Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மனம் வேண்டிநிற்கும் வரம் நீயே

வரம் நீயே 1 (1)

மனம் வேண்டிநிற்கும் வரம் நீயே 1

“டாக்டர் ஆண்ட்டி.. உங்களுக்கு கல்யாணமா?” என்று அந்த பத்து வயது சிறுமி கேட்க, அவள் முகத்தில் வெட்கம் கலந்த புன்னகை வந்தது.

“யார் சொன்னா உங்களுக்கு?”

“அம்மா.. சொல்லுங்க டாக்டர் ஆண்ட்டி”



Advertisement

“ஆமா..”

“ஐஐ..! அப்போ நிறைய ஸ்னாக்ஸ் கிடைக்கும்ல?”

அவளுக்கு சிரிப்பு வர, சிரித்துக் கொண்டே அந்த சிறுமியின் உடலை பரிசோதித்தாள்.

Advertisement

“ம்மா.. எனக்கு எப்போமா கல்யாணம் பண்ணுவ? எனக்கும் நிறைய ஸ்னாக்ஸ் வேணும்” என்று சிறுமி அன்னையிடம் கேட்க, “நீ டாக்டர் ஆண்ட்டி மாதிரி பெரிய பொண்ணா வளர்ந்தப்புறம் கல்யாணம் பண்ணலாம்” என்றாள் அன்னை.

Advertisement

“அப்படியா? நான் இவ்வளவு பெருசாகனுமா?”

“ஆமா”

உடனே மெத்தையில் ஏறி நின்றவள், “இப்ப பெருசாகிட்டேனே” என்று கேட்டு வைக்க, அன்னை பதில் சொன்ன முடியாமல் முழித்தாள்.

Advertisement

“ஓகே ஓகே.. நீங்க வளர்ந்துட்டீங்க தான். ஆனா வளர்ந்தா மட்டும் போதாது. நிறைய படிச்சு, டாக்டர் ஆண்ட்டி மாதிரி டாக்டர் ஆகனும். நிறைய பேர காப்பாத்தனும். எல்லாம் பண்ணப்புறம் கல்யாணம் பத்தி பேசுங்க. இப்போ.. நோ”

“ம்ம்…” என்று முகத்தை சுருக்கினாள் சிறுமி.

“உடனே சேட் ஃபேஸ் வச்சுக்கக் கூடாது.‌ இப்போ நீங்க ஒழுங்கா டேப்ளட்ஸ் எல்லாம் போட்டுக்கிட்டா, என் கல்யாணம் முடிஞ்சதும் உங்களுக்கு நிறைய ஸ்னாக்ஸ் கொண்டு வருவேன்”

“நிஜம்மாவா?”

“ஆமா.. டாக்டர் ஆண்ட்டி பொய் சொல்ல மாட்டேன்ல? சோ சமத்தா இருங்க. ஓகே?” என்று கூறி விட்டு சிறுமியை பெற்றவளிடம் பேசி விட்டு, அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.

“மேடம்” என்று யாரோ அழைக்க‌, நின்று திரும்பிப் பார்த்தாள்.

“என்ன சிஸ்டர்?”

“அங்க ஒரு பாப்பா ரொம்ப அழுகுது. வாங்களேன்”

தலையசைத்து விட்டு வேகமாக சென்றாள்.

“இங்க பாரு தங்கம்.. ஒரு ஊசி தான். அப்புறம் நாம இங்க வரவே வேணாம். சரியா?” என்று சிறு குழந்தையிடம் ஒருவன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

“மாட்டேன் ஊசி போட மாட்டேன்” என்று குழந்தை அழ, நர்ஸ் பாவமாக நின்று இருந்தார்.

குழந்தைகள் எல்லோரும் இப்படி அடம்பிடிப்பது சகஜமே. அதனால் நர்ஸை தாண்டி உள்ளே சென்றாள்.

“என்ன ஆச்சு பாப்பாக்கு? ஏன் அழ வைக்கிறீங்க?” என்று கேட்டவளை, வேகமாக திரும்பிப் பார்த்தான் அவன்.

“லாலி” என்று அவனது வாய் முணுமுணுத்தது.

வைசாலி அவனை சரியாக கவனிக்காமல், குழந்தையை பார்த்தாள்.

“ஃபீவர் டாக்டர். ஊசி போட மாட்டேன்னு அழுறா பாப்பா.” என்றார் நர்ஸ்.

“அப்படியா? ஊசி வேணாமா?”

“வேணாம். வலிக்கும்”

“அப்போ பாப்பா காய்ச்சல் எப்படிப்போகும்?”

குழந்தை சினுங்க, “சரி ஆண்ட்டி வலிக்காம ஊசி போடவா?” என்று கேட்டாள்.

