருக்க அவளை சீண்டவே பிடிவாதமாய் நின்று வலுவிழந்த அவள் பிடியிலிருந்து விலகினான்.

“இல்ல நான் சொல்றேன் கேளேன்…”

சிரித்து அவன் நிற்க, பலம் எல்லாம் திரட்டி அவனை கதவு வரை இழுத்து வந்தவளிடம், “கோவிந்தம்மா அந்த பொண்ணோட…”

கதவை திறந்தவள் அவன் அடுத்து வர்ணிக்க போவதை தெரிந்து, “அத்தை…” என்று அழைக்க அன்னையை நோக்கி ஓடிவிட்டான் ரகு.

புயலடித்து ஓய்ந்தது போல் இருக்க மெல்லிய புன்னகையை இதழ்களில் தவழவிட்டு அறையை சுத்தம் செய்யும் பொறுப்பில் மும்முரமாக இறங்கினாள் திவ்யா.

சமயலறையில் இருந்த கார்த்திகாவுக்கு மருமகள் அழைத்த உரிமை அழைப்பும் அதன் பிறகு சிரிப்போடு வந்த மகனையும் பார்த்து தன்னுடைய முடிவில் உறுதியானார்.

மகனின் செயல்களை தானும் பார்த்துக்கொண்டே தான் இருந்தார் மோகனும்.

கார்த்திகா, மோகன் இருவரும் வேலைக்கு செல்லும் ஆட்கள். இருவரும் வெவ்வேறு அரசு பள்ளியில் உயர்நிலையில் ஆசிரியர்களாக உள்ளனர்.

இருவருக்கும் வேலை சுமை அதிகம் இருப்பதால் மோகனும் காலையில் மனைவிக்கு சமயலறையில் வந்து உதவுவார். அதே பழக்கத்தை தங்கள் இரு ஆண் பிள்ளைகளுக்கும் இடம் மாற்றம் செய்திருந்தார்.

இன்றும் மனைவிக்கு உதவுகிறேன் என டீ தூள் எடுத்து கொடுப்பது, சர்க்கரை தேடி எடுப்பது என வந்திருக்க மகன் பதறி அறைக்குள் செல்வதும், மீண்டும் வரும் பொழுது சிரிப்போடு வருதை பார்த்தும் பார்க்காமல் இருந்துவிட்டார்.

“எதுக்குடா இவ்ளோ அவசரமா போன?”

பல்லைக்காட்டி நெளிந்துகொண்டே, “அது ஒரு வேலை ம்மா” மழுப்பிய மகனை அதிகம் கேள்வி கேட்கவில்லை அவர்.

“என்ன ம்மா திடீர்னு?” மீண்டும் துவங்கிய இடத்திற்கே வந்து நின்றான் ரகு.

“அந்த பொண்ணு வீட்டை விட்டு போச்சுனு சொன்ன?” கேள்வி கேட்ட மகனுக்கே மீண்டும் ஒரு கேள்வியை வைத்தார் மோகன்.

சமையலறை திண்டில் ஏறி அமர்ந்தான் அசௌகரியமான அமைதியோடு. பெற்றோர் அவளை எதுவும் கோவத்தில் கூட பேசிவிட கூடாது என்கிற பயம் அதிகம் இருந்தது ரகுவுக்கு.

அப்படி பேசும் ரகம் அவர்கள் இல்லை என்றாலும் காதல், மகன் வாழ்க்கை என்று வந்த பிறகு சாதாரண பெற்றோர் ஆகினர் அந்த பட்டதாரி ஆசிரியர்கள்.

திவ்யாவின் பெற்றோரை போல் இல்லை என்றாலும் மகனையும் மருமகளையும் ஏற்றுக்கொள்ளாமல் தவிர்த்தனர். அதுவே அவர்களுக்கு திவ்யா மேல் அதிக கோவம் இருக்குமோ என்ற எண்ணம் மனதை நெருடியது ரகுவுக்கு.

“ம்மா அது… திவ்யா கொஞ்ச நாள் இங்க தான் இருப்பா. கொஞ்சம் ஸ்டேபில் ஆனதும் கெளம்பிடுவா”

“அத பத்தி எங்களுக்கு கவலை இல்ல ரகு. ரெண்டு பேரையும் ஒண்ணா பாத்ததும் முடிவை மாத்திட்டீங்களோனு நினைச்சு கேக்குறோம்” மகனை ஏமாற்றத்தோடு பார்த்தார் அவன் அன்னை.

“சரி வராது ம்மா இனிமேல். அவ கஷ்டப்படுறத பாக்க முடியாம ஹெல்ப் பண்றேன் அவ்வளவு தான். அதுல லவ் இருக்கும்னு சொல்ல விரும்பல. இப்போ ரெண்டு வாரத்துல பாரின் போக போறேன், என்னோட வாழ்க்கை அப்டியே வேற திசைல சந்தோசமா போகும். ரெண்டு வருசமா பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் சேர்த்து சம்பாதிக்க போறேன்”

எங்கே தன்னுடைய விருப்பத்தை கூறி, திவ்யா தான் முரண்பட்டு தன்னுடைய மகனை பிரிந்து செல்ல துடிக்கிறாள் என்ற வார்த்தைகளை கூறி அவளை நோகடிக்க நினைத்தால் என்ன செய்வது என்ற பயம் அவனுக்கு.

பெரிதாக சாதித்தது போல் பேசிய மகனின் செயலில் வியந்த மோகன், “வாழ்க்கைல நீ சம்பாதிக்கிற பணம், புகழ், பேர் எல்லாம் முக்கியமே இல்ல… நீ நிம்மதியா இருக்கியா இல்லையானு தான் முக்கியம்.