குழந்தை அதற்கும் மறுத்து முகத்தைத்திருப்ப, “இங்க பாருங்க. இப்ப நீங்க ஊசி போட்டா தான் ஃபீவர் போகும். அப்ப தான் உங்க அப்பா நிறைய சாக்லேட் வாங்கித்தருவாரு. இல்லனா நோ சாக்லேட். அப்படித்தானே சார்?” என்று அவனிடம் கேட்டாள்.

மெலிதாக புன்னகைத்தவன், “சாக்லேட் வேணுமா? வேணாமா?” என்று குழந்தையிடம் கேட்டான்.

“வேணும்”

“அப்போ அழாம ஊசி போட்டுக்க. ரூம் போகும் போது வாங்கித்தர்ரேன்”

சினுங்கிக் கொண்டே இருந்தாலும் பெரிதாக அழாததால், நர்ஸ் ஊசியை போட்டு விட்டார். வலியில் உதட்டைப்பிதுக்கி குழந்தை அழ, தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தான்.

“அரை மணி நேரமா பக்கத்துலயே வரவிடாம அழுதுட்டு இருந்தா. தாங்க்ஸ்”

வைசாலி தலையைசைத்து விட்டு நகல, “லாலி” என்று விட்டான்.

சட்டென நின்று திரும்பிப் பார்த்தாள்.

“ஸ்ஸ்..” என்று நாக்கை கடித்து விட்டு, “வைசாலி..” என்று புன்னகைத்தான்.

அவனை உடனே கண்டுகொண்டவள், விழிவிரித்துப் பார்த்தாள்.

“கிங்?” என்று கேள்வியாக நிறுத்த, அவன் முகத்தில் புன்னகை.

“நான் தான். டாக்டரா நீ?” என்று ஆச்சரியமாகக் கேட்க, “அப்படித்தான இருக்கேன்?” என்று ஒரு மிடுக்கோடு கேட்டாள்.

“டான்ஸ் ஆடப்போறியா நீ?” என்று கேட்டதும், “அப்படித்தான ட்ரஸ் பண்ணி இருக்கேன்?” என்று தலையை நிமிர்த்தி பதில் கேள்வி கேட்ட வைசாலி தான் அவன் நினைவில் வந்தாள். உடனே புன்னகை விரிந்தது.

“ஆமா பார்க்க அச்சு அசல் டாக்டர் மாதிரியே இருக்க” என்று கூறி வைக்க, வைசாலி அவனை போலி முறைப்போடு பார்த்தாள்.

“அரசன் சோப்பு” என்று மெல்லிய குரலில் கூறி அவனை வம்பிழுத்து விட்டு, “எப்போ கல்யாணம் ஆச்சு?” என்று விசாரித்தாள்.

“ஏன்?”

“ஏன்னா? பாப்பா இருக்காளே?”

“பாப்பா என்னை மாதிரியா இருக்கா?” என்று கேட்க, குழந்தையையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.

“இல்லயே.. அம்மா மாதிரியோ?”

“இல்ல அப்பா மாதிரி தான்”

“மாமா..” என்று குழந்தை அவன் கன்னத்தில் கைவைக்க, “என்னடாமா?” என்றான்.

“பசிக்கு”

“பசிக்குதா? இதுக்கு தான் அப்பவே சாப்பிடுனு சொன்னேன். சொல் பேச்சு கேட்காம அடம் பிடிக்கிறது.” என்று கன்னத்தை கிள்ளி வைத்து முத்தமிட்டவன், “என்ன கொடுக்கலாம்? இட்லி ஓகே தானே?” என்று வைசாலியிடம் கேட்டான்.

“ம்ம்.. சாப்பிட்டதும் டேப்ளட் மறக்காம போட வச்சுடுங்க. உங்க சிஸ்டர் பொண்ணா?”

அரசேந்திரன் தலையாட்டி சிரிக்க, வைசாலி புன்னகைத்து வைத்தாள்.

நர்ஸ் அவனிடம் மருந்து எழுதிய காகிதத்தை வந்து நீட்ட, வாங்கிக் கொண்டான். எது எப்போது கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டவன், “மணி செல்லம்.. ஆண்ட்டிக்கு பை சொல்லு” என்றதும் கையாட்டினாள்.

“பைடா” என்று வைசாலியும் கையாட்ட, “கிளம்புறேன்” என்று அரசேந்திரனும் புன்னகைத்து விட்டு வெளியேறி விட்டான்.

“உங்களுக்கு தெரிஞ்சவரா மேடம்?” என்று நர்ஸ் கேட்டதும், தலையை மட்டும் ஆட்டி விட்டு வேலையைப் பார்க்கச் சென்று விட்டாள்.

ஹோட்டலுக்கு வந்தவன் இட்லியை வாங்கி வைத்து, தூங்கிக் கொண்டிருந்த மணிகர்ணிகாவை எழுப்பி, இட்லியை பாலில் தோய்த்து ஊட்ட ஆரம்பித்தான். அந்நேரம் கைபேசி இசைக்க, எடுத்து ஸ்பீக்கரில் போட்டான்.

“பாப்பா எப்படி இருக்கா அரசு?” என்று கவலையாக ஒலித்தது மணிகர்ணிகாவின் அன்னை அஞ்சனாவின் குரல்.

அன்னையின் குரலை கேட்டதும், “ம்மா ம்மா” என்றாள் மணிகர்ணிகா.

“என்னமா? பட்டு குட்டிக்கு ஃபீவரா?”

“ம்ம் ம்ம்” என்று முணங்கினாள்.

“எதாச்சும் சாப்பிட்டாளா அரசு?”

“இப்ப தான் இட்லி சாப்பிடுறா. தூக்கத்துல சாமியாடிட்டே உன்னை மாதிரியே சாப்பிட்டுட்டு இருக்கா அஞ்சு. இந்த விசயத்துல இவ உன்னை மாதிரி தான். அத்தான் மாதிரி இல்ல”

“ப்ச்ச். காய்ச்சலோட சமாளிச்சுட்டு இருக்க. இங்க வேலைய விட்டுட்டு அகலவே முடியல”

“இப்ப என்ன? நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டேன்ல? வேலையை முடி முதல்ல”

“ஹாஸ்பிடல்ல என்ன சொன்னாங்க?”

“சாதாரண காய்ச்சல் தான். ஊசி போடத்தான் அடம்பிடிச்சு அழுதுட்டா”

“ம்மா.. ஊசி போட்டாங்க. வலிக்கு” என்று தடவ, “ஐஸ் கிரீம் வேணும்னு கேட்டு காய்ச்சல இழுத்துட்டு, வலிக்கு வலிக்குனு சொல்லிட்டு இரு” என்று மருமகளை முறைத்தான்.

மணிகர்ணிகா தாய்மாமனை இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.

“என்ன முறைப்பு? இனிமே ஐஸ்கிரீம் கேளு. வாயில ஊசி போடச்சொல்லுறேன்”

“உங்க வாயில போடுவாங்க ஊசி. எனக்கு போட மாட்டாங்க “

“நானா ஐஸ்கிரீம் கேட்டேன்?”

“நீங்களும் தான் சாப்பிட்டிங்க”

மாமன் மருமகள் சண்டை போட ஆரம்பித்து விட, அப்போது தான் அஞ்சனாவிற்கு நிம்மதி வந்தது. மணிகர்ணிகா நல்ல நிலையில் இருந்தால், அரசேந்திரனுடன் எப்போதும் வாய் பேசிக் கொண்டே தான் இருப்பாள்.

“வாய் வாய்.. உங்கம்மா மாதிரியே வாய்.. அத்தான் கிட்ட சொல்லித் தரேன் இரு” என்று அவளோடு பேச்சு பேச்சாக இருந்தாலும், உணவை ஊட்டி வாயை துடைத்து விட்டான்.

“அப்பா கிட்ட நான் சொல்லுவேன். மாமா தான் ஐஸ்கிரீம் கேட்டு அடம்பிடிச்சாங்கனு”

“அவ்வா.. எப்படி அப்பட்டமா பொய் சொல்லுறா பாரு. என்ன பிள்ளை வளர்த்து வச்சுருக்க நீ?” என்று அஞ்சனாவிடம் தான் சண்டைக்கு போனான்.

“நான் நல்லா தான் வளர்த்தேன். அவ மாமனும் அப்பாவும் தான் கெடுத்து விடுறாங்க”

அஞ்சனாவின் பேச்சைக்கேட்டு, மணிகர்ணிகா கட்டை விரலை ஆட்டி நாக்கை துருத்தி பளிப்பு காட்டி சிரித்தாள்.

“ஆறு வயசு தாண்டல.. அறுபது வயசு கிழவி மாதிரி சேட்டை. உட்காரு. மாத்திரை டானிக் ரெண்டையும் ஒழுங்கா சாப்பிடுற” என்று மிரட்டி விட்டு, மடியில் அமர வைத்து மாத்திரையை போட வைத்தான்.

“மணி… நாளைக்கு காலையில அம்மா வந்துடுவேன். அது வரை சமத்தா மாமா கிட்ட இருக்கனும். ஓகே?”

“ஓகே ம்மா” என்றவளுக்கு தூக்கம் கண்ணை சுழட்டியது.