தாராளமா போ, நாடு கடந்து, கடல் கடந்து எங்க வேணாலும் போ ஆனா அது முழுமையான சந்தோசம் தந்தா மட்டும் செய். அந்த பொண்ண மறந்து சந்தோசமா இருப்பனா சந்தோசமா போய்ட்டு வா” என்றார்.

“ரெண்டு பேருக்குமே இந்த முடிவு தான் ப்பா சரியா வரும். நல்லா யோசிச்சாச்சு. ஒரு வருசமா பிரச்சனை தவற வேற எதுவும் எங்களுக்குள்ள இல்ல”

“அப்டி என்னடா பெரிய பிரச்சனை சொல்லு பாப்போம்” மகனுக்கு எதிரில் கை கட்டி நின்றார் கார்த்திகா.

நிதானம் இல்லாமல் தலையை அனைத்து திசையிலும் அசௌகரியமாக ஆட்டியவன், “எனக்கு புடிச்சதை என்னால செய்ய முடியல” என்றான் சற்று குரலை உயர்த்தி.

ஆயிரம் காரணங்களை வைத்து அவளை தன்னோடு வைத்துக்கொள்ள தோன்றினாலும் இந்த ஒரு காரணம் அவன் முடிவை மறுபரிசீலனை செய்ய வைத்தது. சுதந்திரத்தை இழந்தது போல் தவித்தான்.

கார்த்திகா, “அப்டினா…?”

“உங்களுக்கே தெரியும் எனக்கு மெஷின் பில்ட் பண்றதுனா ரொம்ப புடிக்கும். ரெண்டு வருஷம் போராடி வாங்குன வேலை அது. அத அவளுக்காக அவளை கல்யாணம் பண்ணி மூணே மாசத்துல விட்டு வந்தேன்.

சரி அது வருமானம் பத்தல, ரெண்டு பேருக்கும் தேவை இருந்தது ஒத்துக்குறேன். ஆனா டார்ச்சர் பண்ணா ம்மா. வேற வேலை பாரு, காசு பத்தலனு. விட்டேன். எங்க எதிர்காலத்துக்காக ரொம்ப யோசிக்காம விட்டேன். அதுக்கு அப்றம் தான் ம்மா எல்லாமே ஆரமிச்சது.

கொஞ்சம் காசு கைல நின்னாலும் கெளம்பிடுவா. டிரஸ், ஷாப்பிங், கிட்சேன் ஜாமான், மேக்அப், செருப்பு லொட்டு லொசுக்குன்னு வாங்கி தள்ளுனா. கொஞ்சம் காசு வந்ததும் இஷ்டத்துக்கு கை நீலுச்சு. அத கூட பொறந்த வீட்டுல நல்லா வாழ்ந்த பொண்ணுனு விடுங்க.

கிரிக்கெட் எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு உங்களுக்கே தெரியும். ஞாயிற்று கிழமை ஒரு நாள் ஒரு மூணு மணி நேரம் போக விட மாட்டா. என்ன கூட இருக்க சொல்லிட்டு ஒன்னத்துக்கும் ஆகாம போன் பண்ணி யாருக்கோ பேசிட்டு இருப்பா.

வாரத்துக்கு ஆயிர கணக்குல அலங்காரத்துக்கு செலவழிக்கிறவ நான் வீடியோ கேம் வாங்கணும்னு சொன்னதுக்கு வீட்டுக்கு அந்த செலவு இருக்கு இந்த தேவையிருக்குன்னு வாங்கவே விடல. இப்டி பண்ணா தப்பு, இப்டி நின்னா தப்பு. ஆபீஸ் போய்ட்டு அவ்வளவு டயர்டா வருவேன்.

ஒரு காபி போட கூட ரெண்டு வருசமா கத்துக்கல. நானும் மனுஷன் தான, ஒரு காபி யாராவது போட்டு தரணும்னு ஆசைப்பட மாட்டேனா? காபி, சுடுதண்ணி, ரசம், ஜூஸ், பிரியாணினு எல்லாமே நான் தான் வைக்கணும். வெளில வாங்கி சாப்பிட்டு சாப்பிட்டு சாப்பாடே வெறுத்துடுச்சு ம்மா.

அத சொன்னா, ஒரு மாசம் சண்டை போடுறா. ஒவ்வொன்னுக்கும் சண்டை, பிரச்சனை தான்” தலையை பிடித்து அமர்ந்தவனை அவன் அன்னையாளும் எதுவும் பேச முடியவில்லை.

சந்தோசமாக, கையிலே அடங்காத சிறுத்தையாக, சுற்றிய மகன் இப்படி கலைந்த மனதோடு தவிப்பதை அவராலும் கிரகித்துக்கொள்ள திணறினார்.

தவிப்போடு கணவனை பார்க்க அவரும் மகனை மட்டுமே ஆராயும் முயற்சியில் அவனை விட்டு கண்களை அகற்றாமல் பார்த்திருந்தார்.

தாய் தந்தையிடம் கூறிய கோவம், வெறுப்பை தவிர்த்து அதை விட பல ஆயிரம் மடங்கு காதலை வைத்திருந்தவன் பேச்சை கேட்டு சமையலறை வெளியில் நின்ற திவ்யாவின் மனம் அலைக்கடலில் தத்தளிக்க துவங்கியது.

அறையை சுத்தம் செய்து அவர்களோடு இணைய வந்த திவ்யாவிற்கு வெறுப்பை சுமந்து நின்ற ரகுவின் வார்த்தைகள் மனதை கூறுபோட்டு கிழித்தது. வந்த வேகத்தில் மீண்டும் அறைக்குள் சென்று சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவள் கண்கள் நிறுத்தாமல் கண்ணீரை வடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!