“நீ வை அஞ்சு. நான் அப்புறம் கூப்பிடுறேன்” என்று கூறி விட்டு, மணிகர்ணிகாவை நன்றாக படுக்க வைத்து தட்டிக் கொடுத்து தூங்க வைத்தான்.

மணிகர்ணிகா நன்றாக தூங்கியதும், அஞ்சனாவை அழைத்தான்.

சற்று தள்ளி அமர்ந்து கொண்டவன், “வேலை எப்படிப்போகுது அஞ்சு?” என்று விசாரித்தான்.

“ஏன் கேட்குற? ஒன்ன தொட்டா ஈசல் மாதிரி நூறு கிளம்புது. எப்படிடா இவனுங்க இவ்வளவும் பண்ணிட்டு சாதாரணமா‌ சுத்துறானுங்க?”

“பார்த்துக்கலாம் விடு. அத்தான் எங்க?”

“அவரு அரசியல்கட்சி ஆளுங்க கூட மீட்டிங்னு போனாரு. இன்னும் வரல. வந்ததும் கிளம்பிடுவோம்”

“ஓகே பத்திரமா வாங்க”

“பாப்பாவ பார்த்துக்க”

“பார்த்துப்பேன். இன்னைக்கு ஹாஸ்பிடல்ல வைசாலிய பார்த்தேன் அஞ்சு”

“வைசாலியா? யாரு?”

“அதான் லாலி”

லாலி என்றதுமே அஞ்சனா கண்டுபிடித்து விட்டாள்.

“லாலி? வைசாலியா? எப்படி இருக்கா?”

“மேடம் டாக்டர். அதுவும் பீடியாட்ரிஷன். மணிய ஊசி போட சமாளிச்சதே அவ தான் “

“வைசாலி டாக்டரா? பாரேன்! எவ்வளவு வருசம் ஆச்சு அவள பார்த்து! காலம் ரொம்ப ஸ்பீடா போகுதுல?”

“ம்ம்..”

“நீ பேசுனியா?”

“இல்ல. மணிய என் பிள்ளைனு நினைச்சுட்டா. எப்ப கல்யாணம் ஆச்சுனு கேட்டா. மணி மாமானு கூப்பிடவும் உன் பிள்ளைனு தெரிஞ்சுடுச்சு. அப்புறம் மணிக்கு பசி வந்துடுச்சு. நின்னு பேசல கிளம்பி வந்துட்டேன்”

“ஓஓ.. இன்னொரு கால் வருது. நான் கிளம்பிட்டு பேசுறேன் அரசு” என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.

மணிகர்ணிகாவை ஒரு நிமிடம் பார்த்தவன், மெத்தையில் சரிந்து படுத்துக் கொண்டான். மனதில் வைசாலி வந்து போனாள். இங்கு இப்படி அவளை சந்திப்பான் என்று நினைத்து பார்க்கவே இல்லை. அவளை நினைத்தபடியே படுத்திருந்தான்.

_______

வைசாலி வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

“நாளையில இருந்து நீங்க லீவ்வா மேடம்?” நர்ஸ்

வைசாலி தலையாட்டி விட்டு, “பார்த்துக்கோங்க” என்றதோடு கிளம்பி விட்டாள்.

இந்த மருத்துவமனைக்கு வேலைக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிறது. அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் மூலமாக இங்கு வேலையில் சேர்ந்திருந்தாள்.

வெளியே வந்து காரை எடுக்க, கைபேசி அதிர ஆரம்பித்தது. காரை அப்படியே நிறுத்தி விட்டு, அழைப்பை ஏற்றாள்.

“வைசு டியூட்டி முடிஞ்சதா?”

“இப்போ தான். வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன். நீங்க என்ன பண்ணுறீங்க?”

“எனக்கு இன்னும் வேலை இருக்குமா”

“இன்னைக்கு என்னோட சைல்ட்ஹூட் ஃப்ரண்ட பார்த்தேன்பா”

“ஓஓ சூப்பர்டா”

“ப்ச்ச்.. அவங்க நம்பர் வாங்க மறந்துட்டேன். போயிட்டாங்க”

“திரும்ப பார்த்தா வாங்கிடலாம். யார் அவங்க?”

வைசாலி பதில் சொல்லும் முன், அந்த பக்கம் எதோ பேச்சுக்குரல் கேட்டது.

“வைசு.. நான் அப்புறம் பேசுறேன். வீட்டுக்கு பத்திரமா போ” என்று கூறி விட்டு அழைப்பைத்துண்டித்து விட்டான்.

வைசாலியும் உடனே கிளம்பி விட்டாள். போகும் வழியெல்லாம் அரசேந்திரனின் நினைவு தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!